World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bipartisan Senate plan would deepen exploitation of immigrant workers

செனட்டில் இரு கட்சியினரின் திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுரண்டப்படுதலை ஆழப்படுத்தும்

By Barry Grey
18 May 2007

Back to screen version

வியாழனன்று ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரின் குழு ஒன்று, அமெரிக்காவில் தற்பொழுது இருக்கும் ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை கொண்டிருக்கும் அமெரிக்க புலம்பெயர்தல் முறையை முற்றிலும் மாற்றி அமைக்கும் இருகட்சி முன்மொழிவை அறிவித்துள்ளது; இதைத் தவிர வருங்காலத்தில் புலம்பெயர்பவர்கள் பெற்றோர்கள், வயதான குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நாட்டிற்குள் கொண்டுவருவதை தடைசெய்யும் வகையிலான பிற்போக்கு விதிகளையும் அது கொண்டுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள 380 பக்கங்களுடைய சட்டத்தின் விவரம் முழுமையாக இல்லை. ஆனால் சில முக்கிய கருத்துக்கள் தெளிவாக உள்ளன.

இத்திட்டத்தில் பாரபட்சம் காட்டும், ஜனநாயக விரோத மொழி பற்றிய விதிகள் உள்ளன; நிரந்த சட்டபூர்வ தகுதி கோரும் புலம்பெயர்ந்தவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்றும், எல்லை கண்காணிப்பு ரோந்துப் படை மிகப் பெரிய அளவில் 18,000 மாக உயர்த்தப்படுவதற்கான விதியும், இன்னும் கூடுதாலன 370 மைல்கள் அமெரிக்க-மெக்சிக எல்லையில் வேலி கட்டுதலும், புலம்பெயரும் தொழிலாளர்கள் பற்றி உயர் தொழில்நுட்ப வேலை பரிசீலிப்பு முறையும் உள்ளன.

மேலும் இது தற்காலிக தொழிலாளர் திட்டத்தை நிறுவி இந்நாட்டிற்குள் கொண்டுவரவிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர் எண்ணிக்கையை மிகப் பரந்த அளவில் உயர்த்தும்; அது குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு விவசாயம், வணிகம் மற்றும் பிற பெருநிறுவன நலன்களைக் காப்பதற்கு மிக பரந்த அளவில் சுரண்டப்படும் தன்மையில் இருக்கும்.

இத்திட்டம் ஜனவரி 1ம் தேதிக்கு முன்பு அமெரிக்காவிற்குள் நுழைந்திருந்த ஆவணமற்ற தொழிலாளர்கள் பெரும்பாலனவர்கள் அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசித்து பணியாற்ற அனுமதிக்கும் "Z விசா" பெறும்வரை, ஒரு தற்காலிக வசிக்கும் உரிமை பெறுவதற்கு அனுமதிக்கும். ஆனால் அவர்கள் 5,000 டாலர்கள் அபராதமாகவும், நிர்வாக கட்டணமாகவும் "Z விசா" பெறுவதற்கு செலுத்தி, நிலையான வசிக்கும் உரிமை பெறுவதற்கு முன் எட்டு முதல் பதின்மூன்று ஆண்டுகள் காத்திருக்கும் நிலையை எதிர்கொள்ள வேண்டும்.

"சட்டவிரோத புலம்பெயர்பவர்கள்" என்று அழைக்கப்பட்டுள்ள இல்லங்களின் குடும்பத் தலைவர்கள் அவர்களுடைய தாய்நாட்டிற்கு எட்டு ஆண்டுகளுக்குள் திரும்பி, குடும்ப உறுப்பினர்கள் நிரந்தர வசிப்பிற்கான தகுதிபெற விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் புதிய திட்டத்தின்படி கணவன்/மனைவி அல்லது சிறு குழந்தைகள் மட்டுமே அமெரிக்காவிற்கு வருவதற்கு உத்தரவாதமான அனுமதியை பெறுவர்.

இது முந்தைய குடியேறும் சட்டத்தில் இருந்து ஒரு பிற்போக்குத்தனமான, முக்கிய மாறுதலை காட்டுகிறது; அதன்படி சட்டபூர்வ புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் முழுக் குடும்பங்களையும் அமெரிக்காவிற்குள் கொண்டுவரமுடியும் என்று இருந்தது. புதிய திட்டத்தின்படி, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு புள்ளி முறை ஏற்படுத்தப்பட்டு, வேலை அனுபவம், திறமை, கல்வித்தரம் ஆங்கிலத்தில் திறமை ஆகியவை குடும்ப பிணைப்பை விடக் கூடுதலான முன்னுரிமையை பெறும். இதன் விளைவாக, அமெரிக்காவில் வாழ்ந்து, உழைக்க வேணடும் என்று விரும்பும் பல புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குடும்பங்களுடன் உடைவை எதிர்கொள்ள நேரிடும்.

இத்தகைய கொள்கை மாற்றம் திட்டமிடப்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படைத் தன்மையையை உயர்த்திக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது அமெரிக்க பெருநிறுவனங்கள் மற்றும் வேலையளிப்பவர்களுடைய இலாபமுறைக்கு ஏற்றவாறு உள்ளது; அவர்கள் ஒரு பெரிய, உறுதியான குறைவூதிய, மிக அதிக அளவில் சுரண்டப்படும் தொழிலாளர் தொகுப்பு தங்களுக்கு வேண்டும் என்றும் அதே நேரத்தில் ஒரு சிறிய மிகத் திறமையான கல்வி கற்ற புலம்பெயர்வோர் வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

இதுதான் மத்திய ரிசர்வ் குழுவின் முன்னாள் தலைவரான அலன் கிரீன்ஸ்பானால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது; செவ்வாயன்று இவர் புலம்பெயர்பவர்கள் மீதான தடைகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும் அதையொட்டி அமெரிக்க உள்கட்டுமானத்தை அமைப்பதற்கு, திறமையான தொழிலாளர்கள் நிறைய வரும் நிலை ஏற்படும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல், சட்டவரைவின் ஒரு பகுதி "புலம்பெயர்வோருக்கான தகுதி அடிப்படையிலான மதிப்பீட்டு முறை மூலம் அமெரிக்க போட்டியை பெருக்க வேண்டும்" என்று காங்கிரஸ் விரும்புவதாக கூறுகிறது. "தொடர்ந்து வரும் புலம்பெயர்வோரை குறைப்பதற்கு" காங்கிரஸ் நடவடிக்கை என்றும், அதற்காக இரத்த சம்பந்தமுள்ள சொந்தம் என்பதற்காக பிரத்தியேகமாக கொடுக்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

"நாங்கள் கேள்விப்படுவது பற்றி மிகவும் கவலையடைந்துள்ளோம்" என்று La Raza (ஹிஸ்பானியர்களை முன்னேற்றுவதற்கான இயக்கம்) வின் தேசிய குழுவிற்கு முக்கிய ஆதரவாளராக இருக்கும் cecilia Munoz கூறினார்.

இச்சட்டம் வாஷிங்டனில் பொதுவான புலம்பெயர்தல் விவாத, அரசியல் பின்னணியை பிரதிபலிக்கிறது; அதன்படி அமெரிக்காவால் நீண்ட நாட்கள் நசுக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் வறிய தொழிலாளர்கள், அமெரிக்காவில் வேலைக்கு முயற்சித்தால், அவர்கள் சட்டத்தை மீறுபவர்கள் என்று ஊடகத்தாலும் அரசியல் வாதிகளாலும் நாட்டுவெறி, இனவெறி ஆகியவற்றை தூண்டிவிடுவதற்கு பலியாடுகளாக்கப்படுகின்றனர்.

ஆயினும்கூட பாரபட்சம் காட்டும் "சீர்திருத்தம்" ஆங்கிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நிறுவிய சட்டம் வந்த அன்றே, அரசாங்கம் ஒரு புதிய மக்கள் கணக்கெடுப்பை வெளியிட்டது; அதில் அமெரிக்க மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர், 100 மில்லியன் மக்கள் ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் அல்லது ஆபிரிக்க-அமெரிக்கர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஹிஸ்பானியர்கள் மிகப் பெரிய சிறுபான்மை குழுவினராக (அமெரிக்க மக்கள் தொகையில் 15 சதவீதமாக உள்ளனர்) 44.3 மில்லியனாக உள்ளனர்; ஜூலை 1, 2005ல் இருந்து ஜூலை 1, 2006 வரை நாட்டின் வளர்ச்சியான 2.9 மில்லியனில் இவர்கள் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலாக இருந்தனர்.

குடியேற்றத்திட்டம் பற்றிய முன்மொழிவு மூன்று ஜனநாயகக் கட்சியினரான, மாசாச்சுசெட்சின் எட்வார்ட் கென்னடி, கலிஃபோர்னியாவின் Dianne Feinstein மற்றும் கோலோரோடோவின் கென் சலாசர் ஆகிய மூவர், மற்றும் 2008 ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக இருக்கக்கூடிய அரிசோனாவின் ஜோன் மக்கைன் உட்பட ஏழு குடியரசுக் கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்ட ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உடன்பாட்டிற்கு முன்பு மூடிய கதவுகளுள் நடந்த கூட்டத்தில் பங்கு பெற்ற புஷ் நிர்வாகத்தின் அலுவலர்கள், உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி மைக்கேல் ஷேர்டாப் மற்றும் வணிக மந்திரி Carlos Gutierrez ஆகியோரும் இருந்தனர்.

பின்னர் வியாழனன்று புஷ் வெள்ளை மாளிகை புல் தரையில் இருந்து உடன்பாட்டை புகழ்ந்தும் காங்கிரசின் இரு பிரிவுகளையும் அதை ஏற்குமாறு வலியுறுத்தியும் ஓர் அறிக்கையை வெளியிட்டார். இந்த நடவடிக்கை "பொது மன்னிப்பு" எதையும் வழங்காது என்று வலியுறுத்திய அவர், இத்திட்டம் "மக்களை மரியாதையுடன் நடத்தும்" என்றும் கூறினார்.

இதன் முக்கிய ஜனநாயகக் கட்சி ஆதரவாளரான கென்னடியினால் இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது; அவர் இது "எமது மனிதாபிமானம் மற்றும் புலம்பெயர்வோரின் நாடு என்ற மரபு ஆகியவற்றை பேணிக்காக்கிறது" என்றார். அவர் அவ்வாறு பேசும்பொழுது மக்கைன், மற்றும் (தெற்கு கரோலினாவின் குடியரசுக் கட்சி) செனட்டர் லிண்டே கிரஹாம் என்னும் இரு குடியரசுக் கட்சியினருடன் நின்று கொண்டிருந்தார்; இவர்கள்தான் கடந்த ஆண்டு இராணுவக் குழு சட்டத்தை இயற்றுவதில் முன்னின்று இருந்தனர்; அச்சட்டம் "சட்டவிரோத எதிரிப் போரிடுபவர்களுக்கு" ஆட்கொணர்தல் மனு உரிமை கிடையாது என்று கூறியதுடன் குவாண்டநாமோ குடாவிலும் மற்ற அமெரிக்க கொடுஞ்சிறை முகாம்களிலும் சித்திரவதை உட்பட நடைபெற்ற பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடுத்திருந்தது.

ஒரு சில விதங்களில், தற்போதைய திட்டம் செனட்டால் இயற்றப்பட்டு புஷ்ஷின் ஒப்புதலை பெற்ற கடந்த ஆண்டு சட்ட வரைவை விடக் கடுமையானது ஆகும். அச்சட்ட வரைவு பிரதிநிதிகள் மன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது; அங்கு பெரும்பாலான குடியரசுக் கட்சியினரால் அது "குற்றவாளிகள்", "சட்டத்தை மீறுபவர்களுக்கு", "பொது மன்னிப்பு" அளிக்கும் திட்டம் என்று கண்டிக்கப்பட்டது. குடியரசுக் கட்சி பெரும்பான்மை கொண்டிருந்த மன்றம் அமெரிக்க மெக்சிகோ எல்லையின் இன்னும் கூடுதலான அடக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆவணமற்ற தொழிலாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

கடந்த ஆண்டு செனட்டின் சட்டவரைவு நாட்டிற்குள் தொழிலாளர்களை தற்காலிக தொழிலாளர்களாக நுழைந்து, தங்கி, குடியுரிமை பெறுவதற்கு பணியாற்ற அனுமதிக்கும்; ஆனால் புதிய திட்டம் வெளியில் இருந்து வரும் தற்காலிக தொழிலாளர்கள் இரண்டு முறை அமெரிக்காவிற்குள் இருந்தால் ஓராண்டு அமெரிக்காவிற்கு வெளியே இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. ஒரு புள்ளி வகை முறையையும் இணைத்துள்ளது; அதன்படி அமெரிக்க வணிகத்திற்கு கூடுதலான பயன்பாடு கொடுக்கக்கூடிய புலம்பெயர்வோர்கள் முன்னுரிமை வழங்கப்படுவர்; முன்பு குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்கள் இப்பொழுது தள்ளுபடி ஆகின்றன.

சிக்காகோ டிரிபியூனில் வந்துள்ள அறிக்கை கூறுவதாவது: "வியாழக்கிழமை சமரசத்தின் இதயத்தானத்தில் இருப்பது "ஒரு விசை வில்லாகும்" (Trigger) அதற்கு மிகக் கடுமையாக நிறைவேற்றும் நடவடிக்கைகள் தேவை; எல்லைகளில் ரோந்துப் பணி இருமடங்காக ஆக்கப்பட வேண்டும்; அதன் பின்னர்தான் விருந்தாளி தொழிலாளர் திட்டம் அல்லது குடிமகனுக்கான பாதை என்பது நடப்பிற்கு வரவேண்டும். இத்திட்டம், நிலைத்த குடி உரிமையை, அமெரிக்காவில் இருக்கும் குடியேறியவர்களின் குடும்பங்களில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்திற்கு உதவக்கூடிய திறமைகளை கொண்டவர்களுக்கு மாற்றும்."

நினைவுதின விடுமுறைக்கு முன்னர், விவாதத்திற்கு மன்றத்தில் இச்சட்ட வரைவை கொண்டுவந்து விடலாம் என்ற நம்பிக்கையில் செனட்டர்கள் உள்ளனர். ஆனால் மன்றம் அதை ஏற்றுவிடுமா என்பது சந்தேகத்தில்தான் உள்ளது.

The Service Employees International Union, மற்றும் Unite Here (Union of Needletrades, Industrial and Textile Employees மற்றும் Hotel Employees and Restaurant Employees Union இரண்டும் ஒன்றிணைந்த அமைப்பு) தொழிற்சங்க அமைப்புக்கள் இரண்டும் தற்காலிக தொழிலாளர்கள் நாட்டில் இருப்பதற்கு வழிவகை செய்யாத எந்த குடியேற்ற சட்டவரைவிற்கும் ஆதரவு கொடுப்பதில்லை என்று அச்சுறுத்தியுள்ளன. இந்த சங்கங்கள் தற்காலிக தொழிலாளர்களை சட்ட நெறிப்படுத்துவது, ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை தோற்றுவிக்க ஒரு வழிவகை என்றும் இதில் இருந்து தங்களுடைய உறுப்பினர்கள் எண்ணிக்கை, கட்டணங்கள் ஆகியவற்றை பெருக்கிக் கொள்ளலாம் என்றும் கருதுகின்றன.

திட்டத்தின் இப்பகுதி இயற்றப்படுவதற்கு இன்னும் கணிசமான தடை வெளிப்படையான புலம்பெயர்வோர்-எதிர்ப்பு, குறுகிய வெறி போராட்டம் நிறைந்த மன்ற குடியரசுக் கட்சியினர் ஆவர். டெக்சாசின் லாமர் ஸ்மித், மன்ற நீதிக் குழுவின் மூத்த குடியரசுக் கட்சி உறுப்பினர் செனட்டின் திட்டம் பற்றிக் கூறினார்: "இத்திட்டம் நாடு, அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி நெறி ஆகியவற்றிற்கு நிரந்தரமான கேட்டை ஏற்படுத்தும். பொது மன்னிப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருப்பவர்களுக்கும் முன்பாக மீறுபவர்களுக்கு வழங்கப்படும்; அமெரிக்க தொழிலாளர்களைவிட வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்பாக வைக்கும்; இன்னும் கூடுதலான வகையில் சட்ட விரோதமாக புலம்பெயர்தலுக்கு ஊக்கம் தரும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved