World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Nicolas Sarkozy wins French presidential election

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலா சார்க்கோசி வெற்றி

By Peter Schwarz
7 May 2007

Back to screen version

மே 16ம் தேதி ஜாக் சிராக்கை அடுத்து நிக்கோலா சார்க்கோசி பிரெஞ்சு ஜனாதிபதியாக பதவி ஏற்பார். சிராக்கினால் தோற்றுவிக்கப்பட்ட வலதுசாரி UMP யின் தலைவரான இவர் நேற்றைய ஜனாதிபதி தேர்தலில் 53 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி அடைந்தார். இவரை எதிர்த்து நின்ற சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செகோலென் ரோயால் 47 சதவிகித வாக்குகளை பெற்றார். நேற்று பதிவான 85 சதவிகித வாக்குகள் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமானது ஆகும். இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் சுற்றில் பதிவான 84 சதவிகிதத்தைவிட இது சற்று உயர்ந்தது ஆகும்.

மிக உயர்ந்த பதவிக்கு சார்க்கோசியின் எழுச்சி, பிரெஞ்சு உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு வலதுபுற மாற்றத்தை குறிக்கிறது. ஹங்கேரியில் இருந்து குடியேறிய ஒருவரின் மகனான, 52 வயதான சார்க்கோசி வறுமையில் வாடும் இளைஞர்கள் மற்றும் குடியேறியவர்கள் மீதான ஆத்திரமூட்டும் தன்மை நிறைந்த தாக்குதலை நடத்தி தனக்கு ஒரு பெயரை தேடிக் கொண்டவர் ஆவார். தீவிர தேசியவாதம் மற்றும் சட்டம் ஒழுங்கு, புதிய தாராள பொருளாதாரக் கொள்கைகள் கொண்டுவரவேண்டும் என்ற அழைப்புக்கள் இணைந்த ஒரு அரங்கில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கோலிச இயக்கத்தில் தீவிர உறுப்பினராக இருக்கும் சார்க்கோசி கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலில் உள்துறை மந்திரி, பின்னர் பொருளாதார மந்திரி, மீண்டும் உள்துறை மந்திரி என்று மந்திரி பதவிகளை வகித்துள்ளார்.

ஞாயிறு இரவு வாக்குச் சாவடிகள் முடப்பட்ட அரைமணி நேரத்தில் சார்க்கோசி ஒரு பகிரங்க உரையை நிகழ்த்தினார். "ஒரு மாபெரும் புகழ்பெற்ற, பழமையான, அழகிய நாட்டை சார்ந்தவர் என்பது பற்றிய சொல்லொணா பெருமிதத்தை தான் பெற்றுள்ளதாக" கூறி அவர் தன்னுடைய உரையை தொடங்கினார். ரோயால் அம்மையாருக்கு புகழாரம் சூட்டி, "அனைத்து பிரெஞ்சு மக்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன், அனைவருக்காவும் வாதிடுவேன்" என்று உறுதியளித்தபின், "தேர்தல் முடிவுகள் வலதிற்கு ஓர் அடிப்படை மாறுதலுக்கான உத்தரவு" என்று விளக்கினார். "கடந்த காலத்தின் பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் இவற்றில் இருந்து முறித்துக் கொள்ள பிரெஞ்சு மக்கள் முடிவு எடுத்துள்ளனர். தொழில், அதிகாரம், அறநெறி, மரியாதை, தகுதி ஆகியவற்றை நான் மறுசீரமைப்பேன்! பிரெஞ்சு மக்களுக்கு மீண்டும் பெருமையை நான் கொண்டுவருவேன்." என்று அவர் கூறினார்.

தேர்தல் பிரச்சாரங்களில் வெளியுறவுக் கொள்கை முக்கிய பங்கை கொண்டிராவிட்டாலும், சார்க்கோசி தன்னுடைய உரையின் பெரும்பகுதியை இப்பிரிவில் செலுத்தினார்.

"என் வாழ்நாள் முழுவதும் நான் ஐரோப்பிய சார்புடையவனாக இருந்துள்ளேன்; ஐரோப்பாவை கட்டமைக்க வேண்டும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன், இம்மாலை மீண்டும் பிரான்ஸ் ஐரோப்பாவிற்கு வந்துள்ளது என்றும் நம்புகிறேன்." ஆனால் "ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு பாதுகாப்பு என்று கருதாமல் உலகிலுள்ள அனைத்து ஆபத்துக்களையும் உள்ளே கொண்டுவரும் டிரோஜன் குதிரை (Trojan horse) என உணர்ந்திருக்கும் மக்களுடைய சீற்றத்தையும்" அறிந்து கொண்டு நடத்தல் தேவையாகும் என்று அவர் கூறினார். பிரெஞ்சு அனுமதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கி நுழைவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் தற்பொழுது பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தாலும், பிரச்சாரத்தின்போது, சார்க்கோசி ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி நுழைவதற்கு தான் ஒரு போதும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று வலியுறுத்தியிருந்தார்.

"எமது நட்பை அவர்கள் நம்பலாம் என்று நம்முடைய அமெரிக்க நண்பர்களுக்கு அழைப்பு விடுகிறேன்... தேவை ஏற்படும்போது எல்லாம், பிரான்ஸ் அவர்களுக்கு துணை நிற்கும் என்று அவர்களுக்கு கூற விரும்புகிறேன்" என்று சார்க்கோசி கூறினார்.

பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களின் முக்கிய பகுதிகளை சுட்டிக்காட்டி, "மத்தியதரைக்கடல் பகுதி ஒன்றியம் (Mediterranean Union)" ஒன்றை ஐரோப்பிய ஒன்றிய முன்மாதிரியில் கட்டமைக்கப்பட வேண்டும் என்று இறுதியாக அவர் அழைப்பு விடுத்தார்.

வாக்குச் சாவடிகள் மூடி ஐந்தே நிமிஷங்களுள் செகோலென் ரோயால் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டார். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு அவர் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நன்றியை தெளிவித்ததுடன், இன்னும் வலதிற்கு சோசலிஸ்ட் கட்சியை நகர்த்தப்போவதாகவும் உறுதி கொண்டார். "இடது புதுப்பிக்கப்படுவது ஆழப்படுத்தப்படும் என்பதற்கும் தற்போதைய எல்லைகளுக்கு அப்பால் புதிய ஒன்று குவிதலுக்கும் என்னை நீங்கள் நம்பலாம். அதுதான் வருங்கால வெற்றிகளுக்கு நிபந்தனை ஆகும்" என்று அவர் கூறினார்.

சோசலிஸ்ட் கட்சியின் செல்வாக்குப் படைத்த தலைவர்களுள் ஒருவரான டொமினிக் ஸ்ட்ரெளஸ் கான் 1995ல் பிரான்சுவா மித்திரோன் பதவியை விட்டபின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் மூன்றாம் முறையாக தோல்வியை சந்தித்த முடிவுகளை பற்றிக் கூறுகையில், இது ஒரு பேரழிவு என்றும், கட்சி போதுமான அளவு வலதிற்கு நகராததுதான் முக்கிய காரணம் என்றும் கூறினார். கட்சி புதுப்பிக்கப்படுவதற்கும் கட்சியை சமூக ஜனநாயக திசைவழி புறம் வளர்ப்பதற்கும் இது உரிய நேரம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேபோன்ற முடிவுகள்தான் கட்சியின் தலைவர் François Hollande இனாலும் கொள்ளப்பட்டன. "எமது தளத்தை தேவையான அளவிற்கு அகலப்படுத்தி, விரிவுபடுத்த வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை" என்று தேர்தல் முடிவுகளை பற்றிக் கூறுகையில் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில், விஷயம் முற்றிலும் எதிரானது ஆகும். சார்க்கோசி போன்ற வலதுசாரி மனிதரின் அரசியல் ஏற்றம் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குட்டி முதலாளித்துவ இடதுகள் கடந்த மூன்று தசாப்தங்களாக வலதிற்கு நகர்ந்துள்ளதின் விளைவாகும். ரோயாலே முற்றிலும் வலதுசாரித்தனமான பிரசாரத்தைத்தான் நடத்தினார்; குறிப்பாக பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிளேயரை தன் முன் மாதிரியாக கொண்டு சார்க்கோசியுடன் தேசியவாதம், குற்றங்களில் கடுமையாக இருத்தல் என்று ஒவ்வொன்றிலும் போட்டிபோட்டு கருத்துக்களை கூறினார்.

இது தோற்றுவித்த குழப்பம் மற்றும் மனச்சோர்வு இவற்றை சார்க்கோசி நன்கு பயன்படுத்திக் கொண்டார். "கடினமாக உழைக்கும் பிரான்சின்" பிரதிநிதி தான் என்றும், மிகச் சாதாரண மூலத்திலிருந்து இருந்து உயர்ந்து வந்தவர் என்றும், மரபார்ந்த அரசியல் ஸ்தாபன அமைப்பை எதிர்ப்பவர் என்றும் கடின உழைப்பு பலன் தரும் என்பதற்கு உத்தரவாதம் தருபவராகவும் தன்னை காட்டிக் கொண்டார்.

மித்திரோன் ஜனாதிபதி காலத்தின் கடைசி ஆண்டுகளிலேயே Jean-Marie Le Pen உடைய தேசிய முன்னணி (National Front) அதிகமாக ஆக்கிரமித்திருக்கும் புலம்பெயர்ந்தோர் இருக்கும் வறிய புறநகர்ப்பகுதிகளில் ஊடுருவ முடிந்தது; அது அங்கு வசிக்கும் மக்களுடைய துன்பங்கள் அச்சங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டது.

முதல் சுற்றில் லூ பென்னுக்கு வாக்களித்தவர்களில் 62 சதவிகிதத்தினர் இரண்டாம் சுற்றில் சார்க்கோசிக்கு வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது; லூ பென்னே வாக்களிக்காது தவிர்க்க வேண்டும் என்று கூறியபோதிலும் இந்நிலை இருந்தது. ரோயலுக்கு 12 சதவிகிதத்தினர்தான் வாக்களித்தனர், எஞ்சியோர் வாக்களிக்காமல் இருந்துவிட்டனர்.

தற்பொழுது சார்க்கோசியின் UMP க்கு பாராளுமன்றத்தில் மிகப் பெரிய பெரும்பான்மை உள்ளது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களுக்கு பின்னர் இது மாறலாம். ஞாயிறு இரவு வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் UMP 34 சதவிகிதம் கூடுதலாகவும், சோசலிஸ்ட் கட்சி 29 சதவிகிதம், UDF 12 சதவிகிதம் மற்றும் தேசிய முன்னணி 7 சதவிகிதம் அதிகமாகவும் வாக்குகள் பெறுவர் என்று தெரிகிறது. சார்க்கோசியின் பெரும் பலமானது, "இடது" என்று தவறாகப் பெயரிடப்பட்டுள்ள கட்சிகளின் முழுக் கோழைத்தனமும் வலதுசாரித் தன்மையும் ஆகும். அதன் வலதுபுறம் மேலும் கூடிய நகர்வும், தீவிரப் போராட்டங்களை அது நடத்த மறுப்பதும், தன்னுடைய பாராளுமன்ற பெரும்பான்மையை திடப்படுத்துவதற்கான வாய்ப்பை சார்க்கோசிக்கு தோற்றுவித்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved