World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Despite success of strike, trade unions prepare a sellout

வெற்றிகரமான வேலைநிறுத்தம் இருப்பினும் தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுக்கத் தயாராக உள்ளன

By Peter Schwarz
15 November 2007

Back to screen version

ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கோலிச அரசாங்கத்தால் ஒய்வூதியங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தயாரிப்புக்களுக்கு எதிரான தங்கள் வேலைநிறுத்தத்தின் முதல் நாளன்று, பிரெஞ்சு இரயில் தொழிலாளர்கள் நாட்டின் இரயில்வே வலைப்பின்னலையே கிட்டத்தட்ட முடக்கிவிட்டனர். இரயில்வே நிர்வாகத்தின்படி அனைத்து இரயில்களிலும் ஐந்தில் ஒரு பங்கு செயல்பட்டன என்று கூறப்படுகிறது, ஆனால் பல பாரிஸ் நிலையங்களும் அநேகமாக வேலை செய்யவில்லை. தலைநகரைச் சுற்றியுள்ள மோட்டார் வாகன பாதைகள் 350 கிலோமீட்டர் தூரம் வரை பெரும் கூட்ட நெருக்கடியில் இருந்தன.

பாரிஸ் புறநகர இரயில்வேயில் (RER) மற்றும் பெரும்பாலான மெட்ரோ பிரிவுகளில் எந்த இரயிலும் இயங்கவில்லை. புதன் வேலைநிறுத்தத்தில் எரிவாயு, மின்சார நிலையங்களும் பெரும் பாதிப்பிற்கு ஆளாயின.

அக்டோபர் 18 அன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்களைவிட 10 சதவிகிதம் குறைவானவர்கள்தான் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டனர்; அப்பொழுது தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய "சீர்திருத்தத்திற்கு" எதிரான ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. பல பொதுக் கூட்டங்களில், வேலைநிறுத்தம் செய்திருந்த இரயில்வே தொழிலாளர்களும் பாரிஸ் போக்குவரத்துத் தொழிலாளர்களும் வியாழனன்றும் வேலைநிறுத்தம் தொடரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

புதன் பிற்பகல் வேலைநிறுத்தம் செய்தவர்களால் பல நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன; அவற்றில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தொழிலாளர்களுடன் தங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தினர். தனியார்மயமாக்குதலுக்கு முதல் கட்டம் எனக் கருதப்படும் வகையில் ஒரு புதிய சட்டம் பல்கலைக்கழகங்களில் வந்துள்ளது; அதற்கு எதிராக தற்பொழுது எதிர்ப்பு அலை பெருகி வந்துள்ளது. புதனன்று நாட்டின் 85 பல்கலைக் கழகங்களில் 33 மாணவர்களின் வேலைநிறுத்த நடவடிக்கைகளினால் மூடப்பட்டுவிட்டன.

Lille, Marseille, Rennes, Toulouse, Bordeaux, Rouen ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். கடுமையான போக்குவரத்து நிலைமை இருந்தபோதிலும்கூட, பாரிசில் Gare de Montparnasse ல் 25,000 பேர் கூடினர்.

உறுதியோடு இணைந்து நிற்க வேண்டும் என்ற உணர்வுதான் நிறைந்து காணப்பட்டது. Paris Saint Lazare ல் பராமரிப்புப் பிரிவில் தொழிலாளியாக இருக்கும் Sebastien உலக சோசலிச வலைத் தளத்திடம் அவருடைய நிலையத்தில் தொழிலாளர்கள் 100 சதவிகிதத்தினரும் வேலைநிறுத்தம் தொடரவேண்டும் என்று வாக்களித்ததாகக் கூறினார். "எங்களைப் பொறுத்தவரையில், பேச்சுவார்த்தைக்கு ஒன்றுமில்லை. அரசாங்கம் கடின நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. வெற்றி அடைவதற்கு நாஙகள் எதிர்ப்பு நடவடிக்கையை விரிவுபடுத்தவேண்டும்; இல்லாவிடில் எங்களுக்கு வாய்ப்பு இல்லை." என்று அவர் கூறினார்.

அதற்கு ஒரு நாள் முன்பு ஜனாதிபதி சார்க்கோசியும் அவருடைய அரசாங்கமும் தங்கள் சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டை வலியுறுத்த ஒரு படி மேலே சென்றனர். செவ்வாய் பிற்பகல் சார்க்கோசி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசுகையில், ஐரோப்பிய பிரதிநிதிகளும் அரசாங்கங்களும் தன்னுடைய போக்கிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.

"நான் சீர்திருத்தத்திற்கு உறுதியைக் கொண்டுள்ளேன். அவை தோல்வியுற்றால் அது ஐரோப்பிய நலனுக்கு உகந்ததாக இராது. இச் சீர்திருத்தங்கள், இவை வெற்றி பெற்றால் --அவை வெற்றிபெறும் -- பிரான்ஸ் தன்னுடைய பொது நிதியை சீர்திருத்தி தன்னுடைய கடமைகளை சிறப்பாக மேற்கொள்ளும்." என்று அவர் கூறினார்.

கடந்த மே மாதம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தன்னுடைய சீர்திருத்தத் திட்டங்களை நெறிப்படுத்திவிட்டதாக சார்க்கோசி கூறினார். "இச்சீர்திருத்தங்களுக்கு ஆதரவு கொடுத்து பிரெஞ்சு மக்கள் வாக்களித்தனர்" என்றார் அவர். "தேர்தலுக்குப் பின்னர் அனைத்தையும் செய்யக்கூடிய அளவிற்கு தேர்தலுக்கு முன்பே அவர்களுக்கு அனைத்தையும் கூறினேன். இறுதிவரை இச்சீர்திருத்தங்களை நிறைவேற்றும் வகையில் நான் செயல்படுவேன். என்னுடைய இலக்கை நான் அடைவதற்கு எதுவும் தடையாக வரமுடியாது. ஐரோப்பாவிற்கு பிரான்ஸ் அளிக்கக்கூடிய சிறந்த சேவை இதுதான்."

அதே நேரத்தில் பிரதம மந்திரி Francois Fillon பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் அரசாங்கப் பாராளுமன்ற பிரிவைத் திரட்டினார். சீர்திருத்தங்களை இறுதி வரை முடிக்காமல் இருக்க முடியாது என்று UMP யின் பெரும்பாலான ஆரவாரம்மிக்க பிரதிநிதிகளிடம் அவர் கூறினார்; ஒரு சில வாரங்கள் முன்புதான் இவர்கள் செல்வந்தர்களுக்கு 15 பில்லியன் வரிச்சலுகைகளை அளித்தனர். "உங்களுடைய ஆதரவுடன் அரசாங்கம் தன்னுடைய கடமைகளைச் செவ்வனே செய்து முடிக்கும்" என்று அவர் அறிவித்தார்.

பாராளுமன்ற அரங்கில் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் François Hollande எழுப்பிய வினாவிற்கு விடையிறுக்கையில் பிய்யோன், வேலைநிறுத்தத்திற்கு விரோதப் போக்கு உடைய மக்கள் கூறுபாடுகளைத் திருப்தி செய்யும் வகையில், கூறினார்: அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உட்படுதல் என்ற நிலையில் மில்லியன் கணக்கான பிரெஞ்சுக்காரர்கள் எதிர்கொண்டுள்ளனர்....அதாவது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லுதல், வேலைபார்க்கும் உரிமை ஆகியவை பாதிப்பிற்கு உட்படுகின்றன."

சிறிது காலமாக, UMP யில் உள்ள வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் இரயில்வேத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்; அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த முயல்கின்றனர். நிலைமையை சூடாக்க அவர்கள் விரும்பவில்லை; அது தொழிற்சங்கத்திற்கு உவந்த சரணடையும் நிலையை ஏற்படுத்தக் கூடும். அப்படி வார இறுதிக்குள் நடந்தால், முதல் ஆர்ப்பாட்ட-எதிர்ப்பு ஞாயிறன்று நடப்பதாக இருக்கிறது.

சார்க்கோசியும் பிய்யோனும் வேலைநிறுத்தத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்று முயலுகையில், அதே நேரத்தில் பேச்சு வார்த்தைகளுக்குத் தயார் என்றும் அவர்கள் குறிப்புக் காட்டியுள்ளனர். சார்க்கோசியின் உத்தரவின்பேரில், தொழிற்துறை மந்திரியான Xavier Bertrand பல தனிப்பட்ட தொழிற்சங்கத் தொழிலாளர்களை வாடிக்கையாக சந்தித்து வருகிறார்; அவர்களை திருப்திப்படுத்த முயல்வதோடு ஒருவருக்கு ஒருவர் எதிராக மோதிக்கொள்ளவும் ஏற்பாடு செய்கிறார்.

தொழிற்சங்கங்கள், அரசாங்க நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் உச்சி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைய அரசாங்கம் நிராகரித்துள்ளது; இதை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள CGT கோரி வருகிறது. இரயில்வே தொழிலாளர்களின் சிறப்பு ஓய்வூதியங்களில் தன்னுடைய "சீர்திருத்தத் திட்டத்தில்" இருக்கும் மூன்று முக்கிய கூறுபாடுகளை அரசாங்கம் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகக் குழுக்கள் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்றும், தனிப்பட்ட நிறுவனங்களில் இந்த மூன்று கூறுபாடுகள் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்பதை அவை முடிவு செய்யவேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த முன்று கூறுபாடுகள் முழு ஓய்வுத் தொகை பெறுவதற்கு 37.5 ஆண்டுகள் பணி என்பதில் இருந்து 40 ஆண்டுகள் பணி என்று உயர்த்தப்பட வேண்டும், ஓய்வூதியங்கள், ஊதிய உயர்வுகளுடன் என்பதற்குப் பதிலாக விலைவாசி ஏற்றத்துடன் தொடர்பு கொண்டிருத்தல், மற்றும் முன்கூட்டி ஓய்வு பெறுபவர்களுக்குக் கூடுதல் கழிப்பை அறிமுகப்படுத்துதல் என்பவை ஆகும். இந்த நடவடிக்கைகள் மூலம் கருவூலம் கிட்டத்தட்ட இரயில் தொழிலாளர்கள், எரிவாயு, மின்துறைத் தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கத் தொழிலாளர்கள் என்று "சிறப்பு திட்டம்" என அழைக்கப்படும் திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதியங்களுக்கு இது கொடுக்கும் கூடுதல் தொகையான 5 பில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்த நினைக்கிறது. வேறுவிதமாகக் கூறினால், ஒப்புமையில் தொடர்புடையவர்களின் குறைவான ஓய்வூதியங்களில் ஐந்து பில்லியன் யூரோக்கள் மேலும் குறைக்கப்பட வேண்டும்.

தொழிற்சங்கத்தின் தலைவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் உள்ள உறுதித் தன்மையை எவ்விதத்திலும் காட்டுவதில் தோல்வி அடைந்துள்ளனர். CGT யின் தலைவரான பேர்னார்ட் திபோ வேலைநிறுத்தம் தொடக்கப்படும் முன்னரே அரசாங்கத்திற்கு முக்கிய சலுகையைக் கொடுத்தார். CGT இன் அணுகுமுறை குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானது ஆகும்; ஏனெனில் இரயில்வேத் தொழிலாளர்களிடையே இது மிக அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.

செவ்வாயன்று மாலை, திபோ தொழிற்துறை மந்திரி பெத்ரோனை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்; தனிப்பட்ட நிறுவனங்கள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை ஒப்புக் கொண்டார். திபோ மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக அரசாங்கம் முத்தரப்பு பேச்சு வார்த்தைகளுக்கு ஒப்புக் கொண்டது; இதன் பொருள் ஒவ்வொரு கூட்டத்திலும் அரசாங்கத்தின் பிரதிநிதியும் கலந்து கொள்ளுவார் என்பதாகும். ஆனால் "சீர்திருத்தத்தின்" மூன்று முக்கிய கூறுபாடுகளில் அரசாங்கம் வலியுறுத்தி நிற்பதில் எந்த விதமான மாற்றமும் இருக்காது. இதை மறைமுகமாக திபோ ஒப்புக் கொண்டுள்ளார். முக்கிய நிலைப்பாடுகளை தவிர "பல விதிமுறைகளும் உள்ளன.. அவை பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்துவதாக அமையும்." என்றார்.

திபோவின் சலுகைகள் அரசாங்கத்தால் வரவேற்கப்பட்டன. ஜனாதிபதியின் தலைமைச் செயலாளர் Claude Gueant, CGT கொடுத்துள்ள பரிந்துரைகள் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று Le Monde இடம் தெரிவித்தார். "மோதலின் முதல் நாளுக்கு பின்னர் நெருக்கடி தீர்க்கப்படக் கூடிய வகையில் பேர்னார்ட் திபோ செயல்களை மேற்கொண்டுள்ளார்" என்றும் அவர் கூறினார்.

புதன் காலை, தொழிற்துறை மந்திரி பெத்ரோன் பேச்சுவார்த்தைகளை தயாரிக்கும் வகையில் மற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

பெரும்பாலான செய்தித்தாள் வர்ணனையாளர்கள் CGT வியாழன் அல்லது வெள்ளி அன்று வேலைநிறுத்தத்தை முடிக்க முற்பட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கின்றனர். "CGT க்கு முக்கியமான பிரச்சினை தன்னுடைய துருப்புக்களை சமாதானப் படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளில் போதுமான சலுகைகளை பெறுவதாகும்" என்று Liberation கூறியுள்ளது.

இதுவரை திபோ பகிரங்கமாக உறுதிப்பாட்டைக் கூறவில்லை; ஆனால் இத்திசையில்தான் செல்ல இருப்பதாக அவர் குறிப்பு காட்டியுள்ளார். பாரிஸில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கும் தலைமை வகித்து தொலைக்காட்சி காமெராக்கள் சூழ்ந்ந நிலையில் அவர், "அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வ எதிர்கொள்ளல்" வரும் வரை வேலைநிறுத்தம் தொடர வேண்டும் என்று தான் விரும்புவதாக விளக்கினார்.

"CGT தன்னுடைய திட்டங்களை முன்வைத்துள்ளது; இப்பொழுது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ எதிர்கொள்ளலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம். அரசாங்கத்தின் அணுகுமுறையை விளக்கும் கடிதத்திற்காகக் காத்திருக்கிறோம். அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் பரிசீலிப்போம். இந்தக் கட்டத்தில் பூசல் முறிந்துவிடுமோ என நான் கூறுவதற்கில்லை."

இதேபோன்ற கருத்துக்கள் CGT இரயில்வேத் துறைத் தலைவர் Didier Le Reste ஆலும் கூறப்பட்டது. வேலைநிறுத்தம் தொடருமா எனக் கேட்கப்பட்டதற்கு அவர், "இது அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளுகிறது என்பதைப் பொறுத்து உள்ளது" என்று விடையளித்தார்.

தன்னுடைய தொழிற்துறை மந்திரிக்கு ஏற்கனவே ஜனாதிபதி சார்க்கோசி தொழிற்சங்கங்களுக்கு அடுத்த நடவடிக்கை பற்றிய திட்டத்தை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்; ஏனெனில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர், " 'சிறப்புத் திட்டம்' பற்றிய பூசலில் ஒருவேளை பொறுப்புணர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

புதனன்று சோசலிஸ்ட் கட்சியின் செயலாளரான François Hollande வேலைநிறுத்தம் "இன்று மாலைக்குள் முடிந்துவிடும்" என்ற நம்பிக்கையை தெரிவித்தார். பூசல் தொடர்ந்தால் அது "சேவை பெறுவோரை பெரிதும் நாசத்திற்கு உள்ளாக்கும். எனவே நாளையில் இருந்து தனிப்பட்ட நிறுவனங்களுடன் தனித்தனிப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏன் கோரவும் செய்கிறேன்" என்று அவர் கூறினார்.

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முறித்துவிட்டால், அது வரலாற்றுப் பரிமாணம் உடைய காட்டிக் கொடுப்பைப் பிரதிபலிக்கும். சார்க்கோசி மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு பிரிவுகளை தனிமைப்படுத்தி ஒன்றுக்கொன்று விரோதமாகச் செயல்படுத்த வைப்பதற்கு வாய்ப்பு கொடுக்கும்; இதையொட்டி "சிறப்புத் திட்ட" நலன்கள் அகற்றப்படும்; அதுதான் முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதல்களுக்கு ஆரம்பக் கட்டமாகும்.

வேலைநிறுத்தத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் குரலாகச் செயல்படும் பழமைவாத நாளேடான Le Figaro, தற்போதைய மோதலின் பரந்த முக்கியத்துவம் பற்றி நன்கு அறிந்துள்ளது. புதனன்று வெளியிட்ட ஒரு தலையங்கத்தில் அது மீண்டும் அரசாங்கத்தின் மற்ற திட்டமிடப்பட்டுள்ள "சீர்திருத்தங்கள்" அனைத்திற்கும் இரயில்வே தொழிலாளர்களுடன் சுமுகமான தீர்வு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தியது. "இச் சீர்திருத்தம் ஏற்கப்பட்டுவிட்டால், பின் அனைத்து சீர்திருத்தங்களும் சாதிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுவிடும்" என்று அது விளக்கியது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved