World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP writes to Sri Lankan defence secretary demanding answers on disappearance of party member

கட்சி உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பதில் கோரி இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு சோ.ச.க. கடிதம்

28 April 2007

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக எந்தவொரு அக்கறையான விசாரணையையும் முன்னெடுக்க பொலிஸ் அல்லது பாதுகாப்பு அமைச்சு தவறியுள்ளமைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து நேற்று சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் இலங்கை பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பிவைத்த கடிதத்தை இங்கு பிரசுரிக்கின்றோம். உள்ளூர்வாசிகள் அவர்களைக் கண்டு ஐந்து வாரங்கள் கடந்துள்ள போதிலும் பாதுகாப்புப் படைகள் இதுவரையும் இந்த இருவரையும் கைது செய்துள்ளதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. இந்த இருவரும் காணாமல் போன சூழ்நிலையை இருட்டடிப்புச் செய்வதற்காக, கடற்படையும் மற்றும் கொழும்பில் உள்ள ஆளும் கூட்டரசாங்கத்தின் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் முயற்சி மேற்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டும் புதிய ஆதாரங்களை இந்தக் கடிதம் வெளிக்கொணர்கின்றது.

விமலேஸ்வரனையும் மதிவதனனையும் கண்டுபிடிக்கக் கோரி இலங்கை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுமாறு சோ.ச.க. உலகம் பூராவும் உள்ள அதன் ஆதரவாளர்களுக்கும் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது. கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்:

Gotabhaya Rajapakse, Secretary of Ministry of Defence
15/5 Baladaksha Mawatha
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
E-mail: secretary@defence.lk

N. G. Punchihewa Director of Complaints and Inquiries
Sri Lanka Human Rights Commission
No. 36, Kinsey Road
Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பி வைக்கவும்.

Socialist Equality Party
P.O. Box 1270
Colombo, Sri Lanka
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த online form படிவத்தை பயன்படுத்தவும்.

***

கோதபாய இராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், 15/5 பலதக்ஷ மாவத்த, கொழும்பு 3, இலங்கை

ஏப்பிரல் 27, 2007

அன்பின் திரு. இராஜபக்ஷ,

ஊர்காவற்துறை தீவை வசிப்பிடமாகக் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் ஆகியோர் மார்ச் 22 காணாமல் போயுள்ளமை தொடர்பாக மார்ச் 24, 2007 அன்று சோசலிச சமத்துவக் கட்சி உத்தியோகபூர்வமாக தங்களுக்கு முறைப்பாடு செய்துள்ளது. அப்போது நாங்கள் இந்த இருவரையும் கண்டுபிடிப்பதற்காக ஒரு அவசர விசாரணையை தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். இந்த காணாமல் போன சம்பவத்தில் கடற்படையும் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி) சம்பந்தப்பட்டிருப்பதாக சோ.ச.க. சந்தேகிப்பதையும் நாங்கள் உங்களுக்கு அறிவித்துள்ளோம்.

விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போய் ஐந்து வாரங்கள் கடந்த பின்னரும், உத்தியோகபூர்வமான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததோடு அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களை தாங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை நாம் கோருகிறோம்.

இவர்கள் இருவரும் மடத்துவெளி கிராமத்தில் நண்பனின் வீட்டில் இருந்து சில ஆடைகளை எடுத்துக்கொண்டு புங்குடு தீவில் இருந்து ஊர்காவற்துறையை நோக்கி நீண்ட கடல்வழிப் பாலத்தில் மார்ச் 22 அன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் சுமார் 6.30 மணியளவில் திரும்பிக்கொண்டிருந்ததை உள்ளூர்வாசிகள் கடைசியாகக் கண்டுள்ளனர் என்பது எமது சொந்த விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த இருவரும் புங்குடு தீவு கடற்படை வீதித் தடைக்குள் மாலை 5.30 மணிக்கு நுழையும் போதும் மற்றும் 6.30 மணிக்கு அங்கிருந்து வெளியேறும் போதும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொண்டுள்ளதாக புங்குடுதீவில் உள்ள கோடைம்பர கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எவ்வாறெனினும், கடல்வழிப் பாலத்தின் மறு முனையில் உள்ள வீதித் தடையை பராமரிப்பதற்குப் பொறுப்பான ஊர்காவற்துறையில் வேலனையில் உள்ள கடற்படை கட்டளை அதிகாரி, தான் அவர்களைக் கைது செய்யவில்லை எனக் கூறுவதைத் தவிர்த்து இந்த இருவர் தொடர்பாகவும் தனக்கு எதுவுமே தெரியாது என மறுக்கின்றார்.

கடந்த மாதம் பூராவும் பல தொலைபேசி அழைப்புக்களை எடுத்த போதிலும், மார்ச் 22 அன்று மாலை ஊர்காவற்துறை வீதித் தடையில் என்ன நடந்தது என்பது பற்றி சோ.ச.க. க்கு பொலிசாரோ இராணுவமோ இன்னமும் எதுவும் அறிவிக்கவில்லை. எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி கடற்படையோடு தொடர்புடைய சீருடை அனியாத இரு அலுவலர்கள் அங்கு இருந்துள்ளனர். விமலேஸ்வரனும் மற்றும் மதிவதனனும் புங்குடு தீவு சென்றுகொண்டிருந்த போது இந்த அதிகாரிகள் அவர்களை விசாரணை செய்ததோடு அவர்களது உடலையும் பரிசோதித்துள்ளனர்.

இப்போது, காணாமல் போயுள்ள இருவரதும் மனைவிமார்களுடனும் பேசிய, உள்ளூர் மக்களால் வக்கன் ராசன் என்றழைக்கப்படும் சிதம்பரப்பிள்ளை சந்திரசேகரன் என்ற முன்நாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர், அவர்களது கணவர்கள் இருவரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இந்த இருவரையும் காப்பாற்றிக்கொள்ள பொய் அறிக்கைகளை வழங்குமாறும் அவர்களைத் தூண்டியுள்ளார். ராசனுக்கும் கடற்படைக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதோடு அவர் இப்போது பெருந்தொகையான கடற்படையினர் நிலைகொண்டுள்ள வேலனையின் துறையூரில் வசிக்கின்றார்.

மதிவதனனின் மனைவி சுலக்ஷனாவை முதலில் சந்தித்த ராசன், அவரது கனவரை கண்டுபிடிக்க உதவுவதாகக் கூறியுள்ளார். ஈ.பி.டி.பி. உறுப்பினரும் யாழ்ப்பாணம் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் வேலை செய்பவருமான மதிவதனனின் அப்பாவின் சார்பில் தான் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பணம் தேவைப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலையை உறுதிசெய்துகொள்வதற்காக பத்தாயிரக்கணக்கான ரூபாய்களை வழங்குவது யாழ்ப்பாண மாவட்டத்தில் பேர்போன பழக்கமாகிக்கொண்டு வருவதை இது சுட்டிக்காட்டுகிறது.

ஏப்பிரல் 10, சுலக்ஷனாவிடமிருந்து ராசன் கடிதமொன்றைப் பெற்றுக்கொண்டார். அதில் அவர் தனது கனவரும் மற்றும் விமலேஸ்வரனும் காணாமல் போன சம்பவத்தின் சூழ்நிலையைத் தெளிவுபடுத்தியிருந்தார். அந்தக் கடிதத்தை கடற்படை அதிகாரிகளுக்குக் காட்டவேண்டும் என ராசன் கூறியிருந்தார். அடுத்தநாள் மீண்டும் வந்த அவர், தடுத்துவைக்கப்பட்டுள்ள இருவரையும் பார்க்க பருத்தித்துறைக்கு தன்னுடன் செல்லத் தயாராக இருக்குமாறு சுலக்ஷனாவைக் கேட்டுக்கொண்டார்.

ஏப்பிரல் 12, சுலக்ஷனாவையும் மற்றும் விமலேஸ்வரனின் மனைவி சிவாஜினி விமலேஸ்வரனையும் ராசன் சந்தித்தார். விமலேஸ்வரனின் விவகாரம் கடினமானது எனவும் முதலில் மதிவதனனின் விடுதலைக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்தார். "ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு" தன்னுடன் வருமாறு இரண்டு பெண்களையும் அவர் அழைத்தார். அவர்கள் ஆடைகளை எடுத்துவரச் சென்றனர் என்று சொல்லவேண்டாம் எனவும், அவர்கள் மீன் பிடிக்கச் சென்று தாமதமாக வந்ததாக சொல்லுமாறும் அவர் விமலேஸ்வரனின் மனைவியிடம் கேட்டுக்கொண்டார்.

இரு பெண்களும் பொய் சொல்லவும் மற்றும் தெரியாத இடத்திற்கு ராசனுடன் செல்லவும் மறுத்துவிட்டனர். மனித உரிமை ஆணைக் குழுவுக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் தான் உத்தியோகபூர்வமாக ஏற்கனவே வழங்கியுள்ள சாட்சிகளை விமலேஸ்வரனின் மனைவி சுட்டிக்காட்டிய போது, அந்த ஆவனங்களைத் திருப்பி வாங்குவதாக ராசன் கூறியுள்ளார்.

இந்த இரு பெண்களும் ராசன் முன்மொழிந்தவாறு பொய் வாக்குமூலம் ஒன்றை கொடுத்திருந்தால், பி.ப. 4 மணியில் இருந்து மு.ப. 7 மணிவரையான மீன்பிடித் தடை மற்றும் இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணிவரையான ஊரடங்குச் சட்டம் போன்ற பிரதேசத்தைச் சூழ இராணுவத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குகளை அவர்களின் கணவர்கள் மீறியதாக அமையும். விமலேஸ்வரனும் மதிவதனனும் இந்த இரண்டு விதிகளையும் மீறியதற்கான சாட்சியங்கள் கிடையாது.

இந்த இரு பெண்களையும் ஒத்துழைக்கத் தூண்டுவதன் பேரில் ஏப்பிரல் 14 அன்று ராசன் இன்னுமொரு முயற்சியை மேற்கொண்டார். மதிவதனன் எழுதியது போன்ற ஒரு கடிதத்தைக் கொடுத்து அவரது மனைவியை தனது ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு கோரினார். சுலக்ஷனா தெரிவித்ததன்படி, மதிவதனனால் கடிதம் எழுத முடியாத நிலையில் அந்தக் கடிதம் ஒரு போலிப் பத்திரமாகும்.

ராசனின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தும் விவகாரங்களை எழுப்புகின்றன. முதலாவதாக, அவர் வேலனை முகாமில் உள்ள கடற்படை அலுவலர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவராகவும் மற்றும் விமலேஸ்வரனையும் மதிவதனனையும் சாத்தியமான விதத்தில் இராணுவம் பருத்தித் துறையில் தடுத்துவைத்திருப்பதாகவும் காட்டிக்கொண்டார். இரண்டாவதாக, மதிவதனனின் மனைவியின் கடிதத்தின் உள்ளடக்கத்தை பற்றி தனது கடற்படை தொடர்புகள் மூலம் தெரிந்து கொண்டு, அதன் பின்னரே அவர் இரு பெண்களையும் கதையை மாற்றுமாறு கேட்டது போல் தோன்றுகிறது.

வேலனையில் உள்ள கடற்படை அதிகாரிகளோடு ராசன் கொண்டுள்ள உறவு என்ன? இந்த இருவரது மனைவிமார்களை பொய் சொல்லத் தூண்ட அவர் எடுத்த முயற்சிக்கு கடற்படை பொறுப்பா? அவ்வாறானால் அது ஏன்? இந்தப் பிரச்சினையில் எமது பிரச்சாரம் குவிமையப்படுத்தியுள்ள குறிப்பிடத்தக்க அனைத்துலக கவனத்தின் அனுகூலமான பிரதிபலிப்பின் காரணமாக, இலங்கை பாதுகாப்புப் படைகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை இருட்டடிப்புச் செய்வதன் பேரில் குழப்பநிலையை ஏற்படுத்த வேண்டுமென்றே சூழ்ச்சி செய்யப்படுவதையிட்டு சோ.ச.க. கவலையடைந்துள்ளது.

எமது அச்சம் ஏப்பிரல் 15 நடந்த இன்னுமொரு சம்பவத்தால் மீண்டும் அதிகரித்துள்ளது. அன்று சுமார் மாலை 4.45 மணியளவில் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என தம்மை அறிமுகம் செய்துகொண்ட இருவர் மதிவதனனின் மனைவியை சந்தித்துள்ளனர். தாம் விடுமுறையில் சென்றிருந்ததாக எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ள தாமதித்தமைக்கு காரணம் கூறிய அவர்கள், இப்போது விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக விசாரிப்பதாகக் கூறியுள்ளனர்.

மதிவதனனின் அரசியல் தொடர்புகள் பற்றியதே அவர்களது பிரதான அக்கறையாக இருந்தது. சோ.ச.க. உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருப்பதை அறிந்திருந்த அவர்கள் மதிவதனன் சோ.ச.க. உறுப்பினரா எனக் கேட்டனர். மதிவதனன் சோ.ச.க. உறுப்பினர் அல்ல என சுலக்ஷனா விளக்கினார். அவர்கள் இருவரும் புங்குடுதீவில் இருந்தா அல்லது யாழ்ப்பாண நகரில் இருந்தா ஊர்காவற்துறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர் என அவர்கள் கேட்டனர். மாலை 6.30 மணியளவில் இந்த இருவரும் புங்குடுதீவில் இருந்து வெளியேறியுள்ளதை புங்குடு தீவு கட்டளைத் தளபதி தன்னிடம் கூறியதை சுட்டிக்காட்டிய சுலக்ஷனா, அவர்கள் புங்குடுதீவில் இருந்தே திரும்பிக்கொண்டிருந்ததாகக் கூறினார். "அப்படியானால் (வேலனை) பாலத்திற்கருகில் உள்ள எம்மவர்கள் அவர்களை எடுத்திருக்கலாம் (கைதுசெய்திருக்கலாம்)," என ஒரு கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்தார்.

இந்த இருவரும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக கடற்படை அதிகாரிகளின் விசாரணையின் ஆரம்பம் இதுதானா? அப்படியானால், அந்த இருவரதும் குடும்பங்களுக்கும் மற்றும் சோ.ச.க. யிற்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதது ஏன்? மூன்று வாரங்கள் தாமதித்தது ஏன்? இந்த விசாரணைகளுக்கு பொலிசாரே பொறுப்பு என உங்களது அதிகாரிகளால் திட்டவட்டமாக எங்களுக்கு அறிவித்துள்ள நிலையில் கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இதில் தலையீடு செய்வது ஏன்? அவர்கள் இருவரும் இருக்கும் இடத்தை விட அவர்களது அரசியல் தொடர்பு பற்றி குறிப்பாக அக்கறைகாட்டுவது ஏன்? சோ.ச.க. யில் அங்கத்துவம் வகிப்பதற்கும் விசாரணைகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?

மேலும், வேலனை கடற்படை முகாமுக்கு பொறுப்பான அலுவலர்களையும் மற்றும் தீவின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஊர்காவற்துறை பொலிசாரையும் இரு கடற்படை புலனாய்வு அதிகாரிகளும் விசாரணை செய்தனரா? அவ்வாறானால் அவர்களுக்குக் கிடைத்த பதில் என்ன? அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் பேசியிருக்காவிட்டால் அது ஏன்?

விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போய் ஒரு மாதம் கடந்துள்ளது. தக்க விசாரணையை முன்னெடுக்க நீங்கள் தவறியிருப்பதானது இந்த இருவரதும் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை அல்லது அவர்களது உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். சிரேஷ்ட பொலிஸ் அலுவலர்கள் இந்த விவகாரத்தை பொறுப்பேற்றிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. எச் .கே. பாலசூரிய சாதாரணமாக எங்களுக்கு அறிவித்துவிட்டார். இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கடற்படைத் தளபதியுடன் தான் தொடர்புகொள்ளவுள்ளதாக இன்னுமொரு மேலதிகச் செயலாளர் திரு. சுனில். எஸ். சிறிசேன தெரிவித்தார். பயங்கரவாத சந்தேகநபர்கள் என சொல்லப்படுபவர்களை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொறுப்பான பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு இந்த இருவரையும் தடுத்து வைத்திருப்பதாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ இல்லை. வடக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகிய இருவரும் அவர்களது விசாரணைகள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் வழங்க மறுத்துவிட்டனர். ஊர்காவற்துறை பொலிசின் பொறுப்பதிகாரி, எந்தவொரு தகவலையும் பகிரங்கப்படுத்த வேண்டாம் என தனக்கு "மேலதிகாரிகள்" கட்டளையிட்டுள்ளதாக எமக்குத் தெரிவித்தார்.

உங்களது அமைச்சு மிகவும் அடிப்படையான பதில்களை வழங்கத் தவறியமையை சோ.ச.க. கடுமையாகக் கண்டனம் செய்கின்றது. இந்த இருவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா, அவ்வாறானால் யாரால் ஏன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எங்களுக்கு அறிவிக்கக் கோருகிறோம். தற்போது அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பது எங்கே? என்ன நிபந்தனைகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்?

விமலேஸ்வரனும் மதிவதனனும் தடுத்துவைக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நாம் கோருகிறோம். இந்த இறுவரும் சட்டத்தை மீறவில்லை மற்றும் அவர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிராவிட்டால், அவர்களைக் கண்டுபிடிக்க உங்களது அமைச்சும் மற்றும் பொலிசும் எடுத்த நடவடிக்கைகள் பற்றிய முழு விளக்கத்தைத் தரவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். இந்த இரு விடயத்திலும், அவர்களது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நீங்களே பொறுப்பு என நாங்கள் கூறி வைக்கின்றோம்.

இந்தக் கடிதத்திற்கு காலந்தவறாத மற்றும் திருப்திகரமான பதிலை சோ.ச.க. எதிர்பார்க்கின்றது.

 

தங்கள் உண்மையுள்ள,

விஜே டயஸ்,

பொதுச் செயலாளர்,

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved