World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Socialist Equality Party (Australia) 2007 federal election statement A socialist program to fight war, social inequality and the assault on democratic rights ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் 2007 கூட்டரசுத் தேர்தல் அறிக்கை யுத்தம், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராட ஒரு சோசலிச வேலைத் திட்டம் 16 October 2007 சோசலிச சமத்துவக் கட்சி, எமது 2007 கூட்டரசுத் தேர்தல் பிரச்சாரத்திற்கும் நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் போட்டியிடும் எமது வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்குமாறு ஆஸ்திரேலியா பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சியானது லிபரல், லேபர் மற்றும் பசுமை ஆகிய அனைத்து அரசியல் ஸ்தாபனங்களுக்கும் எதிராக, ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப இந்தத் தேர்தலில் நிற்கின்றது. ஆஸ்திரேலியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி இராணுவவாதம், போர், அடக்குமுறை, சமூக சமத்துவமின்மை மற்றும் பெருமளவிலான சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் பொறுப்பான சமூக, பொருளாதார முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எமது நோக்கமாகும். ஹோவர்ட் அரசாங்கம், அது அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும் எனத் தெரிவிக்கும் கருத்துக் கணிப்பினால் எரியூட்டப்பட்டுள்ள கசப்பான குற்றச்சாட்டுக்களின் மத்தியில், ஆழ்ந்த நெருக்கடியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் நுழைகிறது. பிரதமர் ஜோன் ஹோவர்ட் கூட அவருடைய தொகுதியை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார். அவருடைய இக்கட்டான நிலைக்குக் காரணம், மக்களின் பரந்த பிரிவினரிடையே கணிசமான அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் விளைவேயாகும். அரசாங்கத்தின் அச்சுறுத்தல் மற்றும் பொய் அரசியலினால் அதிருப்தி கண்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பெரும்பான்மையான மக்கள் ஈராக் மீதான போரை எதிர்ப்பதுடன் ஆஸ்திரேலியத் துருப்புக்கள் உடனடியாகத் திருப்பியழைக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர். ஆயினும், இந்த எதிர்ப்பிற்கு உத்தியோகபூர்வ அரசியல் வரம்புக்குள் எந்தவொரு வெளிப்பாட்டையும் காண வழிவகை ஏதும் இல்லை. ஓராண்டிற்கு முன்பு, அமெரிக்க மக்கள் குடியரசுக் கட்சியை நிராகரித்து ஜனநாயகக் கட்சிக்கு காங்கிரசின் இரு சபைகளிலும் பெரும்பான்மையை வழங்கி ஈராக் போருக்கு தங்கள் எதிர்ப்பை உறுதிப்படுத்தினர். அப்போதிருந்து ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காங்கிரஸ், யுத்தத்திற்கு நிதி வழங்கும் வாக்கெடுப்பு உட்பட, புஷ்ஷின் கொலைகார "எழுச்சிக்கு" வாக்களித்து போருக்கு முழு ஆதரவையும் கொடுத்து வருகின்றது. ஈரான் மீது இராணுவத் தாக்குதல் தொடுப்பதை ஆதரிக்கவும் ஜனநாயகக் கட்சியினர் தயாராக உள்ளனர். லேபர் கட்சி தேர்தலில் வெற்றியடைந்தால், அதுவும் இதையே செய்யும் என்பது திட்டவட்டமானது. ஈராக் போரை அது ஒரு போதும் எதிர்த்ததில்லை. அதன் "வேறுபாடுகள்" முற்றிலும் யுத்தத்தைக் கையாளும் உத்தி பற்றியதாகவே உள்ளன. லேபர் கட்சித் தலைவர் கெவின் ருட் சிடுமூஞ்சித்தனமாக போர்-எதிர்ப்பு உணர்வில் இலாபமடைய முயற்சிக்கும் அதே வேளை, "போரில் ஈடுபட்டுள்ள" துருப்புக்களை திருப்பியழைப்பதாக அவர் கூறிக்கொள்வதானது முர்டோக் ஊடகம் கூட அதை ஒரு "மோசடி" என முத்திரை குத்துமளவிற்கு மோசடியானதாகும். ஆஸ்திரேலிய ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமைவாதிகளைப் போல், லேபர் கட்சியினரும் ஈராக் போர் பற்றிய விவாதத்தையோ அல்லது அடுத்து வரவுள்ள யுத்தங்களின் ஆபத்துப் பற்றியோ கலந்துரையாடுவதை தடுக்க அரசாங்கத்துடனும் ஊடகப் பிரச்சாரத்துடனும் சேர்ந்துகொள்வர். ஹோவர்ட் அரசாங்கத்துடனான லேபர் கட்சியின் உடன்பாடு, கொள்கையின் ஒவ்வொரு பகுதியிலும் படர்ந்துள்ளது. இது, ஆஸ்திரேலிய அரசியல் வாழ்வில் மேலாதிக்கம் செய்யும் இருகட்சி முறையின் அளவைக் கைப்பற்றத் தவறிய, அதை விவரிப்பதற்காக புதிதாகப் புனையப்பட்ட "கரடிப் பிடி அரசியல்" மற்றும் "நானும் சேர்ந்துகொள்வேன்" என்ற பதங்களை முழுமையாக சூழ்ந்துகொண்டுள்ளதாக உருவாகியுள்ளது. மில்லியன் கணக்கான சாதாரண மக்கள் முற்றிலும் வாக்குரிமை இழந்த நிலையிலேயே உள்ளனர். அரசாங்கக் கொள்கைக்கு லேபரின் ஆதரவு வெறும் தேர்தல் உத்தி மட்டும் அல்ல. இது கட்சியின் உண்மையான அரசியல் நோக்கமான "தடையற்ற சந்தை"யைத் தழுவிக்கொள்வதையும் சமூகச் சீர்திருத்தத்தின் எஞ்சியிருக்கும் சலுகைகளையும் அகற்றுவதையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. ருட்டின் பிரச்சாரமானது ஹாவ்க் மற்றும் கீட்டிங்கின் லேபர் அரசாங்கங்கள் 1980கள் மற்றும் 1990 களில் செய்தது போல், சமூக விளைவுகளில் அக்கறை காட்டாமல் லேபர் கட்சி முற்றிலும் பெரும் நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றும் என பெரும் நிறுவன தட்டினருக்கு உறுதியளிப்பதை இலக்காகக் கொண்டதாகும். தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், சாதாரண மக்கள் எதிர்கொண்டுள்ள அவசரப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்பட மாட்டாது. ஹோவர்ட் அரசாங்கத்தின் தோல்வி ஒன்றும் மிக முக்கியமான பிரச்சினை அல்ல என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. இராணுவவாதத்துக்கும் போருக்கும் எதிராகப் போராடவும் ஜனநாயக உரிமைகளை காத்து அதை விரிவாக்கவும் மற்றும் வறுமையை அகற்றவும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் அடிப்படையாகக் கொண்ட புதிய வெகுஜன அரசியல் இயக்கமொன்றை அபிவிருத்திசெய்ய வேண்டும். இராணுவவாதம் மற்றும் போரின் புதிய காலகட்டம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததில் இருந்து ஆறு ஆண்டுகளும் ஈராக்மீது படையெடுத்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளும் ஆகியுள்ள நிலையில், புஷ், ஹோவர்ட் மற்றும் பிளேயரும் கூறிய பொய்கள் அனைத்தும் அம்பலத்துக்கு வந்துவிட்டன. புஷ் நிர்வாகம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கோ "ஜனநாயகத்தை" ஸ்தாபிதம் செய்யவோ போர் தொடுக்கவில்லை. மாறாக மத்திய ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் உள்ள தீர்க்கமான எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவதற்கே படையெடுத்தது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ஈராக்கியர்கள் மடிந்துள்ளதோடு நான்கு மில்லியன் ஈராக்கியர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் அயல்நாட்டுத் துருப்புக்கள் உயிரிழந்துள்ளதோடு ஈராக்கியச் சமூகம் மோசமான வகையில் அழிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது வாஷிங்டன், முழு உலகத்திற்கும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய திறனுடன் அதன் கொள்ளையடிக்கும் ஆக்கிரமிப்பை ஈரானுக்கும் விரிவாக்க முயல்கிறது. ரஷியா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனி உட்பட ஒவ்வொரு பெரும் வல்லரசும் மீண்டும் ஆயுதபாணியாகின்றன. ஆஸ்திரேலியா தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஆதரவைப் பெற்றுக்கொள்வதன் பேரில், ஆப்கானிஸ்தானுக்கும் ஈராக்கிற்கும் படைகளை அனுப்புவதில் இணைந்துகொண்டது. கிழக்கு திமோர் மற்றும் சொலமன் தீவுகளில் கான்பெரா படைகளை அனுப்பி வைத்துள்ளமை மனிதாபிமான அக்கறைகளின் பேரில் அன்றி, மாறாக பசிபிக் பிராந்தியம் முழுவதும் சீனா மற்றும் பிற போட்டி வல்லரசுகளின் வளர்ச்சிகண்டுவரும் செல்வாக்கிற்கு எதிராக, ஆஸ்திரேலியப் பெருநிறுவன நலன்களையும் அமெரிக்காவின் நலன்களையும் காப்பதற்காகவேயாகும். இராணுவவாதத்தின் இத்தகைய வெடிப்பு, உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நெருக்கடியின் வெளிப்பாடேயாகும். ஆறு தசாப்தங்களுக்கு முன்பு, அமெரிக்கா இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து உலகின் முதலாளித்துவ அமைப்புக்கு போட்டியற்ற தலைமையாக தோன்றியது. இன்று அது அதன் நிரம்பிவழியும் பொருளாதார மேலாதிக்கத்தை இழந்துவிட்டது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பழைய போட்டியாளர்களிடமிருந்தும் அதே போல் ஆசியாவில் புதிய போட்டியாளர்களான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்தும், ஒவ்வொரு முனையிலும் சவால்களை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, தன்னுடைய மேலாதிக்கத்தைப் பேணிக்கொள்ள அதன் இராணுவ வல்லமையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. இந்த போட்டிகளும் மோதல்களும், மத்திய கிழக்கில் இருந்து மத்திய ஆசியா வரையும், அங்கிருந்து ஆப்பிரிக்கா, தென் பசிபிக், ஏன் ஆர்க்டிக் வரை கூட உலகில் ஒவ்வொரு மூலையிலும் பரந்துள்ளன. இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளுக்கும் இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளுக்கும் இடையே கவனத்தை ஈர்க்கும் ஒற்றுமை நிலவுகிறது. அப்பொழுது ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய பெரும் சக்திகளுக்கு இடையே இலாபம், மூலப் பொருள்கள் மற்றும் செல்வாக்கெல்லைகளைத் தேடும் நடவடிக்கையால் முடுக்கிவிடப்பட்ட மோதல்கள், இறுதியில் முதலாம் உலகப் போராக வெடித்ததுடன் பின்னர் இன்னும் கூடுதலான முறையில் இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்கும் வழிவகுத்தது. எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி அல்லது சக்தி வாய்ந்ததாயினும் சரி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலமோ அல்லது இன்னுமொரு முதலாளித்துவ ஆட்சியை பதிலீடு செய்வதன் மூலமோ போர் ஆபத்தை தவிர்க்க முடியாது. பிரச்சினையை அதன் தோற்றுவாயிலிலேயே தீர்ப்பதை இலக்காகக் கொண்ட ஒரு வேலைத் திட்டத்திற்கான போராட்டத்தின் ஊடாக தொழிலாளர் வர்க்கமே தலையீடு செய்ய வேண்டும். பூகோள முதலாளித்துவ அமைப்பும் மற்றும் அது உலகை போட்டியிடும் தேசிய அரசுகளாக பிரித்துவைத்திருப்பதுமே பிரச்சினைகளின் தோற்றுவாயாகும். இலாபமுறையின் ஆணைகளுக்கு இணங்க இல்லாமல், மனிதகுலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சமுதாயம் நியாயமான முறையிலும் அனைத்துலக மட்டத்திலும் மறு சீரமைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ தேசிய அரசு முறையால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அழிவுகரமான முரண்பாடுகளுக்கு முடிவுகட்டுவதற்கு ஒரே வழி, அனைத்துலக ரீதியில் திட்டமிடப்பட்டு ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தப்படும் ஒரு சோசலிசப் பொருளாதாரத்துக்கான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியத்தை ஸ்தாபிப்பதேயாகும். சோ.ச.க. வேட்பாளர்கள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஏனைய வெளிநாட்டு துருப்புக்களும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என கோருகின்றனர். வாஷிங்டன், லண்டன் மற்றும் கான்பராவிலும் உள்ள யுத்தத் தயாரிப்பாளர்கள் அனைவரும் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், ஆஸ்திரேலியா உட்பட இதில் பங்குபற்றிய அனைத்து சக்திகளும், போரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் சேதங்களுக்காக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இழப்பீடுகள் கொடுக்க வேண்டும் எனவும், அதே போல் கூட்டுப் படைகளில் கொல்லப்பட்ட மற்றும் காயமுற்ற படையினர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் எனவும் எமது பிரச்சாரம் கோரிக்கை விடுக்கின்றது. ஹோவர்ட் அரசாங்கம் இறுதியில் மக்கள் எதிர்ப்பின் பலத்தால், ஐந்து ஆண்டுகளாக குவன்டநாமோ குடாவில் சட்ட விரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய இளைஞரான டேவிட் ஹிக்ஸ் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டிருந்தாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் போது சர்வதேச சட்டங்களை மீறி கைதுசெய்யப்பட்டுள்ள, மற்றும் அமெரிக்காவால் உலகெங்கிலும் சிறைகளிலும் தடுப்புக் காவல் முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய நூற்றுக்கணக்கான கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என சோ.ச.க. கோருகிறது. சோ.ச.க., கிழக்கு திமோர் மற்றும் தெற்கு பசிபிக் நாடுகளில் இருந்து அனைத்து ஆஸ்திரேலிய இராணுவ மற்றும் போலீஸ் படையினரும் உடனடியாகத் திருப்பியழைக்கப்பட வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கு கெளரவமான வீடுகள் மற்றும் பள்ளிகள் மருத்துவமனைகள் உட்பட்ட சமூக உட்கட்டமைப்பு கட்டுமான வேலைகளுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்ள ஒதுக்கீடு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறது. நாம் ஒரு அனைத்துலக தொழிலாளர் வர்க்க ஐக்கியத்தின் அடிப்படையிலான ஒரு சோசலிச வெளியுறவுக் கொள்கைக்காக போராடுகின்றோம். இது ANZUS ஒப்பந்தத்தை இரத்துச் செய்தல், பைன் கெப் உட்பட ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவ வசதிகளையும் இழுத்து மூடுதல் மற்றும் ஆசிய-பசிபிக் பகுதியிலும் உள்நாட்டிலும் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து ஆஸ்திரேலிய உளவுத்துறை நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டுதலையும் உள்ளடக்கியதாகும். இதில் அனைத்து ஆஸ்திரேலிய இராணுவ இயந்திரத்தை அகற்றுதலும், ஆஸ்திரேலியா மற்றும் பிராந்தியம் பூராவும் மிகத் தேவையாக உள்ள உட்கட்டமைப்பை கட்டியெழுப்புவது உட்பட்ட சமூகத்திற்குப் பயனுள்ள தேவைகளுக்காக மாற்றி அமைப்பதும் உள்ளடங்கியுள்ளது. இராணுவத்தை மேன்மைப்படுத்துவதற்கான தற்போதைய பிரச்சாரத்தையும் கட்டாய இராணுவ சேவையை புதுப்பிப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் சோ.ச.க. கண்டிக்கிறது. படைக்கு ஆள்சேர்க்கும் இலக்கை அடைய முடியாதுள்ள அரசாங்கம், குறிப்பாக வேலையற்ற மற்றும் வட்டாரப்பகுதியில் நிரந்தர வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்கள் மீது பார்வையைத் திருப்பியுள்ளது -வாழ்க்கைத் தொழிலை வழங்கும் ஒரு வழிமுறையாக அவர்களை இராணுவச் சேவைகளுக்குள் ஈர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றது. ஜனநாயக உரிமைகள் மீது முன்னெப்போதுமில்லாத தாக்குதல் புஷ் நிர்வாகத்தைப் போலவே, ஹோவர்ட் அரசாங்கமும் ஜனநாயக உரிமைகள் மீது முன்னெப்போதுமில்லாத தாக்குதலை நடத்த "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற மோசடியை பயன்படுத்திக்கொள்கிறது. அதன் 40 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் மொத்த விளைவு, அரசாங்க அமைச்சர்களுக்கு பரந்த அளவில் ஒருதலைப்பட்ச அதிகாரங்களை வழங்குவதாகும். இதில் அடிப்படை சிவில் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை அகற்றுவதும் மற்றும் அரசியல் வேறுபாடுகளையும் சமூக அமைதியின்மையையும் நசுக்குவதன் பேரில் இராணுவத்தையும் துணைப்படைகளையும் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிப்பதும் அடங்கும். * ஒரு குறிப்பிட்ட பயங்கரவாதச் செயல் அல்லது சதித்திட்டத்திற்கான சாட்சியம் இல்லாமலேயே ஆயுள் தண்டனை அளிக்கப்படலாம். * "முன்கூட்டியே தடுத்துவைத்தல்" உட்பட விசாரணையின்றி தடுத்துவைப்பதற்கன நான்கு வெவ்வேறு முறைகளை அறிமுகப்படுத்தியதுடன், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆட்கொணர்தல் உரிமை ஓரங்கட்டப்பட்டுள்ளது. முடிவில் தோல்விகண்ட, சமீபத்தில் ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீசாலும் அரசாங்கத்தாலும் டாக்டர் மொகமட் ஹனீஃப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அச்சுறுத்தல் வேட்டை, கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இன்றி காலவரையற்று காவலில் வைப்பதற்கான ஒரு முன்னோடி நிகழ்வாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. * பேச்சு சுதந்திரமானது பயங்கரவாதத்துக்கு "பரிந்துரைத்தல்" என்ற குற்றச்சாட்டின் பேரில் நேரடியாகத் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது -இது பயங்கரவாதத்தின் வேர்களை அறிந்துகொள்ள வேண்டுகோள்விடுப்பதையும் குற்றமாக்கும். மற்றும், ஆஸ்திரேலியா ஏனைய நாடுகள் மீது இராணுவ ரீதியில் தலையீடு செய்வதை எதிர்ப்பதற்கு "ஆதரவளிக்குமாறு தூண்டுவதையும்" சட்டவிரோதமாக்குவதற்காக, அரச விரோத கிளர்ச்சிக்கு எதிரான சட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலமும் பேச்சு சுதந்திரம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.* இப்பொழுது அமைச்சரின் உத்தரவின் பேரில் அரசியல் குழுக்களை தடைசெய்ய முடியும். * பகிரங்க விசாரணைக்கான உரிமையும் கடுமையாக அழிவுற்றுள்ளது. பயங்கரவாதி என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு எதிராக, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு அளிக்கப்படும் இரகசிய சாட்சியம் பற்றி அறிந்துகொள்ள எவ்விதத்திலும் வாய்ப்பின்றி, மூடிய கதவுகளுக்குப் பின்னால் குற்றத்தீர்ப்புகள் வழங்கப்பட முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, "பயங்கரவாதம்" என்பது மிகப் பரந்தளவில் வரையறுக்கப்பட்டு வருவதால், இப்போது பல விதமான அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளும் கூட பயங்கரவாதத்துக்குள் உள்ளடக்கப்பட முடியும். அனைத்து கூட்டாட்சி மற்றும் மாநில "பயங்கரவாத எதிர்ப்பு" சட்டங்களும் அகற்றப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. ஆசிய பசுபிக் பொருளாதார உச்சிமாநாட்டின் போது, எதிர்ப்பு ஆப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சிட்னியில் மேற்கொள்ளப்பட்ட அசாதாரணமான போலீஸ் மற்றும் இராணுவக் குவிப்பில் நன்கு வெளிப்படுத்தப்பட்டவாறு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் உண்மையான இலக்கு சாதாரண மக்களே அன்றி, பயங்கரவாதிகள் அல்ல என்பதை சோ.ச.க. வலியுறுத்துகிறது. அதையடுத்து மூன்று வாரங்களுக்குள், வேலை நீக்கம் செய்யப்பட்ட ட்ரக் சாரதிகள், சிட்னியில் செவன் ஹில்ஸில் உள்ள தங்கள் முதலாளிகளுக்கு எதிராக போராடிய போது, டசின் கணக்கான போலீஸ் மற்றும் நாய்கள் படைப் பிரிவு அதிகாரிகளும் அவர்களைத் தாக்கினர். ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் பின்னணியில், சாதாரண மக்களில் பெரும்பாலானவர்களின் சமூக நிலைமைக்கும் உயர் மட்டத்தில் இருக்கும் செல்வந்தத் தட்டினருக்கும் இடையிலான வளர்ச்சி கண்டுவரும் ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டுள்ளது. ஆழமடைந்துவரும் சமூக சமத்துவின்மை மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத இராணுவ நடவடிக்கைகளினால் பெருகும் சமூக பதட்டநிலைமைகளை, ஜனநாயக வழிவகையினால் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. சர்வாதிகார வடிவிலான ஆட்சியை ஸ்தாபிப்பதன் பின்னணியிலும் பொலிஸ் அரசாங்கமொன்றுக்கு முண்டுகொடுப்பதன் பின்னணியிலும் உள்ள உந்துதல் இதுவேயாகும். ஆழமடைந்துவரும் சமூக பதட்ட நிலைமைகளும் பிரதான கட்சிகளில் இருந்து அந்நியப்படுதலும் அரசாங்கத்தின் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள உந்துதல்களாகும். சிறு கட்சிகள் தேர்தல்களில் தங்கள் கட்சிப் பெயர்களில் வேட்பாளர்களை நிறுத்தி, அதன் மூலம் இருகட்சி முறையை சவால் செய்வதை தடுக்கும் இலக்குடன் இத்தகைய கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை லேபர் மற்றும் பசுமைவாதிகள் ஆதரிக்கின்றனர். புதிய சட்டங்கள், கைதிகளுக்கு வாக்களிக்க உள்ள உரிமையை கிழித்தெறிவதோடு தேர்தலுக்கான அழைப்பாணை பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் வாக்காளர் பதிவுக்குறிப்பேடுகள் கட்டாயமாக மூடப்படுவதற்கும் அதிகாரமளிக்கின்றன. இந்த நடவடிக்கை மட்டும் முதல் தடவை வாக்களிக்க இருக்கும் பல நூறாயிரக்கணக்கான இளைஞர்களுடைய வாக்குரிமையைப் பாதிக்கும். அனைத்து ஜனநாயக விரோத தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என சோசலிச் சமத்துவக் கட்சி கோருவதுடன் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் பெயரில் வேட்பாளர்களை நிறுத்த தடையற்ற உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. அதே சமயம் கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு உரிமைகளையும் காப்பதற்காக போராடுகையில், அரசியல் கட்டமைப்பையே அடிப்படையில் மறுசீரமைப்பதில் தொடங்கி, ஜனநாயக உரிமைகளை பரந்தளவில் விரிவாக்கம் செய்வதை சோ.ச.க. பரிந்துரைக்கின்றது. பிரதான கட்சிகளை தூக்கி நிறுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விருப்பு வாக்களிக்கும் முறை அகற்றப்பட்டு, சமவிகிதாசார பிரதிநிதித்துவ முறையால் பிரதியீடு செய்யப்பட வேண்டும். இந்த முறையின் கீழ் அனைத்துக் கட்சிகளும் கணிசமான பங்கு வாக்குகளைப் பெற்று, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரிதிநிதித்துவம் செய்ய முடியும். அனைத்து வேட்பாளர்களுக்கும் மின்னியல் மற்றும் அச்சு ஊடகங்களை பயன்படுத்தும் உரிமையும் மற்றும் அனைத்துத் தேர்தல் விவாதங்களிலும் பங்கு பெறும் உரிமையையும் வழங்கப்பட வேண்டுமென சோ.ச.க. வலியுறுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சி அனைவருக்கும் சம உரிமையை கோருவதோடு தேசியம், இனப் பின்னணி, மதம், பால் அல்லது ஏனைய பாகுபாடுகள் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மகளிருக்கு தடையற்ற முறையில் விரும்பினால் கருச்சிதைவு செய்துகொள்ளும் உரிமையை நாம் பாதுகாப்பதோடு ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ளவும் மணம் முடித்த ஏனைய தம்பதிகளைப் போன்று அதே உரிமைகளையும் நலன்களையும் பெறுவதையும் ஆதரிக்கிறோம். நாம் சகல இடங்களிலும் மரண தண்டனையை எதிர்க்கின்றோம். தடுப்புக்காவல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து விதமான குடியேற்றக் கட்டுப்பாடுகளும், தடைகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் நாம் கோருகிறோம். தொழிலாளர்கள் தாம் விரும்பும் எந்த இடத்திலும் வசிக்கவும் உழைக்கவும் உரிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு முழு குடியுரிமையும் சமூக நலன்கள் முழுவதையும் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையும் உறுதிசெய்யப்பட வேண்டும். சோ.ச.க. வடக்குப் பிராந்தியத்தில் அரசாங்கத்தின் போலீஸ்-இராணுவத் தலையீட்டை, பூர்விகக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அரக்கத்தனமான தாக்குதல் என கண்டனம் செய்கிறது. இந்தத் தலையீடு 1975 இனப் பாகுபாடு சட்டத்தை ஒதுக்கி வைப்பதன் ஊடாக நடைபெறுகிறது. இதன் நோக்கம் பூர்விகக் குடிமக்களின் குழந்தைகளின் நலன் காப்பது அல்ல. மாறாக இலாபம் பெறக்கூடிய நிலத்தில் இருந்து சமூகங்களை அகற்றி, முழுத் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களையும் வெட்டிச் சரிப்பதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாகும். வடக்குப் பிராந்தியத்தில் இருந்து அனைத்து இராணுவப் படைகளும் திருப்பியழைக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம். அரச அடக்குமுறை மற்றும் பலாத்காரத்தில் இருந்து விடுபட்டு, தங்கள் சொந்த வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஜனநாயக உரிமை பூர்விகக் குடிமக்களுக்கு இருக்க வேண்டும். அடிப்படைப் பிரச்சினை "சமரசம்" அல்லது அரசியலமைப்பில் "அங்கீகாரம்" அல்ல. மாறாக, பூர்விகக் குடிமக்களுக்கு எதிரான இழிந்த குற்றங்களுக்குப் பொறுப்பான சமூகப் பொருளாதார அமைப்பிற்கு, குறிப்பாக பூகோள முதலாளித்துவ இலாப அமைப்பிற்கு, எதிரான போராட்டத்தில் பூர்விகக் குடிகள் மற்றும் பூர்விகக் குடிமக்கள் அல்லாதவர்கள் உள்ளடங்களாக முழுத் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியமே அத்தியாவசியமானதாகும். பூகோள பொருளாதாரத்தில் ஆழமடைந்துவரும் நெருக்கடி போருக்கு வழிவகை செய்யும் முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகளான, உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசுக்கும் இடையேயான முரண்பாடும், சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்திமுறைக்கும் தனியார் சொத்துடைமைக்கும் இடையேயான முரண்பாடும், 1930 களுக்குப் பின் விழுந்த பெரும் அடியான உலகப் பொருளாதார நெருக்கடியில் வெளிப்பட்டன. அமெரிக்க உப-முதன்மை அடைமானச் சந்தையின் சரிவானது உலக நிதி அமைப்பு எந்த அளவிற்கு ஊகம் மற்றும் அப்பட்டமான ஒட்டுண்ணித்தனத்தில் தங்கியிருக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தச் சரிவினால் 2007 செப்டம்பரில் மட்டும் 220,000 அமெரிக்கக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதோடு, இன்னும் 2 மில்லியன் பேர் வீடுகளை இழக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதே போல் பிரிட்டனில் ஒரு தோல்வியுற்ற வங்கிக்கு முன்னால் சாதாரண மக்கள் வரிசையில் நிற்கும் காட்சி, இந்த முழு கட்டமைப்பினதும் நிச்சயமற்றத் தன்மையை சுட்டிக் காட்டுகிறது. ஆகக் கூடிய தொகைக்கு கடன்களை உருவாக்குவதும் பெருகிய முறையில் சிக்கல் வாய்ந்த நிதிய ஆவணங்களைப் பயன்படுத்துவதும், மத்திய வங்கிகளே தாங்கள் கட்டுப்படுத்துவது ஒரு புறம் இருக்க, இந்த முறையை முழுமையாக புரிந்து கொள்ளக் கூட முடியவில்லை என வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பரந்த பூகோள முன்னெடுப்புகள் ஹோவர்டின் கூற்றுக்களை கேலிக்கூத்தாக்குகின்றது. தனது அரசாங்கம் ஆஸ்திரேலியாவின் "பத்தாண்டு பொருளாதார உயர்ச்சிக்கும்" "முன்னெப்போதும் இல்லத செழிப்பிற்கும்" இட்டுச் சென்றுள்ளது என அவர் கூறிக்கொள்கின்றார். சமீபத்திய பொருளாதார வளர்ச்சி, சீனாவிற்கு மூலப் பொருட்களை விற்பதை விரிவுபடுத்துதல் மற்றும் கடன் மட்டத்தை துரிதமாக வளர்ச்சியடையச் செய்வதன் மூலம் நிதியளிக்கப்படும் உள்நாட்டுச் செலவினங்களை அதிகரித்தல், ஆகிய மிகவும் உறுதியற்ற இரு அத்திவாரங்களில் தங்கியிருக்கின்றது. குறிப்பிடத்தக்க மந்தநிலை ஒருபுறம் இருக்க, ஒரு சிறிய சரிவு ஏற்பட்டாலும் கூட அது சமூகப் பேரழிவை பெறுபேறாக்கும். இங்கும், உலகின் மற்றப் பகுதிகளில் உள்ளதைப் போலவே, செல்வத்தை உருவாக்குபவர்களான உழைக்கும் மக்களின் ஜீவனோபாயமும் சமூக நிலைமையும், ஏறத்தாள ஒரே இரவில் மற்றமடையக் கூடிய குழப்பமான பூகோள சந்தையின் தயவில் உள்ளன. அதேசமயம், தொழில்நுட்பத்திலும் உழைப்பின் உற்பத்தித் திறனிலும் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான முன்னேற்றங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்கள் சுகாதாரமாகவும் வசதியுடன் வாழ்வதற்கான சாத்தியத்தைத் தோற்றுவித்துள்ளது. உற்பத்தியின் பூகோளமயமாக்கம் உலகப் பொருளாதாரத்தை ஒரு பங்கீட்டின் அடிப்படையில் திட்டமிட்டு ஒழுங்கமைப்பதற்கான நிலைமைகளை ஸ்தாபித்துள்ளது. ஆனால் இதற்கு, உற்பத்திச் சக்திகள் பெருநிறுவன இலாபத்தின் கட்டளைகளுக்கு கீழ்ப்படுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதும், அதற்குப் பதிலாக உற்பத்திச் சக்திகளை முழு மனித குலத்தினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்துவதும் அவசியமாகும். சமூகத் துருவப்படுத்தல் உலகம் முழுவதும் வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையேயான பிளவு அதிகரிக்கின்றது. அமெரிக்காவில் சமீபத்திய புள்ளிவிவரங்கள், 2005ம் ஆண்டில் அதிசெல்வந்த அமெரிக்கர்களில் 1 சதவிகிதத்தினர், முழு வருமானங்களிலும் 21.2 சதவிகிதம் என்ற இதுவரையும் ஆகக்கூடிய தொகையான அதிர்ச்சிதரும் வருமானத்தை ஈட்டுகின்றனர், எனக் கூறுகின்றன. ஆய்வின் மறுபக்கத்தின்படி, கிழ் மட்டத்தில் உள்ள 50 சதவிகிதத்தினர், முழு வருமானத்திலும் 12.8 சதவிகிதத்தைத்தான் ஈட்டுகின்றனர். வேறுவிதமாகக் கூறினால், 3 மில்லியன் அதி செல்வந்தர்களின் வருமானம், கிட்டத்தட்ட மிகவும் வறிய 150 மில்லியன் மக்களின் வருமானத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும். ஆஸ்திரேலியா, முன்னேறிய முதலாளித்துவ சமுதாயங்களில் ஆகக்கூடிய சமத்துவமற்ற சமுதாயங்களில் ஒன்றாக விரைவில் மாறிவருகிறது. இழிந்த முறையில் செல்வச் செருக்கில் திளைக்கும் ஒரு நிதி பிரபுத்துவம், அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் செல்வாக்குச் செலுத்திவரும் அதே வேளை, மில்லியன் கணக்கான சாதாரண உழைக்கும் மக்கள், பல தசாப்தங்களாக தொழில் நிலைமை மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல்களை அனுபவித்தவர்கள் விளைபயனுள்ள விதத்தில் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். ஒரு புதிய, பரந்த பிரிவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது: அதுதான் உழைக்கும் வறியவர்கள் பிரிவு. பிசினஸ் ரிவிவ் வீக்லி (Business Review Wekly) நடத்திய ஆய்வின்படி, அதி செல்வந்த 200 தனிநபர்கள் மொத்தத்தில் 128 பில்லியன் டொலர் செல்வத்தைக் கொண்டுள்னர். இது கடந்த ஆண்டை விட 26.7 சதவிகித அசாதாரணமான அதிகரிப்பும், ஆய்வின் வரலாற்றிலேயே கண்ட ஆகக் கூடிய அதிகரிப்புமாகும். தராசின் மறுபகுதியில், 3.5 மில்லினுக்கும் அதிகமானவர்கள் வாரத்திற்கு 400 டொலரிலும் குறைவான மொத்த வருமானம் உடைய குடும்பத் தலைவர்களாவர். மற்றும் கிட்டத்தட்ட 4.1 மில்லியன் மக்கள், அதாவது மொத்த ஜனத்தொகையில் 22.6 சதவிகிதத்தினர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இந்தப் புள்ளிவிவரங்கள் "பொருளாதார செழிப்பு" என்ற உத்தியோகபூர்வக் கட்டுக் கதையையும், "ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் குடும்பங்கள் இதுவரை இவ்வளவு செழிப்புடன் இருந்ததில்லை" என்ற ஹோவர்டின் வியப்பான கூற்றையும் தவிடுபொடியாக்கியுள்ளன. அதி செல்வந்த 20 சதவிகித்தினர் மொத்த செல்வத்தில் 67 சதவிகிதத்தின் உரிமையாளர்களாக இருக்கும் அதே வேளை, ரிசர்வ் வங்கியின் படி, மிக வறிய 20 சதவிகித்தினர் மொத்த செல்வத்தில் 0.2 சதவிகிதத்துக்கே உரிமையாளர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக மருத்துவமனை, மருந்து மற்றும் பல் பாதுகாப்புச் செலவினங்கள், எரிபொருள், உணவு, வீடுகள், குழந்தைகள் பராமரிப்பு ஆகிய அன்றாட வாழ்வின் செலவினங்கள் உயர்ந்துள்ளன. சிட்னி, மெல்பேர்ன் உட்பட பல முக்கிய நகர்ப்புற மையங்கள், குறைந்த வேலைவாய்ப்பு வீதம் மற்றும் வாடகை அதிகரிப்புக்கு மத்தியில் "வாடகை நெருக்கடியை" எதிர்கொண்டுள்ளன. சமீபத்தில் தொடர்ச்சியாக அதிகரித்த வட்டி விகிதம், தங்கள் அடைமானத் தவணைகளைக் கொடுப்பதில் பெரும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தொகையான உழைக்கும் மக்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. வீட்டு உரிமையை மீண்டும் தன்வசப்படுத்திக்கொளும் பிரச்சினை ராக்கட் வேகத்தில் உயர்கின்றது. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களில் துன்பத்தைத் திணித்துவிட்டுள்ளது. சிட்னியின் தொழிலாளர் வர்க்க மேற்கு புறநகர்களான லிவர்பூல் மற்றும் ஃபெயார்பீல்ட் ஆகியவற்றில், உதாரணத்திற்கு 200 வீடுகளில் ஒன்று 2006ல் நீதிமன்ற உத்தரவுப்படி காலி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 2007க்கான புள்ளிவிவரங்கள் இன்னும் மோசமானதாக இருக்கும். உயர் மட்ட தனிப்பட்ட கடன் மட்டத்தாலும் தொழில் ஸ்திரமின்மையாலும் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார, வேலை பாதுகாப்பின்மை, மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வில் தாங்கமுடியாத மிதமிஞ்சிய உழைப்பையும் பதட்டங்களையும் தோற்றுவித்துள்ளது. தொழில் ஸ்திரமின்மையானது இப்பொழுது மொத்தத் தொழிலாளர் படையில் 28 சதவிகிதமாக அல்லது 2.3 மில்லியனாக உள்ளது. மறு புறம் இந்த நிலைமை, சாதனை மட்டத்திற்கு, குடும்ப முறிவு, மனவியாதிகள், குடி, போதை மாத்திரைகள் பழக்கம் உட்பட பலவிதமான பத்தாயிரக்கணக்கான சமூகப் பிரச்சினைகளின் வெடிப்புக்கு வழிவகுத்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச வேலைத் திட்டம் ஆஸ்திரேலிய மற்றும் உலகப் பொருளாதாரம் பெரும்பான்மையான மக்களுடைய நலன்களுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்படுவதற்கான வேலைத் திட்டத்தை சோ.ச.க. முன்வைக்கிறது. பெரும் கைத்தொழில்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் தனியார் உரிமையிலும் அவர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ள, தற்போதைய அமைப்பிற்குப் பதிலாக, நாம் ஒரு சோசலிச முறையிலான பொது உடைமையையும் மற்றும் சமூகத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் மீது முழு ஜனநாயகக் கட்டுப்பாட்டையும் உருவாக்குவதைப் பரிந்துரைக்கின்றோம். தனியார் இலாபம் இன்றி, சமூகத் தேவையே உற்பத்தியினதும் சமூக வாழ்க்கையின் அனைத்து கூறுபாடுகளதும் ஒழுங்கமைப்புக் கொள்கையாகும் போது மட்டுமே, இப்பொழுது உள்ள அசாதாரணமான மனித, தொழில்நுட்ப வளங்களை சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் பாதுகாப்பான சுற்றுச் சூழலுக்காகப் பயன்படுத்த முடியும். * அனைத்து பெரிய தனியார் கைத்தொழில்கள், சுரங்கங்கள், சேவைகள், மருந்தக நிறுவனங்கள் மற்றும் வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் மயமாக்கப்பட்டுள்ள வசதிகள் அனைத்தும் பொது உடைமையாக்கப்பட்டு, சிறு பங்குதாரர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்பட வேண்டும் என சோ.ச.க. பரிந்துரை செய்கின்றது. அனைத்து பொது-தனியார் இணைப்பு ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட வேண்டும். இராட்சத பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் பாதிகப்பட்டுள்ள, சிறிய அல்லது நடுத்தர வணிகங்கள், குடும்பங்களின் பண்ணைகள் ஆகியவை அகற்றப்பட வேண்டும் என சோ.ச.க. யின் வேலைத் திட்டம் கூறவில்லை. திட்டமிடப்பட்ட ஒரு பொருளாதாரத்தின் கீழ், இத்தகைய நிறுவனங்கள் அவை கெளரவமான ஊதியங்கள் மற்றும் தொழில் நிலைமைகளை ஊழியர்களுக்கு வழங்கிவரும் வரை அவற்றுக்கு மலிவான கடன் பெறும் வசதியும் உறுதியான பொருளாதார நிலைமைகளும் தயாராக இருக்கும். * நல்ல ஊதியம் மற்றும் பாதுகாப்பான, உத்தரவாதமான வேலைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பிரமாண்டமான பொதுத் தொழில்களுக்கான திட்டத்திற்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கிறது. தற்போதைய குறைந்த உத்தியோகபூர்வ வேலையின்மை வீதம் பற்றிய தகவல் ஒரு மோசடியாகும். மூடிமறைக்கப்பட்டுள்ள வேலையின்மை வீதம் மற்றும் மிகவும் குறைவான ஊதியம் பெறுவோரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் உண்மையான விகிதம் 12 சதவிகிதத்திற்கும் அதிகமானது ஆகும். தொழிலாளர் படையில் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தினர் தற்காலிகத் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு குறிப்பிட்ட வேலை நேரங்கள், வேலைப்பாதுகாப்பு அல்லது லீவு அல்லது விடுமுறையோ கிடையாது. வேர்க் சொயிசஸ் (Work Choices) என்பது அபராத விகிதங்களையும் ஊதியங்களை அழிப்பதுடன் முதலாளிகள் விருப்பப்படி பணி நியமனம் செய்யவும் நீக்கம் செய்யவும் அனுமதிக்கிறது. ஊதிய இழப்பின்றி, உத்தரவாதப்படுத்தப்பட்ட அபராத விகிதங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு ஐந்து வாரம் விடுமுறையுடன், வேலை வாரம் 30 மணி நேரமாக குறைக்கப்பட வேண்டும் என நாம் பரிந்துரை செய்கின்றோம். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒரு தொழிற்சங்கத்தில் சேரும் உரிமை இருக்க வேண்டும். நியாயமற்ற பணி நீக்க சட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கும் மறியல் போராட்டங்களுக்கும் எதிரான சட்டங்கள் அகற்றப்பட வேண்டும். * ஒரு முழுமையான நிதியைப் பெறும், உயர்தர பொதுப் பள்ளி முறை, பல்கலைக்கழகம் மற்றும் TAFE கல்வி முறை நிறுவப்பட வேண்டும் என சோ.ச.க. கோருகிறது. ஒவ்வொரு மட்டத்திலும் பொதுக் கல்வி ஒரு இரட்டை வகுப்பு முறையாக மாற்றப்பட்டுள்ளது. நீண்ட காலமாக குறைந்த நிதியில், குறைவான பணியாளர்களுடன், எல்லா மட்டங்களிலும் குறைவான வளங்களைக் கொண்ட பொதுப் பள்ளிகளை வைத்திருப்பதன் மூலம், அரசாங்கம் மெதுவாக தனியார் மயத்தை தினித்துக்கொண்டிருப்பதுடன், குடும்பங்களை தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப நெருக்கி வருகின்றது. இந்த தனியார் பாடசாலைகள் பல அரசாங்க நிதிகளைத் தாராளமாகப் பெறுகின்றன. பல்கலைக்கழக அமைப்பு கூட்டுத்தாபனமயமாக்கப்பட்டு வருகின்றதுடன், பெரும் வர்த்தகர்களின் அனுசரணையில் மேலும் மேலும் தங்கியிருப்பதோடு மாணவர்கள் முழுக் கட்டணத்தையும் செலுத்தத் தள்ளப்பட்டுள்ளனர். இலவசமான, தரமான பொதுக் கல்வி முறைக்கும், சிறார் பாதுகாப்பு மற்றும் மழலையர் பள்ளிகளுக்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட வேண்டும் என சோ.ச.க. கோருகிறது. ஒவ்வொரு மாணவரும் தமது திறனையும் இயலுமையையும் முழுமையாக வளர்த்துக்கொள்ள வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். தானே விரும்பி மாணவர்கள் தொண்டர் மாணவர் சங்கம் அமைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். எல்லா மாணவர்களும் தடையற்ற முறையில் மூன்றாம் நிலை கல்வியைப்பெற வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம். இத்துடன் முழுமையான பண்பாட்டு, புத்திஜீவி நடவடிக்கைகள், புதிய கண்டுபிடிப்புகள், விளையாட்டுக்கள் ஆகியவையும் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு இன்றியமையாதவையாகும்.* இளைஞர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு விரிவான திட்டத்தை சோ.ச.க. முன்வைக்கிறது. இளைஞர்களிடையே வேலையின்மையும், குறைந்த வேலை நிலையும் உத்தியோகபூர்வமாகக் காட்டப்பட்டுள்ள விகிதத்தைப் போல் இரு மடங்கு அதிகமாகும். சில பகுதிகளில் 30 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் மொத்த வருமானத்தை தொழில் செய்து பெற்றுக்கொள்கின்றனர். இதனால் அவர்கள் தமது மற்ற நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தங்கள் படிப்பிலேயே கவனம் செலுத்த முடிவதில்லை. இளம் தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் செய்யப்பட்ட நல்ல சம்பளத்துடனான முழுநேர வேலையும், 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முழு சம்பளத்துடன் குறைந்த நேர வேலை வழங்குவதன் மூலம், அவர்கள் புதிய உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும். தொழிற் பயிற்சிக் காலம் பரந்தளவில் விரிவாக்கப்படுவதோடு விரும்புவோருக்கு இலவச உயர் கல்வியை முன்னெடுக்க வகை செய்ய வேண்டும். வெளிநாட்டு மாணவர்களுக்கும் இது பொருந்தும். கிட்டத்தட்ட 18 பில்லியன் டொலர்களாக இருக்கும் HECS கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மூன்றாம் நிலை மாணவர்கள் தானாகவே வாழ்வூதியத்தைப் பெற வகை செய்ய வேண்டும். * ஊழியர்கள் விரிவாக்கம், பயிற்சி, தொழில்நுட்பம், கருவிகள் ஆகியவற்றுக்காக பொது சுகாதாரத் திட்டத்திற்கு பில்லியன் கணக்கான நிதி அளிக்கப்பட வேண்டும் என்று சோ.ச.க. கோருகிறது. பொதுக் கல்வியைப் போன்றே, அரசாங்கத்தின் சுகாதார நிகழ்ச்சித் திட்டமும் தனியார்மயமாக்கத்தையும் "பணம் கொடுத்துப் பயன்பெறுவதையும்" உள்ளடக்கிக் கொண்டுள்ளது. பொதுச் சுகாதாரம் போதிய நிதியின்றி வாடுவதுடன், பெருநிறுவனத்தின் நலன்களுக்காக திறந்துவிடப் படுகிறது. பொது மருத்துவ மனைகள் ஒரு தேசிய அவமானச் சின்னம் ஆகும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் $3.2 பில்லியன் அரசாங்க நிதி தனியார் சுகாதாரக் காப்பு நிதி உதவித் தொகைக்கு கொடுக்கப்படுகிறது. மிக உயர்ந்த தரத்திலான மருத்துவ முறையை சோ.ச.க. வலியறுத்துகிறது. இது அனைவருக்கும் இலவசமாக உரிய நேரத்தில் நிதிவழங்கப்பட்டு, அனைத்து நோய்களுக்கும் முதல் தரத்தில் வழங்கப்பட வேண்டும். தங்குமிடம், பொது பல் மருத்துவ மனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் உட்பட பொது மனநல வைத்தியசாலை வசதிகளுக்கும் பெருமளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். * பூர்விகக் குடிமக்கள், குடியேறியவர்கள் மற்றும் அகதிகள், வேலையற்றவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்க்கைக்குரிய ஊதியம் மற்றும் கெளரவமான வாழ்க்கை நிலைமைகளைப் பெறும் உரிமையும் உண்டு என சோ.ச.க. வலியுறுத்துகிறது. வேலையற்றவர்கள், கனவனை அல்லது மனைவியை இழந்தப் பெற்றோர் மற்றும் ஊனமுற்றவர்களை மலிவு ஊதியத் தொழிலாளர்களாகச் சுரண்டுவதும் சமூகநல உதவித் தொகைகளை குறைத்தல் அல்லது "நிறுத்தி வைப்பதும்" முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். கெளரவமான, நல்ல ஊதியத்துடனான தொழில்கள் மற்றும் பயிற்சியும் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும். தொழிலுக்காக உணவு பணம் முதலியவற்றை சிறு பகுதிகளாக பங்கிட்டுக் கொடுக்கும் அனைத்து திட்டங்களும் தூக்கியெறியப்பட வேண்டும் எனவும் வாழ்க்கைக்கான ஊதியத்துடன் சமுகப் பாதுகாப்பும் நலன்புரி சேவைகளும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் நாம் கோருகின்றோம். எவருக்கேனும் மின்சாரம், எரிவாயு, தண்ணீர் அல்லது தொலைபேசி சேவைகளை துண்டிப்பது சட்டவிரோதமாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தரமான மற்றும் செலவைத் தாங்கக் கூடியவாறு வீடுகளை வழங்க ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியங்களிலும் புதிய, உயர்தர பொது வீட்டுத் திட்டங்கள் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அடைமானத் தவணைகளும் வாடகைகளும் குடும்பத்தவரின் வருமானத்தில் 20 சதவிகிதத்தைத் தாண்டாமல் வரையறுக்கப்பட வேண்டும். வீட்டைவிட்டு வெளியேற்றுவதும் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தமுடியாமல் போகும் நிலையில் வீடுகளைத் திரும்பப் பெறுவதும் சட்டவிரோதமானதாக்கப்பட வேண்டும். குழந்தைகள் பராமரிப்புக்கும் அதே போல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்புக்கும் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட வேண்டும் என நாம் பரிந்துரைக்கின்றோம். அவர்கள் கெளரவமான வாழ்க்கையை அனுபவிப்பதற்காக போக்குவரத்து, சுகாதார வசதிகள், தங்குமிடம் மற்றும் புதுப்பிப்பு நடவடிக்கைகள் உட்பட சமூகத்தின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. பராமரிப்பு நிலையங்களில் சேவையாற்றுபவர்களுக்கு வாழ்க்கைக்குப் போதுமான ஊதியம் வழங்கப்படுவதோடு முதல்தரமான, தேவையானளவு சேவையாளர்களைக் கொண்ட செவிலியர் பாதுகாப்பு இல்லங்களும் பராமரிப்பு நிலையங்களும் தேவையானவர்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும். * கலை மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு பரந்தளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என சோ.ச.க. கூறுகிறது. கூட்டுத்தாபன நலன்களால் மக்கள் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு தரம் குறைக்கப்பட்டுள்ளதோடு, தேசியவாதம், தனிநபர்வாதம், பேராசை போன்ற விஷத்தனமான சூழ்நிலை முன்நிலைக்கு வந்துள்ளது. இதேபோல், புதிய கண்டுபிடிப்புக்கள் மீது வெளிப்படையான தாக்குதலுடன் விஞ்ஞானத்தின் மீது இலாப நோக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது. சுத்நதிரமான கருத்துப் பரிமாற்றம் மற்றும் ஆய்வுகளின் மூலம் முடிவு காணுவதும் சாத்தியமற்றதாக்கப்பட்டுள்ளன. புதிய கலைக் கல்லூரிகளை உருவாக்குவதுடன், இசை, நடனம், நாடகம், கலை மற்றும் இலக்கியமும் கிடைக்கக்கூடிய விதத்தில் மற்றும் ஜனத்தொகையில் ஒவ்வொரு பகுதியினருக்கும் அதை அனுபவிப்பதற்கான செலவைத் தாங்கக்கூடியவாறும் பிரமாண்டமான கலாச்சார மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என சோ.ச.க. கோருகின்றது. பரம்பரை உயிரணு ஆராய்ச்சி உட்பட, வாழ்க்கையின் தரத்தை உயர்த்தக் கூடியவாறு ஒவ்வொரு பகுதியிலும் கட்டுப்பாடற்ற மற்றும் கூட்டுழைப்புடனான ஆராய்ச்சிகளுக்கு வளங்கள் கிடைக்க வகைசெய்யப்பட வேண்டும். * பூகோளம் வெப்பமடைதல் மற்றும் சூழல் பேரழிவைத் தடுக்கப் போராடுவதற்கு சர்வதேச ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமொன்றை சோ.ச.க. பரிந்துரைக்கின்றது. மனிதச் செயற்பாடுகள் அனைத்தும் இலாப நோக்கத்திற்காக கீழ்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் தனியார் சொத்துக் குவிப்பு சூழல் பேரழிவைக் கட்டவிழ்த்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் நெருக்கடி, காடுகள் அழிக்கப்படுதல் மற்றும் காலநிலை மாற்றம் உட்பட, குவிந்துவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் எதுவும் முதலாளித்துவ அமைப்பு வரம்புக்குள் தீர்க்கப்பட முடியாததாகும். கார்பன் வெளியேற்றப்படுவதைக் குறைப்பது என்பது, உலப் பொருளாதாரத்தை முற்றிலும் மறுசீரமைப்பதில் இருந்து எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. இதற்கு பிரதானமாக சூழலை மாசுபடுத்துபவர்களிடம் இருந்து உற்பத்தியை அகற்றி, அதை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் இருத்துவது அவசியமாகும். * சோ.ச.க. உண்மையான பேச்சு சுதந்திரத்தை கோருவதுடன் அரசியல், அறிவாற்றல் சார்ந்த விடயங்கள் மற்றும் கலைத்துறை மீதான தணிக்கைக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் கோருகிறது. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது பேச்சு சுதந்திரத்தை அச்சுறுத்தி மற்றும் குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒருசில பத்திரிகை தொழிலதிபர்களாலும் மற்றும் இராட்சத கூட்டுத்தாபனங்களாலும் மேலும் மேலும் ஆதிக்கம் செலுத்தப்படும் வெகுஜன ஊடகங்கள், ஏறத்தாழ அரசாங்கத்தினதும் பெருநிறுவனங்களதும் பிரச்சாரக் கருவிகளாகச் செயல்படுகின்றன. இந்த ஊடக ஏகபோக உரிமை முறிக்கப்பட்டு, அவை எதிர்த்துக் கருத்துக் கூறும் உரிமைக்கான உத்தரவாதத்துடன் பொது உரிமை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருத்தப்பட வேண்டும் என சோ.ச.க. பரிந்துரைக்கின்றது. தகவல் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்கான வசதி உண்மையான ஜனநாயகத்திற்குத் தீர்க்கமானதாகும். அதி வேகமுடைய அலைவரிசை நாட்டின் ஒவ்வொரு இல்லத்திற்கும் கிடைக்கப்பெற வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தை ஒரு சிலரின் கரங்களில் குவிந்திருக்கும் தனியார் சொத்தின் பரந்த இருப்புக்களினுள் நுழைந்து பார்க்காமல் புரிந்துகொள்ள முடியாது. ஒரு ஆரம்ப நடவடிக்கையாக, நாங்கள் உண்மையான முன்னேற்றகரமான வரி முறையை பிரேரிக்கின்றோம். வரி செலுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள அனுமதிக்கும் வரிமுறையில் உள்ள பல்வேறு ஓட்டைகள் மற்றும் கணக்கு வித்தைகளை இறுக்கி மூடுவது உட்பட, அதி செல்வந்தர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் மீதான வரிகளை அதிகரிக்கும் அதேவேளை, தொழிலாளர் மற்றும் மத்திய தர குடும்பங்கள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்தல் வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள் தேவையான முதல்கட்ட நடவடிக்கைகளை மட்டுமே பிரநிதித்துவம் செய்கின்றன. வெகுஜனங்களின் முதுகுக்குப் பின்னால் முடிவுகளை எடுக்கும் பெருநிறுவன தட்டினராலேயே பொருளாதார சக்தியின் நெம்புகோல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன, என்ற உண்மையை பாராளுமன்ற ஜனநாயகம் என்ற கருவி மூடி மறைக்கின்றது. சோசலிசத்திற்கானப் போராட்டத்தில், கல்வியூட்டப்பட்டு தெளிவுபடுத்தப்பட்ட உழைக்கும் மக்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதன் ஊடாக மட்டுமே உண்மையான ஜனநாயகத்தை அடைய முடியும். தொழிலாளர் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதை சோ.ச.க. பரிந்துரைக்கின்றது. இந்த அரசாங்கமானது மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் சமூக மற்றும் பொருளாதார நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதோடு, தமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து முடிவுகள் சம்பந்தமாக முழு ஜனநாயகக் கட்டுப்பாட்டை பெற்றுக்கொள்ளும் நிலைமையை சாதாரண உழைக்கும் மக்களுக்கு உருவாக்கிக்கொடுக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக லேபர் கட்சி கடந்த 11 ஆண்டுகள் பூராவும், ஹோவர்ட் அரசாங்கம் வெளி நாடுகளில் அதன் கிரிமினல் இராணுவத் தலையீடுகளை முன்னெடுக்கவும் உள்நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களை முன்னெடுக்கவும் மையப் பங்காற்றியுள்ளது. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்நிபந்தனை, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதாகும். இதன் பொருள், தொழிலாளர் வர்க்கம் லேபர் கட்சியில் இருந்தும் அதன் எடுபிடிகளான தொழிற்சங்கங்களில் இருந்தும் மற்றும் இறுதி ஆய்வில் லிபரல் கட்சிக்கு ஒரே "யாதார்த்தமான" மாற்றீடு லேபர் கட்சியே எனக் கூறித் திரியும் மத்தியதர வர்க்க எதிர்ப்பு இயக்கங்களில் இருந்தும் நனவுப்பூர்வமாக அரசியல் ரீதியில் பிரிந்துசெல்ல வேண்டும். லேபர் கட்சியின் வரலாறு, அது இயல்பாகவே இலாப அமைப்பு மற்றும் தேசிய அரசுடன் கட்டுண்டு இருப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒவ்வொரு பிரதான நெருக்கடிக் காலகட்டத்திலும் -இரண்டு உலகப் போர்களின் போதும், 1970களின் பெரும்வீழ்ச்சி மற்றும் அரசியல் தீவிரநிலைமையின் போதும், 1980 மற்றும் 1990களில் பொருளாதார கொந்தளிப்பின் போதும்- ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் புதிய தேவைகளுக்காக தொழிலாளர் வர்க்கத்தைக் கீழ்ப்படுத்துவதன் பேரில் லேபர் கட்சி அதிகாரத்திற்கு அழைக்கப்பட்டது. இப்பொழுது பெருவணிகத்தின் பிரதான பகுதியினர், தொழில், சம்பளம் மற்றும் வாழ்க்கைத் தரம் மீது மேலும் மூர்க்கமான தாக்குதலை நடத்த இலாயக்கற்ற பிழிந்த எழுமிச்சையாக ஹோவர்ட் அரசாங்கத்தைக் கருதுகின்றனர். ருட்டின் பிரச்சாரத்தின் பிரதான தகவமைவானது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கையின் அனைத்து பகுதிகளுக்கும் மூலப்பொருட்களை அனுப்ப லேபர் கட்சிக்கு விருப்பமும் இயலுமையும் உள்ளது என்பதை நிரூபிப்பதேயாகும். புஷ் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்புப் போர்கள், டேவிட் ஹிக்ஸ் மற்றும் மம்டூ ஹபிப்பையும் தடுத்து வைத்தல் மற்றும் ஹோவர்டின் முழு பயங்கரவாத சட்டங்களின் தொகுப்பு உட்பட, "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" பின்னால் தன்னுடைய முழு பலத்தையும் லேபர் கட்சி செலுத்தியுள்ளது. அது ஒவ்வொரு பயங்கரவாத பயமுறுத்தலுக்கும், தஞ்சம் கோருவோர் மீது பழிதூற்றுதல் மற்றும் சிறை வைப்பதற்கும் மற்றும் டாக்டர் ஹனிப் மீதான அரக்கத்தனமான குற்றச்சாட்டுத் தயாரிப்புக்கும் ஆதரவளிக்கின்றது. ஈராக் போரில் லிபரல்களுக்கு எதிராகத் தான் ஒரு மாற்றீட்டை வழங்குவதாக லேபர் கட்சி கூறுவது முற்றிலும் போலித்தனமாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை ருட் தொடர்ந்தும் ஆதரிப்பதுடன் ஈரான் மீதான தாக்குதலின் பின்னாலும் அணிதிரள்வார். "படிப்படியாக" படைகள் திருப்பியழைக்கப்படும் என அவர் கூறுவது, மத்திய கிழக்கில் இருக்கும் ஆஸ்திரேலிய இராணுவப் பிரிவின் ஒரு சிறு பகுதியை மட்டுமே குறிக்கின்றது. அதுவும் புஷ் நிர்வாகத்துடனான நெருக்கமான ஒத்துழைப்புடனேயே நடைபெறும். லேபர் கட்சியின் கீழ், பசிபிக்கில் ஆஸ்திரேலியாவின் இராணுவத் தலையீடுகள் போலவே, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் பொம்மை அரசாங்கங்களுக்கு உதவியளிக்க துருப்புக்களை அனுப்புவதும் அதிகரிக்கும். ரூட் பசுபிக்கிலும் ஏனைய இடங்களிலும் ஏகாதிபத்திய உள் முரண்பாடுகள் உக்கிரமாகும் போது இராணுவ வலிமையை அதிகரிக்கவும் மற்றும் கட்டாய இராணுவ சேவையைப் புகுத்தவும் தயங்கப் போவதில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் தொழிலாளர் வர்க்கம் லேபர் கட்சியுடன் தீர்க்கமான அனுபவங்களைக் கடந்திருக்கிறது. பூகோளமயமாக்கத்தினதும் மற்றும் தேசிய ஒழுங்குமுறையின் வீழ்ச்சியினதும் தாக்கத்தின் கீழ், ஹாவ்க்-கீட்டிங் அரசாங்கமானது பழைய லேபர் கட்சியின் சமூகச் சீர்திருத்த வேலைத்திட்டத்தை முழுமையாக கைவிட்டுள்ளதோடு, தொழிற்சங்கங்களுடனான அதன் அவப்பெயர்பெற்ற உடன்படிக்கையின் கீழ், அது சம்பளம், தொழில், பணி நிலைமைகள் மற்றும் சமூக சேவைகள் மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களை மேற்கொள்ளும் பெருநிறுவன ஆஸ்திரேலியாவின் பிரதான கருவியாக உருவெடுத்துள்ளது. லேபர் கட்சியின் 13 ஆண்டு கால ஆட்சியின் முடிவில், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான பிளவு இரு மடங்கையும் தாண்டியுள்ளது. 1996 தேர்தலில், லேபருக்கு எதிரான போட்டியில் கீட்டிங் தொழிலாளர் வர்க்கப் பிரதேசங்களில் வரலாற்றுத் தோல்வியைக் கண்டார். இந்த அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ருட்டின் லேபர் அரசாங்கம், பொருள் மற்றும் சேவை வரியையை, அல்லது சுகாதாரம் மற்றும் கல்வியை தனியார்மயமாக்குவதை, அல்லது பொதுநலச் செலவைக் குறைப்பதை அல்லது தொழில்களைத் தற்காலிகமாக்குவதை கைவிடப்போவதில்லை. பூர்விகக் குடிமக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகள் மற்றும் வறுமையை அது நீக்கப்போவதில்லை. ஹோவர்டின் புதிய தொழில்துறை உறவுகள் சட்டத்தை அது எதிர்ப்பது ஒரு மோசடியாகும். வணிகப் பிரதிநிதிகளுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வரையப்பட்ட சட்டத்திற்கு லேபரின் கொள்கை விட்டுக் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், அது புதிய வேலைத்தல உறவுமுறையின் (WorkChoices) அடிப்படைக் கூறுபாடுகள் அனைத்தையும் தன்னகத்தேயும் கொண்டுள்ளதேயாகும். வேலை நிறுத்தங்கள், இரண்டாந்தர பகிஷ்கரிப்புக்கள் மற்றும் தொழில்துறை முழுவதற்குமான சம்பள ஒப்பந்த பேரங்கள் உட்பட அனைத்து "அங்கீகரிக்கப்படாத" தொழிற்சங்க நடவடிக்கைகளும் சட்டவிரோதமானதாகவே இருந்துகொண்டிருக்கும். கிரெக் கம்பெட், பில் ஷார்ட்டென் மற்றும் டுக் காமிரான் ஆகிய சிரேஷ்ட தொழிற்சங்க அதிகாரிகள் பாதுகாப்பான லேபர்கட்சி தொகுதிகளில் நிற்க வைக்கப்பட்டுள்ளமை, ஒவ்வொரு தொழிலாளிக்கும் கூர்மையான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். இந்த மனிதர்களும் இவர்களையும் அங்கமாகக் கொண்ட தொழிற்சங்கக் கருவிகளுமே, மில்லியன் கணக்கான சாதாரண உழைக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கும் பாதுகாப்பின்மைக்கும் முழுபொறுப்புச் சொல்லவேண்டும். 1996ல் ஹோவர்டின் முதல் வரவுசெலவுத் திட்டத்தில் இருந்தே, இந்தத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன நடவடிக்கையையும் அடக்க செயற்பட்டுள்ளன. உண்மையில், சுரங்கத் தொழிலாளர்களில் முதல் துறைமுகங்கள் வரை, கட்டிடத் தொழிலாளர்கள் முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரை, உலோகத் தொழிலாளர்கள் முதல் ஆசிரியர்கள் மற்றும் தாதியர் வரை, கடந்த 25 ஆண்டுகளில் தங்கள் உரிமைகளையும் நிலைமைகளையும் காப்பாற்றுவதற்கு தொழிலாளர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு போராட்டமும், தொழிற்சங்கங்களினால் கீழ்ப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டன. இது ஒரு சர்வதேச போக்காகும். உலகம் முழுவதிலும், ஒருகாலத்தில் இலாப அமைப்பு வரம்புக்குள் சீர்திருத்தங்களுக்கும் குறைந்தபட்ச சலுகைகளுக்காகவும் அரசாங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் அமைப்புக்களாக இருந்த தொழிற்சங்கங்கள், இப்போது தொழிலாளர் வர்க்கத்தை வெளிப்படையாக கட்டுப்படுத்தும் மற்றும் அடக்கிவைக்கும் கருவிகளாக மாறிவிட்டன. ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்சங்கங்கள் தேசிய சீர்திருத்த வழிமுறையை அஸ்திவாரமாகக் கொண்டிருந்தனவே தவிர, அவற்றுக்கு சோசலிச முன்னோக்கு இருக்கவில்லை. ஆனால் கடந்த கால் நூற்றாண்டில், உற்பத்தியின் பூகோள ஒருங்கினைப்பாலும் மற்றும் பெருநிறுவனங்கள் முன்னெப்போதுமில்லாத அளவு உற்பத்தித் திறனை கோருவதாலும் இந்த வேலைத் திட்டம் சிதைந்து போயிற்று. இந்தத் தொழிற்சங்கங்கள், "தமது" தேசிய முதலாளிகள் சம்பளத்தைக் குறைப்பதிலும் தொழில்களை வெட்டித் தள்ளுவதிலும் சர்வதேச போட்டியாளர்களுடன் பேரம் பேசுவதன் பேரில், தொழிலாளர்களை ஏனைய நாடுகளில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து பிரித்து வைக்க, தேசிய பேரினவாதத்தை ஊக்குவிப்பதில் முன்னணி வகிக்கின்றன. எந்தவொரு பாராளுமன்றக் கட்சியும் உழைக்கும் மக்களுக்கு உண்மையான மாற்றீட்டை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. பசுமைவாதிகள் போர் எதிர்ப்புக் கட்சியாக தம்மைக் காட்டிக்கொள்வதன் மூலம் தேர்தலில் தமது ஆதரவை பெருப்பித்துக்கொள்ள எண்ணினாலும், அவர்களுடைய வரலாறு முற்றிலும் மாறுபட்டதாகும். பசுமைவாதிகள், ஆப்கானிஸ்தான் அமெரிக்கத் தலைமையில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்தும் ஆதரிப்பதோடு கிழக்குத் தீமோரில் காலவரையறையற்ற ஆஸ்திரேலிய இராணுவத் தலையீட்டையும் ஆதரிக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜேர்மனியின் முதலாவது வெளிநாட்டு இராணுவப் பிரச்சாரமாக, 1999ல் செர்பியா மீது குண்டுவீசத் தீர்மானித்த ஜேர்மன் கூட்டரசாங்கத்தின் பங்காளியாக இருந்த தமது சமதரப்பினரின் புத்தகத்தில் இருந்து ஒரு ஏட்டை எடுத்துக் கொண்டு, இந்தப் பசுமைவாதிகள் சொலமன் தீவுகளில் ஆஸ்திரேலியப் படைகள் நிலைநிறுத்தப்படுவதற்கு தீவிரமாக வக்காலத்து வாங்குகின்றனர். ஜனநாயக உரிமைகள் மீதான ஹோவர்ட் அரசாங்கத்தின் தாக்குதல்களையும் அதற்கு லேபர் கட்சி ஆதரவு வழங்குவதையும் கண்டனம் செய்தாலும், 2005 நவம்பரில் பாராளுமன்றத்தில் திருப்பிக் கூட்டப்பட்ட அவசரகால கூட்டத்தில், ஹோவர்ட்டின் ஜனநாயக விரோத "பயங்கரவாத" சட்டத்தை பசுமைவாதிகள் ஆதரித்த போது அவர்களது உண்மையான நிலைப்பாடு அம்பலத்திற்கு வந்தது. பசுமை வாதிகள், பூகோளம் வெப்பமாதல் உட்பட, தொடர்ந்தும் பரவிவரும் சுற்றுச் சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை, அதைத் தோற்றுவித்த இலாப அமைப்புக்குள்ளேயே தீர்க்க முடியும் என்ற மாயையை முன்நிலைப்படுத்துகின்றனர். அவர்கள் பாராளுமன்ற இரு கட்சிமுறையில் முழு அங்கமாக இருந்துகொண்டுள்ளனர். அவர்கள் அதைச் சுற்றிவருவது அதன் நம்பகத்தன்மையை தூக்கிநிறுத்த உதவுவதற்கே அன்றி அதன் உண்மையான பாத்திரத்தை அம்பலப்படுத்த அல்ல. 1989 மற்றும் 1992ல் தஸ்மேனிய கூட்டாட்சி அரசாங்கத்தில் பசுமைக் கட்சி பதவியில் இருந்தபோது, அது ஆயிரக்கணக்கான பொதுத் துறை வேலைகளை வெட்டிக் குறைத்த சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் ஒத்துழைத்தது. பசுமைவாதிகளின் தலைவரான பொப் பிரவுன், "திரைசேரிப் பொறுப்பை" காட்டி மீண்டும் மீண்டும் செல்வாக்குத் தேடுவதன் மூலம், தன்னுடைய கட்சி எந்தவொரு எதிர்காலப் பொருளாதார நெருக்கடியிலும் ஆற்றவுள்ள பாத்திரத்தை கோடிட்டுக் காட்டினார். சிறு கட்சிகளும் இதேபோல் நடப்பில் உள்ள அரசியல் கட்டமைப்பைக் காக்க உறுதி கொண்டுள்ளன. இதில் லேபரை "குறைந்த கெடுதி உடையதாக" முன்னணிக்குக் கொண்டுவரும் சோசலிச கூட்டணியும் அடங்கும். அதன் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால், சோசலிச கூட்டணியின் பிரச்சாரமானது பசுமை வாதிகளுடன் கூட்டணி சேர்வதையும் லேபர் கட்சியின் வெற்றியையும் இலக்கக் கொண்டதாகும். இந்தத் தந்திர உத்திகள் இத்தேர்தலின் மையப் பிரச்சினையை மூடிமறைக்கும் நோக்கத்தைக் கொண்டவை. தொழிலாளர் வர்க்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இரு கட்சி முறைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது, அல்லது லேபர் கட்சி ஒன்றும் "குறைந்த கெடுதியுடையது" அல்ல. எனவேதான் சோசலிச சமத்துவக் கட்சி ஏனைய கட்சிகளுடன் எந்தவொரு விருப்பத் தேர்வை பரிந்துரைப்பதையோ அல்லது "கொடுக்கல் வாங்கல்களையோ" செய்யவில்லை. சோசலிசச் சமத்துவக் கட்சி உண்மையை பேசுகின்றது: கடினமான அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகளுக்கு எளிதான மற்றும் குறுகிய கால தீர்வுகள் எதுவும் கிடையாது. ஒரு சுயாதீன வெகுஜன சோசலிசக் கட்சியைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்ட விடாமுயற்சியுடனான மற்றும் கொள்கைப் பிடிப்பான போராட்டத்திற்கு ஈடாக வேறு எதுவும் கிடையாது. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் மையப் பணி, சோசலிச சமத்துவக் கட்சியை அதற்கான கட்சியாக அபிவிருத்தி செய்வதற்கான ஒரு அரசியல் தளத்தை ஸ்தாபிப்பதேயாகும். இது சோசலிச கூட்டணி மற்றும் ஏனைய மத்தியதர வர்க்க எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அமைப்புக்கள் போல், தீவிரவாத சுலோகங்களை கோஷப்பதன் ஊடாகவோ அல்லது ஏனைய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் ஊடாகவோ மேற்கொள்ளப்பட மாட்டாது. சோசலிசத்திற்கான போராட்டமானது உழைக்கும் மக்களை அரசியல், ஆய்வுணர்வுத் திறன் மற்றும் கலாச்சார ரீதியிலும் மீண்டும் எழுச்சிபெறச் செய்வதையும், மற்றும் இருபதாம் நூற்றாண்டின் அனைத்து முக்கிய அரசியல், மூலோபாயப் படிப்பினைகளை ஆராய்ந்து புரிந்துகொள்வதை அடிப்படையாகக் கொண்ட ஒரு விஞ்ஞானப்பூர்வமான முன்நோக்கை அபிவிருத்தி செய்வதையும் உள்ளடக்கிய ஒரு அனைத்துலகப் போராட்டமாகும். சோசலிச மாற்றீட்டிற்கான போராட்டத்தில் இணைந்து கொள்க! அனைத்துலக சோசலிச இயக்கத்தின் மகத்தான விடுதலை மரபுகளை சோசலிச சமத்துவக் கட்சி அஸ்திவாரமாகக் கொண்டுள்ளது. சோசலிசம் என்றால் சமத்துவம், மனிதகுல ஒற்றுமை, அடக்குமுறை மற்றும் இல்லாமையில் இருந்து விடுதலையைக் குறிக்கும். நாம் அனைத்து வகையான தணிக்கை, பகுத்தறிவு விரோதம் மற்றும் மதவெறிக்கும் எதிராக விஞ்ஞானம், கலாச்சாரம் மற்றும் பகுத்தறிவையும் பாதுகாப்பதுடன், ஒவ்வொரு தனிநபரும் முழுமையாகத் தன் திறமைகளையும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு சமூக அமைப்பை உருவாக்க விரும்புகிறோம். இந்த இலக்குகள் உலக ட்ரொட்ஸ்கிஸக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் மற்றும் அதன் இணையத் தளமான உலக சோசலிச வலைத் தளத்தினதும் வேலைத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. 1917 அக்டோபரில் நடந்த ரஷ்யப் புரட்சி, முதலாளித்துவ அமைப்பை தூக்கிவீசி, உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசாக சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபித்த ஒரு புகழ்பெற்ற மக்கள் இயக்கத்தைக் கண்டது. போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் புரட்சி, ஒரு பரந்த அளவிலான அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்துடன் பிணைந்திருந்தது, ஊக்கம் பெற்றிருந்தது. ஏனைய நாடுகளில் போலவே ஆஸ்திரேலியாவிலும், எட்டு மணி நேர வேலை, கட்டாய இராணுவ ஆள்சேர்ப்புக்கு எதிராக வாக்களிக்கும் உரிமை, போன்ற ஒவ்வொரு பிரதான போராட்டங்களின் போதும் சோசலிஸ்ட்டுக்கள் முன்னணியில் நின்றனர். எவ்வாறெனினும், ஏனைய இடங்களில் சோசலிசப் புரட்சிகளின் தோல்வி, முதலாவது தொழிலாளர் அரசை வறிய மற்றும் போரினால் பேரழிவிற்கு உட்பட்ட பொருளாதாரத்துடன் தனிமைப் படுத்திவிட்டது. அது ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சொத்துரிமை கொண்ட அதிகாரத்துவத்தின் தோற்றத்திற்கும் மற்றும் அதன் வெற்றிக்குமான நிலைமைகளை ஏற்படுத்தியது. ஸ்டாலினிஸ்ட்டுக்கள் ரஷியப் புரட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த அனைத்துலக வேலைத்திட்டத்தைக் கைவிட்டதோடு, அதற்குப் பதிலாக "தனி நாட்டில் சோசலிசம்" என்ற மார்க்சிய விரோத முன்னோக்கை ஏற்றுக்கொண்டனர். இந்த தேசியவாத நோக்கு, அடக்குமுறை அதிகாரத்துவ இயந்திரத்திற்கு ஒரு தர்க்கரீதியான அடித்தளத்தை வழங்கியது. இந்தக் கருவியே சோவியத் ஜனநாயகத்தை அழித்து, சோசலிச எதிர்ப்பை ஒடுக்கியதோடு உலகம் பூராவும் தொழிலாளர்களின் புரட்சிகரப் போராட்டங்களை நாசமாக்கியது. சோ.ச.க. தொழிலாளர் வர்க்கத்தின் மிகவும் உட்சாகமான மற்றும் தொலை நோக்குடைய பிரதிநிதிகளின் மரபை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த மரபு, 1923ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட, அனைத்துலக இடதுசாரி எதிர்ப்பு இயக்கத்தினதும், 1938ல் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தினதும் வழிவந்ததாகும். இந்த முன்நோக்கை முன்நிறுத்தி அபிவிருத்தி செய்வதன் பேரில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) ஆஸ்திரேலியக் கிளையாக 1972ல் சோ.ச.க. யின் முன்னோடியான சோசலிசத் தொழிலாளர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆஸ்திரேலியத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் எமது கட்சிக்கு ஒரு நீண்டகால கெளரவமான வரலாறு உண்டு. சோ.ச.க. 1998ல் இருந்து, நா.அ.அ.கு. வின் தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து உலக சோசலிச வலைத் தளத்தின் அன்றாட வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து கொண்டிருக்கின்றது. இன்று சோசலிசத்தினதும் மற்றும் அனைத்துலகவாதத்தினதும் அதிகாரப்பூர்வ குரலாக உலக சோசலிச வலைத் தளம் பரந்தளவில் கருதப்படுகிறது. நவம்பர் 24 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம், தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், உடனடியாக முன்வரவிருக்கும் மிகப் பெரும் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களுக்கு தொழிலாளர் வர்க்கத்தை தயார் செய்வதை இலக்காக் கொண்டதாகும். எங்கள் வேலைத் திட்டத்துடன் உடன்படும் அனைவரையும் சோ.ச.க. உடன் தொடர்பு கொண்டு எங்கள் பிரச்சாரத்தில் பங்கு பெற தன்முனைப்புடன் முன்வருமாறு வேண்டுகிறோம். நாம் அனைத்து ஆதரவாளர்களையும் உலக சோசலிச வலைத்தளத்தின் நாளாந்த வாசகர்கள் ஆகுமாறு ஊக்குவிக்கும் அதே வேளை, நம்முடைய தேர்தல் அறிக்கைகளைப் பரந்த அளவில் வினியோகிக்க உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம். குறிப்பாக நாம் அனைத்து உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மாணவர் இயக்கமான, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பில் சேருமாறும், அதன் கிளைகளை பல்கலைக்கழக வளாகங்கள், TAFE க்கள் மற்றும் பாடசாலைகளிலும் கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கின்றோம். எல்லாவற்றிகும் மேலாக, இராணுவவாதத்தையும் போரையும் எதிர்ப்பவர்கள், மற்றும் சமூகச் சமத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்குமான போராட்டத்துடன் உடன்பாடு கொண்டவர்களையும் சோ.ச.க. உடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். Authorised by N. Beams, 100B Sydenham Rd, Marrickville, NSW |