World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Teachers, public employees to join rail workers on strike

French workers need a new political strategy

ஆசிரியர்கள், பொதுப்பணித் துறை ஊழியர்கள் இரயில் தொழிலாளர்களுடன் வேலைநிறுத்தத்தில் இணைகின்றனர்

பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய அரசியல் மூலோபாயம் அவசியம்

By the WSWS editorial board
19 November 2007

Back to screen version

ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கோலிச அரசாங்கம் ஓய்வூதியங்கள், சமூகநலத் திட்டங்கள் மற்றும் கல்விக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களை எதிர்த்து ஆசிரியர்கள், பொதுப்பணித் துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நவம்பர் 20 அன்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரயில், மின்சார ஊழியர்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த அறிக்கை அவர்கள் மத்தியில் விநியோக்கிக்கப்படுகிறது.

நவம்பர் 20ம் தேதி பிரான்ஸ் முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் மே மாதம் சார்க்கோசியின் அரசாங்கம் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கு பின்னர் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு எதிரான மிகப் பெரிய சமூக இயக்கத்தை பிரதிபலிக்கிறது. பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை தரங்கள் மற்றும் உரிமைகளை பலியிட்டு செல்வந்தர்கள் என்றுமிராத அளவு அதிக செல்வத்தை திரட்டக்கூடிய வகையில் பிரான்சை இலாபம் ஈட்டுபவர்க்கான சுவர்க்கமாக மாற்றும் நோக்கத்தை கொண்டுள்ள சார்க்கோசியின் அரசியல் செயற்திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பரந்த மற்றும் ஆழ்ந்த எதிர்ப்புக்கு இவை சான்று கூறுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷுடன் பகிரங்கமாக இணைந்துள்ள சார்க்கோசி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றம் சார்ந்த வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், பிரான்சில் பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கம் போராடி வெற்றி பெற்ற சமூக உரிமைகளை அழித்து "அமெரிக்க நிலைமைகளை" உருவாக்கவும் முற்பட்டுள்ளார்.

நவம்பர் 20 ஆர்ப்பாட்டங்கள் ஆசிரியர்கள், மருத்துவமனைகள், அஞ்சல் துறை, உள்ளூராட்சி மற்றும் பிற அரசாங்க ஊழியர்களை, ஏழு நாட்களாக, "சிறப்பு திட்டம் என்று அழைக்கப்படுகின்ற, தங்கள் ஓய்வூதியங்களைக் காப்பதற்காக இரயில், பொதுப் போக்குவரத்து, மின்சார ஊழியர்கள் ஆகியோர் நடத்திவரும் வேலைநிறுத்தத்தில் ஐக்கியப்படுத்துவதுடன், பல்கலைக் கழகங்களை தனியார்மயமாக்குதல், உயர்கல்வியின் தரத்தைக் குறைத்தல், அங்கு அனைவருக்குமான வாய்ப்பினை கட்டுப்படுத்தும் அரசாங்க திட்டங்களுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்களுடனும் ஐக்கியப்படுத்தும்..

தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் இதில் பணயம் வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பொறுத்தவரையில், தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க பிரிவுகள் ஒன்றின் தோல்வி என்பது மற்றய தொழிலாளர் பிரிவுகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுத்து, முன்பு எமில் ஷோலா விவரித்த வறுமை, மிருகத்தனமான சுரண்டல் நிலைமை ஆகியவற்றில் தொழிலாளர்களை தள்ளிவிடும்.

சார்க்கோசியின் ஆட்சி முன்வைக்கும் ஆபத்துக்களை குறைமதிப்பிடுவது பெரும் தீமைகளுக்கு வழிவகுத்துவிடும்.

இதன் சமூகத் தளம் மிகச் சிறியது. முதலாளிகள், செல்வந்தர்கள், பெரும் செல்வந்தர்கள், ஜனாதிபதி இவர்கள் அனைவருடனும் சமூக உறவும் நெருக்கமான அரசியல் உறவுகளையும் கொண்டுள்ளார். ஆனால் சார்க்கோசிக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் சர்வதேசிய நிதிய மூலதனத்தின் ஆதரவு உள்ளது. அவை பிரான்ஸ் "சீர்திருத்தத்தில்" அதாவது, தன்னுடைய சமூக நலன்களை இல்லாதொழிப்பதில் பின்தங்கியிருக்கிறது என்றும் இதனால் தடையற்ற முறையில் இலாபத்தை குவிப்பதற்கு பெரும்தடை உள்ளது என்றும் வலியுறுத்துகின்றனர். மேலும் சார்க்கோசியிடம் ஒரு அரசியல் மூலோபாயம் உள்ளது; எவ்விதத்திலும் அதைச் செயல்படுத்துவது என்று அவர் உறுதியாக இருக்கிறார்.

அவருடைய நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் மிகப் போர்க்குணமிக்க பகுதிகளை தனிமைப்படுத்தி அவர்கள் மீது தீர்மானகரமான தோல்வியை திணிப்பது, அதன் பின்னர் மக்களில் ஏனையோர் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்துவதாகும்.

இரயில்வே தொழிலாளர்களுடனான மோதல், சார்க்கோசி அரசாங்கப் பொறுப்பை எடுத்துக் கொண்டதில் இருந்தே கவனத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. பல தொழிற்சங்கத் தலைவர்களை தன்பால் ஈர்த்து அவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதுமாறு செய்து இவர்களை தனிமைப்படுத்த அவர் பாடுபட்டுள்ளார்.

"வேலைநிறுத்தம் செய்வோருடன் பொதுமக்கள் வெறுப்புக்கொள்வதையே எலிசே நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது" என்ற தலைப்பில் Le Monde ஞாயிறன்று, அரசாங்கத்தின் மிக உயர் வட்டங்களில் எப்படி மூலோபாயக் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன என்ற தகவலை கொடுத்துள்ளது. முந்தைய வாரம் தான் "உரையாடல்" என்ற சீட்டை பயன்படுத்தியதாக சார்க்கோசி கூறினார் என்று இது மேற்கோளிட்டுள்ளது; "இதுகாறும் நாம் செய்துள்ளது அனைத்தும் பின்னர் நாம் உறுதியாக இருப்பதற்கு பயன்படும்" என்றும் சேர்த்துக் கொண்டார்.

இப்பொழுது, ஒரு இரண்டாம், கூடுதலான மோதல் கட்டம் தொடங்க உள்ளது. "அடுத்த வாரம் நாம் அரசியல் மற்றும் கருத்தியல் போக்குகளில் நுழைவோம்" என்று அவர் கூறினார்.

ஞாயிறன்று அரசாங்க கட்சியான UMP இன் 8,000 ஆதரவாளர்கள் பாரிசில் அணிவகுத்து வேலைநிறுத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து, வேலைநிறுத்தம் நடந்தால் இன்னும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்தனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரயில் தொழிலாளர்கள் போர்குணம், தைரியம், உறுதித்தன்மை ஆகியவற்றை மிகப்பாராட்டக்கூடிய வகையில் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அரசாங்கத்திற்கு மாறுபட்ட வகையில், அவர்களிடம் ஒரு மூலோபாயமோ தற்போதைய மோதலில் வெற்றுபெறுவதற்கு தேவையான தலைமையோ இல்லை. தற்போதைய அரசாங்கத்தை போர்க்குணத்தால் மட்டும் பின்வாங்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏமாளித்தனமானது மட்டுமல்லாமல், ஆபத்தானதுமாகும்.

சார்க்கோசி தன்னுடைய எதிர்காலம் முழுவதையும் "சீர்திருத்தங்கள்" என்று அழைக்கப்படுவதை செயல்படுத்துவதற்கு பணயம் வைத்துள்ளார்; முதலாளித்துவத்தினரின் நிலைப்பாட்டில் இருந்து இது இனியும் தாமதப்படுத்தக் கூடாது ஆகும். இச்சீர்திருத்தங்களுக்கு எதிராகப் போரிடும் தொழிலாளர்களும் மாணவர்களும் அரசியல் பணிகளையும் எதிர்கொள்ளுகின்றனர்.

அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி-மூலோபாயத்தை அவர்கள் தங்கள் புரட்சிகர மூலோபாயத்தால் எதிர்க்க வேண்டும். ஓய்வூதியங்கள், வேலைகள், கல்வி ஆகியவை கோலிச அரசாங்கத்தை வீழ்த்தி அதனை உண்மையான ஜனநாயக, தொழிலாளர் அரசாங்கத்தால் பதிலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் முழு தொழில்துறை, அரசியல் அணிதிரட்டல் மூலம்தான் பாதுகாக்கப்பட முடியும்.

"தீவிர இடது" உட்பட, "இடது" என்று அழைக்கப்படும் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புக்கள் அத்தகைய முன்னோக்கிற்கு முற்றிலும் விரோதப்போக்கை கொண்டுள்ளன. இந்த அமைப்புக்களின் கோழைத்தனமும் வெளிப்படையான ஒத்துழைப்பும்தான் சார்க்கோசியின் ஆயுதக்கிடங்கில் இருக்கும் மிக முக்கியமான சொத்தாகும். இந்த அமைப்புக்களுடன் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக உடைத்துக் கொள்ளுதல், அரசாங்கத்தின் கொள்கைகளுடன் அவை ஒத்துழைப்பதை சமரசத்திற்கு இடமின்றி அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துதல், சார்க்கோசியின் தாக்குதலுக்கு எதிராக போராட்டம் வெற்றிபெறுவதற்கு தவிர்க்க முடியாத முன்நிபந்தனைகளாகும்.

சோசலிஸ்ட் கட்சி சிறப்புத் திட்டத்தின் "சீர்திருத்தத்தின்" முக்கிய கூறுபாட்டிற்கு, அதாவது முழு ஓய்வூதியம் பெறுவதற்குத் தேவையான ஆண்டுகளை 37.5 லிருந்து 40 ஆண்டுகள் என்று நீட்டிப்பதற்கு அதன் வெளிப்படையான ஆதரவைக் கொடுத்துள்ளது. சார்க்கோசியின் UMP போலவே, இது பலமுறையும் பயணிக்கும் மக்களுக்குத் தொந்தரவு கூடாது என்ற பெயரில் இரயில் வேலைநிறுத்தத்தை முடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது --இதுதான் வேலைநிறுத்தத்தை உடைக்கும் ஒவ்வொருவரின் வழமையான வாதம் ஆகும். இக்கட்சி, அரசாங்கத்திற்கு மீண்டும் எப்பொழுதேனும் வந்தால், சார்க்கோசி கருத்துக்களில் இருந்து கிட்டத்தட்ட பிரிக்க முடியாத சமூகக் கொள்கைகளைத்தான் செயல்படுத்தும்.

கம்யூனிஸ்ட் கட்சியானது, பெயரளவிற்கு வேலைநிறுத்தத்தை வழமையாக ஆதரித்தாலும், வெளிநடப்புச் செய்வதை உடைக்கும் நோக்கத்தை கொண்டுள்ள அரசாங்கத்துடனான தொழிற்சங்கத்தின் சூழ்ச்சிக்கையாளல்களுக்கு முழு ஆதரவைக் கொடுத்து வருகிறது.

அரசாங்கத்துடன் ஒரு அரசியல் மோதலை எப்படியும் தவிர்க்க விரும்பும் தொழிற்சங்கங்கள் ஒரு உபயோகமற்ற உடன்பாட்டை கொண்டுவந்து வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுக்க அரும்பாடுபட்டு வருகின்றன. மின்துறை, எரிவாயுப் பிரிவுகளில் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கி கிட்டத்தட்ட வேலைநிறுத்ததை முடித்துவிட்டன; இதை ஒட்டி எரிவாயு, மின்சாரத்துறை தொழிலாளர்கள் இரயில் தொழிலாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர்.

அரசாங்க இரயில்வேயான SNCF இன் ஒரு தொழிற்சங்கமான CFDT வேலைநிறுத்தம் முடிக்கப்படுவதற்கு அழைப்பு கொடுத்துள்ளது; மற்ற ஐந்து தொழிற்சங்கங்கள் --CGT, SUD உட்பட-- நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும் வட்டமேசை கூட்டத்தை புதனன்று நடத்த உடன்பட்டுள்ளன. செவ்வாய் வேலைநிறுத்தம் முடிவதற்காக அவை காத்திருக்கின்றன.

இந்த காட்டிக்கொடுப்பில் முக்கிய பங்கு, இரயில்வேக்களின் மிகச் செல்வாக்கு மிக்க தொழிற்சங்கமான CGT இனால் மேற்கொள்ளப்பட்டது. வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே CGT பொதுச் செயலாளர் பேர்னார்ட் திபோ பெரும் விட்டுக்கொடுப்புகளை செய்ய முன்வந்தார். அது சரணடைதலின் சைகையாகத்தான் பொதுவாக விளக்கப்பட்டது; அல்லது Liberation கூறியபடி, "எல்லாவற்றையும் நிராகரித்தல் அல்லது எதுவுமற்றதான நிலைப்பாடு" என்றவாறு ஆகும்.

Lutte Ouvrière (தொழிலாளர் போராட்டம்), மற்றும் Ligue Communiste Révolutionnaire (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ( LCR) இரண்டும் என்ன பங்கை வகிக்கின்றன?

இரண்டு அமைப்புக்களும் இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு உத்தியோகபூர்வமாக ஆதரவு கொடுத்து, கூட்டறிக்கை ஒன்றில், "அரசாங்கம் பின்வாங்கும் பொருட்டு தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்த்த்தாலுமான ஒரு பாரிய தாக்குதலுக்கு" அழைப்பு விடுத்துள்ளன; ஆனால் "இடது" கட்சிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுக்கும் பாத்திரத்தை மூடிமறைக்கும் வகையில், அவற்றில் இருந்து தொழிலாளர்கள் உடைத்துக்கொண்டு போவதை தடுக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளன. அவர்களுடைய கருத்தில் இவ்வமைப்புக்கள் பற்றி எவ்விதமான விமர்சனத்தையும் அரிதாகவே காணமுடியும். இரு அமைப்புக்களும் அரசாங்கத்தை பின்வாங்க வைக்க சுத்தமான தொழிற்சங்க போர்க்குணமே போதும் என்ற ஆபத்தான பிரமையை வளர்த்தெடுக்கின்றன.

வேலைநிறுத்தத்தின் நடுவே, பல நகரங்களில் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து Lutte Ouvrière, இதற்கு முன்னர் ஒருபோதும் செய்திருந்திராத ஒன்றை, ஒரு கூட்டுத்தேர்தல் பட்டியலை தயாரிக்கும் பேச்சுவார்த்தைகளில் உள்ளதாக அறிவித்துள்ளது. மூழ்கும் கப்பலை விட்டு எலி தப்பி ஓடும் என்ற பழமொழிக்கு எதிரான வகையில் Lutte Ouvrière செய்வது போல் தோன்றுகிறது; அதாவது மதிப்பிழந்த முதலாளித்துவக் கட்சிக்கு இடதுசாரி நற்சான்றுகளை வழங்குதல் என்பதே அது.

LCR செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசன்சனோ இதற்கிடையில் சோசலிஸ்ட் கட்சியுடன் ஐக்கியம் வேண்டும் என்று கோரியுள்ளார்... சோசலிஸ்ட் கட்சி வெளிப்படையாக வேலைநிறுத்தத்திற்கு எதிராக உள்ளது என்றாலும்!

நவம்பர் 16ம் தேதி அவர், 1997ல் இருந்து 2002 வரை லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தை அமைத்திருந்த, முன்னாள் பன்முக இடது கூட்டில் இருந்த சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமை வாதிகள் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு கோரிக்கை விடுத்தார்; அவர் கூறினார்: "இடது கட்சிகள் அனைத்தும் விரைவில் தங்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு வேலைநிறுத்தம் செய்பவர்களுடன் ஐக்கியத்தை காணும் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எனவேதான் நான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகள் ஆகியவற்றிற்கான அனைத்து ஆதரவு முன்முயற்சிகளின் மீது ஒன்றாய் சேர்ந்து முடிவெடுக்கும் வகையில், இடது கட்சிகளில் இருக்கும் அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் இயலுமான வகையில் விரைவில் ஒரு கூட்டுக் கூட்டத்திற்கு வருமாறு முன்மொழிகிறேன்."

பெசன்சனோ யாரை முட்டாளாக்க பார்க்கிறார்? சோசலிஸ்ட் கட்சி வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தராது என்பதை அவர் அறிவார். அவருடைய முறையீடு ஒரு மூடிமறைப்புத்தான்.

ஜனவரி மாதத்தில் LCR ஸ்தாபிக்க இருக்கும் முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி என்று அழைக்கப்படுவதில் போலித்தன்மையை இது விளக்கிக் காட்டுகிறது. அது இறுதியில் வலதுசாரி ரோமனோ பிரோடியின் முதலாளித்தவ அரசாங்கத்தில் சேர்ந்த, இத்தாலியின் Communist Refoundation கட்சி போல், தொழிலாளர்கள் சமூக ஜனநாயகத்தில் இருந்து உடைத்துக் கொண்டு உண்மையான சர்வதேச சோசலிச முன்னோக்கிற்கு திரும்புவதை தடுக்கும் இன்னொரு இயங்குமுறையாக இருக்கும்.

சக்தி வாய்ந்த சமூக இயக்கங்கள் சீர்குலைக்கப்பட்டு, காட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு நீண்ட வரலாறு பிரான்சிற்கு உள்ளது. 1968 பொது வேலைநிறுத்தம் நடந்து இப்பொழுது கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகின்றன; அதில் பல நூறாயிரக் கணக்கான மாணவர்களும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் தளபதி டு கோலின் ஆட்சிக்கு எதிரான பொதுப் போராட்டத்தில் இணைந்தனர். அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் CGT யும்தான் டு கோலை காப்பாற்றின. அதிகாரத்தை எடுத்துக்கொள்ள அவை மறுத்து, வேலைநிறுத்தத்தை Grenelle உடன்பாட்டின் வழிமுறைகள் மூலம் நெரித்துவிட்டனர். அதற்குப் பின்னர் வலதுசாரிகள், அரசியல் அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு இன்னும் ஒரு 13 ஆண்டுகள் எடுத்தன.

அதற்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சிகர பரிமாணத்தில் வெளிவந்த வேலைநிறுத்த இயக்கம், லெயோன் ப்ளூமின் (Léon Blum) மக்கள் முன்னணி அரசாங்கத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது. அது வலதுசாரி மீண்டும் வருவதற்கு, இறுதியாக விச்சி (Vichy) ஆட்சி வருவதற்கு வழிவகுத்தது.

இந்த வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளை தொழிலாளர்கள் அறிவது மிகவும் அவசியமாகும். முழு ஆளும் உயரடுக்கு, அதன் அனைத்துக் கூட்டாளிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரின் சூழ்ச்சிக்கையாளல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் செயற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கக்கூடிய, உழைக்கும் மக்களின் தேவைகளுடன் தொடர்புபட்ட ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை வழங்கும் ஒரு அரசியல் தலைமை கட்டாயம் கட்டியமைக்கப்பட வேண்டும்.

இது ஒரு சர்வதேச அளவில்தான் செய்ய முடியும். உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு ஒரு தேசிய தீர்வு கிடையாது. சார்க்கோசிக்கு பின்னே ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் பெரும் சர்வதேச நிறுவனங்களும் வங்கிகளும் ஆதரவாக இருக்கின்றன.

ஜேர்மனிய இரயில் டிரைவர்கள் பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ள நேரத்திலையே வேலைநிறுத்தம் செய்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ரைன் நதியின் இரு புறங்களிலும் பொது சேவைகளும் மற்றும் தங்கள் தனிவாழ்க்கையின் ஒவ்வொரு கூறுபாடும் பெருவணிகத்தின் ஆணைக்கு கட்டுப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.

பிரெஞ்சு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை உலக சோசலிச வலைத் தளத்தை படிக்குமாறும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவில் சேர்ந்து ஒர் உண்மையான சர்வதேச சோசலிச கட்சியை கட்டியமைப்பதற்கு போராடும் வகையில் இணையுமாறும் அழைப்பு விடுகிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved