World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Sarkozy seeks confrontation with the working class

பிரான்ஸ்: சார்க்கோசி தொழிலாள வர்க்கத்துடன் மோதுவதை குறியாய் கொள்கிறார்

By Peter Schwarz in Paris
14 November 2007

Back to screen version

பிரான்ஸ், அதன் வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு மோதலை எதிர்கொள்கிறது; இது சமீபத்திய பிரெஞ்சு வரலாற்றில் மிகக் கசப்பான சமூக மோதல்களில் ஒன்றாக வளரக்கூடும்.

செவ்வாயன்று மாலை தேசிய இரயில்வே நிறுவனத்தின் (SNCF) ன் ஊழியர்கள் பணி செய்வதை நிறுத்தினர். SNCF ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு தொழிற்சங்கங்களில் ஏழு காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன; இதன் போக்கு தொழிற்சங்கங்களால் அன்றாட அடிப்படையில் முடிவெடுக்கப்படும். புதனன்று பாரிஸ் மெட்ரோவின் ஊழியர்கள் மற்றும் எரிவாயு, மின்சாரத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் சேர உள்ளனர்.

புதன் கிழமையில் இருந்து ஒரு வாரத்தில், நவம்பர் 21ம் தேதி, பொதுப்பணித் துறை ஊழியர்கள் ஊதியங்களை காப்பதற்கான நடவடிக்கையை எடுப்பர், நவம்பர் 29 அன்று பிரெஞ்சு நீதித்துறை ஊழியர்கள் ஒரு திட்டமிடப்பட்டுள்ள நீதித்துறை "சீர்திருத்தத்திற்கு" எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். பிரெஞ்சு மாணவர்கள் ஏற்கனவே சமீபத்திய நாட்களில் பல்கலைக் கழக "சீர்திருத்தங்களுக்கு" எதிராக எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்; பல பல்கலைக்கழகங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

பல மோதல்களின் இதயத்தானத்தில் இருப்பது அரசாங்கத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் சிறப்பு ஓய்வூதியங்கள்தாம். "சிறப்பு திட்டம்" எனப்படும் இவை தங்கள் வேர்களை 19ம் நூற்றாண்டில் கொண்டுள்ளன: இதன்படி அரசாங்க ஊழியர்கள் குறிப்பிட்ட கடுமையான வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் 50 அல்லது 55 வயதில் ஓய்வு பெறுவர். 37.5 ஆண்டுகள் அனுபவம் இருப்பவர்கள் முழு ஓய்வூதியம் (அதாவது ஓய்வு பெறும் காலத்தில் இருந்த ஊதிய விகிதத்தில் 75 சதவிகிதம்) பெறத் தகுதி உடையவர் ஆவர்.

இத்தகைய சிறப்புத்திட்ட நலன்கள் பிரான்சில் பல தொழில்களில் உள்ளன; பாதிக்கப்படக்கூடிய பெரும்பாலும் குறிப்பிடத்தக்க தொழிலாளர்கள், இரயில்வேயில் இருப்பவர்கள் மற்றும் எரிவாயு, எண்ணெய்த்துறை மின்சார நிறுவன தொழிலாளர்கள் ஆவர். பிரெஞ்சு இரயில்வேயை பொறுத்தவரையில் 164,000 தொழிலாளர்களுடன் ஓய்வு பெற்ற 300,000 தொழிலாளர்களும் சேர்ந்து நிறைந்துள்ளனர்.

எரிவாயு மற்றும் மின்சார நிறுவனங்கள் மொத்தத்தில் 145,000 தொழிலாளர்களையும் அதே அளவு ஓய்வு பெற்ற ஊழியர்களையும் கொண்டிருக்கிறது. மெட்ரோ 45,000 தொழிலாளர்களையும் கிட்டத்தட்ட அதே அளவு ஓய்வு பெற்ற ஊழியர்களையும் கொண்டிருக்கிறது.

சிறப்பு ஓய்வூதியத் திட்டங்களின் மூலம் வரும் பற்றாக்குறை தேசிய பட்ஜெட்டில் இருந்து ஈடு செய்யப்படுகிறது; இந்த ஆண்டு SNCF க்கு மட்டும் ஓய்வூதியத் தொகைக்கு அரசாங்கத்தின் அளிப்பு 2.7 பில்லியன் யூரோக்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்கு இத்தகைய சிறப்பு திட்ட நலன்களை அகற்றுவது அனைத்து சமூகநல வகை செலவுகளையும் குறைப்பதில் ஒரு முக்கியமான கட்டமாகும்- இது பொருளாதாரக் காரணங்கள் என்பதைவிட அரசியல் காரணமாகத்தான் அதிகமாக உள்ளது.

இரயில்வே, எரிவாயு, மின்துறை தொழிலாளர்கள், மரபார்ந்த வகையில் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் மிகப் போர்க்குணம் நிறைந்த அடுக்குகள் ஆவர். முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக்கும் அவருடைய அப்போதைய பிரதம மந்திரியுமான அலன் யூப்பேயும் 1995ல் சிறப்புத் திட்ட நலன்களை தகர்க்க முயன்றனர்; அதையொட்டி நாட்டில் எழுந்த வேலைநிறுத்த அலை பல வாரங்களுக்கு பிரான்சை முடக்கியது.

இதையொட்டி யூப்பே ஓரளவு பின்வாங்க நேர்ந்தது; சிராக் அதற்குப் பின் சிறப்பு ஆட்சி ஓய்வூதியங்களுக்கு சவால்விடத் தயாராக இல்லை. அப்பொழுது சமூகத்துறை மந்திரியாக இருந்த (இப்பொழுது பிரதம மந்திரி) பிரான்சுவா பிய்யோன் கூட 2003ல் வரவேற்பைப் பெறாத ஓய்வுதியச் சீர்திருத்தத்தை செயல்படுத்தியபோது, சிறப்புத் திட்ட நலன்களுக்கு விதிவிலக்குக் கொடுத்தார்.

இப்பொழுது தோட்டாவை கடிக்க சார்க்கோசி விரும்புகிறார். சிராக் மற்றும் யூப்பே பின்வாங்கியதை தெளிவாகச் சுட்டிக் காட்டும் வகையில் கடந்த வெள்ளியன்று அவர் கூறினார்: "எனக்கு முன்னால் இருந்தவர்கள் செய்யாததை நானும் செய்ய மாட்டேன்." சிறப்பு ஆட்சி ஓய்வூதியங்கள் அகற்றப்படுவது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கொடுத்திருந்த உறுதிமொழியான "உடைவிற்கு" ஒரு சோதனைக் கட்டமாக இருக்கும் என்றும், இதையொட்டி அவருடைய முழு அரசியல் அந்தஸ்தும் அத்தகைய கொள்கையை செயல்படுத்துவதில் இருக்கும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.

உள்நாட்டு விவகாரங்கள் அல்லது தொழில்துறை உறவுகள் பற்றிய பூசல்களில் பகிரங்கமாகவும் நேரடியாகவும் ஒரு பிரெஞ்சு ஜனாதிபதி குறுக்கீடு செய்வது மிக அசாதாரண நிகழ்வு ஆகும். பொதுவாக இது பிரதம மந்திரியின் பணியாகும். மரபார்ந்த வகையில் இது மோதல் எதிர்பார்த்தபடி போகவில்லை என்றால் அரசாங்கத்தை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு இடமளிக்கும்.

இந்த வழி சார்க்கோசியினால் மேற்கொள்ளப்படவில்லை. இரயில் தொழிலாளர்களுக்கு "நீங்களா, நானா" என்ற விதத்தில் அவர் தகவல் உள்ளது; சமரசத்திற்கோ, பின்வாங்குதலுக்கோ இடம் வைத்துக் கொள்ளவில்லை.

"வெற்றி அல்லது சார்க்கோசியிசத்திற்கு அகால முடிவு. இந்த வகையில், தனக்கான உயர்ந்த தன்மையுடைய ஆபத்துடன் ஜனாதிபதி தான் எதிர்கொள்ளும் முதல் பெரிய சமூக மோதலின் கட்டமைப்பை வரையறை செய்துள்ளார்" என்று Liberaion எழுதியுள்ளது.

திங்களன்று ஜேர்மனிக்கு வருகை புரிந்தபோது, சார்க்கோசி தான் உறுதியாக இருக்கப்போவதை வலியுறுத்தினார். ஜேர்மனியில் செயல்படுத்தப்பட்டுள்ள "பெரிய சீர்திருத்தங்களை" பாராட்டி அவை பிரான்சிற்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் "இரக்கமற்ற முறையில்" செயல்படவேண்டிய தருணம் வந்து விட்டது என்றும் சேர்த்துக் கொண்டார்.

"பிரான்சை மாற்றுவதற்கு நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம்; இச்சீர்திருத்தங்களை நாங்கள் செயல்படுத்துவோம்; ஏனெனில் அவை செயல்படுத்தப்பட வேண்டியவை" என்று அவர் கூறினார்.

ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஆலோசகர்களில் ஒருவரான Henri Guaino இன்னும் வெளிப்படையாகக் கூறினார். "இச் சீர்திருத்தத்தை செயல்படுத்த எங்களால் முடியவில்லை என்றால், அனைத்தையும் விட்டுவிடலாம்; ஏனெனில் எவ்வித சீர்திருத்தத்தையும் நாம் மேற்கொள்ள முடியாது." என்று அவர் கூறினார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, CPE எனப்படும் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் போது ஓரளவு வளைந்து கொடுக்கும் தன்மையை சார்க்கோசி காட்டினார்; ஆனால் இப்பொழுது அவர் முற்றிலும் விட்டுக் கொடுக்கத்தயாரில்லாத நிலையைக் காட்டுகிறார். அந்த நேரத்தில் அவர் ஜனாதிபதிப் பதவி மீது ஒரு கண் வைத்திருந்தார்; லு மொன்ட் இன் கருத்தின்படி, "அப்பொழுது பிரச்சினை சமரசத்திற்கு இடமில்லாத வகையில் சட்டம் ஒழுங்கிற்கு வாதிடுபவர் என்ற தோற்றத்தை அகற்றிக் கொண்டு இடதிடம் இருந்து ஆதரவைப் பெறுதலாக இருந்தது. இன்றோ கணக்கு முற்றிலும் மாறியுள்ளது. சிறப்புத் திட்டம் என்ற இத்தகைய குறியீட்டு செயல்திட்டத்திலிருந்து மிகச் சிறிய வழிவிலகல் கூட நாட்டை சீர்திருத்தக்கூடிய அவருடைய திறனைப் பெரிதும் பலவீனப்படுத்திவிடும்."

பழமைவாத லு பிகாரோ செய்தித்தாள், பிரான்சில் ஒரு ஜனாதிபதி தன்னுடைய "உண்மையான சட்டரீதியான தன்மையை" தெருக்களில் மோதுவதின் மூலம்தான் அடைகிறார் என்று குறிப்பிட்டுள்ளது. செய்தித்தாள் மேலும் கூறுகிறது: "தெருக்களில் அடையும் வெற்றிகள் (அல்லது தோல்விகள்) மூலம் அவருடைய சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுக்கவும், ஒரு வருஷத்திற்கு முன்பு அவர் அறிவித்த உடைவை நடைமுறைக்கு கொண்டுவருவதற்குமான அவரது திறனை நிர்ணயிக்கும்."

லு பிகாரோ தொடர்ந்தது: "ஒவ்வொருவரும் முடிவில்லாத நிலைதான் வரும் என்று கூறியுள்ளபோது, நிக்கோலோ சார்க்கோசி தன்னுடைய முதல் முயற்சியில் வெற்றி அடைந்தால், பிரெஞ்சு சமூக மாதிரியின் காலாவதியாகிவிட்ட பல சின்னங்களை சவால்செய்வதற்கான பாதை தங்குதடையற்றதாகிவிடும்."

இவ்விதத்தில், இரயில்வே தொழிலாளர்கள் ஓய்வூதியம் என்பதைத் தவிர சிறப்புத்திட்ட நலன்கள் பற்றிய மோதலில் கூடுதலான பணயங்கள் உள்ளன.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தன்னுடைய தாக்குதலை சார்க்கோசி இரு காரணிகளின் தளத்தில் கொண்டிருக்கிறார்: சோசலிஸ்ட் கட்சியின் திவால்தன்மை மற்றும் தொழிற்சங்கங்களின் துரோகத்தனமான பங்கு என்பவையே அவை. மே மாதம் அவர் தேர்தலில் வெற்றி பெற்றதானது சோசலிஸ்ட் கட்சி தனது வலதுசாரிக் கொள்கைகளினால் தன்னையே முற்றிலும் இழிவுபடுத்திக் கொண்டது என்ற உண்மையினால்தான். தேர்தல் முடிந்ததில் இருந்து, கட்சி இன்னும் அதிகமாக வலதிற்கு மாறியுள்ளது; அதைத் தவிர உட்பூசல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாகி ஆறு மாதங்களுக்கு பின்னர், அரசியல் நடைமுறை அல்லது தொழிற்சங்கங்களில் இருந்து தீவிர எதிர்ப்பு இல்லாத நிலையில், சார்க்கோசி ஓரளவு செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது. சமீபத்தில் Liberation நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றின்படி, கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 59 சதவிகிதத்தினர் சிறப்புத்திட்ட நலன்களுக்கு எதிரான அவருடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஆனால், Liberation சார்க்கோசிக்கு எதிராக அலை திரும்பிக் கொண்டிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. கருத்துக் கூறியவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அவர் வேலை மற்றும் பட்ஜெட் கொள்கைத் துறைகளில் தோல்வியுற்றதாக கூறியுள்ளனர். வாங்கும் சக்தியை பொறுத்தவரையில், 79 சதவிகிதத்தினர் ஜனாதிபதியைப் பற்றிக் குறை கூறியுள்ளனர் --இது ஏற்றம் கொண்டிருக்கும் பணவீக்கத்தின் தெளிவான விளைவு ஆகும்; அது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு பெருகிய முறையில் பிரச்சினைகளை கொடுத்துள்ளது. மொத்தத்தில் 54 சதவிகிதத்தினர்தான் ஜனாதிபதியை பற்றி சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளனர்--இது தேர்தலுக்குப் பின்னரான மிகக் குறைவான மதிப்பீடு ஆகும். செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 66 சதவிகிதத்தில் இருந்தது.

தொழிற்சங்கத் தலைவர்கள், சிறப்பு திட்ட நலன்கள் பற்றிய முரண்பாடுகள், சார்க்கோசி மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக உள்ளது என்ற உண்மையை அறிந்துள்ளனர். இதை எப்படியாவது அவர்கள் தவிர்க்க முற்படுகின்றனர்; அவர்கள் கருத்துக்கள் அனைத்தும், இக்கருத்தை வலியுறுத்துவதாகத்தான் உள்ளன. அரசியல் நோக்கத்திற்காக முரண்பாடுகளை பெரிதுபடுத்தும் வகையில் அரசாங்கம் செயல்பட்டுவருவதை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்; பேச்சுவார்த்தை நடத்தும் மேசையை சுற்றி அமரும் வாய்ப்பிற்கு அவர்கள் வாதிடுகின்றனர்.

Liberation உடன் கொண்ட பேட்டி ஒன்றில், கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கத்திற்குட்பட்ட CGT (General Confederation of Labour) இரயில்வே தொழிற்சங்கத்தின் தலைவரான Didier Le Reste, "அரசியல் நோக்கத்தின் கருவியாக இது பயன்படுத்தப்படுதல்" பற்றி வருந்தினார். "தலைமை மட்டத்திலேயே இந்தப் பூசலுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன" என்று அவர் கூறினார்; ஆனால் "இரகசியத் தன்மை, இருதரப்புகூட்டங்கள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், ஒரு தேசிய வட்ட மேசை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது அவசியம்" என்று குறிப்பிட்டார்.

Force Ouvrière தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான Jean Claude Mailly, Le Monde இடம் அவருடைய அமைப்பு நவம்பர் 21 "அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றியோ அதேபோல் மாணவர்கள் எதிர்ப்பு பற்றியோ முன்கூட்டிய தொடர்பு எதையும்" விரும்பவில்லை என்று வலியுறுத்திக்கூறினார். "ஒரு அரசியல்தன்மை கொண்ட சார்கோசி-எதிர்ப்பு இயக்கத்திற்காக நாங்கள் இல்லை" என்று அவர் தெரிவித்தார். இதைத்தவிர, மெட்ரோ, மின்துறை தொழிலாளர்களுக்கான சிறப்புத் திட்ட நலன்களில் தெளிவான வேறுபாடுகள் உண்டு என்றும் அவர் கூறினார்; அதன் பொருள் ஒவ்வொரு நிறுவனமும் தனியான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பதாகும்.

சோசலிஸ்ட் கட்சி செல்வாக்கினுள் இருக்கும் CFDT (French Democratic Confederation of Labour), இன் தலைவரான François Chérèque ஒருபடி மேலே சென்று அச்சுறுத்தினார்: "அரசு ஊழியர்கள் தொடர்புடைய, இன்னும் என்னென்னவோ தொடர்புடையன என்பதை யாரறிவார் என்ற நிலையில், சிறப்புத் திட்டங்களுக்கு எதிராக பல இயக்கங்களின் இணைவு என்று வந்தால், நாங்கள் [வேலை நிறுத்த இயக்கத்தில் இருந்து] விலகிக் கொள்ளும் உரிமையை பின்னர் பயன்படுத்த ஒதுக்கி வைப்போம்."

தொழிற்சங்கத் தலைமைகள் சார்க்கோசியின் "சீர்திருத்தங்கள்" பற்றிய பூசல் மக்கள் இக்கமாகப் படர்ந்து அரசாங்கத்தின் அதிகாரத்தையும், ஜனாதிபதியின் அதிகாரத்தையும் சவால் செய்யுமோ என்ற பெரும் பீதியால் பீடிக்கப்பட்டுள்ளன. அப்படி ஏற்பட்டால் அது தவிர்க்க முடியாமல் ஒரு அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்து, ஆளும் உயரடுக்கின் அதிகாரம் தளமாகக் கொண்டிருக்கும் முழு அரசியல் அமைப்பையும் உலுப்பி எடுத்துவிடும்.

ஆனால் உண்மையில், தொழிலாளர்களுக்கு போராட்டத்தை நடத்துவதைத்தவிர வேறு வழியில்லை. சார்க்கோசி நீண்டகாலத்திற்கு முன்பே இதை ஒரு அதிகாரத்திற்கான பிரச்சினையாக மாற்றிவிட்டார்.

தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் உட்குறிப்பான அல்லது வெளிப்படையான ஆதரவுடன், தங்கள் சக்தி முழுவதையும் பயன்படுத்தி இந்த இயக்கம் வலிமை பெறாமல் இருக்க அனைத்தையும் செய்யும் என்பது ஏற்கெனவே தெளிவு.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved