WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German train drivers intensify their strike
ஜேர்மன் இரயில் சாரதிகள் தமது வேலைநிறுத்தம் தீவிரமாக்குகின்றனர்
By our reporters
17 November 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
வியாழன் காலைக்கு முன்னதாக, முதன் முறையாக ஜேர்மனியின் பிராந்திய மற்றும்
தொலைதூர இரயில் வலையமைப்புகளையும் இணைத்து கொண்டதன் மூலம் ஜேர்மன் இரயில் சாரதிகள் சாரதிகள்
தங்களின் வேலைநிறுத்த போராட்டத்தை விரிவுபடுத்தினார்கள். ஜேர்மனியின் போக்குவரத்தை வெகுவாக
பாதித்திருக்கும் தற்போதைய வேலைநிறுத்தத்தை சனிக்கிழமை காலை வரை நீடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
ஜேர்மனி இரயில்வே இன் (Deutsche Bahn)
வரலாற்றில் இந்த வேலைநிறுத்தம் ஒரு மிகப் பெரிய போராட்டமாகும்.
இந்த வேலைநிறுத்தம் குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதியை அதிகளவில்
பாதித்துள்ளது. அந்த பகுதியில், பெரும்பான்மையான இரயில் சாரதிகள்
Deutsche
Lokomotivführer (GDL)
சங்கத்தில் ஒருங்கிணைந்துள்ளனர். பேர்லினில் ஜேர்மனி இரயில்வேயின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறும் போது,
"முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் சுமார் 15 சதவீத பிராந்திய இரயில்கள் மட்டுமே செயல்படுகின்றன." என்றார்.
நாட்டின் மேற்கு பகுதியில் சுமார் 50 சதவீத பிராந்திய இரயில்கள் செயல்பாட்டில்
உள்ளன, ஆனால் இவை பெரும்பாலும் ஜேர்மன் இரயில்வே நிர்வாகத்தின் அவசரசேவை திட்டங்கள் காரணமாக செயல்படுகின்றன.
தீவிரமடைந்திருக்கும் இந்த பிரச்சனையின் முழு பொறுப்பும் நேரடியாக ஜேர்மன்
இரயில்வே செயற்குழுவையே சாரும். இரயில் சங்கங்களான
Transnet மற்றும்
GDBA
ஆகியவற்றால் ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு உடன்பாட்டை இரயில் சாரதிகள் ஏற்றுக்கொள்வார்கள்
என்பதை வலியுறுத்தி ஜேர்மனி இரயில்வே தொடர்ந்து ஒரு புதிய உடன்பாட்டை செய்ய மறுத்து வருகிறது. அந்த
முன்னைய உடன்பாடு 4.5 சதவீத சம்பள உயர்வையும் மற்றும் ஒருதடவை 600 யூரோ ரொக்க தொகை வழங்குவதை
மட்டுமே கொண்டிருக்கிறது.
பல ஆண்டுகளாக இரயில் ஓட்டுனர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படாமலும் மற்றும்
அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 சதவீதம் குறைக்கப்பட்டும் இருப்பதால் இரயில் சாரதிகளுக்கான
இதுபோன்றதொரு உடன்பாடு உண்மையான சம்பளத்தில் ஒரு நிகர நஷ்டத்தையே அளிக்கும். ஆனால் அதே
நேரத்தில், சாரதிகளின் வேலைப்பளு பெருமளவில் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஒட்டுமொத்த ஆரம்ப சம்பளமான 2,500 யூரோவை 3,000 யூரோவாக
உயர்த்த வேண்டும், அத்துடன் ஒரு வாரத்திற்கான பணி நேரத்தை 41 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாக
குறைக்க வேண்டும் என்ற GDL
இன் கோரிக்கை முழுவதும் நியாயமானதே. இதுபோன்றதொரு கோரிக்கை
இரயில்வே நிதி ஒதுக்கீட்டைத் தாண்டுகிறது என்ற வாதம் தவறானதாகும்.
அதன் சுய புள்ளிவிபரங்களின் அடிப்படையில்,
GDL இன் சம்பள
உயர்வு கோரிக்கையை வழங்க ஜேர்மனி இரயில்வேக்கு 250 மில்லியன் யூரோ கூடுதலாக செலவு அதிகரிக்கும்.
அதாவது, இது நிறுவனம் கடந்த ஆண்டு அதன் பணியாளர்களுக்கான செலவில் இருந்து வெட்டிய தொகையில் இருந்து
சேமித்த 2.5 பில்லியன் யூரோ இலாபத்தில் பத்தில் ஒரு பங்காகும்.
ஜேர்மன் இரயில்வே நிர்வாகிகளின் சம்பள விகிதங்களை ஆராயும் போது,
பணப்பற்றாக்குறை ஒரு பிரச்சனையல்ல என்பது வெளிப்படையாக விளங்குகிறது. கடந்த ஆண்டு, நிர்வாகிகளின்
சம்பள விகிதம் ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் உயர்ந்தது, முன்னாள் மற்றும் இன்னாள் செயற்குழு உறுப்பினர்களின்
ஓய்வூதியங்கள் 15.3 சதவீதம் உயர்த்தப்பட்டன மற்றும் அனைத்து மேற்பார்வை பொதுக்குழு உறுப்பினர்களின்
ஒன்றிணைந்த வருவாய்கள் 269 சதவீதம் உயர்த்தப்பட்டது. (ஆதாரம்: 2006ம் ஆண்டுக்கான ஜேர்மனி
இரயில்வேயின் ஆண்டு அறிக்கை)
கடந்த ஆண்டு, ஜேர்மன் இரயில்வேயின் தலைவர் ஹார்ட்முட் மெஹ்டோர்ன்,
தமக்குத்தாமே 100 சதவீத உயர்வை அளித்ததன் மூலம் 3.18 மில்லியன் யூரோ வருவாய் பெற்று கொண்டார்.
அவரின் உதவியாளரான மார்க்ரெட் சுக்கால 2.1 மில்லியன் யூரோ பெற்றார்.
வேலைநிறுத்தம் என்பது ஓர் அச்சுறுத்தலாக இருப்பதாக தொடர்ந்து கூறி வந்த
இரயில்வே செயற்குழுவின் கருத்துக்கள் தற்போது உண்மையிலேயே அதன் தலைமீது திரும்பி இருக்கிறது.
இரயில் சாரதிகளின் ஒற்றுமையை குலைக்க
மெஹ்டோர்ன் மற்றும் அவரின் செயற்குழு பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறார்கள்.
வேலை நிலைமைகள் தொடர்ச்சியான சீரழிந்துவருவதற்கும்
மற்றும் தொடர்ச்சியான சம்பள
வெட்டுக்களுக்கான எதிர்ப்பைக் காட்டும் எவரொருவரையும் மிரட்டவும் மற்றும் ஓர் உதாரணத்தை காட்டவும்
அவர்கள் விரும்புகிறார்கள்.
இரயில் சாரதிகளின் கோரிக்கைகளை தீர்ப்பதற்காகும் செலவுகளை விட,
வேலைநிறுத்தத்தை உடைக்க ஆகும் செலவுகளில் பெருமளவில் பணத்தை செலவிட மெஹ்டோர்ன் தயாராகி உள்ளார்.
அதே நேரத்தில் இரயில் சாரதிகள் தங்களின் போராட்டத்தை நீட்டியிருக்கும் நிலையில், ஜேர்மன் இரயில்வே
நிர்வாகம் பல நாட்களாக தினசரி செய்தித்தாள்களில் செலவுமிக்க முழு நீள விளம்பரங்களைப் பிரசுரித்து
வருகிறது. "ஷ்ஹெல்! இந்த முறையற்ற செயலை நிறுத்து!" என்ற தலைப்பின் கீழ் "பல மாதங்களாக"
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மறுத்து வரும் GDL
மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மெஹ்டொர்னின் வார்த்தைஜால கோரிக்கை பின்வரும் வார்த்தைகளுடன் முடிவுறுகிறது:
"நாட்டை முழுமையாகப் பாதிக்கும் உங்களின் இந்த முயற்சிகளைக் கைவிடுங்கள்."
ஜேர்மன் இரயில்வேயின் மேற்பார்வைக்குழு (Supervisory
board) தயக்கமின்றி நிறுவனத்தின் செயற்குழுவுடன் உறுதியாக
தம்மை இணைத்துக்கொண்டு பின்வரும் அறிக்கையையும் அளித்துள்ளது; "வேலைநிறுத்தத்தை பொறுத்த வரை, ஜேர்மன்
இரயில் சாரதிகள் அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து நீடித்தாலும் கூட, ஒப்பந்த முறையை நீக்க வேண்டும்
என்ற ஜேர்மன் இரயில் சாரதிகளின் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுக்கும் செயற்குழுவின்
நிலைப்பாட்டிற்கு மேற்பார்வைக்குழு முழுமையான ஆதரவை அளிக்கிறது." என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவன செய்தித்துறையின் முக்கிய பிரமுகர் வோல்கெர் க்னவர் உலக சோசலிச
வலைத் தளத்திற்கு கூறுகையில், அந்த அறிக்கையின் மீது பொதுவான வாக்கெடுப்பு இருக்காது, ஆனால் அது ஒரு
"ஒருமித்த நிலைப்பாட்டை" குறிக்கும் என தெரிவித்தார்.
ஜேர்மன் தொழில் சட்டத்தின்படி, இது போன்ற மேற்பார்வைக்குழுவின் பாதி
இடங்கள் அந்நிறுவன தொழிலாளர் குழு மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் - அதாவது
பொதுக்குழுவில் இருக்கும் தொழிலாளர் பிரதிநிதிகள் தீர்மானத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை அளித்திருக்க
வேண்டும்.
மேற்பார்வைக்குழு உறுப்பினர்களாக உள்ள
Transnet
இரயில் தொழிற்சங்கத்தின் தலைவர் நோர்பெர்ட் ஹன்சென் மற்றும்
GDBA இரயில்
சங்கத்தின் தலைவர் க்ளவுஸ் டீட்டர் ஹோம்மெல் இருவரும் மேற்பார்வைக்குழுவின் ஒரு சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு
விடுத்திருந்தார்கள். இரயில்வே துறையைத் தனியார்மயமாக்குவது குறித்த ஒரு திட்டத்திற்கு அரசாங்க பிரதிநிதிகளின்
விளக்கங்களைப் பெற இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
Süddeutsche Zeitung
பத்திரிகையுடனான ஒரு பேட்டியில் Transnet
தலைவர் ஹன்சென், இரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தை கடுமையாக தாக்கினார். "ஜேர்மனி முழுமையும்
பாதிக்கப்படும் அளவிற்கு நெருக்கடி அளிக்கப்படுவது சிறிது கூட ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல", ஏனென்றால், சிறிய
சங்கங்கள் தங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து கொள்ள விரும்புகின்றன என அவர் தெரிவித்தார். இந்த
பிரச்சனை GDL
இற்கு "ஒரு பரந்த அந்தஸ்தை" உருவாக்குவதற்கானது என்பது ஹன்சென்னின் கருத்து. இந்த போராட்டம்
"தொழில்துறையை சார்ந்த ஜேர்மனியைப் பாதிப்புக்கு" இட்டு செல்வதால், மிக விரைவாக இது
முடிவிற்குகொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஜேர்மன் அரசாங்கமும் இந்த பிரச்சனைக்கு விரைவானதொரு முடிவை வலியுறுத்தி
உள்ளது. அரசாங்க செய்தி தொடர்பாளர் தோமஸ் ஸ்ரேக் புதனன்று கூறுகையில், இந்த இரயில் வேலைநிறுத்தம்
குறிப்பிடத்தக்க பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதுடன், "வளரும் சாதகமான பொருளாதார
முன்னேற்றங்களுக்கும் இதுவொரு சுமையாகும்." என அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இது
தொடரும் பட்சத்தில் மேலும் பல சிக்கலான விளைவுகள் ஏற்படலாம் என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உள்ள சமூக ஜனநாயக கட்சியின் (SPD)
ராய்னெர் வெண்ட் மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்(CDU)
மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன்(CSU)
ஆகிய பழமைவாத கட்சிகளின் ஒருங்கிணைந்த உட்குழுவின் பொருளாதார பேச்சாளர் லோரன்ஸ் மேயர் ஆகியோர்
"குழுசார்ந்த நலன்களுக்காக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு" எதிராக இரயில் சாரதிகளை எச்சரித்தனர்.
அனைத்து தொழிலாளர்களின் நலன் கருதி போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என
வெண்ட் கேட்டுக் கொண்டார்.
அனைத்திற்கும் மேலாக, பிற பிரிவு தொழிலாளர் மத்தியில் போராட்ட அறிகுறியை
பரவச் செய்வதை தடுப்பது மிக முக்கியமாகும் என சமூக ஜனநாயக கட்சியின் பிரதிநிதி மறைமுகமாக குறிப்பிட்டார்.
இரயில் சாரதிகளால் இன்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாளை இரயில் நிலையங்களில் உள்ள பராமரிப்பு பொறியாளர்கள்
மற்றும் பழுது திருத்தும் தொழிலாளர்களாலும் தொடரப்படலாம் என வெண்ட் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பில் இருந்தும் அதிகரித்து வரும் அழுத்தத்தை பார்க்கும்போது,
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரயில் சாரதிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும். ஜேர்மன் சோசலிச
சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் வினியோகித்த துண்டறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:
"அனைத்து தொழிலாளர்களும் தங்கள் பதவி பாகுபாடின்றி இரயில் சாரதிகளுக்கு
ஆதரவளிக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. ஜேர்மன் இரயில்வே நிர்வாகத்தின்
பெருமளவிலான அழுத்தத்தின் கீழ் இருக்கும் மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்து வரும் இரயில் சாரதிகளின்
ஒற்றுமையை உடைக்க ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பையும் (DGB)
மற்றும் அதனுடன் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களையும் அனுமதிக்காதீர்கள்."
"ஐக்கியத்திற்கான குழுக்களை உருவாக்குங்கள். மேலும் சம்பளம் மற்றும்
சமூகநலத்திட்ட வெட்டுக்களுக்கு எதிராகவும் மற்றும் சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும்
கிறிஸ்துவ சமூக யூனியன் ஆகியவற்றின் பெரும் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பரந்த எதிர்ப்புக்கான
ஆரம்பமாக இரயில் சாரதிகளின் போராட்டத்தை உருவாக்குங்கள்." என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. |