World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Blackwater mercenaries' record of murder in Iraq

ஈராக்கில் Blackwater கூலிப்படையினரின் மிக அதிக கொலைகள்

By Kate Randall
1 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர் 16ம் தேதி அமெரிக்க Blackwater கூலிப்படையினர் தொடர்பு கொண்டிருந்த பாக்தாத் துப்பாக்கிச் சூட்டு நிகழ்விற்கு பின்னர், இத்தகைய மற்றும் இதேபோன்ற ஈராக்கில் உள்ள ஏனைய கூலிப்படையினரின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஈராக்கிய உள்துறை அமைச்சரகம், இப்படுகொலையில் கிட்டத்தட்ட 20 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர், பல டஜன் ஈராக்கியர் காயமுற்றனர் என்றும், பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களின் நடவடிக்கைகள் தேவையற்ற, எந்தவித ஆத்திரமூட்டுதலுமற்ற தன்மை உடையது என்றும் கூறியுள்ளது. இன்றுவரை Blackwater நிகழ்ச்சியை பற்றி எவ்வித குறிப்பையும் வெளியிடவில்லை; அதன் உறுப்பினர்கள் தற்காப்பிற்காகத்தான் சுட்டனர் என்றும் கூறுகின்றனர்.

செப்டம்பர் 16 துப்பாக்கிச் சூடுகள் மற்றும் Blackwater தொடர்பு கொண்டிருந்த ஏனைய நிகழ்வுகளைப் பற்றிய புதிய விவரங்கள் பாக்தாத்திலும் ஈராக்கின் மற்ற பகுதிகளிலும் பாதுகாப்பு நிறுவனம் சிறிதும் பொறுப்புக் கூறவேண்டிய நிலை அற்ற விதத்தில், எந்தக் காரணமும் இன்றி ஆயுதமற்ற சாதாரண குடிமக்களை தாக்கி வந்தனர் என்பதை நிரூபணம் செய்துள்ளன. Blackwater தொடர்புடைய வன்முறை நிகழ்வுகளை குறைமதிப்பிற்கே உட்படுத்தும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கைகள் இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து Blackwater பாதுகாப்பாளர்கள் 1,873 பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் இவற்றில் 56 நிகழ்வுகளில் ஆயுதங்களை பயன்படுத்தினர் என்றும் தெரிவிக்கின்றன.

சாதாரண குடிமக்கள் இந்நிகழ்வு பற்றி பரந்த அளவில் சீற்றம் கொண்டிருந்தாலும், ஈராக்கிய அரசாங்கம் இப்பாதுகாப்பு நிறுவனத்தை நாட்டைவிட்டுச் செல்லுமாறு கூறியபோதும், ஆயுதம் தாங்கிய Blackwater வாகன வரிசைகள் தொடர்ந்து பாக்தாத் முழுவதும் ரோந்து வருவதுடன் அமெரிக்க தூதர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்து வருகிறது.

நியூ யோர்க் டைம்ஸிற்கு, செப்டம்பர் 16 துப்பாக்கிச் சூடு விசாரணை பற்றி கூறப்பட்டிருந்த ஒரு அமெரிக்க அதிகாரி கொடுத்துள்ள தகவல்படி, நிகழ்வில் குறைந்தது ஒரு பாதுகாவலர் சாதாரண மக்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார் என்றும் மற்றவர்கள் அவரை நிறுத்துமாறு கோரினர் என்றும் தெரிகிறது. குறைந்தது ஒரு பாதுகாவலராவது துப்பாக்கிச் சூட்டை நிறுத்தாத மற்றவர் மீது ஆயுதத்தை பிரயோகிக்க தலைப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த விவரங்கள் பற்றி உறுதி செய்வதற்கு பிளாக்வாட்டரின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

இந்நிகழ்வு காலை 11.50 அளவில் தொடங்கியது; அப்பொழுது அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பின் தூதர்கள் பாதுகாப்பிற்குட்பட்ட வளாகம் ஒன்றில், Nisour Square க்கு அருகே கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர்.

அமெரிக்க உதவி அமைப்பு ராஜதந்திரிகள் கூட்டம் போட்டுக் கொண்டிருந்த இடத்தில் இருந்து ஒரு சில நூறு கஜங்கள் தூரத்தில் ஒரு குண்டு வெடித்தது. வழக்கமான நடைமுறையான, நிலைமை அமைதி அடைவதற்கு 15-30 நிமிஷங்கள் காத்திராமல், Blackwater வாகனவரிசைகள் ராஜதந்திரிகளை தெற்கே பசுமைப் பகுதி அருகே அழைத்துச் செல்ல தலைப்பட்டதோடு, இது அவர்களை நிசோர் சதுக்கத்தின் மூலம் செல்ல வைத்தது.

Blackwater ரால் இயக்கப்பட்ட விளையாட்டுப் பயன்பாடு உடைய நான்கு வண்டிகள் இச்சதுக்கத்திற்கு தெற்கிலிருந்தும் மேற்கில் இருந்தும் வரும் போக்குவரத்து வாகனங்களை நிறுத்தின; சில ஆயுதமேந்திய பாதுகாப்பு பிரிவினர் தங்கள் வண்டிகளில் இருந்து கிளர்ந்தெழுந்து தக்கநிலைகளை எடுத்துக் கொண்டனர்.

12.08 மணிக்கு, குறைந்தது ஒரு பாதுகாவலர் சதுக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்த கார் ஓட்டுனர் மீது சுட்டார்; ஓட்டுனர் இதன் விளைவாக இறந்து போனார்; அவருடைய அடையாளம் இன்னமும் தெரியவில்லை. இன்னமும் கூடுதலான துப்பாக்கிச் சூடுகள் நடந்தன; காரில் பயணிகள் இடத்தில் இருந்து டாக்டர் மாகிசின் முஹ்சின் என்ற பெண்மணி, கையில் ஏந்தியிருந்த ஒரு குழந்தையுடன் இறந்து போனார். இதைத்தொடர்ந்து கைகுண்டு அல்லது ஒருவகை எறிகுண்டு காருக்குள் போடப்பட்டு அது தீயிடப்பட்டது.

அந்த இடத்தில் இருந்த போக்குவரத்து அதிகாரி Ali Khalaf அமெரிக்கர்கள் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர் என்று Agence France-Presse யிடம் தெரிவித்தார்: "அங்கு எது நகர்ந்தாலும் அதை அமெரிக்கர்கள் சுட்டனர்; இயந்திரத் துப்பாக்கி மற்றும் எறிகுண்டு வீசும் கருவி இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. பெரும் பீதி நிலவியது. அங்கிருந்து அனைவரும் தப்ப முயன்றனர். வாகனங்கள் U-turn எடுத்துத் தப்ப முயன்றன. அனைத்து இடங்களிலும் சடலங்களும், காயமுற்ற மக்களும் இருந்தனர். சாலை முழுவதும் இரத்தமாயிற்று. ஒரு பஸ்ஸும் தாக்கப்பட்டு அதில் இருந்த பல பயணிகளும் காயப்படுத்தப்பட்டனர்."

இரு சிறிய கறுப்பு ஹெலிகாப்டர்களும் தலைக்கே மேலே சுற்றிக் கொண்டிருந்தவை, சற்றே கீழிறங்கி அவ்விடத்தில் இயந்திரத் துப்பாக்கி மூலம் குண்டுகளை செலுத்தின என்றும் அவர் கூறினார்.

எட்டு குழந்தைகளுக்கு தாயான Ghania Hussein என்பவரும் இறந்தவர்களுள் ஒருவராவார்; இவர் சதுக்கத்திற்கு வந்து கொண்டிருந்த ஒரு பஸ்ஸில் தன்னுடைய மகள் அப்ரா சட்டாருடன் பயணித்திருந்தார். Blackwater பாதுகாப்பு பிரிவினர் பஸ் மீது தாக்குதலைத் தொடங்கியவுடன் சட்டார் கூவினார்: "அம்மா, அவர்கள் நம்மைச் சுடப்போகிறார்கள்" ஒரு சில கணங்கள் கழித்து ஒரு தோட்டா அவருடைய தாயாரின் மண்டையோட்டைப் பிளந்தது; அவர் கொல்லப்பட்டார்."

"அவர்கள் கொலைகாரர்கள். இறைவன் மீது சத்தியம், ஒருவரும் அவர்கள்மீது சுடவில்லை. பின் ஏன் அவர்கள் எங்கள் மீது சுட்டார்கள்? என்னுடைய தாயார் ஒன்றும் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை." என்று Blackwater பாதுகாப்புப் பிரிவினர் பற்றி சட்டார் கூறினார்.

செப்டம்பர் 16 படுகொலையை அடுத்து இந்நிகழ்வு பற்றியும், Blackwater மற்றும் பல பாதுகாப்பு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பற்றியும் பல அமெரிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் சேதத்தை கட்டுப்படுத்தும் வகையிலான முயற்சிகள் என்றாலும், அமெரிக்க இராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை மற்றும் புஷ் நிர்வாகம், ஈராக்கிய கைப்பாவை அரசு ஆகியவற்றிற்கு இடையே கூலிப்படையினரின் நடவடிக்கைகள் பற்றிய அழுத்தங்களை பிரதிபலிக்கின்றன.

அமெரிக்க தூதரகம் மற்றும் ஈராக்கிய பாதுகாப்பு அமைச்சரகம் இரண்டும் இணைந்த வகையில் ஐந்து வெளியுறவுத்துறை அதிகாரிகள், மூன்று அமெரிக்க இராணுவ அதிகாரிகள், எட்டு ஈராக்கியர்கள் அடங்கிய கூட்டு அமெரிக்க-ஈராக்கிய விசாரணைக் குழு நிறுவப்பட்டுள்ளது. Blackwater உடனடியாக ஈராக்கை விட்டு நீங்க வேண்டும் என்று பிரதம மந்திரி நெளரி அல் மாலிகி முதலில் கூறினாலும், பின்னர் அந்நிலைப்பாட்டை கைவிட்டு, விசாரணைக் குழு முடிவுகள் வரும்வரை காத்திருப்பதாகக் கூறினார். கடந்த சனி வரையிலான நிலவரப்படி, குழு இன்னமும் சந்திக்கவில்லை; தகவல் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ள ஈராக்கிய அரசாங்கத்திற்கும் பதில் கொடுக்கவில்லை.

கடந்த வெள்ளியன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை ஈராக்கிற்கு அது ஒரு குழுவை அமெரிக்க தூதர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்ய அனுப்புவதாகக் கூறியுள்ளது. ஆனால் வெளியுறவுத்துறைக்காக பணிசெய்து வரும் 842 Blackwater பிரிவினர் பற்றி கொள்கை மாற்றத்திற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாப்பு பிரிவிற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் வெளியுறவுத்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; நிசோர் சதுக்கத்தில் அவர்கள் ஆபத்திற்கு உட்பட்டதாகவும் தக்க முறையில் விடையிறுத்ததாகவும் கூறுகிறது.

வெளியுறவுத்துறை துணைச் செயலர் ஜோன் நெக்ரோபோன்ட், வெளியுறவுத்துறை Blackwater பற்றி "மூடிய கதவுகளுக்கு இடையேயான கண்காணிப்பு" நடத்தியது என்று கூறினார். நான் ஈராக்கில் தூதராக பணியாற்றியபோது "முன்னாள் சிறப்புப் படைப்பிரிவினர் மற்றும் மற்றைய இராணுவத்தினரை உள்ளடக்கிய என்னுடைய Blackwater பாதுகாப்பு விவரம் இருப்பது பற்றி நான் தனிப்பட்ட ரீதியில் நன்றியுடையவனாக இருந்தேன் என்றார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து Blackwater சம்பந்தப்பட்ட நடந்த ஏழு நிகழ்வுகள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை ஈராக்கிய அரசாங்கத்தில் இருந்து கணிசமான அழுத்தத்தில் உள்ளது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் தாங்கள் அவற்றில் ஐந்தை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர்.,

ஈராக்கிய சட்டத்தின்கீழ் Blackwater பாதுகாப்பு பிரிவனர் மீது விசாரணை நடத்தப்படும் என்று ஈராக்கிய அரசாங்கம் அச்சுறுத்தியுள்ளது; தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் தனியார் ஒப்பந்தக்காரர்கள் கண்காணிக்கப்படுவதற்கு தேவையான சட்டத்தை இயற்றுவதை பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளது. 2003 படையெடுப்பிற்கு பின்னர் அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளின்படி அமெரிக்க இராணுவ மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்கள் ஈராக்கிய சட்டத்தின் கீழ் குற்ற விசாரணையில் இருந்து விலக்கு பெற்றவர்கள் என்பதால் இந்த அச்சுறுத்தல் செயல்படுத்தப்படுவது கடினமாகும்.

மாலிகி அரசாங்கம் விசாரிக்க விரும்பும் நிகழ்வுகளில் ஒன்று செப்டம்பர் 9ம் தேதி, சமீபத்திய பிளாக்வாட்ர் துப்பாக்கிச் சூட்டிற்கு முன்னால் நடந்தது. டியாலா மாநிலத்தில் உள்ள ஈராக்கிய சுங்க அலுவலகத்தின் எழுத்தரான Batoul Mohammed Ali Hussain பாக்தாத்திற்கு பாதுகாப்பிற்குட்பட்ட பசுமைப் பகுதியில் உள்ள மைய அலுவலகத்திற்கு வேலை நிமித்தம் ஒருநாள் வரவேண்டியிருந்தது.

Seattle Times கொடுத்துள்ள ஒரு தகவல் படி இப்பெண்மணி சுங்கத்துறை கட்டிடத்தை விட்டு வெளியே வந்தபோது ஒரு அமெரிக்க தூதரக வாகனவரிசை, Blackwater பாதுகாப்புடன் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. கட்டுமானத் தொழிலாளர்களை பின்னே செல்லுமாறு பாதுகாப்பு பிரிவினர் உத்தரவிட்டபோது தொழிலாளர்கள் கற்களை வீசனர். அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் பிரிவினர் பின்னர் குண்டு மழையைப் பொழிந்ததாக சாட்சிகள் கூறியுள்ளனர்.

"கட்டிட இடத்தில் இருந்து எதிர்ப்புறத்தில் சாலையில் இருந்த ஹுசைன், காலில் குண்டு அடிபட்டுத் தரையில் வீழ்ந்தார். இப்பெண்மணி எழுந்து ஒரு அடி வைக்க முற்படுகையில் ஒரு Blackwater பாதுகாப்புக்காவலர் பலமுறையும் அவர்மீது சுட்டதாக சாட்சிகள் கூறினர். அந்த இடத்திலேயே அவர் இறந்துவிட்டார்" என்று Seattle Times கூறியது: "எட்டு நாட்கள் வன்முறைநின் ஆரம்பத்தில், சுடுதல் நிறுத்தப்படுவதற்கு முன்பு மற்ற நான்கு பேர் இறந்து போயினர்."

மூன்று நாட்களுக்குப் பின்னர் Blackwater பாதுகாப்பு பிரிவினர் Al-Khilani சதுக்கத்திற்கு மீண்டும் வந்து பாக்தாத் மக்களை பெரும் பீதிக்கு உட்படுத்தி உறைந்த தண்ணீர் பாட்டில்களை கார்களின் மீதும் கடைகளின் ஜன்னல்கள் மீதும் வீசினர்.

கடந்த கிறிஸ்துமஸிற்கு முன்பு மற்றொரு நிகழ்வு ஏற்பட்டது; இதில் ஈராக்கிய துணை ஜனாதிபதியின் ஈராக்கிய பாதுகாவலர் குடிபோதையில் இருந்த Blackwater ஒப்பந்தக்காரர் ஒருவரால் சுடப்பட்டார்; பிந்தையவர் பின்னர் நாட்டில் இருந்து வெளியேறியது ஈராக்கிய அரசாங்கத்தை சீற்றத்திற்கு உட்படுத்தியது. இந்தக் கொலை அமெரிக்க நீதித்துறையால் விசாரிக்கப்படுகிறது என்றாலும், குற்றம் வெளிநாட்டில் நடந்ததால் எந்தச் சட்டங்களின் கீழ் இது நடக்கும் என்பது தெளிவாக இல்லை.

இத்தகைய பாதுகாப்பு ஒப்பந்தக் கைக்கூலிகளின் குருதிகொட்டும் இறப்பு எண்ணிக்கை, காரணமற்ற வன்முறை ஆகியவை பெருகுவதால் ஈராக்கியரின் கோபம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ் ஈராக்கிற்கு ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்றை அமெரிக்க இராணுவத்திற்கும் இத்தனியார் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள உறவுகள் பற்றி விசாரிக்க அனுப்பியுள்ளார். இந்த கூலிப்படைகளின் நடவடிக்கைகள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் குற்றங்கள் மீதும் ஈராக்கில் பெருகிவரும் சங்கடம் மீதும் புதுக்கவனத்தை ஒருங்குவிக்கின்றன.

கடந்த வாரம், கேட்ஸின் உயர் துணை அதிகாரி ஒரு மூன்று பக்க நெறிமுறைகளை மூத்த பென்டகன் அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்பந்தக்காரர்கள் ஆயுதங்கள் பயன்படுத்துவதை பற்றிய விதிகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இராணுவச் சட்டத்தை மீறுபவர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை வேண்டும் என்றும் கூறியுள்ளார். Los Angeles Times னால் பெறப்பட்டுள்ள இந்த இயக்க நெறிகளில் பிரதியின்படி, துணை பாதுகாப்பு மந்திரி கோர்டன் ஆர். இங்கிலாந்து எழுதியுள்ளதாவது: "அமெரிக்க இராணுவ நீதி விதித் தொகுப்புக்களின் படி (US Uniform Code of Minilary Justice) பாதுகாப்புத் துறையின் முறையான குற்றம் செய்துள்ளனர் என்ற சந்தேகம் இருந்தால், அதிகார விதிகளை அத்துமீறி நடந்தால், ஒப்பந்தக் கைக்கூலிப்படையினரை ஆயுதம் களையவைத்து, தேடிப்பிடித்து காவலில் வைக்கும் உரிமையை, தளபதிகள் கொண்டுள்ளனர்."

இதே பாதுகாப்பு துறைதான் அபு கிரைப்பில் இருந்து ஹடிதா, மஹ்முதியா, பல்லுஜா ஆகிய இடங்களில் இப்பொழுது அனைவருக்கும் தெரிந்துவிட்ட, ஈராக்கில் நடந்த பலவித அட்டூழியங்கள் தொடர்பாக உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை குற்றவிசாரணைக்கு உட்படுத்த மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் "போர் விதிகள்" என்ற முறையில் தளபதிகள் இயற்றும் விதிகள் ஈராக்கிய சாதாரண மக்களை கொல்வதை அனுமதிக்கின்றன, ஏன் ஊக்குவிக்கக்கூட செய்கின்றன.

2008 ல் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் நடக்கும் போர்களுக்காக புஷ் நிர்வாகம் இன்னும் ஒரு $189.3 பில்லியன் நிதியை கேட்டது பற்றி, செனட் பண ஒதுக்கீட்டுக் குழுவிற்கு முன்பு கொடுத்த சாட்சியம் ஒன்றில் கேட்ஸ் கூறினார்: "என்னுடைய கவலை அப்பகுதியில் இப்பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்மீது முறையான, போதுமான பொறுப்புத் தன்மை, கண்காணிப்பு உள்ளதா என்பதுதான்" என்று கூறினார்.

பாதுகாப்பு மந்திரியின் கருத்துக்கள் அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க Blackwater கூலிப்படை இன்னும் பிற பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் --DynCorp International and Triple Canopy, பிரிட்டனின் Aegis Security, Erinys International-- ஈராக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையே உள்ள அழுத்தங்களை உயர்த்திக் காட்டுகின்றன. 25 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து குறைந்தது 20,000த்தில் இருந்து 48,000 வரை ஒப்பந்த பாதுகாப்புப் பிரிவினர் ஈராக்கில் தற்பொழுது பணியில் இருப்பதாக மதிப்பிடப்படுள்ளது.

சட்டப்படி இந்த ஒப்பந்தக்காரர்கள் அமெரிக்க இராணுவத்தினர்களைவிட அதிகமாக ஊதியம் பெறுகின்றனர். அமெரிக்க தூதர் Ryan Crocker இன்னும் பல தூதர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் Blackwater பாதுகாப்புப் பிரிவினர் நாள் ஒன்றுக்கு 1,000 டாலர்கள் வரை பெறுகின்றனர்; இது ஒரு மிகக் குறைந்த அமெரிக்க இராணுவத்தினரனின் ஊதியத்தை விட பத்து மடங்கு அதிகமாகும் மற்றும்; ஒரு நான்கு-நட்சத்திர தளபதியின் ஊதியத்தை விட அதிகமாகும்.

இவர்களில் பலர் Navy Seals, Army's Delta Force பின்னணியில் இருந்து வருபவர்கள் ஆவர்; சாதாரண மக்கள்பால் வெளிப்படையான வெறுப்பைக் காட்டுவதுடன் குருதி, வன்முறை இவற்றில் களிப்பு அடைகின்றனர். ஈராக்கிய புறநகர்ப்பகுதிகளில் பெரும் வேகத்துடன் செல்கின்றனர்; குறிபார்த்து வைத்துள்ள ஆயுதங்களுடன் வாகனங்களில் இருந்து தலையை நீட்டி, வாழும் மக்களை சீற்றத்துடன் இழிந்த முறையில் பேசுகின்றனர்.

கடந்த மாதம் வேர்ஜீனியாவில் Triple Canopy க்கு எதிரான உரிமையியல் நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஒப்பந்தக்காரரின் இரு முன்னாள் பணியாளர்கள் தங்கள் மேலதிகாரி --முன்பு இராணுவத்தில் இருந்தவர்-- பாக்தாத்தில் விமான நிலையம் செல்லும் பாதையில் இருந்த இரு ஈராக்கிய குடிமக்கள் வண்டிகள் மீது தேவையற்ற முறையில் குண்டுவீச்சு நடத்தினார் என்றும் விடுமுறைக்கு செல்லுவதற்கு முன்பு எவரையாவது கொல்ல வேண்டும் என்று தான் விரும்பியதால் அவ்வாறு செய்ததாக கூறினார் என்றும் சாட்சியம் அளித்தனர். அவர் இதை மறுத்துள்ளார்.

இக்கூலிப்படையினர் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தனியார் மயமாக்கப்பட்ட பிரிவின் ஒரு பகுதியினர் ஆவர். 2003 மார்ச்சில் அமெரிக்க ஈராக்மீது படையெடுத்தபோடு, தற்கால போரிலேயே மிக அதிகாமான தனியார் ஒப்பந்தக் கூறிப்படையினரையும் அமெரிக்கர்கள் அழைத்து வந்திருந்தனர். முதல் வளைகுடாப் போரில் அரசாங்கத் துருப்புக்கள் மற்றும் தனியார் ஒப்பந்தக் கூலிப்படையினருக்கும் இடையே இருந்த விகிதம் 60 க்கு 1 என்று இருந்தபோது, தற்போதைய ஈராக்கிய போரில் தனியார் பணியில் அமர்த்தியுள்ளவர்கள் அமெரிக்கப் படைகளைவிட அதிகமாக உள்ளனர்; உத்தியோகபூர்வ அமெரிக்க இராணுவத்தினர் 160,000 துருப்புகளுடன் ஒப்பிடுகையில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு மற்றும் ஏனைய பணிகளில் சம்பந்தப்பட்டுள்ள 180,000 ஒப்பந்தக்காரர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரை நடத்துகையில், புஷ் நிர்வாகத்தின் தலையாட்டிகள் மற்றும் அமெரிக்க சர்வதேசப் பெருநிறுவனங்களின் பைகளுள் பரந்த நிதியம் செல்லுகிறது. கூலிப்படையினர் மற்றும் தனியார் ஒப்பந்தப் பணிகள் மீது அமெரிக்கா எவ்வளவு செலவழிக்கிறது என்பது பற்றிய புள்ளிவிவரம் உடனடியாக கிடைக்காவிட்டாலும், சில சட்டமன்ற மதிப்பீடுகள், போரில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு டாலரிலும் 40 சென்டுகள் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு செல்லுவதாக தெரிவிக்கின்றன. ஈராக்கில் அமெரிக்க செயற்பாடுகளுக்காக வாரத்திற்கு $2 பில்லியன் செலவழிக்கப்படுகிறது என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பல மில்லியன், பில்லியன் டாலர் இலாபங்கள் Haliburton போன்ற நிறுவனங்களுக்கு செல்லுகின்றன; துணை ஜனாதிபதி டிக் ஷெனி இதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர். போரின் ஆரம்ப நாட்களில் Halliburton உடைய துணை நிறுவனமான Kellogg Brown and Root (KBR) ஏலத்திற்கு விடாத ஒப்பந்த முறையில் ஈராக்கில் இருக்கும் அனைத்து எண்ணெய் கிணறு தீக்களையும் அணைப்பதற்கு பல மில்லியன் டாலர்களை பெற்றது. குவைத்திலும் துருக்கியிலும்கூட KBR பல ஆயிரக்கணக்கான இராணுவ ஒப்பந்தக்காரர்களை அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கொண்டுள்ளது; இதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் ஆகும்.

அமெரிக்க Blackwater அரசாங்க ஒப்பந்தங்களை, $800 மில்லியன் அளவிற்கு, கொண்டுள்ளது; இது அமெரிக்க தூதர் ரியன் கிரோக்கர் மற்றும் பிற தூதர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. சமீபத்தில்தான் ஈராக்கில் ஹெலிகாப்டர் வசதி அளிப்பதற்கான ஒப்பந்தத்தை இது வெளியுறவுத் துறையில் இருந்து பெற்றது.

முன்னாள் வெளியுறவுத் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், CIA வின் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் தலைவருமான Cofer Black, Blackwater இன் துணைத் தலைவர் ஆவார். முன்னாள் CIA மண்டல தலைவரான ரொபேர்ட் ரிச்சர் இந்நிறுவனத்தின் உளவுத்துறையில் ஒரு துணைத் தலைவராக 2005ல் சேர்ந்தார்.

வடக்கு கரோலினாவை தளமாக கொண்டு இந்நிறுவனம் 20,000க்கும் மேற்பட்ட கைக்கூலிகளுக்கு பயிற்சி அளித்து உலகெங்கிலும் இருக்கும் போர்களில் அவர்கள் பயன்படுத்த தயாராகும் வகையில் உதவுகிறது. பினோசே சர்வாதிகார காலத்தில் பயிற்சி பெற்றிருந்த 60 சிலி நாட்டு கமாண்டோக்களுக்கும் Blackwater ஒப்பந்த வேலை கொடுத்துள்ளது.

ஈராக்கில் போருக்கு எதிர்ப்பு பெருகிய சூழ்நிலையில், புஷ் நிர்வாகம் அதிர்ச்சிப் படையாக செயல்படக்கூடிய ஒரு நிழல் இராணுவத்தை அங்கு இந்த, இன்னும் பல இகழ்வுற்ற இராணுவச் செயல்களை "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் நடத்துவதற்கு உருவாக்கியுள்ளது. இக்கூலிப்படையினர் சட்டமன்றம், அமெரிக்க இராணுவம் அல்லது சர்வதேச போர் மற்றும் போர்க் குற்றங்கள் பற்றிய சட்டங்களுக்கு பொறுப்புக் கூறுபவர்கள் அல்லர்.

ஈராக்கில் Blackwater கூலிப்படையினரால் நடத்தப்படும் தொடர் வன்முறைக் கொலைகள், பரந்த பெரும்பான்மையான மக்களுடைய நலன்களை தன்னுடைய இலாபங்கள் மற்றும் ஏகாதிபத்திய தீரச் செயல்களுக்காக கீழ்ப்படுத்தும் ஒரு ஆளும் உயரடுக்கு தோற்றுவிக்கும் அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளாக கட்டாயம் சேவை செய்யும். இத்தகைய பாசிச கூலிப்படைக் கூறுபாடுகள் முறையாக தயாரிக்கப்பட்டு, தங்கள் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பெருகிவரும் தாக்குதலை எதிர்க்கும் அமெரிக்க தொழிலாளர்கள் இளைஞர்கள் ஆகியோருக்கு எதிரிடையாகவும் பயன்படுத்தப்பட உள்ளனர்.