World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்The French "far left" learns nothing from the presidential election ஜனாதிபதித் தேர்தலில் இருந்து பிரெஞ்சு "அதி இடது" எதையும் கற்கவில்லை By David Walsh பிரான்சின் "அதி இடது" என அழைக்கப்படுவதின் கூறுபாடுகளில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (Ligue communiste révolutionnaire -LCR), மற்றும் தொழிலாளர் போராட்டம் (Lutte ouvrière -LO) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கைகள், இவ்வமைப்புக்கள் ஜனாதிபதி தேர்தல்களை புரிந்து கொள்ளவும் இல்லை, அவற்றில் இருந்து எந்தப் படிப்பினையையும் கற்கவுமில்லை என்று சுட்டிக்காட்டுகின்றன. ஞாயிறன்று வலதுசாரி வேட்பாளர், UMP இன் நிக்கோலா சார்க்கோசி, சோசலிஸ்ட் கட்சியின் செகோலென் ரோயாாலை 53-47 என்ற சதவிகித வித்தியாசத்தில் தோற்கடித்தார். வாக்காளர் வாக்குப் பதிவோ மிக அதிகமான வகையில் 85 சதவிகித்தை எட்டியிருந்தது. LCR மற்றும் LO இரண்டுமே ரோயாாலை ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் ஆதரித்தன. உண்மையில் சார்க்கோசியையும் (31 சதவிகிதம்), ரோயாாாலையும் (26 சதவிகிதம்) இரண்டாம் சுற்றுக்கு அனுப்பிய ஏப்ரல் 22 தேர்தல்களின் முடிவு வந்தபொழுதே கட்சிகளின் வேட்பாளர்களான LCR ன் பெசன்ஸநோவும் LO இன் ஆர்லட் லாகியே உம் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு தங்களுடைய ஒப்புதலை அறிவித்தனர். ஏப்ரல் 22ம் தேதி 4.1 சதவிகித வாக்குகளை, அதாவது கிட்டத்தட்ட 1.5 மில்லியன் வாக்குகளை பெற்ற பெசென்ஸநோ வரவிருக்கும் இரண்டாம் சுற்று "சார்க்கோசி-எதிர்ப்பு வாக்கெடுப்பை போல்" அமைந்துள்ளது என்று அறிவித்தார். தன்னுடைய ஆறாம் மற்றும் இறுதி ஜனாதிபதி தேர்தலில் பங்கு பெற்ற லாகியே தன்னுடைய வாக்கு விகிதம் 2002ல் 5.7 என்பதில் இருந்து இம்முறை 1.3 சதவிகிதமாக சரிந்ததை கண்டார் (கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகள்). முதல் சுற்று வாக்குப் பதிவு முடிந்த மாலை இவ்வம்மையார் ரோயாலுக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்களை அழைத்தார், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் மற்றும் அவருடைய சக உழியர்கள் "பதவிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பது பற்றிய பிரமைகள் இல்லாமலும்" "தயக்கம் இல்லாமலும்" தான் அவ்வாறு செய்ததாக கூறினார். இரண்டாம் சுற்றில் ரோயால் எத்தகைய வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் போட்டியிடுவார் என்று பார்ப்பதற்கு பற்றிக் கூட பெசன்ஸநோவும் சரி லாகியேவும் சரி காத்திருக்கவில்லை. சார்க்கோசியின் திட்டத்தில் இருந்து ரோயாலின் திட்டம் எவ்வாறு அடிப்படையில் மாறுபட்டது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டவில்லை. பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் வரலாற்றிலேயே மிகத் அதி வலதுசாரிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, கொடியை தழுவுதல், தேசிய கீதம் இசைத்தல், தேசிய அடையாளத்தைத் தன்னுடையது என்று கூறியது அனைத்தையும் அவர் செய்திருந்தார். அதிகார நிலைப்பாடு, "கட்டுப்பாடு", சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதுகாப்பு, தேசபக்தி என்பவற்றில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை மாற்றிக் கொள்ள அவர் சிறிதும் முயலவில்லை; இளைஞர்கள், வேலையின்மையில் உள்ளவர்கள், புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு எதனையும் அவர் வழங்கவில்லை. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா "போட்டித்தன்மை" உடையதாக ஆக்க வேண்டும் என்பதற்கான தன்னுடைய ஆர்வத்தில் சார்க்கோசியுடன் ரோயாால் போட்டியிடத்தான் செய்தார்; இதன் பொருள் தொழிலாளர்களுடைய உரிமைகள் அகற்றப்படுதல், வாழ்க்கைத் தரங்கள் சரிதல் என்பதாகும். "அமெரிக்கா மற்றும் எழுந்து வரும் நாடுகளின் முன்னுதாரணத்தை கொண்டு ஐரோப்பா ஒரு தொழிற்துறை கொள்கைக்கு பாடுபடவேண்டும்" என்று அவர் அறிவித்தார். வழிதவறும் இளைஞர்கள் இராணுவத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று வாதிட்ட இவ்வம்மையார் ஆறு மாத காலம் பொதுப் பணியை இளைஞர்கள் செய்யக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும், அது இராணுவத்தினுள்ளும் இருக்கலாம் என்று சார்க்கோசியுடன் இணைந்த வகையில் கூறினார். சமூக நலன்கள் பிரசினையில், றேகன்-தாட்சர் ஆகிய வலதுசாரி அரசியல்வாதிகளை பிரதிபலிக்கும் வகையில், ரோயாால், "ஒவ்வொரு புதிய உரிமையும் சில கடமைகளையும் கொண்டிருக்கும்" (chaque droit nouveau, entraîne un devoir nouveau) என்று கூறினார். பல பயங்கரவாத-எதிர்ப்பு, ஜனநாயக-எதிர்ப்பு நடவடிக்கைகள், சமீபத்திய ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டவை பற்றி, அவை அகற்றப்பட வேண்டும் என்றோ அவற்றை தாக்கியோ இவர் பேசவில்லை; இவற்றுள் பெரும்பாலானவை சார்க்கோசியினால் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும். பொதுவில் இரு வேட்பாளர்களுடைய திட்டங்களுக்கும் இடையே மிகச் சிறு வேறுபாடுகள்தான் இருந்தன. பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் நலன்களுக்காக பேசும் மற்றும் அவற்றை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை கொண்ட அத்தகைய வேட்பாளருக்கு தொழிலாள வர்க்கம் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்? பெயரைத் தவிர பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியில் "சோசலிசம்" பற்றி எதுவும் இல்லை; அதன் வேலைத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் "இடது" என்று ஏதும் இல்லை. இது நாட்டின் முக்கியமான முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றாகும்; பிரெஞ்சு அரசின் விவகாரங்கள் கடந்த இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக வாடிக்கையாக இதனிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளது. LCR இன் பெசன்ஸநோவும் ஞாயிறன்று சார்க்கோசியின் வெற்றியை தன்னுடைய கட்சியின் கொள்கைகளை மேலும் வலதிற்கு நகர்த்துவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தினார். தன்னுடைய தோல்வியை ஒட்டி "மையத்திற்கு" செல்வதற்கு, பிரான்சுவா பேய்ரூவின் UDF மற்றும் ஏனைய முதலாளித்துவ கட்சிகளின் பால் செல்வதற்கு புதிய நடவடிக்கைகள் தேவைப்படும் என்று ரோயாால் அறிவித்தது போல், பெசன்ஸநோவும் "சார்க்கோசியின் அதி-தாராள மற்றும் அதி சட்டம் ஒழுங்கு வேலைத்திட்டத்தை எதிர் கொண்ட நிலையில், அனைத்து சமூக மற்றும் ஜனநாயக சக்திகள் உடனடியாக ஒரு ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கு முன்வரவேண்டும்" என்று வலியுறுத்தினார். வெளிப்படையாக அவர் கூறாவிட்டாலும், இதன் பொருள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்ட்டுக்கள், பசுமைவாதிகள், சோசலிஸ்ட் கட்சியில் அதிருப்தியடைந்த பிரிவினருடன் சேருவதுதான் "ஐக்கியம்" என்று பொருளாகும். துல்லியமாக பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தை அதன் தற்போதைய சிக்கலில் தவிக்கவிட்ட கொள்கை, அழுகிய ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கு அதன் அடிபணிதல், ஒன்றும் நிகழாதபோதிலும், தொடரப்பட இருக்கிறது. சார்க்கோசியை "வாக்குப்பெட்டியில் போன்றே தெருக்களிலும் எதிர்ப்போம்" என்ற LCR இன் வாய்ச்சவடால் அடிப்படையை பெசன்ஸநோ தொடர்ந்து பராமரித்தார். ஏப்ரல் 22 அறிக்கையில் Lutte Ouvrière (LO) இன் லாகியே உம் சார்க்கோசியை போன்றே ரோயாாலும் "முதலாளித்துவ முகாமை சேர்ந்தவர்", "ஊக வணிகர்கள், சுரண்டுபவர்கள் முகாம்" மற்றும் அதே ரக முகாம்களைச் சேர்ந்தவர் என்று கூறினார். ரோயாாலோ, சார்க்கோசியோ "முதலாளித்துவ முறைக்கு ஆதரவு என்பதை தவிர வேறு எதையும் செய்யமாட்டார்கள்" என்றார் அவர். அப்படியானால் இந்த மண்ணில் எதற்காக இந்த தனி மனிதர்களில் ஏதாவதொருவருக்கு எவரும் வாக்களிக்க வேண்டும்? ஞாயிறன்று முடிவிற்கு பின் லாகியே தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளை மாற்றுவதற்கு "செகோலென் ரோயாாலின் திட்டம் எதையும் செய்திருக்கவில்லை" என்று கூறினார்; ஆனால் "வாக்குச் சீட்டு என்பது ஒரு கிழிந்த காகிதம்" போன்றது என்றும் சேர்த்துக் கொண்டார். நூறாயிரக் கணக்கான, ஏன் மில்லியன் கணக்கான அத்தகைய "கிழிந்த காகிதங்களை" சேகரித்தவரிடம் இருந்து இத்தகைய கருத்துக்கள் வருவது இன்னும் சொல்லப்போனால் எரிந்து விழும் தன்மையைத்தான் காட்டுகிறது. வரவிருக்கும் "போராட்டங்கள்" பற்றி லாகியே பேசும்போது, முற்றிலும் அரசியல் உள்ளடக்கம் இழந்த தன்மையைத்தான் அது காட்டுகிறது. முதல் சுற்றுக்குப் பின், லாகியே ரோயாலுக்கு ஒப்புதல் கொடுப்பது "தொழிலாளர் உலகத்தில் ஐயத்திற்கிடமின்றி பெரும்பான்மையோராக இருப்போரின் விருப்பங்களுடன்", அதாவது சோசலிஸ்ட் கட்சிக்கான தொழிலாள வர்க்க வாக்காளர்களுடன் கொண்ட ஐக்கியத்திலிருந்து ஆதரிப்பதாக கூறினார். ஆனால், லாகியே போல் அன்றி, ரோயாலுக்கும் சார்க்கோசிக்கும் இடையே உள்ள பெரும் வேறுபாட்டை சில தொழிலாளர்கள் வெளிப்படையாக பார்த்தனர். நீலக் காலர் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 46 சதவிகிதத்தினரும், போதுமான வசதி படைத்தவர்களில் 44 சதவிகிதத்தினரும் சார்க்கோசிக்கு வாக்களித்தனர். இது வலதுபுறம் நோக்கிய திடீர் நகர்வா? இல்லை. பிரெஞ்சு மக்கள் இரு வலதுசாரி வேட்பாளர்களை, வாழ்க்கைத் தரங்கள், தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக வேலைத் திட்டங்களை தாக்கும் உறுதி கொண்ட பெருவணிக பிரதிநிதிகளை எதிர்கொண்டனர். தொழிலாள வர்க்கம் இரண்டாம் சுற்றை புறக்கணிக்குமாறு "அதி இடது" கூறியிருந்தால் அது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்; ஓர் உண்மையான சோசலிஸ்ட் கட்சியின் தேவையையும் விளக்கியிருக்க வேண்டும். மாறாக லாகியேயும் பெசன்ஸநோவும் பிரெஞ்சு அதிகார அமைப்பின் ஒரு பிரிவுடன் தங்களை பெரிதும் பிணைத்துக் கொண்டனர். இது ஒன்றும் புதிதல்ல. 2002ல் ஜாக் சிராக் மற்றும் புதிய பாசிச Jean Marie Le Pen இருவரும் ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்றில் முதல் இரு இடங்களில் வந்த பின்னர், பெரும்பான்மை கொண்டிருந்த பிரெஞ்சு இடது இரண்டாம் சுற்றில் சிராக்கிற்கு தன்னுடைய ஒப்புதலை தெரிவித்தது. சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சியினர் மற்றும் LCR வெளிப்படையாகவே ஊழல் மலிந்த, பிரெஞ்சு முதலாளித்துவ பிரதிநிதியான சிராக்கிற்கு வாக்களிக்குமாறு கோரினர். லாகியே மற்றும் LO தவிர்த்துவிட்டனர், அரசியல் ரீதியாக கூற வேண்டும் என்றால் ஓடி ஒளிந்து கொண்டனர். LO, LCR மற்றும் PT (தொழிலாளர் கட்சி) (Pierre Lambert ன் முன்னாள் OCI), கிட்டத்தட்ட தங்களுள் 3 மில்லியன் வாக்குகளை 2002 முதல் சுற்றில் பெற்றன. உண்மையான சமூக மாற்றத்திற்கு வாக்களிக்கிறோம் என்று நினைத்த அவர்களுடைய ஆதரவாளர்கள் பின்னர் இரண்டாம் சுற்றில் சிராக் ஆதரவு இயக்கத்தில் தள்ளப்பட்டனர். இம்முறை பலரும் முதல் சுற்றிலேயே "இரு தீங்கில் குறைந்த தீங்கிற்கு" வாக்களிப்பது என்ற தர்க்கரீதியான அடி எடுத்துவைப்பை எடுத்தனர். 2007 தேர்தலில் பிரெஞ்சு "அதி இடது" என்ன கிடைக்க வேண்டுமோ அதைத்தான் பொதுவாகப் பெற்றது. ஒரு நீண்ட காலத்தில், தங்களை அதி அக்கறையுடன் பயன்படுத்திக் கொள்ளாத அமைப்புக்கள் மக்களாலும் அதி அக்கறையுடன் எடுத்துக் கொள்ளப்படமாட்டா. LO, LCR, PT இவற்றின் மொத்தம் பதிவான வாக்குகள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு (2..97 மில்லியனில் இருந்து 2.11 மில்லியன் என) சரிந்தது. மொத்த வாக்கில் இவற்றின் சதவிகிதமும் கிட்டதட்ட ஒன்றரை சதவிதம் (10..44 சதவிகிதத்தில் இருந்து 5.7 சதவீதம்) என குறைந்தது. |