:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: To defend democratic rights,
workers must oppose war
இலங்கை: ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தொழிலாளர்கள் யுத்தத்தை எதிர்க்க
வேண்டும்
By the Socialist Equality Party
2 October 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
இலங்கையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாளை மத்திய கொழும்பில்
கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் தொழில் பிரச்சினை சம்பந்தமாக சட்டப்பூர்வமான தொழிற்சங்க நடவடிக்கையில்
ஈடுபடுவதை சட்டவிரோதமானதாக்குவதற்காக அரசாங்கம் நீதிமன்றத்தை பயன்படுத்துவதை எதிர்த்தே இந்த மறியல்
போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கல்வி, புகையிரதம், தொலைத்தொடர்பு, துறைமுகம், சுகாதாரம் போன்ற அரசாங்கத்
துறை தொழிலாளர்களும் ஊடகங்கள், அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்களும் சுதந்திர வர்த்தக வலயத்
தொழிலாளர்களும் இதில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
எதிரான யுத்தத்தை உக்கிரமாக்குகின்ற நிலையில், ஜனநாயக உரிமைகள், தொழில் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான
அரசாங்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது தொடர்பாக சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பின்
அறிகுறியே இந்தப் போராட்டமாகும்.
கடந்த மாதம் உயர் தர பரீட்சை விடைத் தாள்களை திருத்துவதை பகிஷ்கரிப்பதை
கைவிடுமாறு ஐந்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு கட்டளையிட உயர் நீதிமன்றம் எடுத்த முடிவிற்கு எதிராகவே
இந்த மறியல் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 13 அரசாங்கத் துறை ஆசிரியர்கள்
சம்பள உயர்வு கோரி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்தே அரசாங்கம் இந்த நீதிமன்ற தீர்ப்பை
கோரியிருந்தது.
அரசாங்க மற்றும் தனியார் துறை தொழில் வழங்குனர்கள், வேலை நிறுத்தங்களையும்
ஆர்ப்பாட்டங்களையும் தடுக்க சட்ட நடவடிக்கையை நாடுவது அதிகரித்து வருகின்றது. அரசாங்கம் கடந்த 18
மாதங்களாக, புகையிரத தொழிற்சங்கங்கள், துறைமுக மற்றும் இலங்கை தொலைத் தொடர்பு நிறுவன
ஊழியர்களுக்கும் எதிராக நீதிமன்ற கட்டளைகளைக் கோரி அதைப் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த வெற்றிகளில்
ஊக்கம் பெற்ற சவர்க்கார உற்பத்தியாளர்களான சுவதேஷி மற்றும் விமான நிலைய ஹோட்டல் நிர்வாகமும்
தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்த இடைக்காலத் தடையைப் பெற்றுக்கொண்டுள்ளன.
தமது உறுப்பினர்கள் மத்தியில் குவிந்துகொண்டிருக்கும் ஆத்திரத்தை எதிர்கொள்ளும் 67
தொழிற்சங்கங்களே நாளை இந்த மறியலுக்கு அழைப்புவிடுத்துள்ளன. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டனம்
செய்யும் அவர்களது துண்டுப் பிரசுரம், பின்னர், "அரசாங்கம் சட்டப்பூர்வமான தொழிற்சங்க போராட்டங்களை
இத்தகைய கொடிய வழிமுறைகளைப் பயன்படுத்தி நசுக்கத் தயாராகுமானால், தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியின்
முன்நிலையில் அது ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்படும்," என வெற்றாரவார நடையில் எச்சரிக்கின்றது.
ஆனால் இந்தத் தொழிற்சங்கங்கள் தமது அனைத்து வீறாப்பு பேச்சுக்களுக்கு மத்தியில்,
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுடனும் அவரது அரசாங்கத்துடனும் அரசியல் ரீதியில் மோதிக்கொள்வதைத் தவிர்க்க
தம்மால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன. இந்த "பிரச்சாரம்" ஒரு மணித்தியால பகல் உணவு வேளைக்கு
மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை, அவர்களது நிலைப்பாட்டின் அறிகுறியாகும். மிகவும் அடிப்படையில்
அவர்களது துண்டுப் பிரசுரம், அனைத்து உழைக்கும் மக்களும் எதிர்கொள்ளும் மையப் பிரச்சினையான இராஜபக்ஷ
அரசாங்கம் முன்னெடுக்கும் இனவாத யுத்தம் தொடர்பாக மெளனம் காக்கின்றது.
தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் உக்கிரமடைந்து
கொண்டிருப்பது தற்செயலானதல்ல. அரசாங்கம் புலிகளுக்கு எதிராக ஒட்டு மொத்த யுத்தத்தை முன்னெடுப்பதன்
பேரில் குண்டுகள், புல்லட்டுகள் மற்றும் யுத்த விமானங்களையும் கொள்வனவு செய்ய பில்லியன் கணக்கான
ரூபாய்களை செலவிடுகின்றது. அதே சமயம் அது சம்பளம், மானியங்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுகளை
வெட்டிக் குறைப்பதுடன் தனியார் மயமாக்கத்தையும் சந்தை சீர்திருத்தத்தையும் தொடர்ந்தும் அமுல்படுத்துகின்றது.
யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தர வீழ்ச்சி தொடர்பான எதிர்ப்புக்கு வேலைநிறுத்தத்
தடை, எதேச்சதிகாரமான கைதுகள், காணாமல் போகும் சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் மூலமே
பதிலளிக்கப்படுகின்றது. இராஜபக்ஷ கடந்த மாதம் "அரசாங்கத்தை மாற்றுவதை" இலக்காகக் கொண்ட
பிரச்சாரங்களைக் கூட சட்டவிரோதமாக்கினார்.
இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் உழைக்கும் மக்கள் யுத்தத்துக்காக
அர்ப்பணிக்க வேண்டும் எனக் கோருவதில் முற்றிலும் வெளிப்படையாக உள்ளனர். ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, ஆகஸ்ட் 13, தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசிய
ஜனாதிபதி இராஜபக்ஷ, "இதற்காக ஒதுக்க எங்களிடம் பணம் இல்லை," என வெளிப்படையாகத் தெரிவித்ததோடு
"வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றச் சொல்கிறீர்களா?" எனவும் கேட்டார். இந்தக் கேள்விக்கு
தொழிற்சங்கத் தலைவர்கள் பதிலளிக்கவில்லை.
செப்டெம்பர் 19, பிரதி நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய
பாராளுமன்றத்தில் தெரிவித்ததாவது: "அரசாங்கம் இந்த ஆண்டு யுத்தத்திற்காக ஆயுதங்களையும் குண்டுகளையும்
கொள்வனவு செய்ய ரூபா 50 பில்லியன் (500 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவிட்டுள்ளதால், எந்தவொரு
சம்பள உயர்வும் வழங்க முடியாதுள்ளது." இந்தத் தொகை, இந்த ஆண்டு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 139 பில்லியன்
ரூபா பிரமாண்டமான பாதுகாப்பு செலவுக்கும் மேலதிகமானதாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதுகாப்பு
செலவு 45 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
"இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கும் அதே வேளை மக்களுக்கு பொருளாதார
சலுகைகளையும் வழங்குமாறு வலியுறுத்தும் சில சக்திகளின்" மோசடிகளை சுட்டிக் காட்டியபோது, சியம்பலாபிட்டிய
சரியான ஒரு விடயத்தை குறிப்பிட்டார். அவர், உழைக்கும் மக்களின் போராளிக்குணம் மிக்க பாதுகாவலர்களாக
தம்மைக் காட்டிக் கொண்டு, அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கோரும் அதே வேளை, யுத்த வெறி
ஆரவாரத்தில் முன்னணியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) எம்.பீ. க்களைப் பற்றியே
குறிப்பிட்டார்.
உண்மை என்னவெனில், அரசாங்கத்திற்கும் அது முன்னெடுக்கும் புதுப்பிக்கப்பட்ட
யுத்தத்திற்கும் எதிரான போராட்டம் இன்றி, தொழிலாளர்களால் தமது வாழ்க்கைத் தரத்தையும் ஜனநாயக
உரிமைகளையும் பாதுகாக்க முடியாது. ஆனால் இந்த 67 தொழிற்சங்கங்களின் தலைவர்களும் இந்த மையப்
பிரச்சினை தொடர்பாக ஒரு அடிப்படை நிலைப்பாட்டை எடுப்பதில் இலாயக்கற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு சம்பள உயர்வுக்கான பிரச்சாரத்தின் போது, "எதிரிக்கு
உதவுவதாகவும்" "தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாகவும்" தொழிற்சங்கத் தலைவர்கள் மீது
அரசாங்கம் குற்றஞ்சாட்டியது. அரசாங்கத்தையும் அதன் யுத்தத்தையும் சவால் செய்வதற்கு புறம்பாக, இந்த 67
தொழிற்சங்கங்களும் போலி சம்பள ஆணைக்குழுவொன்றை ஏற்றுக்கொண்டு பிரச்சாரத்திற்கு முடிவு கட்டின. இந்த
சம்பள ஆணைக்குழு தொழிலாளர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை.
இப்போது இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வர்கத்திற்கு எதிரான மற்றும்
யுத்தத்தை ஆதரிப்பவையாக பிரசித்தபெற்ற கட்சிகளுடன் பலவித சூழ்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டுள்ளன.
கடந்த வியாழனன்று, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவைப் பெறுவதற்காக அவரை
சந்தித்ததாக தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்தனர். வலதுசாரி ஐ.தே.க. வுக்கு அழைப்பு விடுப்பதை
நியாயப்படுத்திய நவசமாஜக் கட்சியின் (ந.ச.ச.க.) தலைவர் நீல் விஜேதிலக, "இத்தகைய ஒரு கூட்டின் மூலம்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) இலாபம் தேட முடியும் என்றாலும், இந்த பிரச்சார நடவடிக்கையை
விரிவுபடுத்த" இது அவசியமாகும், என முதல்தரமான சந்தர்ப்பவாத பாங்கில் கூறிக்கொண்டார்.
ந.ச.ச.க. யின் மத்தியதர வர்க்க தீவிரவாதிகளைப் பொறுத்தளவில், ஒரு
"பரந்த பிரச்சாரம்" என்பது அரசியல் ஸ்தாபனத்தில் உள்ள பலவித கட்சிகளுடன் கொள்கையற்ற கூட்டினை
ஏற்படுத்திக் கொள்வதேயாகும். விக்கிரமசிங்கவும் ஐ.தே.க. யும் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவார்கள்
எனக் கூறுவது, அடக்குமுறை, இனவாதம் மற்றும் யுத்தத்தை தொடங்கிவைத்த ஐ.தே.க. யின் முழு வரலாற்றையும்
தொழிலாளர்களுக்கு முன் மூடி மறைப்பதாகும். இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள், ஆளும் கூட்டணியின்
பங்காளியாகவும் சிங்களப் பேரினவாதத்திற்கு பேர்போனவர்களாகவும் மற்றும் யுத்தத்தின் ஆதரவாளர்களாகவும்
இருக்கும் ஜாதிக ஹெ உறுமய தலைவர்களையும் சந்தித்துள்ளனர்.
அவசியமாகியிருப்பது அரசியல் வஞ்சகர்களதும் யுத்தப் பேரிகை கொட்டுபவர்களதும்
ஐக்கியம் அல்ல. மாறாக, அரசாங்கத் துறை தொழிலாளர்களைப் போல் ஒரே சமூக மற்றும் பொருளாதாரப்
பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஏனைய பகுதி தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற, நகர்ப்புற ஒடுக்கப்படும்
மக்களுடனான ஐக்கியமேயாகும். தொழிலாளர் வர்க்கம் தமது ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும்
பாதுகாக்க யுத்தத்திற்கு எதிராகவும் தமது சொந்த சுயாதீனமான வர்க்க மூலோபாயத்தை அபிவிருத்தி செய்தல்
வேண்டும்.
உழைக்கும் மக்களை பிளவுபடுத்த கொழும்பு ஆளும் வர்க்கம் தசாப்த காலங்களாக
பயன்படுத்திவரும் மற்றும் நீண்டகால யுத்தத்திற்கு காரணமாயிருந்த சிங்களப் பேரினவாத அரசியலை தொழிலாளர்கள்
நிராகரிக்க வேண்டும். அவர்கள் தமிழ் முதலாளித்துவ பிரிவினரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் புலிகளின் தமிழ்
பிரிவினைவாதத்தையும் நிராகரிக்க வேண்டும். இந்த சுரண்டல்காரர்களுக்கு எதிராக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்
தொழிலாளர்களின் ஐக்கியப்படுத்தப்பட்ட வர்க்கப் போராட்டம் ஒன்று அவசியமாகும்.
இதற்கு முன்னர் 67 தொழிற்சங்கத் தலைவர்களாலும் வக்காலத்து வாங்கப்பட்ட
சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதில் நம்பிக்கை வைக்க முடியாது. பெரும் வல்லரசுகள்
சமாதானத்தில் அக்கறைகொள்ளவில்லை. அவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சுரண்டலுக்காக இலங்கையையும்
துணைக் கண்டத்தையும் திறந்துவிடவே முயற்சிக்கின்றார்கள். அவர்களின் போலி நடவடிக்கை, குறைந்தபட்சம் இலங்கையில்
சமாதான பேச்சுக்களுக்காக அழைப்புவிடுக்கும் அதே வேளை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் கொடூரமான நவ-காலனித்துவ
யுத்தத்தை முன்னெடுக்கும் புஷ் நிர்வாகத்தின் விவகாரத்தில் நன்கு தெளிவாகின்றது.
தொழிலாளர் வர்க்கம் அதன் சொந்த சோசலிச பதிலீட்டை அபிவிருத்தி செய்ய
வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்பு படையினரை உடனடியாக நிபந்தனையின்றி
விலகிக்கொள்ள போராடுகின்றது. அங்கு அவர்கள் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாகவே செயற்படுகின்றனர்.
பொருளாதாரத்தை ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்திற்காக அன்றி, பரந்த வெகுஜனங்களின் தேவைகளை இட்டுநிரப்பக்
கூடிய வகையில் சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்வதற்கு, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம்
ஒன்றுக்கான -ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு- ஒரு பொதுப் போராட்டம் அவசியமாகும். இது துணைக்கண்டம்
பூராவும் அனைத்துலகிலும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்காக தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்க வேண்டிய பரந்த
போராட்டத்தின் பாகமாகும்.
நாம் எமது வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் கற்குமாறும், உலக
சோசலிச வலைத் தளத்தை வாசிப்பதோடு சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாளர் வர்க்கத்தின்
வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்ப இணையுமாறும் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
|