World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : சீனாChinese government imposes nationwide military training for students சீன அரசாங்கம் நாடுதழுவிய அளவில் இராணுவப் பயிற்சியை மாணவர்கள் மீது சுமத்துகிறது By John Chan சீனாவின் கல்வி அமைச்சகம், இராணுவத் தலைமையகம் மற்றும் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) பொது அரசியற்துறை ஆகியவை கூட்டாக ஏப்ரல் 21 அன்று வெளியிட்டுள்ள, மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சி முறை ஒழுங்கு நாட்டின் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முழுவதும் இராணுவப் பயிற்சியை முறைப்படுத்த இருக்கிறது. ஏட்டளவில், சீனா ஏற்கனவே 18 முதல் 22 வரை இருக்கும் அனைத்து குடிமக்களும் 24 மாதங்கள் இராணுவப் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாய இராணுவ சேவை முறையைக் கொண்டுள்ளது. ஆனால் நடைமுறையில், PLA க்கு தேவையான தொண்டர்களை வறிய கிராமப்புறத்தில் இருந்து வெளியேறத் துடிக்கும் விவசாய இளைஞர்களிடமிருந்து எப்பொழுதும் சேர்க்க முடிந்ததால் பெய்ஜிங் இதை ஒருபொழுதும் கட்டாய இராணுவச் சேவைக்கு பயன்படுத்தியதில்லை. மூன்றாம் படிநிலை உயர்கல்வியை நாட முற்படும் இளைஞர்கள் இராணுவப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். பெருகிய முறையில், சீனத் தலைமை PLA ஐ ஒரு சிறிய, ஆனால் மிக உயர்ந்த தொழில்நுட்ப படையாக மாற்ற விரும்புகிறது. ஆயினும், மாணவர் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் கூடுதலாக கல்வி அறிவுடைய வீரர்களை ஈர்ப்பதை முக்கியமாகக் கொண்டிருக்கவில்லை. கடந்த ஆண்டு PLA 10,000 பல்கலைக் கழக மாணவர்களைத்தான் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்து எடுத்தது. முக்கியமான நோக்கம் இராணுவ ரீதியானதைக் காட்டிலும் அரசியல் ரீதியானதாக உள்ளது; இது பெய்ஜிங் அதிகாரத்துவம் புதிய தலைமுறை சீன இளைஞர்களிடையே கிளர்ச்சிக்கான உள்ளார்ந்த ஆற்றல் பற்றிக் கவலை கொண்டுள்ளதைத்தான் பிரதிபலிக்கிறது. இராணுவ பயிற்சியின் முக்கியத்துவம் வாய்ந்த கூறுபாடு கருத்தியல் போக்கு ஆகும். "மாணவர்கள் அடிப்படை இராணுவத் திறன்கள், கோட்பாடுகளை கற்று, பாதுகாப்பு பற்றிய அறிவை பெருக்கிக் கொண்டு, தேசிய பாதுகாப்பு பற்றிய முழு உணர்வையும் பெருக்கி கொள்ளவேண்டும்" என்பது கூறப்பட்டுள்ள நோக்கமாகும். இத்திட்டம் மாணவர்கள் "ஒழுங்கு அமைப்பு" மற்றும் "கட்டுப்பாடு", இவற்றிற்கு பணிதலை வலுப்படுத்துவதுடன், "நாட்டுப் பற்று", "கூட்டு வாழ்வு", "புரட்சிகர வீரவழிபாடு" என்ற மதிப்புக்களையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். புதிய கொள்கை பாதுகாப்பு பாடங்களின் விரிவாக்கம் மற்றும் இராணுவ படையினரின் திறமை ஆகியவை மூன்றாம் படிநிலை உயர்கல்வி வளாகங்களிலும் இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது. ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் குறைந்தது ஒரு இயக்குனர் இராணுவப் பயிற்சிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட வேண்டும். பள்ளி இராணுவப் பயிற்சியை இயக்குவதற்கு கல்வித் துறைகள் PLA உடன் சேர்ந்து கூட்டு அலுவலகங்கள் முறையை நிறுவும். புதிய இராணுவப் பயிற்சி அனைத்து உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயமாக இருக்கும்; இதில் அவர்கள் காட்டும் திறன் அவர்களுடைய கல்வி நிலைச்சான்றுகளில் ஒரு பகுதியாக இருக்கும். இக்கட்டுப்பாட்டு முறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாணவர் இராணுவப் பயிற்சிக்காக ஒரு தேசியப் பிரச்சாரம் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் 3ல் இருந்து 5 ஆண்டுகளுக்குள் ஒரு பெரிய பயிற்சி கருத்தரங்குகளை நடத்த வேண்டும். சீனாவில், கல்வியின் ஏனைய கூறுபாடுகள் அனைத்தும், சந்தை கோட்பாடான "பயன்படுத்துவோர் பணம் கொடுக்க வேண்டும்" என்பதில் உள்ளது. ஆனால் மாணவர் இராணுவ பயிற்சிக்கான நிதியம் அரசாங்கம் மற்றும் PLA னால் கொடுக்கப்படும்; இது மிக உயர்ந்த முன்னுரிமை இதற்காக கொடுக்கப்பட்டுள்ளதற்கு அடையாளம் ஆகும். மாணவர்களிடம் இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுவது கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அரச செய்தி ஊடகம், புதிய கொள்கை இளைஞர்களை "எஃகு" போல் ஆக்கக்கூடிய நேரிய முறை என்று கூறுகின்றன; இளைஞர்கள் பெரும்பாலும் நகர்ப்புறத்தில் பெற்றோர்களின் ஒரே குழந்தை என்பதால் அதிகம் பிடிவாதமாக இருப்பர் என்ற கருத்து உள்ளது. உண்மையில், ஸ்ராலினிச தலைமை அச்சப்படும் ஒரு-குழந்தை கொள்கை என்பதின் பாதிப்பு அல்ல; மாறாக கடந்த 30 ஆண்டுகளில் வெளிப்படையாக முதலாளித்துவ சந்தை சீர்திருத்தத்தை தழுவியிருப்பதால் ஏற்பட்டுள்ள பரந்த சமூக மாற்றங்கள் ஆகும். மாவோ சேதுங்கின் கீழ், சீன அதிகாரத்துவம் செய்தி ஊடகம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் ஒவ்வொரு கூறுபாட்டையும் மற்றும் அலுத்துப்போகும் சீருடைய போன்ற உடைகள் அணிவது வரை எல்லாவற்றின் மீதும் முழுக் கட்டுப்பாட்டை கொண்டிருந்தது. மாவோ வழிபாட்டுடன் நாட்டுப் பற்றுப் பிரச்சாரமும் சோசலிஸ்ட் என்று கூறுறிக்கொள்ளும் போலிக் கூற்றுக்களும் எதிர்ப்பை மூழ்கடிக்க பயன்படுத்தவும் "வெளிச் செல்வாக்குகளை" நெரிப்பதற்கும் பயன்பட்டன. மேலும் மக்கள் அனைவருமே வேலையில் இருந்து சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் கல்விவரை அரசு அதிகாரத்துவத்தைத்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. வெளிநாட்டு முதலீடு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு சீனாவை கதவு திறந்திவிட்ட பின்னர், பெய்ஜிங் தான் நேரடியாக கட்டுப்படுத்த முடியாத பொருளாதார சமூக சக்திகளை கட்டவிழ்த்துள்ளது. இளைஞர்கள் உத்தியோகபூர்வ செய்தி ஊடகத்தை நம்பாமல் இணையத்தை கொண்டு மிகப் பரந்த அளவிலான கருத்துக்கள், பண்பாட்டு போக்குகள் ஆகியவற்றை பெறுகின்றனர். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் பதிவுசெய்துள்ள இணையம் உபயோகிப்போர் கடந்த ஆண்டு 23.4 சதவிகிதம் உயர்ந்து 137 மில்லியானயிற்று; இது அமெரிக்காவிற்கு அடுத்தாற் போல் உலகின் இரண்டாம் பெரிய எண்ணிக்கை ஆகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் 18ல் இருந்து 24 வயதுக்கு இடையில் உள்ளனர். அதே நேரத்தில், சந்தைச் சீர்திருத்தங்கள் ஆழ்ந்த சமூகப் பிளவு மற்றும் பெரும் உறுதியற்ற நிலையை தோற்றுவித்துள்ளன. பள்ளி, கல்லூரிப் படிப்பு முடித்துள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை; மிகப் பெரிய எண்ணிக்கையில் அவர்கள் வேலையின்மையில் உள்ளனர். பல மில்லியன் கணக்கான இளந்தொழிலாளிகள் இடம் பெயர்ந்து வேலை தேடும் நிலையில் உள்ளனர். சற்று பணம் உடையவர்கள் மொபைல் தொலைபேசி வாங்குகின்றனர், பல ஆடைகள், ஆபரணங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அது போன்ற பொருட்களை வாங்குகின்றனர். அதிருப்தியும் விரோதப்போக்கும் இளைஞர்களில் வெவ்வேறு அடுக்குகளில் ஆற்றொணா நிலையுடன் கூடிய மாறுபட்ட பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அத்தகைய போக்குகள் அடிக்கடி ஆட்சிக்கு ஒரு அதிர்ச்சியாய் வருகின்றன. உதாரணமாக, 2005ல் மாவோவின் சொந்த ஹுனான் மாநிலத்தில் ஒரு தொலைக்காட்சி நிலையம் "Super Girls" போட்டி ஒன்றை அமைத்தது -- "American Idol" என்பதை பிரதிசெய்திருந்த நிகழ்ச்சி; இது சீனா முழுவதிலும் இருந்து 400 மில்லியன் பார்வையாளர்கள் ஒரே இரவில் ஈர்த்தது. பெரும்பாலும் இளைஞர்களான கிட்டத்தட்ட எட்டு மில்லியன் பார்வையாளர்கள் தாங்கள் விரும்பிய நபருக்கு "வாக்கு" அளித்து செய்தி அனுப்பியிருந்தனர். 20 வயதின் ஆரம்பத்தில் இருந்த, இறுதிக்கு வந்த மூன்று பேர், திடீரென்று தேசம் முழுவதும் புகழ்பெற்றவர்கள் ஆயினர். ஒரு டாம்பாய் தோற்றத்தை பகட்டாக காட்டிய சிச்சுவான் பகுதியைச் சேர்ந்த Li Yuchun இறுதியில் வெற்றி பெற்றார். மத்திய அரசாங்கம் நடத்திவரும் CCTV இந்த நிகழ்ச்சியை "மட்டமானது, திரிக்கப்பட்டது" என்று கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டதுடன் நிகழ்ச்சியை மூடப்படக்கூடும் என்றும் அச்சுறுத்தியது. நடைமுறையை-எதிர்க்கும் எந்த இயக்கத்தை கண்டும் சீனத் தலைமை அச்சப்படுகிறது; அது முற்றிலும் அரசியல் இல்லாவிடினும் ஓர் ஆபத்தாகக் கூடும் என்று நினைக்கிறது. பெய்ஜிங் வெளிநாட்டு மொழிக் கூடத்தில் ஒரு மாணவரான Wei Feng, Seattle Times இடம் கூறினார்: "எதை விரும்பினாலும் பாடலாம் என்று இருப்பது, மாநிலங்களில் இதுவரை இளம் பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு முன்னர் இருந்ததே இல்லை." போட்டியில் 120,000 பெண்கள் பங்கேற்றனர். அரசாங்கம் இளைஞர்களிடையே இருக்கும் விரோதப்போக்கை பிற்போக்குத்தனமான தேசியவாதம், தேசப் பற்று என்று திசை திருப்ப முயன்றுள்ளது. 2005ல் ஜப்பானுக்கு ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பான்மை கொடுப்பது மற்றும் ஜப்பானின் போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் வரலாற்று நூல்களை டோக்கியோ ஆதரிப்பது தொடர்பாக Fenquing அல்லது "சீற்றமுற்ற இளைஞர்களால்" நடத்தப்பட்ட ஜப்பானிய-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு வேண்டுமென்றே ஊக்கம் கொடுத்தது. முக்கியமாக மத்தியதரவர்க்க இளைஞர்கள் இனவெறி கோஷங்களை எழுப்பி, ஜப்பானிய வணிகங்களை தாக்கியதுடன் ஜப்பானில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளையும் தாக்கினர். இறுதியில் சேதங்கள் கட்டுக்கடங்காமல் போகக் கூடும் என்ற நிலை வந்தபோது பெய்ஜிங் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் நிறுத்திக் கொண்டுவிட்டது. சமூக சமத்துவமின்மை மற்றும் அரச அடக்குமுறைக்கு எதிராக சமூக முன்னேற்ற சிந்தனைகள் நிறைந்த இயக்கத்தை கண்டு பெய்ஜிங் மிகப் பெரிய அளவில் அச்சம் கொண்டுள்ளது. ஏற்கனவே கல்விச்செலவினங்கள் உயர்ந்து, வேலையின்மை பள்ளிப்படிப்பு முடித்தவர்களிடையே பெருகியுள்ள நிலையில் எதிர்ப்பு, கலக அலைகளுக்கு அவை வழிவகுத்துள்ளன. 1990 களின் "சந்தைச் சீர்திருத்தம்" பல்கலைக்கழக பட்டதாரிகள் அரசாங்க உடைமை நிறுவனங்களில் நீண்ட காலமாக பெற்றிருந்த வேலை உத்தரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஏனைய நாடுகளில் உள்ள மாணவர்களை போலவே சீன மாணவர்களும் இப்பொழுது சலுகை பெற்ற உயரடுக்கின் பகுதியாக இல்லை; முதலாளிகளுக்கு குறைவூதிய பயிற்சி பெற்ற தொழிலாளர் தொகுப்பாகத்தான் உள்ளனர். 2006ல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிப் பட்டதாரிகள் 4.13 மில்லியன் பேரில், மூன்றில் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஏப்ரல் 25 அன்று பல்கலைக்கழக மாணவர்களை பற்றி நடந்த அரசாங்க குழுக் கூட்டம் ஒன்றில், மூத்த அரசாங்க அதிகாரிகள் மாணவர் வேலையின்மை மேலும் கடுமையாக 2007ல் போகக் கூடும் என்று ஒப்புக் கொண்டனர். சீனாவின் மூன்றாம் படிநிலை உயர்கல்வி பட்டதாரிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 4.95 மில்லியனாகும், 2006ல் இருந்து 820,000 உயரும். பல்கலைக்கழக மாணவர்களை எதிர்கொண்டுள்ள இடர்பாடுகள் ஆட்சியின் சந்தைச் சார்புடைய கல்விச்சீர்திருத்தங்களின் நேரடி விளைவு ஆகும். கடந்த தசாப்தத்தில் பல்கலைக் கழக கட்டணங்கள் மிகப் பெரிய அளவில் ஆண்டு ஒன்றுக்கு 5,000 ல் இருந்து 8,000 யுவானாக உயர்ந்தன ($ US 640-$US1,000). சராசரி ஆண்டு நபர் வருமானம் $2,000க்கும் குறைவு என்றுள்ள ஒரு நாட்டில், உழைக்கும் குடும்பங்களின் கல்விக்கான நிதிச் சுமை மிக அதிக அளவாக உள்ளது. இச் சமூக அழுத்தங்களின் மாபெரும் வெடித்தெழும் தன்மையைப் பற்றி பெய்ஜிங் முற்றிலும் அறிந்துள்ளது. சீனத் தலைவர்கள் மாணவர்களிடையே அரசியல் இயக்கம் என்பது வரலாற்றளவில் தொழிலாளர்களிடையே பரந்த அளவிலான தீவிரப்போக்கை குறிக்கிறது என்பதை அறிவர். சீன கம்யூனிஸ்ட் கட்சியே 1919 மே 4ம் தேதி ஏற்பட்ட மாணவர்கள், அறிவுஜீவிகள் இயக்கத்தில் இருந்து, ரஷ்ய புரட்சியின் பதில்விளைவாக, வெளிவந்ததுதான். 1920 களின் கடைசிப் பகுதியில் சர்வதேச சோசலிச கோட்பாடுகளை CCP கைவிட்டது; ஆனால் அது இன்னும் மே 4ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் இளைஞர் தினம் என்று கொண்டாடுகிறது. ஆனால் மே 4 இயக்கத்தின் உண்மையான பொருளை மூடிமறைக்கும் சடங்காகத்தான் உள்ளது. 1919ன் எழுச்சி பெற்ற "புதிய இளைஞர் படை" சீனாவிலும் உலகிலும் வரலாற்றின் போக்கை மாற்ற உறுதி கொண்டிருந்தவர்கள் என்ற நிலையை, இப்பொழுது பெரும் கட்டுப்பாடு உடைய, சுய சிந்தனையற்ற, நாட்டுப் பற்று மிகுந்த இளைஞர்கள், அதிகாரிகளுக்கு முற்றிலும் பணிந்து நடக்கும் இளைஞர்களால் பதிலீடு செய்யப்படுகின்றனர். 1989ம் ஆண்டு சீனத் தலைமை PLA க்கு அதிகம் ஆயுதங்களை ஏந்திய படைகள் மற்றும் டாங்குகளை தியானென்மென் சதுக்கத்தில் ஜனநாயக உரிமைகள் மற்றும் கெளரவமான வாழ்க்கைத் தரவேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவித்த தொழிலாளர்கள் மாணவர்களை மிருகத்தனமாக நசுக்குவதற்கு அனுப்பிவைத்தது. நாடுமுழுவதும் மாணவர் இராணுவப் பயிற்சி என்பதை செயல்படுத்த வேண்டும் என்னும் அதன் திட்டம் இளைஞர்கள் மீண்டும் தவிர்க்கமுடியமால் செய்யக்கூடிய எழுச்சியை திசை திருப்ப வேண்டும் என்ற ஆற்றொணா முயற்சிதான். |