World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGerman chancellor threatens Iran and demands seat on UN Security Council ஈரானை ஜேர்மன் அதிபர் அச்சுறுத்துவதுடன், ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இடமும் கோருகிறார் By Peter Schwarz ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் ஒரு இடத்தைப் பெறுவதற்கு ஈடாக ஜேர்மனிய அரசாங்கம் ஈரானுக்கு எதிரான ஒரு அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்கத் தயாராக இருக்கிறதா? ஐ.நா. பொது மன்றத்தில் ஜேர்மனிய அதிபர் முதன்முதலாக தோன்றியது இத்திசையில் விஷயங்கள் செல்லக்கூடும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. செப்டம்பர் 25ம் தேதி நியூ யோர்க்கில் ஆற்றிய உரையில், மேர்க்கெல் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிராக கூடுதலான பொருளாதாரத் தடைகளுக்கான கோரிக்கைக்கு ஆதரவை தெரிவித்தார்--இது புஷ் நிர்வாகத்தின் நீண்டகால கோரிக்கை என்பது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு புதிய ஜனாதிபதி, அரசாங்கம் ஆகிவற்றை தேர்ந்தெடுத்துள்ள பிரான்சின் ஆதரவையும் பெற்றுள்ளது. தெஹ்ரான் அணுவாயுதங்களை தயாரித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று மேர்க்கெல் அழைப்பு விடுத்தார். அவ்வாறு நிரூபிக்க தெஹ்ரான் தவறினால் இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று தான் கோரியிருப்பதாக அவர் கூறினார். "நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது; ஈரான் அணுவாயுதங்களை கொண்டால், அதன்மூலம் பேரழிவு விளைவுகள் ஏற்படும்." என்று அவர் தெரிவித்தார். நிரூபணம் செய்யவேண்டியதை தலைகீழாக கூறிய வகையில் மேர்க்கெல் அறிவித்தார்: "ஈரான் ஒரு அணுகுண்டை தயாரிக்கிறது என்பது பற்றி உலகம் நிரூபிக்க வேண்டியதில்லை. ஈரான்தான் தனக்கு அணுகுண்டு தேவையில்லை என்பது பற்றி உலகிற்கு நிரூபிக்க வேண்டும்." வாஷிங்டன் ஈரானுக்கு எதிரான அதன் குற்றச் சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்பதை மறுக்கும் சூழ்நிலையில், சர்வதேச அணுசக்தி அமைப்பு IAEA ஆதாரமில்லை என்று கூறினாலும் என்ற நிலையில், மேர்க்கெலின் அறிவிப்பு புஷ் நிர்வாகத்திற்கு தடையற்ற ஆதரவைக் கொடுத்துள்ளது போல்தான் இருக்கிறது. பாதுகாப்புக் குழுவில் ஜேர்மனிக்கு ஒரு நிரந்தர இடம் வேண்டும் என்ற அழைப்பையும் மேர்க்கெல் விடுத்தார். "பாதுகாப்புக் குழுவில் ஒரு நிரந்தர இடம் உண்டு என்ற நிலைமையில் ஜேர்மனி கூடுதலான பொறுப்பை எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது." என்று அவர் அறிவித்தார்; மேலும் "நேரம் குறுகியது; பல நெருக்கடிகளுக்கு தீர்வு காப்பட வேண்டும்" என்பதால் அத்தகைய நடவடிக்கை அவசரமாகச் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். தற்போதைய பாதுகாப்புக் குழுவின் அமைப்பு முறை இன்றைய உலகைப் பிரதிபலிப்பதாக இல்லை என்று மேர்க்கெல் வலியுறுத்தினார். "அரசியல் யதார்த்தத்திற்கு ஏற்ப அதை மாற்றுவதைவிட வேறு மாற்றீடு ஏதும் இல்லை" என்றும் அவர் கூறினார். ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங்-வால்டர் ஸ்டீன்மெயர், மேர்க்கெலுடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவைக் கொடுத்தார். ஐ.நா.வின் தாழ்வாரங்களில் இயன்றளவு அதிக உறுப்பு நாடுகளுடன் ஜேர்மனியின் அவாக்களை எழுப்புவதில் தான் நோக்கங் கொண்டுள்ளதாகவும் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். Bayerischen Rundfunk க்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ஐ.நா.வில் முன்னாள் ஜேர்மனிய தூதராக இருந்த Gunter Plüger ம் பாதுகாப்புக் குழுவில் ஜேர்மனிக்கு ஒரு இடம் வேண்டும் என்றார். ஜேர்மனிய துருப்புக்கள் அதிகரித்த அளவில் சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெறுவதை சுட்டிக்காட்டி இக்கோரிக்கையை அவர் நியாயப்படுத்தினார். மிகச் சிறந்த முடிவுகளும், செயல்படுத்தப்படாவிட்டால் பயனற்றதாகப் போய்விடும் என்றார். "இதன் பொருள் பாதுகாப்புக் குழு ஒரு பாதுகாப்புக் குழு தீர்மானத்தை செயல்படுத்த தேவையான இருப்புக்கள் கொண்டுள்ள ஒரு சில நாடுகளை தன்னிடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றும் ஜேர்மனி, ஜப்பான் கட்டாயம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்."1990ல் ஜேர்மனி மறு ஐக்கியம் அடைந்ததில் இருந்து, கூட்டாட்சி அரசாங்கம் பலமுறையும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா என்று தடுப்பதிகாரத்தை கொண்டுள்ள ஐந்து சக்திகள் பிரத்தியேகமாக ஒரு நிலையைக் கொண்டிருக்கும் பாதுகாப்புக் குழுவில் ஒரு நிரந்தர இடத்திற்கான கோரிக்கையை எழுப்பி வந்துள்ளது. இப்பிரச்சாரத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேர்க்கெலுக்கு முன்பு பதவியில் இருந்த ஹெகார்ட் ஷ்ரோடர் ஜப்பான், பிரேசில் மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் ஒருங்கிணைந்து உலகம் முழுவதிலும் இந்த நான்கு நாடுகள் மற்றும் இரு ஆபிரிக்க நாடுகளும் பாதுகாப்புக் குழுவில் இடம் பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தியது. அத்திட்டம் ஆபிரிக்க நாடுகள் வேட்பு நாடுகள் பற்றி உடன்பாடுகள் கொள்ளாததால் தோல்வியடைந்தது. ஜப்பானும் தயக்கம் காட்டியது; அமெரிக்காவும் சீனாவும் தடுப்பு அதிகாரத்தை பயன்படத்தப்போவதாக அச்சுறுத்தின. பாதுகாப்புக் குழுவில் இறுதி வாக்கு இல்லாத நிலையில், அமெரிக்கா இறுதியான முடிவு எடுக்க வேண்டிய தேவையை கொள்ளவில்லை. இதுவரை இந்தக் கோரிக்கையை மீண்டும் எழுப்புவதை ஜேர்மனிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இப்பொழுது விரும்பப்படும் இலக்கை அடைவதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக மேர்க்கெல் வெளிப்படையாக உணர்கிறார். பொது மன்றத்தில் தான் கொடுத்த உரையில், ஜனாதிபதி புஷ் சீர்திருத்த திட்டங்களை பரிசீலிக்கத் தான் தயார் என்று குறிப்பிட்டு ஜப்பானை மட்டும் இது பற்றிக் குறிப்பிட்டு, ஜப்பானும் பிற நாடுகளும்" பாதுகாப்பு குழுவின் நிரந்த உறுப்பினர்கள் ஆகலாம் என்று வாதிட்டார். Bild செய்தித்தாளின்படி, புஷ்ஷின் டெக்சாஸ் பண்ணை வீட்டிற்கு மேர்க்கெல் நவம்பர் மாதம் இரு நாள் தனிப் பேச்சுவார்த்தைகளுக்கு செல்வார் என்றும் அங்கு அவர் ஜேர்மனிக்கு இடம் வேண்டும் என்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவைக் கேட்பார் என்றும் தெரிகிறது. இதற்கு பதிலாக ஏதும் கிடைக்காமல் புஷ் இதற்கு ஆதரவு கொடுக்க மாட்டார். அந்த உடன்பாட்டிற்கான விலை ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள், இறுதியில் போர் என்பதற்கு ஜேர்மனி ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதாகவும் இருக்கலாம்.பாதை மாற்றம் ஈரானுக்கு எதிரான மேர்க்கெலின் அச்சுறுத்தல்கள், ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையில் பாதை மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இதுவரை பேர்லின் ஈரானுக்கு எதிராக பாதுகாப்பு சபையினால் ஒருமித்த அணுகுமுறையை கையாள வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது, மற்றும் ஒருபுறம் அமெரிக்காவுடனும் மறுபுறம் ரஷ்யா, சீனாவிடமும் ஒரு முறிவைத் தடுப்பதற்கு விழைந்தது. இவ்வாறு இரு முகாம்களுக்கு இடையேயும் ஜேர்மனி சமநிலையை தக்க வைத்துக் கொள்ள அனுமதித்தது. பூசல் பெருகிவிடக்கூடாது என்பதையும் ஜேர்மனிய அரசாங்கம் கவனத்துடன் கருத்தில் கொண்டிருந்தது; ஏனெனில் ஈரானுடன் அதற்கு நெருக்கமான வணிக தொடர்புகள் உள்ளன. தெஹ்ரானுடைய மிக முக்கியமான வணிகப் பங்காளி நாடாக ஜேர்மனி உள்ளது. நியூ யோர்க்கில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி பாதுகாப்பு சபைத் தீர்மானம் இல்லாவிடினும், ஐரோப்பிய ஒன்றியம் ஈரான்மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று அழைத்த அளவிற்கு மேர்க்கெல் போய்விடவில்லை. ஆனால் மேர்க்கெலுடைய அச்சுறுத்தல்கள் அதேதிசையில்தான் சுட்டிக்காட்டுகின்றன. சில வாரங்களுக்கு முன்பு "ஒரு ஈரானிய குண்டு அல்லது ஈரான் மீதான குண்டுவீச்சு" என்ற மாற்றீடுதான் உள்ளது என்று சார்க்கோசி கூறியிருந்தார். பலமுறையும் ஐ.நா. பொது மன்றத்தில் நடத்திய உரையில் அவர் அதைக் கூறினார். "சர்வதேச சமூகம் அணுவாயுதங்கள் பரவலை தடுக்க முடியாமல் வலுவற்றுப் போனால் உலகில் சமாதானம் இருக்காது" என்று சார்க்கோசி உறுதியாகக் கூறினார். அணுசக்தியை படைத்துறையல்லாத பயன்பாட்டுக்கு பயன்படுத்த ஈரான் உரிமைபெற்றிருக்கிறது என்றார், ஆனாலும், "ஈரானை அணுவாயுதங்களை வைத்துக் கொள்ள நாம் அனுமதித்தால், அப்பகுதியிலும், உலகிலும் உறுதியற்ற தன்மை தொடர்பாக ஏற்கமுடியாத ஆபத்திற்குத்தான் நாம் இடம் அளித்துவிடுவோம்" என்று சேர்த்துக் கொண்டார். அடுத்த சொற்றொடரிலேயே அவர் கூறியது: "உலகில் இருக்கும் வல்லுனர்கள் அனைவரும் இராணுவ நோக்கம் உடைய அணுவாயுதத் தயாரிப்பில்தான் ஈரான் ஈடுபட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்." வெளியுறவுக் கொள்கையில் மேர்க்கெலின் பாதை மாற்றம் ஓரளவு சார்க்கோசியின் ஆரம்ப முயற்சியுடன் தொடர்பு உடையது ஆகும். சில ஆண்டுகள் முன் வரை, பாரிசும் பேர்லினும் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு சமமான நிலையில் ஒன்றுபட்ட ஐரோப்பிய கொள்கை என்ற அடிப்படையில் நிற்க விழைந்தன. ஆனால் இத்திட்டம் பெரிதும் தோல்வியுற்றது. பேர்லினையும் பாரிசையும் ஒன்றாகக் கொண்டு வருவதற்கு பதிலாக அமெரிக்காவுடனான பெருகிய அழுத்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் வரலாற்று ரீதியான முரண்பாடுகளை தீவிரப்படுத்தத்தான் உதவின. பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கை பிரசினைகள் பற்றிய பதட்டங்கள் சார்க்கோசி அதிகாரத்தை பெற்றதில் இருந்து பெருகிய வண்ணம் உள்ளன. "அமைதியற்ற பிரெஞ்சுக்காரர்" பற்றிய கடுமையான மற்றும் கேலித் தகவல்களை ஜேர்மனிய செய்தி ஊடகம் அளித்து வருகிறது. EADS (Airbus) நிறுவனத்தில் பிரெஞ்சு மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு சார்க்கோசி கொண்டுள்ள முயற்சிகளுக்கு பேர்லின் இகழ்வுடன் விடையிறுத்துள்ளது; அதேபோல் அரசாங்க ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள வகையில் விசை மற்றும் அணுசக்தி விசைப் பிரிவிலும் ஏகபோக உரிமைக்காக அவர் செய்யும் முயற்சிகளும் எதிர்கொள்ளப்படுகின்றன; ஐரோப்பிய மத்திய வங்கியின் சுதந்திர செயற்பாட்டின்மீது அவருடைய தாக்குதல்கள் மற்றும் டார்பூர், லிபியா, லெபனான் மற்றும் ஈராக்கில் அவருடைய ஒருதலைப்பட்ச வெளியுறவுக் கொள்கைகளும் அதே எதிர்ப்பைத்தான் கொண்டுள்ளன.ஐரோப்பாவிற்குள் இருக்கும் பதட்டங்களை காண்கையில், சார்க்கோசி அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடனான நெருக்கமான தொடர்புக்கு ஆதரவாக பிரான்சின் முந்தைய கோலிச வெளியுறவுக் கொள்கை மரபை முறித்துக்கொள்வதற்கு பொறுப்பெடுத்திருக்கிறார். ஜேர்மனிய வாராந்திர ஏடான Die Zeit சமீபத்திய வாரங்களில் சார்க்கோசி "மிகவும் தெளிவாக உலக விவகாரங்களில் தன்னுடைய முக்கியத்துவம் இருக்கும் வகையில் செயல்படுகிறார்", என்ற முடிவிற்கு வந்து ஈரானுக்கு எதிரான அவருடைய ஆக்கிரோஷமான போக்கை விளக்கும் வகையில் கூறியது: "பூசல் பெருகுவதை இனியும் தடுக்க முடியாது என்பதை சார்க்கோசி உணர்ந்து அலையுடன் இயைந்து செல்ல விரும்புகிறார்." இப்பொழுது ஜேர்மனிய அரசாங்கம் அதே போக்கைத்தான் கொண்டிருக்கிறது. தன்னுடைய நலன்களை பெருகிய தன்னம்பிக்கையுடன் உறுதிப்படுத்திக் கொண்டுவரும் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் பெருகிய அழுத்தங்கள் இருக்கும் நிலையில் -- கடந்த வாரம்தான் மேர்க்கெல் தலாய் லாமாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் சீனாவில் இருந்து எதிர்ப்பைக் கொண்டு வந்தன-- பேர்லின் அமெரிக்காவுடன் பூசல்களை மறந்து "அலையுடன் இயைந்து செல்ல விரும்புகிறது." 2003 ல் ஏற்கனவே அங்கேலா மேர்க்கெல் அப்பொழுது அதிபராக இருந்த ஷ்ரோடரிடம் இருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டார்; பிந்தையவரின் ஈராக் போர் பற்றிய குறைகூறல் அமெரிக்காவுடன் உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தின. 2005ல் பதவியேற்றபின் மேர்க்கெல் இழந்த உறவுகளை மீட்க விரும்புவதுடன் புஷ் நிர்வாகத்துடன் கூடுதலான பிணைப்புக்களையும் கொள்ள விரும்புகிறார்.இப்பொழுது அவர் ஒரு படி மேலேயே சென்றுள்ளார். ஈரானுக்கு எதிரான இவருடைய ஆக்கிரோஷமான அச்சுறுத்தல்கள் தெஹ்ரான்மீது ஒரு இராணுவத் தாக்குதல் நடத்தவிருக்கும் வாஷிங்டனுடைய திட்டத்தை வலுப்படுத்துகின்றன. பல செய்தித்தாள் கட்டுரைகள் ஏற்கனவே தயாரிப்புக்கள் ஒரு கணிசமான இராணுவத் தாக்குதல்களுக்கு முன்னேற்ற நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளன; இது ஒருவேளை புஷ்ஷின் இரண்டாம் வரைகாலம் முடிவதற்குள் நடக்கலாம்; இது ஈரானின் அணுசக்தி ஆலைகள், இராணுவ தளங்கள் மற்றும் சிவிலிய உள்கட்டுமானங்கள் ஆகியவற்றை அழித்துவிடும் இலக்கைக் கொண்டது. கூடுதலான பொருளாதாரத் தடைகள் தெஹ்ரானிடம் இருந்து சலுகைகளை கட்டாயமாகக் கொள்ள வைத்து போரை தடுத்துவிடும் என்ற கூற்று --எல்லாரையும்விட சார்கோசியால் பரப்பப்படுவது-- நம்பகத்தன்மை உடையது அல்ல என்பது ஈராக் போரினால் நன்கு நிரூபணமாகியுள்ளது. ஈராக்கை பொறுத்தவரையில் ஐ.நா. சுமத்திய பொருளாதாரத் தடைகள் போருக்கான பிரச்சாரத்தை அளிப்பதற்கும் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்குமுன் ஈராக்கை வலுவிழக்கச் செய்வதற்கும்தான் பயன்பட்டன. எப்படிப் பார்த்தாலும், தற்போதைய ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர்த்தயாரிப்புக்கள் அதன் அணுசக்தித் திட்டத்துடன் அதிகம் தொடர்பு கொண்டவை அல்ல; அந்நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் இருப்புக்கள் மற்றும் அப்பகுதியில் அது கொண்டுள்ள மூலோபாய நிலையில் உள்ளவை; உலகின் மிகப் பெரிய விசை இருப்புக் கொண்டுள்ள பகுதியாகும் அது. மேர்க்கெல் தன்னுடைய கொள்கை மாற்றத்தை புஷ்ஷின் ஈரானுக்கு எதிரான போக்குடன் பிணைத்து ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் ஜேர்மனிக்கும் ஒரு இடம் வேண்டும் என்று கோரியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஜேர்மனி "இன்னும் கூடுதலான பொறுப்புக்களை ஏற்கத் தயாராக இருக்கிறது" முடிவில்லாத வகையில் உச்சரிக்கும் சூத்திரத்தின் பின்னே நாட்டின் ஆளும் உயரடுக்கு மீண்டும் ஒரு பெரிய ஏகாதிபத்திய சக்தியாக செயல்படுவதற்கும் இதனை இராணுவ வழிவகையால் ஆதிரிப்பதற்குமான அதன் உந்துதல் கிடக்கின்றது. இரு உலகப் போர்களிலும் தோல்வியை அடைந்த பின், போர்களுக்கான முக்கிய பொறுப்பையும் கொண்டபின், ஜேர்மனிய ஆளும் வர்க்கம் பல தசாப்தங்களாக உலக அரசியலில் ஒரு நிதானமான பங்கினை தான் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இப்பொழுது பாதுகாப்புக் குழுவில் ஒரு இடம் என்பது ஏகாதிபத்திய வல்லரசு வட்டத்தில் அனுமதி கிடைப்பதற்கு உதவும் என்று அது நம்புகிறது. இந்த இலக்கை அடையும் வகையில் ஜேர்மனிய அரசாங்கம் மில்லியன்கணக்கான ஈரானியர்களின் உயிரை அச்சுறுத்தக்கூடிய போரை ஆதரிக்கவோ அல்லது பொறுத்துக் கொள்ளவோ தயாராக இருக்கிறது என்பது ஜேர்மனிய ஏகாதிபத்திய விழைவுகளின் குற்றத்தன்மையை விளக்கிக்காட்டுகிறது. |