World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்குAs Turkey-Iraq crisis escalates, US plans military strikes on PKK bases துருக்கி-ஈராக் நெருக்கடி தீவிரமடைவதால், குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி தளங்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிடுகிறது By Peter Symonds வட ஈராக்கிலுள்ள பிரிவினைவாத குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) கெரில்லா யுத்த தளங்களை தாக்க துருக்கி இராணுவம் தீவிரமடைந்துள்ளபோது, ஈராக்கில் துருக்கியின் தலையீடு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை மேலும் ஸ்திரமின்மைக்கு கொண்டு செல்லும் என்பதால், அதை தடுக்க வாஷிங்டன் மற்றும் இலண்டன் மிகத்தீவிரமான இராஜாங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும், அமெரிக்க படைகளை கொண்டோ அல்லது துருக்கி இராணுவத்துடன் இணைந்தோ, குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் மீது தாக்குதல்கள் நடத்த புஷ் நிர்வாகமும் திட்டங்களை தீட்டி வருவதாக நேற்றைய Chicago Tribune பத்திரிகை செய்தி வெளியிட்டது. சமீபத்தில் துருக்கிக்குள் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் தாக்குதல்களை கண்டிருக்கும் துருக்கிய அரசாங்கம், ஈராக் எல்லையோரங்களில் பெருமளவிலான இராணுவத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. பீரங்கிகள், ஆயுத தளவாடங்கள், யுத்த விமானங்கள் மற்றும் குண்டு வீசும் ஹெலிகாப்டர்களுடன் குறைந்தபட்சம் கனரக ஆயுதந்தாங்கிய 60,000 படையினர்கள் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி முகாம்களை தாக்க ஈரான், ஈராக் மற்றும் துருக்கி எல்லையோரங்களில் உள்ள கரடுமுரடான குவாண்டில் மலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம், எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கு ஆணையிட அரசாங்கத்தை அங்கீகரிக்கும் ஒரு மசோதாவிற்கு துருக்கிய பாராளுமன்றம் பெரும்பான்மையுடன் ஒப்புதல் வழங்கியது. ஞாயிறன்று குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி போராளிகள் ஒரு துருக்கி முகாமை தாக்கி குறைந்தபட்சம் 12 படையினர்களை கொன்றதுடன், எட்டு பேர்களை கடத்தி சென்றதால் பதட்டங்கள் உச்சபட்ச கொதிநிலையை அடைந்தன. இந்த கொரில்லாக்களை பின் தொடர்ந்து ஈராக் எல்லை வரை சென்று துருக்கிய இராணுவமும் எதிர்தாக்குதல் நடத்தின. ஈராக்கினுள் உள்ள 60 இற்கும் மேற்பட்ட இலக்குகளை போர் விமானங்கள் தாக்கியதாக துருக்கி செய்திகள் தெரிவித்தன. எவ்வாறிருப்பினும், வட ஈராக்கிய குர்திஷ் பிராந்தியத்தில் ஒரு பெரியளவிலான தாக்குதல் நடத்துவதை துருக்கி தவிர்த்து கொண்டது. குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி தளங்களை அழிப்பதுடன், குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி தலைவர்களை கைது செய்து அவர்களை அன்காராவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மற்றும் ஈராக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துருக்கிய அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு பதிலாக, குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியை கவனிக்குமாறு ஈராக் அரசாங்கம் மற்றும் குர்திஷ் பிராந்திய அரசாங்கத்திற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நெருக்கடி கொடுத்தன. வாஷிங்டன், லண்டன் மற்றும் பாக்தாத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஒரு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள், பிரச்சனையை தீர்ப்பதில் தோல்வி அடைந்திருக்கின்றன. லண்டனில் பிரதம மந்திரி கோர்டன் பிரெளனுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் துருக்கிய பிரதம மந்திரி ரெசிப் டெயிப் எர்டோகான் அச்சுறுத்தலுடன் கூறுகையில், "எங்களால் இனியும் பொறுத்திருக்க முடியாது.... நாங்கள் எங்களின் சொந்த முடிவை எடுக்க வேண்டும்." என்று எச்சரித்தார். பாக்தாத்தில், ஒரு இராஜாங்க ரீதியான தீர்வுக்கு அழைப்பு விடுத்த துருக்கிய வெளியுறவுத்துறை மந்திரி அலி பாபாகான், குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியுடனான ஒரு யுத்தநிறுத்த ஆலோசனையை நிராகரித்துடன், அதை ஒரு "பயங்கரவாத அமைப்பு" என்றும் குறிப்பிட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சீன் மெக்கார்மேக் கூறுகையில், அந்த தீவிரமான இராஜாங்க நடவடிக்கையானது, வடக்கு ஈராக்கில் ஒரு துருக்கிய தாக்குதலை தடுக்க புஷ் நிர்வாக அதிகாரிகளால் எடுக்கப்பட்டு இருக்கும் ஒரு முழு தீவிர நெருக்கடியாகும் என வர்ணிக்கிறார். எவ்வாறிருப்பினும், கூடைப்பந்து போட்டி போன்றிருக்கும் இது, ஒரு திட்டமிட்ட மூலோபயத்தை சுட்டிக்காட்டுகிறது. புஷ் நிர்வாகத்தின் ஈராக் மீதான சட்டவிரோத தாக்குதல்கள் மற்றும் ஈரான் மீது ஒரு புதிய யுத்தத்திற்கான பொருட்படுத்தாத ஆயத்தங்களின் விளைவுகளில் அமெரிக்காவின் இந்த பதில் நடவடிக்கையை அதன் படுமோசமான பீதிகளில் ஒன்றாக வரையறுக்கலாம். அமெரிக்க ஆக்கிரமிப்பை ஒரு மிகப் பெரிய வெற்றிகர நிகழ்வாக ஈராக்கிலுள்ள வடக்கு குர்திஷ்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறன. உண்மையில், அது சீட்டு கட்டால் அடுக்கப்பட்ட வீட்டை போன்று நிலையில்லாமல் இருக்கிறது. 2003ல் அமெரிக்க தாக்குதலுக்கு கைம்மாறாக, வடக்கிலுள்ள மூன்று மாகாணங்களில் குர்திஷ் ஜனநாயகக் கட்சி (KDP) மற்றும் குர்திஷ்தான் தேசியவாத அமைப்பு (PUK) ஆகிய இரண்டு பெரும் குர்திஷ் தேசிய கட்சிகளும் சுயாட்சியை உருவாக்கிக் கொள்ள அனுமதி அளித்தது. பிராந்திய அரசாங்கம் எல்லையோர குர்திஷ் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் என்பதால் துருக்கிய தலைவர்கள் தொடக்கத்தில் இருந்தே, அதை ஒரு அச்சுறுத்தலாக கருதினர். குறிப்பாக, ஒரு குறிப்பிடத்தக்க துருக்கிய மக்கள்தொகையையும், பெருமளவிலான எண்ணெய் வளங்களையும் கொண்ட வடக்கு ஈராக் நகரமான கிர்குக் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பான அக்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அவர்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி கெரில்லாக்களுக்கு எதிராக எடுக்கப்படும் எவ்வித நடவடிக்கையிலும் ஏற்படும் அமெரிக்காவின் தோல்வியானது, குவான்டில் மலைகளில் துருக்கியுடனான பதட்டங்களை அதிகரிப்பதை மட்டுமே வலிதாக்கியது. குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி மற்றும் அதன் துணை அமைப்பான, ஈரானுக்குள் செயல்பட்டு வரும் குர்திஷ் சுதந்திர வாழ்க்கை கட்சி (PJAK) ஈராக்கின் வடக்கு மாகாணங்களில் இருக்கும் முக்கிய நகரங்களில் இருந்து தேவையான பொருட்களை மற்றும் நிதிகளை பெற்று சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. மறுப்புரைகள் பல இருப்பினும், ஈரானுக்குள் உளவு பார்க்கவும் மற்றும் ஈரானிய ஆட்சியை ஸ்திரமின்மைக்கு கொண்டு வரவும், குர்திஷ் சுதந்திர வாழ்க்கை கட்சி கெரில்லாக்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மறைமுகமாக ஆயுதங்கள் மற்றும் பயிற்சி அளித்து வருவதாக ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அமெரிக்க அதிகாரிகளுடன் "வழமையான கலந்துரையாடல்" இருப்பதாக ஒரு குர்திஷ் சுதந்திர வாழ்க்கை கட்சி தலைவர் கூறியதை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ், நேற்று ஒரு நீளமான கட்டுரையை வெளியிட்டது. ஒரே மலைப்பகுதியில் இருந்து செயல்பட்டு வரும் குர்திஷ் சுதந்திர வாழ்க்கை கட்சி மற்றும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையே எந்தவித தெளிவான வேறுபாடும் இல்லாததுடன், அவை குர்திஷ் பிரிவினைவாத முன்னோக்கினை பகிர்ந்து கொள்வதுடன், பொதுவான பிறப்பிடத்தையும் கொண்டிருக்கின்றன. அவ்வாறிருக்கையில் புஷ் நிர்வாகத்தின் கபடத்தன்மை மற்றும் வெறுப்பு மட்டுமே இதில் வெளிப்படுகின்றது. அமெரிக்காவுடன் துருக்கியை நேச நாடாக வைத்திருக்க, குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிந்திருக்கும் அமெரிக்கா, குர்திஷ் சுதந்திர வாழ்க்கை கட்சியை அவ்வாறு அறிவிக்கவில்லை. குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி, குர்திஷ் சுதந்திர வாழ்க்கை கட்சி தளங்கள் மற்றும் ஈராக்கில் உள்ள குர்திஷ் கிராமங்கள் மீது நடத்தப்படும் எவ்விதமான துருக்கி தாக்குதலும் ஈராக்கிய குர்திஷ்களிடையே எரிச்சலை தூண்டிவிடும் என்பதுடன், வடக்கு ஈராக்கிலுள்ள Peshmerga குர்திஷ் இராணுவப்பிரிவினர் மற்றும் ஈராக்கிய இராணுவத்திலும் சினத்தை தூண்டும் என அஞ்சப்படுகிறது. இது போன்றதொரு நடவடிக்கை குர்திஷ் பிராந்திய அரசாங்கத்திற்கு மட்டுமின்றி, குர்திஷ் ஜனநாயக கட்சி மற்றும் குர்திஷ்தான் தேசியவாத அமைப்பின் ஆதரவில் முக்கியமாக சார்ந்திருக்கும் பாக்தாத்தில் உள்ள ஈராக்கிய அரசாங்கத்திலும் ஆழமான ஸ்திரமின்மையை உருவாக்கும். அமெரிக்க இராணுவ ஆயத்தங்கள் ஈராக்கில் ஒரு துருக்கிய இராணுவ தலையீட்டை அல்லது அமெரிக்க/துருக்கி உறவில் ஏற்படக்கூடிய ஒரு உடைவை தடுக்க முடியும் என்பதில் வாஷிங்டன் மிகவும் நம்பிக்கையிழந்து இருக்கிறது. நீண்ட கால மூலோபாய ஆலோசனைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்க இராணுவம் ஈராக்கிற்கான அதன் சுமார் 70 சதவீத விமான சரக்குகளை தெற்கு துருக்கியில் உள்ள ஒரு பெரிய அமெரிக்க விமானத்தளம் வழியாகவே கொண்டு செல்கிறது. அதே நேரத்தில், அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு உதவ, நேட்டோ படைகளின் பகுதியாக 1,000 இற்கும் மேலான துருக்கிய துருப்புகள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. இந்த நெருக்கடிக்கு ஒரு இராஜாங்கரீதியான தீர்வை அளிக்க வெளிப்படையாக அழைப்பு விடுக்கும் போதே, குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி தளங்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்த புஷ் நிர்வாகமும் ஆயத்தங்களை செய்து வருகிறது. திங்களன்று ஜனாதிபதி புஷ், துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லுடன் தொலைபேசியில் பேசினார். வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோர்டன் ஜோன்ட்ரோவின் கருத்துப்படி, அமெரிக்கா, "வட ஈராக்கில் இயங்கி வரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி பயங்கரவாதிகளை எதிர்க்க" துருக்கி மற்றும் ஈராக்குடன் இணைந்து செயல்படும் என புஷ், குல்லுக்கு மறு உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்தார். இராணுவ நடவடிக்கை விவாதிக்கப்பட்டதாக Chicago Tribune நேற்று செய்தி வெளியிட்டது. குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியை சமாளிக்க இராஜாங்கரீதியாக அல்லாமல் அமெரிக்கா வேறு பல வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக புஷ்/ குல் உரையாடலில் தொடர்புடைய ஒரு பெயரிட விரும்பாத அமெரிக்க அதிகாரி செய்தித்தாளிடம் தெரிவித்தார். "இனிமேல் இதுவொரு மகிழ்ச்சிகரமான கொண்டாட்ட நேரமாக இருக்காது - முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் மட்டுமே இனி போதாது. வேறு ஏதாவது செய்தாக வேண்டும்." என்று அவ்வதிகாரி தெரிவித்தார். வான்தாக்குதல் உட்பட குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி தளங்களுக்கு எதிராக இலக்கைத் தேடி தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்துவது என பல்வேறு இராணுவ வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன. குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் வினியோக பாதையை முடக்க, அவர்கள் பதுங்கி இருக்கும் மலைகளை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க குர்திஷ் பிராந்திய அரசாங்கத்தின் இராணுவ படையை உபயோகிக்க அதனை இணங்கச் செய்வதற்கான மற்றொரு வாய்ப்பும் விவாதிக்கப்பட்டது. குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி தாக்க அமெரிக்க துருப்புக்களை பாவிப்பது என்பது ஒரு கடைசி வாய்ப்பாக ஆலோசிக்கப்பட்டது. வாஷிங்டனின் அச்சங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரி Chicago Tribune இற்கு கூறுகையில்: "கடந்த காலத்தில், விமான தாக்குதலிலோ அல்லது பிற வகையான சிறப்பு படை நடவடிக்கை மூலமாகவோ குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கு எதிராக நேரடியாக இராணுவ தாக்குதலில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா பின்னடித்துகொண்டு இருந்தது. துருக்கியினர் எல்லைகளை கடந்து வருவார்களேயானால், அது மேலும் ஸ்திரமின்மையை உருவாக்கினாலும், நாங்களாகவே ஏதாவது செய்வதைவிட அது மிகவும் குறைந்த அபாயம் கொண்டதாகவே இருக்கலாம் என்ற மத்திய நிலைப்பாடு எப்போதும் இருக்கிறது. தற்போது துருக்கியர்கள் கயிற்றியின் இறுதி முனையில் இருக்கிறார்கள் என்பதால் எங்களின் அபாய கணக்கீடு மாறி வருகிறது." என்று தெரிவித்தார். குல்லுடனான புஷ்ஷின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஞாயிறன்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஒரு அவசர தொலைபேசி அழைப்பில் துருக்கிய பிரதம மந்திரி எர்டோகனை தொடர்பு கொண்டு, வடக்கு ஈராக்கில் ஓர் உடனடி இராணுவ தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு கேட்டு கொண்டார். எர்டோகன் அதற்கடுத்த 72 மணி நேரத்திற்கு அனைத்து எல்லை தாண்டிய நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும் ஒத்திவைப்பு உறுதிமொழியை அளித்திருந்ததாக Chicago Tribune குறிப்பிட்டது. ஒரு இராணுவ நடவடிக்கையை தொடங்க இராணுவம் மற்றும் எதிர்கட்சிகளால், குறிப்பாக தீவிர வலதுசாரி தேசியவாதிகளால், துருக்கிய அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. அதே நேரத்தில், எவ்வாறிருப்பினும், அது அமெரிக்காவுடனான பகிரங்க முறிவும் மற்றும் முடிவுவராத ஒரு யுத்த அச்சுறுத்தல்களின் விளைவுபற்றியும் இது ஒரு பரந்த பிராந்திய மோதலாக உருவாகலாம் என்பது பற்றி ஆழ்ந்த கவனத்தை கொண்டுள்ளது. குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கு எதிராக அமெரிக்கா மற்றும் துருக்கி இரண்டும் ஒரு கூட்டு இராணுவ நடவடிக்கையை திட்டமிடுவதாக Thomson Financial வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது. திங்களன்று லண்டனுக்கு பறந்த எர்டோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: "வடக்கு ஈராக்கில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.... ஆப்கானிஸ்தானில் செய்தது போன்றே நாங்கள் இதிலும் இணைந்து செயல்படுவோம் என்று எதிர்பார்க்கிறோம்." என்று தெரிவித்தார். அதற்கு முந்தைய நாள் ரைஸுடனான உரையாடல் குறித்து கூறும் போது, "அவர் கவலை தெரிவித்தார். ஒரு கூட்டு நடவடிக்கைக்கு அவர் விருப்பமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. அவர் சில நாட்களுக்கான கால அவகாசம் கேட்டிருக்கிறார் என்பதால், அவர் மீண்டும் எங்களை அணுகுவார்." என்று தெரிவித்தார். ஈராக்கிய குர்திஷ் தேசியவாத கட்சிகள் வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டுள்ளன. ஈராக்கிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பை அடிமைத்தனமாக ஆதரிப்பதன் மூலம், குர்திஷ் ஜனநாயக கட்சியும் குர்திஷ்தான் தேசியவாத அமைப்பும் அமெரிக்காவின் ஆதரவுடன், கிர்குக் நகரைச் சுற்றியுள்ள எண்ணெய் வளமிக்க பிராந்தியங்கள் உள்பட வடக்கு ஈராக்கில், அவர்களின் சொந்த சிறு அரசியல் மற்றும் வர்த்தக ஆட்சியை உருவாக்க முடியும் என கணக்கிட்டன. எவ்விதமான துருக்கி தாக்குதலையும் எதிர்ப்போம் என அறிவித்திருந்த அந்த பிராந்திய அரசாங்கம், அதன் ஆதரவாளரான அமெரிக்கா தற்போது குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க இருப்பதால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மேலும், தன்னலத்துடன் காத்து வந்த அதன் ''சுயாட்சி'', அன்காரா மற்றும் வாஷிங்டனின் வலியுறுத்தல்களின் நெருக்கடியால் படிப்படியாக சிதைந்து வருகிறது. வெள்ளைமாளிகையுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர், குர்திஷ்தான் தேசியவாத அமைப்பின் ஓர் உறுப்பினரான ஈராக்கிய துணை பிரதம மந்திரி பர்ஹாம் சலேஹ் திங்களன்று Brookings Institute இடம் கூறியதாவது: "குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கு எதிராக போரிட ஈராக்கிய அரசாங்கம் மற்றும் குர்திஷ்தான் பிராந்திய அரசாங்கத்திடம் கோரிக்கைகள் இருப்பது குறித்து நான் கவலையுறுகிறேன். நாங்கள் வெற்றி பெற இயலாத மற்றும் ஈராக்கின் ஒரே ஸ்திரமான பகுதியையும் அடிப்படையில் ஸ்திரமின்மையானதாக்கும் ஒரு முடிவற்ற பிரச்சனைக்கான ஓர் தீர்வுக்குறிப்பாக அது இருக்கலாம்." என்று தெரிவித்தார். பெரிய சக்திகளின் துணையுடன் பல்வேறு குர்திஷ் தேசியவாத அரசியல்வாதிகளால் நடத்தப்பட்ட கீழ்தரமான சூழ்ச்சிகளால் குர்திஷ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகளுக்கான ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது. தற்போதைய சூழலும் இதிலிருந்து வேறுபட்டு இல்லை. "ஒரு முடிவற்ற பிரச்சனைக்காக" ஈராக்கின் "ஸ்திரமான" வடக்கு பகுதியும் புதிய யுத்தகளமாக உருமாறலாம். அவ்வாறு உருவானால், ஈராக்கிய குர்திஷினரின் தலைவிதியை புஷ் நிர்வாகத்துடன் மற்றும் அதன் சட்ட விரோத ஈராக் ஆக்கிரமிப்புடன் இணைத்திருக்கும், குர்திஷ் ஜனநாயக கட்சியினதும் மற்றும் குர்திஷ்தான் தேசியவாத அமைப்பினதும் தலைவர்களே அதற்கான உடனடி பொறுப்பாளிகளாவர். |