:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: SEP public meeting to demand
inquiry into party member's disappearance
இலங்கை: கட்சி உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பான விசாரணையைக்
கோரி சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்கக் கூட்டம்
30 March 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் மற்றும் அவரது நண்பர் சிவநாதன்
மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக அவசர விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தையும்
இராணுவத்தையும் கோருவதற்காக, ஏப்பிரல் 9 கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்திற்கு சோசலிச சமத்துவக்
கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமுமே பொறுப்பு என
சோ.ச.க. தெரிவிக்கின்றது. இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள்
மூழ்கடித்துள்ளதோடு கொடூரமான அவசரகாலச் சட்டங்களையும் அமுல்படுத்தி, தீவு பூராவும் பயங்கர
ஆட்சியொன்றை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். பல காணாமல் போன சம்பவங்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள்
மற்றும் ஏனைய வன்முறைக் குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பாதுகாப்புப் படையினரில் எவரும் கைது செய்யப்படவில்லை.
விமலேஸ்வரனும் மதிவதனனும் மார்ச் 22 மாலை வடக்கில் யாழ்ப்பாணத்தை அண்டிய
தீவில் காணாமல் போயுள்ளனர். இவர்கள் இருவரும் மாலை 6.30 மணியளவில் புங்குடுதீவையும் ஊர்காவற்துறையையும்
இணைக்கும் கடல்வழிப் பாலத்தை நோக்கி புங்குடுதீவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்ததை பலர்
கண்டுள்ளனர். இவர்கள் ஊர்காவற்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள். புங்குடுதீவில் உள்ள கடற்படை முகாமின்
கட்டளை அதிகாரி, இவர்கள் இருவரும் கடல்வழிப் பாதையில் புங்குடுதீவுப் பகுதியில் உள்ள வீதித் தடையை கடந்துள்ளதாக
கூறுகின்றார். கடல்வழிப் பாலத்தின் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீதித் தடைக்குப் பொறுப்பான, ஊர்காவற்துறை
கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி, இவர்கள் தொடர்பாக எதுவும் தனக்குத் தெரியாது என்று தெரிவிக்கின்றார்.
விமலேஸ்வரனும் மதிவதனனும் இரண்டாவது சோதனைச் சாவடியை கடந்துள்ளனர்
அல்லது கடக்கவில்லை. அவர்கள் கடந்திருந்தால், கடற்படையிடம் அது தொடர்பான பதிவு இருக்கும். அவர்கள்
கடக்கவில்லை எனில், அவர்கள் இரண்டில் ஏதாவதொரு வீதித் தடையில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,
அல்லது இரண்டாவது வீதித் தடையை அனுகும் முன்னரே காணாமல் போயுள்ளனர். இந்த கடல்வழிப் பாலம் இராணுவத்தின்
கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற நிலையில், இவர்கள் காணாமல் போயுள்ளமைக்கு கடற்படையே நேரடி பொறுப்பாளியாகும்,
இல்லையேல், இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்களை விசாரிக்கும் இயலுமை கடற்படைக்கு உண்டு.
கடந்த ஆண்டு பூராவும், இராணுவத்தால் அல்லது அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகளால்
இயக்கப்படும் கொலைப் படைகளால், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் நூற்றுக்கணக்காண தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்,
கடத்தப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல் போயுள்ளனர்". எல்லாவற்றுக்கும் மேலாக, ஊர்காவற்துறை மற்றும்
அதைச் சூழ உள்ள தீவுகளிலும் பெருமளவில் கடற்படை நிலைகொண்டிருப்பதோடு, உள்ளூர் தமிழ்ப் பொதுமக்களை
அச்சுறுத்துவதிலும் நசுக்குவதிலும் துணைப்படையான வலதுசாரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (ஈ.பி.டி.பி.)
அது நெருக்கமாக செயற்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சு, ஊர்காவற்துறையிலும் புங்குடுதீவிலும் உள்ள கடற்படை
முகாம்கள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் சோ.ச.க. உத்தியோகபூர்வமாக முறைப்பாடுகள்
செய்திருந்த போதிலும், விமலேஸ்வரனையும் மதிவதனனையும் கண்டுபிடிக்க பொலிசாரோ அல்லது இராணுவமோ
இதுவரையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எமது பகிரங்க கூட்டத்திற்கு வருகை தருமாறும் மற்றும் இந்த இருவரும் இருக்கும் இடத்தை
கண்டுபிடிக்க உடனடியான தக்க விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோருவதற்கான எமது பிரச்சாரத்திற்கு
ஆதரவளிக்குமாறும் இலங்கையில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும்
சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.
கூட்டம் நடைபெறும் இடம்: பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு.
நேரம்: ஏப்பிரல் 9 திங்கட்கிழமை மாலை 4.00 மணி. |