World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்Geo-politics and oil: Japanese leader visits the US and Middle East புவி-அரசியல் மற்றும் எண்ணெய்: ஜப்பானிய தலைவர் அமெரிக்கா, மத்திய கிழக்கிற்கு வருகை By John Chan பதவியேற்ற ஆறு மாதங்களுக்கு பின்னர், ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ ஏபே ஏப்ரல் 26ம் தேதி வாஷிங்டனுக்கு இறுதியாக தன்னுடைய முதல் பயணத்தை மேற்கொண்டார். இதன் பின் அவர் மத்திய கிழக்கில் இருக்கும் ஐந்து பிரதான எண்ணெய் உற்பத்தியாளர்களையும் பார்த்து, அமெரிக்க-ஜப்பானிய கூட்டின் அடிப்படைகளில் ஒன்று ஆற்றல் பற்றியது என்று எடுத்துக்காட்டினார். தங்களுடைய முதல் வெளிநாட்டு பயணம் வாஷிங்டனுக்கு என்று இருந்த முந்தைய ஜப்பானிய பிரதமர்களை போல் அல்லாமல், ஏபே கடந்த அக்டோபர் மாதம் பெய்ஜிங்கிற்கும் சியோலுக்கும் சென்றிருந்தார். வணிகத்தின் அழுத்தத்தை ஒட்டி அவர் ஜப்பான் பெரும் பொருளாதார நலன்களை கொண்டுள்ள சீனா, மற்றும் தென் கொரியாவுடன் உறவுகளை முன்னேற்றுவிக்கும் கட்டாயத்திற்கு உள்ளானார். ஆனால் அவருக்கு முன்பு பதவியில் இருந்த ஜூனிச்சிரோ கொய்சுமியை போலவே, ஏபேக்கும் அமெரிக்காவுடனான கூட்டில்தான், பெருகிய முறையில் பிடிவாதம் கொண்ட வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை அமைந்துள்ளது. ஜப்பானிய பெரும் நிறுவனங்கள் ஆற்றல் ஆதாரங்களுக்காக போட்டியிடும் நிலையிலும், ஆசியாவில் அரசியல் செல்வாக்கிற்கு போட்டியிடும் நிலையிலும் உள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரையில், சீனாவை கட்டுப்படுத்துவதற்கு ஜப்பான்தான் மையமாகும்; சீனாவைத்தான் வாஷிங்டனும் தன்னுடைய மேலாதிக்கத்திற்கு நீண்ட காலத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்கும் நாடாக கருதுகிறது. வாஷிங்டனுக்கு ஏபேயின் வருகை தனிப்பட்ட நட்பு மூலம் அமெரிக்க ஜப்பானிய கூட்டிற்கு உறுதி செய்யும் தன்மை உடையது என்று பேசப்படுகிறது. ஒரு முறையான அரசாங்க விருந்து என்பதற்கு பதிலாக வெள்ளை மாளிகையில் இன்னும் கூடுதலான நெருக்க சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் புஷ் நிர்வாகத்தின் போர்களுக்கு பகிரங்கமாக ஆதரவு கொடுக்கும் வகையில் ஏபே ஒரு கடற்படை மருத்துவமனை மற்றும் ஓர் இராணுவக் கல்லறை இரண்டிற்கும் சென்றிருந்தார். டேவிட் முகாமில் நடைபெற்ற விவாதங்கள் வட கொரிய பிரச்சினையை மையமாக கொண்டிருந்தன. பெப்ருவரி மாதம் பெய்ஜிங்கில் செய்த ஒப்பந்தமான பொருளாதார உதவி மற்றும் சீரான உறவுகளுக்கு ஈடாக வடகொரியா தன்னுடைய அணுசக்தித் திட்டங்களை அகற்றிவிடும் என்பதற்கு ஏபேயும் அவருடைய அரசாங்கமும் தயக்கத்துடன்தான் ஒப்புதல் தெரிவித்திருந்தன. மத்திய கிழக்கில் வாஷிங்டன் குவிப்புக் காட்டி வரும் நிலையில், ஜப்பானிய அரசாங்கம் வட கொரிய அச்சுறுத்தலை பயன்படுத்தி உள்நாட்டில் இராணுவவாதத்தை தூண்டிவிட்டு வட கிழக்கு ஆசியாவில் கூடுதலான ஆக்கிரோஷம் நிறைந்த நிலைப்பாட்டை ஏற்றுள்ளது. மாக்காவ் வங்கியிலிருந்து வட கொரிய நிதியத்தை முடக்காதிருப்பதில் பெய்ஜிங் உடன்பாடு நீடிப்பதற்காக வட கொரியா மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஏபே புஷ்ஷிடம் வலியுறுத்தினார். ஏபே அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்பு, டோக்கியோ போலீசார் ஒரு வட கொரியக் குழுவின்மீது --General Association of Korean Residents in Japan (Chongryon) - சோதனை நடத்தியது. குழுவின் மூன்று உறுப்பினர்களிடம் 1974ம் ஆண்டு வட கொரிய முகவர்கள் ஜப்பானிய குழந்தைகளை கடத்தியதில் தொடர்புடைய வழக்கு பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கடத்தல்கள் பிரச்சினையை ஒட்டி ஏபே அரசியலில் முக்கியத்துவத்தை பெற்றார்; ஜப்பானின் வலதுசாரி இராணுவவாத வட்டங்களில் இது பாராட்டுதற்கு உரிய செயற்பாடு ஆகும். ஏபேயை சந்தித்தபின், புஷ் வட கொரியாவில் ஜப்பானின் நிலைப்பாடு பற்றிய ஆதரவு காட்டி குறிப்புக்கள் தெரிவித்தார். அதன் அணுசக்தி நிலையத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் மூடாமல் பியோங்யாங் இருப்பது பற்றி சுட்டிக்காட்டி அவர் அறிவித்ததாவது: "எமது பொறுமை ஒன்றும் வரம்பிலாதது அல்ல." வட கொரியத் தலைவர்கள் "சரியான முடிவை எடுப்பர்" என்று தான் நம்புவதாக கூறிய ஜனாதிபதி அமெரிக்காவும் ஜப்பானும் "நாங்கள் கொடுத்துள்ள அழுத்தங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் வகையில் உறுதி செய்வதற்கு மூலோபாயம் கொண்டுள்ளோம்" என்றும் எச்சரித்தார். கடத்தல் பிரச்சினைகளிலும் புஷ் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினார். ஆனால் புஷ்ஷின் முன்னீடுபாடு வட கொரியா பற்றி இல்லாமல் ஈராக் போர் பற்றி இருந்தன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்களின் ஜப்பானிய ஆதரவை அவர் புகழ்ந்து, "இதையொட்டி இந்த இளைய ஜனநாயக ஆட்சிகள் துன்பப்டும் உலகில் தப்பிப் பிழைத்துள்ளன." என்றார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க கைப்பாவை ஆட்சிகளை நிலைநிறுத்துவதற்காக உதவி செய்யும் நாடுகளில் ஜப்பான் முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. ஆசியாவில் ஜப்பானுக்கு வாஷிங்டனுடைய ஆதரவை தக்க வைத்துக் கொள்ளுவதற்கு, புஷ் நிர்வாகத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து ஆதரவளிப்பது தேவை என்பதை டோக்கியோ அறிந்துள்ளது. யோமியுரி ஷிம்பனிடம் ஒரு ஜப்பானிய அதிகாரி கூறினார்: "ஜப்பான், கொய்சுமி நிர்வாகத்திடம் இருந்து மரபுரிமையாக பெற்றுவரும் தன்னுடைய ஈராக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்தாவிட்டால், வட கொரிய பிரச்சினை மீதானதில் ஜப்பானுக்கு முக்கியத்துவம் வழங்காது." புஷ்ஷின் "பயங்கரவாதத்தின் மீதான போரில்" கொய்சுமி சேர்ந்து கொண்டு, ஜப்பானிய இராணுவத்தின் மீது இருந்த அரசியலமைப்பு, அரசியல் கட்டுப்பாடுகளை கீழறுக்க அதை போலிக்காரணமாக பயன்படுத்திக் கொண்டது. ஜப்பானில் மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட அவர் ஈராக்கிற்கு 2004ல் துருப்புக்களை அனுப்பினார்; இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜப்பானிய படைகள் வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவது அதுவே முதல்தடவையாகும். கடந்த ஆண்டு தெற்கு ஈராக்கில் இருந்து ஜப்பான் தன்னுடைய படைகளை திரும்ப பெற்றுக் கொண்டுவிட்டாலும், ஏபே ஜப்பானிய கடற்படைக் கப்பல்களை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்திய பெருங்கடலில் நிறுத்தியுள்ளதோடு, ஈராக்கில் அமெரிக்காவிற்கு உதவுவதற்காக குவைத்தில் விமானப்படை ஆதரவையும் வழங்கியுள்ளார். "ஜப்பானை போருக்குப் பிந்தைய ஆட்சிக்கு அப்பால் கொண்டு செல்லவேண்டும்" என்பதுதான் தன்னுடைய முக்கிய பணி என்று புஷ்ஷிடம் விளக்கியதாக ஏபே செய்தி ஊடகத்திடம் கூறினார். அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்பு ஏபே, "இப்பொழுது ஜப்பானை சூழ்ந்துள்ள பாதுகாப்பு சுழ்நிலை பெரும் மாறுதலைக் கண்டுவருவதால் தேசிய பாதுகாப்புக் கொள்கைக்கான சட்டபூர்வ அஸ்திவாரம் அதற்கு நலனளிக்கும் வகையில் உருவாக்கப்படுவதற்கு" ஒரு குழுவை நிறுவியுள்ளார். குறிப்பாக, நாட்டின் போருக்கு பிந்தைய அரசியலமைப்பில் உள்ள சமாதான விதி என்று அழைக்கப்படும் விதியினால் சுமத்தப்பட்டுள்ள ஜப்பானிய இராணுவத்தின் மீதான கட்டுப்பாடுகளை தான் அகற்றுவதற்கு முற்பட்டுள்ளதாக கூறினார். புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போருடன்" இணைந்து கொள்ளுவதற்கான ஜப்பானின் முக்கிய காரணங்களுள் ஒன்று மத்திய கிழக்கு எண்ணெயை பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதைத் தொடர்ந்து செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், குவைத், கத்தார் மற்றும் எகிப்து ஆகியவற்றிற்கு அவர் பயணம் செய்தது, அதிகரித்த வகையில் வெடிப்புக் காணக்கூடிய இந்த பகுதியில் டோக்கியோவின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதாகும். கவனத்துடன் ஈரானை ஏபே தவிர்த்துள்ளார்; அதுதான் ஜப்பானுக்கு தேவையான எண்ணெயில் 11 சதவீதத்தைக் கொடுக்கிறது. தெஹ்ரானை ஒதுக்கும் முயற்சியில் புஷ் நிர்வாகம் ஜப்பானையும் மற்ற நாடுகளையும் ஈரானுடன் பொருளாதார உறவுகளைத் துண்டிக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இருந்ததை போலவே, டோக்கியோவிற்கு முக்கியமான வெளியுறவுக் கொள்கை பிரச்சினையாக ஆற்றலை பெறுதல் ஆகியுள்ளது; ஏனெனில் அனைத்து முக்கிய வல்லரசுகளும் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை அடைவதில் பெரும் போட்டியில் உள்ளன. உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள ஜப்பான் முற்றிலும் இறக்குமதி செய்யப்படும் எண்ணெயைத்தான் நம்பியுள்ளது; வளைகுடா நாடுகள் 76 சதவீத தேவையை அளிக்கின்றன. செளதி அரேபியாவில் ஏபே அறிவித்தார்: "ஜப்பானுக்கு மத்திய கிழக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கூற போதுமான சொற்கள் எங்களிடம் இல்லை." ஜப்பானின் ஆற்றல் பாதுகாப்பு இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. 2000ம் ஆண்டில் ஜப்பானில் Arabial Oil நிறுவனம் செளதி அரேபியா மற்றும் குவைத்தில் மகத்தான Khafji எண்ணெய் வயலில் பெரும் நன்மைகளை இழந்தது; இதற்குப் பின் 2003ம் ஆண்டில் 40 ஆண்டுகளாக குவைத்தில் பெற்றிருந்த மற்றொரு சலுகையையும் இழந்தது. கடந்த ஆண்டு அமெரிக்க அழுத்தத்தை ஒட்டி, ஈரானின் மகத்தான Azadegan எண்ணெய் வயலில் இருந்த நலன்களை 75 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வெட்டு விழுந்ததை ஏற்க வேண்டியதாயிற்று. தூரக் கிழக்கில் சீனா சைபீரியாவில் இருந்து வரும் எண்ணெய் குழாய்த்திட்டத்தில் ஜப்பானைவிட அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது, அதேவேளை ரஷ்யாவோ சாகாலின் தீவில் முக்கிய எரிவாயுத் திட்டத்தில் ஜப்பானிய பங்கை பெரிதும் குறைத்துவிட்டது. பகிரங்க சந்தையில் தங்கியிருப்பதை விட, ஜப்பான் சீனாவை போல் ஆற்றல் மூலோபாயம் ஒன்றை ஏற்றுக் கொண்டுவருகிறது; மூலப்பொருட்கள் பெறுவதற்கு பரிவர்த்தனையாக உள்கட்டுமான திட்டங்களை வழங்க முன்வருகிறது. அவசர காலங்களில் தன்னுடைய எண்ணெய் தேவைக்கு சிறப்பு சலுகைகளுக்கான ஒப்பந்தத்தை செளதி அரேபியாவுடன் ஏபே கையெழுத்திட்டார். அதே நேரத்தில் செளதி எண்ணெயை பசிபிக் சந்தைகளுக்காக ஓகினாவாத் தீவில் இருப்பாக வைத்துக் கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில், Japan Bank of International Cooperation நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தங்களுக்காக 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க முன்வந்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்கனவே கணிசமான முதலீடுகளை ஜப்பான் கொண்டுள்ளது; இதில் செளதி அரேபியாவில் $9.8 பில்லியன் டாலர்கள் பெட்ரோ கெமிக்கல் திட்டம், கத்தாரில் 4.7 பில்லியன் டாலர்கள் எரிவாயு குழாய்த்திட்டம், ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் 2.7 பில்லியன் டாலர்களில் மின்சக்தி, நீர் திட்டத்திற்கும், துபாய் மெட்ரோவிற்கு 3.4 பில்லியன் டாலர்களும் இவற்றில் அடங்கும். 120 உயர்மட்ட வணிகத் தலைவர்கள் புடை சூழ, ஏபே இப்பகுதியில் கூடுதலான ஜப்பானிய தொழில்துறை முதலீட்டை ஊக்குவிக்க விரும்புகிறார்; இதையொட்டி "பல அடுக்குகள்" கொண்ட பொருளாதார உறவுகள், எண்ணெய்க்கும் அப்பால் தோற்றுவிக்கப்பட்டு மத்திய கிழக்கில் ஜப்பானின் நிலைமையை வலுப்படுத்தும் என்று அவர் கருதுகிறார். ஜப்பானின் சக்தி வாய்ந்த வணிக நிறுவனமான Keidanren ஆறு நாடுகள் கொண்ட வளைகுடா ஒத்துழைப்புக் குழுவுடன் ஒரு தடையற்ற வணிக உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு டோக்கியோவை வற்புறுத்தியுள்ளது. ஏபேயின் பயணம் பற்றி கூறுகையில் Financial Times, ஈராக்கிய போருக்கான ஜப்பானின் ஆதரவு மற்றும் அதன் எண்ணெய் தேவைக்கும் இடைய உள்ள நெருக்கமான தொடர்பை பற்றிக் குறிப்பிட்டுள்ளது. "ஈராக்கில் தரைப்படைகளை நிறுத்தியுள்ள ஜப்பானின் ஈடுபாட்டை அது முற்றிலும் மனிதாபிமான நோக்கத்தால் உந்துதல் பெற்றது என்பதை வலியுறுத்த ஏபே சிரமத்துடன் முயன்றுள்ளார். ஆனால் வெளிப்படையாக கூறினாலும் கூறப்படாவிட்டாலும், மேற்புறத்திற்கு கீழே பழைய முக்கிய பொருளான எண்ணெய் என்பது உள்ளது." |