World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India's Congress Party buckles to Hindu Supremacists' communal campaign over Ram Sethu

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி ராமர் பாலம் பற்றிய இந்து மேலாதிக்கவாத வகுப்புவாதப் பிரச்சாரத்திற்கு கொக்கி போடுகிறது

By Arun Kumar and Kranti Kumara
17 October 2007

Back to screen version

இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் குறுகிய ஜலசந்தியில் ஒரு கப்பல் போக்குவரத்திற்கான கால்வாயை தோண்டும் திட்டம் பற்றிய சமீபத்திய அமளி நெருக்கடி-நிறைந்த பாரதீய ஜனதா கட்சி (BJP) இந்தியாவின் இரண்டாம் பெரிய அரசியல் கட்சியாக ஏன், எவ்வாறு தன் நிலைமையை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்பதைப் பற்றி வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது; அதே நேரத்தில் பெரும்பாலான இந்தியர்களால் நிராகரிக்கப்பட்ட, தீமை விளைவிக்கும் இந்து மேலாதிக்க கருத்தியலை, ஒரு பிற்போக்கான சமூகப் பொருளாதா செயற்திட்டத்தை எப்படி முன்வைக்கிறது என்பதும் தெரியவருகிறது.

முன்பு பலமுறை எண்ணற்ற சந்தர்ப்பங்களில் செய்தது போலவே, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் பெரும் பங்காளியான காங்கிரஸ் கட்சி இதற்கு ஏற்ப BJP யின் பிற்போக்கு மற்றும் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு இணங்க சமரசம் செய்து கொண்டுவிட்டது. நீதிமன்றங்களும் அவ்வாறே செய்தன. UPA அரசாங்கம் தொடர்ந்து பதவியில் நீடிக்கத்தேவையான பாராளுமன்ற வாக்குகள் ஆதரவைக் கொடுத்து பதவியில் அதைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) (CPI-M) இந்து வலதுசாரிக்கு தீய இச்சைகளை பூர்த்திசெய்வதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதன் ஒப்புதல் முத்திரையை அளித்தது.

சேதுசமுத்திரம் (கடற்-பாலம் எனப் பொருள்படும்) திட்டம் கப்பல்கள் இலங்கைத் தீவின் தெற்கு முனையை சுற்றிக் கொண்டு போகவேண்டிய தேவையை அகற்றுவதன் மூலம் இந்தியப் பெருங்கடலின் மேற்குப்புறத்தில் இருந்து கிழக்குப் பகுதியான வங்கக் கடலுக்கு செல்லும் கப்பல்களின் பயணத் தூரத்தை குறைக்கும்.

இத்திட்டம் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையே இருக்கும் ஆழமற்ற, குறுகலான கடல்நீர்ப் பாதையை ஆழமாக்குவதின் மூலம் ஒரு கால்வாயை தோற்றுவிக்க முற்படுகிறது. இந்தியாவின் சூயஸ் கால்வாய் என்று இத்திட்டத்தை கொண்டுவருபவர்களால் பாராட்டப்படும் சேதுசமுத்திரத் திட்டம் 2005ல் தொடங்கி 2008ல் முடிவடைய இருக்கிறது.

UPA அரசாங்கம் இது நிறைய வணிக நலன்களைக் கொடுக்கும் என்று கால்வாய்த் திட்டத்தை கொண்டுவந்தாலும், இத்திட்டத்தில் ஒரு இராணுவ நோக்கம் உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இக்கால்வாய் இந்திய கடற்படைக்கு தன்னுடைய பிரிவுகளை ஒரு கடலோரத்தில் இருந்து மற்றொரு கடலோரத்திற்கு மிகத் திறைமையுடன் கொண்டு செல்லும் திறனைக் கொடுக்கும் என்பதோடு, எந்த எதிர்கால போட்டியாளரையும் திணற அடிக்கச்செய்யும் முனைகளாக கால்வாயை திறமையாக கட்டுப்படுத்த முடியும்

இத்திட்டம் கடுமையான குறுகிய மற்றும் நீண்ட கால சேதங்களை ஏற்படுத்தவும் கூடும் என்பதால் மிகப் பரந்த முறையில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது இந்திய, இலங்கை கடலோரப்பகுதிகளில் வசிக்கும் வறிய மீன்பிடிக்கும் சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் இது அழிக்கும். இப்பகுதி நீர்நிலையில் இந்திய கடற்படை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளம் ஒன்றை அமைப்பதற்கான இரகசிய திட்டங்களை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன; அது அணுசக்திக் கழிவு தற்செயலாகவோ அல்லது கசிந்தாலோ ஏற்படக்கூடிய ஆபத்தை அதிகரிக்கும். இத்திட்டம் சுனாமி புயல் தாக்குதல்கள் திறனை அதிகரிக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

கடந்த இரு மாதங்களாக BJP மற்றும் அதன் இந்து அடிப்படைவாத கூட்டாளிகள் வெளிப்படையான சந்தர்ப்பவாத, வகுப்புவாத பிரச்சாரத்தை சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக நடத்தி வருகின்றனர். BJP தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) கூட்டணி அரசாங்கமே இத்திட்டத்தை 2002ல் ஒப்புக் கொண்டிருந்தாலும், இப்பொழுது ஆழமாக்கும் பணி "ராம் சேது" (கடவுள் இராமரின் பாலம்) - இந்தியாவின் தென் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கையின் வடபகுதி வரை செல்லும் இயற்கை சங்கிலியான சிறு மணல் திட்டுக்களின் மீது ஒரு இந்து சமயப் பெயர் சூட்டப்பட்டுள்ளது-, அழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தைக் கூறி, கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

"ராம் சேது" மீது நம்பிக்கை என்பது, கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குழந்தைக்கும் சடங்கு போல் கற்பிக்கப்படும் பழம்பெரும் இந்திய காப்பியங்கள் இரண்டில் ஒன்றான இராமாயணத்தில் இருந்து வருவதாகும்.

இந்தக் காப்பியம் பற்றி கணக்கிலடங்கா மொழிபெயர்ப்புக்கள் இருந்தாலும், இந்து அடிப்படைவாதிகளின் ராம் சேது பற்றிய கூற்றுக்கள் 16ம் நூற்றாண்டு வட இந்தியக் கவி துளசிதாஸ் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

அக்காப்பியத்தின்படி, இராமர் (இந்திப் பெயர் ராம்), மூன்று முக்கிய இந்துக் கடவுளர்களில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரம் என்றும் இராமாயணக் கதை புவியில் அவருடைய செயல்களை சித்தரித்துக் காட்டுவது என்றும் நம்பப்படுகிறது.

இராமர் ஒரு வட இந்திய அரசின் ராஜா ஆவார்; அதன் தலைநகர் அயோத்தி நகரம் ஆகும்; இது இப்பொழுது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. காப்பியத்தின்படி, இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திக் கொண்டு இலங்கை சென்ற பின்னர், இராமர் தன்னுடைய விரோதியான, தென்னக நாட்டு அரசனான இராவணனை, இலங்கைக்கு சென்று பிடிக்க முற்படுகிறார். இராமருடைய தொடர் முயற்சிக்கு அவருடைய குரங்கு-பக்தரான ஹனுமான் உதவி செய்கிறார்; இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீரால் பிரிக்கப்பட்டுள்ள பகுதியில் ஒரு பாலத்தை கட்டுவதற்கு ஹனுமான் பெரிய குரங்குப் படை ஒன்றை திரட்டுகிறார்.

BJP உடன் முன்ன்னியில் நின்று இந்து வலதுசாரி பாக் ஜலசந்தியில் ஆழமற்ற பகுதிகளில் காணக்கூடிய சங்கிலி போன்ற மணல்திட்டுக்களை இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய பாலம் என்று அபத்தமான கூற்றை முன்வைத்து இப்பொழுது சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக்கொண்டிருக்கிறது.

BJP தலைமை வகித்த கூட்டணி அரசாங்கம் 2002ல் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோதே, கால்வாயின் அமைப்பு, போக்கு ஆகியவை "ராம் சேதுவை" பிளந்து செல்லும் என்பதை நன்கு அறிந்திருந்தது என்பதை அறியும்போது, BJP மற்றும் அதன் கூட்டாளிகளின் பாசாங்குத்தனம் மற்றும் சந்தர்ப்பவாதம் இகழ்ச்சிக்கு உரியதாகிறது. ஆயினும்கூட இப்பொழுது ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு இந்த "இந்து மரபியத்தை" காக்க முன்வந்துள்ள அடிப்படைவாத அமைப்புக்களில் ஒன்றுகூட அப்பொழுது எதிர்ப்புக் குரலை எழுப்பவில்லை.

தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட BJP நண்பரான சுப்பிரமணியன் ஸ்வாமி, இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்த மனு ஒன்றிற்கு விடையளிக்கும் வகையில், நீதிமன்றம் இந்திய அரசாங்கத்திற்கும் சேதுசமுத்திர நிறுவனத்திற்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆழப்படுத்தும் வேலையை "ராம் சேதுவை" பாதிப்பு இல்லாமல் நடத்துமாறு இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. மேலும் இந்திய அரசாங்கம் இரு வார காலத்தில் முழுத் தகவல்களையும் கொடுக்குமாறு உத்தரவிட்டது.

செப்டம்பர் 12ம் தேதி இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) இதை எதிர்கொள்ளும் வகையில் ஒரு பிரமாணத்தைக் கொடுத்தது. ASI, "மனுதாரர்கள் [சுப்பிரமணியன் ஸ்வாமி, மற்றவர்கள்] நியாயம் கேட்கும்போது [ராம் சேதுவை சேதப்படுத்தக்கூடாது என்னும்போது] முக்கியமாக வால்மீகி இராமாயணம், துளசிதாசரின் ராமசரிதமானஸ் மற்றும் புராணப் பொருளுரைகளை நம்பியுள்ளனர் என்றும், இவை பண்டைய இந்திய இலக்கியத்தில் முக்கியமான பகுதி என்றாலும், இவை கதாபாத்திரங்கள் அல்லது காப்பியங்களில் விளக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் மறுப்பிற்கு இடமின்று இருந்தன, நடந்தவை என்று வரலாற்றளவில் சான்றுகள் இருப்பதாகக் கூறமுடியாது" என்று அதில் கூறப்பட்டது.

ASI மேலும் குறிப்பிட்டது: "இடைக்கால, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா பற்றிய தொடர்ச்சியான வரைபடங்களை அடிப்படையாக மனுதாரர்கள் முன்வைத்துள்ளனர்; இவை ஆடம் பாலம் என்று அறியப்பட்டுள்ள ஒரு அமைப்பு பற்றி குறிப்பிடுகின்றன என்பது ஒப்புக்கொள்ளத்தக்க வகையில் உள்ளது. ஆனால் பெயரளவில் ஒரு குறிப்பு இருப்பது மட்டுமே இந்த அமைப்பு உண்மையில் மனிதன் கட்டிய அமைப்பு என்பதாக உண்மையை உறுதியாக நிலைநிறுத்த முடியாது. எலும்புகள் போன்றவற்றிலோ, வேறுபல பழங்கால வடிவங்களிலோ மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், தொல்லியல் ஆய்வு ரீதியாய் ஒரு வரலாற்று உண்மையின் நிலைப்பாடு, தன்மை இவற்றை நிரூபிக்க முக்கியமானது ஆகும். ஆடம் பாலம் என்னுமிடத்தில் உள்ள அமைப்பில் அத்தகைய மனித விட்டுச்சென்ற சுவடுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை."

இதற்கு மறுநாள், இந்துக்களுக்காக பாதுகாவல் அமைப்பாக தன்னையே நியமித்துக் கொண்ட BJP, ASI யின் சாதாரண கருத்தான இராமாயணம் என்பது ஒரு சமய-இலக்கியம், வரலாற்று இலக்கியம் இல்லை என்பதை எடுத்துக் கொண்டு, UPA அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான வகுப்புவாத பிரச்சாரத்தை தொடக்கியது.

2004ல் அதிகாரத்தில் இருந்து வீழ்ந்த பின்னர், BJP கிட்டத்தட்ட தொடர்ந்த நெருக்கடியில்தான் இருந்து வருகிறது. பெருவணிகத்தின் முக்கியமான பிரிவுகளையும் அது விரோதித்து கொண்டுவிட்டது; அதற்குக் காரணம் விசுவாசமான எதிர்க்கட்சியாக செயல்படாமல் அடிக்கடி பாராளுமன்ற செயல்பாடுகளை நடத்த விடாமல் இது செய்ததுடன், அரசாங்கத்தை "இந்து-எதிர்ப்பு" அரசாங்கம் என்று காட்டும் முயற்சியிலும் பலமுறை ஈடுபட்டதுதான்; உதாரணமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இத்தாலிய-கத்தோலிக்க மூலத்தை சுட்டிக் காட்டியது எடுபடாமற் போயிற்று.

இருந்தபோதிலும்கூட ராம் சேதுப் பிரச்சினை குறித்து BJP போராட்டத்தை தொடக்கியவுடனேயே UPA அரசாங்கமும் அதன் காங்கிரஸ் தலைமையும் முழுமையாக பின்வாங்கின.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடுத்த உத்தரவின்பேரில், மத்திய சட்ட மந்திரி எச்.ஆர். பாரத்வாஜ் அவசர அவசரமாக ஒரு செய்தியாளர் கூட்டத்தை கூட்டி, ASI கொடுத்த பிரமாணத்தை நிராகரித்து, "இராமர் வாழ்ந்தது பற்றி சந்தேகிக்க முடியாது. இமயமலை என்பது இமயமலை போல், கங்கை என்பது கங்கை போல், இராமர் இராமரே. இது நம்பிக்கை பற்றியது. நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள கருத்திற்கு எந்த சான்றும் தேவையில்லை" என்று அறிவித்தார்.

ASI ஐ மேற்பார்வையிடும் பொறுப்பு கொண்ட, மத்திய பண்பாட்டுத் துறை மந்திரியான அம்பிகா சோனி, இராஜிநாமா செய்ய முன்வந்தார். செய்தியாளர்களுக்கு தெரிவித்த கருத்தில் அவர் கூறினார்: "என்னுடைய தலைவர்கள் (பிரதம மந்திரி மன்மோகன் சிங், சோனியா காந்தி) என்னைக் கேட்டுக் கொண்டால் என்னுடைய பதவியை ஒரு நிமிடத்தில் துறந்துவிடுவேன்."

அம்பிகா சோனி, சோனியா காந்தியை சந்தித்தபின் தன்னுடைய வேலையை தக்க வைத்துக் கொண்டாலும், சடுதியில் ASI ஐ ஒரு பலி ஆடாக ஆக்க முற்பட்டார். இரண்டு உயர்மட்ட அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்கினார்; BJP யின் பிற்போக்கு, மூடப்பழமை இருள் மற்றும் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு எதிராக அவர்கள் செய்ததெல்லாம் அறிவியல் சார்ந்த கருத்து ஒன்றை அளித்ததுதான்.

ஸ்ராலினிச CPI(M) இப்படி இந்த வகுப்புவாதக் கூறுபாடுகளுக்கு தீங்கு செய்யத் துணைபோவதற்கு களிப்புடன் ஒப்புதல் முத்திரை இட்டது. தங்கள் அறிக்கையில் அக்கட்சியினர் கூறியதாவது: "சேதுசமுத்திரம் வழக்கில் தலைமை நீதிமன்றத்தில் ASI அளித்த பிரமாணத்தில், மனுவிற்கு புறம்பாக கருதப்படும் சில கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுவது என்ற தக்க, உரிய முடிவை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது."

இதைத் தொடர்ந்து CPI(M) ஒரு வளைந்த நாக்குடன் கூறியது: "அப்படி இருந்தாலும், ஆடம் பாலம் (அல்லது ராம் சேது) பாக் ஜலசந்தியில், மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வ சான்று இல்லை என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டும்."

இராமாயணத்தில் இருந்துதான் இது மனிதனால் கட்டப்பட்ட அமைப்பு (பாலம்) என்று கூறப்படுவதற்கு வழக்கின் ஒரே "சான்று" இருக்கும்போது, தாங்கள் ஏன் பாத்திரங்கள் அல்லது காப்பியத்தில் நடந்தது போல் நிகழ்வுகள் உண்மையாய் இருந்தவற்றின் வரலாற்றுத் தன்மை வழக்கிற்கு "புறம்பானது" என்று தாங்கள் ஏன் கருதினர் என்பதை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் விளக்கவில்லை.

காங்கிரஸ் மற்றும் இடது எதிர்ப்பாளர்கள் அரசியலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது பற்றி BJP முழு ஆதாயத்தை பெற்றுக் கொண்டது. இந்திய பாராளுமன்றத்தின் மக்கள் பிரிவாகிய லோக் சபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எல்.கே. அத்வானி, ராமருடைய பிறப்பிடம் என்ற அடிப்படையில் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்துத் தள்ளவேண்டும் என்ற பிரச்சாரத்தின் முதன்மை ஏற்பாட்டாளர், இப்பொழுது ASI க்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், இந்துக்கள்மீது "இது அவமதிப்பை அள்ளி வீசியது" என்றார்.

BJP யின் தலைவர் ராஜ்நாத் சிங் இதேபோல் முழக்கமிட்டார்: "இந்துக்களின் சமய உணர்வுகளை புண்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை அரசாங்கம் கோரவேண்டும் என்று BJP கேட்டுக் கொள்கிறது."

BJP மற்றும் அதன் வகுப்புவாத நண்பர்கள் "இந்து உணர்வு", "இந்து மரபியம்" பற்றி அபசுரமாக ஒலி எழுப்பியிருக்கையில், கால்வாய் திட்டம் எப்படி இந்தியா, மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் வாழும் மீன்பிடிப்பவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வில் பேரழிவுத் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது பற்றியோ, கடுமையான சுற்றுச்சூழல் சேதத்தைப் பற்றியோ கூறவில்லை.

காங்கிரஸ் கட்சியும் அது பற்றி ஏதும் கூறவில்லை. BJP வகுப்புவாதிகளை சமரசப்படுத்த விரைவில் அரசாங்கம் முயன்றாலும், பல உள்ளூர் தளத்தை கொண்ட மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புக்கள் இத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பல முறையும் கூறியதை முழு அசட்டையுடனும், இகழ்வுடனும்தான் எதிர்கொண்டனர்.

மதசார்பற்ற தன்மையை நிலைநிறுத்துவதாக கூறிக்கொண்டாலும், காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக இந்து வலதுடன் இணங்கி நின்றிருக்கிறது, சில சமயம் உடந்தையாக செயல்பட்டதற்கும் நீண்ட வரலாறு உண்டு. 2004 மே மாதம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான UPA பலமுறையும் அரசியல் அமைப்பு அதிகாரங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்திற்காக மாநிலங்களை "ஜனாதிபதி ஆட்சியின் கீழ்" கொண்டுவந்துள்ளது; ஆனால் 2002 ல் முஸ்லிம் எதிர்ப்புப் படுகொலைகளுக்கு தலைமை தாங்கி, இப்பொழுதும் அதை நடத்தியவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் BJP அரசாங்கத்திற்கு எதிராக குஜராத்தில் அது எதையும் செய்யவில்லை. உண்மையில், BJP பிரிவினர் சிலரைத் திருப்திப்படுத்தும் வகையில் ஆதரவைக் கொண்டு காங்கிரஸ் வரவிருக்கும் குஜராத் மாநிலத் தேர்தல்களுக்கு தயாராகிறது.

1991ல் காங்கிரஸ் தொடக்கிய புதிய தாராள சீர்திருத்தங்கள் மீதான மக்கள் சீற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு 1998ல் தேசிய அளவில் BJP முதல்முறையாக அதிகாரத்தைக் கைப்பற்றியது; மேலும் 1996-1998ல் இந்தியாவை ஆண்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ந்து ஆதரவைக் கொடுத்திருந்தனர். BJP தலைமையிலான NDA அரசாங்கம் இதன்பின்னர் இரக்கமற்ற முறையில் வணிகச் சார்புடைய, தொழிலாள வர்க்க-எதிர்ப்பு நிறைந்த பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தியது; இதன் விளைவாக 2004 பொதுத் தேர்தலில் அவமானகரமான தோல்வியை சந்தித்தது.

அப்பொழுதில் இருந்து அக்கட்சி தன்னுடைய முந்தைய இறுமாப்பு நடையை இழந்து, உட்பூசல்கள் குற்றத்தை பிறர்மீது போடல் ஆகியவற்றால் வீணழிந்துவருகிறது. ஆயினும் கூட காங்கிரஸின் சமரசத்தாலும் மற்றும் அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ செயற்பட்டியலுக்கும் எதிரான தொழிலாள வர்க்கம் மற்றும் உழைப்போரின் எதிர்ப்பை ஸ்ராலினிஸ்டுகள் ஆபத்து இல்லாமல் செய்துவிடுவதாலும் வழங்கப்படும் உயிர் பிழைத்தல் மூலம் தள்ளாடி நடக்கிறது


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved