World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காBush at the UN: a war criminal lectures the world on "human rights" ஐ.நா.வில் புஷ்: ஒரு போர்க்குற்றவாளி உலகிற்கு "மனித உரிமைகள்" பற்றி உபதேசிக்கிறார் By Bill Van Auken ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் தன்னுடைய கடைசி ஆண்டுக்கு முந்தைய உரையை செவ்வாயன்று ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிகழ்த்தினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்பு போர்த் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் முத்திரை இடாவிட்டால், உலக அமைப்பு "பொருத்தமற்றது" எனக் கண்டிப்பதற்கு பயன்படுத்திய அதே அரங்கில் புஷ் வாஷிங்டனில் தன்னுடைய ஆட்சியை உலகின் மிகப் பெரிய மனித உரிமைகளை காக்கும் ஆட்சி என்றும் அதற்காக தாராள உதவி அளித்து தன்னலமில்லா வள்ளலாக இருப்பதாகவும் கூறினார். உலகில் போட்டியில்லாத வகையில் மிகப் பெரிய போர்க்குற்றவாளியின் இத்தகைய பாசாங்குதன உரையை முழுவதும் அமர்ந்து கேட்ட பின், நாகரிகமாக அதை கைதட்டி ஆர்ப்பரித்து ஐ.நா. பிரதிநிதிகள் மகிழ்ந்தது உலகின் அரசாங்கங்கள் மற்றும் ஐ.நாவின் முதுகெலும்பு அற்ற தன்மை மற்றும் உடந்தைக்கு உற்ற சாட்சியமாக இருந்தது. ஈரான் அல்லது ஈராக் பற்றி தன்னுடைய உரையில் மிகச் சிறிய குறிப்பையே புஷ் காட்டினாலும், இந்த உலக அமைப்பை மீண்டும் பயன்படுத்த அவர் முயற்சிக்கிறார் என்பதை மன்றத்தில் இருந்த அனைவரும் அறிந்திருந்தனர்; ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய நிர்வாகம் இதேபோல்தான் ஈராக்கிய "பேரழிவு ஆயுதங்கள்" பற்றிக் குறிப்பிட்டு, ஆக்கிரமிப்பு போருக்கு ஒரு போலிக் காரணத்தை நாடியது; இந்த முறை இது ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். வாஷிங்டனில் புஷ்ஷிற்கு துணை நிற்பவர்கள் ஈரானுக்கு எதிராக ஐ.நா. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆக்கிரோஷத்துடன் உரையாற்றுவது, ஈராக்கிற்கு எதிரான போர்த்தயாரிப்பில் 2002-03ல் அமெரிக்க நிர்வாகம் கூறிய பொய்களையும் மிரட்டலையும்தான் நினைவுறுத்தும் என்று நன்கு உணர்ந்திருந்தனர். அப்பொழுதில் இருந்து ஈராக்கியர்கள் 1 மில்லியன் பேராவது கொல்லப்பட்டிருப்பர், காரணமின்றி நிகழ்ந்த அமெரிக்க படையெடுப்பு, அதன் "அதிர்ச்சி, பெரும் வியப்பு" ஆகியவற்றை கொடுத்த குண்டு வீச்சுக்கள் மற்றும் நாட்டை பின்னர் ஆக்கிரமித்து ஈராக்கிய சமூகத்தின் ஒவ்வொரு கூறுபாட்டையும் அழித்தமை, இவற்றின் விளைவாக கிட்டத்தட்ட 4 மில்லியனுக்கும் மேலானவர்கள் அகதிகளாக மாறினர். எனவே அதற்கு பதிலாக, புஷ் கூடியிருந்த பிரதிநிதிகளுக்கு முன்பு, நிகழ்தற்கு அரிய மாற்று தோற்றத்தில், சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் திருத்தூதராக வந்தார். ஆறு தசாப்தங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டிருந்த ஐ.நா. நிறுவன ஆவணத்தையும், மனித உரிமைகள் அனைவருக்கும் என்ற பிரகடனத்தையும் பாராட்டி புஷ் தன்னுடைய உரையை தொடக்கினார்; இந்த முறையான சுதந்திரம், நீதி, சமாதானம் ஆகியவை பற்றிய பிரகடனம் "உலகில் எமது பணிகளுக்கு வழிகாட்டிகளாக" இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "கொலை, அச்சம் என்ற வாழ்விற்குள் நிரபராதி மக்கள் பொறியில் அகப்பட்டுக் கொள்கையில், பிரகடனம் உறுதிப்படுத்தப்பட முடியாமல் போகிறது" என்று அவர் அறிவித்தார். எவரை ஏமாற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி நினைத்துக் கொண்டிருக்கிறார்? அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள ஈராக்கைவிட உலகில் வேறு எங்கு கூடுதலான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் "கொலை, அச்சம் என்ற பொறிக்குள் வாழ்வை" நடத்துகின்றனர்? ஈராக்கியர்களின் இறப்பு எண்ணிக்கை வாரத்திற்கு ஆயிரம் என்று அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளினால் உயர்ந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது; கூலிப்படையினர் சிறிதும் பயமின்றி கொன்று குவிக்கும் கொலை வெறியில் ஈடுபட்டுள்ளனர்; குறுகிய குழுக்களின் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது நாட்டை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது; இவை அனைத்தும் வாஷிங்டனின் உதவியால் நடைபெறுகிறது. ஐ.நா. "மக்களை கொடுங்கோன்மையில் இருந்தும் வன்முறை, பசிப்பிணி மற்றும் நோய்கள், கல்வியறிவற்ற நிலை, அறியாமை, வறுமை, பெரும் திகைப்பு ஆகியவற்றில் இருந்தும் விடுவிக்க" உழைக்க வேண்டும் என்று புஷ் அறிவித்தார். பின் "ஐ.நா.வின் ஒவ்வொரு உறுப்பு நாடும் இந்த சுதந்திரப் பணியில் சேர்ந்து கொள்ள வேண்டும்" எனச் சேர்த்துக் கொண்டார். புஷ் நிர்வாகத்தின் வலதுசாரி சிந்தனையாளர்களால் விரும்பப்படும் ஓர்வெல்லியச் சொல்லாட்சியில் "விடுதலை" என்பது ஈராக் மற்றும் அதன் எண்ணெய் வளத்தின்மீது அமெரிக்க அரைக் காலனித்துவ முறையை சுமத்துவதற்காக மேற்கொண்ட போரை விவரிக்க தொடர்ச்சியாக பயன்படுத்தும் சொல் ஆகும். அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு மூலம் வெளிப்பட்டுள்ள இந்த "பணியைத்தான்" உலக அமைப்பு இசைவு கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்று புஷ் கோருகிறார். அனைவருக்குமான பிரகடனத்தின் முதல் விதியை மேற்கோளிட்ட வகையில் புஷ் தொடர்ந்தார்; இது "அனைத்து மனித உயிர்களும் சுதந்திரமாக பிறந்தவை, கெளரவம், உரிமைகளை சமத்துவமாக கொண்டவை" என்று கூறுகிறது. இக்கொள்கையின் மிகப் பெரிய அச்சுறுத்தல் "பயங்கரவாதிகள், தீவிரவாதிகள்" ஆகியோரிடம் இருந்து வருகிறது என்றார் புஷ். எனவே, "அனைத்து நாகரிகமுற்ற நாடுகளும் "அமெரிக்காவுடன் பயங்கரவாதத்தின் மீதான அதன் பூகோளப்போரில் கட்டாயம் இணைந்து கொள்ள வேண்டும்" என்று வாதிட்டார். இதன் பின் அவர் மற்ற விஷயங்கள் பற்றிப் பேசினார்; அது புத்திசாலித்தனமான மாற்றம்தான்; ஏனெனில் அனைவருக்குமான பிரகடனத்தை விரிவாக மேற்கோளிட்டுப் பேசுதல் என்பது இவருடைய சொந்த நிர்வாகத்தின் போர்க்குற்றங்கள் பட்டியலையே புலப்படுத்துவது போல் ஆகியிருக்கும். உதாரணமாக அதில் "எவரும் சித்திரவதைக்கோ, மனிதத்தன்மையற்ற, கெளரவமற்ற முறையில் தண்டனைக்கு உட்படுத்தப்படவோ கூடாது" என்ற கொள்கையை கூறியுள்ளது; இதை புஷ்ஷின் வெள்ளை மாளிகை வெளிப்படையாக நிராகரித்து, ஜெனிவா மரபுகளையும் புறக்கணித்து, அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" கைது செய்யப்பட்டவர்களை நீர்த்தாக்குதல், உதைத்தல், உணர்ச்சிகளை மரத்துப் போகச் செய்தல், பாலியலில் அவமானப்படுத்துதல் இன்னும் பலவிதமான சித்திரவதைகள், அகெளரவமாக நடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. "எவரும் ஒருதலைப்பட்சமான கைது, தடுப்புக் காவல் அல்லது நாடு கடத்தப்படல் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படக் கூடாது" என்றும் பிரகடனம் உறுதிப்படுத்தியுள்ளது; புஷ் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை சிறிதும் பயமின்றி நடத்தியுள்ளது; கைது செய்யப்படுபவர்கள் குற்றச்சாட்டு இல்லாமல் பல காலம் காவலில் உள்ளனர்; குவாண்டநாமோ குடா, அபு கிறைப் போன்ற இழிந்த தடுப்புக்காவல் கூடங்களில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் இருக்கும் இரகசிய CIA சிறைகளில் வாடுகின்றனர். வெளியுறவுக் கொள்கை அகராதி சொற்கூட்டில் "அசாதாரண செயற்பாட்டு முறை (Extraordinary rendition") என்ற சொற்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது; இது மக்களைக் கடத்தி, மயக்க மருத்துகள் கொடுத்தல், பின்னர் முக்காடு அணிவித்து, சங்கிலிகளால் பிணைத்து மற்ற நாடுகளுக்கு அனுப்பி அவர்களை சித்திரவதை செய்வதற்கான கெளரவ சொற்கள் ஆகும். பிரகடனத்தில், "எவரும் அவருடைய அந்தரங்கங்கள், குடும்பம், வீடு அல்லது பிறருடன் கடிதப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒருதலைப் பட்ச தலையீட்டிற்கு உட்படுத்தப்படக் கூடாது" என்று ஒரு விதி வலியுறுத்திக்கூறுகிறது. தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் ஒழுங்கமைக்கப்படும் சட்டவிரோத உள்நாட்டு ஒற்று நடவடிக்கைகள் மூலம் அமெரிக்க மக்கள் தொடர்பானதில் இந்தக் கோட்பாட்டை மிக வெளிப்படையாக இவருடைய நிர்வாகம் மீறியுள்ளது. ஈராக்கில் வெளிப்பட்டு வரும் சங்கடம் பற்றி உலகின் பேரச்சத்தை, மற்றும் ஈரானில் கட்டவிழ்த்துப்பட இருக்கும் இன்னும் பேரழிவுகளை பற்றிப் பெருகிய அச்சம் ஆகியவை பற்றி இந்த நிர்வாகத்தின் இழிபுகழை எடுத்துக் கொள்கையில், புஷ்ஷின் உரையை எழுதியவர்கள் பொருளை மாற்றுவது நல்லது என்று நினைத்தார்கள் போலும். ஏன் மியன்மர்? இவ்விதத்தில் அவருடைய கருத்துக்களின் முக்கிய இலக்கு --செய்தி ஊடகத்தில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்த பிரச்சினை-- அமெரிக்க ஜனாதிபதி தான் மியன்மருக்கு (பர்மாவிற்கு) எதிராக பொருளாதாரத் தடைகள் இறுக்கப்படுவதற்கு உத்தரவிடப்போவதாக அறிவித்ததாகும். "பர்மாவில் இருக்கும் நிலை பற்றி அமெரிக்கர்கள் சீற்றம் அடைந்துள்ளனர்; அங்கு ஒரு இராணுவக் குழு 19 ஆண்டுகால பயத்தைப் பரப்பும் ஆட்சியை சுமத்தியுள்ளது." அதன் மக்களுக்கு எதிராக மிருகத்தனமான அடக்குமுறையை நாட்டை ஆளும் ஊழல்மலிந்த இராணுவ ஆட்சியை நடத்தி வருகிறது என்பதில் ஐயம் இல்லை என்றாலும், இந்த நடவடிக்கைகளினால் "அமெரிக்கர்கள் சீற்றம் அடைந்துள்ளனர்" என்று கூறுவது, அங்கு நடக்கும் பலவற்றைப் பற்றி, நிர்வாகம் அல்லது செய்தி ஊடகம், அங்குள்ள அபிவிருத்தி பற்றி உண்மையில் எவ்வித கவனமும் காட்டத் தவறியது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்கையில், அமெரிக்கர்களுக்கு அது பற்றி ஏதும் தெரியாது என்ற உண்மையால் திரித்துக் காட்டப்பட்டுள்ளது. மியன்மார் அதிகாரிகள், அவர்களுடைய குடும்பங்களுக்கான விசாக்களில் இன்னும் கூடுதலான தடைகள், ஆளும் குழுவிற்கு, அவர்களுடைய ஆதரவாளர்கள் ஆகியோருக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் என்ற அளவில்தான் புஷ்ஷின் புதிய நடவடிக்கைகள் உள்ளன. புஷ் நிர்வாகத்தின் அக்கறைகளில் ஒன்று, சமீப காலத்தில் வெகுஜனங்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரிக்கும் மியன்மர் மக்களின் விழைவுகளில் உள்ளது என்று கூறுவது ஒரு கேலிக்கூத்து ஆகும். இந்தோனேசியாவில் இருந்து சிலி வரை கணக்கிலடங்கா இராணுவ சர்வாதிகாரங்களை அமெரிக்க அரசாங்கம் நேரடியாக நிலைநிறுத்தி, ஆதரித்தும் வந்துள்ளது; பர்மிய குழு தன்னுடைய மக்களை அடக்குவதற்கு பயன்படுத்தும் வழிவகைகளை விட மோசமானவற்றை அச்சர்வாதிகாரங்கள் செய்துள்ளன. மாறாக, "சுதந்திரம்", "ஜனநாயகம்" என்ற தலைப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் தன்னுடைய மூலோபாய நலன்களை தொடர்ந்து வருவதுடன், அமெரிக்க மூலதனம் சுரண்டுவதற்காக நாட்டை திறதுவிடும் அமெரிக்க சார்புடைய அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. மியன்மர் அரசாங்கத்தின் நெருக்கமான பொருளாதார, அரசியல் உறவுகள் அண்டை நாடான சீனாவுடன் இருக்கும் நேரத்தில், ஆட்சி மாற்றத்திற்கான அத்தகைய அமெரிக்க செயற்பாடுகள் அப்பகுதியில் பெய்ஜிங்கின் மேலாதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வாஷிங்டனின் முயற்சிகளை கணிசமாக முன்னேற்றுவிக்கும்; அதே நேரத்தில் இராணுவ முறையில் சீனாவை சுற்றி வளைப்பதற்கும் பயன்படும். அமெரிக்க தலைமையிலான "சுதந்திரப் பணி"க்கு இலக்குகளாக கொள்ளப்படுவது ஈரான், கியூபா, சிம்பாப்வே, சூடான், பேலரஸ், வட கொரியா மற்றும் சிரிய நாடுகளின் அரசாங்கங்கள் ஆகும்; இவை அனைத்தையும் வாஷிங்டன் குற்றவாளி அரசாங்கங்களாக கருதி அகற்றப்படுவதற்கு உத்தரவிடுகிறது. அனைவருக்கும் பிரகடனத்தை தொடர்ந்து பயன்படுத்தும் வகையில், புஷ் "போதுமான சுகாதார வசதிகள் தனக்கும் தன் குடும்பத்திற்கும், உணவு, உடை, உறைவிடம், மருத்துவப் பாதுகாப்பு உட்பட, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது" என்று கூறப்பட்டிருக்கும் பத்தியையும் மேற்கோளிட்டுள்ளார். இந்த விதியை பயன்படுத்தி வெட்கம் கெட்டதனமான, ஏமாற்றுத்தனமான, தன்னையே பாராட்டி கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு, சர்வதேச அளவில் உணவு அளிப்பதில் அமெரிக்கா காட்டும் தாராளம், குறிப்பாக AIDS ஐ எதிர்க்க துணை சகாரா ஆபிரிக்கப் பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் புகழ்ந்து கொண்டுள்ளது. உண்மையில் Reuters செய்தி நிறுவனம் இம்மாதத் தொடக்கத்தில் கூறியுள்ளபடி "உணவு அளிப்புக்கள், உலகின் பசி நிறைந்தவர்களுக்கு 1973ல் இருந்து மோசமான நிலை என்பதை அடைந்துள்ளது". வரவிருக்கும் தவிர்க்க முடியாத நெருக்கடி உலகின் 850 மில்லியன் மக்கள் பசியை எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல் முதலாளித்துவ சந்தையின் உந்துதலினால் வரவிருக்கிறது. உணவுப் பொருட்களின் விலை மிகவும் உயர்ந்துவிட்டது; இதற்கு அமெரிக்காவின் எரிபொருளுக்கு மாற்றீடாக தானிய (சோளம்) ஆதாரத்தை கொண்டு உற்பத்தி செய்யப்படும் எதனால் என்ற பிரச்சார உந்துதலும் ஒரு காரணம் ஆகும் AIDS உதவித் தொகை அளித்தலை பொறுத்த வரையில், வாஷிங்டனின் பங்கு, தங்கள் தேசிய பொருளாதாரத்தின் அளவை ஒப்பிட்டுக் காண்கையில் நன்கொடை அளிக்கும் நாடுகளில் அமெரிக்கா ஐந்தாவதாகத்தான் உள்ளது. திட்டங்களுக்கு --அமெரிக்க உதவித் தொகைய கிறிஸ்துவ வலதுசாரிகளுக்கு திருப்தி ஏற்படும் வகையில் சுமத்தப்படும் தடைகள் உட்பட-- போதுமான நிதியம் இல்லாத நிலை என்பது மில்லியன் கணக்கான ஆபிரிக்கர்கள் எவ்வித மருத்துவ உதவியும் பெற முடியாது என்று தள்ளப்பட்டு விடுவர்.இதற்கிடையில், அமெரிக்க உதவி மொத்தத்திலேயே உலகின் மற்ற பகுதிகளில் இருந்து வோல் ஸ்ட்ரீட் அபகரித்துக் கொள்ளும் பரந்த செல்வத்துடன் ஒப்பிடும்போது அற்ப தொகையாகும்; இது உலகத்தை கொள்ளையடிக்கும் வழிவகையை எளிதாக்கும் கருவியாகத்தான் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. 1970ம் ஆண்டு சர்வதேச நன்கொடையாளர் நாடுகளின் குழு அவை தங்கள் தேசிய வருமானங்களில் 0.7 சதவிகிதம் வெளிநாடுகளுக்கு உதவியாக அளிப்பதாக ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். எந்த நாடும் இதற்கு நெருங்கிய முறையில் நன்கொடை அளிக்க முன்வராதது மட்டுமில்லாமல், அமெரிக்காவில் கடந்த ஆண்டு இந்த உதவித் தொகை மொத்த தேசிய வருமானத்தில் 0.17 என்றுதான் இருந்தது. இறுதியாக, தான் எடுத்துக் கொண்ட தலைப்பு பற்றி சூடாகப் பேசி புஷ், அனைவருக்கமான பிரகடனத்தில் உள்ள "வேலை செய்யும் உரிமை", "நியாயமான, சாதகமான பணி நிலைமைகள்" ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, தடையற்ற சந்தை முறை முதலாளித்துவத்திற்காக வாதிடுவதற்கும், உலகின் பொருளாதாரத்தை சர்வதேச வங்கிகளும் பெருநிறுவனங்களும் சுரண்டுவதற்கு இருக்கும் அனைத்து தடைகளையும் கிழித்தெறிவதற்கும் பயன்படுத்தினார். தன்னுடைய கருத்துக்களை கூறி முடிக்கையில், புஷ் ஐ.நா. தன்னை சீர்திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் "அமெரிக்க மக்கள்" மற்றும் அவர்கள் உலக அமைப்பின் மனித உரிமைகள் குழுவின் செயற்பாடு பற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படும் ஏமாற்றம் பற்றியும் தெரிவித்தார். சாராம்சத்தில், இக்குழு கியூபா, வெனிசூலா, வட கொரியா, ஈரான் ஆகியவற்றை கண்டிப்பதில் குவிப்புக் காட்ட வேண்டும் என்றும் லெபனானில் சிவிலிய மக்களை இஸ்ரேல் கொன்றது, காசாவிலும் மேற்கு கரையிலும் பாலஸ்தீனியர்களை ஒடுக்குவது பற்றிய அதன் விமர்சனத்தை நிறுத்த வேண்டும் என்றும் புஷ் கோரினார். இத்தகைய புஷ்ஷின் விமர்சனத்திற்கு பின்னணியில் இருக்கும் சங்கடமான உண்மை வாஷிங்டன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனித உரிமைகள் குழுவில் இடம் கேட்க முற்படாததுதான்; ஏனெனில் தேவையான வாக்குகளை பெறமுடியாமல் போகும் என்று அது அஞ்சுகிறது. அபு கிறைப், குவாண்டநாமோ குடா பற்றிய தொடர்ச்சியான வெளிப்பாடுகள், அசாதாரணமான முறையில் கடத்தல்கள் மற்றும் CIA வின் சித்திரவதைகள் --உள்நாட்டில் தொடர்ந்து மரண தண்டனை அளித்தலை பற்றி குறிப்பிடத் தேவையில்லை-- ஆகியவை அமெரிக்காவைத்தான் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டிற்கு உகந்த இலக்காகக் கொள்ளும். ஆயினும் இது உலகிற்கு எந்த நாடுகள் விசாரணைக்கு உட்பட வேண்டும், எவை கூடாது என்று ஆணையிடும் முறையை கொண்டிருக்கிறது. எங்கு ஆட்சி மாற்றத்தை வாஷிங்டன் கோருகிறது --ஈரான், கியூபா, வெனிசூலா போன்றவை-- அந்நாடுகள் எல்லாம் கடுமையான குற்றச் சாட்டுக்களுக்கு உட்படுகின்றன; ஆனால் அமெரிக்காவின் மூலோபாய நட்பு நாடுகளாக இருக்கும் சர்வாதிகார நாடுகள் --பாகிஸ்தான், செளதி அரேபியா, எகிப்து மற்றும் அரேபிய மக்களை அடக்கும் வாஷிங்டனின் முக்கிய நட்பு நாடான இஸ்ரேல் என்பவை-- சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்று அறிவிக்கப்படுகின்றன. ஐ.நா. பொது மன்றத்தின் முன் புஷ் தோன்றியது, ஏகாதிபத்திய திமிர்த்தனம், அப்பட்டமான பாசாங்குத்தனம் மற்றும் அமெரிக்க பெருவணிகத்தின் பணியில் இருந்து கொண்டு இரட்டைப் பேச்சு பேசுவது என்பவற்றின் கணிக்கக்கூடிய நடவடிக்கையாகத்தான் முற்றிலும் இருந்தது. இறுதிப் பகுப்பாய்வில், அமெரிக்க ஜனாதிபதி அபத்தமான முறையில் மனித உரிமைகளின் காப்பாளர், அனைவருடைய விடுதலைக்கும் போராடுபவர் என்று காட்டிக் கொண்டிருப்பதை விட அவர் எதைக் கூறாமல் விட்டார் என்பதுதான் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஈராக், ஈரான் பற்றி கிட்டத்தட்ட மெளனம் சாதித்த நிலையில், இன்னும், கூடுதலான கொடூரமான குற்றங்களுக்கான தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. |