:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: JVP-affiliated union issues
threat against Socialist Equality Party
இலங்கை: ஜே.வி.பி. சார்ந்த தொழிற்சங்கம் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக
அச்சுறுத்தல் விடுக்கின்றது
By K. Ratnayake
27 October 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
சிங்கள தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்த தொழிற்சங்கம்
ஒன்று, மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (ம.வ.ஊ.ச) தலைமைத்துவத்தில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின்
(சோ.ச.க) உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கியினுள் கேடுவிளைவிக்கும்
அச்சுறுத்தல்களை விடுத்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும்
(பு.க.க.) மத்திய வங்கியினுள் அரசியல் கொள்கைகளுக்காகவும் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவும்
போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. சோ.ச.க. உறுப்பினர் கே.பி. மாவிகும்புர மற்றும்
சோ.ச.க. ஆதரவாளர் எம்.டபிள்யு. பியரட்னவும் முறையே சங்கத்தின் தலைவராகவும் பொருளாளராகவும்
2001ல் இருந்து பதவிவகித்துள்ளனர். மாவிகும்புர 1985ல் இருந்து பல தலைமைத்துவ பதவிகளை வகித்து
வந்துள்ளார்.
ஜே.வி.பி. மற்றும் அதைச் சார்ந்த தொழிற்சங்கமான இலங்கை மத்திய வங்கி
ஊழியர் சங்கமும் (இ.ம.வ.ஊ.ச.) சோசலிச சமத்துவக் கட்சியையும், அது நாட்டின் உக்கிரமடைந்துவரும் உள்நாட்டு
யுத்தத்தை எதிர்ப்பதையும் எதிர்க்கின்றன. ஜே.வி.பி. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஆதரிப்பது
மட்டுமல்லாமல் "பயங்கரவாத" தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக அழிக்க இராணுவ தாக்குதல்களை உக்கிரமாக்க
வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றது.
செப்டெம்பர் 14 நடந்த மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (ம.வ.ஊ.ச) ஆண்டுக்
கூட்டத்தை அடுத்து அதன் தலைவர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கம் (இ.ம.வ.ஊ.ச) ஒரு
ஊறுவிழைவிக்கக்கூடிய துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது. யுத்தத்தையும் தொழிலாள வர்க்கத்தின் மீது அது சுமத்தும்
சுமைகளையும் மற்றும் ஜனநாயாக உரிமைகள் நசுக்கப்படுவதையும் கண்டித்து மாவிகும்புரவும் பியரட்னவும் முன்வைத்த
அரசியல் தீர்மானத்திற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்தன. இந்தப் பிரேரணை, இனவாதப் பிளவுகளுக்கு
எதிராக ஐக்கியப்படுமாறும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக தீவின் வடக்கு மற்றும்
கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோருமாறும் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுத்தது.
இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கம் செப்டெம்பர் 21 திகதியிட்டு வெளியிட்ட
துண்டுப் பிரசுரம், "புலி பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதற்கான திட்டமொன்றை பல ஆண்டுகளாக
வழிநடத்துகிறார்" என மாவிகும்புரவை குற்றஞ்சாட்டியிருந்தது. 1996ல் மத்திய வங்கி மீது புலிகள் குண்டுத்
தாக்குதல் நடத்தியதை அது நினைவூட்டியது. இந்தத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டதோடு 1,000ற்கும்
மேற்பட்டவர்கள் கடுமையாக காயமடைந்தனர். "அக்காரணத்தால், ஒரு முறை புலி பயங்கரவாதத்தால்
தாக்கப்பட்ட நாம், நாளை சிங்கள கொட்டியின் ஆதரவுடன் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும்
என்ற உண்மையை யாரால் மறுக்க முடியும்?" என அது பிரகடனம் செய்கின்றது.
சிங்கள புலி அல்லது புலிகளின் ஆதரவாளர் என்ற அர்த்தத்தைக் கொண்ட சிங்கள
கொட்டி என்பது, சிங்கள இனவாத அகராதியில் ஒருவரை துரோகி எனக் கண்டனம் செய்வதற்கு
சமமானதாகும். இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தேசாபிமான குற்றச்சாட்டு, மாவிகும்புரவையும்
பியரட்னவையும் தொழிற்சங்க தலைமைத்துவத்தில் இருந்து வெளியேற்றுமாறும் அல்லது அதிலிருந்து விலகி இலங்கை
மத்திய வங்கி ஊழியர் சங்கத்தில் இணையுமாறும் மத்திய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தது.
ஆனால், ஜனாதிபதி இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தால் உருவாக்கப்பட்டுள்ள முழுச்செறிவான அரசியல்
சூழ்நிலையில், இந்தக் கண்டனமானது அரசியல் தண்டனையளிக்கும், சாராம்சத்தில் கைது அல்லது சரீரத்
தாக்குதலாக இருக்கக் கூடிய மிகவும் கொடூரமான அச்சுறுத்தலாகும்.
கடந்த ஆண்டு பூராவும் கொழும்பிலும் அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கிலும்,
இராணுவ அனுசரணையிலான கொலைப் படைகளின் செயற்பாட்டை சுட்டிக்காட்டும் ஒரு சூழ்நிலையில்,
நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல் போயுள்ளனர்". நாட்டின் கொடூரமான
அவசரகால விதிகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பெருந்தொகையானோர் புலி
"பயங்கரவாதிகளாக" எதேச்சதிகாரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஜே.வி.பி. யும் வன்முறைகள் மற்றும் படுகொலைகளுக்கு பேர்போனதாகும்.
1980களின் கடைப் பகுதியில், யுத்தத்திற்கு முடிவுகட்டுவதன் பேரில் கொழும்புக்கும் புது டில்லிக்கும் இடையில்
கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பி. யின் பிற்போக்கு தேசப்பற்று
பிரச்சாரத்தை எதிர்த்த நூற்றுக்கணக்கான அரசியல் எதிரிகள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர்களையும்
ஜே.வி.பி. கும்பல்கள் கொன்றுதள்ளின. அப்போது மத்திய வங்கி ஊழியர் சங்கத்தில் இருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகமும் அதன் உறுப்பினர்களும், தொழிலாளர்களையும் அவர்களின் அமைப்புக்களையும் பாதுகாக்க ஒரு ஐக்கிய
முன்னணியை அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர்.
1988 நவம்பர் மற்றும் டிசம்பரில், ஆர்.ஏ. பிடவல, பி.எச். குணபால,
கிரேஷன் கீகியனகே ஆகிய மூன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்களை ஜே.வி.பி. குண்டர்கள் படுகொலை
செய்தனர். தமது தேசப்பற்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களில் இணையுமாறு ஜே.வி.பி. விடுத்த
கோரிக்கையை மத்திய வங்கி ஊழியர் சங்கம் எதிர்த்ததன் காரணமாக, அதில் இருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக
உறுப்பினர்கள் விசேட இலக்காகக்கொள்ளப்பட்டனர். 1988 டிசம்பர் 26 அன்று, மாவிகும்புரவை
கொல்வதற்காக நான்கு துப்பாக்கிதாரிகள் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் அவரது வீடு இருக்கும் கட்டிட
பிரதேசத்திற்கு வந்து, அவர் எங்கு வசிக்கின்றார் என சொல்லுமாறு தொழிலாளர்களிடம் கேட்டனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஆகஸ்ட் முற்பகுதியில், பேராதனை பல்கலைக்கழகத்தில்
ஈராக் யுத்தத்திற்கும் இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கும் எதிராக சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள்
(ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் உறுப்பினர்களும் சோ.ச.க. உறுப்பினர்களும் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த
போது, அவர்களை தாக்கப்போவதாக ஜே.வி.பி. சார்ந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின்
உறுப்பினர்கள் அச்சுறுத்தினர். ஐ.எஸ்.எஸ்.இ. க்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு கோரி ஜே.வி.பி.
செயலாளர் டில்வின் சில்வாவுக்கு சோசலிச சமத்துவக் கட்சி கடிதம் எழுதியிருந்த போதும் எந்தவித பதிலும்
இல்லை.
கடந்த மாதம் வெளியான இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்க துண்டுப் பிரசுரம்,
கடந்த பெப்பிரவரி மாதம் புகையிரத தொழிற்சங்கத்தில் சிங்களப் புலிகள் கைது செய்யப்பட்டதை
குறிப்பிட்டு தமது அச்சுறுத்தலை கோடிட்டுக் காட்டியது. பெரும் விளம்பரப்படுத்திய இராணுவம், தாம் ஒரு பெரும்
சூழ்ச்சியை தகர்த்து விட்டதாக பெருமைபட்டுக் கொண்டது. தொழிற்சங்க சஞ்சிகையை வெளியிடுவதில் ஈடுபட்டிருந்த
மூன்று பேர் தடுத்துவைக்கப்பட்டதோடு, 48 மணிநேரத்துக்கும் குறைவான காலத்துக்குள், அவர்கள் இதற்கு முன்னர்
அறியப்பட்டிராத புரட்சிகர விடுதலை அமைப்பு
(Revolutionary Liberation Organisation -RLO)
என்ற ஒன்றின் உறுப்பினர்களாக இருப்பதாகவும் புலிகளிடம் ஆயுதமும்
பயிற்சியும் பெற்றதாகவும் "ஒப்புதல் வாக்குமூலம்" கொடுத்ததாக ஊடகங்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே புரட்சிகர விடுதலை அமைப்பு விவகாரம் அரசாங்கத்தால்
சிருஷ்டிக்கப்பட்ட ஆத்திரமூட்டல் என்பது வெளிப்பட்டது. ஒரு மாதத்தின் பின்னர், புலிகளுடனான பயிற்சியை ஏற்பாடு
செய்வதில் ஈடுபட்ட முக்கிய நபர், இராணுவப் புலனாய்வுத் துறைக்காக செயற்பட்ட "ஷார்மல்" என்பவரே என
சண்டே லீடர் பத்திரிகை தெரிவித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, புலி உறுப்பினராக இருக்காத
ஷார்மல், ஜே.வி.பி. சார்ந்தவராக இருந்தார். அவர் தொடர்ந்தும் சிரேஷ்ட ஜே.வி.பி. தலைவர்களுடன்
நெருக்கமாக தொடர்பு வைத்திருந்ததோடு ஜே.வி.பி. பாராளுமன்றக் குழு தலைவர் விமல் வீரவன்சவால்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்ஷவிடம் அனுப்பப்பட்டுள்ளார்.
பூசா தடுப்பு முகாமில் எட்டு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 24
பேர் மீதும் இன்னமும் குற்றம் சுமத்தப்படவில்லை. ஆயினும், இன்னமும் ஜே.வி.பி. தொடர்ந்தும் அவர்களை
சிங்கள புலிகள் என கண்டனம் செய்துவருவதோடு "துரோக" சங்கங்களில் இருந்து வெளியேறுமாறும்
தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கின்றது. எந்தவொரு வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்திற்கும் எதிராக
அரசாங்கம் முன்னெடுக்கின்ற பிரச்சாரத்தின் ஒரு பாகமாக பயன்படுத்தப்படுகின்ற இந்த சதித்திட்டத்தை
தீட்டுவதில், பாதுகாப்புப் படைகளுடன் சேர்ந்து ஜே.வி.பி. இட்டுநிரப்பிய பாத்திரத்தைப் பற்றி அது முழு
மெளனமாக இருக்கின்றது என்பதை சொல்லவேண்டியதில்லை.
மாவிகும்புர, "புலி பயங்கரவாதிகளுக்கு" பல ஆண்டுகளாக ஆதரவளித்து வருவதோடு
மத்திய வங்கி மீது இன்னுமொரு புலிகளின் குண்டுத் தாக்குதலைத் தயார்செய்கின்றார் என்ற இலங்கை மத்திய வங்கி
ஊழியர் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அவதூறுகளாகும். புலிகளின் இனவாத அரசியல் உட்பட, அனைத்து விதமான
தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தையும் எதிர்ப்பதில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மத்திய வங்கி மீதான தாக்குதலை பகிரங்கமாக
கண்டனம் செய்தது. அந்தத் தாக்குதல் ஜே.வி.பி. போன்ற பேரினவாத கட்சிகளுக்கு அரசியல் தீனியை
போடுவதோடு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த சேவைசெய்யும் என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்
தெளிவுபடுத்தியிருந்தது.
வடக்கு கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும்
வெளியேற்ற சோசலிச சமத்துவக் கட்சி விடுக்கும் அழைப்பு, புலிகளுக்கு ஆதரவளிப்பதை குறிக்கவில்லை. வடக்கும்
கிழக்கும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, குறிப்பாக தமிழர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் திட்டமிட்ட
வகையில் நசுக்கப்பட்டு, நடப்பில் இராணுவச் சட்டத்தின் கீழ் இருந்து வருகின்றன. இந்தப் பிரதேசங்களில் இருந்து
துருப்புக்களை வெளியேற்றும் கோரிக்கையானது தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் அரசாங்கத்திற்கும்
மற்றும் புலிகளுக்கும் எதிரான கூட்டுப் போராட்டமொன்றில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை
அணிதிரட்டுவதற்கும் அவசியமான முதற்படியாகும்.
ஜே.வி.பி. யின் யுத்தச் சார்பு நாட்டுப்பற்று மேலும் மேலும் மத்திய வங்கியில்
மட்டுமன்றி பரந்தளவில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றதன் காரணத்தாலேயே, ஜே.வி.பி. யும் அதன்
தொழிற்சங்கமும், மத்திய வங்கி ஊழியர் சங்கத்தில் சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்த பிரேரணையை எதிர்த்து
செயலாற்றுகின்றன. அது பல விதத்திலும் தொழிலாளர்களை பாதுகாப்பதாக கூறிக்கொள்வதோடு அடிக்கடி
சோசலிச வாய்வீச்சுக்களையும் வெளியிடும் அதேவேளை, ஜே.வி.பி. உழைக்கும் மக்கள் யுத்தத்திற்கு அர்ப்பணிக்க
வேண்டும் எனக் கோருகின்றது. இராணுவத்திற்காக பில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிடும் அதேவேளை,
அரசாங்கத்திடம் பணம் இல்லை எனக் கூறி அரசாங்கத்துறை தொழிலாளர் பிரிவினரின் சம்பளக் கோரிக்கைகளை
மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகின்றது.
சோசலிச சமத்துவக் கட்சி பிரேரணை விளக்கியவாறு: "வாழ்க்கைத் தரத்தையும்
சமூக நிலைமைகளையும் சீரழிப்பதன் மூலம் பிரமாண்டமான யுத்தச் செலவுகள், உழைக்கும் மக்களின் முதுகில்
ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றதுடன் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன... பணவீக்கம்
இப்போது 17.3 வீதமாகியுள்ளது. டொலருக்கு எதிராக ரூபாய் தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டுவருகின்றது. தமது
எரியும் பிரச்சினைகளுக்காக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு
போராட்டமும் யுத்தத்தின் பெயரால் நசுக்கப்படுவதோடு அதற்காக போராடுபவர்கள் புலி ஆதரவாளர்கள் என
முத்திரை குத்தப்படுகின்றார்கள்."
இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கம் இட்டு நிரப்பும் பாத்திரம் அம்பலப்படுத்துவது
போல், யுத்தத்திற்கு எதிரான போராட்டம் இன்றி, தொழிலாளர்களின் மிகவும் அடிப்படையான உரிமைகள் மற்றும்
நிலைமைகளைக் கூட பாதுகாத்துக்கொள்வது சாத்தியமற்றதாகும். இந்த ஆண்டின் சம்பள பேச்சுவார்த்தைகளின்
போது, இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கம் கீழ் மட்ட ஊழியர்களுக்கு எதிரான மோசமான பாகுபாடுகளை
கொண்ட ஒரு சம்பள சுற்றுநிரூபத்தை ஏற்றுக்கொண்டதோடு, கோரிக்கைகளை வழங்குவதில் மத்திய வங்கி ஆளுனர்
"வளைந்து கொடுத்தமைக்காக" அவரைப் பாராட்டியது. இந்த சுற்றிநிரூபத்தை மத்திய வங்கி ஊழியர் சங்கம் மேற்கொண்ட
தலையீட்டால் மாத்திரமே மாற்றியமைக்க முடிந்தது.
கடந்த மாதம் வெளியான இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கம் துண்டுப் பிரசுரம்,
அதன் முடிவில், "தேசப்பற்றின்றி செயற்படுவதாக" மத்திய வங்கி ஊழியர் சங்க தலைமைத்துவத்தை கண்டனம் செய்ததோடு
வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தது: "நாம் நாட்டுக்கு அன்பு செலுத்தும், தேசிய பொருளாதாரத்திற்காக குரல்
எழுப்பும், மத்திய வங்கி ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக நின்றுவரும் மற்றும் அதனால் தனிப்பட்ட இலக்குகளை தவிர்த்து
பொதுக் குறிக்கோள்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கத்துடன்
கைகோர்த்துக்கொள்ளுமாறு மேலும் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்."
நாட்டை பாதுகாத்தல், தேசிய பொருளாதாரம் மற்றும் யுத்தம் ஆகியவை மேலும்
மேலும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டு வருவது அதே முறையில் தொடர்கின்றது. மத்திய வங்கி ஊழியர் சங்க
உறுப்பினர்கள் 600 பேர் அல்லது வேறு எவரேனும் உறுப்புரிமையை விலக்கிக்கொண்டு ஜே.வி.பி. யின் இலங்கை
மத்திய வங்கி ஊழியர் சங்கத்தில் சேரவில்லை. ஆயினும் இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் துண்டுப்
பிரசுரத்தில் ஒரு ஆபத்தான தர்க்கம் இருந்துகொண்டுள்ளது. எந்தவொரு அரசியல் முன்னெடுப்பையும் எடுப்பதில்
தோல்வியடைவதானது, கடந்த காலத்தில் ஜே.வி.பி. முன்னெடுத்த மிகவும் கொடூரமான வழிமுறைகளை இலங்கை
மத்திய வங்கி ஊழியர் சங்க தலைமைத்துவம் நாடுவதை தடுத்துவிடாது.
இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் அச்சுறுத்தல்களை தொழிலாளர்கள்
மத்தியில் அம்பலப்படுத்தவும் எந்தவொரு அடுத்த ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின்
தலைமைத்துவத்தை காக்கவும் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் ஒன்றை முன்னெடுக்கும். |