World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: 1.5 million strike against Sarkozy's policies

பிரான்ஸ்: 1.5 மில்லியன் பேர் சார்க்கோசியின் கொள்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தம்

By Antoine Lerougetel and Peter Schwarz
21 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

மொத்தம் 5 மில்லியன் பொதுத்துறை தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் தொழிலாளர்கள் ஜனாதிபதி சார்க்கோசியின் வேலைக்குறைப்புக்கள், பொதுத்துறை பணிகள் மீதான தாக்குதலை எதிர்த்தும் வாழ்க்கைச் செலவில் கடும் உயர்வு இருப்பதை சரியீடு செய்யும் வகையில் ஊதிய உயர்வைக் கோரியும் செவ்வாயன்று பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் விடுத்த ஒரு நாள் வேலைநிறுத்த அழைப்பில் பங்கேற்றனர்.

ஆசிரியர்களில் 60 சதவிகிதத்தினருக்கும் மேலாக பங்கேற்றது குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக இருந்ததுடன், அடுத்த ஆண்டு மட்டும் 11,200 ஆசிரியர்களின் வேலைகள அழிப்பதற்கு அரசாங்கம் கொண்டுள்ள திட்டத்திற்கு எதிரான பரந்த சீற்றத்தையும் வெளிப்படுத்தியது.

நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கிட்டத்தட்ட 700,000 பொதுப்பணித்துறை தொழிலாளர்கள் பங்கேற்றனர். இவர்களுடன், ஒரு பிற்போக்குத்தனமான பல்கலைக் கழக சட்டத்தை எதிர்க்கும் ஏராளமான பல்கலைக் கழக, உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இணைந்து கொண்டனர்; அதேபோல் தங்கள் ஓய்வூதியத்தை காப்பதற்காக ஏழு நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரயில் மற்றும் உள்ளூர் போக்குவரத்துத் தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 70,000 அணிவகுத்துச் சென்றவர்கள் கலந்து கொண்ட ஒரு மிகப் பெரிய பேரணி பாரிசில் நடைபெற்றது. Marseilles ல் 35,000 தொழிலாளர்களும் அதே எண்ணிக்கையில் Toulouse லும், Lille இல் 20,000 பேரும், Grenlobe இல் 10,000 பேரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டம் சார்க்கோசி மற்றும் அவருடைய கொள்கைகளுக்கு எதிராக எந்த அளவு மக்கள் எதிர்ப்பு உள்ளது என்பதை நேர்த்தியாக பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. குளிர், தூறல் ஆகியவை இருந்தபோதிலும்கூட, பல்லாயிரக்கணக்கான மக்கள் Place d'Italie யில் கூடி பல மணி நேரங்கள் நிகழ்வில் பங்கு பெற்றனர். அணிவகுப்பு பல கிலோமீட்டர் நீளம் நீண்டிருந்தது. அணிவகுப்பின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒரு இடத்தைக் கடப்பதற்கு மூன்று மணி நேரம் பிடித்தது.

செவிலியர், ஆசிரியர்கள், உள்ளூராட்சி ஊழியர்கள், போலீஸ் இன்னும் பலர் என்று கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவு பொதுத்துறை ஊழியர்களும் எதிர்ப்பில் பங்கு பெற்றனர். சில விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். அது விமானப் பயணங்களில் காலதாமதத்தை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி சார்க்கோசிக்கு எதிரான முழக்கங்களும் பதாகை அட்டைகளும் எங்கும் காணப்பட்டன. Oise valley இல் உள்ள Simone Veil மருத்துவ மனையில் இருந்து வந்த செவிலியர் குழுவினர், "சார்க்கோ, இராஜிநாமா செய்! எங்கள் வலிமை ஐக்கியத்தில் இருக்கிறது." என்று முழக்கமிட்டனர்.

உலக சோசலிச வலைத் தளத்திடம் ஒரு செவிலியர் தானும் தன்னுடை சக செவிலியரும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஊதியத்தில் எந்த உயர்வையும் பெறவில்லை என்று கூறினார். ஒரு செவிலியர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியம், அவருடைய வேலைப்போக்கின் உச்சக்கட்டத்தில் ஒரு மாதத்திற்கு 1,700 யூரோக்கள் என்றும் ஓய்வூதியம் 1,100 என்றும் இருக்கின்றன.

ஜனாதிபதி பின்வாங்குவாரா எனக் கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்; "நான் அவ்வாறு நம்புகிறேன்; ஆனால் சார்க்கோசி உறுதியானவர், எளிதில் விட்டுக் கொடுத்துவிடமாட்டார்." சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செகோலென் ரோயால் ஜனாதிபதித் தேர்தலில் கடந்த வசந்த காலத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் நிகழ்வுகள் சாதகமாக இருந்திராது என்ற சந்தேகத்தைத்தான் அவர் தெரிவித்தார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமான வேலைநிறுத்தம் செய்த இரயில்வே தொழிலாளர்களும் பாரிஸ் மெட்ரோ தொழிலாளர்களும் பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இரயில் வேலைநிறுத்தம் செவ்வாயன்று முந்தைய தினத்தில் இருந்ததைவிட அதிகமாகத்தான் இருந்தது.

இந்தப் பூசலுக்கு எப்படித் தீர்வு காண்பது என்று கேட்கப்பட்டபோது, Choisy-le-Roi இல் இரயில் பராமரிப்புப் பிரிவில் இருக்கும் Silvain கூறினார்: "அரசாங்கம் பின்வாங்கும் வரை பணிக்குச் செல்லாதீர்கள்."

தொழிற்சங்கங்கள், நிர்வாகம் மற்றும் அரசாங்கம் புதனன்று முத்தரப்புப் பேச்சுக்கள் நடத்த இருப்பது பற்றி சில்வன், கலந்த உணர்வுகளைத்தான் கொண்டிருந்தார். "உடன்பாடு என்று வரும்போது, அது மோசமான கருத்து அல்ல" என்றார். ஆனால் தொழிற்சங்கங்கள் முழு ஓய்வுத் தொகை பெறுவதற்கு தற்போதைய 37.5 ல் இருந்து பணி ஆண்டுகள் அதிகரிப்பு வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு விட்டுக்கொடுப்புக்கள் ஏற்கப்பட முடியாதது என்று அவர் வலியுறுத்தினார். அரசாங்கம் குறைந்த பட்சம் 40 ஆண்டுகள் பணியை திணிக்க விரும்புகிறது.

Flins ல் இருக்கும் Renault கார்த் தயாரிப்பு ஆலையில் இருந்து தொழிலாளர்கள் குழு ஒன்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது. தங்கள் ஒற்றுமையைக் காட்டுவதற்கு வந்ததாக அவர்கள் கூறினர். "இரயில்வே தொழிலாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியங்கள் அகற்றப்பட்டுவிட்டால், அடுத்தாற்போல் நாங்கள்தான் கஷ்டத்திற்கு உள்ளாக்கப்படுவோம்." என்று ஒருவர் கூறினார். "இதன் பின் அவர்கள் பணி ஆண்டுகளை 41 அல்லது 42 என உயர்த்துவர்" என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முக்கியமாக தென்பட்டவர்கள் ஏராளமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஆவர். பிரான்சில் பல்கலைக்கழகங்கள் பலவும் மூடப்பட்டுவிட்டன அல்லது மாணவர் சங்கங்களால் கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டுவிட்டன; ஆனால் அரசாங்கத்தின் கல்விச் சட்டத்தை எதிர்த்த மாணவர்களின் நடவடிக்கை சமீபத்தில்தான் பள்ளிகளுக்கும் வந்துள்ளன. பல உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் இரயில் தொழிலாளர்களுக்கு தங்கள் ஒற்றுமையை தெரியப்படுத்துவதற்காக வந்திருந்தனர்.

Isabel, Barbara, Anna, Elie என்று Enghien-les-bains ல் இருக்கும் Gustav Monod உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம் WSWS உரையாடியது. அவர்கள் அனைவருமே சார்க்கோசியை பற்றி கோபத்துடன் பேசினர். "மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக அவர் தூண்டிவிடுகிறார், முதலாளிகளின் நலன்களைத்தான் பாதுகாக்கிறார், மக்களுடைய இழிந்த உணர்வுகளை எழுப்பிவிடுகிறார், அனைத்தையும் மோசமாக்குகிறார்" என்பவை அவர்களுடைய சில கருத்துக்கள் ஆகும். "Medef (பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்பு) இன் நலன்களைப் பற்றித்தான் அவர் கவலைப்படுவார்" என்று ஒரு மாணவி கூறினார்.

இவர்கள் அனைவரும் இரயில் வேலைநிறுத்தம் தொடர வேண்டும் என்றும் சோசலிஸ்ட் கட்சியைப் பற்றி கேட்கையில், அதனை உதறித்தள்ளும் வகையிலும் பேசினர். "அவர்கள் தீவிரமாக இல்லை; தங்களுக்குள்ளேயே விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு எதிர்க் கட்சியாக உண்மையில் இயங்க வேண்டும் என்ற கருத்தையே கொண்டிருக்கவில்லை."

தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு ஆர்ப்பாட்டக்காரர்களின் உறுதிப்பாட்டிற்கு முற்றிலும் எதிரிடையாக இருந்தது.

சோசலிஸ்ட் கட்சி சார்புடைய CFDT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு) உடைய தலைவரான François Chérèque, இரயில் தொழிலாளர்களின் போராட்டத்தை எள்ளி நகையாடியுள்ளார். ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் திங்களன்று அவர், "நம்முடைய நாட்டில் 40 ஆண்டுகள் கண்டிப்பாக உழைக்க வேண்டும் என்று இருக்கும்போது இவர்கள் 37.5 ஆண்டுகள் மட்டும் உழைத்தால் போதும் என்ற நினைப்பைக் கொண்டிருப்பதற்காக" தொழிலாளர்களை சாடினார். அவருடைய தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் முடிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்துள்ளது.

பாரிஸ் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியில் இருந்த Chérèque, பெரும் எதிர்ப்பிற்கும், சீற்றத்திற்கும் உட்பட்ட அளவில், இறுதியாக அணிவகுப்பில் இருந்து வெளியேற நேர்ந்தது.

UNSA தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரும் இரயில்வேத் தொழிலாளர்களை தாக்கிப் பேசினார். BFM வானொலியிடம் இரயில் தொழிலாளர்களின் இயக்கம் "முறையானது, ஆனால் அனைத்துக் கோரிக்கைகளும் ஒதுக்கப்பட வேண்டியவை" என்றார்.

அரசாங்க ஊழியர்கள் வாங்கும் திறனை அதிகப்படுத்தும் வகையில் ஊதியத்தைக் கோரியுள்ளதற்கு அவர், "போக்குவரத்துத் துறையில் சிறப்புத் திட்ட ஓய்வூதியங்களுக்கான பாதுகாப்பிற்கு சக்தி வாய்ந்த இயக்கம் இருப்பதால் இக்கோரிக்கை கேட்கப்படாமல் இருக்கிறது" என்று அவர் கூறினார்.

புதனன்று இரயில்வே தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் கொண்டுள்ள ஆறு தொழிற்சங்கங்களும் அரசாங்கம் மற்றும் இரயில் நிர்வாகத்தின் பிரதிநிதிகளை பேச்சு வார்த்தைகளுக்காக சந்திக்க உள்ளன. அரசாங்கத்தின் "சீர்திருத்தச் சட்டம்" ஒன்றும் விவாதத்திற்கு இல்லை--ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படல், கூடுதலாக குறைப்புக்கள் முன்கூட்டி ஓய்வு பெறுவோருக்கு, ஓய்வூதியங்களை ஊதிய உயர்வுடன் பிணைக்காமல் வாழ்க்கைச் செலவினக் கூறியீட்டுடன் இணைப்பது என்பது பற்றி இல்லை--ஆனால் ஓய்வுதியக் குறைப்புக்கள் என்ற கசப்பான மாத்திரையை விழுங்குவதற்கு நிதிய முறையில் இனிப்பை அளித்தல்பற்றிய விவாதம்தான் நடத்தப்படும். இரயில்வே நிர்வாகம் மற்றவற்றுடன் மூத்த தொழிலாளர்களுக்கு ஒரு சிறிய ஊதிய உயர்வைத் தரக்கூடும் என்ற குறிப்பைக் காட்டியுள்ளது.

தொழிற்சங்கங்கள் இத்தகைய பெயரளவு பணத்தை ஒரு சலுகையாகப் பெற்று, வேலைநிறுத்தத்தை முறித்து விற்றுவிடக்கூடும் என்பதுதான் ஆபத்து ஆகும். இது சார்க்கோசிக்கு ஒரு வெற்றியைப் பிரதிபலிக்கும்; அவர் அதைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் மற்றய பகுதிகளை சுரண்ட முற்படுவார்.

இரயில் வேலைநிறுத்தம் தொடங்கியவேளை மெளனமாக இருந்த பின்னர், சார்க்கோசி செவ்வாயன்று மேயர்கள் மாநாடு ஒன்றைப் பயன்படுத்தி தன்னுடைய நிலைப்பாட்டை வலியுறுத்தினார். "நாள் முழுவதும் வேலைபார்த்துக் களைத்து வீடு திரும்பும்போது பஸ்கள் ஓடாமல், மெட்ரோ அல்லது இரயில்கள ஓடாமல் இருக்கும் நிலையில் தள்ளப்பட்டு, அவர்கள் பிணைக்கைதிகள் போல் இருத்தப்பட்டுள்ளனர் என்ற நியாயமான உணர்வைக் கொண்டுள்ள மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்கள் சார்பாக" தான் பேசுவதாகக் கூறினார். "இந்த வேலையை இறுதிவரை முடிக்க நான் உறுதி கொண்டுள்ளேன். சீர்திருத்தம் செயல்படுத்தப்படும். எவருக்கும் அதைப்பற்றி எவ்வித ஐயங்களும் தேவையில்லை."

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்து சார்க்கோசிக்கு மிகவும் தேவைப்படும் வெற்றியையும் கொடுக்கின்ற இப்படிப்பட்ட தெளிவான ஆபத்து இருப்பினும், ஆர்பாட்டங்களில் அதிக அரசியல் விவாதங்கள் ஏதும் இல்லை. "தீவிர இடது" எனப்படும் Lutte Ouvrière மற்றும் Ligue Communiste Révolutionnaire உட்பட எந்த அரசியல் கட்சிகளும் பொது நடவடிக்கைகளில் தோன்றவில்லை, தங்கள் செய்தித்தாட்களில் அதிகக் குறிப்பையும் காட்டவில்லை. மாறாக கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் கட்சி அடையாளத்தை மறைத்துக் கொண்டு சாதாரண தொழிற்சங்க உறுப்பினர்கள் போல் அணிவகுப்பில் வந்தனர்.

மறுபுறம், WSWS கொடுத்திருந்த "பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு ஒரு புதிய அரசியில் மூலோபாயம் தேவை" என்ற அறிக்கை கணிசமான கவனத்தை ஈர்த்தது; இது பாரிசிலும் மற்ற நகரங்களிலும் வினியோகிக்கப்பட்டது; இது தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுத்துவிடக் கூடிய ஆபத்தைப் பற்றி எச்சரித்திருந்தது.

செவ்வாய் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய கூடுதலான தகவல்கள் மற்றும் அறிக்கைகளை நாளை WSWS வெளியிடும்.