World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Sarkozy concentrates power in his own hands

பிரான்ஸ் : சார்க்கோசி அதிகாரத்தை தன் சொந்த கரங்களில் குவிக்கிறார்

By Peter Schwarz
23 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

புதிதாக தேர்ந்தெடுக்ப்பட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி பதவிக்கு வந்த முதல் சில தினங்களை மிகப் பரந்த அளவிலான அதிகாரங்களை தன்னுடைய கைகளில் குவிக்க பயன்படுத்தியுள்ளார்; இது முன்னாள் பிரெஞ்சுத் தலைவர் ஜெனரால் சார்ல்ஸ் டு கோல் கொண்டிருந்த அதிகாரங்களுக்குத்தான் ஒப்பிடத்தக்கதாகும். ஜூன் மாதம் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன்பாகவே, சார்க்கோசி தொடர்ச்சியான பல முன் முயற்சிகளை கொண்டுள்ளார்; இவை வெளிக்கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் ஆளுவதற்கு அவரை அனுமதிக்கும். இதை அடைவதற்கு அவர் ஐந்தாம் குடியரசின் அரசியலமைப்பை அதன் வரையறைக்குள், சொல்லப்போனால், அதற்கு அப்பாலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

தற்போதைய பிரெஞ்சு அரசியலமைப்பு இதை இயற்றியவரான ஜெனரால் டு கோலின் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமாக எழுதப்பட்டது. 1958ல் அல்ஜீரிய நெருக்கடியின் உச்சக் கட்டத்தில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டபின், டு கோல் ஜனாதிபதிக்கு பெரும் அதிகாரத்தை கொடுத்து, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை கடுமையாக மட்டுப்படுத்தியிருந்த ஓர் அரசியலமைப்பை திணித்தார். ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவரை நியமிப்பது மட்டுமில்லாமல் வாராந்திர மந்திரிசபை கூட்டங்களுக்கும் தலைமை தாங்குகிறார்; இதைத்தவிர, அவர் எப்பொழுது வேண்டுமானாலும் பாராளுமன்றத்தை கலைத்துவிடலாம்; அதன்மூலம் மக்களது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது சக்திவாய்ந்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளார்.

1969ல் டு கோல் இராஜிநாமா செய்த பின்னர் அரசியல் அமைப்பு செயல்படுத்தப்பட்டதில் ஏராளமான மாற்றங்கள் வந்துள்ளன. குறிப்பாக "இணைந்திருத்தல்" என்று அழைக்கப்படும் காலங்களில், ஜனாதிபதியும் பாராளுமன்ற பெரும்பான்மையும் எதிர் எதிர் அரசியல் முகாம்களில் இருந்து வரும் காலங்களில், ஜனாதிபதி பாராளுமன்ற பெரும்பான்மைக்கு இணங்கி நடக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு, உள்நாட்டு கொள்கைகளில் தலையிடுவதை தவிர்த்து பிரெஞ்சு ஜனாதிபதியின் தனிச்சிறப்பு அதிகாரமான வெளியுறவுக் கொள்கையில் கவனத்தை ஒருங்குவிப்பார்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை தான் முழுமையாக பயன்படுத்த இருப்பதையும், அரசாங்க கொள்கை சிறு பகுதி வரை தானே உறுதிசெய்யப் போவதாகவும் சார்க்கோசி தெளிவாக்கியுள்ளார். தன்னுடைய மிக நெருக்கமான அரசியல் கூட்டாளிகளில் ஒருவரான பிரான்சுவா பிய்யோன் ஐ அரசாங்கத்தின் தலைவராக நியமித்துள்ளார். பொதுவாக ஜனாதிபதியுடையது என்று இல்லாமல், அரசாங்கத்தின் தலைவருடைய பணிதான் தனி மந்திரிகளை நியமிப்பது என்றாலும், சார்க்கோசியின் அலுவலகம் அனைத்து அரசாங்க மந்திரிகளையும் நியமித்து மக்களுக்கு அறிவித்துள்ளது. அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு முன்பே, பிய்யோன் ஜனாதிபதியின் ஒரு கருவி என்றுதான் அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்.

அரசாங்க இயந்திரத்தை கட்டுப்படுத்துவதுடன் சார்க்கோசியின் சர்வாதிகார நடவடிக்கைகள் முடிவடைந்துவிடவில்லை. பல எதிர்க் குழுக்களாக பிரிந்துள்ள தன்னுடைய அரசியல் முகாமில் இருந்தே எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதற்குத்தான் அவர் முயன்று வருகிறார். இவ்வாறு செய்கையில் அவர் போனப்பார்ட்டிச ஆட்சியின் உயர்தர நுணுக்கங்களைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பல கட்சிகளுக்கிடையில் இயங்கியும் அவற்றை ஒன்றுக்கொன்று எதிரானதாக ஆக்கியும், கிளர்ச்சி உரைகளை அளிப்பதன் மூலமும், "மக்கள்" என்று வர்க்கம் கடந்த முறையீடுகளை செய்வதின் மூலமும் தனக்கு அதிக சூழ்ச்சித் திட்டமுறைகளை கையாளும் இடத்தை தோற்றுவிக்க அவர் முயல்கிறார்.

ஏனைய கட்சி உறுப்பினர்கள், மனிதாபிமான அமைப்புக்கள் உறுப்பினர்களை அரசாங்கத்தில் சேரவைக்கும் "நுழைய அனுமதித்தில்" என்ற நிலைப்பாட்டின் பின்னணியில் இக்கருத்துத்தான் உள்ளது. மந்திரி பொறுப்புக்களில் பாதியை மகளிருக்கு அளித்தல், வட ஆபிரிக்க இனவழியிலான ஒருவரை காபினெட் மந்திரியாக நியமித்தல், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை அரசாங்க பணியுடன் இணைக்கும் முயற்சி என்ற அவருடைய பல முன்முயற்சிகள் இந்த நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன. சமரசத்திற்கு தயார் என்று அடையாளம் காட்டுவதற்கு முற்றிலும் எதிராக, சார்க்கோசி ஒரு வலதுசாரி திட்டத்தை செயல்படுத்துவதற்கு போதுமான வசதி வேண்டும் என்று நினைக்கிறார். இன்றளவும் அத்தகைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மிகப் பெரிய வெகுஜன எதிர்ப்பைத்தான் சந்தித்துள்ளன; அதன் விளைவாக பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு நெருக்கடிகளைத்தான் சந்தித்துள்து.

சோசலிஸ்ட் கட்சி காபினெட் மந்திரிகள்

இறுதிப்பகுப்பாய்வில், ஒரு பலமான ஜனாதிபதி என்று காட்டிக் கொள்ளுவதற்கான சார்க்கோசியின் திறன் பிரெஞ்சு "இடது" என்று அழைக்கப்படுவதின் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் இவை இரண்டினதும் அடிபணிதல் நிலைப்பாட்டைத்தான் தளமாக கொண்டுள்ளது. தேசியவாதம் மற்றும் சட்டம் ஒழுங்கு பற்றிய வனப்புரையில் சார்க்கோசியையும்விடக் கூடுதலாக பேச முற்பட்டிருந்த சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் செகோலென் ரோயாலின் தேர்தல் பிரச்சாரத்தை அடுத்து, ரோயாலின் ஆதரவாளர்கள் இப்பொழுது வெற்றிபெற்றவரின் முகாமிற்கு மாறியுள்ளது தர்க்கரீதியானதுதான்.

இவற்றுள் மிக முக்கியமானவர் 67 வயதான பேர்னார்ட் குஷ்நெர் (Bernard Kouchner) ஆவார்; இவர் புதிய அரசாங்கத்தில் வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்டுளார். இவர் "எல்லைகள் அற்ற டாக்டர்கள்" (Médecins sans frontières) என்ற அமைப்பின் துணை நிறுவனர் ஆவார்; இவர் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இவருடைய கடைசி அரசாங்க நியமனம் வரையில் இருந்தார். அரசு செயலராகவும் மத்திரியாகவும் பல சோசலிஸ்ட் பிரதம மந்திரிகளின் கீழ் 1988ல் இருந்து 2002 வரையில் இருந்தார். 1999 மற்றும் 2000க்கும் இடையே இவர் கொசோவோவில் ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.

1966ல் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, தன்னுடைய அரசியல் வாழ்வை கம்யூனிஸ்ட் கட்சியில் குஷ்நெர் தொடங்கினார். Biafra வில் செஞ்சிலுவை பணி ஒன்றிற்கு பின்னர் அவர் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டார். அதில் அவர் பல்வேறு அழிவுகளின் காரணங்கள் பற்றிய அரசியல் மற்றும் சமூக காரணங்கள் பற்றிய எந்த ஆய்வுடனும் முற்றிலும் பிரிந்துக் கொண்டார். பொஸ்னியா மற்றும் கொசோவோவில் ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளுக்கு அவர் ஒப்புதல் கொடுத்து பின்னர் ஈராக்கிய போருக்கும் ஆதரவு கொடுத்திருந்தார்.

குஷ்நெர் பல காரணங்களை ஒட்டி சார்க்கோசிக்கு பயனுடையவர் ஆவார்; முதலில் பிந்தையவரின் வலதுசாரி சமூக மற்றும் உள்நாட்டுக் கொள்கைக்கான இடது மூடிமறைப்பாக உதவுகிறார். உதாரணமாக குஷ்நெர் புலம்பெயர்ந்தோர் மற்றும் தேசிய அடையாளத்துக்கான புதிய மந்திரியுடன் முறையாக ஒத்துழைப்பார் --அதாவது சார்க்கோசியின் மிக நம்பிக்கைக்குகந்த Brice Hortefeux உடன் --ஆனால் குஷ்நெர் அத்தகைய அமைச்சரகம் தோற்றுவிக்கப்படுவது என்பது "வரலாற்று ரீதியாக அவமானகரமான சீரழிவு" என்று சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் குஷ்நெர் விளக்கியிருந்தார்.

இரண்டாவதாக, குஷ்நெர் ஆபிரிக்காவில் "மனிதாபிமான" இராணுவ தலையீட்டிற்கு வாதிடுவதில் உபயோகமாக இருப்பார்; பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மிக முக்கியமான செல்வாக்கு பிராந்தியத்தில் இது ஒன்று என சார்க்கோசி நினைக்கிறார். ஒரு சர்வதேச "தொடர்புக் குழு" அமைப்பதில் குஷ்நெர் தீவிரமாக உள்ளார்; அது இறுதியில் இராணுவ தலையீடு உட்பட அழுத்தத்தை கொண்டுவரும், Darfur நெருக்கடியை ஒட்டி சூடான் மீது அழுத்தத்தைக் கொடுக்கும். பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுக்களை கூட புறக்கணிப்பதற்கு குஷ்நெர் ஒப்புதல் கொடுக்கிறார்; இதற்கு காரணம் சூடானுடனான வணிக உறவை துண்டிக்க சீனாவை வலியுறுத்துவது ஆகும்.

மூன்றாவதாக, சார்க்கோசி மற்றும் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோருடன், குஷ்நெர் ஒரு புதிய மக்கள் வாக்கெடுப்பிற்கு இடம் கொடாமல் செலவு குறைந்த நிலையில், ஐரோப்பிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படுவதை அவர் விரும்புகிறார். அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுவதையும் அவர் விரும்புகிறார். ஆனால் பிரெஞ்சு அரசியலில் எப்பொழுதும் இருப்பது போல், ஜனாதிபதிதான் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பிரச்சினைகளை முடிவுசெய்வார்; அவருடைய வெளியுறவு மந்திரி அல்ல.

மற்றொரு முன்னாள் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினரான Jean-Pierre Jouyet புதிய அரசாங்கத்தில் ஐரோப்பிய விவகாரங்களுக்கு துணை மந்திரியாக சேர்ந்துள்ளார். குஷ்நெர் போலன்றி, Jouyet சோசலிஸ்ட் கட்சியில் முக்கிய பங்கை ஆற்றியதில்லை; ஆனால் முக்கியமான அரசாங்க பதவிகளை நீண்ட காலம் வகித்துள்ளார்; இதில் முன்னாள் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் மந்திரிசபையில் துணை இயக்குனர் என்ற பதவியும் இருந்தது. இவர் ஜனாதிபதி வேட்பாளரும், அவருடைய பங்காளியுமான சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் பிரான்சுவா ஹாலந்துடன் நெருக்கமான தொடர்பு உடையவர்; இந்நட்பு 30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் இருந்து தொடர்கிறது. Jouyet ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோலிச அரசாங்கத்தில் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இதற்கு மாறாக எரிக் பெசோன் (Eric Besson) தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் சோசலிஸ்ட் கட்சியுடன் முறித்துக் கொண்டார். அவர் ரோயாலின் தேர்தல் பிரச்சாரக் குழுவில் பொருளாதார பிரச்சினைகள் வல்லுனராக இருந்தார்; ஆனால் ரோயால் தன்னுடைய திட்டமிட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எப்படி நிதி திரட்டுவார் என பகிரங்கமாகக் கூறாததற்காக அவரை தாக்கினார். இப்பொழுது துணை மந்திரி பதவி இவருக்கு வெகுமதியாக கிடைத்துள்ளது; அரசாங்கத்தின் கொள்கையை மதிப்பீடு செய்யும் பணி இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

மந்திரிசபையில் நான்காவது முன்னாள் "இடது" உறுப்பினர் Martin Hirsch ஆவார்; இதுவரை அவர் Emmaüs இல்லமற்ற மக்களுக்கான அமைப்பு என்று Abbé Pierre நிறுவியுள்ள அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். "வறுமைக்கு எதிராக ஒன்றுபட்டுள்ள குழுவின் உயர் ஆணையாளர்" என்ற படாடோப பெயர் கொண்ட பதவியில் உள்ளார்; ஆனால் இவருக்குச் சொந்த அமைச்சரகமோ, நிர்வாக இயந்திரமோ கிடையாது. முன்பு Hirsch, ஜோஸ்பன் நிர்வாகங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்; குஷ்நெர் சுகாதார மந்திரியாக இருந்தபோது அவருக்கு கீழேயும் பணியாற்றியுள்ளார்.

ஹாலந்த் பகிரங்கமாக எதிர்ப்பாளர்களை "துரோகிகள்" என்று கண்டித்துள்ளார்; மற்ற முக்கிய கட்சி உறுப்பினர்கள் செகோலென் ரோயால் மற்றும் முன்னாள் நிதி மந்திரி டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான் போன்றோர் கட்சி மாறிகளை வெளிப்படையாக கண்டிக்க மறுத்துவிட்டனர். சார்க்கோசியுடன் வருங்காலத்தில் ஒத்துழைக்கலாம் என்ற வாய்ப்பை அவர்கள் திறந்தே வைத்துள்ளனர்; ஆனால் முன்னாள் கலாச்சார துறை மந்திரியான ஜாக் லாங் (இவரும் சோசலிஸ்ட் கட்சிதான்) ஏற்கனவே கலந்துரையாடலுக்காக புதிய ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

வலதுசாரி மந்திரிகள் முக்கிய துறைகளில்

மற்ற மந்திரிப் பதவிகளை --குறிப்பாக உள்துறை (பாதுகாப்பு), பொருளாதாரம், சமூகக் கொள்கை போன்றவற்றை-- சார்க்கோசி, தன்னுடைய நெருக்கமான அரசியல் கூட்டாளிகள் அல்லது UMP யில் செல்வாக்கு பெற்றவர்கள் ஆகியோரைக் கொண்டு நிரப்பி விட்டார்.

ஒரே விதிவிலக்கு பாதுகாப்பு அமைச்சரகம்தான்; அது வலதுசாரி UDF இன் பாராளுமன்ற வலதுசாரிப் பிரிவின் தலைவரான ஏர்வே மோறன் (Hervé Morin) இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் UDF வேட்பாளர் பிரான்சுவா பேய்ரூவை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரித்திருந்தார்; ஆனால் பின்னர் இரண்டாம் சுற்றில் முற்றிலுமாக சார்க்கோசியை ஆதரித்தார்; பேய்ரூவோ அத்தகைய ஒப்புதலை அளிக்கவில்லை. ஏர்வே மோறன் மந்திரியாக நியமிக்கப்பட்டது பேய்ரூவின் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள "ஜனநாயக இயக்கம்" (Democratic Movement) ஐ குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது; இது ஜூன் 10, 17 தேதிகளில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்களுக்காக இது தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் துணைத்தலைவர், சுற்றுச் சூழல், ஆற்றல் மற்றும் போக்குவரத்திற்கு பொறுப்பானவர் அலன் யூப்பே ஆவார். 1995ல் பிரதம மந்திரியாக ஜாக் சிராக்கால் நியமிக்கப்பட்ட யூப்பே, சோசலிஸ்ட் ஜோஸ்பனுக்கு ஆதரவாக, அவருடைய ஓய்வூதியத் திட்டங்களை ஒட்டி எழுந்த வேலைநிறுத்த அலை நாட்டை பல மாதங்கள் முடக்கிய அளவில், இராஜிநாமா செய்ய வேண்டியதாயிற்று. சில காலத்திற்கு யூப்பே சிராக்கின் காத்திருக்கும் வாரிசு என்று கருதப்பட்டார்; பின்னர் ஓர் ஊழல் அம்பலமானதை அடுத்து தன்னுடைய சொந்த ஜனாதிபதியாகும் குறிக்கோள்களை கைவிட வேண்டியதாயிற்று.

புதிய உள்துறை மந்திரி முன்னாள் பாதுகாப்பு மந்திரியாக இருந்த மிசேல் அலியோட் மரி ஆவார்; இவரும் சிராக்கிற்கு நெருக்கமானவர் ஆவார். இவ்வம்மையாரின் துணைவர், பாராளுமன்றத்தில் UMP தலைவரான Patrick Ollier ஆவார்.

நீதித்துறை அமைச்சரகம் 41 வயதான ரஷீடா டாற்ரி (Rachida Dati) யிடம் கொடுக்கப்பட்டுள்ளது; இவர் 12 குழந்தைகளை கொண்ட தொழிலாள வர்க்க குடும்பத்திலிருந்து வரும், மொரோக்கோ தந்தை மற்றும் அல்ஜீரியத் தாயாரின் மகளாவார். இப்பெண்மணி பிழைப்புவாதிகளின் ஆக்கிரோஷமான ஒரு புதிய தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவருடைய பணி சார்க்கோசியின் இளவயது குற்றவாளிகளுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள கடுமையான சட்டங்களை வரைவதும் செயல்படுத்துவதும் ஆகும்.

பொருளாதாரம், சமூக விஷயங்கள் மற்றும் நிதி ஆகியவை சார்க்கோசியினால் முற்றிலும் மறு சீரமைக்கப்பட்டுள்ளன; இதையொட்டி அவர் தன்னுடைய திட்டமிட்ட "சீர்திருத்தங்களை" திணிக்க விரும்புகிறார். UMP உறுப்பினர்கள் மூவர் இதற்குப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளனர்; முன்னாள் சமூகத் துறை மந்திரி Jean-Louis Borloo பொருளாதாரம், நிதி, தொழிலாளர் ஆகியவற்றின் பொறுப்பு; முன்னாள் சுகாதார மந்திரி Xavier Bertrand சமூக விஷயங்களுக்குப் பொறுப்பு; முன்னாள் அரசாங்கத் துணைச் செயலர் Eric Woerth பொது நிதி மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பு ஆவார்.

தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படல்

தன்னுடைய அரசாங்கத்திற்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் ஆதரவு வேண்டும் என்பதற்கு பல நேரத்தை சார்க்கோசி செலவழித்தார். பதவியை ஏற்றுக் கொள்ளும் தேதிக்கு முன்னதாக இரு நாட்கள், அவர் ஆறு பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் தலைவர்களுடன் தனித்தனியாக பல மணி நேரங்கள் பேச்சு வார்த்தை நடத்தினார் --அனைவரும் பின்னர் அவருடைய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்குத் தயார் என்று கூறியுள்ளனர்.

இதன் பின்னர் நாட்டிற்குள் ஜனாதிபதியான பின், சார்க்கோசியின் உத்தியோகபூர்வ பயணம் துலூசுக்காகும், அங்கு அவர் ஏராளமான வேலைக் குறைப்புக்கள் வரவுள்ளன என்ற அச்சமுடைய எயர் பஸ் ஊழியர்களிடம் பேசினார். இதன் பின்னர் அவர்களுடன் கான்டீனில் அவர் உணவு அருந்தினார். தாய் நிறுவனமான EADS ல் பிரெஞ்சு அரசாங்கத்தின் பங்கை உயர்த்துவதாக சார்க்கோசி உறுதிமொழி கொடுத்தார்; இதையொட்டி விவாதத்திற்குரிய திட்டமான Power 8 மறுகட்டமைப்பிற்கு உட்பட்டு திருத்தப்படலாம். வட பிரான்சில் இருக்கும் மூடும் அபாயத்தில் உள்ள Meaulte தொழிற்சாலையும் செயல்படும் என்ற உறுதிமொழியையும் கொடுத்தார்.

அவருடன் பேசிய பின்னர் தொழிற்சங்க அதிகாரிகள் அவருடைய வருகைக்கு ஆர்வம் காட்டினர். தன்னுடைய பொருளாதாரக் கொள்கையில் சீராக சார்க்கோசி வலியுறுத்தும் தீர்மானகரமான தேசியவாதத்தால் அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். மாறாக சார்க்கோசியின் அறிவிப்பு பேர்லினில் உள்ள ஜேர்மனிய அரசாங்கத்தால் எச்சரிக்கையுடன் வரவேற்கப்பட்டது; ஏனெனில் அது ஐரோப்பா அனைத்தையும் சார்ந்த வான்வழி நிறுவனத்தில் தன்னுடைய சொந்த செல்வாக்கு குறைந்துவிடுமோ என்று அஞ்சுகிறது.

சார்க்கோசியின் ஜனரஞ்சக தொடக்க நடவடிக்கைகளினால் எவரும் ஏமாந்துவிடக்கூடாது. பிரெஞ்சு பெருவணிக வட்டங்கள் மற்றும் சர்வதேச நிதிய சந்தைகளால் நீண்ட காலமாக கோரப்பட்டுவரும் சமூக நலன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலை மேற்கொள்வதற்கு தன்னுடைய ஜனாதிபதி அதிகாரங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடைய ஆதரவைப் பயன்படுத்துவதற்கு அவர் நோக்கங்கொண்டுள்ளார்.