World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Differing motives propel India and US to finalize nuclear agreement

வேறுபட்ட நோக்கங்கள் இந்தியா, அமெரிக்காவை அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இயக்குகின்றன

By Deepal Jayasekera and Kranti Kumara
11 September 2007

Back to screen version

ஆகஸ்ட் 3ம் தேதி இந்தியாவும் அமெரிக்காவும் படைத்துறைசாரா அணுசக்தி எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை வணிகப்படுத்தும் விதிமுறைகளை விவரிக்கும் உடன்பாட்டின் 22-பக்க உரைப்பகுதியை ஒரே நேரத்தில் வெளியிட்டன.

தங்கள் நாடுகளின் அரசியல் மற்றும் புவி-அரசியல் உயரடுக்குகளை சமாதானப்படுத்தி எதிர்ப்பை சமாளிப்பதற்கு சில வாரங்களை இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி (UPA) மற்றும் புஷ் நிர்வாகம் எடுத்துக் கொண்ட காலதாமதத்தை அடுத்துத்தான் இந்த உடன்பாடு பகிரங்கமாக வெளியிடப்பட்டது.

இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கும் கொள்கை அளவில் ஜூலை 2005ல் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கல் வாய்ந்த முறையில், கடினமான பேச்சு வார்த்தைகள் நடந்ததின் விளைவாகத்தான் இந்த உடன்பாடு வந்துள்ளது; கொள்கையளவு ஒப்புதலுக்கு பின்னர் பல முறையும் இந்த 24 மாதங்களில் ஒப்பந்தம் இறுதி வடிவைப் பெறுவதற்குள் தீர்க்க முடியாத வேறுபாடுகள் என்ற சகதியில் மூழ்கி விடுமோ எனத் தோன்றியது.

1954ம் ஆண்டு அமெரிக்க அணுசக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ் அமெரிக்கா மற்றைய நாடுகளுடன் அணுசக்தி உடன்பாடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதால் 123 உடன்பாடு (123 Agreement) என பெயரிடப்பட்டுள்ளது. 1974ம் ஆண்டு ஒரு அணுவாயுத சாதனத்தை முதலில் வெடித்ததிலிருந்து அமெரிக்கா தலைமையில் இந்தியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட படைத்துறைசாரா அணுசக்தி தொழில்நுட்பத்துறை, மற்றும் எரிபொருள் ஏற்றுமதிக்கான சர்வதேசத் தடையை அகற்றுவதற்கு இந்த உடன்பாடு வழி செய்கிறது. இவ்வாறு செய்கையில் அது உலக அணுசக்தி கட்டுப்பாட்டுக் குழு ஒரு பிரத்தியேக விலக்கை இந்தியாவிற்கு அளிக்க இது வகை செய்கிறது; இதையொட்டி தன்னை அணுவாயுதம் உடையது என்று கூறிக் கொள்ளும் நாடு, Nuclear (Non-Proliferation Treaty) அணுசக்தி பரவல் தடுப்பு உடன்பாட்டில் கையெழுத்திடாத நாடு, அணுசக்தி எரிபொருட்களையும், நவீன அணுசக்தி தொழில்நுட்பத்தையும் வாங்குவதற்கு இது வழிவகுக்கிறது.

இந்திய அரசாங்கம் பாராளுமன்றத்தின் இசைவு இல்லாமல் இந்த ஒப்பந்தத்தை சட்டபூர்வமாக செயல்படுத்த முடியும் என்றாலும், அமெரிக்க அரசாங்கம் காங்கிரசின் ஒப்புதலைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் இந்தியா அணுசக்தி அளிப்போர் குழு (NSG) என்ற, உலகின் அணுசக்தி வணிகத்தை கட்டுப்படுத்தும் குழுவுடனும் சர்வதேச அணுசக்திக் குழு (IAEA) உடனும் வெற்றிகரமாக பேச்சு வார்த்தைகள் நடத்தினால்தான் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும்.

வாஷிங்டனும் புது டெல்லியும் பலமுறையும் இந்த உடன்பாடு தங்கள் நாடுகளுக்கு எத்தகைய முக்கியத்துவத்தை கொடுக்கிறது என்றும் இந்திய-அமெரிக்க "மூலோபாய" மற்றும் "உலகளாவிய" பங்காளித்தன வளர்ச்சிக்கும் உதவும் என்பதை வலியுறுத்தியுள்ளன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்த ஒப்பந்தத்தை "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மாறுபட்டுவிட்ட இருதரப்பு உறவின் உரைகல் ஆகும்" என்று கூறியுள்ளார்; அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைசோ இதை, இந்திய அமெரிக்க உறவுகளை வரவிருக்கும் தசாப்தங்களில் அமெரிக்கா ஆசியாவிலும் உலகிலும் கொள்ளக் கூடிய வகையில், முக்கிய, நேரிய உட்குறிப்புக்களுடன், தரத்தன்மையில் ஒரு புதிய தளத்தில்வைக்கும் ஒரு "வரலாற்று மைல்கல்" எனக்கூறியுள்ளார்.

அணுவாயுத பரவலைத் தடுத்தல் பற்றி அமெரிக்க பாசாங்குத்தனம்

உடன்பாட்டை விமர்சிப்பவர்கள் பலமுறையும் குறிப்பிட்டுள்ளபடி, இது சர்வதேச சட்டங்கள், ஒழுங்குமுறை விதிகள், அணுவாயுதப் பரவல் தடுப்பு உடன்பாடு (NPT) உட்பட, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வளர்ச்சியுற்றுள்ள ஒழுங்கை அச்சுறுத்தும் திறன் கொண்டுள்ளது எனக் கூறுகின்றனர். இப்பொழுது இருக்கும் சர்வதேச அணுவாயுதக் கட்டுப்பாடு அமைப்பு அமெரிக்காவின் முன்முயற்சியால் பெரிதும் நிறுவப்பட்டது; அதன் நோக்கம் 1960 களின் கடைசிப் பகுதியில், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் (ரஷ்யா), பிரிட்டன், பிரான்ஸ், சீனா என்று ஏற்கனவே அணுசக்திகளை வைத்திருந்தவர்கள் மட்டும்தான் அதைக் கொள்ளும் "உரிமை" பெற்றவை என்று மட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும்.

அமெரிக்காவும் பிற அணுவாயுதங்கள் பெற்றுள்ள சக்திகளும் மற்ற நாடுகள் அணுவாயுதங்களை தயாரிக்கும் விழைவை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றுதான் NPT ஆகும்; இது 1970ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளை மின்சக்தி உற்பத்திக்காக பயன்படுத்த விரும்பி பெறவிழையும் அரசுகள், இராணுவ நோக்கங்களுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி மொழி கொடுத்து NPT யில் கையெழுத்திட வேண்டும்.

NPT ஐ உறுதியுடன் இந்தியா எப்பொழுதுமே நிராகரித்துள்ளது; உலகை இருவித நாடுகளாக, இது பிரிக்கிறது என்றும் 1962 ஒரு எல்லைப் போரை நடத்தி அதில் தோல்வியுற்ற நிலையில், சீனாவிற்கு எதிராக அதை மூலோபாய வகையில் பெரும் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது என்றும் NPT யின் கீழ் அணுவாயுதங்களை வைத்துக் கொள்ளும் நாடுகள் உலகத்தில் அணுவாயுதக் களைப்பு பற்றிய தங்கள் சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஏதும் செய்யவில்லை என்றும் அது கூறியுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில், இந்திய உயரடுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை வறுமையில் வாடவிட்டு, உள்நாட்டு படைத்துறைசாரா மற்றும் இராணுவ அணுசக்தித் திட்டத்தை வளர்ப்பதற்கு, சர்வதேச தடைகளையும் மீறி பரந்த நிதியை விரிவாக்கம் செய்துள்ளது. மே 1998ல், இந்தியா தொடர்ச்சியாக அணுவாயுதச் சோதனைகளை நடத்திய பின்னர் தன்னை முறையாக ஒரு அணுவாயுத நாடாக அறிவித்துக் கொண்டது.

ஆயினும், புஷ் நிர்வாகம் இந்தியாவை சர்வதேச அணுசக்தி சட்டவிதிகளில் இருந்து விலக்கு அளிக்கும் பிரச்சாரத்தை ஆக்கிரோஷத்துடன் மேற்கொண்டு வருகிறது; அதே நேரத்தில் NPT ல் கையெழுத்திட்டுள்ள ஈரானை, NPT யின் கீழ் சட்டபூர்வமாக செயற்பாடுகளை நடத்த அங்கீகாரம் பெற்ற ஈரானை, அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க அமைப்பின் பகுதிகள் சில, நியூ யோர்க் டைம்ஸின் ஆசிரியர்கள் உட்பட, இந்தியாவிற்கு உலகின் அணுசக்தி அமைப்பின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கும் புஷ் நிர்வாகத்தின் முயற்சியை எதிர்த்துள்ளன; இது ஈரானையும் வட கொரியாவையும் தங்கள் அணுசக்தித் திட்டங்களை கைவிட்டுமாறு மிரட்டும் அமெரிக்க முயற்சிக்கான சர்வதேச ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடக்கூடும் என்ற காரணத்தால் துல்லியமாய் அவ்வாறு கூறப்படுகிறது.

இந்தியாவுடன் மூன்று பிரகடனப்படுத்தப்பட்ட போர்களை நடத்தியுள்ள பாகிஸ்தான் 1998ல் இந்தியா நடத்திய அணுவாயுதச் சோதனைகளுக்கு விடையிறுக்கும் வகையில் தன்னையும் ஒரு அணுவாயுத நாடு என்று அறிவித்துக் கொண்டது; இதற்கிடையில் அது அமெரிக்கா இந்தியாவிற்கு கொடுக்கும் சிறப்பு நட்புமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இத்தகைய இந்தியாவிற்கான ஆதரவு, தெற்கு ஆசியாவில் ஆயுதங்கள் போட்டியை முடுக்கிவிடக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் UPA அரசாங்கமும் புஷ் நிர்வாகமும் இந்திய-அமெரிக்க படைத்துறைசாரா அணுசக்தி ஒத்துழைப்பு இந்தியாவின் அணுவாயுதத் திட்டத்தில் எந்தப் பாதிப்பையும் கொள்ளாது என்று வலியுறுத்தியுள்ளன. ஆனால் இந்தியா அணுசக்தி எரிபொருள் மற்றும் நவீன சிவில் அணுசக்தி தொழில்நுட்பத்தை அடைந்தால், அது இன்னும் கூடுதலான முறையில் தன்னுடைய உள்நாட்டு அணுசக்தித் திட்ட ஆதார வளங்களை ஆயுத தயாரிப்பிற்கு பயன்படுத்தும் என்பது நன்கு அறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பூகோள அபிலாசைகளுக்காக இந்தியாவை ஊக்குவித்தல்

ஆனால் ஒவ்வொரு அரசாங்கமும் உள்நாட்டு எதிர்ப்பை சமாளிப்பதுடன் IAEA இன் ஆதரவு மற்றும் NSG உறுப்பு நாடுகளின் ஒருமனதான இசைவு ஆகியவற்றை பெற்றால்தான் 123 உடன்பாடுகள் நடைமுறைக்கு வரும்; எனவே அது வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இந்தியாவிற்கு அணுசக்தி உலைகளை விற்பதில் சற்று கூடுதலான நலன்களை பெற்றுள்ளதாக நம்பும் பிரான்சும் ரஷ்யாவும் NPT யின் முக்கிய விதிகளில் இருந்து இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு ஆதரவு தருவதாகக் குறிப்புக் காட்டியுள்ளன. தன்னுடைய இசைவு கொடுக்கப்படுமா என்பது பற்றி பெய்ஜிங் உறுதியாகக் கூறமுடியாத அடையாளங்களைத்தான் கொடுத்துள்ளது; ஏனெனில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எழுச்சி பெற்று வரும் சீனாவிற்கு ஒரு எதிர் சக்தியாக இந்தியாவை கட்டமைக்கும் அமெரிக்க உந்துதல்தானென்று அது சரியான முறையில் உணர்ந்துள்ளது.

இந்தியாவில் 123 உடன்பாட்டின் உரை வெளியிடப்பட்டது ஒரு அரசியல் புயலையே கட்டவிழ்த்துள்ளது; இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தலைமையில் உள்ள இடது முன்னணி அரசாங்கம் உடன்பாடு மறுமுறை பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டு மாற்றப்படும் வரை IAEA, NSG உடன் பேச்சுவார்த்தைகள் கூடது எனக் கோரியுள்ளது.

இவ்வுடன்பாடு இந்தியாவை தன்னுடைய புவி அரசியல் மூலாபோயத்துக்குள் இழுக்கும் வாஷிங்டனுடைய தீவிர உந்துதலின் பின்னணியில், குறிப்பாக ஈரான், சீனாவிற்கு எதிரானதில் கட்டாயம் காணப்பட வேண்டும் என்றும், இந்தியாவை அமெரிக்க ஆயுதங்கள், அணுசக்தி தொழில்நுட்பம் ஆகியவற்றையே நம்பியிருக்கும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடும் என்றும் இடது முன்னணி எச்சரித்துள்ளது

ஒரு கோழைத்தனமான, அரைமனத்துடன் செய்யப்பட்டது என்றாலும், இடது முன்னணியின் எதிர்ப்பு UPA சிறுபான்மை அரசாங்கத்தின் உறுதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது; ஏனெனில் UPA பதவியில் இருப்பதற்கு இடது முன்னணியின் வாக்குகளைத்தான் நம்பியிருக்கிறது.

கிட்டத்தட்ட மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் உடன்பாட்டை கண்டித்துள்ளன. நெருக்கடி நிறைந்த உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான, இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) இந்த உடன்பாடு இந்தியாவின் அணுவாயுதத் திட்டத்தின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்திவிடக்கூடும் எனக் கூறியுள்ளது. படைத்துறைசாரா அணுசக்தி ஒத்துழைப்பு என்பது இந்தியா இனி அணுவாயுதச் சோதனைகளை நடத்தக் கூடாது என்ற அமெரிக்க நிபந்தனையில் உள்ளது என்ற கவலைகள் இருந்தாலும், BJP யின் உடன்பாடு பற்றிய எதிர்ப்பு UPA எந்த முன்முயற்சி எடுத்தாலும் அதை நாசப்படுத்திவிட வேண்டும் என்ற கொள்கையுடன் இயைந்துதான் உள்ளது. இது தேசிய ஜனநாயக முன்னணி NDA கூட்டணி அரசாங்கத்திற்கு 1999ல் இருந்து 2004 வரை தலைமை வகித்தபோது, அத்தகைய உடன்படிக்கை வாஷிங்டனுடன் தேவை என்ற கருத்தை இதுதான் முதலில் முன்வைத்தது.

UPA அரசாங்கம் பொதுவாகவும், பிரதம மந்திரி மன்மோகன் சிங் குறிப்பாகவும், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், UPA அரசாங்கத்தின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை சாதனை என்று கருதுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன; இந்த உடன்பாடு இந்தியாவிற்கு எதிரான 33 ஆண்டு அணுசக்தி தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் மகத்தான கட்டமாக இருக்கும்; உலக சக்தி என்ற மதிப்பை இந்தியா பெறுவதற்கு மிகப் பெரிய அளவில் உதவும்; இதை இந்திய உயரடுக்கு நீண்ட காலமாக விரும்பி வருகிறது; மற்றும் இது வாஷிங்டனுடன் சலுகைகள் நிறைந்த இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துகிறது.

உடன்பாட்டிற்கு ஆதரவைத் திரட்டுகையில், UPA அரசாங்கம் அமெரிக்காவில் இருந்து பெற்றுவிட்டதாக கூறப்படும் முக்கிய சலுகைகளை பற்றி அதிகம் பேசுகிறது; குறிப்பாக செலவிடப்பட்ட அணுசக்தி எரிபொருளை மறுசெயல்முறையில் பயன்படுத்தும் இந்திய உரிமை மற்றும் அணுசக்தி எரிபொருள் அளிப்புக்கள் உறுதியளிக்கப்படுவது பற்றியும் பேசுகிறது.

ஆனால் இந்தியாவின் அணுசக்தி மற்றும் புவி-அரசியல் அமைப்பிற்குள்ளே பலரும் இப்படி தோன்றும் அமெரிக்க சலுகைகளின் மதிப்பை பற்றி சர்ச்சை கொண்டுள்ளனர்.

உண்மையில், இந்த உடன்பாடு எழுதப்பட்டவிதம், புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் வருங்காலத்தில் பூசல்கள் ஏற்படுத்தக் கூடிய வகையில்தான் உள்ளது. மிகக் குறிப்பான தெளிவற்ற வாசகங்கள் உரையில் உள்ளன; மிகவும் விவாதத்திற்கு உரிய சில பிரச்சினைகள், அணுசக்தி எரிபொருளை மீண்டும் பயன்படுத்தும் உரிமையை இந்தியா பயன்படுத்தலாமா, அணுசக்தி எரிபொருள் வட்டத்தின் அனைத்து கூறுபாடுகளிலும் அமெரிக்க தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு இந்தியா அனுமதிக்கப்படுமா போன்றவை தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன; அவற்றின் தீர்வுகள் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம்தான் அடையப்பட முடியும்.

இந்தியாவை பொறுத்தவரையில், செலவழிக்கப்பட்ட எரிபொருளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துல் என்பது மிகவும் முக்கியமாகும். தோரியத்தைப் பயன்படுத்தி ஒரு உள்நாட்டு அணுசக்தி திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான, தசாப்தகால மூன்று கட்ட உந்துதலுக்கு மரபார்ந்த படைத்துறைசாரா அணுசக்தி நடவடிக்கைகளில் இருந்து கணிசமான அளவு செலவழிக்கப்பட்ட எரிபொருள் தேவைப்படும். அமெரிக்கா அல்லது மற்ற வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் செலவழிக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்தும் இந்தியாவின் உரிமை உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், அது IAEA ஆய்வு, IAEA குறியீடுகள் ஆகியவற்றிற்கு உட்பட்ட சிறப்பு நிலையத்தை கட்டிய பின்னர்தான் இந்தியாவால் செயல்படுத்தப்பட முடியும்.

உடன்பாடு பற்றிக் குறைகூறும் இந்தியர்கள், ஜப்பானுடன் அமெரிக்கா உடன்பாடு கொண்டுள்ள 123 ஒப்பந்தந்தைவிட குறைந்த அளவே தாராளத்தன்மை கொண்டிருப்பதாகவும், பல "இரட்டை-பயன்பாடு" (படைத்துறை மற்றும் இராணுவத்துறை) தொழில்நுட்பம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு மட்டுமேயான இந்திய உரிமையை அங்கீகரிக்கிறது என்றும் உடனடியான, தடையற்ற பெறுதலை இது கொடுக்கவில்லை என்கின்றனர். உடன்பாடு கூறுவதாவது: "நுட்ப உணர்வை தூண்டும் அணுசக்தித் தொழில்நுட்பம், கன நீர் உற்பத்தித் தொழில்நுட்பம், நுட்ப உணர்வு மிகுந்த அணுசக்தி நிலையங்கள், கன நீர் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அத்தகைய முக்கிய அமைப்புக்களின் சிறப்பு கூறுபாடுகள் இந்த உடன்பாட்டின்படி, உடன்பாட்டு திருத்தத்திற்கு மாற்றப்படலாம்." இத்தகைய திருத்தம் அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இன்னும் கூடுதலான வேறுபாடுகள் நிறைந்தது ஒப்பந்தத்தின் இரண்டாம் விதியாகும். "இந்த உடன்பாட்டின் விதிகளுக்கு உட்பட்ட வகையில் சமாதான முறையில் அணுசக்தி பயன்பாட்டில் இரு திறத்தாரும் ஒத்துழைக்க வேண்டும். உடன்பாட்டை ஒவ்வொரு நாடும் அதன் இணைந்த ஒப்பந்தங்கள், தேசிய சட்டங்கள், கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் அணுசக்தியை சமாதான காரணங்களுக்காக உபயோகிக்கும் உரிமத் தேவைகள் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்."

அமெரிக்க காங்கிரஸ், புஷ் நிர்வாகத்திற்கு ஒரு 123 உடன்பாட்டை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைமூலம் காண சட்டபூர்வ இசைவை, "Henry J. Hyde United States-India Peaceful Atomif Energy Cooperation Act of 2006" அல்லது Hyde Act என்று டிசம்பர் 2006ல் கொடுத்தபோது அணுவாயுதப் பரவலை எதிர்த்தல் என்ற பெயரில், இந்தியா வாஷிங்டன் விரும்புவதை செய்யவேண்டும் என்பதற்கான பல தொடர்ச்சியான விதிகளை சேர்த்துக் கொண்டது.

உதாரணமாக, ஈரானின் அணுசக்தித் திட்டம், அமெரிக்க திட்டத்துடன் ஒத்திருக்கும் வகையில் இந்தியா தன்னுடைய கொள்கையை தொடர வேண்டும் என்று ஹைட் சட்டம் கூறியது; இதன் உட்குறிப்பு இந்தியா அதன்படி நடக்காவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரும் என்பதாகும்.

செப்டம்பர் 2005ல், ஒரு அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பேச்சு வார்த்தைகள் நடத்துவது என்று இரு நாடுகளும் கொண்ட முடிவிற்கு பின்னர் சில மாதங்களில் அமெரிக்கா இந்தியாவை ஈரானுக்கு எதிராக வாக்களிக்க அழுத்தம் கொடுக்கக்கூடியதாக இருந்த உண்மை, இத்தகைய விதிகளை பயன்படுத்தி இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து தன்னுடைய உலகந்தழுவிய மேலாதிக்க இலக்குகள் மற்றும் கொள்ளையிடும் நலன்களுக்கு பயன்படுத்தத் தயாராக இருக்கிறது என்பதை விளக்கிக் காட்டுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஒவ்வொரு ஆண்டும் அணுவாயுதப் பரவல் உட்பட, இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தின் பல விதிகளையும் முறையே கடைபிடிக்கிறது, என்று காங்கிரசிற்கு அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டும் என்று ஹைட் சட்டம் கூறுகிறது.

ஹைட் சட்டத்தில் புஷ் கையெழுத்திட்ட உத்தியோகபூர்வ நிகழ்ச்சியில் அவர் இத்தகைய தேவைகள் "ஆலோசனைத் தன்மை வாய்ந்தவை" என்றும் வெளியுறவுக் கொள்கையை தன் விருப்பிற்கு ஏற்றவாறு நடத்தும் சிறப்பு உரிமை நிர்வாகத்திற்கு உள்ளது என்றும் வலியுறுத்தினார். ஆனால் அத்தகைய அறிவிப்பு காங்கிரசிற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியா அணுவாயுதப் பரவலை நிலைநிறுத்திவருகிறது எனக் கூறும் சான்றிதழை கொடுக்க வேண்டும் என்ற சட்டபூர்வ கட்டாயத்தில் இருந்து ஜனாதிபதியை விடுவிக்கவில்லை. புஷ், இந்தியா அவ்வாறு செயல்பட்டு வருகிறது என்று தானாகவே கூறினாலும், ஒரு வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்று புது டெல்லியை வலியுறுத்த இவ்விதியை பயன்படுத்துதற்கு நாடமாட்டார் என உத்தரவாதம் ஏதும் இல்லை. இந்தியா, ஈரான் இவற்றை மாறுபட்ட வகையில் வாஷிங்டன் நடத்திவருவதை பார்க்கும்போது, இஸ்ரேலை பற்றியும் கூறவேண்டியதில்லை எனும்போது, அமெரிக்கா எப்பொழுதும் அணுவாயுத பரவல் தடுப்பை தன்னுடைய சொந்த புவி-அரசியல் நலன்களை பேணும் நிலைப்பாட்டில் இருந்துதான் எப்பொழுதும் பார்த்து வருகிறது என்பதை சான்றளிக்கிறது.

இந்திய உயரடுக்கினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள உடன்பாட்டின் மற்றொரு கூறுபாடு, இந்தியா இன்னும் ஒரு அணுகுண்டுச் சோதனையை நடத்துமேயானால், அமெரிக்க ஹைட் சட்டத்தை பயன்படுத்தி அமெரிக்கா அளித்த சிவிலிய அணுசக்திக் கருவிகள், எரிபொருள் அனைத்தையும் சட்டபூர்வாமாக மீண்டும் அமெரிக்காவிற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்த முடியும். 123 உடன்பாட்டில் இருக்கும் ஒரே சலுகை இவ்விதியை பொறுத்த வரையில், இந்தியக் கவலைகள் பற்றி, அத்தகைய உரிமையை செலுத்து முன் அமெரிக்கா இந்தியாவை ஆலோசிக்கும் என்று கூறப்பட்டிருக்கும் ஒரு விதிதான்.

இந்திய உயரடுக்கை பொறுத்த வரையில், இந்த விதி, அதன் அணுசக்தி தொகுப்பை தக்கவைத்து பெருக்குவதற்கு ஒரு பெரும் தடையாகும்; ஏனெனில் 1998ல் நடைபெற்ற சோதனைகள் ஓரளவு வெற்றியைத்தான் கொடுத்தன என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் வலியுறுத்தலின்பேரில், உடன்பாடு இரத்து செய்யப்பட்டாலும் இந்தியாவிற்கு எரிபொருள் அளிப்புக்கள் கிடைக்கும் என்பது போல் வார்த்தைகள் 123 உடன்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இது அமெரிக்கா மீண்டும் திரும்பப் பெறும் உரிமையினால் முரண்பாடாகி உள்ளது.

மாறுபட்ட, பூசலுக்குட்பட்ட மூலோபாயச் செயற்பட்டியல்கள்

இரு நாடுகளுமே உடன்பாட்டை மாறுபட்ட, ஏன் முரண்பாடுடைய மூலோபாய செயற்பட்டியல் வகையில் அணுகுகின்றன என்பதுதான் உண்மை. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும், அமெரிக்கா எதிர்கொண்டுள்ள பெரும் சங்கடத்தின் விளைவாக அமெரிக்க ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளும் அமெரிக்க இராணுவ சக்தி அமெரிக்க உலகாதிக்க மேன்மையை தக்க வைத்துக்கொள்ள போதுமானது அல்ல என்று உணர்ந்துள்ளன. சீனாவின் எழுச்சிகண்டு வரும் ஆற்றல் கண்டு அச்சமும், ஆப்கானிஸ்தானத்தில் NATO பங்காளிகள் இரத்த சோகை பீடித்துள்ளது போல் செயல்பட்டு வரும் முறையும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இந்தியா போன்ற ஏனைய நட்பு நாடுகளை நாடுவதற்கு வழிவகுத்துள்ளன.

அமெரிக்கா பலமுறையும் இந்தியாவிற்கு அது உலக சக்தியாக மாறுவதற்கும், இந்தியாவை பயன்படுத்தி சீனாவை கட்டுப்படுத்தி அடக்குவதற்காக அதற்கு "உதவும்" தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டுள்ளது. இதை அடைவதன் பொருட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா இந்தியாவுடன் அதிக அளவில் இராணுவ ஒத்துழைப்பை அதிகப்படுத்தியுள்ளது; இதில் ஏராளமான கூட்டு இராணுவப் பயிற்சிகளும் அடங்கும்; இவை மேலும் அமெரிக்கா இந்தியப் பெருங்கடலில் இந்தியா பிராந்திய போலீஸ் பாத்திரத்தை கொள்ளுவதை பார்க்கவிரும்பும் என்று சுட்டிக்காட்டுகிறது --அமெரிக்க ஆதரவு பெற்று ஆஸ்திரேலியா தெற்கு பசிபிக்கில் வட்டார 'நாட்டாண்மை' யாக ஆற்றும் பங்கிற்கு ஒப்பான ஏதோ ஒன்றாக இருக்கும்.

அணுசக்தி தடைகளை நிறுத்துவதற்கும், இதை ஒட்டி இந்தியாவிற்கு இராணுவத் தொழில்நுட்ப தகவல் மாற்றத்தை அகற்றுவதற்கும் அமெரிக்க கொண்டுள்ள முயற்சிகளுக்கு உந்துதல் தரக்கூடிய பல பொருளாதார நலன்களும் உள்ளன. அமெரிக்க பெருநிறுவனங்கள் அணுசக்தி ஒப்பந்தம் பல பில்லியன் டாலர் இராணுவ மற்றும் அணுசக்தி விற்பனையை இந்தியாவில் பெறலாம் என்று எதிர்பார்க்கின்றன.

தன்னுடைய பங்கிற்கு இந்திய உயரடுக்கு பெரும் சக்தி என்ற அந்தஸ்தை பெறுவதற்கான உயர் விழைவுகளை கொண்டுள்ளது; நாட்டின் பெரும்பாலான மக்கள் பரந்த, ஆழ்ந்த வறுமையில் வாடும் நிலையிலும், இந்த உயரடுக்கு மத்திய, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் பெரும் சக்திகள் அரசியலில் பங்கு பெறுவதற்கு விரும்புகிறது. இந்த நோக்கங்களை அடைவதற்காக, இந்திய உயரடுக்கு இந்தியா அணுவாயுதங்கள் பெற்றுள்ளதை நெறிப்படுத்தவும், மற்றும் அது ஒரு அணு சக்திநாடாக அங்கீகரிக்கப்பட்ட ஏகாதிபத்திய நாடுகளால் எற்றுக் கொள்ளப்படுவதையும் விரும்புகிறது. இந்திய அணுசக்தித் திட்டமும் மிக இன்றியமையாத வகையில் யூரேனிய எரிபொருள் மற்றும் உயர் நவீன தொழில்நுட்பத்தை பெற விரும்புகிறது. தகவல்களின்படி, இந்தியாவின் அணுசக்தி ஆலைகளின் பயன்பாடு வியத்தகு முறையில் அண்மையில் குறைந்துவிட்டது; இதற்குக் காரணம் எரிபொருள் பற்றாக்குறையும், கருவிகள் செயலற்று இருப்பதும்தான்.

அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக தன்னை பயன்படுத்த முற்படுகிறது என்பதை இந்திய உயரடுக்கு நன்கு அறியும் மற்றும் நீண்டகால பரம எதிரியான பாக்கிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளை கொண்ட, தெற்கு ஆசியா முழுவதும் இந்தியாவிற்கு புவி அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய திறன் உடைய ஒரு அண்டை அரசு தொடர்பாக --சீனா தொடர்பாக வாஷிங்டனால் ஆணையிடப்படும் உறவுகளை கொள்ளாதிருப்பதில் தீர்மானகரமாக இருக்கிறது.

ஆயினும்கூட இந்திய ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகள், அபிலாசை மற்றும் தன்னலம் ஆகியவற்றால் மறைக்கப்பட்ட பார்வையை கொண்டு, இந்தியா உலகின் புவி அரசியலில் பெருகியிருக்கும் ஆழ்ந்த பிளவுகளை சரிசெய்து கொண்டு போக முடியும் என்ற போலித் தோற்றத்தை வளர்த்துள்ளன. இந்தியா ஒரு "உலக சக்தியாக" வருவதற்கு வாஷிங்டனின் உதவியை பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு அமெரிக்காவின் முக்கிய பிராந்திய நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடனும் நெருக்கமாக இருக்கலாம் என்று நினைக்கிறது; அதே நேரத்தில் ரஷ்யாவுடனான மரபார்ந்த வகை நெருக்கபிணைப்புக்களையும் தக்க வைத்துக் கொண்டு சீனாவுடனும் சமரசமாக இருக்கலாம் என்றும் நினைக்கிறது.

இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியாவின் பெருகிய விசைத் தேவைகளுக்கு உதவும் என்றும் எண்ணெய், எரிவாயு இறக்குமதிகள்மீது மிக அதிகமாக நம்பியிருக்க வேண்டிய நிலையை குறைக்கும் என்றும் நியாப்படுத்தியுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் கணக்குகளின்படியே, இதன் திட்டமான இந்தியாவின் அணு ஆற்றலை வெளிநாட்டு உதவியுடன் விரைவில் விரிவாக்கம் செய்தாலும், அணு ஆற்றலானது 2025ம் ஆண்டில் இந்தியாவின் ஆற்றல் தேவைகளில் 5 சதவிகிதத்தை மட்டுமே அளிக்கும்.

இந்தியாவின் ஆற்றல் தேவைகள் என்பதைக் காட்டிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளை முறை புவி-அரசியல் அபிலாசைகளும் இந்திய ஆளும் உயரடுக்கு பெரும் சக்தியாக வேண்டும் என்ற அபிலாசைகளும்தான் இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்கு உந்ததுதல் கொடுத்துள்ளன. இதன் தவிர்க்க முடியாத விளைவு தெற்கு ஆசியா மற்றும் ஆசியா முழுவதிலும் உறுதிப்பாட்டை மேலும் புவி-அரசியல் முறையில் உறுதிகுலையச்செய்து, பாக்கிஸ்தான் சீனாவை. தோன்றி வரும் டெல்லி-வாஷிங்டன் அச்சிற்கு எதிராக இருக்குமாறு தள்ளும். ஆனால், இப்பொழுது இருக்கும் இந்திய, அமெரிக்க உயரடுக்குகளின் மாறுபட்ட உந்துதல்களை காணும்போது, இந்த உடன்பாடு, செயல்படுத்தப்பட்டால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கூட பெரிய பூசல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved