:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: Oppose the JVP threats against
the SEP
இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான ஜே.வி.பி. யின் அச்சுறுத்தலை எதிர்
By the Socialist Equality Party (Sri Lanka)
10 November 2007
Back to screen version
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான
அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) இயக்கமும், மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (ம.வ.ஊ.ச.)
தலைமைத்துவத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ஆதரவாளர்கள் விடுத்துள்ள அச்சுறுத்தலை கண்டனம்
செய்யுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றன.
ம.வ.ஊ.ச. வருடாந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் ஒன்றிற்கு
பிரதிபலித்த ஜே.வி.பி. சார்ந்த இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கம் (இ.ம.வ.ஊ.ச.), மத்திய வங்கி ஊழியர்
சங்கத்தின் தலைவர் கே..பி. மாவிகும்புர, சங்கத்தின் பொருளாளர் எம்.டபிள்யு. பியரத்ன ஆகியோரை "சிங்களப் புலிகள்"
என வகைப்படுத்தி துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. "சிங்களப் புலிகள்" என்றால் தமிழீழ விடுதலைப் புலிகளின்
சிங்கள ஆதரவாளர்கள் என்பதாகும். மாவிகும்புரவும் பியரத்னவும், புலிகளையும் ஆட்சியில் இருந்து வந்த கொழும்பு அரசாங்கங்களையும்
தொடர்ச்சியாக எதிர்த்துவரும் சோ.ச.க. யின் ஆதரவாளர்களாவர்.
இ.ம.வ.ஊ.ச. வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் அவதூறானது மட்டுமன்றி, இலங்கையில் அனைவரும்
அறிந்துள்ளவாறு, கடந்த இரண்டு ஆண்டுகள் பூராவும் இராணுவ ஆதரவைக் கொண்ட துணைப் படைகள் நூற்றுக்கணக்கானவர்களை
படுகொலை செய்துள்ள அல்லது "காணாமல் ஆக்கியுள்ள" ஒரு சூழ்நிலையில் ஒரு கேடுவிளைவிக்கும் அச்சுறுத்தலாகும். சிங்கள
பேரினவாத மொழியில், ஒருவர் "சிங்களப் புலி" என முத்திரை குத்தப்படுவாரேயானால், அவர் ஒரு துரோகி மற்றும்
அதனால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகும். சோ.ச.க. இத்தகைய அச்சுறுத்தலை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பி. யின் வெறிபிடித்த நாட்டுப் பற்று பிரச்சாரத்தை எதிர்த்த நூற்றுக்கணக்கான
அரசியல் எதிரிகள் மற்றும் தொழிற்சங்க வாதிகளையும் ஜே.வி.பி. யின் துப்பாக்கிதாரிகள் படுகொலை செய்த
1980களின் கடைப் பகுதியை நாம் நினைவூட்டுகிறோம். எங்களது மூன்று தோழர்களும் அவர்களால் கொல்லப்பட்டனர்.
1980களில் சோசலிஸ்டுகள் என கூறிக்கொண்ட ஜே.வி.பி., வலதுசாரி ஐக்கிய தேசியக்
கட்சி அரசாங்கத்தை பெயரளவில் எதிர்த்தது. இன்று ஜே.வி.பி. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தை
பகிரங்கமாக ஆதரிப்பதோடு புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தத்திற்கு தொண்டை
கிழிய வக்காலத்து வாங்கி வருகின்றது. அரசாங்கத்தாலும் அதன் ஜே.வி.பி. ஆதரவாளர்களாலும்
இலக்குவைக்கப்பட்டிருப்பது வெறுமனே சோ.ச.க. மட்டுமல்ல, யுத்தத்தை எதிர்ப்பவர்களும் அல்லது தமது அடிப்படை
உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்துக்காகப் போராடுபவர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.
கிழக்கில் இராஜபக்ஷ முதலாவது இராணுவத் தாக்குதலை முன்னெடுக்கத் தயாராகிவந்த
2006 ஜூலையில், அரச தொலைக்காட்சியில் தோன்றிய ஜே.வி.பி. சார்பு தேசப்பற்று தேசிய இயக்கத்தின்
தலைவர்களில் ஒருவரான எல்லே குணவன்ச, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த துறைமுகத் தொழிலாளர்களை
"நாசவேலை" செய்யும் "தேசத் துரோக சக்திகள்" என கண்டனம் செய்தார். அப்போதிருந்து, அரசாங்க
அமைச்சர்களும் யுத்தத்தின் பேரினவாத ஆதரவாளர்களும், வேலை நிறுத்தம் செய்த தோட்டத் தொழிலாளர்கள்,
பல்கலைக்கழக ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் எதிராக இதே போன்று
தேசத் துரோகிகள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.
ஜே.வி.பி. சார்பு அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கமும் பல்கலைக் கழகங்களில்
கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை அடக்குவதற்காக இதே பாணியிலான அச்சுறுத்தல்களை பயன்படுத்துகின்றது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புக்கும்
எதிராக ஐ.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் கண்டிக்கு அருகில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பிரச்சாரம் செய்து
கொண்டிருந்த போது, ஜே.வி.பி. உறுப்பினர்கள் சரீர தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தினர். தனது கடந்த கால
ஏகாதிபத்திய விரோத வெற்று வாய்வீச்சுக்களை தூக்கியெறிந்துவிட்ட ஜே.வி.பி., இப்போது இலங்கையில் இனவாத
யுத்தத்தின் பயனுள்ள பங்காளியாக அமெரிக்காவை அணைத்துக்கொண்டுள்ளது.
சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ. யும் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகத்
தெளிவாக கூறிக்கொள்வதாவது: இது உங்களது யுத்தம் அல்ல. ஆளும் கும்பல்கள் சுதந்திரத்தில் இருந்தே
தொழிலாளர்களை பிளவுபடுத்தி வைக்க இனவாத பகைமையை கிளறி வந்துள்ளன. தனது சந்தைச் சார்புக்
கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன இயக்கத்தை எதிர்கொண்ட யூ.என்.பி., 1983ல் நாட்டை யுத்தத்திற்குள்
தள்ளிவிட்டது. சகல பிரதான கட்சிகளும் சிங்கள மேலாதிக்கவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ளதால் இந்த
மோதல்களுக்கு நுட்பமாக முடிவு கட்ட இலாயக்கற்றவை என்பதை நிரூபித்துள்ளன. யுத்தத்தை எதிர்ப்பதானது தமிழீழ
விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக அர்த்தப்படாது. புலிகளின் தமிழ் பிரிவினைவாதமானது தமிழ் முதலாளித்துவத்தின்
நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்றதே அன்றி தமிழ் தொழிலாளர்களின் விவசாயிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம்
செய்யவில்லை.
சோ.ச.க. யுத்தத்திற்கும் வாழ்க்கைத் தரம் மீதான கடுமை குறையாத
தாக்குதல்களுக்கும் எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தப் பிரச்சாரம் செய்வதன்
காரணமாகவே, ம.வ.ஊ.ச. தலைவர்களுக்கு எதிரான ஜே.வி.பி. யின் அச்சுறுத்தல் நுட்பமானதாக உள்ளது.
ம.வ.ஊ.ச. வருடாந்த பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான ஒரு
வேலைத் திட்டமின்றி தொழில், சம்பளம் மற்றும் நிலைமைகளைப் பாதுகாப்பது சாத்தியமற்றது என பிரகடனம்
செய்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அடுத்து அடுத்து நடத்தப்பட்ட போராட்டங்களில், யுத்த முயற்சிகளுக்கு
அர்ப்பணிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை சவால் செய்ய மறுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களால்
தொழிலாளர்கள் விற்றுத்தள்ளப்பட்டுள்ளனர்.
ஜே.வி.பி. சார்பு தொழிற்சங்கங்கள் மிகவும் மோசடியானவை என்பது
நிரூபிக்கப்பட்டுள்ளது. போராளித்தனமான வார்த்தைகளை வீசும் ஜே.வி.பி., யுத்தத்தை முழுமையாக ஆதரிக்கும் அதே
வேளை, அதன் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் குழி பறிக்கின்றன. இதற்கான காரணம் தெளிவானதாகும். அரசாங்கம்
இராணுவத் தேவைகளுக்காக பில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிடுவதோடு புதிய வரவுசெலவுத் திட்டத்திலும் மீண்டும்
பாதுகாப்புச் செலவை அதிகரித்துள்ளது. வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்யும்
மாணவர்களுக்கும் மற்றும் ஆத்திரமடைந்துள்ள விவசாயிகளுக்கும் சம்பள உயர்வோ அல்லது தரமான கல்வியோ அல்லது
விவசாய மாணியங்களோ வழங்க நிதி இல்லை என அரசாங்க அமைச்சர்கள் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும்
இல்லை. இதை ஜே.வி.பி. யும் ஏற்றுக்கொண்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை நிபந்தனையின்றியும் உடனடியாகவும் வெளியேற்ற
வேண்டும் என்ற சோ.ச.க. யின் கோரிக்கையை தாக்கும் இ.ம.வ.ஊ.ச. துண்டுப் பிரசுரம், இராணுவம் மக்களைப்
பாதுகாப்பதாகக் கூறிக்கொள்கின்றது. அங்கு ஆயுதப் படைகள் மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, நடைமுறையில்
இராணுவச் சட்ட முறையை பேணிவருவதோடு குறிப்பாக தமிழர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க மிகக் கொடூரமான
வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. துருப்புக்களை வெளியேற்றும் கோரிக்கையானது புலிகளுக்கு ஆதரவளிப்பதை குறிக்கவில்லை.
மாறாக அது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள உழைக்கும் மக்களுடன் ஒற்றுமையை கட்டியெழுப்புவதையும் அவர்களின் அடிப்படை
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதையும் குறிக்கின்றது. அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் எதிரான ஒன்றிணைந்த
போராட்டம் ஒன்றில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை அணிதிரட்டவும் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்தை
ஸ்தாபிக்கவும் இன்றியமையாத முதற் படி இதுவேயாகும்.
இ.ம.வ.ஊ.ச. துண்டுப் பிரசுரத்தின் எஞ்சிய பகுதி, பொய்கள், "தேசப்பற்றற்ற
நடவடிக்கைகள்" என்ற கண்டனம் மற்றும் "நாட்டை ஆதரியுங்கள்" என்ற வேண்டுகோள்களாலும் நிறைந்து போயுள்ளது.
ம.வ.ஊ.ச. தலைவர் கே.பி. மாவிகும்புர "புலி பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் திட்டமொன்றை வழிநடத்துவதாக"
அது பிரகடனம் செய்வதோடு, 86 உயிர்கள் பலியான மத்திய வங்கி மீது 1996ல் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்
போன்ற ஒன்றை மீண்டும் நடத்த புலிகளுக்கு அவர் உதவி வருகிறார் என்றும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறன்றது.
சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் (பு.க.க.) நீண்டகால பதிவுகள்,
நாங்கள் புலிகளதும் அதே போல் ஆயுதப் படைகளதும் பயங்கரவாதத்தை எதிர்த்து வந்துள்ளோம் என்பதை
வெளிப்படுத்தும். 1996ல் நடந்த மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதலை பு.க.க. வெளிப்படையாக கண்டனம்
செய்தது. இந்த நடவடிக்கை உழைக்கும் மக்கள் மத்தியில் கசப்பான இனவாத பிளவுகளை மட்டுமே ஆழமாக்கும் என அது
சுட்டிக் காட்டியிருந்தது.
அரசாங்கத்தையும் அதன் இனவாத யுத்தத்தையும் ஆதரிக்காத எவரையும் "புலி" மற்றும்
துரோகி என ஜே.வி.பி. கண்டனம் செய்கின்றது. அதே போல், "தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்" புலிகளே என்பதை
ஏற்றுக்கொள்ளாத எவரையும் அரசாங்கத்துடன் சேர்ந்தவர்களாக புலிகள் பிரகடனம் செய்கின்றனர். இந்த இனவாத
மோதல்களில் இந்த இரு சாராரும் தமது அரசியல் எதிரிகளை இரக்கமின்றி நடத்த தயங்கப் போவதில்லை.
இந்த போலியான மாற்றீடுகளை சோ.ச.க. உறுதியாக நிராகரிக்கின்றது. கொழும்பு
அரசாங்கமும் மற்றும் புலிகளும், ஆளும் வர்க்கத்தின் எதிர் பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்வதோடு இரு சாராரும் இலாப
அமைப்பை பாதுகாக்கின்றனர். சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம்
ஒன்றுக்கான போராட்டத்திற்காக சுயாதீனமான அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே உழைக்கும் மக்களுக்கான
உண்மையான பதிலீடாகும். இது தெற்காசியா பூராவும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான
பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக விளங்க வேண்டும்.
சோ.ச.க. மீதான இந்த கொடூரத் தாக்குதல், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒரு
தெளிவான எச்சரிக்கையாகும். மக்களால் நிராகரிக்கப்பட்ட யுத்தத்தின் ஆழமான சுமைகள் உழைக்கும் மக்கள் மத்தியில்
எதிர்ப்பை தூண்டிவிட்டுள்ள நிலையில், அரசாங்கமும் அதன் பேரினவாத ஆதரவாளர்களும் தம்மை சவால் செய்யும் எவருக்கும்
எதிரான வேட்டையை தவிர்க்க முடியாமல் உக்கிரமாக்குவர். யுத்தத்திற்கான தேசப்பற்று வெறி ஆரவாரத்தின் மத்தியில்,
இராஜபக்ஷ அரசாங்கம் வேலை நிறுத்தங்களை தடை செய்யவும் தணிக்கைகளைத் திணிக்கவும் மற்றும் விசாரணையின்றி தடுத்துவைக்கவும்
பொலிஸ் அரச வழிமுறைகளை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளார். இராணுவ ஆதரவிலான கொலைப் படைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
தொழிற்சங்கங்களிலும் மாணவர்கள் மத்தியிலும், எந்தவொரு எதிரியையும் காட்டிக்கொடுக்கவும் அச்சுறுத்தவும் அரசாங்கத்துக்காக
ஜே.வி.பி. ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கின்றது.
1980களின் கடைப் பகுதியில், அரச அடக்குமுறைக்கு எதிராகவும் மற்றும் ஜே.வி.பி.
கொலைப் படைகளின் பாசிசத் தாக்குதல்களுக்கு எதிராகவும் தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிலாளர் வர்க்க அமைப்புக்களின்
ஐக்கிய முன்னணி ஒன்றுக்காக இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் பு.க.க. தலைமையில் ம.வ.ஊ.ச. ஒரு சக்திவாய்ந்த
பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இன்று தொழிலாளர் வர்க்கம் அதே ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளதோடு இந்த
அச்சுறுத்தல்களுக்கு எதிராக தமது சொந்த வர்க்கப் பதிலை அது அபிவிருத்தி செய்ய வேண்டும். அதாவது, எல்லாவற்றுக்கும்
மேலாக ஆளும் வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் எதிரான ஒரு சுயாதீனமான சோசலிச பதிலீடாக சோசலிச சமத்துவக்
கட்சியைக் கட்டியெழுப்புவதாகும்.
ம.வ.ஊ.ச. தலைமைத்துவத்தில் உள்ள எமது தோழர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள
அச்சுறுத்தலை கண்டனம் செய்து வேலைத் தலங்களிலும் பாடசாலைகளிலும் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் பிரேரணைகளை
நிறைவேற்றுமாறு சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ. ஆகியவை தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு
விடுக்கின்றன. இது இலங்கையில் உத்தியோகபூர்வ அரசியலிலும் மற்றும் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் மேலாதிக்கம்
செய்யும் நச்சுத்தனமான பேரினவாத சூழ்நிலைக்கும் இராணுவவாதத்துக்கும் எதிராக தொழிலாளர் வர்க்கத்தாலும் மற்றும்
இளைஞர்களாலும் முன்னெடுக்கப்படும் மிகப் பரந்த எதிர்த்தாக்குதலின் ஒரு பாகமாக இருக்கவேண்டும். நாம் அனைத்துலக
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வலைத் தளமான உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறும், எமது
வேலைத் திட்டத்தை வாசிக்குமாறும், சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர் அமைப்பில் இணையுமாறும்
தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
|