WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
பர்மா
Burmese troops gun down protestors
பர்மிய துருப்புக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுத் தள்ளின
By Sujeewa Amaranath and Peter Symonds
29 September 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
பர்மிய இராணுவ ஆட்சி கடந்த இரண்டு நாட்களாக ரங்கூன், மன்டலே ஆகிய பிரதான
நகரங்களில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த பெரும் ஆர்ப்பாட்டங்களை கொடூரமாக நசுக்கியது. கண்ணீர்
புகை, தடிகள், இறப்பர் குண்டுகளை பயன்படுத்தியதன் மூலமும் மற்றும் சுற்றி வளைப்புக்கள் மூலமும் கூட்டங்கள்
கலைக்கப்பட்டன. வியாழக்கிழமை நடந்த மோதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்த
போதிலும், நடவடிக்கையாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் ஒரு சில வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் இருந்து
வரும் செய்திகள் இந்த எண்ணிக்கை கணிசமானளவு அதிகமானது எனத் தெரிவிக்கின்றன.
புதன் கிழமை இரவும் வியாழக் கிழமை விடியற் காலையிலும் துருப்புக்களால் ஆரம்பிக்கப்பட்ட
திடீர் நடவடிக்கைகளில், ரங்கூனில் ஷ்வேடகன் பகோடா மற்றும் சுலே பகோடா உட்பட துறவிமடங்கள் சோதனையிடப்பட்டு,
நூற்றுக்கணக்கான பெளத்த பிக்குகள் கைது செய்யப்பட்டனர். எதிர்ப்பின் மையமாக விளங்கும் ஐந்து பிரதான துறவி
மடங்கள் உற்பிரவேசிக்க முடியாத பிரதேசங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதை
தடுப்பதற்காக அவற்றை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு சம்பவத்தில், புதன் இரவு ரங்கூனின் புறநகர் பகுதியான தென் ஒகலபாவில் உள்ள
ங்வே க்யார் துறவி மடத்தினுள் பலாத்காரமாக நுழைந்த இராணுவத்தினர் சுமார் 100 பிக்குகளை கைது செய்தனர்.
அருகில் உள்ள வீதிகளில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் துருப்புக்கள் மீது கற்களை எறியத் தொடங்கினர். படையினர்
தானியங்கி துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்ட போது உயர் பாடசாலை மாணவன் உட்பட எட்டு பேர்
கொல்லப்பட்டனர்.
வியாழக் கிழமை 70,000 ற்கும் அதிகமானோர் இராணுவத் தடையை மீறி ரங்கூனில்
ஊர்வலம் சென்றனர். சிட்வே, பகோக்கு மற்றும் மெளல்மெயின் உட்பட ஏனைய மையப் பிரதேசங்களிலும்
மன்டலேயிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுலே பகோடாவுக்கு அருகில் மத்திய
ரங்கூனில், துருப்புக்களையும் பொலிசாரையும் தாங்கிய சுமார் 20 ட்ரக் வண்டிகள் வீதித் தடைகளாக
நிறுத்தப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் போத்தல்களையும் எறியத் தொடங்கியவுடன்,
பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளால் பதிலடி கொடுத்தனர். இராணுவம்
மக்களுக்கு கலைந்து செல்வதற்காக 10 நிமிடங்கள் கொடுத்தது. பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் செய்யத்
தொடங்கியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 50 வயதான ஜப்பானிய ஊடகவியலாளரான கென்ஜி நாகியும்
அடங்குவார். அவர் மோதல்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். தவறுதலாக பட்ட துப்பாக்கி குண்டால்
அவர் கொல்லப்பட்டார் என அரச ஊடகங்கள் கூறிக்கொண்ட போதிலும், ஜப்பானின் ஃபியூஜி தொலைக்காட்சியில்
காட்டப்பட்ட வீடியோ காட்சி ஒன்று அவர் வேண்டுமென்றே சுடப்படுவதை காட்டுகிறது.
நேற்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்திகள் மிகக் குறைவாகவே
உள்ளன. நாட்டின் பிரதான இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னைய நாட்களில் வெளி
உலகுக்கு சென்றுகொண்டிருந்த பெருந்தொகையான புகைப்படங்கள், வீடியோ மற்றும் செய்திகளும்
முடக்கப்பட்டுள்ளன. கையடக்கத் தொலைபேசி இணைப்பு செயற்படவில்லை. கடலுக்கு அடியில் செல்லும் கம்பிகள்
சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த போதிலும், ஜெனரல்களே இந்த தணிக்கைக்கு கட்டளையிட்டுள்ளனர்
என்பது பற்றிய சந்தேகம் உள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகள், இளம்
ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலே பகோடாவுக்கு அருகில் நடந்த சிறிய ஆர்ப்பாட்டங்களின் போது கனமாக ஆயுதம்
தரித்திருந்த பாதுகாப்புப் படையினருடன் மோதிக்கொண்டதாக விளக்குகின்றன. "ரங்கூனில் அன்றைய தினம்
கட்டுப்பாடற்ற, கந்தலாகிப்போன, அதிருப்தி ஏற்படுத்தும் தினமாக இருந்தது. குண்டாந்தடி பிரயோகங்கள்,
தாக்குதல்கள் மற்றும் மிகவும் மோசமான பரபரப்பு நிறைந்த நாளாக அது இருந்தது. படையினர் துப்பாக்கிகளில்
குறிபார்ப்பதையும், ஒரே சமயத்தில் பல இறப்பர் குண்டுகளை சுடுவதையும் அதே போல் மோதல்கள் மற்றும்
கைதுகளையும் நான் கண்டேன்," என அந்த செய்தியாளர் எழுதியுள்ளார்.
மத்திய ரங்கூனில் நேற்று 10,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும்,
அவர்கள் மீண்டும் மீண்டும் துருப்புக்களுடனும் பொலிசாருடனும் மோதிக்கொண்டதாகவும் ஏஜன்சி ஃபிரான்ஸ் பிரஸ் தெரிவிக்கின்றது.
சுமார் 500 பேர் அடங்கிய வேறு ஒரு குழுவினர் வீதிகளில் ஊர்வலம் சென்றதோடு பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். மன்டலேயில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில்
பாதுகாப்பு படையினரால் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடையை நோக்கி பயணித்த போதிலும், அவர்கள் திருப்பி
அனுப்பப்பட்டனர்.
ஆங் சான் சுகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய கழக (என்.எல்.டி)
உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான பொலிசாரின் சுற்றி வளைப்பு இன்னமும் தொடர்கின்றது.
இரு முக்கிய தலைவர்களான ஹ்லா பே மற்றும் மைன்ட் தை ஆகியோர் அவர்களது வீடுகளிலேயே வைத்து
கைதுசெய்யப்பட்டதாக என்.எல்.டி. அலுவலர் ஒருவர் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார். இராணுவ ஆட்சிக்கு
எதிராக 1988ல் ஆர்ப்பாட்டம் செய்த முன்னோர்களால் கடந்த ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு அமைப்பான, 88
தலைமுறை மாணவர்கள் குழுவின் உறுப்பினர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச பாசாங்கு
மாணவர்கள், இளம் பிக்குமார் மற்றும் சாதாரண மக்களும் இராணுவ ஆட்சியையும்
அதன் துருப்பக்களையும் எதிர்ப்பதில் உயர்ந்த உற்சாகத்தை வெளிக்காட்டுவதோடு அடிப்படை ஜனநாயக
உரிமைகளையும் சிறந்த வாழ்க்கை நிலைமையும் கோருகின்றனர். எவ்வாறெனினும், எதிர்ப்பின் அரசியல்
முன்நோக்கின் மட்டுப்படுத்தப்பட்ட பண்பு, ஐ.நா.வையும் பெரும் வல்லரசுகளையும் தலையிடுமாறு அது விடுக்கும்
வேண்டுகோளில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுன்
மற்றும் ஏனைய தலைவர்களும் இராணுவ ஆட்சி பற்றி வெளியிடும் பாசாங்கு கண்டனங்கள் நாற்றமடிக்கின்றன. புஷ்
நிர்வாகமும் மற்றும் அதன் பங்காளிகளும் ஈராக்கை விட பர்மாவில் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக பெரிதும்
அக்கறை காட்டவில்லை. தமது தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மீதான வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதில் பர்மாவில்
உள்ள தமது சமதரப்பினரை விட ஈராக்கில் அமெரிக்க இராணுவம் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும்
இரக்கமற்றதாகும்.
பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு வாஷிங்டன் காட்டும் எதிர்ப்பு, பர்மா ஆட்சி
ஜனநாயக உரிமைகளை நசுக்குவதால் அல்ல. மாறாக பர்மா சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதேயாகும்.
குறிப்பாக அமெரிக்க ஊடகங்கள், சீனா பொருத்தமான பலமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமையே
பர்மிய இராணுவ ஆட்சியின் வன்முறைக்குக் காரணம் என சீனா மீது குற்றஞ்சாட்ட கடந்த வாரம் பூராவும்
முயற்சித்தன. உதாரணமாக, வியாழனன்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்திற்கு,
"பர்மாவைக் காப்பாற்று: "பிக்குமாரைப் படுகொலை செய்வதற்கு சீனாவும் ரஷ்யாவும் பச்சைக் கொடி
காட்டுமா?" என தலைப்பிடப்பட்டிருந்தது. பர்மாவில் வன்முறைகளை கண்டனம் செய்யும் ஐ.நா. தீர்மானம்
ஒன்றை இரு அரசுகளும் தடுப்பதாக அந்த ஆசிரியர் தலையங்கம் விமர்சித்திருந்தது.
சீனாவும் ரஷ்யாவும் தமது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை
முன்னேற்றுவதற்காக அடக்குமுறை அரசாங்கங்களை சிடுமூஞ்சித்தனமாக ஆதரிக்கின்றனர் என்பதில் சந்தேகம்
கிடையாது. ஆனால் அவை தனியாக இல்லை. இந்தியாவைப் பொறுத்தளவில், அது பர்மா தொடர்பான தனது
விமர்சனத்தை சத்தமின்றி கைவிட்டுள்ளதுடன் அந்த நாட்டுக்குள் தனது பொருளாதார இராஜதந்திர செல்வாக்கை
விரிவுபடுத்த முயற்சிக்கின்றது. பர்மாவின் மிகப் பெரும் வர்த்தக பங்காளி சீனா அல்ல. மாறாக குறிப்பறிந்து
மெளனமாக இருக்கும் அமெரிக்காவின் ஆதரவிலான இராணுவ சர்வாதிகாரத்தால் ஆளப்படும் அயல் நாடான
தாய்லாந்து ஆகும். பர்மா தொடர்பான புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரமானது சீனாவை மூலோபாய ரீதியில் சுற்றி
வளைத்துக்கொள்ளும் அதன் திட்டத்தின் ஒரு பாகமாக ரங்கூனில் அமெரிக்க சார்பு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை
இலக்காகக் கொண்டதே அன்றி, சாதாரண பர்மியர்கள் மீதான அக்கறையினால் தோன்றியது அல்ல.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் மிகவும் தீவிரமான
நிலையை அடையுமேயானால், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சார்பாக தற்போது வெளிவரும் ஊடகங்களின் பசப்பு
வார்த்தைகள் துரிதமாக மாற்றமடையும் என்பதை ஒருவரால் நம்பகமாக முன்கூற முடியும். தொழிலாளர்களின்
குறிப்பிடத்தக்க பகுதியினர் பங்கேற்ற 1988 கண்டன ஆர்ப்பாட்டங்களைப் போலல்லாமல், அண்மைய
ஆர்ப்பாட்டங்கள் இதுவரை பெருமளவில் பிக்குகள் மற்றும் மாணவர்களால் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது.
உழைக்கும் மக்களில் கணிசமான பகுதியினர் அரசியல் நடவடிக்கையினுள் நுழைவதானது இராணுவ ஆட்சியை குலுக்குவது
மட்டுமன்றி, பிராந்தியம் பூராவும் மற்றும் சர்வதேச ரீதியிலும் எதிரொலிக்கும்.
உயர்ந்த பலத்துடன் வலுப்படுத்தப்படுவதற்கு அப்பால், பர்மிய இராணுவ ஆட்சி
பலவீனமான ஒரு நிலையில் இருந்தே செயற்படுகின்றது. ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்களால்
பயனற்றதாகக் கருதப்படும் ஜெனரல்கள் ஆழமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
கரையிலிருந்து சற்று அப்பால் உள்ள எரிவாயு வயல்கள் அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும், பொருளாதாரம்
பணவீக்கத்தில் மூழ்கிப்போயுள்ளது. பொருளாதாரம் ஒரு மதிப்பீட்டின்படி ஆண்டு வீதம் 20 ஆலும் மற்றும் முதலீடு
மற்றும் அந்நிய செலாவனியின் நீடித்த பற்றாக்குறையாலும் ஓடிக்கொண்டிருக்கின்றது. பொருளாதார ஆய்வாளர்கள்
எப்பொழுதும் உயர் வளர்ச்சி வீதம் தொடர்பான உத்தியோகபூர்வ கூற்றுக்களை அவநம்பிக்கையுடனேயே
நோக்குகின்றனர். 2003ல் அரசாங்கம் தனியார் வங்கி நெருக்கடியையும் ஆறு பிரதான உற்பத்திகளின் ஏற்றுமதி
தடையையும் எதிர்கொண்ட போதிலும் கூட, அது 5.1 வீத வளர்ச்சியை பிரகடனம் செய்தது.
ஜெனரல்களின் அளவு மீறிய வாழ்க்கை முறைக்கும் வறுமையை எதிர்கொள்ளும்
ஜனத்தொகையில் பெரும்பான்மையினருக்கும் இடையிலான இடைவெளி திகைப்பூட்டுகிறது. ஜனத்தொகையில் 90
வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒரு ஆண்டில் 300,000 க்யட்டுக்கும் (சுமார் 300 அமெரிக்க டொலர்)
குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர். ஒரு மதிப்பீட்டின்படி 5 வயதுக்கும் குறைவான சிறுவர்களில் 43
வீதமானவர்கள் போசாக்கின்மையால் வாடுகின்றனர். சராசரியாக, குடும்ப வருமானத்தில் கிட்டத்தட்ட 70 வீதம்
உணவுக்காக செலவிடப்படுகின்றது -- அதாவது இன்று சம்பாதித்து நாளை வாழும் நிலை. சுகாதாரம் மற்றும்
கல்விக்காக செலவிடப்படும் தொகை மொத்த தேசிய வருமானத்தில் வெறும் 1.4 வீதம் மட்டுமேயாகும். இது
இவற்றுக்கு அடுத்து பிராந்தியத்திலேயே மிகக் குறைந்தளவு செலவிடும் இந்தோனேஷியா செலவிடும் தொகையின்
அரைவாசிக்கும் குறைவானதாகும்.
இந்த புதிய ஆர்ப்பாட்டங்கள் பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயுவுக்கான விலை
மானியங்களை வெட்டித்தள்ள இராணுவ ஆட்சி கடந்த மாதம் எடுத்த முடிவினாலேயே வெடித்தன. இந்த வெட்டுக்களினால்
போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததோடு அடிப்படைப் பொருட்களின் விலை ராக்கட் வேகத்தில் உயர்ந்தன.
எவ்வாறெனினும், எதிர்க் கட்சித் தலைவர்கள் இராணுவ ஆட்சியைக் கவிழ்க்க சாதாரண உழைக்கும் மக்களின் சமூக
அதிருப்தியை அணிதிரட்ட முயற்சிப்பதற்கு மாறாக, ஆர்ப்பாட்டங்களில் கோரிக்கைகளை வேண்டுமென்றே மட்டுப்படுத்தியுள்ளனர்.
88 தலைமுறை மாணவர்களும், அனைத்து பர்மா பிக்குகள் கூட்டணியும் கடந்த வாரம்
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மூன்று கோரிக்கைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளனர். அவை அரசியல் கைதிகளை விடுதலை
செய், பொருளாதார நல்வாழ்வு, தேசிய ஒற்றுமை ஆகியவையாகும். ஆங் சன் சூகி மற்றும் என்.எல்.டி.
போன்று, இத்தகைய குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு செல்லவும் அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கை மூலம்
சமரசம் காணவும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டங்களையும் அனைத்துலக இராஜதந்திர
நடவடிக்கைகளையும் பயன்படுத்த முயற்சிக்கின்றன. பர்மாவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறப்பதற்காக
சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்படும் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதை உள்ளடக்கிய என்.எல்.டி.
யின் அடிப்படை வேலைத்திட்டம், இராணுவ ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகளைப் போலவே சாதாரண
உழைக்கும் மக்களுக்கு பெரும் அழிவுகரமானதாக இருக்கும்.
1988 ஆர்ப்பாட்ட அனுபவசாலிகளில் சிலரின் முடிவு, தமது முன்னைய கோரிக்கைகள்
மிகவும் தீவிரமானவை என்பதாகவே தோன்றுகிறது. உண்மையில், விவகாரம் எதிர்மாறானது. 1988ல் எண்ணெய்
உற்பத்தி, போக்குவரத்து, தபால் சேவை, தொலைத்தொடர்பு மற்றும் தொழிற்சாலைகளிலும் இடம்பெற்ற
வேலை நிறுத்தங்கள் அதே போல் பரந்தளவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களாலும் இராணுவ ஆட்சி ஊசலாடிக்கொண்டிருந்தது.
அது 1990ல் தேர்தலை நடத்தும் உடன்பாட்டுடன் ஆர்ப்பாட்டங்களுக்கு முடிவு கட்டுவதற்காக என்.எல்.டி. உடன்
உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதன் மூலம் அதிகாரத்தைப் பற்றிக்கொள்ளும் முயற்சியில் சமாளித்துக்கொண்டது.
தமது ஆட்சியை ஸ்திரப்படுத்திக்கொண்ட பின்னர், இராணுவ ஜெனரல்கள் தேர்தல் முடிவுகளை சாதாரணமாக
ஒதுக்கித் தள்ளியதோடு எதிர்ப்புக்களை நசுக்கி தொடர்ந்தும் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டனர்.
|