World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Political tensions in Lebanon threaten civil war

லெபனானில் அரசியல் அழுத்தங்கள் உள்நாட்டுப் போர் அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன

By Jean Shaoul
2 October 2007

Back to screen version

செப்டம்பர் 19ம் தேதி, தீவிர வலதுசாரி பலாஞ்சி (Phalange) ஐச் சேர்ந்த முக்கிய கிறிஸ்துவ மரோனைட் பாராளுமன்ற உறுப்பினர் Antoine Ghanem மற்றும் ஐந்து பேர்களைக் கொன்ற பெய்ரூட் கார் குண்டுவீச்சுத் தாக்குதல் இன்னும் கூடுதலான முறையில் பெளவட் சினியோராவின் அரசாங்கத்தின் குறைந்த பெரும்பான்மையை அரித்துள்ளதுடன் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதையும் தாமதப்படுத்தியுள்ளது.

இது லெபனானில் உள்நாட்டுப் போர் வெடித்துவிடுமோ என அச்சுறுத்திவரும் நீண்டகால அரசியல் அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், செளதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள், சிரியா, ஈரான் அதன் நட்பு கூட்டாளிகளான லெபனானில் உள்ள ஹெஸ்போல்லா மற்றும் அமல், பாலஸ்தீனத்தில் இருக்கும் ஹமாஸ் ஆகிய அனைத்திற்கும் இடையிலான ஒரு வட்டாரப் போட்டிக்கான குவிமைய புள்ளியாக நாடு இப்பொழுது ஆகியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு அமெரிக்க காப்புநாடாக லெபனானை மாற்ற வேண்டும் என்பதுதான் வாஷிங்டனின் நோக்கமாக உள்ளது; எண்ணெய் வளம் மிக்க பகுதியில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு சிரியா, ஈரான் ஆகியவற்றில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு ஒரு முன்னோடியாக இது இருக்க வேண்டும் என்பது அதில் அடங்கியுள்ளது. கடந்த ஆண்டு 1,200 பேருக்கும் மேலானவர்களை கொன்று நாட்டின் உள்கட்டுமானத்தின் பெரும் பகுதியையும் பல ஆயிரக்கணக்கான வீடுகளையும் அழித்த லெபனான் மீதான இஸ்ரேலின் போர்த்தாக்குதல் பின்னணியில் வாஷிங்டனின் சூழ்ச்சித் திட்டங்கள் இருந்தன; மேலும் ஈரானுக்கு எதிராகத் தொடர்ச்சியான அமெரிக்க ஆத்திரமூட்டல்கள், சிரியாவிற்கு எதிராள விளக்கப்படாமல் நிகழ்ந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் மற்றும் வளைகுடாப்பகுதியில் பெரும் இராணுவக் கட்டமைப்பு ஆகியவையும் இப்பின்னணியில் உள்ளன.

பெப்ரவரி 2005ல் பில்லியனர் பிரதம மந்திரியாக இருந்த ரபீக் ஹரிரி கொலை செய்யப்பட்டதற்கு பின்னர் வாஷிங்டன் சார்புடைய அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த, படுகொலை செய்யப்பட்ட அரசியல் வாதிகளுள் ஆறாவதாக கனேம் இருந்தார். நிரபராதிகளாக இருந்த அருகில் இருந்த டஜன் கணக்கான மக்களும் இந்த குண்டுத்தாக்குதல் அலையில் மடிந்தனர்; இது தொடர்பாக ஒருவர்மீதும் இதுகாறும் குற்றம் சாட்டப்படவில்லை.

இப்படுகொலைகள் சர்வதேச ஊடகத்தில் பரந்த அளவில் சிரியா அல்லது லெபனானுக்குள் இருக்கும் சிரியாவின் நட்புக் கன்னைகள் செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது; ஆனால் நிரூபிக்கும் வகையில் இதற்கான சான்றுகள் ஏதும் கொடுக்கப்படவில்லை; மற்றும் சிரியாவோ அத்தகைய தொடர்பு ஏதும் இல்லை என்று வலுவாக மறுத்துள்ளது.

தன்னுடைய அரசியல் விரோதிகளை படுகொலை செய்யும் திறனை கூடுதலாகவே சிரிய அரசாங்கம் கொண்டுள்ளது; ஆனால் போர் அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கு வாஷிங்டனுடன் இணங்கிப் போக வேண்டும் என்று அது முற்பட்டுள்ள நிலையில் எதற்காக அழுத்தங்களை அது அதிகரிக்க வேண்டும் என்பது விளங்கிக் கொள்ள முடியாதது ஆகும். 1996ல் புஷ் நிர்வாகத்தில் இப்பொழுதுள்ள நவீன பழமைவாதிகள் A Clean Break Securing the Realm for neutering Syria via Lebanon -- லெபனான் மூலம் சிரியாவை நடுநிலைப்படுத்தி பகுதியை அடைவதற்கான வழி: ஒரு முழு உடைவு, என்று திட்டங்களை கோடிட்டுக் காட்டியிருந்தனர். சிரியா கட்டுக்குள் வைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்; ஈரான், ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸிற்கு அது கொடுக்கும் ஆதரவை இதற்காக சுட்டிக் காட்டினர்; கோலான் குன்றுகளில் "அமைதிக்காக நிலம்" என்ற விதத்தில் எவ்வித உடன்பாடும் கூடாது என்றும் கூறினர். இன்னும் சமீபத்தில் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் நீதிமன்றம் ஒன்று சிரியா எந்த அளவிற்கு ஹரிரியின் இறப்பில் தொடர்பு கொண்டது என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இஸ்ரேலிய அல்லது அமெரிக்க உளவுத்துறைகள், ஹெஸ்பொல்லா மற்றும் சிரியா மீது ஐக்கிய நாடுகள் மறைப்புடன் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு போலிக் காரணத்திற்காக தூண்டுதல் தரும் வகையில் இக்கொலையை செய்திருக்கக்கூடும். பாதுகாப்பு பிரிவுகள் நிறைய இருக்கும் ஒரு நாட்டில், அரசாங்கமோ, அதன் நட்பு அமைப்புக்களோ எவ்விதத்திலும் உடந்தையாக இருந்தால் ஒழிய சந்தேகத்திற்கு உரியவர்கள் இதுவரை கைதுசெய்யப்படாமல் இருந்திருப்பர் என்பதை நம்புவதும் கடினமேயாகும்.

கடந்த ஆண்டு இஸ்ரேலின் 33 நாட்கள் தாக்குதலை நிறுத்திய ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்புக் குழு தீர்மானம் 1701ன் படி, UNIFIL உடைய லெபனானில் உள்ள NATO துருப்புக்களையும் உள்ளடக்கிய, விரிவாக்கப்பட்ட படைகள், லெபனிய அரசாங்கத்தின் பாதுகாப்பிற்கு உதவ வேண்டும் என்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடைசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மீண்டும் ஐக்கிய நாடுகள்தான் இப்பகுதியில் வாஷிங்டனின் இராணுவ நடவடிக்கைகளுக்கு மூடி மறைப்பை அளித்து வருகிறது.

அமெரிக்க ஆதரவு கொண்ட சினியோராவின் கூட்டணி அரசாங்கத்தில், கனேமின் இறப்பு 128 உறுப்பினர் உள்ள பிரதிநிதிகள் மன்றத்தில் 68 என்று ஆக்கியுள்ளது; கூட்டணி அரசாங்கத்தில் இருந்து ஹெஸ்பொல்லா உறுப்பினர்கள் வெளியேறி கடந்த ஆண்டு பிரதிநிதிகள் மன்றத்தை புறக்கணித்ததில் இருந்தே, இது கிட்டத்தட்ட செயல்படவில்லை என்றே கூறலாம்.

அரசாங்கத்தின் புதிய தாராளக் கொள்கையின் பெரும்பாலான பகுதியை இஸ்லாமிஸ்ட்டுக்கள் ஆதரித்துள்ளனர்; ஆனால் அரசாங்கத்தின் பதவிகளில் இன்னும் கூடுதலான பிரதிநிதித்துவம் மற்றும் தங்கள் தேர்தல் மற்றும் மக்கள் ஆதரவிற்குப் பொருந்திய வகையில் அரசியலமைப்பு மாறுதல்கள், ஹரிரி படுகொலைபற்றி சந்தேகத்திற்கு உரியவர்கள் ஒரு சர்வதேச நீதிக்குழுவின் விசாரணைக்கு உட்பட வேண்டும் எனபதற்கு சினியோரா கொடுத்த ஆதரவு, ஆகியவற்றில் கருத்து வேறுபாடு இருந்ததால் சினியோராவிடம் இருந்து விலகினர்; மேலும் ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவு ஆயுதங்களை களைய வேண்டும் என்பதற்கும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

வாஷிங்டன் ஆதரவுடன் நடைபெற்ற இஸ்ரேலிய தாக்குதலுக்கு பெரும் உறுதியுடன் எதிர்ப்பைக் காட்டிய நிலையில் ஹெஸ்பொல்லாவிற்கு ஆதரவு பெருகியது; அதே நேரத்தில் பரந்த முறையில் ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக இஸ்ரேலுடன் அரசாங்கம் ஒத்துழைப்பதாகவும் கருதப்பட்டது.

லெபனானுக்கு இஸ்ரேல் குண்டுவீச்சினால் "மறு சீரமைப்பிற்காக" குறைந்தது அமெரிக்க $15 பில்லியனாவது தேவைப்படும் என்ற நிலையில், கடந்த ஜனவரி மாதம் பாரிஸில் நடந்த நன்கொடையாளர்கள் மாநாட்டில் உதவிக்கு - இவ்வுதவிகள் இன்னும் அளிக்கப்படவில்லை - ஈடாக விதிக்கப்பட்ட மிகக் கடுமையான ஒழுங்குமுறைகள் பற்றியும் ஹெஸ்பொல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக மதிப்புக் கூட்டு வரி 10ல் இருந்து 12 சதவிகிதம் வரை அடுத்த ஆண்டும் 2010 ல் 15 சதவிகிதமும் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கியுள்ளது. இதைத்தவிர பல நிதிய நடவடிக்கைகளும் உள்ளன; இதில் முதலிடத்தில் அரசிற்கு சொந்தமான சொத்துக்கள் விற்பனை செய்தல், லெபனானின் மாபெரும் பொதுக்கடனான அமெரிக்க $41 பில்லியனுக்காக "தொழிலாளர் சந்தையில்" வளைந்து கொடுக்கும் தன்மை ஏற்படுத்தப்படல் ஆகியன உள்ளன, இக்கடனோ ஹரிரி அரசாங்கம் விட்டுச் சென்ற அளிப்பு ஆகும்.

இத்தகைய நடவடிக்கைகள் ஹெஸ்பொல்லாவின் சமூகத் தளமான மிகவும் இழிநிலையில் உள்ள அகதி முகாம்களில் வாழும் வறுமையில் ஆழ்ந்துள்ள ஷியா மற்றும் பாலஸ்தீனியர்களையும் கடுமையாக பாதிக்கும். லெபனானை மறு கட்டமைப்பு செய்வதற்கு பதிலாக ஷியாக்கள் லெபனானின் கடன்களுக்கு வட்டி செலுத்திக் கொண்டும், ஹெஸ்பொல்லா போராளிகளையும் தங்கள் சமூகத்தை சேர்ந்த தெற்கு லெபனானில் இருப்பவர்களை அடக்குவதற்கும் இராணுவத்திற்கு ஊதியம் கொடுத்துக் கொண்டிருப்பர்.

லெபனானுக்கு கிடைக்கும் சிறிய உதவியில் பெரும்பகுதி ஈரானில் இருந்து வருகிறது; அது ஹெஸ்பொல்லாவின் ஆதரவை பெருக்கியுள்ளது; சினியோரா அரசாங்கத்தின் சேதப்படுத்தப்பட்ட வீடுகள் சொத்துக்கள் ஆகியவற்றிற்கான அற்ப இழப்புக்களிலும் ஷியாக்கள் பாகுபடுத்தப்படுகின்றனர்.

ஜனவரி மாதத்தில் இருந்து ஹெஸ்பொல்லா, அரசாங்கத்திற்கு எதிராக மகத்தான ஆர்ப்பாட்டங்களை நடத்தி, பெய்ரூட்டில் இருக்கும் அரசாங்க கட்டிடங்களுக்கு வெளியேயும் முகாமிட்டது.

ஹெஸ்பொல்லாவுடன் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருக்கும், அதே நேரத்தில் வாஷிங்டனுடைய ஆதரவையும் பெற்றிருக்கும் சினியோரா, சிரிய சார்பு உடைய ஜனாதிபதியான Emile Lahoud விற்கு பதிலாக தன்னுடைய கட்சிக்கு இன்னும் கூடுதலாக பரிவு காட்டக்கூடியவர் பதவிக்கு வர விரும்புகிறார்; பிந்தையவர் நவம்பர் 24ம் தேதி பதவியில் இருந்து விலக இருக்கிறார்.

கடந்த செவ்வாயன்று அழுத்தங்கள் இன்னும் அதிகமாக பல ஆயிரக்கணக்கான வீரர்கள், போலீசார் மற்றும் டாங்குகள் லஹெளட்டிற்கு பதிலாக வேறு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடந்த கூட்டக் கட்டிடத்தை சுற்றி சூழ்ந்திருந்தனர். சிரிய-எதிர்ப்பு உடைய பிரதிநிதிகளை, ஆயுதம் தாங்கியவர்களின் பாதுகாப்பின் கீழ் கார்னிஷில் இருக்கும் பினிசியா ஹோட்டலில் இருந்து பாதுகாப்புப் படைகள், பத்திரமாக பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தன.

மரபார்ந்த வகையில் ஜனாதிபதி ஒரு மரோனைட் கிறிஸ்துவராக இருக்க வேண்டும்; அவர்களில் பெரும்பாலானவர்கள் சிரிய எதிர்ப்பாளர்கள் ஆவர்.

மார்ச் 24 கூட்டணி என அழைக்கப்படும் ஆளும் சுன்னி முஸ்லிம்கள், Druze மற்றும் கிறிஸ்துவர்கள் அடங்கிய கூட்டணி, தங்கள் முகாமில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்புகிறது; அத்தகைய வேட்பாளரோ வறிய ஷியாக்களுக்குச் சிறிதும் பிடிக்காதவராக இருப்பார்; ஷியாக்கள் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள் ஆவர். விதிகளின்படி 128 சட்ட மன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கினர் வாக்களித்தால்தான் முதல் சுற்று வாக்குகள் செல்லுபடியாகும்.

ஆளும் கூட்டணியில் இருந்து ஒரு வழக்கறிஞரான Boustros Harb, முன்னாள் மந்திரி Robert Ghanem; மற்றும் இப்பொழுதுள்ள ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரும் முன்னாள் அமெரிக்க தூதராக இருந்த Nassib Lahoud ஆகியோர் மூன்று வேட்பாளர்கள் ஆவர். வாஷிங்டனோ லெபனான் மத்திய வங்கியின் நீண்ட கால கவர்னராக இருந்த Riad Salameh ஐ வேட்பாளராக்க விரும்புகிறது. ஆனால் அரசாங்க ஊழியராக இருப்பதால் அவர் தேர்தலுக்கு நிற்பது தடை செய்யப்பட்டுள்ளது.

படைத்தலைவர் Michel Suleiman வடக்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதி முகாமான Nahr Al-Bared ல் பதா அல் இஸ்லாமின் எழுச்சியை அடக்கினார்; இதற்கு அவருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகள், செளதிக்கள், எகிப்பதியர்கள் மற்றும் ஜோர்டன் மக்கள் ஆகியோருடைய ஆதரவு இருந்தது. ஹெஸ்பொல்லா உட்பட பலரும் அவரும் ஒரு வேட்பாளராக வரக்கூடும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவரும் அரசாங்க ஊழியராதலால் தடைக்கு உட்படுகிறார்.

முன்னாள் தளபதி Michel Aoun, FPM எனப்படும் சிரிய எதிர்ப்பு கிறிஸ்துவ சுதந்திர நாட்டுப் பற்று இயக்கத்தை சேர்ந்தவர், தந்திரோபாய முறையில் தன்னுடைய முன்னாள் விரோதிகளான ஷியைட் முஸ்லிம்களுடன் கூட்டு சேர்ந்தார்; இது 2006 பெப்ருவரியில் அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதற்கு ஆதரவாக நடந்தது. Aoun பரந்த முறையில் அவநம்பிக்கைக்கு உட்பட்டுள்ளார். லெபனானில் உள்நாட்டு போர்க்காலத்தின் கடைசி ஆண்டுகளான 1989 முதல் 1991 வரை இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்கத்திற்கு எதிராக கிறிஸ்துவ தொகுப்புக்களில் இருந்து ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சியையே நடத்தினார்; பின்னர் இவர் சிரிய சார்பு உடைய படைகளால் தோற்கடிக்கப்பட்டு பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டார்; அங்கு அவர் 2005ல் சிரியர்கள் லெபனானை விட்டு நீங்கும் வரை இருந்தார்.

ஒரு அமெரிக்க சார்பு வேட்பாளர் ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதில் வாஷிங்டன் தீவிரமாக உள்ளது. அமெரிக்க தூதரான ஜேப்ரி பெல்ட்மன், மார்ச் 14 கூட்டணிக்கு உரத்த குரலில் ஆதரவு கொடுப்பவர், மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு லெபனான் ஒரு மூலாபாய பங்காளி என்று கூறி, தேர்தலுக்கு பின்னரும் லெபனானில் தன்னை இருத்திக் கொண்டார், அதேவேளை, இவருக்கு பதிலாய் பதவியில் வைக்கப்பட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் தொடர்ந்தும் இருந்து வருகிறார். தேர்தலை பெல்ட்மன் மூலம் சூழ்ச்சியாய் கையாளுவதற்கு அமெரிக்கா செய்யும் முயற்சி இது என்று சிரியர்கள் கருதுகின்றனர்.

அரசாங்கத்துடன் ஒருமித்த உணர்வின்மூலம் வேட்பாளர் பற்றி உடன்பாடு காணமுடியாத நிலையில், ஹெஸ்பொல்லா, அமல், ஒளனின் கிறிஸ்துவ சுதந்திர நாட்டுப் பற்று இயக்கம் (FPM) ஆகியவற்றில் இருந்த 58 உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு கூட்டத்தை புறக்கணித்தனர்; அதையொட்டி அவர்கள் சினியோராவின் நண்பர்கள் ஒரு அமெரிக்க சார்புடைய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதை தடுத்து, லெபனான் மீது முழுக் காட்டுப்பாட்டை பெற்றனர்.

அரசியலமைப்பு விதிகளின்படி ஷியைட் சமூகத்தில் இருந்து வந்த மன்றத் தலைவரான Nabih Berri பிரதிநிதிகள் மன்றத்தை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்; ஒரு சமரச வேட்பாளர் பற்றி உடன்பாடு காணமுடியுமா என்பதற்கு கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் ஆகும் இது.

தற்போதைய மோதல் இரு போட்டி அரசாங்கங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு வளத்தை கொண்டுள்ளன; இது மீண்டும் உள்நாட்டுப் போரை எரியூட்டும். பிரதிநிதிகள் மன்றம் நவம்பர் 24ம் தேதிக்குள் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், வெளியேறும் ஜனாதிபதி ஒரு இடைக்கால நிர்வாகத்தை நியமிக்கலாம்; இது ஒரு இரட்டை ஆட்சிக்கான தளத்தை அமைக்கக்கூடும். உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்றால் ஒரு இராணுவ அரசாங்கத்தை அமைக்க இருப்பதாக Laboud அச்சுறுத்தியுள்ளார்.

ஆளும் தன்னலக்குழு ஏற்கனவே சமரச வேட்பாளர் பற்றி உடன்பாடு ஏற்படவில்லை என்றால், சாதாரண பெரும்பான்மையுடன் வேறு ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது; பிரதிநிதிகள் மன்றத்தில் அது இன்னமும் ஒரு பெரும்பான்மையை கொண்டுள்ளது;

இரு லெபனிய ஜனாதிபதிகள் பதவி ஏற்குமுன், தங்கள் கைப்பாவை ஜனாதிபதி பதவியை பெற வேண்டும் என்று குறுக்கீடு செய்த அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் சிரிய முயற்சிகளால் படுகொலை செய்யப்பட்டுவிட்ட நாட்டில், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை என்பதை கடக்க எவர் முயன்றாலும் அது உள்நாட்டுப் போருக்கு எரியூட்டிவிடும்.

அத்தகைய நடவடிக்கை சட்ட விரோதமாக இருக்கும் என்றும் ஒரு போர் அறிவிப்புக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. "நாம் கொடுக்கும் தகவல் தெளிவு. சட்டத்தின்படி தேவைப்படும் குறைந்த பட்ச எண்ணிக்கை என்பது விவாதத்திற்கு உரிய பிரச்சினை அல்ல; அத்தகைய ஜனாதிபதிக்கு ஆதரவு எனக் கூறும் நாடுகள் (சாதாரண பெரும்பான்மையினால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதிக்கு ஆதரவு என்றால்), அவரை காப்பாற்றுவதற்கு தங்கள் படைகளைத்தான் அனுப்ப வேண்டியிருக்கும்.

எவர் ஜனாதிபதியாக வந்தாலும், அதிகரித்த முறையில் சர்வதேச மூலதனம் ஆணையிடும் செயற்பட்டியலுக்கு ஏற்ப பொருளாதார வெளியுறவுக் கொள்கையை மக்கள் மீது சுமத்தும் கடினமான பணியை எதிர்கொள்ளுவர். அத்தகைய நிலைப்பாடு மக்களின் பரந்த பிரிவுகளுக்கு முற்றிலும் விரோதமானது ஆகும்; அந்நிலையில் அமெரிக்கா, சிரியா, ஈரானை தாக்குவதற்கு ஒரு போலிக் காரணத்தை உறுதியாகக் கண்டுவிடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved