World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE air raid on Sri Lankan capital

இலங்கை தலைநகர் மீது புலிகள் விமானத் தாக்குதல்

By Sarath Kumara
4 May 2007

Back to screen version

இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள எரிபொருள் சேகரிப்பு நிலையங்கள் மீது கடந்த ஞாயிரன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல், அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் பீதிகொண்ட பிரதிபலிப்பை தூண்டிவிட்டுள்ளது. இருட்டுக்குள் பறந்த இரு இலகு விமானங்கள், கொலன்னாவையில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தின் மீது இரண்டு குண்டுகளையும் மற்றும் முத்துராஜவெலவில் உள்ள ஷெல் எரிவாயு நிலையத்தின் மீது இரு குண்டுகளையும் வீசிச் சென்றுள்ளன.

இந்த நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் சிறியதாக இருந்த போதிலும், இராணுவம் நகரின் மின் விநியோகத்தையும் மற்றும் சர்வதேச விமான நிலையத்தையும் மூடுவதன் மூலம் இதற்கு பிரதிபலித்தது. இலங்கை அணி விளையாடிய உலகக் கிண்ணப் போட்டிகளை ரசிப்பதற்காக பல கிரிகெட் ரசிகர்கள் ஞாயிறு விடியற்காலை வரை விழித்திருந்தனர். கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள மைதானங்களில் குழுமியிருந்த சுமார் 5,000 பேர், நகரம் இருட்டுக்குள் மூழ்கியதையும் இராணுவம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் சிறிய ஆயுதங்களினால் சுட்டுத்தள்ளியதையும் உணர்ந்தனர்.

விமானங்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதிகளவிலான துப்பாக்கிப் பிரயோகங்கள் கண்மூடித்தனமானதாக இருந்தன. வெடித்துச் சிதறிய துப்பாக்கி குண்டுகள் விழுந்ததில் களுபோவலையில் மூன்று வீடுகளும் கொலன்னாவையில் ஐந்து வீடுகளும் சேதமாயின. எரிபொருள் நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வெள்ளவத்தையில் எட்டுப் பேர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கொலன்னாவை மற்றும் மிரிஹான பகுதிகளில் பலரும் காயமடைந்திருந்தனர். தற்காப்பு துப்பாக்கிப் பிரயோகத்தின் போது ஒருவருக்கொருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் கொழும்பு களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் மூன்று படையினரும் இரு பாதுகாப்பு ஊழியர்களும் காயமடைந்தனர்.

விமானப்படை பேச்சாளர் குழுத் தலைவர் அஜந்த சில்வா இதற்கு மன்னிப்புக் கோரவில்லை. எதிர்காலத்திலும் அதே தாறுமாறான "விமான பாதுகாப்பு முறை" பயன்படுத்தப்படும் என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். புலிகள் இப்போது மூன்று விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மார்ச் 26 முதலாவதாக நடந்த தாக்குதலில் கொழும்புக்கு வடக்கில் கட்டுநாயக்க இராணுவ விமானத் தளத்தில் மூன்று விமானப்படையினர்கள் கொல்லப்பட்டனர். ஏப்பிரல் 26 நடந்த தாக்குதலில் பலாலிக்கு அருகில் பிரதான இராணுவத் தளத்திற்கு அருகில் இருந்த இராணுவ தங்குமிடத்தில் ஆறு சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.

வடக்கில் புலிகளின் கோட்டையான கிளிநொச்சிக்கு அருகிலுள்ள விஸ்வமடுவில், இச் சம்பவத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் விமானப்படை நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த புதிய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருந்தார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது யுத்தநிறுத்தம் ஒன்றைக் கடைபிடிப்பதாக புலிகள் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி, கடந்த ஜூலையில் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பச்சைக் கொடி காட்டியதில் இருந்து, புலிகள் தீவின் கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியங்களில் பெரும்பாலானவற்றை இழந்தனர். வடக்கிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றுவதாக பிரகடனம் செய்த இராணுவம் தாக்குதல்களை முன்னெடுக்கத் தொடங்கியது.

புலிகள் மிக அண்மையில் தொடுத்த விமானத் தாக்குதலுக்குப் பிரதிபலிப்பாக, பாதுகாப்புப் படைகள் கொழும்பிலும் மற்றும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் பெரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. தாக்குதலுக்கு முன்னதாகக் கூட, சனிக்கிழமை இராணுவச் சிப்பாய்கள் 5,000 வாகனங்களையும் 15,000 பொதுமக்களையும் சோதனையிட்டிருந்ததோடு 16 பேரைக் கைது செய்திருந்தனர். ஏறத்தாழ நகருக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு வாகனமும் இப்போது சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.

வர்த்தகப் பகுதியினர், குறிப்பாக கடந்த ஆண்டு 410 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்ற உல்லாசப் பிரயாணத்துறை, புலிகளின் விமானத் தாக்குதலின் தாக்கத்தையிட்டு கவலை வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு உல்லாசப் பிரயாணிகளின் வருகை 36 வீதத்தால் குறைந்துள்ளதோடு மேலும் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இலங்கைக்கு பயணிக்கும் கத்தே பசுபிக் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய இரு பிரதான விமான சேவைகள் தற்காலிகமாக தமது விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

புலிகளின் விமானத் தாக்குதல்களை எதிர்க்க புதிய இராணுவத் தளபாடங்களை கொள்வனவு செய்யும் அழுத்தத்திற்கு அரசாங்கம் உள்ளாகியுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பக்க எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் கடந்த வாரக் கடைசியில் தெரிவித்ததாவது: "புலிகளின் விமானங்கள் பண்டைய காலத்திற்குரியதாக இருந்தாலும், அரசாங்கம் அதன் சொந்த விமானத்தளத்தை பாதுகாக்க உதவியின்றி உள்ளதையே புலிகளின் நான்கு தாக்குதல்கள் ஊடாக தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, பாதுகாப்புப் படைகள் மிகவும் முன்னேறிய முறைகளைப் பெற முயற்சித்துக்கொண்டிருப்பதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். தமது ஆய்வாளர்களிடம் மேற்கோள் காட்டிய பாதுகாப்பு அமைச்சின் இணையம், "புதிய அச்சுறுத்தலை விளைபயனுள்ள முறையில் சந்திக்கவும் மற்றும் "தேசிய ஆகாய பாதுகாப்பு அமைப்பில் உள்ள கோளறுகளில் இருந்து மீளவும் இராணுவத்திடமிருந்து முன்செயற்பாட்டு நடவடிக்கைகள் தேவை" என மேற்கோள் காட்டியிருந்தது.

இராஜபக்ஷ அரசாங்கம், அதன் துரிதமடைந்துவரும் யுத்தத்திற்கு வழங்க பாதுகாப்புச் செலவீனங்களில் ஏற்கனவே பிரமாண்டமான அதிகரிப்பைச் செய்துள்ளது. இந்த ஆண்டு அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 139 பில்லியன் ரூபாய்கள் அல்லது 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 28 வீத அதிகரிப்பாகும். முன்நாள் விமானப்படை தளபதி ஹரி குணதிலக ஹிந்துஸ்தான் டைம்சுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்த ஆண்டு செலவு விரைவில் 1.8 பில்லியன் டொலர்களை எட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் இந்த சுமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படும். கடந்த ஆண்டு பணவீக்க வீதம் 17 வீதமாகும். இது விவசாயத்துறை தொழிலாளர்களின் உண்மையான சம்பளம் 10 வீதத்தாலும் மற்றும் சேவைத் துறையினரின் ஊதியம் 12 வீதத்தாலும் வீழ்ச்சியடைய வழிசெய்தது.

இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் நடைபெற்றுக்கொண்ருக்கின்றன. ஞாயிறன்று பாதுகாப்புப் படையினரால் ஊர்காவற்துறை தீவின் வேலனையில் ஐந்து புலிகளும் ஒரு இந்து பூசகரும் கொல்லப்பட்டனர். புதன் கிழமையன்று, வடக்கில் வன்னிப் பிரதேசத்தின் புலிகளின் முன்நிலைகளில் 13 புலிகளைக் கொன்றதாக இராணுவம் அறிவித்தது.

புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் இணையத்தின் படி, வியாழக்கிழமை சுமார் 300 படையினர் வடக்கில் மன்னார்-வவுனியா பிரதேசத்தில் புலிகள் மீது தாக்குதல் தொடுத்து, பின்னர் வெளியேறினர். இந்த மோதலில் ஒரு புலி உறுப்பினரும் இரண்டு படையினரும் கொல்லப்பட்டதாக அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. கடந்த சில வாரங்களாக இராணுவம் இந்தப் பிராந்தியத்தில் "சுத்தீகரிப்பு நடவடிக்கைகளில்" ஈடுபட்டு வருவதாக ஐலண்ட் பத்திரிகையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஏற்றுக்கொண்டுள்ளார்.

இராணுவம் தொப்பிகலை மீதும் தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இது கிழக்கில் புலிகளின் கடைசி அரணாகும். பலவித புலி-விரோத துணைப்படைகளுடன் ஒத்துழைக்கவில்லை என அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வந்த போதிலும், தாக்குதல்களில் இராணுவத்திற்கு உதவுவதற்காக கருணா குழுவின் சுமார் 500 உறுப்பினர்கள் பயிற்சி பெறுவதாக இரிதா லக்பிம பத்திரிகை கடந்த ஞாயிறு செய்தி வெளியிட்டிருந்தது.

இராணுவமும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களும் உள்ளூர் மக்களை அச்சுறுத்துகின்றன. கடந்த ஆண்டு பூராவும் நூற்றுக்கணக்கான பொது மக்கள், குறிப்பாக தமிழர்கள் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன் பத்திரிகையின் இளம் பத்திரிகையாளர் செல்வராஜா ரஜிவர்மன், மோட்டார் சைக்கிளில் வந்த "அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளால்" சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே (ஈ.பி.டி.பி.) பொறுப்பு என யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

2005 நவம்பரில் இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, இதுவரை 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 300,000 பேர்கள், பெருமளவில் தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அரசாங்கம் அதன் இராணுவ நடவடிக்கைகளை உக்கிரப்படுத்தவும் மற்றும் அதன் இனவாத யுத்தத்தை எதிர்ப்பவர்கள் மீது பாய்ந்து விழவும், அண்மையில் புலிகள் கொழும்பில் நடத்திய விமானத் தாக்குதலால் உருவாக்கப்பட்ட பீதியை பற்றிக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved