World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Gujarat police murders covered up as terrorist "encounters"

இந்தியா: குஜராத் போலீஸ் நடத்திய கொலைகள் பயங்கரவாத "நேருக்குநேர் நடந்த மோதல்" என்று மூடிமறைக்கப்படுகின்றன

By Kranti Kumara
9 May 2007

Back to screen version

அரசாங்க போலீஸ் விசாரணையேதும் இன்றி ஒரு முஸ்லிமை போலித்தனமான பயங்கரவாத எதிர்ப்பு நேருக்குநேர் நடந்த மோதலில் (Encounter) கொன்று பின்னர் தங்கள் நடவடிக்கையை மறைப்பதற்கு அவருடைய மனைவியையும் கொன்றதை இந்தியாவின் மேற்கு மாநில குஜராத் அரசாங்கம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஒப்புக் கொண்டுள்ளது, எந்த அளவிற்கு இத்தகைய குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் வாடிக்கையாக போய்விட்டன என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இராணுவ, பாசிச சர்வாதிகார ஆட்சிகளுடன் பொதுவாக தொடர்பு படுத்தப்படும் இத்தகைய வழிவகைகள் மிகப் பரந்த அளவில் இந்தியா முழுவதிலும் போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றன.

மார்ச் மாதம், சோராபுதின் ஷேக் என்னும் பயங்கரவாதி ஒரு தெருச்சண்டையில் போலீசாரால் கொல்லப்பட்டார் என்று முன்னதாக குஜராத் போலீசும், மாநில அரசாங்கமும் வலியுறுத்தியது போல் இல்லை என்று ஒப்புக் கொண்டது. மாறாக அவர் ஒரு போலீசாராலேயே கொலையுண்ட பாதிக்கப்பட்டவர் ஆவார். ஏப்ரல் 30 அன்று நாட்டின் உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசாங்கம் சோராபுதின் ஷேக்கின் மனைவியான கெளசர்பீ, அவருடைய கணவர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குள் நவம்பர் 28, 2005ல் கொலைசெய்யப்பட்டார் என்பதையும் ஒப்புக் கொண்டது; தங்களுடைய குற்றத்தை மறைக்கும் வகையில் போலீசார் கெளசர்பீயின் சடலத்தை எரித்துவிட்டனர் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
கெளசர்பீயும் கொல்லப்பட்டிருக்கிறார் என்ற உண்மை ஒப்புக் கொள்ளப்பட்டது, அப்பெண்மணியின் மைத்துனர் பதிவு செய்திருந்த ஆட்கொணர்வு மனுவுக்கு விடையிறுக்கும் வகையில் வெளிவந்தது; அத்தகைய மனு அதிகாரிகள் அப்பெண்மணி எங்கு இருக்கிறார் எனக் கட்டாயமாக கூறும் அதிகாரத்தை பெற்றது ஆகும்.

மூன்று மூத்த போலீஸ் அதிகாரிகள் -- குஜராத் போலீசின் எல்லை பகுதிப் பிரிவின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலான வன்ஜாரா, குஜராத் உளவுத்துறையில் கண்காணிப்பாளராக இருக்கும் ராஜ்குமார் பாண்டியன் மற்றும் அண்டை மாநிலமான ராஜஸ்தான் ஆல்வாரில் போலீஸ் கண்காணிப்பாளராக இருக்கும் தினேஷ் குமார்-- உச்ச நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசாங்கம் "எடுத்த நடவடிக்கை பற்றிய அறிக்கையை" ஏப்ரல் 25, 2007ல் கொடுத்ததற்கு ஐந்து நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டனர்.

பாதுகாப்புப் படைகளின், குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர், மற்றும் பல பிரிவினைவாத இயக்கங்கள் உள்ள வடகிழக்கில் செயல்படும் பாதுகாப்புப்படைப் பிரிவுகளின் கடுமையான நடவடிக்கைகளும் சட்டமின்மையும் பற்றி அதிக அளவில் கண்டிக்கப்படுவது இப்பொழுது குஜராத் போலீஸ் படுகொலைகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதால் இன்னும் அதிகமாகியுள்ளது. போலீசார் நிரபராதியான சாதாரண மக்களை பயங்கரவாத கொலையாளிகள் எனக்கூறி காணாமற்போகும்படி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில அரசாங்கம் சாதாரண மக்கள் மறைந்து போவது பற்றியும் போலித்தனமான போலீஸ்-பயங்கரவாத நேருக்குநேர் நடந்த மோதல்கள் பற்றியும் ஒரு பொது விசாரணக்கு உத்தரவிடும் கட்டாயம் ஏற்பட்டது.

சோராபுதின் ஷேக் மற்றும் கெளசர்பீயை போலீசார் கொன்றுள்ளமை குஜராத்தின் பாரதீய ஜனதா கட்சி (BJP) மாநில அரசாங்கத்திற்கும் ஒரு நெருக்கடியாகியுள்ளது; ஏனெனில் கொலைகளை மூடிமறைக்கும் போலீசாரின் முயற்சிகளுக்கு அரசாங்கம் உடந்தையாக இருந்தது, ஒருவேளை கொலைகளுக்கே கூட காரணமாக இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் வந்துள்ளன.

சோராபுதின் ஷேக் மற்றும் கெளசர்பீ இருவரும் முஸ்லிம்கள் என்பது தற்செயல் அல்லது எதிர்பாரா நிகழ்வு அல்ல. பாதுகாப்பு படைகளுடன் மிக நெருக்கமாக செயல்பட்டு குஜராத்தின் இந்து மேலாதிக்கவாத BJP அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தை இழிவாக நடத்தியதுடன் பயங்கரவாத பீதிக்கும் ஆளாக்கியுள்ளது. 2002ம் ஆண்டில் BJP ஆட்சி, முஸ்லிம் எதிர்ப்பு படுகொலைகள் ஒன்றை தூண்டியதில் 2,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மடிந்ததுடன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீடுகளையும் வேலைகளையும் இழந்தனர். (See "India's ruling party abetted communal carnage in Gujarat")

சோராபுதின் ஷேக் மற்றும் கெளசர்பீயைப் போலீசார் கொலை செய்தது

சோராபுதின் ஷேக் மற்றும் கெளசர்பீ (இவருடைய பெயர் இந்திய செய்தி ஊடகத்தில் கெளசர் பீவி, கெளசர் பானு, கெளசர்பீ எனவும் கொடுக்கப்பட்டுள்ளது) இருவரும் குஜராத் போலீஸ் குழு ஒன்றினால் ஆந்திர மாநில போலீசின் உதவியுடன் கடத்தப்பட்டனர்; இவர்கள் ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சாங்லிக்கு ஒரு பஸ்ஸில் நவம்பர் 22, 2005 இரவில் சென்று கொண்டிருந்தபோதே கடத்தப்பட்டனர்.

ஆயுதமேந்திய குழு ஒன்று, போலீஸ் சீருடையில் இல்லாமல், நெடுஞ்சாலையில் தனியான பகுதி ஒன்றில் ஒரு வேனைப் பயன்படுத்தி நவம்பர் 23 அதிகாலை 1.30 மணிக்கு பஸ்ஸை மறித்தது. குஜராத் அல்லது ஆந்திரப் பிரதேச போலீசார் இருவருக்குமே பஸ்ஸை மறிக்கும் அதிகாரம் கிடையாது; ஏனெனில் அந்த நேரத்தில் இந்த பஸ் அண்டை மாநிலமான கர்னாடகத்தில் சென்று கொண்டிருந்தது.

இதன் பின்னர் ஆயுதமேந்திய குழு ஒன்று பஸ்ஸிற்கு வந்து தம்பதிகளை பிடித்ததுடன் அவர்களுக்கு அருகே இருந்த மூன்றாம் நபரையும் பிடித்தது. மூன்றாம் மனிதர், சோராபுதினுக்கு நெருக்கமானவர் என்று நம்பப்படுகிறது; அவருடைய பெயர் துலசிராம் பிரஜாபதி; இவர் ஒரு போலீசுக்கு தவகல் கொடுப்பவர் என்று கூறப்படுகிறது.

இம்மூவரும் பின்னர் குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்திற்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தின் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று நாட்களுக்கு பின்னர் நவம்பர் 26, 2005 அன்று போலீஸ் ஒரு "போலி நேருக்கு நேரான மோதலுக்கு" (Fake Encounter) ஏற்பாடு செய்தனர் (இச்சொல் பொதுவாக இந்தியாவில் கிளர்ச்சியாளர்களையும் பயங்கரவாதிகளையும் போலீசார் தடுக்கும் முயற்சி என்ற பொருளை உடையது); அதில் சோராபுதின் கொலைசெய்யப்பட்டார்; செய்தி ஊடகத்திற்கு ஒரு லஷ்கர் -இ-தொய்பா (LT, "நேர்மையின் இராணுவம்") பயங்கரவாதி கொல்லப்பட்டார் என்ற தகவலும் கொடுக்கப்பட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இஸ்லாமிய குழுவான LT பல வகுப்புவாத, பயங்கரவாத கொடுமைகளுக்கு பொறுப்பு ஆகும். இந்திய அரசாங்கத்தாலும், செய்தி ஊடகத்தாலும் இது இந்தியாவில் உள்ள மிக இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பு என்று கூறப்படுகிறது; பலமுறையும் இந்த அமைப்பினர் குற்றச் சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லாவிடினும் பல பயங்கரவாத நடவடிக்கைகளை செய்தவர்கள் என்று பகிரங்கமாக குறிக்கப்பட்டுள்ளனர்.

சோராபுதினை பொறுத்தவரையில், போலிசார் அவர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை கொலைசெய்யும் சதித்திட்டத்தில் தொடர்புடையவர் என்று கூறியுள்ளனர். BJP யின் மூத்த தலைவரான மோடி தேசிய அளவில் 2002 முஸ்லிம் எதிர்ப்பு படுகொலைகளில் அவர் கொண்டிருந்த பங்கினால் பெரும் இகழ்வைப் பெற்றார்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் எந்தவித பொது முழக்கமும் இல்லாமல், போலீசார் கெளசர்பீயையும் கொன்றனர்; இந்த தீமையான விஷயத்தை பற்றி அதிகம் அறிந்து கொண்டுவிட்டார் என்பது காரணமாக இருக்கக் கூடும்.

டிசம்பர் 2005ல், சோராபுதினின் சகோதரர் ருபப்புதின் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்; தன்னுடைய சகெளதரர் கொலை பற்றி ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். ஜனவரி 21, 2006ல் நீதிமன்றம் குஜராத் போலீஸ் தலைமை இயக்குனர் Director General of Police (DGP), பி.சி. பாண்டேயே சோராபுதின் "நேருக்கு நேர் மோதல் கொலை" சூழ்நிலை பற்றி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.

ஐந்து மாதங்களுக்கு பாண்டே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜூன் மாதம்தான் அவர் இந்திய அரசாங்கத்தின் குற்றவியல் விசாரணை அமைப்பை (CBI) சேர்ந்த கீதா ஜோரியை இவ்விஷயத்தை பற்றி ஆய்வு நடத்துமாறு உத்தரவிட்டார்.

ஜோரியும் அவர் திரட்டியிருந்த விசாரணைக்குழுவும் போலீசின் தவறு பற்றிய சான்றுகளை கண்டறிந்து, அதைப்பற்றிய இடைக்கால அறிக்கைகள் பலவற்றைக் கொடுத்தனர். விசாரணை தொடர்ந்திருந்தபோது, நவம்பர் 23, 2005ல் பஸ்ஸில் கொலைசெய்யப்பட்ட தம்பதிகளை பிடித்த போது போலீசார் பிடித்திருந்த மூன்றாம் நபரான துளசிராம் பிரஜாபத்தை பேட்டி காண முடிவு எடுத்தார். துளசிராமை இவர் விசாரிக்க இருந்ததாக இருந்த டிசம்பர் 2006ல் குஜராத் போலீசார் அவர் மற்றொரு "நேருக்குநேர் நடந்த மோதலில்" கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.

இதற்கிடையில் வழக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் என்ற பெரும் அழுத்தத்தை ஜோரி (சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட DIG வனாரா மற்றும் குஜராத்தின் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் உட்பட) எதிர்கொண்டார். பின்னர் அவர் விசாரணையில் இருந்து அகற்றப்பட்டு அனைத்து கோப்புக்களையும் "பரிசீலனைக்கு" கொடுக்கமாறு உத்தரவு இடப்பட்டார்.

CID விசாரணையில் அமித் ஷா திமிர்த்தனமாக தலையிட்டது மிக உயர்மட்ட BJP அதிகாரிகள் இவ்விஷயத்தில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற கருத்திற்கு இடமளிக்கிறது. முதல் மந்திரி மோடிக்கு மிகவும் அபிமானியாக வன்ஜாரா இருந்ததாக கூறப்படுகிறது.

குஜராத்தின் பயங்கரவாவாத பிரிவின் தலைவர் என்னும் முறையில் வன்ஜாரா "நேருக்குநேர் மோதல் வல்லுனர்" என்று இழிபெயர் பெற்றுள்ளார்; துரதிருஷ்டவசமான சோராபுதினை போல போலீசார் பல முஸ்லிம்களை பயங்கரவாதிகள் எனக்கூறிக் கொன்றுள்ளனர்.

வன்ஜாரா தன்னுடைய வழிவகைகளை எவரேனும் வினாவிற்கு உட்படுத்த முயன்றால் அவர்களை வெளிப்படையாகவே மிரட்டி அச்சுறுத்த முயன்றார். கிட்டத்தட்ட 150 வழக்குரைஞர்கள் அகமதாபாத் வழக்குரைஞர் சங்கத்தின் துணைத் தலைவருக்கு அவர்களில் எவரும் வன்ஜாராவிற்கு வாதாடத் தயாரில்லை என்றும் அதற்கு காரணம் அவர் "கடந்த காலத்தில் வக்கீல்களுக்கு தொந்திரவு கொடுத்துள்ளார்" என்றெழுதியதில் இருந்து இது தெரிய வருகிறது.

முந்தைய BJP கூட்டணி அரசாங்கத்தின்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரகத்தில் மிக உயர்மட்ட ஊழலை அம்பலப்படுத்தியதால் முக்கியத்துவம் பெற்ற Tahelka.com என்னும் செய்தி இணையம் ஒன்று சோராபுதின் ஷேக் கொலை ஓர் ஒப்பந்தக் கொலை என்று கூறியுள்ளது. Tahelka.com ராஜஸ்தானில் உள்ள செல்வாக்கு நிறைந்த பளிங்குக் கல் வணிகர் ஒருவர் குஜராத் போலீசுக்கு 6,000,000 ரூபாய் (கிட்டத்தட்ட $140,000) சோராபுதினை கொல்ல கொடுத்துள்ளதாக தெரிவிக்கிறது; சோராபுதின் அந்த வணிகர் இன்னும் பல பளிங்கு வணிகர்களிடம் இருந்து பணம் பறித்து வந்ததால் இந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது. இந்தப் பணமும் போலீசுக்கு கொடுக்கப்பட்டது; கொலையை பளிங்கு வணிகரின் சொந்தக்காரர் மற்றும் மூத்த BJP அரசியல் வாதி (பெயர் வெளியிடப்படவில்லை) யின் சொந்தக்காரர் ஒருவர் செய்து முடித்தார்.

இந்தியாவின் போலீஸ் மற்றும் அரசியல் அமைப்புமுறை இரண்டும் இழிவான முறையில் ஊழல் மலிந்தவை. கடந்த மாதம்தான் நாட்டின் பாராளுமன்றத்தின் குஜராத்தை சேர்ந்த BJP உறுப்பினர் ஒருவர் தூதரக கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி, பணத்திற்காக சிலரை கனடாவிற்கு கடத்த முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

சோராபுதின் ஷேக்கின் கொலை ஒரு மாஃபியா பாணியிலான தாக்குதல், BJP அரசியல் வாதிகளில் ஒருவரோ பலரோ நிதிய அளவில் இலாபம் பெற்றனர் என்றாலும், இந்தக் கொலையை BJP அரசாங்கம் மூடிமறைக்க மேற்கொண்ட முயற்சிகள் போலீசிலும் அரசாங்கத்திலும் ஊழல் இருப்பது அம்பலமாகும் என்ற அச்சத்தினால் தூண்டுதல் பெற்றிருக்கக் கூடும். மாநிலத்தின் முஸ்லிம் சிறுபான்மையை பாதிப்புக்குள்ளாக்கியதில் போலீசும் BJP யும் பங்காளிகள்தான்.

இக்கொலைகள் பற்றி CBI விசாரணை நடத்த தொடக்க ஆதாரம் உள்ளது என்று மே 5ம்தேதி இந்தியாவின் உச்ச நீதிமன்றம் கூறியது. இறுதி அறிக்கை இருவாரங்களுக்குள் கொடுக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் குஜராத் அரசாங்கத்திற்கு உத்தரவு இட்டது; IGP கீதா ஜோரி "இவ்விசாரணையில் இருந்து ஏன் அகற்றப்பட்டார்" என்பது பற்றி விளக்கம் கொடுக்கமாறும் அது கேட்டது. மே 15 அன்று CBI விசாரணை வேண்டுமா என்பது பற்றி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அது கூறியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு சில மணி நேரங்களுக்குள்ளாகவே குஜராத் அரசாங்கம் கீதா ஜோரியை கொலைகள் பற்றிய விசாரைணக்கு மீண்டும் தலைமை தாங்குமாறு செய்தது.

காங்கிரஸ் கட்சியின் குஜராத் பிரிவு நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா இருவரும் சோராபுதின் ஷேக் மற்றும் கெளசர்பீ கொலைகளில் கொண்ட பங்கு பற்றி CBI விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளது. "முதல் மந்திரி, உள்துறை மந்திரியின் அனுமதி இல்லாமல் எந்த என்கெளண்டரையும் நடத்தமுடியது" என்று குஜராத் சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள மோத்வடியா முழக்கமிட்டார்.

மாநிலத்தில் தேர்தல்கள் இந்த இலையுதிர்காலத்தில் வரவிருக்கையில் இந்த ஊழலில் இருந்து சில அரசியல் ஆதாயங்களை பெறலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. குஜராத்தில் இருக்கும் காங்கிரசும், இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கமும் குஜராத்தில் இருக்கும் BJP ஆட்சிக்கு மறைமுகமாய் ஆதரவு கொடுத்த மற்றும் நிபந்தனையற்ற சரணாகதியை செய்த நீண்ட சான்றுகள் உள்ளன. இந்த அரக்கத்தனமான படுகொலைகளில் பங்கு கொண்டதற்கு குஜராத் அரசாங்கத்தை அகற்றுவது ஒரு புறம் இருக்க, அரசியல் ஆதாயத்திற்காக UPA "ஜனாதிபதி ஆட்சி" விதியை மற்ற மாநிலங்களில் பயன்படுத்த தயாராக இருக்கையில், 2002 குஜராத் படுகொலைகள் பற்றி தீவிர விசாரணைக்கு உத்தரவிடவில்லை.

போலி "நேருக்குநேர் நடந்த மோதலில் கொலைகள்" இந்தியாவில் புதிய செயல்கள் அல்ல. மனித உரிமைகள் குழுக்கள் நீண்ட காலமாகவே போலீஸ் மற்றும் இந்திய பாதுகாப்புப் பிரிவுகள் விசாரணையின்றி கொலை செய்கின்றன எனக் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியா நெடுகிலும் குறிப்பாக காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இத்தகைய நேருக்குநேர் நடந்த மோதல்கள் என்ற பெயரில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்புமுறை மற்றும் நீதித்துறை முழுவதும் இந்த நடவடிக்கைக்கு உடந்தையாக உள்ளன. பெருநிறுவன செய்தி ஊடகங்களை பொறுத்தவரையில், அவை எப்பொழுதுமே பயங்கரவாதிகள், எழுச்சியாளர்களை வீழ்த்தியதற்கான போலீஸ் நடவடிக்கைகளை தவிர்க்க முடியாமல் பெரும் ஆதரவு கொடுத்து, இந்திய உயிர்களை இந்நடவடிக்கைகள் மூலம் அவர்கள் காப்பாற்றுவதாகவும் கூறுகின்றன.

ஆனால் காஷ்மீர் மற்றும் குஜராத்தில் நிகழ்ந்த போலி நேருக்குநேர் மோதல்கள் அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்திய செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் மாறுபாட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளன, தயக்கத்துடன் என்றாலும், வினாக்களை எழுப்புகின்றன. Hindustan Times பல தொடர் கட்டுரைகளை நீதிக்குப் புறம்பான கொலைகள் இந்தியாவில் நடப்பது பற்றி வெளியிடத் தொடங்கியுள்ளது; சில செய்தி ஊடக குரல்கள் ஆர்ஜென்டினா மற்றும் சிலியில் 1970 களில் மற்றும் 1980 களில் அந்நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகள் சரிவைத் தொடர்ந்ந நிகழ்வுகள் பற்றி "உண்மையறியும் குழுக்கள்" அமைக்கப்பட்டது போல் இங்கும் அமைக்கப்பட வேண்டும் என்று கோருகின்றன.

போலீஸ், மற்றும் பாதுகாப்புப்படை பிரிவின் ஊழல் மற்றும் சட்டமின்மை, இந்து வலதுசாரியின் வகுப்புவாத வன்முறை ஆகியவை இந்திய நாட்டின் கூற்றான இந்தியா உலகின் மிக அதிக மக்கட்தொகை நிறைந்த ஜனநாயகம் என்பதை -- நாட்டின் உழைக்கும் மக்கள் இழிந்த வறுமையில் வாடுவது ஒரு புறம் இருந்தாலும் -- சீர்குலைக்கும் வகையில் உள்ளன என்று ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் தெளிவாக கவலை கொண்டுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved