World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Rail workers, public service employees and students demonstrate in Amiens, France

பிரான்ஸ், அமியானில் இரயில் தொழிலாளர்கள், பொதுப் பணித் துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

By our reporters
22 November 2007

Back to screen version

செவ்வாயன்று பிரான்ஸ் முழுவதும் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் நிர்வாகத்தின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக 150 நகரங்களிலும், சிறு நகரங்களிலும் கிட்டத்தட்ட 700,000 மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினர். இரயில்வே தொழிலாளர்கள் குழுவின் தலைமையிலும் இது பல இடங்களில் நிகழ்ந்தது; அவர்கள் தங்கள் ஓய்வூதிய உரிமைகளை காப்பதற்கு ஏழாம் நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்; இதைத்தவிர ஏராளமான ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் அணிவகுப்பில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள், இரயில்வே தொழிலாளர்களை தவிர அஞ்சல் துறை, மருத்துவமனைகள், உள்ளூராட்சி, எரிவாயு, மின்விசை நிறுவனத் தொழிலாளர்களின் கூட்டம் மிகப் பெரிய அளவிலும், ஆலைகள் மற்றும் தனியார் துறைகளில் இருந்து குறைந்த தொழிலாளர் படையணியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

WSWS ஆதரவாளர் குழுவினர் "பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய அரசியல் மூலோபாயம் தேவை" என்ற ஆசிரியர் குழு அறிக்கையை ஆயிரக்கணக்கில் துண்டுப்பிரசுரங்களாக பாரிஸ், அமியான், ஸ்ட்ராஸ்பேர்க் மற்றும் நான்சி ஆகிய நகரங்களில் வினியோகித்தனர்.

அமியான் ஆர்ப்பாட்டத்தை ஒரு WSWS நிருபர்கள்குழு கண்ணுற்று, பங்கேற்றவர்கள் சிலரைப் பேட்டி கண்டது. கிட்டத்தட்ட 8,000 எதிர்ப்பாளர்கள் அமியான் நகர மையத்திற்கு அணிவகுத்து வந்திருந்தனர். இரயில்வே மற்றும் பிற அரசாங்க அமைப்புக்களின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று வழிநடத்தினர்; CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) மற்றும் (ஐக்கியம், ஐக்கியம், ஜனநாயகம்) SUD-RAIL, ஆகியவற்றின் உறுப்பினர்கள் பதாகைகள், முழக்க அட்டைகள் ஆகியவற்றை ஏந்திய வண்ணம் பங்கு பெற்றனர்; ஆசிரியர்கள், பல்கலைக்கழக, உயர்நிலைப் பள்ளிகளின் மாணவர்களும் கூட்டத்தில் கால் பங்கு நிறைந்திருந்தனர்.

அணிவகுப்பிற்கு முதல் நிலையில் இருந்தவர்கள் ஏந்திய பதாகையில் எழுதப்பட்டிருந்ததாவது: "வேலைகளுக்காக, வாங்கும் திறனுக்காக, தரமான பொதுப் பணி சேவைகளுக்காக."

வேலைகள், மறுசீரமைப்புக்கள், புதிய மாற்றங்கள் ஆகியவை பற்றி பூசல்களில் ஆழ்ந்துள்ள உள்ளூர் ஆலைகளின் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளும் அணிவகுப்பில் காணப்பட்டனர். இவற்றில் Valeo, Goodyear, Airbus நிறுவனங்களின் தொழிலாளர்களும் இருந்தனர். மற்ற தொழிற்சங்க பதாகைகள், கொடிகள் ஆகியவை காணப்பட்டாலும் என்று தொழிற்சங்கத்தின் கீழ் என்று இல்லாமல் பல ஆர்ப்பாட்டக்காரர்களும் நண்பர்கள், சக ஊழியர்களுடன் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

சுமார் இருபது பேர் அடங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு ஒன்றும் சிறு அளவு MJS (சோசலிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இளம் சோசலிஸ்டுகள் இயக்கம்) அமைப்பின் அடையாளச் சின்னங்களை அணிந்து கொண்டு வந்திருந்தனர். LCR, LO, PT, மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அரசியல் அடையாளம் இல்லாமல் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்; தொழிற்சங்க அல்லது மாணவர் பொதுச் சங்கத்தின் துண்டுப் பிரசுரங்களை கொடுத்தனர். அவர்கள் தங்கள் கட்சி ஏடுகளை விற்கவில்லை.

WSWS அறிக்கையை தவிர, MJS அமைப்பு விடுத்த, மாணவர்கள் எதிர்த்துவரும் LRU பல்கலைக்கழக தன்னாட்சி சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற அழைப்புவிடுத்த அறிக்கையை தவிர, வேறு அரசியல் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்படவில்லை. அந்த அறிக்கையும் LRU வை சோசலிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என்று கூறவில்லை; அது சார்க்கோசியின் குடியேற்றக் கொள்கையை பெரிதும் ஒத்திருக்கும் குடியேற்றக் கொள்கையை வைத்திருக்கிறது.

கையினால் தயாரிக்கப்பட்ட பதாகை ஒன்றில் போராட்டங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று அழைக்கப்பட்டிருந்தது; அது கூறியதாவது: கல்வி--பண்பாடு--சுகாதாரம்--சமூக உரிமைகள்: ஒரே போராட்டம்தான்." இது தொழிலாளர்களின் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் பாதிக்கப்படுகின்றன என்று நினைக்கப்படும் பிரச்சினைகள் பற்றி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க விரும்பும் தொழிற்சங்கத் தலைவர்களின் பிளவை உண்டுபண்டும் போக்கிற்கு எதிரானது என்று அறியப்பட்டது. உதாரணமாக Liberation புதன்கிழமைப் பதிப்பில் ஒரு CFDT தொழிற்சங்கப் போராளி இரயில்வே தொழிலாளர்களை பற்றி, "அவர்கள் கோரிக்கை மாதிரி எங்கள் கோரிக்கை இல்லை. எங்களை பொறுத்த வரையில், வாழ்க்கை செலவினங்கள் பற்றிய குறியீடு, ஊதிய உயர்வுகள், பொது ஊழியர்கள் மூன்றில் ஒரு பங்கினரை வெளியே அனுப்புதல் நிறுத்தப்பட வேண்டும் என்பவைதான் பிரச்சினைகள். எல்லோருடைய கோரிக்கைகளும் இணைக்கப்பட்டால், அனைவருக்கும் இழப்புத்தான் ஏற்படும்; அதை ஒருவரும் கேட்கமாட்டார்கள், அல்லது அரசாங்கம் தன் விருப்பப்படி ஏதேனும் ஒன்றைச் செய்யும்" என்று கூறியதாக எழுதியுள்ளது.

WSWS நிருபர்கள் இப்பிரச்சினையை பற்றி இரு பள்ளி ஆசிரியர்கள், Stephanie, Juliette இருவரிடமும் விவாதித்தது; ஒன்றாக அணிவகுத்துச் சென்ற இருவரும் தொழிற்சங்கத்தில் இல்லை. Stephanie தான் ஊதிய உயர்வு செலவினக் குறியீட்டை ஒட்டி இருக்கவேண்டும் என்பதற்காக போராட்டத்தில் கலந்து கொள்ளுவதாகவும், "அதே நேரத்தில் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமான பிரச்சினை வேலைக் குறைப்புக்கள் ஆகும். நாங்கள் துணைப் பணியாளர்களை இழந்து கொண்டிருக்கிறோம்" என்றார். "எங்களுடைய கணினி அறையில் உதவிக்கு துணைப் பணியாளர் இருந்தார். இப்பொழுது அப்படிக் கிடையாது; எங்களுக்கு பயிற்சியோ, நேரமோ அனைத்து மாணவர்களையும் கவனிப்பதற்கு இல்லை. ஆனால் ஒன்று உறுதி; பணியாளர்கள் குறைப்பு என்பது குடும்பங்களை மிகப் பெரிய அளவில் பாதிப்பிற்கு உட்படுத்தும்."

ஒரு நாள் வேலைநிறுத்தம் பணியாளர்கள் குறைப்பை நிறுத்தப் போதுமா என்பது பற்றி Stephanie யால் உறுதியாகக் கூறமுடியவில்லை; ஆனால் நிர்வாகப் பணி ஊழியர்கள் (மருத்துவமனைகளில் வேலைபார்ப்பவர்கள், கல்வித்துறை, உள்ளூராட்சி, அஞ்சல்துறை போன்றவற்றில் இருப்பவர்கள்) எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடன் இரயில் தொழிலாளர்களின் சிறப்பு திட்டம் பற்றிய போராட்டத்தை ஒன்றாகக் கொண்டுவருவதை அவர் கடுமையாக எதிர்த்தார்.

"2003ல் நாங்கள் எங்கள் ஓய்வூதியங்களுக்காக போராடியபோது, இரயில்வே தொழிலாளர்கள் எங்களுடன் வேலைநிறுத்தத்திற்கு வரவில்லை." என்று அவர் கூறினார். CGT, FO தொழிற்சங்கத் தலைமைதான் 2003ல் ஒரு ஒன்றுபட்ட போராட்டம் வராமல் இடைவிடாமல் தடுத்து நிறுத்தினர் என்று இந்த நிருபர் சுட்டிக்காட்டினார். உண்மையில் அதுதான் இன்று இரயில்வே தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதற்கு வழிவகுத்துள்ளது. அப்படியும் கூட, Stephanie சந்தேகத்தில்தான் இருந்தார்.

அவருடைய நண்பர் Juliette இக்கருத்துடன் உடன்படவில்லை. "போராட்டங்கள் இணைக்கப்படவில்லை என்றால் சார்க்கோசியை பின்வாங்க வைக்க முடியாது என்றுதான் நான் நம்புகிறேன். இதில் அவர் வெற்றிபெற்று விட்டால், மற்றப் பிரச்சினைகளிலும் அவர் விடாப்பிடியாகத்தான் அவர் இருப்பார் என்று கருதுகிறேன்" என்றார்.

Robert de Luzarches Lycee மாணவர்களின் குழு WSWS இடம் அவர்கள் பல்கலைக் கழக தன்னாட்சி சட்டத்தையும் சார்க்கோசியின் அனைத்துக் கொள்கைகளையும் எதிர்ப்பதாக கூறினர். ஒருவர் தெரிவித்தார்: "அவருடைய கொள்கைகள் பணக்காரர்களுக்குத்தான் உதவும். அவரை அகற்றுவதற்கு நமக்கு ஒரு நல்ல இடது அமைப்பு தேவை."

ஒரு மருத்துவமனை தொழிலாளியான Lionel கூறினார்: "அகவிலைக் குறியீட்டு எண் பிரச்சினை, ஊழியர்கள் பணி ஆகிய பிரச்சினைகளுக்காக நாங்கள் இங்கு உள்ளோம்." Suzel சேர்த்துக் கொண்ட கருத்து: "நம்முடைய பிரதிநிதிகள் இப்பொழுதுதான் சார்க்கோசிக்கு ஊதிய உயர்வு கொடுத்து வாக்களித்துள்ளனர். பொருளாதார உண்மை நிலைக்கு ஒப்ப நம்முடைய ஊதியங்கள் இல்லை என்ற உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும். உத்தியோக வாழ்வைத் துவக்கும் நேரத்தில்நீங்கள் மாதம் ஒன்றிற்கு 1,500 யூரோக்களில் வாழ்வது கடினம்; ."

ஒரு வரலாற்று மாணவியான Pauline Catty கூறியது: "அனைத்துப் பிரச்சினைகளையும் இணைத்துப் போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved