World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

The bitter legacy of Boris Yeltsin (1931-2007)

போரிஸ் யெல்ட்சின் விட்டுச் சென்றுள்ள கசப்பான மரபியம்

By Vladimir Volkov
26 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

சோவியத்திற்கு பிந்தைய ரஷ்யாவின் முதல் ஜனாதிபதியான போரிஸ் யெல்ட்சின் ஏப்ரல் 23ம் தேதி தன்னுடைய 76 வயதில் மாஸ்கோ மருத்துவமனையொன்றில் மாரடைப்பினால் காலமானார். உலகத்தரம் வாய்ந்த அரசியல் குற்றவாளி என்று அவர் வரலாற்றில் கருதப்படுவார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி பொதுச் செயலாளர் மிகெய்ல் கோர்ப்பஷேவ் மற்றும் அப்பொழுதிருந்த முக்கிய சோவியத் அதிகாரத்துவத்தினருடன், யெல்ட்சின் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பேரழிவுகளில் ஒன்றான 1991 சோவியத் ஒன்றியத்தை கலைத்தலில் முக்கிய பங்கை கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வு, நம்பமுடியாத அளவிற்கு ஒரு குற்றம் சார்ந்த ஆளும் சிறுகுழு பெரும் செல்வத்தை அபகரித்த இழிவான காட்சியைக் கண்டமை மற்றும் இரு தசாப்தங்களுக்கும் மேலாக கடுமையான வறுமையில் வாடும், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட, துயருற்ற முன்னாள் சோவியத் மக்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் இருந்த தொழிலாள வர்க்கத்திற்கும் பெரும் இன்னல்களை ஏற்படுத்தியது.

உலகின் அரசியல் வரைபடத்தில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் பெயர் அழிக்கப்பட்டது, உலக ஏகாதிபத்தியத்தின், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் கொள்ளை அடிக்கும் கரங்களையும் கட்டவிழ்த்துவிட்டது. இதையொட்டி இராணுவவாதத்தின் வெடிப்பு, புதிய காலனித்துவ முறையிலான ஆக்கிரமிப்பு, உலகின் சக்திகள் இயற்கை மூலவளங்களுக்காக கடுமையான போராட்டம் நடத்துதல் ஆகியவை எழுச்சி பெற்றுள்ளன. இந்த வழிவகையின் மிக இருண்ட வெளிப்பாடு ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்த படையெடுப்புக்கள், ஆக்கிரமிப்புக்கள் ஆகும்; இந்நாடுகளில் சாதாரண வாழ்வு என்பது புவியிலேயே நரகம் என்பதற்கு ஒப்பாக மாற்றப்பட்டு விட்டது.

பூகோள-அரசியல் வன்முறைப் பெருக்கம் மேற்கு, மத்திய, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியா, ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்கா, உலகின் முதலாளித்துவ மையமான அமெரிக்கா ஆகியவற்றில் இரக்கமின்றி ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுதல் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீது தாக்குதல் ஆகியவற்றுடன் கைகோர்த்து நடந்து வருகிறது. வரலாற்றில் ஒப்புமை இல்லாத அளவிற்கு இந்த சமூக பிற்போக்குத்தனம் உள்ளது. உலகின் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் இடர்பாடுகள் என்ற வகையில் இது அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் சரிவு ஒன்றும் "வரலாற்றின் முடிவு" என்பதை குறிக்கவில்லை; முதலாளித்துவ சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்ட அத்தகைய முன்னோக்கு, அமெரிக்கா இப்பொழுது உலக விவகாரங்களில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறுகிறது. மாறாக, இது ஆபத்து நிறைந்த, வெடிப்புத் தன்மை உடைய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது; இதில் முதலாம் உலக யுத்தத்திற்கு முன்பு நிலவிய பொருளாதார, அரசியல் அழுத்தங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட தன்மைதான் காணப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உலக முதலாளித்துவ முறையின் உள் முரண்பாடுகள், சர்வதேச உறவுகளில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி, பல தசாப்தங்கள் தொடர்ந்திருந்த அதிர்வுகள், எழுச்சிகள் ஆகியவற்றிற்கு வழி வகுத்து மில்லியன் கணக்கான உயிர்களையும் பறித்தன.

சோவியத் ஒன்றியம் உருவாகிய அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சி முதலாளித்துவத்தின் வரலாற்று முட்டுச்சந்துக்கு விடையாக இருந்தது. சமூக முன்னேற்றம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச நலன்கள் ஆகிய முன்னோக்கை கொண்டிருந்த சோவியத் ஒன்றியம், போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் (இதன் இரு முக்கிய தலைவர்கள் லெனினும் ட்ரொட்ஸ்கியும் ஆவர்) உலக அமைப்புமுறை முழுவதையும் சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக ரீதியாக திட்டமிட்ட பொருளாதார அடிப்படையில் புதுப்பிப்பதற்கான உந்துவிசையாக உருவாகியது.

ஆனால் இந்த சர்வதேச, சோசலிச முன்னோக்கு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது; இவ்வதிகாரத்துவம் சோவியத் நாட்டின் பொருளாதார பின்தங்கிய நிலை, அரசியல் தனிமைப்படுத்தல் ஆகியவற்றால் வளர்ச்சியடைந்தது. சர்வதேச புரட்சிப் போக்கை அதிகாரத்துவம் நிராகரித்து, 1920களின் நடுப்பகுதியில், பிற்போக்குத்தனம் நிறைந்த தேசிய சீர்திருத்தவாத "ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற கோட்பாட்டை ஏற்றது. உலக ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைப்பு என்ற கொள்கையையும் ஆரம்பித்து உலகம் முழுவதிலும் புரட்சி இயக்கங்களை அடக்கவும் தொடங்கியது.

அதிகாரத்தின் நெம்புகோல்களை தன்னுடைய கைகளில் குவித்துக் கொண்ட பின்னர், புதிய ஆளும் அதிகாரத்துவ பிரபுத்துவம் ஸ்ராலினின் கீழ் 1930 களின் பிந்தைய பகுதியில் பாரிய பயங்கரத்தை (Great Terror) கட்டவிழ்த்து, சோசலிச அறிவுஜீவிகள் மற்றும் முற்போக்கான தொழிலாளர்களில் ஒரு முழு தலைமுறையையும் அகற்றிவிட்டதுடன் நாட்டின் உயிர்ப்புமிக்க புரட்சிகர மரபியத்தையும் அடக்கியது.

1930களில் இருந்து 1980கள் வரை சோவியத் ஒன்றியம் அக்டோபர் 1917 புரட்சி தோற்றுவித்திருந்த தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகள் பாதுகாக்கப்பட்டிருந்தவகையில் மட்டுமே ஒரு தொழிலாளர் நாடாக இருந்தது. ஏனைய அனைத்துவிதத்திலும் இந்த ஆட்சி ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் ஆட்சியாக இருந்து; முதலாளித்துவத்தின் முன்பு தாழ்ந்து நின்று, சோசலிச உணர்வு, உயர் இலக்குகள் மற்றும் வழிவகைகளுக்கு ஆழ்ந்த விரோதப் போக்கை காட்டியது.

இத்தகைய சமூக பிரிவின் நேரடி விளைவாகத்தான் யெல்ட்சின் இருந்தார். தனது அடிபணிவு, குறுகிய கண்ணோட்டம் மற்றும் விமர்சன ரீதியான சிந்தனை இல்லாத நிலை, பாரிய தற்பெருமை, தீரத்தனம், சாதாரண மக்கள் மீது கொண்டிருந்த இழிவுணர்வு என்ற இவருடைய குணங்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் துல்லியமாக கொள்ளப்பட்டிருந்த குணங்களாகும்; முதலாளித்துவத்தை மீட்பதற்கு தேவையான குணங்களாகவும் அவை இருந்தன.

யூரல்ஸில் புட்கா கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த யெல்ட்சின் தன்னுடைய வாழ்வை ஒப்புமையில் ஏழ்மை என்ற நிலையில் தொடக்கி, குடும்பத்துடன் பெர்மிற்கு இடம் பெயர்ந்தார்; அங்கு அவருடைய தகப்பனால் ஒரு கட்டுமான தொழிலாளராக வேலைக்கு அமர்ந்தார். தன்னுடைய வேலையையும் ஒரு கட்டுமான பொறியாளராக தொடங்கிய யெல்ட்சின் கம்யூனிஸ்ட் கட்சி கருவிக்குள் தன்னுடைய வாழ்க்கைப் போக்கை Sverdlovsk (Yekaterinburg) நகரில் ஊதியம் பெற்ற கட்சி அலுவலரானார். 1976ம் ஆண்டு அளவில் அவர் Sverdlovsk கட்சி அமைப்பின் முதல் செயலாளராக மாறினார்; இந்த பதவியை அவர் பொலிட்பீரோவில் நுழையும் வரை வகித்தார்; அதன் பின் அவர் கோர்ப்பஷேவால் மாஸ்கோவில் இருந்த சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) நகரக் குழுவின் முதல் செயலாளராக நியமனம் பெற்றார்.

30 வயதில் அப்பதவியை பெற்ற நேரத்தில் இருந்து யெல்ட்சின் கட்சியின் ஒரு மூத்த தலைவராகவும் அதிகாரவர்க்க உறுப்பினராகவும், பெரெஸ்ட்ரோய்காவின் உச்சகட்டத்தில் சோவியத் பிரதிநிதிகள் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் வரை இருந்தார்; கட்சியின் நிலைப்பாட்டிற்குள் அடங்கியிருந்தார். சொல்லப்போனால், மற்றவர்களைவிடக் கூடுதலான ஆர்வத்துடன் பிரெஷ்நேவின் புகழ்பாடி, ஸ்வெர்ட்லோவ்ஸ்கில், சார் குடும்பம் கொல்லப்பட்ட Ipat'evskii House ஐ அழிக்கவும் உத்தரவிட்டார்.

ரஷ்ய வரலாற்றாளர் வாடிம் ரோகோவின் ''அங்கு ஏதாவது மாற்றீடு இருந்ததா''? ("Was There an Alternative?") என்ற தலைப்பில் தன்னுடைய ஏழு தொகுப்புக்கள் கொண்ட சோவியத் வரலாற்றில் இத்தலைமுறை பற்றி பல முறை விவரித்துள்ளார்.

1937ல் ஸ்ராலினால் தேர்ந்தெடுத்திருந்த உறுப்பினர்களுக்கு பின் வந்தவர்களில் யெல்ட்சின் ஒருவராவார்; இந்த அதிகாரத்துவ அடுக்கு முற்றிலும் கொள்கைகள் அற்ற நிலையினால் தனித்திருந்தது. ஸ்ராலின் உயர்வு கொடுத்திருந்தவர்கள் "தலைவர் இடும் கட்டளைக்கு கீழ்ப்பணிந்து விசுவாசத்துடன் செயல்பட்டனர்; அவை நியாயப்படுத்தப்பட முடியமா, அவற்றின் அறநெறி இல்லாத தன்மை பற்றி சிறிதும்" அவர்கள் கவலைப்படவில்லை. (Konets Oznachaet Nachalo. Moscow. 2006. pg. 368)

இவர்களை தொடர்ந்திருந்த யெல்ட்சினுடைய, "முற்றிலும் அவநம்பிக்கை நிறைந்திருந்த தலைமுறையை சேர்ந்தவர்கள்", "சிறிதும் சங்கடமின்றி முற்றிலும் ஊழல் மிகுந்து நாட்டின் அறநெறி அடிப்படையை அமைத்திருந்த சிந்தனைகள் பற்றி முழு அசட்டையும் செய்தனர்." (Lecture by Vadim Rogovin. "Istoki i Posledstviia Stalinskogo Bol'shogo Terrora". 1996)

கோர்ப்பஷேவ், யெல்ட்சின் மற்றும் யாகோலெவ் போன்றோர் "திடீரென உட்பார்வை பெற்றனர்", "60 வயது வரை கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தவர்கள், பின் திடீரென்று வெட்கம் கெட்டதனமாக கம்யூனிச-எதிர்ப்பாளர்களாக அவர்கள் மாறினர்" என்ற கருத்தை ரோகோவின் நம்ப மறுத்துவிட்டார். (Lecture by Vadim Rogovin. "Istoki I Posledstviia Stalinskogo Bol'shogo Terrora". 1996).

இவர்கள் தங்களுடைய சலுகை பெற்ற அடுக்கின் விசுவாசமான ஊழியர்களாக இருந்ததால் முதலாளித்துவத்தின் ஆதரவாளர்களாக மாறினர்; இந்த அடுக்கின் மாறுபடும் உணர்வுகள், கருத்துக்கள் ஆகியவற்றை சரியாக புரிந்து கொண்டு அதன் பொருள்சார் நலன்களுக்கு ஆதரவு கொடுத்தனர். சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ முறை மீட்பிற்கான தயாரிப்பு, கோர்ப்பஷேவினால் தலைமை வகிக்கப்பட்டமை ஆகியன அவருடைய தனிப்பட்ட திருத்தும் முயற்சியின் விளைவு அல்ல. சோவியத் அதிகாரத்துவத்தின் முக்கிய அடுக்குகளிடையே இத்தகைய ஒருமித்த உணர்வு இருந்தது; 1980 களில் இது ஏகாதிபத்தியத்துடன் இணைப்பு என்ற திசையில் உறுதியாக திரும்ப, சோவியத் சமூகத்தின் சமூகப் பொருளாதார அடிப்படைகளை அழித்தது.

இந்த அடுக்கிற்குள் வெளிப்பட்ட தீவிர கருத்து வேறுபாடுகள் ஒருபுறம் இருந்தாலும் --அவைதான் ஆகஸ்ட் 1991 மற்றும் 1993 இலையுதிர்காலத்தில் ஆயுதமேந்திய மோதலில் வெடித்தன-- பூசலுக்குரிய பிரச்சினைகள் தந்திரோபாயம் பற்றித்தான் இருந்தன. சோவியத் அதிகாரத்துவத்தின் கொள்ளைமுறை இலக்குகளை அடைவதற்கு மிகத் திறமையான வழிவகைகளுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டனர்.

சோவியத் அதிகாரத்துவம் வளர்த்திருந்த குணங்கள் யெல்ட்சின் சமூக-அரசியல் பிற்போக்கின் பாதுகாவலன் என்று தன்னுடைய பங்கை செய்வதற்கு உதவின; ஜூன் 1990ல் இருந்து டிசம்பர் 1999 இராஜிநாமா செய்யும் வரை இவர் ரஷ்ய ஜனாதிபதி என்னும் பதவியை வகித்திருந்த வரை அப்பொறுப்புக்களை செயல்படுத்தினார்.

வெகுஜனச் செய்தி ஊடகம் அவர் ஒரு "ஜனநாயகவாதி" என்று பெருமைப்படுத்த செய்த முயற்சிகள் அனைத்தும் --ரஷ்யாவிற்கும் முன்நாள் சோவியத் குடியரசுகள் அனைத்திலும் உள்ள மக்களுக்கு சுதந்திரம் கொடுத்தவர் எனக் கூறுதல்-- உலகம் முழுவதும் இரங்கற் குறிப்புக்களில் கூறப்படுவது உண்மையோடு சிறிதும் தொடர்புடையவை அல்ல. சோவியத் ரஷ்யாவிற்கு பிந்தைய வரலாற்றின் எந்த முக்கியமான நிகழ்வை எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொன்றும் அழிப்புத் தன்மை மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எவ்வாறு யெல்ட்சின் மற்றும் அவரைச் சுற்றியிருந்த வட்டத்தில் இருந்தவர்காளல் மேற்கொள்ளப்பட்டது என்று நிரூபணம் செய்யும்; இவர்கள் அனைவருமே சோவியத் தொழிலாள வர்க்கத்தின் மக்கட் திரட்டின் நலன்களுக்கு ஆழ்ந்த விரோதப் போக்கைத்தான் கொண்டிருந்தனர்.

1990 ஜூன் மாதம் சுதந்திர நிலைமைப் பிரகடனம் என்பதுதான் யெல்ட்சின் நிர்வாகத்தின் முதல் முடிவுகளில் ஒன்றாகும். இதுதான் சோவியத் ஒன்றியம் சிதைக்கப்படுவதற்கு அடிப்படையாயிற்று. 1991ம் ஆண்டு தொடக்கத்தில், ரஷ்ய அரசாங்கம் சோவியத் ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு வரிகள் கொடுப்பதை அநேகமாக நிறுத்திவிட்டது; இது நாட்டின் மற்ற குடியரசுகளும் அவ்வாறே செய்வதற்கு தூண்டுதலாயிற்று.

இப்போக்கிற்கு கூட்டமைப்பின் குடியரசுகள் மற்றும் பிற பகுதிகளில் இருந்த தேசிய, மற்றும் பிரிவினைவாதப் போக்குகளினால் வலுவடைந்தது. "உங்களால் இயன்றளவு சீரணிக்கப்படக்கூடிய இறைமையை எடுத்துக் கொள்ளுங்கள்" என்ற யெல்ட்சினின் கோஷம் மிக மட்டமான உணர்வுகளுக்கு ஆர்வத்தை கொடுத்தது; பெரும்பாலான சோவியத் குடிமக்களின் விருப்பத்திற்கு இது நேரடியான முரண்பாடு ஆகும்; அவர்கள் ஒன்றியத்தை காக்க விரும்பினர் என்பதுதான் 1991 மார்ச்சில் நடந்த அதைப் பற்றிய வாக்கெடுப்பு புலப்படுத்தியது.

ஆகஸ்ட் மாத இராணுவ சதி மற்றும் யெல்ட்சினின் எழுச்சி

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், இராணுவம் மற்றும் KGB பிரிவுகள் சிலவற்றால் ஆதரிக்கப்பட்ட ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஒரு பகுதி சோவியத் ஜனாதிபதி கோர்ப்பஷேவிற்கு எதிராக தோல்வியுற்ற ஒரு சதியை நடத்தியது; இந்த நிகழ்வு முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் யெல்ட்சின் எழுச்சிக்கு அரங்கு அமைத்துக் கொடுத்தது. ஆகஸ்ட் ஆட்சிமாற்றம் என்று 61 மணி நேரத்திற்குள் சரிவுற்ற இந்த நிகழ்வு, கோர்ப்பஷேவ் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருக்கிறார் என்று அதிகாரத்துவத்தின் சில பிரிவுகளுள் இருந்த அச்சத்தை பிரதிபலித்தது; அதையொட்டி சோவியத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்திற்கு வழி திறந்துவிடக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டது; முதலாளித்துவ மீட்பு வழிவகையில் கொள்ளையை பங்கிட்டுக்கொள்ளுவது பற்றிய கவலைகளும் தோன்றின.

ரஷ்ய கூட்டமைப்பின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான யெல்ட்சின் இந்நிகழ்வை பயன்படுத்தி தன்னுடைய சொந்த அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டார்; ஆட்சி மாற்றத்தை ஒரு இராணுவ டாங்கின் மீது ஏறி நின்று எதிர்த்து, மேலை நாடுகள் முழுவதில் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றார். கீழிருந்து வந்த சக்திவாய்ந்த அதிகாரத்துவ-எதிர்ப்பு இயக்கத்தை பயன்படுத்தி தன்னுடைய ஆட்சி மாற்ற-எதிர் நடவடிக்கையை இயக்கினார்; இதையொட்டி கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தார். நான்கு மாதங்களுக்கு பின்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது; உக்ரைன் மற்றும் பைலோருஸ்யா ஜனாதிபதிகளுடன் சேர்ந்துகொண்டு யெல்ட்சின் "Belovezhskii Accord" என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். தங்களுடைய சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று சோவியத் மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சோவியத் தகர்ப்பு "அதிர்ச்சி வைத்திய" திட்டம் ஒன்றிற்கு வழிவகுத்தது; அது மில்லியன் கணக்கான மக்களுக்கு பெரும் துயரம் என்று ஆயிற்று. அது சோவியத் அதிகாரத்துவத்தின் இறுதிக் காட்டிக் கொடுப்பு ஆகும்.

சோவியத் யூனியனை கலைத்துவிடுதல் அல்லது முதலாளித்துவமுறை மறுசீரமைப்பு திட்டம் என்பதோ விவாதிக்கப்படவும் இல்லை, ஜனநாயக முறைப்படி ஒப்புதலையும் பெறவில்லை; மக்கள் வாக்கெடுப்போ அல்லது ரஷ்ய பாராளுமன்றத்தில் வாக்கோ எடுக்கப்படவில்லை. மக்களுக்கும் பின் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட இந்த முடிவுகள் மக்கள் மீது உலக ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் சுமத்தப் பெற்றன; மக்களுடைய வாழ்க்கைத் தரங்களை அழித்து, நாட்டின் தொழில்துறை தளத்தின் சரிவிற்கு வழிவகுத்து, தேசிய மோதல்கள் ஏராளமானவற்றிற்கு ஊக்கம் கொடுத்து சோவியத்திற்கு பிந்தைய காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அழித்தன.

1991 ஆட்சி மாற்றத்திற்கு எதிராக ரஷ்ய பாராளுமன்ற கட்டிடத்தை காப்பதற்காக ஒரு டாங்கியின் மீது நின்ற இரண்டு ஆண்டுகளுக்குள், யெல்ட்சின் அக்டோபர் 1993ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவருடைய ஒருதலைப்பட்ச முடிவான அரசியலமைப்பு மறுபடியும் எழுதுதல், பாராளுமன்றத்தை கலைத்தல் என்ற முயற்சியை தடுக்க முற்பட்டபோது, அக்கட்டிடத்தின் மீது குண்டுவீச்சு நடத்த உத்தரவிட்டார். இந்த டாங்கு குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். போரிஸ் யெல்ட்சினின் "ஜனநாயக" வழிவகைகள் இப்படித்தான் இருந்தன.

இந்நிகழ்வுகளுக்கு பின்னர், ஒரு புதிய அரசியல் அமைப்பு ஜனாதிபதிக்கு கிட்டத்தட்ட வரையற்ற அதிகாரங்களை கொடுத்து பாராளுமன்றத்தை வெறும் அலங்காகரக் கூடமாக மாற்றிய தன்மையை கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி ஆணைகளின் அடிப்படையில் ஏற்கனவே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த யெல்ட்சின் தன்னுடைய அதிகாரத்தை சட்டபூர்வமாக்கி கொண்டார்.

1990 களின் நடுப்பகுதியில் முழு வீச்சில் தனியார்மயம் நடத்தப்பட்டபோது, தொழில்துறையில் பெரும் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள், போலித்தனத் திட்டங்களின் அடிப்படையில் தன்னல சிறுகுழுக்களுக்கு (oligarchs) அற்ப விலைக்குக் கொடுக்கப்பட்டன. ஒரு மதிப்பீட்டின்படி கிட்டத்தட் $ 200 பில்லியன் மதிப்புள்ள அரசாங்க சொத்துக்கள் தனியார் உரிமைகளுக்கு $7 பில்லியனுக்கு மாற்றப்பட்டன.

இப்படி அரசாங்கச் சொத்து அபகரிக்கப்படுவது ரஷ்ய மக்கள் தங்கள் தலைவர்கள்பால் வைத்துள்ள வெறுப்பிற்கு மைய ஆதாரங்களில் ஒன்றாகத் தொடர்ந்து உள்ளது. சமூக இருப்புக்கள் முழுமையாக திருடப்பட்டது மக்கட்தொகுப்பிற்கு பேரழிவைக் கொடுத்தது.

ஓய்வூதியங்களும் ஊதியங்களும் கொடுக்கப்படவில்லை; வறுமை, வீடின்மை, பசி ஆகியவை உயர்ந்தன. 1990 களில் ரஷ்யாவின் மொத்த உள்ளநாட்டு உற்பத்தி 50 சதவிகிதம் சரிந்தது; 30 சதவிகித மக்கள் வறுமையில் ஆழ்ந்தனர்; இறப்புவிகித எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்ந்தது; ஆயுட்கால எதிர்பார்ப்பு ஆண்களுக்கு 6 ஆண்டுகள் குறைந்தது.

இதற்கிடையில் மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளுதலும், யெல்ட்சின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்த ஒரு தன்னலக் கும்பலிடம் மிகப் பரந்த அளவில் சொத்துக்கள் மாற்றப்பட்டதும், சமீபத்திய Forbes அறிக்கையின்படி 60 ரஷ்ய பில்லியனர்களை தோற்றுவித்தது; பல ஆயிரக்கணக்கான புதிய மில்லினியர்களை பற்றி குறிப்பிடத் தேவையில்லை.

1994ம் ஆண்டு, முதல் செச்சைனிய போரை யெல்ட்சின் ஆட்சி தொடங்கியது; வடக்கு காகசஸ் பகுதியில் இருக்கும் இக்குடியரசு அழிவிற்கு கொண்டுவரப்பட்டு, சட்டமின்மை, ஆட்சியின்மை, அப்பட்டமான வன்முறை ஆகிய சூழ்நிலை அங்கு உருவாகியது.

அதே நேரத்தில் ரஷ்யாவில் குற்றங்களும் ஊழல்களும் மலிந்தன. 1996ம் ஆண்டு யெல்ட்சின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த ஒரு செயல் இந்த ஊழலின் அடையாளமாயிற்று. அப்பொழுது இரு உயர்மட்ட அதிகாரிகள், யெல்ட்சினின் தேர்தலுக்கு முந்தைய தலைமையகத்தில் $500 மில்லியன் பணத்துடன் பிடிபட்டனர்; அவர்கள் அரசாங்க கட்டிடத்தில் இருந்து அதை வெளியேற்ற முயன்றிருந்தனர். இதே போன்ற மற்றும் ஒரு ஊழல், "Bank of New York" நிகழ்ச்சி மூன்று ஆண்டுகளுக்கு பின் நடந்தது; அப்பொழுது மேலை வங்கி கணக்குகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் பதுக்கி வைக்கப்பட்டன, இவை பணச் சலவை திட்டத்தின் ஒரு பகுதி என்றும், ரஷ்ய தன்னல குழுக்காரர்கள் முக்கிய அரசாங்க அதிகாரத்துவத்தினருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக இருந்தன என்றும், இதற்கு மேலைநாட்டு வர்த்தகர்கள் உதவி செய்ததும் தெரியவந்தது.

யெல்ட்சின் நிர்வாகத்தின் இறுதிக்காலம் ஆகஸ்ட் 1988 நிதி நெருக்கடியின் ஆதிக்கத்தால் நிறைந்திருந்தது. ரூபிளின் சரிவு, ஒரு மாதத்தில் தன்னுடைய மதிப்பில் 70 சதவிகிதத்திற்கும் மேலாக அது இழந்திருந்தது, மக்களுடைய வாழ்க்கை தரத்திற்கு மற்றொரு பெரும் பாதிப்பு ஆகும். இதைத் தொடர்ந்து இரண்டாம் செச்சேனிய போர் ஏற்பட்டது. இவற்றுடன் இணையாக முன்பு KGB அதிகாரியாக இருந்த விளாடிமிர் புட்டின் யெல்ட்சினுக்கு அடுத்த ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டார்.

செய்தி ஊடகத்தின் கூற்றுக்களுக்கு மாறாக, புட்டின் ஒன்றும் யெல்ட்சினின் "பெரிய தவறு" அல்ல. முதலாளித்துவ மறுசீரமைப்பின் தர்க்கத்தை ஒட்டியே அவர் நியமனம் அமைந்திருந்தது. புதிய ஆளும் உயரடுக்கு தன்னுடைய திருட்டுச் சொத்தை இழக்க விரும்பவில்லை. சந்தைச் சீர்திருத்தங்கள் தொடர்ந்த அளவில், சமூக சமத்துவமின்மை நாட்டில் தீவிரமாயிற்று. இது "அரசாங்கத்தை வலுப்படுத்தும்" தேவையை ஏற்படுத்தியது -- அதாவது அடக்குமுறை கருவிக்கான தேவையை; இதையொட்டி ஜனநாயக ஆட்சிமுறையின் அலங்கார பூச்சுக்கள்கூட இன்னமும் குறைக்கப்பட்டன.

இந்நடவடிக்கைக்கு யெல்ட்சின் முழு அனுமதி கொடுத்தார்; கிரெம்ளினால் தீட்டப்பட்டிருந்த இத்திட்டத்தை புட்டின் நிறைவேற்றிய பங்கைக் கொண்டார். புட்டினின் ரஷ்யா இத்திட்டத்தின் எதிர்மறை அல்ல; மாறாக யெல்ட்சினுடைய ரஷ்யாவின் தர்க்கரீதியான தொடர்ச்சிதான்.

இராஜிநாமா செய்தபோது புட்டின் நிர்வாகத்தை பற்றி எவ்வித தீவிர குறைபாடுகளையும் பற்றி யெல்ட்சின் எழுப்பவில்லை என்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. இதற்குப் பதிலாக, முதல் ரஷ்ய ஜனாதிபதி இறப்பு பற்றிய தன்னுடைய சுருக்கமான அறிக்கையில் புட்டின் யெல்ட்சினை "மேலான நோக்கங்களை உடையவர்", "நாட்டிற்காகவும் மில்லியன்கணக்கான ரஷ்யர்களுக்காக" அனைத்தையும் செய்ய முயன்றவர் என்றும் விவரித்தார்.

பாசங்கின் உச்சக்கட்ட சொற்களான இவை, குறிப்பாக செச்சேனிய போரின் குருதி சிந்தலால் அதிகாரத்திற்கு வந்து, அதிகாரத்துவ, தன்னலக் குழுத் தன்மையுடைய, போலீஸ் ஆட்சியின் தலைவராக மாறியவர், அதிகாரிகளை குறைகூறுபவர்கள் அல்லது குறிப்பிட்ட அதிகாரத்துவத்தினரை குறைகூறுபவரை "தீவிரவாதி" என முத்திரையிடுபவரிடம் இருந்து வெளிவரும் சொற்கள் ஆகும்.

சமூகத்திற்கும் பொதுமக்கள் கருத்திற்கும் முழு இழிவுணர்வை வெளிப்படுத்திய வகையில் புட்டின், யெல்ட்சினால்தான் "ஒரு புதிய ஜனநாயக ரஷ்யா தோன்றியுள்ளது - ஒரு சுதந்திரமான நாடு உலகிற்கு கிடைத்தது; இந்நாட்டில் அரசாங்கம் உண்மையிலேயே மக்களுடையது", "இங்கு மக்கள் தங்களுடைய எண்ணங்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமையை கொண்டுள்ளனர்; நாட்டின் தலைமையை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கின்றனர்" என்று கூறினார். மாஸ்கோவிலும், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிலும் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க முயன்றபோது புட்டினின் கலகப்படைப் பிரிவு போலீஸார் அவர்களை அடித்து நொருக்கி, நூற்றுக்கணக்கில் கைது செய்ததற்கு ஒரு வாரம் கழித்துக் கூறப்பட்டுள்ளது.

புட்டினின் மதிப்பீட்டில் அரசியல் மனச் சிதைவின் கூறுபாடு ஒன்றுள்ளது; ஏனெனில் அவரே கூறியுள்ளபடி சோவியத்தின் சரிவு "20ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பூகோள-அரசியல் பேரழிவு ஆகும்." மற்றொரு சமீபத்திய உரையில் மில்லியன் கணக்கான மக்கள் பெரும் நம்பிக்கையை கொண்டிருந்த தன்மையை 1990கள் பெற்றிருந்தது என்று புட்டின் கூறினார்; "ஆனால் அரசாங்கமோ வணிகமோ அந்த நம்பிக்கைகளை சாதிக்கவில்லை" என்றும் கூறினார்.

யெல்ட்சினின் மரணம் பற்றி கூடுதலான தெளிவு உடைய மதிப்பு Vitalii Tret'iakov, முன்னாள் Nezavisimaia Gazeta வின் தலைமை ஆசிரியர், தற்பொழுது வாரந்திர ஏடான "Moskosvskiie Novosti" உடைய தலைவராகவும் இருப்பவரால் கொடுக்கப்பட்டுள்ளது. "தன்னுடைய பதவிக்காலத்தின் பெரும்பகுதியில் யெல்ட்சின் உறக்கத்தில் இருந்தார், குடித்தார், நோய்வாய்ப்பட்டிருந்தார், வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தார், மக்களுக்கு தன் முகத்தைக் கூட காட்டவில்லை, ஒன்றும் செய்யவும் இல்லை" என்று அவர் எழுதியுள்ளார்.

"நாட்டின் பெரும்பாலான குடிமக்களால் வெறுக்கப்பட்டிருந்த யெல்ட்சின் ரஷ்யாவில் முதல் ஜனாதிபதி என்று வரலாற்றில் கூறப்படுவார்; (நாட்டை) ஊழல்படுத்தி உடையும் நிலைக்குக் கொண்டுவந்தார்; இவருடைய குணச் சிறப்புக்களாலோ, கேடுகளினாலோ அல்ல; மழுங்கிய மூளையினால், மிகப் பிற்போக்குத்தனத்தால், ஒரு அயோக்கியனின் தடையற்ற அதிகாரத்தினால் அவ்வாறு கொண்டுவந்தார்... என Tret'iakov மேலும் எழுதினார் (Moskovskiie Novosti, 2006, No. 4-6)

ஒரு "ஜனநாயக வாதி", ஒரு "சீர்திருத்தவாதி" என்று மேலைநாட்டு அரசாங்கங்கள், பெருநிறுவன செய்தி ஊடகம் மற்றும் ரஷ்ய பில்லியனர்கள், மில்லியனர்கள் என்று அவரால் செல்வம் சேர்த்தவர்களால் பாராட்டப்பெற்ற, யெல்ட்சின் இறுதிப்பகுப்பாய்வில் ஸ்ராலினிசம் ஏழு தசாப்தங்களில் செய்திருந்த காட்டிக் கொடுப்புக்கள், குற்றங்கள் ஆகியவற்றால் விளைந்த இழி பொருள் ஆவார்.

உண்மையான மார்க்சிச, சோசலிச உணர்மையை திட்டமிட்டு அடக்கி அழித்ததுதான் இக்குற்றங்களிலேயே மிகப் பெரியது ஆகும்; இது முதலாளித்துவ முறை மறுசீரமைப்பு கட்டவிழ்த்துவிட்ட, அரசியலில் முன்னோடியில்லாத வகையில் சமூகப் பொருளாதார பேரழிவு மற்றும் பழைய அதிகாரத்துவ தன்னலக்குழு வணிக சுயநலக் கும்பல் என்று போரிஸ் யெல்ட்சனுக்கு உண்மையாக ஆதரவாக இருந்தவர்களின் எழுச்சியை எதிர் கொண்டு தோற்கடிக்கும் நிலைக்கு சோவியத் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக தயார்நிலையில் இல்லாமலிருக்க தள்ளப்பட்ட காரணமானது.