:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan president's speech at the UN:
lies in defence of war and human rights abuses
ஐ.நா. வில் இலங்கை ஜனாதிபதியின் உரை: யுத்தத்தையும் மனித உரிமை மீறல்களையும்
பாதுகாக்கும் பொய்கள்
By Wije Dias
5 October 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஐ.நா. பொதுச் சபையில் செப்டெம்பர்
26ல் ஆற்றிய உரை, பொய் மற்றும் மோசடிகளின் இன்னுமொரு வெளிப்பாடாகும். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும்
தனது அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள
அவர், தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு தள்ளுவதை இலக்காகக் கொண்ட தற்காப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக போலித்தனமாகக் கூறிக்கொள்கின்றார்.
உள்நாட்டில் சிங்கள தேசியவாத அழைப்புக்களை பெருக்கச் செய்வதற்காக தனது
உரையை சிங்களத்தில் ஆற்றிய இராஜபக்ஷ, "பயங்கரவாதிகளுக்கு இராணுவ வெற்றியைப் பெறுவது சாத்தியமாகாது
என்பதை அவர்களுக்கு உணர்த்துவதன் பேரில், அவர்கள் மீது அழுத்தத்தை திணிப்பதற்காக மட்டுமே நாங்கள் இராணுவ
நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இந்த துரதிஷ்டவசமான மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலமான, கெளரவமான
முடிவை அடைவதிலேயே எமது இலக்கு நிலைத்திருக்கின்றது," எனப் பிரகடனம் செய்தார்.
உண்மையில், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை போதுமான வகையில் கிழித்தெறிந்ததற்கும்,
புலிகளை அழிப்பதை இலக்காகக் கொண்ட புதிய ஆக்கிரமிப்பு யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டதற்கும் மற்றும் தீவின்
தமிழ் சிறுபான்மையினரை பீதிக்குள்ளாக்க இராணுவத்தின் ஆதரவிலான கொலைப் படைகளை கட்டவிழ்த்து விட்டதற்கும்
இராஜபக்ஷவே பொறுப்பாளியாவார். அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருப்பி எழுதுவது உட்பட, புலிகள்
ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என தான் நன்கு தெரிந்து வைத்திருந்த ஒரு தொகை கோரிக்கைகள் உள்ளடங்கிய
ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்து 2005 நவம்பரில் நடந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்தார்.
ஒரு முறை இரகசிய கொலை மற்றும் ஆத்திரமூட்டல் யுத்தமொன்றுக்காக
இராணுவத்தை கட்டவிழ்த்துவிட்ட இராஜபக்ஷ, பின்னர் கடந்த ஜூலையில், புலிகளின் பிராந்தியத்தைக்
கைப்பற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் முதலாவதை கட்டவிழ்த்துவிட்டார்.
அரசாங்கங்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு எதிரான கண்டன நடவடிக்கையாக, புலிகளால்
மூடப்பட்ட மாவிலாறு அனைக்கட்டின் மதகை மீண்டும் திறப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை எனக்
கூறிக்கொண்டு, இராஜபக்ஷ யுத்த நிறுத்தத்தை வெளிப்படையாக மீறியதை மோசடியான முறையில் மூடிமறைத்தார்.
மாவிலாற்றைக் கைப்பற்றியமை "கிழக்கை விடுவிப்பதை" குறிக்கோளாகக் கொண்ட
தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் முதலாவதாக இருந்தது. கடந்த ஜூலையில் தொப்பிகல வீழ்ந்ததை
அடுத்து, அரசாங்கமும் இராணுவமும் "கிழக்கின் விடிவை" பிரமாண்டமான முறையில் கொழும்பில் கொண்டாடின. இது
தீவின் கிழக்குப் பகுதிகள் முழுவதும் புலிகளை வென்றதற்காக "ஆயுதப் படைகளை கெளரவிப்பதற்காக"
நடத்தப்பட்டது. இப்போது இராணுவம் வடக்கில் புலிகளின் எஞ்சியுள்ள பிரதேசத்தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ள
நிலையில், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் இடம்பெய்ர்ந்த மக்களின் எண்ணிக்கையும்
தொடர்ந்தும் அதிகரிக்கவுள்ளது.
இராஜபக்ஷ ஐ.நா. வில் சமாதானப் பேச்சுக்களுக்காக திறந்த மனதுடன்
இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் அதே வேளை, அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய
இராஜபக்ஷ, அரசாங்கம் புலிகளை முற்றாக நிர்மூலமாக்க முயற்சிக்கின்றது என்பதில் சந்தேகத்துக்கு இடம்
வைக்கவில்லை. ஒரு வாரத்துக்கு முன்னர் இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி அருகில் இருக்கும் போது
உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் பிரகடனம் செய்ததாவது: "தற்போது எங்களால் அடைய முடியாமல்
இருக்கும் அரசியல் தீர்வில் தங்கியிருப்பதற்கும் மேலாக, நாங்கள் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி
பயங்கரவாதத்தை தோற்கடிக்கத் தயாராக உள்ளோம். நாம் அரசியல் தீர்வு ஒன்றைக் காண பயங்கரவாதிகளை
50 வீதம் அல்ல, 75 வீதம் அல்ல, 100 வீதம் தோற்கடிக்க வேண்டும்.''
இந்த சந்தர்ப்பமும் குறிப்பிடத் தக்கதாகும். புலிகளுக்கு சொந்தமானது எனக்
கடற்படையினரால் கூறப்பட்ட, மூன்று கப்பல்களை மூழ்கடிப்பதில் ஈடுபட்ட கட்டளை அதிகாரிகள் மற்றும் கடற்படை
சிப்பாய்களை பெருமைப்படுத்த நடத்தப்பட்ட பரிசளிப்பு விழாவே அது. இந்த கப்பல்கள் இலங்கை
கடற்பிராந்தியத்திற்குள் இருக்கவில்லை. அவை இலங்கையில் இருந்து 1,400 கடல் மைல்கள் தூரத்தில் சர்வதேச
கடற்பரப்பிலேயே இருந்தன. செப்டெம்பர் 23 வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் கணக்குப்படி,
கப்பல்களை நெருங்குவதற்கோ அல்லது அதில் இருந்த சரக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ளவோ
முயற்சிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தின் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தின் வெளிப்படையான ஆக்கிரமிப்பு
நடவடிக்கையில் இதுவும் ஒன்றாகும்.
ஐ.நா. வில் தனது 10 நிமிட உரையின் போது, ஜனாதிபதி இராஜபக்ஷ
"பயங்கரவாதிகள்" அல்லது பயங்கரவாதம்" என்ற சொற்களை 13 தடவைகளுக்கும் குறையாமல்
பயன்படுத்தினார். "இங்கு இந்த சபையில் பல நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் உள்ளார்கள். அப்பாவி
உயிர்களை அழிக்க இந்த பூகோளத்தின் பல மூலைகளிலும் தனது நகங்களை விரிக்கும் கொடூரமான
பயங்கரவாதத்தால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகளின் நேரடி அனுபவம் இந்தப் பிரதிநிதிகளுக்கு இருக்கும்," எனப்
பிரகடனம் செய்த அவர், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துடன்"
பொதுமைப்படுத்திக்கொள்ள பெரும் சிரமப்பட்டார். பயங்கரவாதம் மீதான 13 ஐ.நா. தீர்மானங்களில் 11ஐ
தனது நாடு ஏற்றுக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், "பயங்கரவாதத்தின் மீதான பூகோள யுத்தத்தில்"
இலங்கையின் "முனைப்பான நிலைப்பாட்டை" தூக்கிப் பிடித்தார்.
இந்த அற்ப அரசியல் கணக்கெடுப்புகள் தெளிவானவை. ஆப்கானிஸ்தானிலும்
ஈராக்கிலும் புஷ் நிர்வாகத்தின் குற்றவியல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், இராஜபக்ஷ புலிகளுக்கு
எதிரான தனது சொந்த "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்திற்கு" அமெரிக்காவினதும் பெரும் வல்லரசுகளதும்
ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். பிரிவினைவாத புலிகளை "பயங்கரவாதத்துடன்"
அடையாளப்படுத்துவதன் மூலம், அவர் தீவின் 24 ஆண்டுகால இரத்தக்களரி யுத்தத்தின் உண்மையான வேர்கள்
திட்டமிட்ட தமிழர் விரோத பாகுபாடுகளில் இருந்து தோன்றியிருப்பதை மூடிமறைக்கின்றார். இராஜபக்ஷ
அரசாங்கமும், 1948 சுதந்திரம் வரை பின்நோக்கி பார்த்தால், அதன் முன்னோடிகளும் அடிப்படையாகக்
கொண்டிருப்பது இந்த தமிழர் விரோத பாகுபாடுகளையே ஆகும்.
"பயங்கரவாத" வழிமுறைகளை பொறுத்தளவில், இலங்கை இராணுவமும் புலிகளைப்
போலவே, இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரப்படுத்தவும் நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் மீது
"பயங்கரத்தை" திணிக்கவும் அப்பாவி மக்களை படுகொலை செய்ய விரும்புகின்றது. தமிழ் சிறுபான்மையினர்
அனைவருமே பாதுகாப்புப் படையினரால் எதிரிகளாக நடத்தப்படுகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த இராணுவத்
தாக்குதல்களில், ஆயுதப் படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியதோடு, ஆட்டிலறி மற்றும் மோட்டார்களையும்
பயன்படுத்தின. இதுபற்றிய விமர்சனத்தை எதிர்கொண்ட போது, "பயங்கரவாதிகள்" பொதுமக்களை "மனிதக்
கேடயங்களாகப்" பயன்படுத்துகின்றனர், என அரசாங்கம் வாஷிங்டனின் நிலையான பொய்யைப் பயன்படுத்தி
பதிலளித்தது. நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள், "காணாமல் போயுள்ளனர்" அல்லது
கொல்லப்பட்டுள்ளனர். இவை துருப்புக்கள் அல்லது அவர்களோடு சேர்ந்து செயற்படும் துணைப்படையினர்
சம்பந்தப்பட்டவர்களால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட கொலைப் படைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை சூழ்நிலைகள்
சுட்டிக்காட்டிய நிலையிலேயே நடந்தேறியுள்ளன.
ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றிய புஷ் நிர்வாகத்தின் போலிக்
காரணங்களை எதிரொலித்த இராஜபக்ஷ, இராணுவம் "கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதத்திடம் இருந்து விடுவித்து
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டியுள்ளது" என பிரகடனம் செய்தார். அவர் "கிழக்கில் பிரமாண்டமான
புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு திட்டம் பற்றி" பெரிதாக்கி காட்டியதோடு வெளிநாட்டு முதலீட்டுக்கும் நிதி
உதவிக்கும் ஒரு களம் அமைத்தார். இலங்கை இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள
பகுதிகளில் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாகவே செயற்படுகின்றது என்பதே உண்மையாகும். அங்கு கொழும்பு
அரசாங்கத்தால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண அதிகாரிகள் இல்லாத அதே வேளை,
"பாதுகாப்பில்" நேரடியாக அன்றி தொலைவில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு விடயத்திலும்,
விளைபயனுள்ள வகையில் இரத்து அதிகாரத்தைக் கொண்டுள்ள இராணுவத்துடன் சேர்ந்து, கொழும்பு
அரசாங்கத்தாலும் அரச அதிகாரத்துவத்தாலும் கொள்கைகள் திணிக்கப்படுகின்றன.
கிழக்கில் "புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்காக, அரசாங்கம் சம்பூரில் ஒரு
பெரும் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றியுள்ளது. ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகளை அவர்களது
வீடுகள், நிலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இருந்தும் வெளியேற்றி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு
சுதந்திர வர்த்தக வலயத்துடன் இந்த உயர் பாதுகாப்பு வலயம் ஒத்துழைக்கும்.
இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல் பதிவுகள் தொடர்பான விமர்சனத்திற்கு
பதிலளிக்கையில், எந்தொரு விமர்சகரையும் புலி ஆதரவாளர் என கண்டனம் செய்யும், தனது நிலையான
வழிமுறையை பயன்படுத்துவதில் இருந்து இராஜபக்ஷ தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டார். இந்த ஆண்டின்
முற்பகுதியில், பாதுகாப்புச் செயலாளர் இராஜபக்ஷ, இலங்கையை ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக
"நெருக்குவதாக" ஐ.நா. வை குற்றஞ்சாட்டியதோடு, அந்த சர்வதேச சபையானது கடந்த 30 ஆண்டுகளாக
முற்றிலும் புலிகளின் "ஊடுருவலுக்கு" உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார். ஜனாதிபதி தனது சகோதரரின்
கேலிக்கூத்தான குற்றச்சாட்டுக்களை ஐ.நா. பொதுச் சபையில் திரும்பக் கூறாவிட்டாலும், அவர் இலங்கை மனித
உரிமைகள் தொடர்பாக "பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு" வருகிறது என கூறினார்.
இராஜபக்ஷ மேலும் பிரகடனம் செய்ததாவது: "பெளத்த கொள்கைகளால்
வழிநடத்தப்பட்ட நாம், ஏனைய மனித உயிர்களின் உரிமைகளை நீண்டகாலமாக மதிக்கின்றோம். ஆகையால்
அவற்றின் பெறுமதியை அடையாளங் கண்டுகொள்ள பூகோள யுத்தங்களதும் அல்லது மில்லியன் கணக்கானவர்களின்
சாவுகளதும் அனுபவங்களைப் பெற வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பவோ
வியாபார முன்னேற்றத்துக்காகவோ அல்லது மத உரிமைகளுக்காவோ ஏனைய மனித உயிர்களுக்கு துயரத்தை
திணித்ததாக எமது நாட்டில் பதிவுகள் கிடையாது. ''
மேலைத்தேய வல்லரசுகளின் யுத்த வரலாற்றையும் கொள்ளையடிப்புக்களையும் மறைமுகமாக
சுட்டிக் காட்டுவதன் மூலம் அவர்களின் பாசாங்குக்கு சாடை காட்டிய இராஜபக்ஷ, இலங்கையில் வரலாற்று பதிவுகளை
பொய்மைப்படுத்தினார். இதற்கு கடந்த 24 ஆண்டுகால இனவாத மிலேச்சத்தனத்தை மேற்கோள் காட்டுவதே
போதுமானது. இந்த சிங்கள பெளத்த மேலாதிக்கத்திற்கான யுத்தத்தின் தீவிரமான வீரர்களில் பெளத்த மதகுருமாரும்
அடங்குவர். இராஜபக்ஷ வெளியிடும் செய்தி தெளிவானது: யுத்தத்தை முன்னெடுக்கவும் மற்றும் தண்டனையில் இருந்து
விலக்கீட்டுரிமையுடன் தீவின் தமிழ் சிறுபான்மையினரை கிலிகொள்ளச் செய்யவும், இலங்கை இராணுவத்தை பெரும் வல்லரசுகள்
அனுமதிக்கும் வரை, மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் கடந்தகால மற்றும் நிகழ்கால குற்றங்களைப் பற்றி நாம்
மெளனம் காப்போம், என்பதே அந்த செய்தியாகும்.
இராஜபக்ஷவின் உரையில் நிறைந்துள்ள பொய்களையும் மோசடிகளையும் இலங்கை ஆளும்
வட்டாரத்தில் உள்ள எவரும் சவால் செய்யவில்லை. இலங்கையின் "நடுநிலை" குரலாக கருதப்படும் டெயிலி
மிரர் பத்திரிகை, "ஜனாதிபதி இலங்கை பிரச்சினையை வலிமையுடன் முன்வைத்தார்" என்ற தலைப்பில் செப்டெம்பர்
28ல் ஒரு ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியிருந்தது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கத்தை குற்றங்காண்பதற்கு
மாறாக, இந்த ஆசிரியர் தலைப்பு இராஜபக்ஷவின் பக்கம் உறுதியாக நின்றது. "பயங்கரவாதிகளும் அவர்களது
ஆதரவாளர்களும் பயங்கரவாதத்துடன் போதுமான வகையில் கொடுக்கல் வாங்கல் செய்வதற்காக, நாடுகள் மேற்கொள்ளும்
முயற்சிகளுக்கு குறுக்கீடு செய்யும் விவகாரங்களை சேகரித்துக் கொள்கின்றனர்," என அது பிரகடனம் செய்கின்றது.
அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபன பிரிவுகள், தமக்கிடையில் எந்ந வகையிலான செயற்திட்டம்
சார்ந்த வேறுபாடுகள் இருந்த போதிலும், அவை இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தத்திற்கு
ஆதரவளிப்பதோடு அவரது குற்றங்களுக்கும் உடந்தையாய் இருக்கின்றன என்பதையே இந்த மெளனம் உறுதிப்படுத்துகின்றது.
|