:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan president hands down war
budget
இலங்கை ஜனாதிபதி யுத்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கின்றார்
By Saman Gunadasa
13 November 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
நிதியமைச்சர் பதவியையும் வகிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ,
நவம்பர் 7ம் திகதி யுத்த வரவு செலவுத் திட்டம் என்று மட்டுமே விவரிக்கக் கூடிய ஒன்றை பாராளுமன்றத்தில்
முன்வைத்தார். பாதுகாப்புச் செலவுக்காக சாதனை ஒதுக்கீடு ஒன்றை அறிவித்த அவர், அரசாங்கச் செலவின் ஏனைய
பகுதிகளிலும் "தாய் நாட்டைக் காப்பதற்கு" முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
இராஜபக்ஷ நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளியதற்கு நேரடிப் பொறுப்பாளியாவார்.
2005 நவம்பரில் அவர் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றதன் பின்னர், பதட்ட நிலைமைகள் உடனடியாக வளர்ச்சி
கண்டதோடு 2006 ஜூலையின் பின்னர் வெளிப்படையான இராணுவத் தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஜனாதிபதி தன்னுடைய
வரவுசெலவுத் திட்ட உரையில், "ஒரு வெற்றிகரமான மனிதாபிமான நடவடிக்கையில் யுத்த நிறுத்தம் எனப்படுவதன்
விளைவாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியங்கள் உட்பட முழு கிழக்கு மாகாணத்தையும்
விடுவித்துக் கொண்டதாக" பகிரங்கமாக பெருமைப்பட்டுக் கொண்டார்.
"எனப்படுவதன்" என்ற பதத்தைப் பயன்படுத்தியமையானது ஐக்கிய தேசியக் கட்சி
தலைமையிலான அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002ல் கைச்சாத்திட்டுக் கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை
இராஜபக்ஷ அவமதிப்பதை கோடிட்டுக்காட்டுகிறது. "மனிதாபிமானம்" என்பதைப் பொறுத்தவரை, கிழக்கில் இராணுவம்
முன்னெடுத்த தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பத்தாயிரங்களுக்கும் அதிகமானோர்
தமது வீடுகளை இழந்துள்ளனர்.
தனது அரசாங்கம் புலிகளை அழிக்க ஒட்டு மொத்த யுத்தம் ஒன்றை முன்னெடுக்க
திட்டமிட்டுள்ளது என்பதை இராஜபக்ஷ முழுமையாகத் தெளிவுபடுத்தியுள்ளார். அனுராதபுரம் விமானப்படைத் தளத்தின்
மீது கடந்த மாதம் புலிகள் தொடுத்த எதிர்த் தாக்குதலைப் பற்றிக்கொண்ட அவர்: "அவர்கள் ஆயுதங்களை
ஒப்படைத்துவிட்டு ஜனநாயக அரசியல் தீர்வொன்றுக்கு உடன்படத் தயாராகப் போவதேயில்லை...
பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதைத் தவிர வேறு மாற்றீடுகள் எம்மிடம் இல்லை" என பிரகடனம் செய்தார்.
இந்த யுத்தத்தை முன்னெடுப்பதற்காக, இராஜபக்ஷ 2008ம் ஆண்டுக்கான இராணுவ
செலவை 166 பில்லியன் ரூபாய்கள் (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) வரை 20 வீதம் அதிகரித்துள்ளார்.
இராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, பாதுகாப்புக்கான ஒதுக்கீடு 265 வீதத்தால் பிரமாண்டமானளவு
அதிகரித்துள்ளதோடு இப்போது அரசாங்கத்தின் மொத்த செலவில் 16 வீதத்தை விழுங்கிக்கொண்டுள்ளது.
ஜனத்தொகையில் பெருந்தொகையானவர்கள் நாளொன்றுக்கு 1 டொலருக்கும் குறைவான வருமானத்தில்
உயிர்பிழைத்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் நாளொன்றுக்கான இராணுவச் செலவு 4 மில்லியன் அமெரிக்க
டொலர்களாக உள்ளது.
ஜனாதிபதி தனது வரவுசெலவுத் திட்ட உரையில் தெரிவித்ததாவது: "எமது
தாயகத்தை காக்க கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை எந்தவொரு சவாலுக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது."
இப்போது இலவச சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவை விட பாதுகாப்புச் செலவு ஒன்றரை மடங்கு
அதிகமாக உள்ளது.
வரவுசெலவுத் திட்ட உரை நிகழ்த்தப்பட்ட அதே தினம், வடக்கில் வன்னிப்
பிராந்தியத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஒரு புதிய தாக்குதல்
நடவடிக்கையை ஆயுதப் படைகள் முன்னெடுத்தன. பீரங்கிகள் மற்றும் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் இது
முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், கடுமையான மோதலில் அரசாங்கத் துருப்புக்கள் பின்வாங்கத் தள்ளப்பட்டன.
இராணுவத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும் 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் உத்தியோகபூர்வ எண்ணிக்கைகள்
குறிப்பிடுகின்றன. ஆயினும் உண்மையான எண்ணிக்கை மிகவும் உயர்ந்ததாகவே இருக்கக்கூடும்.
சாத்தியமான எல்லா விதத்திலும், இந்த நடவடிக்கை வரவுசெலவுத் திட்ட செய்தியை
கோடிட்டுக் காட்ட முன்னரே சிடுமூஞ்சித்தனமாக திட்டமிடப்பட்டுள்ளது. "இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்படுவதற்கு
முன்னதாகக் கூட, துருப்புக்கள் வன்னியின் வாயிற்படியில் இருக்கும் போது மக்களை தமது வாயையும் வயிற்றையும்
மறந்துவிடுமாறு கோரி நகரின் (கொழும்பில்) பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன," என கடந்த
வார சண்டே டைம்ஸ் பத்திரிகையின் "அரசியல் பக்கம்" சுட்டிக்காட்டியிருந்தது.
யுத்தம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார சுமைகள் தொடர்பாக
மக்களின் குரோதம் வளர்ச்சியடைந்து வருவதையிட்டு இராஜபக்ஷ அரசாங்கம் விழிப்புடன் உள்ளது. உலக சரக்குப்
பொருள் விலைகள் -குறிப்பாக எண்ணெய் நிச்சயமான ஒரு காரணியாக- அதிகரித்து வருகின்ற அதேவேளை,
பாதுகாப்புச் செலவு அதிகரிப்பானது அதிகமான பணவீக்கத்திற்கு பங்களிப்பு செய்துள்ளமை உழைக்கும் மக்களுக்கு
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெகுஜன எதிர்ப்பை ஒரு பக்கம் திருப்பும் இலக்குடன் பல ஒப்பனை
நடவடிக்கைகள் இராஜபக்ஷ மேற்கொண்ட போதிலும், வரவு செலவுத் திட்டத்தின் ஒட்டு மொத்த உந்துதலும்
நாட்டின் பொருளாதார நெருக்கடியையும் சமூக நெருக்கடியையும் ஆழமாக்கும்.
சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பொருளாதார பக்க எழுத்தாளர்
குறிப்பிட்டதாவது: "பிரமாண்டமான யுத்த செலவானது நாட்டுக்கு கடுமையான நிதி மற்றும் சென்மதி நிலுவைகள்
பிரச்சினையாக இருந்து வருகின்றது. பொருளாதாரத்தின் மீதான யுத்தத்தின் விளைவுகளும் மற்றும் யுத்தம் நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான தடையாக உள்ளது என்ற மறுக்க முடியாத உண்மைக்கும் முற்றிலும் வேறாக
இது உள்ளது. தளபாடங்களுக்கும் ஆயுதச் சேவைகளுக்குமான செலவு பல வழிகளிலும் பொருளாதாரத்தில்
நேரடியாக சேதமேற்படுத்தும் கடுமையான காரணிகளாக உள்ளன."
யுத்தத்திற்கான செலவு, 2,607 பில்லியன் ரூபாய்கள் பொதுப் படுகடனுக்கு
பங்களிப்பு செய்துள்ளதுடன் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானதாகும் என அந்தக் கட்டுரை
சுட்டிக் காட்டியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் 373 பில்லியன் ரூபா பிரமாண்டமான ஒதுக்கீடு கடன் பணிக்
கிரயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நிதிச்
சந்தையில் இருந்து உயர்ந்த வட்டியுடன் கடனாகப் பெற்றுள்ளது. இது கடன் சுமையை மேலும் அதிகரிக்கச்
செய்யும்.
கூட்டுத்தாபனக் கும்பலின் பகுதியினர் பொருளாதாரத்தில் யுத்தத்தின் தாக்கத்தைப்
பற்றி கடும் கவலையடைந்துள்ளனர். வர்த்தக சபைகளின் ஒரு குழுவான சமாதானத்துக்கான வணிக கூட்டணி,
"பாதுகாப்புச் செலவின அதிகரிப்பானது பெரும் பகுதி முதலீட்டு திட்டங்களில் வெட்டுக்களை குறித்துக்காட்டுகின்றது.
தாங்க முடியாத மட்டத்திலான பணவீக்க வீதத்துடன், இத்தகைய கட்டுமானமற்ற துறைகளிலான செலவு
அதிகரிப்பானது, பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும்," என தெரிவித்துள்ளது.
பணவீக்கமானது 17 ஆண்டுகளில் அதன் அதி உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி 17.7 ஆக இருந்த அக்டோபர் மாத ஆண்டுப் பணவீக்கம்,
இலங்கை விலைச் சுட்டெண்ணின்படி 22 வீதமாக இருந்தது. அரசாங்க மானியங்களிலான வெட்டு அத்தியாவசியப்
பொருட்களில் பிரமாண்டமான விலை அதிகரிப்பை விளைவாக்கியது. ஜனவரியில் 39 ரூபாயாக இருந்த ஒரு கிலோ
மாவின் விலை செப்டம்பெரில் 65 ரூபா வரை அதிகரித்துள்ளது. ஜனவரியில் 140 ரூபாயாக இருந்த பரந்தளவில்
மக்களால் பாவிக்கப்படும் பால் மா பக்கட்டின் விலை, அக்டோபரில் 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.
பணவீக்கத்திற்கு மேலும் எண்ணெய் வார்த்தவாறு, அரசாங்கம் திறைசேரியின்
பற்றாக்குறையை நிரப்ப நாணயம் அச்சிடுவதை நாடியுள்ளது. 2006ல், 24.8 பில்லியன் ரூபாய்கள் பெருமதியான
தாள் நாணயத்தை மத்திய வங்கி அச்சிட்டது. 2007ன் முதல் மூன்று மாதங்களில், அது மேலும் 15.9 பில்லியன்
ரூபாய்களை அச்சிட்டுள்ளது.
இராஜபக்ஷ அரசாங்கம், பணவீக்கத்தை சமாளிப்பதற்காக சம்பள உயர்வு கோரி
வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் கோரிக்கையை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றது. நிதி இல்லை
என பிரகடனம் செய்த அரசாங்க அமைச்சர்கள், அது யுத்த முயற்சிகளை கீழறுப்பதாக தொழிலாளர்களைக்
குற்றஞ்சாட்டினர். வளர்ச்சிகண்டுவரும் குரோதத்தை தணிக்கும் முயற்சியாக, ஜனவரியில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட
375 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பணவை மாத சம்பளத்துடன் தருவதாகவும் ஆறு மாதங்களின் பின்னர் அதை
மீண்டும் அதிகரிப்பதாகவும் இராஜபக்ஷ அறிவித்தார். வேகமாக அதிகரித்து வரும் விலைவாசியால் இதுவும் அதே
போல் ஏழைகளுக்கான பலவித சிறு மாணியங்களும் விரைவாகத் துடைத்துக் கட்டப்படும்.
ஜனாதிபதி 15,000 பட்டதாரிகளுக்கு வேலை தருவதாக வாக்குறுதியளித்த
போதிலும், அதுபற்றிய விபரங்களை வெளியிடவில்லை. கடந்த ஆண்டு அரசாங்கம் பட்டதாரிகளுக்கு 10,000
தொழில்களை வழங்கும் என அவர் அறிவித்த போதிலும் 2,088 பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலை கிடைத்தது.
கடந்த இரு மாதங்களாக, தொழில் கேட்டு ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்திய வேலையற்ற பட்டதாரிகள்
பொலிசாரால் கலைக்கப்பட்டனர். இப்போது வேலையற்றோர் 6.5 வீதமே இருப்பதாக இராஜபக்ஷ
பெருமைபட்டுக்கொள்ளும் அதே வேளை, 15-29 வயது வரையிலான வேலையற்றவர்கள் 19 வீதம் உள்ளனர்.
இவர்களில் பலர் இராணுவத்தில் சேரத் தள்ளப்பட்டுள்ளனர்.
வரிகளும் கணிசமானளவு அதிகரித்துள்ளது. பொருளாதார ஆய்வாளர் ஹர்ஷ டி சில்வா
டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், "2008 வரவு செலவுத் திட்டத்தில்
சந்தேகத்திற்கிடமற்றது என்னவெனில், தீவு பூராவுமான 22 வீத பணவீக்கத்தால் ஏற்கனவே
ஊசலாடிக்கொண்டிருக்கும் நாட்டு மக்கள் மீது மேலும் சுமைகளை திணிப்பதேயாகும். பொருட்கள் மற்றும் சேவைகள்
மீதான மொத்த வரி 2008ல் 25 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதையே வருமான மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்தகைய நுகர்வோர் வரி அதிகரிப்பானது பணக்காரர்களை விட ஏழைகள் மீதே தாக்கத்தை ஏற்படுத்தும்
என்பதில் இரகசியம் கிடையாது'' என்று குறிப்பிட்டார்.
பரந்த வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொள்ளும் எண்ணத்தில், எதிர்க் கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) வரவுசெலவுத் திட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளது. ஆயினும், மக்கள்
விடுதலை முன்னணியைப் (ஜே.வி.பி.) பொறுத்தளவில், இந்த வரவுசெலவுத் திட்டம் ஒரு அருவருப்பான அரசியல்
தர்மசங்கடத்தை உருவாக்கிவிட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரமாகக் கோரும் அதேவேளை,
ஜே.வி.பி. தொழிலாளர்களதும் வறியவர்களதும் காவலனாகவும் காட்டிக்கொள்கின்றது.
ஜே.வி.பி. தலைவர்கள் பிதற்றல் மற்றும் இரைச்சல் விமர்சனங்களுடன் வரவு செலவுத்
திட்டத்திற்குப் பிரதிபலிக்கின்றனர். அரசாங்கம் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக் கோரி வேலை
கொடுப்போர்களுக்கு கட்டளையிடாததால், "தனியார் துறை ஊழியர்களை வீதிக்கு இறக்கப் போவதாக" ஜே.வி.பி.
பாராளுமன்ற உறுப்பினர் வசன்த சமரசிங்க பிரகடனம் செய்துள்ளார். இன்னுமொரு ஜே.வி.பி. பாராளுமன்ற
உறுப்பினரும் கட்சியின் தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவருமான லால் காந்த, வேலைநிறுத்தங்கள் மற்றும்
ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதாக எச்சரித்துள்ளார்.
அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் வரிச் சுமைகள் காரணமாக வரவுசெலவுத் திட்டம்
சம்பந்தமாக ஜே.வி.பி. திருப்தியடையவில்லை என பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச ராவய
பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். ஆயினும், "நாட்டில் தோன்றியுள்ள அரசியல் பிரச்சினைகளான, பிரிவினைவாத
பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படைகள் முன்னெடுக்கும் யுத்தத்தைப் பொறுத்ததாகவே வரவு செலவுத்
திட்டம் தொடர்பான கட்சியின் தீர்மானம் அமையும்" என அவர் அதே மூச்சில் தெரிவித்தார். "பாதுகாப்புச் செலவை
அதிகரித்தது சம்பந்தமாக பிரச்சினை கிடையாது" என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆளும் கூட்டணியின் அங்கமாக இல்லாவிட்டாலும், பராளுமன்றத்தில் அரசாங்கத்தை
ஆதரிக்கும் ஜே.வி.பி., அது எந்தவிதத்தில் வாக்களிக்கும் என்பதை இன்னமும் சுட்டிக்காட்ட வில்லை. ஜே.வி.பி.
வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்குமானால், இராஜபக்ஷ அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை நிறைவேற்ற மிகவும்
ஸ்திரமற்ற கூட்டணியில் தங்கியிருக்க வேண்டியிருக்கும். ஆறு அரசாங்க உறுப்பினர்கள் எதிர்தரப்புக்கு மாறினால் வரவுசெலவுத்
திட்டம் தோற்கடிக்கப்படக் கூடும். ஜே.வி.பி. வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தாலோ அல்லது
வாக்களிக்காமல் இருந்தாலோ, அதன் மக்கள்வாத வாய்வீச்சுக்கள் மேலும் அம்பலத்திற்கு வந்து, சிங்கள கிராமப்புறத்திலான
ஆதரவு உட்பட, அதன் ஆதரவுத் தளத்தை கீழறுக்கும்.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் உடனடிப் பெறுபேறுகள் என்னவாக இருந்தாலும்,
யுத்தம் உக்கிரமாக்கப்படுவதும் மற்றும் அதன் பொருளாதார சுமைகளும் கொந்தளிப்பான சமூக போராட்டங்களுக்கு
களம் அமைக்கும். |