World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Worsening conflict between Russia and Georgia driven by Washington-Moscow rivalries

வாஷிங்டன்-மாஸ்கோ போட்டிகளால் உந்தப்பட்டு ரஷ்யாவிற்கும் ஜோர்ஜியாவிற்கும் இடையேயான முரண்பாடுகள் மோசமடைகின்றன

By Simon Whelan
30 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு குடியரசுகளான தெற்கு ஓசிடியா மற்றும் அப்காஜியாவில் நடந்த சமீபத்திய தொடர் நிகழ்வுகள், ரஷ்யாவின் புட்டின் நிர்வாகத்திற்கும் மிகைல் ஷாகாஷ்வில்லின் ஜோர்ஜிய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவை மேலும் படுமோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளன. தெற்கு ஓசிடியா மற்றும் அப்காஜியா இரண்டுமே மாஸ்கோவிடம் இருந்து ஒத்துழைப்பைப் பெற்று வருகின்றன.

ஜோர்ஜியாவின் விமானத்தளங்கள் மீது ரஷ்யாவின் சட்டவிரோத தொடர் திடீர்தாக்குதல்கள் குறித்து ஜோர்ஜியாவின் அரச அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையில் குற்றஞ்சாட்டி இருக்கின்றன. மேலும், மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பிரச்சனைக்குரிய அப்காஜியாவினில் உள்ள கோடோரி ஜோர்ஜ்க்குள் ஊடுருவியதால் ஒரு ரஷ்ய யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அவை தெரிவிக்கின்றன. கோடோரி ஜோர்ஜ் பிராந்தியம் ஜோர்ஜிய படைகளின் மற்றும் ஒரு திபிலிஸ் ஆதரவிலான வெளியிலிருந்து ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், இந்த இருதரப்புகளின் கட்டுப்பாட்டிலும் இருக்கும் இந்த பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாத பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

பிரிந்து சென்ற மற்றொரு குடியரசில், தெற்கு ஓசிடியன் படைகளுக்கும் அவர்களின் எதிர்தரப்பு ஜோர்ஜியன்களுக்கும் இடையே தொடர்ச்சியான துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.

மேலும் முக்கியமாக, செப்டம்பர் மத்தியில், அப்காஜியாவில் உள்ள ஒரு "பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மையத்தில்" மாஸ்கோவால் "ஊடுருவலாளர்கள்" என அழைக்கப்படுபவர்கள் ஜோர்ஜிய படைகளால் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 26ல், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஷாகாஷ்வில்லி பேசும் போது, "கவனமற்ற மற்றும் அபாயகரமான ரஷ்யாவின் நடவடிக்கைகள்" குறித்து அவர் குற்றஞ்சாட்டினார்.

இரண்டு பிரிந்து சென்ற குடியரசுகளையும் ஜோர்ஜியாவுடன் மீண்டும் ஐக்கியப்படுத்த, அதிகரித்து வரும் துணிச்சலான நடவடிக்கை எடுக்க நாட்டின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் ஷாகாஷ்வில்லியின் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டிற்குள்ளிருந்து, ஷாகாஷ்வில்லிற்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவு பலதரப்பட்ட சமூகத் தட்டுக்களிடம் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. திபிலிஸி ஆளும்தட்டை பொறுத்த வரை, ஷாகாஷ்வில்லிற்கு முன்பிருந்த எட்வார்ட் ஷிவர்டுனட்சே இன் ஆட்சியின் கீழ் இருந்த அளவிற்கு கூட, ஜோர்ஜியா பிரிந்து சென்ற குடியரசுகளின் மறுஒருங்கிணைப்பு விவகாரத்தில் தற்போது இல்லை. ஜோர்ஜிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பார்வையில், தலைநகர் திபிலிஸியில் தற்போதைய கட்டிடத்துறை வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் வர்த்தக நடவடிக்கைகள் ஏற்கனவே குறைந்து விட்ட வாழ்க்கைத்தரத்தின் மந்தநிலையை மறைக்க முடியாததாய் உள்ளது. ஷாகாஷ்வில்லி அவருக்கு முன்பு பதவியிலிருந்தவரிடம் இருந்து ஆட்சியை ஏற்றுக் கொண்டபோது, ஜோர்ஜியாவின் தனிநபர் வருமானம் சுவாஜிலாந்தை (Swaziland) விட குறைவாக இருந்தது, மேலும் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாழ்ந்தனர். இந்த இடைக்கால ஐந்து ஆண்டுகளில் முந்தையதை விட சற்றே மாறி இருப்பதாக காணப்படுகிறது.

பிரிந்து சென்ற குடியரசுகளுக்கு வழங்கப்படும் ரஷ்ய ஆதரவால் ஜோர்ஜியா ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக, இந்த பிராந்தியங்களில் உள்ள எரிசக்தி வளங்களை ஆக்கிரமிப்பதற்கான அதன் முனைவுகளில் வாஷிங்டனுடன் தன்னை இணக்கமாக்கி கொள்ளும் ஜோர்ஜிய அரசாங்கத்தின் முயற்சிகள் மிகவும் தீர்மானகரமானதாக இருந்து வருகின்றன.

ஜோர்ஜியா தற்போது ஈராக்கில் 2,000 துருப்புகளை கொண்டிருக்கிறது - அமெரிக்காவின் தளர்ந்துவரும் கூட்டணியில் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இதுவே இரண்டாவது மிக பெரிய துருப்பாகும். வாஷிங்டனுக்கு இணக்கமாக செயல்படும் அதன் கூட்டு நடவடிக்கை என்பது நேட்டோ உறுப்பினராகும் அதன் கோரிக்கைக்கு ஒரு இலகுவான பாதையை அமைப்பதற்கும் மற்றும் மாஸ்கோவுடனான ஜோர்ஜியாவின் கருத்து முரண்பாட்டில் அமெரிக்காவின் ஆலோசனையை மீண்டும் பெறுவதற்குமான நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

ஈராக்கில் குட் பகுதியில் புதிதாக ஜோர்ஜிய துருப்புகளை பயன்படுத்திய செய்தியை நியூயோர்க் டைம்ஸின் ஆண்ட்ரூ கிராமெர் இடம் தளபதி Georgi N. Zedguidze கூறுகையில், "படையினராக இங்கிருக்கும் நாங்கள் அமெரிக்க படையினருக்கு உதவுகிறோம். அமெரிக்கா ஒரு நாடு என்கிற முறையில் எங்கள் நாட்டிற்கு உதவும்." என்று தெரிவித்தார்.

2007ம் ஆண்டு இராணுவ நிதி ஒதுக்கீடு முழுவதுமாக மூன்றில் ஒரு பங்கு அதிகரிக்கப்படும் என ஜோர்ஜிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதனால் இராணுவத்திற்கு செலவிடப்படும் தொகை 769 மில்லியன் அமெரிக்க டாலராக உயரும். அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க உதவியுடன் - அமெரிக்க இராணுவ உதவித்தொகையை பெறுவதில் இஸ்ரேல் மற்றும் எகிப்திற்கு அடுத்தபடியாக ஜோர்ஜியாவே முன்னிலை வகிக்கிறது - இது ஒரு சிறிய நாட்டினால் மிகப்பெரியளவில் செய்யப்படும் செலவாகும்.

கடந்த ஆண்டு, ஜோர்ஜியா ஒரு நேட்டோ தரத்திலான இராணுவ தளத்தை செனாசியில் அப்காஜியாவுடன் இணைந்து அதன் சட்டபூர்வமற்ற எல்லையில் உருவாக்கியது. இந்த ஆண்டிற்கு பின்னர், தெற்கு ஓசிடியாவுடன் இதேபோன்ற தரத்திலான ஒரு தளம் எல்லையோரத்தில் திறக்கப்படும்.

ஒரு முன்னாள் சோவியத் குடியரசின் இது போன்ற ஒரு நிலை, முன்பை விட வெளிப்படையாக அமெரிக்காவுடன் முரண்பட்டிருக்கும் புட்டின் ஆட்சிக்கு எரிச்சலூட்டுகிறது. இதனால் ஷாகாஷ்வில்லியின் நிர்வாகத்தை சீர்குலைக்க அது அனைத்து விதமான முறைமைகளையும் மற்றும் அதன் திட்டங்களையும் கையாண்டு வருகிறது. 2003ல் இருந்து, ரஷ்ய அரசாங்கம், அதன் நெருங்கிய மிக பெரிய சந்தையான ஜோர்ஜியாவில் இருந்து தயாரிப்புக்களை ரஷ்யாவிற்கு இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொண்டிருக்கிறது. குளிர்காலங்களில் எரிசக்தி வினியோகத்தையும் நிறுத்தி கொண்டிருப்பதுடன், ரஷ்யாவில் இருந்து ஜோர்ஜிய தொழிலாளர்களையும் வெளியேற்றி, இதன் மூலம் மீண்டும் ஜோர்ஜியாவுடனான பரிவர்த்தனைக்கு முற்றுபுள்ளி வைத்தது. ஆனால் அப்காஜியா மற்றும் தெற்கு ஒசிடியாவிற்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளைத் தொடரும் ரஷ்யா, மிக அபாயகரமாக, ஜோர்ஜிய துருப்புகளை நேரடியாக இராணுவ மோதலுக்கு இழுக்க முயற்சித்தது.

புட்டின் ஆட்சி, அதன் தெற்கு எல்லையோரங்களில் தொடர்ந்து அமெரிக்க இராணுவத்தால் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.

சோவியத் யூனியனின் உடைவு அனைத்து யூரேசிய (Eurasia) மக்களின் பூகோள-அரசியல் வாழ்வை மாற்றியது. மத்திய ஆசியா மற்றும் கெளகாசஸ் பகுதிகளில் உள்ள ரஷ்யாவின் எல்லையோரங்களில் உள்ள பல புதிய சுதந்திர நாடுகள் உருவாயுள்ளதுடன், முன்னாள் சோவியத் பிராந்தியத்திற்கும் மற்றும் மத்திய கிழக்கு இடையிலும் மற்றும் தெற்கு கெளகாசஸிற்கும் மத்திய கிழக்கிற்கு இடையிலும் மற்றும் இதேபோன்று மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையில் புவியியல் எல்லை கோடுகளை மாற்றியமைத்துள்ளது. சோவியத் யூனியனின் எல்லைகள் கிழக்கில் துருக்கி மற்றும் ஈரான் வரை விரிந்திருந்தன.

யூரேசியாவிலும் மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக், சிலவேளை ஈரானிலும் கூட மற்றும் ஜோர்ஜியா உட்பட பல்வேறு மத்திய ஆசிய நாடுகளிலும் அமெரிக்க இராணுவத்தின் தொடர்ச்சியான ஊடுருவல் மாஸ்கோவிற்கு, அதன் பாரம்பரிய செல்வாக்குள்ள பகுதிகளில் ஒரு சகிக்க முடியாத எரிச்சலாக இருக்கிறது.

பெப்ரவரி 2007, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உறவுகளுக்கு ஒரு படுமோசமான வீழ்ச்சியாக அமைந்தது. முனிச் மாநாட்டில் பாதுகாப்பு கொள்கை குறித்த ஜனாதிபதி புட்டினின் உரை ரஷ்ய பிராந்தியங்களில் புஷ் ஆட்சியின் நேரடியான சர்வதேச ஆக்கிரமிப்புகள் மற்றும் திட்டங்களை குற்றஞ்சாட்டியது. அதை தொடர்ந்து மத்திய கிழக்கிற்கான பயணத்தின் போதும், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்பலமாக ரஷ்யா ஒரு மிக பெரிய சக்தியாக தன்னை உணர்வதாக புட்டின் மீண்டும் வலியுறுத்தி கூறினார்.

ரஷ்ய அரசாங்கம் அமெரிக்காவை தமது 'முதன்மை எதிரியாக' கருதி இருக்கிறது. நாஜி தாக்குதலை முறியடித்த செம்படையின் 62ம் ஆண்டு நினைவுநாள் கொண்டாட்டத்திற்கான மே 9ம் தேதி வெற்றி விழா உரையில் அவர், புஷ் நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கும், நாஜி ஆட்சியின் மூன்றாம் ஜேர்மன் அரசின் யுத்தத்திற்கான முனைவுகளுக்கும் இடையே ஒரு ஒப்பீட்டை முன்வைத்து பேசினார். ''சோவியத் யூனியனின் உடைவை இருபதாம் நூற்றாண்டின் மிக பெரிய பூகோள-அரசியல் அழிவென'' அவர் தம் வருத்தத்தை தெரிவித்தார்.

மத்திய கிழக்குடன் ரஷ்யாவின் நெருக்கத்தை தனது பங்கிற்கு புஷ் நிர்வாகமும் நன்கு உணர்ந்திருக்கிறது. ரஷ்ய இராணுவம் தெற்கு ஓசிடியா வழியாக ஜோர்ஜியாவிற்குள் நுழைந்தால், அவர்களை ஈரானிய எல்லையில் இருந்து வெறும் 250 மைல் தூரத்திற்கு கொண்டு வந்து சேர்த்துவிடும்.

ஈரானுக்கு எதிராக வைக்கப்படலாம் என கருதப்படும் ஓர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஒன்றை செக் குடியரசு மற்றும் போலந்தில் வாஷிங்டன் நிறுவ முனைகின்றது. ஆனால் உண்மையான இலக்கு ரஷ்யா தான் என்பதை மாஸ்கோ அறிந்திருக்கிறது. செப்டம்பர் மாத மத்தியில், உக்ரைன் துறைமுகமான செவஸ்டபோலை தளமாக கொண்டு நேட்டோ ஒரு பெரிய கப்பல் பயிற்சியினை நடாத்தியது. இந்த யுத்த பயிற்சியில் அஜெர்பைஜான், ஜோர்ஜியா மற்றும் அப்பகுதியின் சொந்தக்காரர் உக்ரைனும் உள்ளடங்கி இருக்கின்றன. அதே சமயத்தின் நெருக்கமாக ரஷ்யா, சீனா மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளும், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு (Shanghai Cooperation Organisation) என்ற பெயரில் கூட்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அமெரிக்க அத்துமீறல்களுக்கு பதிலடியாக, அப்காஜியன் மற்றும் தெற்கு ஓசிடியன் சுயாட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் ஜோர்ஜியா மண்ணில் வாஷிங்டனுக்கு எதிராக மாஸ்கோ ஒரு மறைமுக யுத்தத்தை நடத்தி வருகிறது. ஜோர்ஜியாவில் ஒரு சிறு யுத்தம் நடந்து வருவதாக கூறும் சில ரஷ்ய ஊடகங்கள் இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது 1990 களின் முன்பு செசேன்யாவில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிரொலிப்பு போன்றே இவை உள்ளன.

ரஷ்யா, தன் சொந்த இராணுவத்தையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏவுகணைகள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் ஏழாண்டு புனரமைப்பு திட்டங்களுக்காக 200 பில்லியன் அமெரிக்க டாலரை புட்டின் ஒதுக்கீடு செய்தார். ஒரு டஜன் ஏவுகணை தாங்கிய யுத்தவிமானங்கள், இவற்றுடன் டேங்கர் விமானங்களும் நிரந்தமாக ஆகாயத்தில் இருக்கும் என ஆகஸ்டு 17 இல் அவர் அறிவித்தார். ரஷ்யாவிற்கும் நேட்டோ படைகளான பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு தொடர்ச்சியான ஆகாய மோதல் நிகழ்வுகளுக்கு மத்தியிலும் இது போன்ற யுத்தவிமானங்கள் 15 வருட இடைவேளைக்கு பின் மீண்டும் கொண்டு வரப்படுகின்றன.

24 மணி நேரமும் விமானங்கள் ஆகாயத்தில் இருப்பது குறித்து அறிவித்த சில நாட்களுக்கு பின்னர், விமானவழி தாக்கும் ஒரு புதிய உயிர்கொல்லி வெடிகுண்டை ரஷ்ய இராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்திருப்பதாகவும் ரஷ்ய இராணுவம் அறிவித்தது. இந்த பாரிய வெடிப்பை உருவாக்கும் குண்டு உலகின் மிக கொடிய அணுவல்லாத ஆயுதம் என்று கூறப்படுகிறது. "அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை" என்ற புனைப்பெயர் கொண்ட இந்த புதிய ஆயுதம் அமெரிக்கா உருவாக்கிய "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என்பதை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்தது என அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சி நிலையமான Channel One தெரிவித்தது.

ஈராக் மீதான தாக்குதல் மூலம் இயற்கை வளங்களை ஆக்கிரமிக்க புஷ் ஆட்சியின் முனைவுகள் மிக மோசமாக பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. அது எண்ணெய் விலை அதிகளவில் உயர உதவி இருப்பதுடன், அதன் மூலம் மிக பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளரும், OPEC இல் அங்கத்தவரல்லாத பெரியளவில் எண்ணெய் ஏற்றுமதியாளராகவும் விளங்கும் ரஷ்யாவை பலப்படுத்தி இருக்கிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பு நாளாந்தம் மோசமடைந்துவரும் நிலைமையை எதிர்கொள்வதுடன் மற்றும் அவர்களின் சொந்த கருவூலம் நிரம்பியுள்ள நிலையில், தற்போது எதிர்தாக்குதலுக்கு செல்ல மாஸ்கோ துணிந்து இருக்கிறது.

ஈராக்கின் எதிர்ப்புகளை அடக்குவதில் வாஷிங்டனின் தோல்விகளை முன்னிறுத்தி அதனை கடிந்திருக்கும் புட்டின், கடந்த நான்கு ஆண்டு ஆக்கிரமிப்பில் அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள் என தெளிவாக கேட்டார். ஈராக்கில் இருந்து கூட்டு படைகளை திரும்ப பெறுவதற்கான கால அட்டவணையை முன்வைக்கும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாஸ்கோவின் இராணுவ ஆய்வாளர் Pavel Feigenhauer சமீபத்தில் பிபிசி இற்கு கூறுகையில், "பால்டிக் நாடுகள் மற்றும் போலந்து, ஜோர்ஜியா போன்று நேட்டோவில் சேர விரும்புபவர்கள், நேட்டோவில் சேர விரும்புவதின் முக்கிய காரணம் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு உத்தரவாதத்தைப் பெறுவதற்கு தான்." என தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், நேட்டோவில் ஜோர்ஜியா உறுப்பினராவது "அடிப்படையில் நேட்டோவையும் ரஷ்யாவையும் எதிரிகளாக்குகிறது ....ஒரு வகையில் அவைகள் மோதலுக்கு செல்லும் நிலையில்தான் இருக்கின்றன. எனவே உண்மையான கூட்டணிக்கு சாத்தியக்கூறு கிடையாது. மேலும் நேட்டோவில் காணப்படும் எவ்விதமான விரிவாக்கமும், ரஷ்யாவில், மாஸ்கோவில் எங்களின் நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகும்." என தெரிவித்தார்.