World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்Pakistani regime continues crackdown on opponents பாக்கிஸ்தான் ஆட்சி, எதிர்க்கட்சியினர் மீதான அடக்குமுறையை தொடர்கிறது By Peter Symonds லாகூரின் கிழக்கு நகரமொன்றில் நடந்த ஒரு மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, எதிர்கட்சி தலைவர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை அடுத்து பாக்கிஸ்தானில் நேற்று முதல் மீண்டும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. நவம்பர் 3ல் இரும்புமனிதர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் அவசரகால நிலையை அறிவித்தது முதலாக தலைமறைவாகி இருந்த கான், மாணவர் எதிர்ப்பு போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தாம் அவர்களின் ஊர்வலத்தில் கலந்து கொள்ளப்போவதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார். பல நூறு மாணவர்கள், "வெளியேறு, முஷாரஃப் வெளியேறு" என்றும், "அவசரகால நிலை வேண்டாம்" என்றும் கோஷமிட்டுக் கொண்டு, நாட்டின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கானைச் சந்திக்க ஒன்று கூடி இருந்தனர். காரில் வந்த அவரை, மாணவர்கள் தோளில் தூக்கிக் கொண்டனர், ஆனால் பின் இஸ்லாமிய ஜமாத்-ஈ-இஸ்லாமி கட்சியுடன் தொடர்புள்ளவர்களுடன் கைது செய்யப்பட்டு, பாதுகாப்பாக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரரான கான், 1997ல் தோற்றுவிக்கப்பட்ட எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஈ-இன்சாப் கட்சிக்கு (PTI) தலைமை வகிக்கிறார். லாகூர் போலீஸ் தலைமை அதிகாரி மலீக் மொஹம்மத் இக்பால், AFP செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், பெயர்குறிப்பிடப்படாத இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கான், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார் எனத் தெரிவித்தார். "அவர் தம் பேச்சுக்கள் மூலம், மக்களை ஆயுதம் ஏந்த தூண்வதுடன், உள்நாட்டு சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் உண்டாக்கி வருகிறார். மேலும், அவர் வெறுப்புணர்வையும் பரப்பி வருகிறார்." என இக்பால் தெரிவித்தார். இதை மற்றொரு வகையில் கூறுவதாயின், தற்போது எவ்விதமான அரசியல் எதிர்ப்பும், முஷாரஃப்பின் பயங்கரவாதத்தின் மீதான யுத்தமாகவே மதிப்பிடப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறது. கைது செய்யப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை. USA Today இதழின் அறிக்கைப்படி, பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சுமார் 7,500 இற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை போலீஸ் வளைத்திருக்கிறது. முன்னாள் பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஹ்சான் இக்பால் கூறுகையில், "முதல் மூன்று நாட்களில், அவர்கள் எங்களின் 5,000 ஆதரவாளர்களை கைது செய்தார்கள். எங்களில் சிலர் மறைத்துள்ளோம். நாங்கள் வெளியில் சென்ற உடனேயே, எங்களைப் பிடித்துக் கொள்கிறார்கள். இது தற்காலிகமாக ஒரு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது." என்று தெரிவித்தார். வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அரசாங்கத்திற்கு எதிரான பிற எதிர்ப்பாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி சேவைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. மக்கள் சர்வதேச தொலைக்காட்சி சேவைகளை அணுகுவதைத் தடுக்க செயற்கைக்கோள் தட்டுக்களை இறக்குமதி செய்வதற்கான ஓர் ஒப்பந்தத்தையும் அந்த இராணுவ ஆட்சி தடை செய்திருக்கிறது. நாட்டின் நான்கு மாகாணங்களில் உள்ள உச்ச நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் இருந்து சுமார் 60 சதவீத நீதிபதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வேறுயாரையாவது நியமிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பாதிக்கும் மேற்பட்ட வழக்காடு அறைகளில் நீதிபதிகள் இல்லை. பாக்கிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவாளர்களுடன் இஸ்லாமாபாத்திற்கு திட்டமிடப்பட்டு இருந்த ஒரு "நீண்ட பேரணியை" தடுக்க நேற்று மீண்டும் பெனாசீர் பூட்டோ வீட்டு காவலில் வைக்கப்பட்டார். பெருமளவிலான ஆயுதந்தாங்கிய போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டும், முள்ளுக்கம்பிகளால் வழிகள் அடைக்கப்பட்டும், பூட்டோ இருந்த வீட்டை எவ்விதத்திலும் அணுக முடியாத அளவிற்கு தடுக்கப்பட்டு இருந்தது. அதிகாரிகளால் சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட அந்த பேரணி, செவ்வாயன்று நூற்றுக்கணக்கான பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்களுடன் தொடங்கியதாக இத்தாலிய செய்தி நிறுவனம் AGI யின் ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. பல மாதங்களாக, அமெரிக்க உதவியுடன் பூட்டோ ஒரு அதிகாரப் பகிர்வு உடன்பாட்டிற்காக முஷாரஃபுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தார். எவ்வாறிருப்பினும், தாம் முஷாரஃபுடன் இணைந்து பணியாற்ற போவதில்லை எனவும், அவர் அதிபர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் செவ்வாயன்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் தயக்கத்துடன் அறிவித்தார். முன்னதாக, அவர் முஷாரஃபை இராணுவ தளபதி பதவியில் இருந்து மட்டும் விலகும்படியும், அவசரகால நிலையை இரத்து செய்து பாராளுமன்ற மற்றும் மாகாண தேர்தல்களை ஜனவரி 15 இற்குள் நடத்துமாறு வலியுறுத்தி இருந்தார். பாக்கிஸ்தான் சர்வாதிகாரியுடனான பூட்டோவின் பேச்சுவார்த்தைகளில் அவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் விட்டு கொடுத்து போகும் உண்மையான முகம் பரவலான மக்கள் பிரிவினரின் பார்வையில் தெளிவாகத் தென்பட்டது. பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் சுற்றி வளைத்து கொண்டிருந்த நிலையில், பூட்டோ டைம்ஸ் இதழுக்கு தெரிவித்ததாவது: "அவர் உண்மையில் எங்களுடன் எவ்வித கூட்டுறவையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதாக எங்கள் கட்சி இறுதி முடிவுக்கு வந்துள்ளது. கேக் விஷமூட்டப்பட்டுள்ளது என்பதை யாரும் கவனிக்காமல் இருக்க, அவர் எங்களை கேக்கின் மேல் பூசும் இனிப்பாக பயன்படுத்தினார் என்பது உறுதியாக தெரிந்துவிட்டது." என்று தெரிவித்தார். மீண்டும் ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கான பிரச்சாரத்திற்காக பிற எதிர்கட்சிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்க கேட்டுக் கொள்ள இருப்பதாக நேற்று பூட்டோ அறிவித்தார். செப்டம்பரில் பாகிஸ்தானிற்கு திரும்பிய போது தடுக்கப்பட்டு மீண்டும் சவூதி அரேபியாவிற்கு நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் தலைவர் நவாஸ் ஷெரீப், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரும் மற்றும் பிற எதிர்கட்சிகளும் பூட்டோவின் முஷாரஃப்புடனான பேச்சுவார்த்தைக்கு மிகுந்த நெருக்கடி அளித்து வந்தார்கள். இம்ரான் கான் மற்றும் இஸ்லாமிக் ஜமாத்-ஈ-இஸ்லாமி மற்றும் பலூச்சி பிராந்திய கட்சிகளுடனும் தாம் பேச இருப்பதாக செவ்வாயன்று பூட்டோ தெரிவித்தார். பூட்டோவின் செய்தி தொடர்பாளர் ஷெர்ரீ ரெஹ்மான் நியூயோர்க் டைம்ஸ் இதழில் கூறி இருப்பதாவது; "இவை கடந்த வார நிகழ்வுகளுக்கான மற்றும் நாட்டின் மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கான ஒரு தர்க்கரீதியான விளைவுகளே. அவர்கள் அவரை மட்டும் அடைத்து வைக்கவில்லை, ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களையும் அடைத்து வைத்துள்ளார்கள். நாட்டின் ஒட்டுமொத்த தலைவர்களும் வீட்டு காவலின் கீழ் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். ஒரு பலமான எதிர்ப்பு இந்த எதிர்ப்பு கட்சிகளின் கூட்டணியை கொண்டு முஷாரஃபிற்கு நெருக்கடி அளிக்கவும் மற்றும் ஆதரவிற்காக புஷ் நிர்வாகம் உட்பட முக்கிய அதிகாரங்களிடம் முறையிடவும் பூட்டோ இதன் மூலம் திட்டமிடுகிறார். அதே நேரத்தில், எவ்வாறாயினும், ஆட்சியின் போலீஸ் நடவடிக்கை முறைக்கு எதிரான பரந்த எதிர்ப்பு அவர்களின் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும் என அனைத்து அரசியல் தலைவர்களும் கருதுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகத்திற்கான கோரிக்கையுடன் இணைந்து மேம்பட்ட வாழ்க்கை தரத்திற்கான கோரிக்கையுடன் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் தலையீடு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் அவர்கள் அஞ்சுகிறார்கள். இன்றைய Christian Science Monitor இதழில் வந்த ஒரு கட்டுரை பாகிஸ்தானில் மாணவர்களின் எதிர்ப்பு அதிகரித்து வருவதை வெளிப்படுத்தி இருக்கிறது. "பல்கலைக்களகங்களில் மாணவர்கள் மீது முஷாரஃப் அவரின் பாதுகாப்பு பாய்ச்சலைக் கட்டவிழ்த்து விட்ட பின்னர் - அரசியல் கட்சி தொண்டர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உள்நாட்டு சமூக குழுக்களுடன் - சமீபத்தில் நகர்புற தெரு கடாரத்தின் கலவைக் கூறாக மாணவர்களும் உருவாகி இருக்கிறார்கள். கடந்த வார நெருக்கடி நிலை பிரகடன அறிவிப்பிற்குப் பின்னர், லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் இரு பேராசிரியர்களின் கைது நடவடிக்கை மற்றும் பல்கலைக்கழக வளாக கதவருகில் குவிக்கப்பட்ட கலகத்தை ஒடுக்கும் போலீசின் வருகை ஆகியவை மாணவர்களிடையே உடனடி எதிர்ப்பைத் தூண்டிவிட்டிருக்கிறது. இந்த நெருப்புபொறி காட்டுத்தீ போன்ற பிற சிறிய, தனியார் மற்றும் இதர பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது. "இந்த புதிய இயக்கம் கடந்த இரண்டு தசாப்தங்களாக அரசியல்மயப்படுத்தப்பட்டிராத மாணவர்களை விழிப்படையச் செய்துள்ளது. அது முதிர்ச்சியடையாமலும் மற்றும் தொடர்பில்லாமல் இருக்கின்றபோதிலும், கடந்த காலத்தில் பிற இயக்கங்கள் செய்தது போன்று முஷாரஃப்பின் தலைவிதியை முடிவு செய்வதில் உதவுவதற்கு மாணவ சமூகத்திற்கு முழு சக்தி உள்ளது. புதிய கூட்டமைக்கப்படாத இயக்கம் மாணவ சக்திகளின் பாரம்பரிய மையங்களுக்குள் பரவுகிறது - அது மாணவர்களுக்கும் மற்றும் அவர்கள் எதிர்க்கும் அரசாங்கத்திற்கும் இரண்டிற்கும் - பெரும் சிக்கலாக அமையலாம்." உருவாகி இருக்கும் மாணவர் எதிர்ப்புகள் நகர்புற மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் பரந்த அரசியல்மயமாக்கலுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது. முஷாரஃப்பின் ஆட்சியின் கீழ் வியாபாரப்பிரிவுகள் இலாபமடைந்து இருந்த போதிலும், பெருமளவிலான மக்கள் அதிகளவில் வேலைவாய்ப்பின்மை, வறுமை, சீர்கெட்ட அத்தியாவசிய சேவைகள் ஆகியவற்றுடன் எவ்வித பொருளாதார முன்னேற்றமும் இன்றி பாதிக்கப்பட்டனர். இதே போன்று தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால், தொழிலாள வர்க்கமும் மற்றும் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளும் போராட்டத்திற்கென தெருவில் இறங்கலாம். ஒரு "பெரிய பேரணியை" ஏற்பாடு செய்திருந்த பூட்டோவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து லண்டனை மையமாகக் கொண்ட டைம்ஸ் இதழில் வெளியான ஓர் அறிக்கை, சர்வதேச ஆளும் வட்டங்களின் உள்ள பதட்டத்தை வெளிக்காட்டியது. "பெரிய பேரணி என்பது ஒரு தவறான பேரணியாக ஏன் மாறாது!" என்ற தலைப்பிட்ட இந்த கட்டுரை "பாக்கிஸ்தானின் எதிர்காலத்திற்காக அனைத்து தரப்பு ஆதரவாளர்களுடன் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் வரையில் பூட்டோ திட்டமிட்டிருந்த நீண்ட பேரணி என்பது பல தவறான வழிகாட்டுதல்களில் ஒன்றாகும். அது வீண் தற்பெருமையை காட்டுவதுடன், ஆதரவாளர்களின் உயிர்கள் குறித்த பொறுப்பற்றதன்மையையும் காட்டுகிறது. பூட்டோ தனக்குள்ள ஆதரவை இவ்வாறான எதிர்ப்புகளில் ஈடுபடுவதன் மூலம் காட்ட தேவையில்லை" என குறிப்பிட்டிருந்தது. டைம்ஸ் நாளிதழின் கவலை பாக்கிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவாளர்களின் உயிர்களை பற்றியதல்ல, ஆனால் அவ்வாறான ஒரு ஊர்வலமானது பாரிய ஆர்ப்பாட்டங்களாக பெருகி பூட்டோவின் கைப்பிடியில் இருந்து நழுவிவிடும் என்ற அபாயம் பற்றிதான். ஒருவேளை அவர் பதிலளிக்க வேண்டி இருந்திருந்தால், எதிர்ப்புகள் ஏற்கனவே வலுத்து வருகிறது என்றும், பிற எதிர்கட்சி தலைவர்களுடன் தாம் அதை கையில் எடுக்க முன் வந்தால் ஒழிய வெள்ளம் அபாயகரமான அளவிற்கு பாய்ந்துவிடும் எனவும் சந்தேகத்திற்கிடமின்றி பூட்டோ டைம்ஸிற்கு விளக்கி இருப்பார். ஜெனரல் முஷாரஃப்பின் சமீபத்திய அறிக்கைகள் எரியும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுகின்றன. நேற்றைய நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையில், நாட்டை காக்க தமது அவசரகால நிலை அறிவிப்பு சட்டம் அத்தியாவசியமாக தேவைப்பட்டது என பாக்கிஸ்தான் அதிபர் விடாபற்றுடன் தெரிவித்தார். ஜனவரி 9, 2008ல் தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவித்திருக்கும் அவர், இந்த மாத இறுதியில் இராணுவ தளபதி பதவியில் இருந்து இறங்க உத்தேசித்திருக்கிறார். ஆனால் அவசரகால ஆட்சியின் முக்கிய பிரச்சனைகளுக்கு பற்றி அவர் செய்தித்தாளுக்கு கூறும் போது: "தேர்தல் தடையின்றி நடப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார். இந்த ஆட்சி, ஊடகத்தின் வாயை அடைத்திருக்கிறது; எதிர்ப்புகளுக்கும் மற்றும் அரசியல் கூட்டங்களுக்கும் தடை விதித்திருக்கிறது; நீதிமன்றங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் எதிர்கட்சி தலைவர்களை சிறையில் அல்லது வீட்டு காவலில் வைத்திருக்கிறது, சிலரை நாடு கடத்தி இருக்கிறது. தேர்தல்கள் அவசரகால சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என கூறி இருப்பதின் மூலம், 'மீண்டும் ஜனநாயகம் கொண்டு வரப்படுகிறது' என்ற முஷாரஃப்பின் கருத்து ஒரு கேலிக்குரியது என்பதை எடுத்து காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற ஒரு தேர்தலை நிராகரிக்கப் போவதாக அனைத்து எதிர்கட்சிகளும் அறிவித்துள்ளன. இன்றைய நிலையில், முக்கிய சக்திகளின்- எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் - மறைமுகமான ஆதரவை முஷாரப் பெற்று வருகிறார். அவசரகால நிலையை குற்றஞ்சாட்டும் அதே வேளையில், புஷ் நிர்வாகம் பாக்கிஸ்தான் ஆட்சிக்கு எவ்வித அபராதங்களையோ அல்லது தடைகளையோ போடவில்லை, அது தொடர்ந்து அதன் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தில்" ஒரு முக்கிய நேச நாடாக பாக்கிஸ்தான் தொடர்வதற்கு ஆதரவளித்து வருகிறது. பாக்கிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு பாக்கிஸ்தான் முதன்மை வினியோக பாதையாக இருக்கிறது. சுமார் 75 சதவீத வினியோகம் அங்கிருந்து அல்லது பாக்கிஸ்தான் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. எவ்வாறிருப்பினும், பாக்கிஸ்தான் இராணுவத்தினுள் முஷாரஃப்பிற்கு மாற்றை அமெரிக்கா தேடிவருவதற்கான அறிகுறிகள் பல அங்கு காணப்படுகின்றன. ஒரு மேற்கத்திய இராஜாங்க அதிகாரி டைம்ஸ் நாளிதழுக்கு கூறுகையில்: "அவர் (முஷாரஃப்) அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இடம் அளிக்கவில்லையானால், பின் நிச்சயமாக நாங்கள் மாற்றீடுகள் பற்றி சிந்திக்க வேண்டி இருக்கும் என்பது மிக மிக தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாகும்." அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் மீது இராணுவத்திற்குள் ஏற்கனவே அதிருப்தி நிலவுகிறது. "இராணுவம் இந்த நிலையில் இருக்க விரும்பவில்லை. அவர்கள் அரசியலை விட்டு விலகி இருக்க விரும்புகிறார்கள், மேலும் முஷாரப் அவர்களை முன்னணியிலும், மத்தியிலும் நிறுத்தி இருப்பதிலும் அவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்." என அந்த இராஜாங்க அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க இணை செயலாளர் ஜோன் நெக்ரோபோன்ட் நாளை இஸ்லாமாபாத்திற்கு வர உள்ளார். முஷாரஃப்புடனான பேச்சுவார்த்தையின் உண்மையான தன்மை எவ்வகையில் அமைந்திருந்தாலும், அரசியல் நெருக்கடியை விரைவாக தீர்க்க அல்லது விளைவுகளை சந்திக்க வேண்டும் என்ற ஒரு இறுதி நிபந்தனையை நெக்ரோபோன்ட் சந்தேகத்திற்கு இடமின்றி புஷ் நிர்வாகத்தின் சார்பில் முன்வைப்பார். |