World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியாSEP candidate in Wales demands the return of missing Tamil socialist வேல்ஸில் சோ.ச.க. வேட்பாளர் காணாமல் போயுள்ள தமிழ் சோசலிஸ்டுகளின் விடுதலையைக் கோருகிறார்14 April 2007சவுத் வேல்ஸ் சென்றலுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் பூபாளசிங்கம் தில்லைவரோதயன் இலங்கையில் சோ.ச.க. க்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைகளைக் கண்டனம் செய்து வெளியிட்ட அறிக்கையை இங்கு பிரசுரிக்கின்றோம். வேல்ஸ் சட்டசபைத் தேர்தலில் பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரனையும் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனையும் இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவமும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகின்றேன். இந்த இருவரும் மார்ச் 22 மாலை ஊர்காவற்துறை தீவு நோக்கி பயணிக்கையில் புங்குடுதீவில் உள்ள வீதித் தடையைக் கடந்த பின்னர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் பயணித்த கடல்வழிப் பாலமும் தீவுகளும் இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தினதும் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இலங்கை சோ.ச.க. மூன்று வாரங்களாக பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த போதிலும், இன்னமும் விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பருக்கும் என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குற்றப் புலணாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஊர்காவற்துறை வீதித் தடையில் எமது அங்கத்தவரை விசாரித்ததற்கான கண்கண்ட சாட்சி சோ.ச.க. யின் சொந்த விசாரணைக்குக் கிடைத்துள்ளன. விமலேஸ்வரன் சுமார் 10 ஆண்டுகால சோ.ச.க. உறுப்பினராவார். அவர் யுத்தத்தை எதிர்ப்பவராகவும் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை காப்பவராகவும் பிரதேசத்தில் நன்கு பிரசித்தி பெற்றவராவார். விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனின் தலைவிதிக்கு அரசாங்க அதிகாரிகளே முழுப் பொறுப்பு ஆகும். கிழக்கில் திருகோணமலையில் கடந்த ஆகஸ்ட் 7 சோ.ச.க. ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முறையான விசாரணையை முன்னெடுக்கவும் மற்றும் கொலையாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரவும் இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தப் படுகொலை நடந்த இடமும் பாதுகாப்புப் படையினரின் காட்டுப்பாட்டிலான பிரதேசமாகும். மற்றும் அவர்களே இதற்குப் பொறுப்பு என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன. இலங்கையில் காணாமல் போகும் சம்பவங்களும் படுகொலைகளும் வழமையாகி வருகின்றன. கடந்த ஆண்டு பூராவும் 4,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு, 225,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக கொழும்பில் ஆட்சிசெய்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த யுத்தத்தின் பெறுபேறாக 75,000 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு சாதாரண மக்களின் உரிமைகளை காக்கும் எண்ணம் கிடையாது என்பது தெளிவு. 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்ற இராஜபக்ஷ, "சமாதான முன்னெடுப்புகள்" என சொல்லப்படுவதற்கு முடிவுகட்டுமாறும் தமிழ் மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடுங்குமாறும் கோரிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தார். இதன் விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் இடம்பெயர்வுகளை எதிர்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளார்கள். அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளால் ஆதரவளிக்கப்படும் சமாதான முன்னெடுப்புகள் அவர்களது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களையும் அடைவதற்காகவேயன்றி உழைக்கும் மக்களுக்காக அல்ல. புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" இலங்கை அரசாங்கத்திற்கு சுயாதீனமாக இயங்க உதவுவதால் அது அதை ஆதரிக்கின்றது. மேலைத்தேய சக்திகளும் அவர்களின் பங்காளிகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கைப்பற்றிக்கொள்வதன் பேரில் பொய்யை அடிப்படையாகக் கொண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிராக சட்டவிரோத யுத்தம் ஒன்றை முன்னெடுத்து ஆப்கானியர்கள் மற்றும் ஈராக்கியர்களுக்கு மாபெரும் பேரழிவை உருவாக்கிவிட்டுள்ளனர். அமெரிக்க நிர்வாகம், இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக அதனது பொருளாதார பலத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள உலகை மறு ஒழுங்கு செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. இது காலனித்துவத்தின் 21ம் நூற்றாண்டின் புதிய வடிவமாகும். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, ஜனநாயக உரிமைகளைக் காக்கவும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுடன் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவும் போராடுகிறது. அது யுத்தத்தை எதிர்ப்பதாலும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து கொழும்பு அரசாங்கம் உடனடியாக துருப்புக்களை வெளியேற்ற வேண்டும் எனக் கோருவதாலும் இலங்கை பூராவும் பிரசித்திபெற்றுள்ளது. ஏகாதிபத்திய யுத்தத்தையும் ஸ்கொட்லாந்திலும் மற்றும் வேல்ஸிலும் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசியவாத அரசியலையும் எதிர்ப்பதற்காக நான் பிரித்தானியாவில் தேர்தலில் போட்டியிடுகின்றேன். சர்வதேச முன்நோக்கு ஒன்றில் யுத்தம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான சுயாதீனமான இயக்கத்தின் அவசியமான அபிவிருத்தியில் இருந்து தொழிலாளர் வர்க்கத்தை திசைதிருப்பும் வழிமுறையாக தேசியவாதம் ஊக்குவிக்கப்படுவதற்கு தொழிற் கட்சியே பொறுப்பாகும். இதே போல், ஸ்கொட்லாந்து சோசலிசக் கட்சியும் சொலிடரிடி கட்சியும் தெளிவற்ற சோசலிச வார்த்தை ஜாலங்களுப் பின்னால் தேசியவாதத்திற்கும் மற்றும் பிரிவினைவாதத்திற்கும் வக்காலத்து வாங்குவது போலவே, தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற தமிழ் தேசிய இயக்கங்களும் தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்தி அவர்களைப் பிழையாக தகவமைவுபடுத்துகின்றனர். தொழிலாளர்கள் இலங்கை தேசியவாதத்தின் துன்பகரமான அனுபவங்களின் படிப்பினைகளைக் கற்கவேண்டும். தேசியவாதத்திற்கும் சோசலிசத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாததோடு அது இனவாதத்தையும் உள்நாட்டு யுத்தத்தையும் மட்டுமே விளைவாகத் தரும். நான் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தேசியவாத அரசியலை எதிர்க்குமாறு கேட்டுக்கொள்வதோடு இன, தேசிய அல்லது சாதியில் அன்றி, வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். பயங்கரவாத அச்சுறுத்தல் என்ற பெயரின் கீழ் தொழிற் கட்சி அரசாங்கம் முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தை நான் எதிர்க்கின்றேன். இது புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாடுகடந்து சேவையாற்றும் தொழிலாளர்களை பலிக்கடாக்களாக்குவதை இலக்காகக் கொண்டதாகும். தொழிற் கட்சி அரசாங்கத்தால் அகதிகள் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அடிப்படையான நிலைப்பாடு ஒன்றை எடுக்க வேண்டும். அகதிகள் திருப்பி அனுப்பப்படும் போது அவர்கள் எத்தகைய ஆபத்திற்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, இலாப அமைப்பிற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் உலகத் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை இலக்காகக் கொண்ட வெகுஜன சோசலிசக் கட்சியைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணையுமாறு நான் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். விமலேஸ்வரனையும் அவரது நண்பர் மதிவதனனையும் விடுதலை செய்துகொள்வதற்கான பிரச்சாரம் இந்தப் போராட்டத்தின் பிரிக்கமுடியாத பாகமாகும். இவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக விசாரணை ஒன்றைக் கோரி கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Gotabhaya Rajapakse, N. G. Punchihewa கடிதங்களின் பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பிவையுங்கள். Socialist Equality Party, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த ஒன்லைன் online form படிவத்தைப் பயன்படுத்தவும். |