World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்Deepening political crisis in Pakistan பாக்கிஸ்தானில் ஆழமடைந்துவரும் அரசியல் நெருக்கடி By Peter Symonds பெனாசீர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை அன்று ஜனாதிபதி இராணுவ வலிமை பெற்ற பர்வேஸ் முஷாரஃப் சுமத்தியுள்ள இராணுவச் சட்டத்திற்கு எதிராக இன்று ராவல்பிண்டி இராணுவக் கோட்டை நகரத்தில் அணிவகுப்பை நடத்த முற்பட்டுள்ள நிலையில் பாக்கிஸ்தானின் அரசியல் நெருக்கடி தொடர்ந்து பெருகி வருகிறது. அணிவகுப்பு சட்டவிரோதம் என்று அதிகாரிகள் அறிவித்ததுடன், இதில் கலந்து கொள்ளுபவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள ராவல்பிண்டி பாக்கிஸ்தான் இராணுவம் மற்றும் விமானப் படையின் தலைமையகம் ஆகும். போலீசார் அணிவகுப்பை நடைபெறாமல் செய்வதற்கு பஞ்சாபில் இருக்கும் நகரங்களிலும், சிறு நகரங்களிலும் உள்ள குறைந்தது 800 கட்சி உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக பாக்கிஸ்தான் மக்கள் கட்சி கூறியுள்ளது. நாட்டின் அரசியலமைப்பு மீட்கப்பட வேண்டும் என்றும், முஷாரஃப், இராணுவத்தின் தலைமை பொறுப்பில் இருந்து கீழிறங்க வேண்டும், புதிய பாராளுமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி கோரியுள்ளது. புதனன்று "எங்கள் அனைவரையும் சிறையில் தள்ளுவது ஆட்சிக்கு கடினமாகிப்போகும்" என்று தன்னுடைய கட்சிக்காரர்களை ராவல்பிண்டிக்கு ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அழைக்கையில், மக்களை ஈர்க்கும் வகையில் பூட்டோ அறிவித்தார். "என்னுடைய சுதந்திரம்கூட பறிபோகலாம் என்பது எனக்குப் புரியும்" என்று நாடக பாணியில் அவர் கூறினார். எதிர்க்கட்சி தலைவர்களுள் பூட்டோ ஒருவர்தான் முழுமையாக எங்கும் செல்லும் சுதந்திரத்தை கொண்டுள்ளார். முஷாரஃப்புடன் அமெரிக்க ஆதரவு கொண்ட அதிகாரப் பகிர்வு உடன்பாட்டை நிறுவியபின் அக்டோபர் 18 அன்று இவர் பாக்கிஸ்தானுக்கு திரும்பினார்; இதன்படி முஷாரஃப் ஜனாதிபதியாக தொடர்வார் என்றும் இவ்வம்மையார் பிரதம மந்திரியாக புதுப் பாராளுமன்ற தேர்தல்களுக்கு பின்னர் வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமை நீதிமன்றம் கடந்த மாத ஜனாதிபதி வாக்களிப்பை --வெளிப்படையாக அரசியலமைப்பை மீறியிருந்த ஒரு இராணுவ பாசாங்கு-- சட்டவிரோதம் என்று அறிவித்துவிடக் கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் முஷாரஃப் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார். இன்றைய அணிவகுப்பிற்கும் அடுத்த வாரம் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு "ஒரு நீண்ட பயணம்" என்று பூட்டோ அழைப்புவிடுத்துள்ளதிற்கும் ஒரு நோக்கம் தன்னுடைய தொய்ந்து போய்க் கொண்டிருக்கும் அரசியல் நம்பகத்தன்மையை புதுப்பித்தல் ஆகும். கடந்த வாரம் முழுவதும் வக்கீல்கள், குடியுரிமைச் செயல்வீரர்கள் மற்றும் மாணவர்கள்தான் இராணுவ ஆட்சியின் கொடூர நடவடிக்கைகளை எதிர்த்து போலீஸ் தடியடிகளையும், கண்ணீர்ப்புகையையும் தாங்கினர். நூற்றுக்கணக்கானவர்கள், ஏன் ஆயிரக்கணக்கிலும் இருக்கலாம், காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்தவர்களில் சிலருக்கு எதிராக மரண தண்டனை அளிக்கும் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. "ஜனநாயகம்" பற்றிய அவ்வம்மையாரின் அலங்காரச் சொற்கள் ஒரு புறம் இருந்தாலும், பாக்கிஸ்தான் மக்கள் கட்சியுடைய கோரிக்கைகள் வாஷிங்டன் ஏற்கக்கூடிய வரம்பிற்குள் இருக்குமாறு கவனமாக முன்வைக்கப்பட்டுள்ளன. முஷாரஃப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது அவரால் 1999ல் நிறுவப்பட்டுள்ள இராணுவ சர்வாதிகாரம் அகற்றப்பட வேண்டும் என்று பூட்டோ கூறவில்லை தலைமை நீதிமன்றத்தில் இருந்து நீதிபதிகளை அகற்றியது, தலைமை நீதிபதி இப்திகார் முகம்மது செளதரியை அகற்றியது உட்பட திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரவில்லை. குறிப்பிடத்தக்க வகையில் PPP தலைவரான ஷா முகம்மது குரேஷி, திங்களன்று எதிர்ப்புக்குத் தயார் செய்து கொண்டிருக்கும் வழக்கறிஞர் கூட்டம் ஒன்றில் "ஒரு ஒத்துழைப்பாளர்" என்று முத்திரையிடப்பட்டு, ஏளன நகைப்பிற்கு உட்படுத்தப்பட்டார். இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, தங்களின் முந்தைய உடன்பாட்டிற்கு முஷராஃப் இணங்குவதற்காக பூட்டோ பயன்படுத்த முற்பட்டுள்ளார். புதனன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்த ஆட்சியுடன் இன்னும் கூடுதலான பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்பதை அவர் உட்குறிப்பாக வெளிப்படுத்தினார். "ஜனநாயகத்தை மீட்பதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தளபதி முஷாரஃப் தீர்வுகாணும் ஒரு பாதையை விரும்பினால், பந்து அவர் பக்கம்தான் உள்ளது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார். முஷாரஃப்பை ஒரு வழியில் கொண்டுவருவதற்கு பூட்டோ, புஷ் நிர்வாகத்தைப் பெரிதும் நம்பியுள்ளார். தன்னுடைய நண்பரை குறைகூறுதலில் அமெரிக்க நிர்வாகம் சற்றுக் குறைந்த தன்மையைக் கொண்டிருக்கையில், அவசரகால ஆட்சியை திணிப்பது என்ற முஷாரஃப்பின் முடிவு வாஷிங்டனின் திட்டங்களுக்கு கிடைத்த ஒரு அடியாகும். பூட்டோவை பிரதம மந்திரி என்று காட்டும் வகையில், வெள்ளை மாளிகை இஸ்லாமாபாத்தில் பெருகிய முறையில் ஆட்டம் கண்டுவரும் ஆட்சிக்கு ஒரு உறுதிப்பாட்டைக் கொடுக்க விரும்புகிறது. புஷ்ஷின் கருத்தின்படி அவர் புதனன்று முஷாரஃப்புடன் தொலைபேசியில் "வெளிப்படையான விவாதத்தை" கொண்டதாகவும், பாக்கிஸ்தான் தலைவர் தன்னுடைய இராணுவப் பதவியைக் கைவிட்டு, பாராளுமன்ற தேர்தல்களுக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகத் தெரிவித்தார். நேற்று பாக்கிஸ்தானின் ஜனாதிபதி, தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியெனத் தெரிந்த பின் தலைமைத் தளபதி பதவியில் இருந்து இறங்கிவிடுவதாக அறிவித்தார்; இதன் பின் பாராளுமன்ற தேர்தல்களுக்கு புதிய காலக்கெடு ஒன்றை பெப்ரவரியில் நிர்ணயித்துள்ளார்--முன்னர் திட்டமிடப்பட்டதற்கு ஒரு மாதம் இது தள்ளிவருகிறது. இவருக்கு விசுவாசமாக இருப்பவர்கள் இராணுவ மற்றும் அவசரகால ஆட்சிக்காலத்தில் உரிய நிலையில் பொறுப்புடன் இருப்பர் என்ற தன்மையில், இவருடைய சமீபத்திய அறிவிப்பு வெறும் பூச்சுத்தான். வெள்ளை மாளிகை உடனடியாக இந்த அறிக்கையைப் பாராட்டியது. ஆனால் இந்தக் கட்டத்தில் பூட்டோ இந்த அறிக்கையை "தெளிவற்றதாக" உள்ளது என உதறித் தள்ளியதுடன், இன்றைய அணிவகுப்பு திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கூறிவிட்டார். திரைக்குப் பின்னணியில், பூட்டோ புஷ் நிர்வாகத்துடன் தற்பொழுதைய அரசியல் முட்டுக்கட்டை நிலையில் இருந்து வெளியேறுவதற்கு ஆழ்ந்த விவாதங்களை மேற்கொண்டுளார். புதனன்று PPP தலைவர் பாக்கிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதர் Anne Paterson உடன் தனிப்பட்ட முறையில் பேசினார். முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியான Daniel Markey நியூ யோர்க் டைம்ஸிடம் நேற்று வெள்ளை மாளிகை பூட்டோவிடம் "சற்று நிதானமாக அமர்ந்து விஷயங்களை தொடரவேண்டும் என்றும் அவசரப்பட்டு எதையும் செய்யவேண்டாம்" என்றும் ஆலோசனை கூறியதாக தெரிவித்துள்ளது. பூட்டோ ஏற்கனவே இராணுவ ஆட்சியுடன் "கொல்லைப்புற" பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இதே நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் முக்கிய பாக்கிஸ்தானிய தளபதிகளுடன் பேசி வருதவதாகக் கூறியுள்ளது. முன்பு இரு முறை, "மூத்த தளபதிகள் இராணுவ ஆட்சியாளர்களை அவர்கள் செல்வாக்கு குன்றியவுடன், தொடர்ந்து ஆட்சியில் இருப்பது இராணுவம் முழுவதிற்கும் சேதம் விளைக்கும் என்பதால் இராஜிநாமா செய்யுமாறு கோரியிருந்தனர்.... முஷாரஃப்பும் அத்தகைய நிலையை எதிர்கொள்ளக்கூடும்" என்று பத்திரிகை தெரிவித்துள்ளது. மேலும் முஷாரஃப்பிற்கு பின்னர் பதவிக்கு வரக்கூடிய தளபதி Ashfaq Parvez Kayani இப்பொழுது "மேலை வட்டங்களில் முஷரப்பிற்கு மாற்றீடாக வரும் திறனைக் கொண்டவர்" என்று பரந்த அளவில் கருதப்படுவதாக செய்தித்தாள் சுட்டிக் காட்டியது. இத்தகைய பின்பகுதி சதியாலோசனைகளின் முக்கிய நோக்கம், இராணுவ ஆதரவு ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதோடு--தேவையானால் முஷாரஃப் இல்லாமலும் அது செயல்படும்--- ஜனநாயக உரிமைகளுக்காக மக்கள் இயக்கம் வளர்வதை தடுக்க வேண்டும் என்பதாகும். இஸ்லாமாபா மற்றும் வாஷிங்டனில் ஆளும் வட்டங்களின் அச்சம் சாதாரண மக்களின் அதிருப்தி மற்றும் கோபம் விரைவில் பூட்டோ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் நிர்ணயித்துள்ள குறுகிய வரம்பை மீறிச் சென்றுவிடக்கூடும் என்பதாகும். ஈராக் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான அமெரிக்கப் போர்கள் பற்றி நாட்டின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பைக் கொண்டுள்ள நிலையில் குறிப்பாக, பூட்டோ புஷ் நிர்வாகத்துடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் அவரை இன்னும் சமரசத்திற்கு உட்படுத்துகின்றன. பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவாளரான Daily Times இன் ஆசிரியர் குழுத் தலைவர்கூட, "இவ்வம்மையார் அமெரிக்கர்கள் கூறுவதைத்தான் கேட்கிறார்; வேறு எவர் பேச்சையும் கேட்பதில்லை" என்று குறைகூறியுள்ளார். வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் முஷாரஃப்-எதிர்ப்புக்களில் பெற்றுள்ள முக்கியத்துவம் பாக்கிஸ்தானின் நகரப்பகுதி மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளிடையே உணர்வு மாற்றத்தை குறிப்பிடுகிறது; ஆரம்பத்தில் இவர்கள் 1999ல் முஷாரஃப் கொண்டுவந்த ஆட்சி மாற்றத்தை ஊழல்கள் மலிந்த நவாஸ் ஷெரிப் மற்றும் பூட்டோவின் அரசாங்கங்களுக்கு முற்றுப்புள்ளி கொடுத்த விதத்தில் பாராட்டினர். முஷாரஃப்பின் மந்திரி சபையில் பணியாற்றிய கேம்ப்ரிட்ஜில் பயிற்சி பெற்ற வழக்கறிஞரான அத்தர் மினல்லா, நியூ யோர்க் டைம் இடம் அவரும் மற்றவர்களும் இப்பொழுது எதிர்ப்பதற்கு காரணம் ஜனாதிபதி தன்னுடைய சீர்திருத்தம் பற்றிய உறுதிமொழிகளை செயல்படுத்தாதுதான் என்றார். "1999க்கு முன்பு நடந்தே இராததைத்தான் இவர் செய்யப்போகிறார்: ஆளும் வர்க்கத்திலுள்ளவர்கள் என்ன செய்தாலும் அதற்கு பதில்கூற அவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும் " என்று அவர் குறிப்பிட்டார். 1999ல் இருந்து பொருளாதாரத்தில் இராணுவத்தின் மிகப் பரந்த விரிவாக்கப் பங்கு, வணிக வட்டங்களில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 2004ல் இருந்து ஆட்சியின் தடையற்ற சந்தைக் கொள்கைகளை ஒட்டி, ஒருவித பொருளாதார ஏற்றத்தை பாக்கிஸ்தான் கொண்டிருந்தாலும், தளபதிகளும் அவர்களுடைய எடுபிடிகளும்தான் இதில் பெரும் நலன்களை பெற்றனர். ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட Age பத்திரிகையில் செவ்வாயன்று வெளிவந்த கட்டுரை ஒன்று, "பாக்கிஸ்தானின் இராணுவச் சின்னங்களை அணிந்தோரின் பேரரசு" ("Pakistan's Epaulette Empire", "கிளைவிட்டுப் படர்ந்துள்ள 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிகமாக இராணுவத்திலுள்ள முஷாரஃப்பின் தோழர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் 10-15 சதவிகிதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இராணுவம் பாகிஸ்தானின் செழுமைபெற்றுவரும் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தனியொரு தொகையைக் கொண்டுள்ளது. சொத்துக்கள், சுற்றுலா, கட்டுமானங்கள், போக்குவரத்து, தொலைத் தொடர்பு என்று இராணுவ செல்வாக்கு இல்லாத வணிகப் பகுதியே இல்லையெனக் கூறலாம். தளபதிகளுக்கு சொந்தமாக காலையுணவு வகைகள், ரொட்டித் தயாரிப்புக்கள், பெட்ரோல் நிலையங்கள், பண்ணைகள், வங்கிகள் ஆகியவை இருப்பதுடன் அவர்களுடைய சில நிறுவனங்கள் பங்குச் சந்தைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது. மத்தியதர வகுப்பின் சில பிரிவுகள் சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதன் மூலம், ஊழல் மற்றும் நெருங்கிய கும்பல்வாதம் இவற்றுக்கு முடிவுகட்டுவதுடன் இன்னும் கூடுதலான பொருளாதார வாய்ப்புக்களை தங்களுக்கு தேடுகின்றன. "பெரிதும் உயரும்" பொருளாதாரம் மக்களில் மிகக் குறைந்த அடுக்கு ஒன்றிற்குத்தான் நலன்களை கொடுத்துள்ளது. தனியார் மயமாக்குதல், அரசாங்க உதவித் தொகைகள் மற்றும் சேவைகளில் கடும் வெட்டுக்கள் ஆகியவை வேலைகளையும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களையும் குறைத்து, நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளையும் பெரிதாகப் பாதித்துள்ளன. முஷாரஃப்பிற்கு எதிரான தொடர்ச்சியான எதிர்ப்பு இயக்கம் எதுவும், அழுத்தும் இந்த சமூகப் பிரச்சினைகள் மற்றும் உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகளை தெளிவாக உச்சரிப்பதற்கு ஆரம்பிக்கும். முஷராஃப்பை போலவே, பூட்டோவும் பரந்த அரசாங்க எதிர்ப்பு இயக்கம் முதலாளித்துவ ஆட்சிக்கு அரசியல் ரீதியாக ஆபத்து என்பதை நன்கு அறிவார். எனவேதான் இராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புக்களுக்கு அவர் பெரும் தயக்கத்துடன் அழைப்பு விடுத்துள்ளார்; கடைசி நிமிஷத்தில்கூட இன்றைய அணிவகுப்பை அவர் இரத்து செய்துவிடவும்கூடும். |