World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்France: Rank-and-file workers force continuation of rail strike பிரான்ஸ்: கீழ்மட்ட தொழிலாளர்கள் அனைவரும் இரயில் வேலைநிறுத்தம் தொடர வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர் By Peter Schwarz in Paris சிறப்பு ஓய்வூதியங்கள் பற்றி திட்டமிடப்பட்டுள்ள "சீர்திருத்தத்திற்கு" எதிராக நடைபெறும் வேலைநிறுத்தத்தை திடீரென முடிவிற்கு கொண்டுவரும் வகையில் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளை தொழிலாளர்கள் மகத்தான முறையில் எதிர்த்து தடுத்துவிட்டனர். அன்றாடம் கூடும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரின் பொதுமன்றங்கள் வெள்ளியன்று மிகப் பெரிய பெரும்பான்மையில் அரச இரயில்வே (SNCF), மற்றும் பாரிஸ் புறநகர் (RATP) க்கு எதிராக நடக்கும் வேலைநிறுத்தத்தை, குறைந்தது திங்கள் வரையிலுமாவது தொடர்வது என்று முடிவெடுத்துள்ளனர். ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் அடுத்த செவ்வாயில் இருந்து பொதுப்பணித் துறைகளில் திட்டமிடப்பட்டுள்ளன. பிரெஞ்சு பள்ளிகள், மருத்துவமனைகள், உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இரண்டு முதல் மூன்று மில்லியன் தொழிலாளர்கள் விலைவாசி உயர்வுகள் மற்றும் வேலைகள் தகர்ப்பு இவற்றிற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்க உள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரயில்வே தொழிலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளத் தயாரித்து வருகின்றனர்; எனவே அவர்கள் செவ்வாயன்றும் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடரக்கூடும். ஒரு புதிய பல்கலைக் கழக சட்டத்திற்கு எதிராக இரு வாரங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் மாணவர்களும் செவ்வாயன்று நடக்க இருக்கும் எதிர்ப்புக்களில் ஏராளமாக கலந்து கொள்ளுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது மே மாதம் சார்க்கோசி ஜனாதிபதியாக பதவி ஏற்றதில் இருந்து அரசாங்கத்தின் சமூகக் கொள்கைகள் திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் மிகப் பெரியதாக அமையக்கூடும் என்று தோன்றுகிறது. வியாழன் காலை தொழிற்சங்கங்கள் "சிறப்பு திட்டங்கள்" நலன்களை முடிப்பதற்கு எதிராக தொடக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்ளக்கூடும் என்று தோன்றியது; சிறப்புத் திட்ட நலன்கள் என்பது பல அரசுத்துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு ஓய்வூதிய நலன்கள் ஆகும். CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) இன் பொதுச் செயலாளரான பேர்னார்ட் திபோ தொழில்துறை மந்திரி சேவியர் பெத்ரோனின் சிறப்பு திட்டங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தனித்தனி துறைகள், ஆலைகள் அடிப்படையில் நடத்தப்படலாம் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்: இது இப்பூசலில் அரசாங்கத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். பேச்சுவார்த்தைகளை தொடர்தல் என்பது தவிர்க்க முடியாதது எனத் தோன்றியது. வியாழனன்று பெத்ரோன் SNCF, RATP ஆகியவற்றில் இருக்கும் ஏழு தொழிற்சங்கங்களில் ஆறு சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைகளில் பங்கு பெறுவதற்கு தொழில் பிரிவு அடிப்படையில் வருமாறு எழுத்து மூல அழைப்பை விடுத்திருந்தார்; இதில் அரசாங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுவர். SUD (Solidaires, unitaires, Democratiques) அமைப்பு சீர்திருத்த திட்டம் அரசாங்கத்தால் திரும்பப் பெறாத வரையில் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்று நிராகரித்திருந்ததால் அதற்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு மாத கால அவகாசத்தை பெத்ரோன் கொடுத்திருந்தார். அதற்கு பின்னர், "பலவித சிறப்பு திட்டங்களை பற்றிய சீர்திருத்தங்கள் கட்டுப்பாடு பற்றிய பொருளுரை வெளியிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்" என்று அவர் கூறினார். வியாழனன்று காலை வேலைநிறுத்தத்தின் போக்கு பற்றி விவாதிப்பதற்காக கூடிய கணக்கிலடங்கா பொதுக் கூட்டங்கள், அரசாங்கத்துடன் உடன்பாடு காண முற்படும் முயற்சிக்கு மகத்தான எதிர்ப்பை தெரிவித்தன. தொழிற்சங்கங்களின் தகவல்படி, நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 17,000 பேர் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றனர்; 95 சதவிகிதத்தினர் வெள்ளியன்று வேலைநிறுத்தம் தொடரவேண்டும் என்று வாக்களித்தனர். தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பற்றி ஆழ்ந்த நம்பிக்கையற்ற தன்மையைத்தான் இக்கூட்டங்கள் வெளிப்படுத்தின. தொழிலாளர்களுடன் முன்கூட்டி ஆலோசனை செய்யாமல் மேற்கொள்ளப்படும் எந்த ஒப்பந்தமும் நிராகரிப்பிற்கு உட்படும் என்ற தீர்மானம் தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்டது; இது பரந்த அளவில் துண்டுப் பிரசுரமாக வெளியிடப்பட்டு பல கூட்டங்களிலும் பெரும்பான்மையானவர்களின் ஆதரவையும் பெற்றது. (See: "France: Railway workers resist unions' plan for sellout") அன்று பிற்பகல், ஆறு தொழிற்சங்கங்களின் தலைவர்கள் CGT தலைமையகத்தில் பெத்ரோனின் அழைப்பை எதிர்கொள்ளுவது பற்றி விவாதிக்க கூடினர். கீழ்மட்ட அணிகளில் தொழிலாளர்களின் போர்க்குணத்தை அடுத்து, அவர்கள் அரசாங்க மந்திரியின் அழைப்பை ஏற்பது சரியாகாது என்ற முடிவிற்கு வந்தனர். மாறாக, அவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக தொடர வேண்டும் என்றும் பெத்ரோனுக்கு ஒரு தெளிவற்ற பதிலைக் கொடுப்பது என்றும் முடிவெடுத்தனர்; இது அவர்களுடைய சங்கடத்தை சுருக்கமாக உரைக்கிறது. ஒரு புறம் அவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தை விரைவில் காணவும் தயாராக உள்ளனர்; மறுபுறமோ, அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களிடம் பெரும் அவமானத்தை எதிர்கொள்ளவும் தயாராக இல்லை. பொதுக்கூட்டத்தில் ஒரு தொழிலாளி கூறினார்: "தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் பதில் தெளிவற்றதாக இருக்கிறது. அது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசாங்கம் இரண்டையுமே திருப்திப்படுத்தும் வகையில் உள்ளது." ஜனாதிபதி சார்க்கோசி தன்னுடைய சீர்திருத்தத்தின் அடிப்படை கொள்கைகளை --37.5ல் இருந்து 40 ஆண்டுகள் வரை முழுமையாக ஒருவர் ஓய்வூதியம் பெற வேலைபார்த்திருக்க வேண்டும், முன்கூட்டிய ஓய்வு என்றால் அதிகபட்ச கழிப்புக்கள் மற்றும் ஊதிய உயர்வுகளுடன் பிணைப்பு என்பதற்கு பதிலாக விலைவாசி உயர்வுடன் பிணைந்த வகையில் ஓய்வூதியம்-- ஆகியவற்றை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ஆனால் தொழிற்சங்கங்கள் எழுதியுள்ள கடிதம் இக்கோரிக்கைகளை பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக ஒரு பொது விதத்தில், "தற்போதைய மோதலின் மையப் பிரச்சினைகள் ... அரசாங்க சீர்திருத்த வடிவமைப்பின் நிராகரிப்பு, சரக்குப் போக்குவரத்தின் வருங்காலம், வேலைகள், வாங்கும் திறன் ஆகியவை" என்று குறிப்பிட்டுள்ளது. "இரயில்வே தொழிலாளர்களில் பொதுக் கூட்டங்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் எந்த அடிப்படையில் நடக்கும் என்பதை பற்றி அறியவேண்டும் என்று கூறியுள்ளனர்" என்று எழுதிய விதத்தில் தங்களுடைய நிதானப் போக்கை தொழிற்சங்கத் தலைவர்கள் விளக்கியுள்ளனர். இது குறைமதிப்பீட்டு அறிக்கையாகும். உண்மையில், பொதுக் கூட்டங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அரசாங்கம் மூன்று ஓய்வூதியச் சீர்திருத்தம் பற்றிய அடிப்படை கொள்கைகளை திரும்பப் பெறாத வரையில் பேச்சுவார்த்தைகளை தாங்கள் எதிர்ப்பதாக கூறிவிட்டனர். தொழிற்சங்க தலைவர்கள் அரசாங்கத்தின் "சீர்திருத்தம்" பற்றி விவாதிக்க விரும்புகின்றனர்: ஆனால் வேலைநிறுத்தம் செய்துள்ள தொழிலாளர்களோ முழுத் திட்டத்தையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் அரசாங்கம் அதைப் பற்றிச் சிறிதும் பிரச்சினை எழுப்பக்கூடாது என்றும் விரும்புகின்றனர். இறுதியாக, தொழிற்சங்கத்தின் கடிதம் தொழில்துறை மந்திரியை வெள்ளியன்று ஒரு தொடக்க கூட்டத்தை நடத்தி, "வெளிப்படையாக அனைத்தும் நடக்கிறது என்பதை காட்டும் வகையில்" பேச்சுவார்த்தை வடிவமைப்பு, செயல்முறை ஆகியவை பற்றிக் குறிப்பிடும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வேண்டுகோளை பெத்ரோன் உடனடியாக நிராகரித்து, வியாழனன்று மாலையில் விளக்கினார்: "வேலைநிறுத்தம் தொடரும் வரை பேச்சு வார்த்தைகள் நடைபெறாது." வெள்ளியன்று காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பொதுக் கூட்டங்கள் மீண்டும் அதிக பெரும்பான்மையில் வார இறுதியிலும் வேலைநிறுத்தத்தை தொடர்வது என்று வாக்களித்தனர். மீண்டும் தொழிற்சங்க தலைவர்கள் பற்றிய பரந்த அவநம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது; இதை தொழிற்சங்க அதிகாரிகள் அகற்றுவதற்கு பெரும் பாடுபடுகின்றனர். உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் பாரிஸ் இரயில் நிலையங்களில் முக்கியமானது ஒன்றில் --Gare du Nord-- ல் நடைபெறும் வேலைநிறுத்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்; இதில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 75பேர் இருந்தனர். வேலைநிறுத்தம் தொடர்வது பற்றிய உணர்வு வலுவாகவும், ஒரு மனதாகவும் இருந்தது; இது பற்றி விவாதம் கூடத் தேவைப்படவில்லை. எப்பொழுது அடுத்த வேலைநிறுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும், திங்கட்கிழமையா அல்லது மறுநாள் சனிக்கிழமையா, என்ற பிரச்சினைதான் ஆழ்ந்த விவாதத்திற்கு உட்பட்டது. இந்த பெயரளவு வினாவிற்கு பின்னணியில் வார இறுதியை ஒருவேளை தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களை காட்டிக்கொடுக்க பயன்படுத்திவிடுவரோ என்பது பற்றிய அச்சமும் இருந்தது. இறுதியில் முறையாக திங்களன்று கூடுவது என்றும் சனிக்கிழமையன்று முறைசாராக் கூட்டம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. முந்தைய தினம் போலவே, பொதுக் கூட்டம், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் அனைத்திற்கும் ஒரு தீர்மானத்தை இயற்றி அனுப்பியது; அதில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தெரியாமல் சலுகைகள் ஏதும் அரசாங்கத்திற்கு கொடுக்கப்படக் கூடாது என்ற எச்சரிக்கை இருந்தது. முதலாளிகளது முகாமில், சார்க்கோசி மீண்டும் தனிப்பட்ட முறையில் தொடக்க முயற்சியை கொண்டுள்ளார். வெள்ளி பிற்பகல் எலிசே அரண்னையில் ஒரு கூட்டத்திற்கு வருமாறு அனைத்து அரசாங்க நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும், பிரதம மந்திரிக்கும், தொழிற்துறை மந்திரிக்கும், போக்குவரத்துத்துறை மந்திரிக்கும் அழைப்புவிடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயல்பாடு பற்றி இக்கூட்டம் விவாதிக்கும். |