World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French presidential election
Extreme right candidate Le Pen profits from the bankruptcy of the "left"

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்

தீவிர வலது வேட்பாளர் லூ பென் "இடதின்" திவால் தன்மையினால் ஆதாயம் அடைகிறார்

By Peter Schwarz in Paris
19 April 2007

Back to screen version

ஞாயிறன்று நடக்க இருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரி வேட்பாளர் ஜோன்-மரி லூ பென்னுக்கு கிடைக்கும் வாக்குகள் பதட்டத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கும் முன் நடந்த கடந்த ஜனாதிபதி தேர்தல்களில், தேசிய முன்னணி தலைவரின் முதல் சுற்று வெற்றி ஓர் அரசியல் நிலநடுக்கத்தை கட்டவிழ்த்துவிட்டது. கருத்துக் கணிப்புக்கள் எதுவுமே லூ பென்னிற்கு அத்தகைய முடிவை முன்கணித்துக் கூறவில்லை; 2002 தேர்தல் இரண்டாம் சுற்றில் அவர் நுழைந்தது சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் வேட்பாளர் முன்னாள் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன்னுக்கு அவமானம் நிறைந்த இறுதி அடியை பிரதிநிதித்துவப்படுத்தியது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் முடிவுகளை எதிர்த்து தெருக்களுக்கு வந்தனர்; சில நாட்களின் பின்னர் இந்த எதிர்ப்பாளர் எண்ணிக்கை மில்லியன்களாக உயர்ந்தது. ஆனால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகள் இந்த தன்னியல்பான சீற்றத்தை இரண்டாம் சுற்றில் கோலிச வேட்பாளர் ஜாக் சிராக்கிற்கு ஆதரவாகத் திருப்புவதில் வெற்றி அடைந்தன. குறிப்பாக, சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முற்போக்கு "இடது" என்று அழைக்கப்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் சிராக்கின் தேர்தல் பிரச்சாரத்திற்கு, தலைமை தாங்கின. இந்த அமைப்புக்கள் எதுவுமே ஒரு வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி வேட்பாளருக்கு இடையே விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்று மக்களை கட்டாயப்படுத்திய தேர்தலின் சட்டரீதியானதன்மை பற்றி சவால் செய்ய தைரியம் பெற்றிருக்கவில்லை.

சிராக் பின்னர் அதி பெரும்பான்மையில் தேர்தலில் வெற்றி பெற்றார். வாக்குகளில் தன் பங்கை வெறும் 20 சதவிகிதமாக முதல் சுற்று என்பதில் இருந்து இரண்டாம் சுற்றில் 82 சதவிகிதம் என்று அவர் உயர்த்தினார். லூ பென் தன்னுடைய பங்கை 17ல் இருந்து 18 சதவிகிதத்திற்குத்தான் அதிகப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆயினும்கூட, ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், கிட்டத்தட்ட 80 வயதான இந்த வாய்ச்சவடால் அரசியல்வாதி தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தீவிர வேட்பாளராக போட்டியிடும் திறனைக் கொண்டுள்ளார்.

சமீபத்திய கருத்துக் கணிப்புக்களின்படி, லூ பென்னிற்கான ஆதரவு சிறிது காலத்திற்கு சராசரியாக 15 சதவிகிதம் என்று இருந்தது. மீண்டும் தான் இரண்டாம் சுற்றுக்கு வரக்கூடும் என்று அவர் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளார். மொத்த வாக்குகளில் 25 சதவிகிதத்தைப் பெற முடிந்தால், இது முடியலாம் என்றும் தோன்றுகிறது. அதே கருத்துக் கணிப்புக்களின்படி, 2002 உடன் ஒப்பிடும்போது இப்பொழுது சிறிய கட்சிகளுக்கு இன்னும் குறைவான வாக்குகள்தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

ஆனால் ஒப்புமையில் சற்றே கூடுதலான தேர்தல் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள தேசிய முன்னணியினால் (National Front) முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆய்வின்படி, இந்த ஆதரவு முக்கியமாக தொழிலாள வர்க்கம், எழுது வினைஞர்கள் மற்றும் வறிய சமூகத் தட்டுக்களில் இருந்து வருகிறது. இந்த நிலைமைக்கான அரசியல் பொறுப்பு முக்கியமாக இடது என்று அழைக்கப்படும் கட்சிகளிடத்தில்தான் உள்ளது. அவைதான் களத்தில் லூ பென் சமூகப் பிரச்சினைகளை அவருக்கே உரிய வாய்ச்சவடாற் பாணியில் உரையாற்றுவதற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

தன்னுடைய தேர்தல் கூட்டங்கள் மற்றும் தொலைக்காட்சி தோன்றல்களில் லூ பென் மிக உயர்ந்த வேலையின்மை அளவு பற்றி குறைகள் கூறி, விவசாயிகள், சிறு வணிகர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது பற்றிக் கூறியும், தொழிலாள வர்க்கப் பின்னணியில் இருந்து ஆண், பெண் குழந்தைகள் பல்கலைக் கழகத்தில் சேரமுடியாமல் இருக்கும் தற்போதைய கல்விமுறை பற்றிக் கவலையையும் தெரிவித்துள்ளார். "அமைப்பு முறைக்கு" எதிராகப் போரிடும் ஒரே வேட்பாளர் தான்தான் என்றும் லூபென் தன்னை விவரித்துக் கொள்ளுகிறார்.

புலம்பெயர்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு, குறுகிய பற்று, இனவெறி போன்ற தான் மரபார்ந்த வகையில் கையாளும் கருத்துக்களை லூ பென் கைவிட்டுவிட்டார் என்று இதன் பொருள் அல்ல; அவை இன்னும் பின்னுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தந்தையின் தேர்தல் பிரச்சாரத்தை அமைக்கும் அவருடைய மகள் மரியான், அரசியலில் அவருடைய வாரிசு என்று கருதப்படுபவர், தேசிய முன்னணிக்கு இன்னும் நிதானமான தோற்றத்தைத்தான் கொடுக்க முயன்றுள்ளார். அவர் Antilles கரீபியன் தீவுக் கூட்டத்திலிருந்து ஒரு பிரெஞ்சு கறுப்பு பெண்மணியை FN தேர்தல் சுவரொட்டியில் இடம்பெறக் கூட செய்தார் - இந்த ஆட்சேர்ப்பு தந்திரம் கட்சியின் சில பகுதிகளில் இருந்து குரோத எதிர்விளைவைத்தான் சந்தித்தது.

தன்னுடைய பெயரின் முக்கியத்துவத்தை மரியான் லூ பென் நன்கு அறிந்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் 1974ல் வேட்பாளராக முதலில் நின்ற அவரது தந்தையார், அந்தக் காலகட்டத்தில் வலதுசாரி தீவிரம் மற்றும் தீவிர வெளிநாட்டவர் எதிர்ப்பு ஆகியவற்றை அதிகம் வலியுறுத்தவில்லை எனினும், அப்பிரச்சினைகளுடன் உறுதியாக நிற்பவர் ஆவார். மாறாக UMP, மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களான நிக்கோலா சார்க்கோசிக்கும், செகோலென் ரோயாலுக்கும் அத்தகைய கருத்துக்களை விட்டுவிட்டார்; அதையொட்டி அவர்கள் ஒருவரோடு ஒருவர் எவர் கூடுதலான தேசியவாதி என்று போட்டியிடுகின்றனர். லு பென் இதன்பின்னர் நகல்களைவிட உயர்ந்த அசல் தான்தான் என்று காட்டிக் கொள்ளுகிறார்.

ஒரு தேர்தல் கூட்டத்தில் நன்கு அறியக்கூடிய களிப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் கூறியதாவது: "ஜனாதிபதித் தேர்தலில், நான் என்னுடைய போட்டியாளர்களை புலம்பெயர்தல், நாட்டுப்பற்று, நாட்டு அடையாளம் ஆகியவற்றை அவர்களுடைய பிரச்சாரத்தின் மையத்தானத்தில் இருத்தி வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். முப்பது ஆண்டுகளாக இதே பிரச்சினைகளை எழுப்பியதற்கு நானும் எனக்கு வாக்களித்தவர்களும் தூற்றப்பட்டோம், அவமதிக்கப்பட்டோம், தாழ்த்தப்பட்டோம்... ரோயல் அம்மையார் இப்பொழுது தன்னை மூவர்ணக் கொடியில் உடுத்திக் கொள்ள முற்பட்டு, எனக்குப் பின் உரத்த குரல் கொடுக்கும் சார்கோசியின் பின் ஓடிவருகிறார்."

அவருடைய போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நேரத்தில் அரசாங்கத்தில் தீவிரமாக இருந்து இப்பொழுது அவர்கள் முன்வைக்கும் கொள்கைகளை செயல்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளனர் என்ற விதத்தில் அவர் முடிக்கிறார். தான்தான் தன்னுடைய கோஷங்களை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக லூ பென் கூறுகிறார்.

தேசிய முன்னணிக்கு தொடர்ந்த ஆதரவு இருப்பதற்கு தீவிரப்போக்கு இடது கட்சிகள்தான் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

Parti des travailleurs (Pierre Lambert ன் முன்னாள் OCI), மற்றும் அதன் வேட்பாளர் ஜெராட் ஷிவார்டி ஆகியோர் தங்கள் தேசியவாத தேர்தல் பிரசாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக நடத்துகின்றனர்; இது பலவிதங்களிலும் லூ பென்னுடைய பிரச்சாரத்தை ஒத்து இருக்கிறது. லூ பென்னை போலவே ஷிவார்டி ஐரோப்பிய ஒன்றியத்தைத்தான் பிரான்சை பீடித்துள்ள அனைத்து சமூகத் தீமைகளுக்கும் காரணம் என்று குறைகூறியுள்ளார். "ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறித்துக்கொள்ளுதல்" என்பதை தன் பிரச்சாரத்தின் மையத்தானமாக ஷிவார்டி கொண்டிருக்கையில், லூ பென் கூட்டு ஐரோப்பிய நாணய முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து கூடுதலான வகையில் வெளிநாட்டுப் பொருட்களின் மீது காப்புவரி அதிகமாக சுமத்த வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.

தொழிலாளர் போராட்டம் மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் இவற்றின் வேட்பாளர்களான ஆர்லெட் லாகியே, ஒலிவியே பெசன்ஸநோ ஆகியோர் சமூகப் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு முதலாளித்துவ முறையை குறைகூறியுள்ளனர். ஆனால் நீண்ட காலமாகவே இரண்டும் சோசலிஸ்ட் கட்சிக்கு அரசியல் மூடுதிரையை அளித்து வருகின்றன; சோசலிஸ்ட் கட்சியோ லூ பென்னுடைய கருத்துக்களுக்கேற்ப தன் கொள்கையை வகுக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தல் இரண்டாம் சுற்றில் பெசன்ஸநோ சிராக்கிற்கு வாக்களிக்குமாறு கோரினார்; அதேவேளை லாகியே முதல் சுற்றில் வாக்காளர்களுக்கு அவருக்கு வாக்களிப்பது என்பது "இடதை" (அதாவது சோசலிஸ்ட் கட்சியை) கீழ்ப்படிய வைக்கும் என்ற செய்தியுடன் வேண்டுகோள் விடுத்தார். சமீபத்திய லூத் ஊவ்றியேர் தேர்தல் சுவரொட்டியில் லாகியேக்கு அளிக்கப்படும் வாக்கு "வலதை விரட்டி இடதை பணியவைக்கும்" என்று கூறியுள்ளது.

சோசலிஸ்ட் கட்சி, அதனை அண்டி இருக்கும் "இடது" ஆதரவாளர்கள் ஆகியோருடன் முறித்துக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் ஒன்று சர்வதேச சோசலிச முன்னோக்குடன் பிரசாரத்தை நடத்தி, அழுத்தும் சமூக நெருக்கடியில் இருந்து வெளியேறும் வழியைக் காட்டினால்தான், லூ பென்னுடைய தேசிய முன்னணியின் செல்வாக்கை முறிக்க முடியும். இத்தகைய முன்னோக்குத்தான் துல்லியமாக பிரான்சின் முற்போக்கு மற்றும் இடது கட்சிகளால் நிராகரிக்கப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved