WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
In wake of West Bengal massacre: Indian workers must
advance an independent socialist programme
மேற்கு வங்க படுகொலையை பின்தொடர்ந்து: இந்திய தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான
சோசலிச வேலைத்திட்டத்தை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்
By Nanda Wickremasinghe
23 March 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
கடந்த வாரம் நந்திக்கிராமில் விவசாயிகள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை
அடுத்து இந்தியா முழுவதும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), (CPM)
தலைமையிலான மேற்கு வங்க இடது கூட்டணி அரசாங்கம், இந்நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு மூர்க்கத்துடன் பல
தந்திர உத்திகளைக் கையாண்டு வருகிறது.
மார்ச் 17 அன்று ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதற்காக நந்திக்கிராமில்
மாநில அரசாங்கம் நிலத்தை கையகப்படுத்தாது என்று இடது முன்னணி கட்சிகள் அறிவித்தன. இப்பகுதியில் மிகப் பெரிய
அளவில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படைகளும் "படிப்படியாக" குறைக்கப்பட்டுவிடும் என்றும் அவை அறிவித்துள்ளன;
மேற்கு வங்கத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்
என்றும் கூறியுள்ளன.
இந்தோனேசியாவை தளமாக கொண்டுள்ள சலீம் குழுமத்தால் நடத்தப்பட இருக்கும்
சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக நந்திக்கிராம் பகுதியில் 10,000 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்ய முற்பட்ட
அரசாங்கத் திட்டங்களை எதிர்த்த விவசாயிகள்மீது மார்ச் 14ம் தேதி, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது,
14 விவசாயிகள் கொல்லப்பட்டனர், குறைந்தது 75 பேராவது காயமுற்றனர். மாநில முதல் மந்திரியும்
CPM
இன் அரசியற்குழு உறுப்பினருமான புத்ததேப் பட்டாச்சார்ஜி அரசாங்கத்தின் அதிகாரத்தை அப்பகுதியில் மீண்டும் நிலைநிறுத்தும்
பொருட்டு ஏராளமான ஆயுதங்கள் ஏந்திய போலீஸ் பிரிவை அனுப்பிவைத்திருந்தார். போலீசாரின் தாக்குதலுடன்
CPM
குண்டர்களும் சேர்ந்து கொண்டனர் என்பதற்கான சான்றுகள் இப்பொழுது வெளிப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் ஆழ்ந்த சீற்றத்தின் வெளிப்பாடாக மார்ச் 16ம் தேதி மேற்கு வங்க
மக்கள் மாநிலம் முழுவதும் ஒரு பொது வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். எதிர்ப்பாளர்கள் சாலைகள் மறியல்
மற்றும் இரயில்கள் மறியலை மாநிலம் முழுவதும் மேற்கொண்டனர். மேற்கு வங்கத்தின் தலைநகரமான
கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டத்தினர் போலீசை எதிர்கொண்டனர். பள்ளிகளும் கல்லூரிகளும் முடப்பட்டன. அரசாங்க
அலுவலகங்களில் 20ல் இருந்து 25 சதவிகித ஊழியர்கள்தாம் வந்திருந்தனர். அரசாங்கத்தால் திரட்டப்பட்டிருந்த
போலீசார் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1,400 பேரை கைது செய்திருந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI),
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP),
பார்வர்டு பிளாக் கட்சி (FB)
என்னும் இடது முன்னணிக் கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை வெளிப்படுத்திய அளவுக்கு
வெகுஜனங்களின் கோபம் இருந்தது. இதன் மூலம் இக்கட்சிகள் இடது முன்னணியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய
தாராள பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவாக
CPM முதல் மந்திரி செயல்பட்டுக்கொண்டிருந்தபோதும் அவரது
நடவடிக்கைகளிலிருந்து தங்களைத் தள்ளி வைத்துக்கொள்ள முயன்றன.
வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்ததில் வலதுசாரி திரிணாமூல் காங்கிரசும், இந்து
மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியும் இருந்தன. இந்த முதலாளித்துவ கட்சிகள் தொழிலாளர் மத்தியில் பெரிதும்
இழிவுபடுத்தப்பட்டு விட்டபோதிலும், தங்கள் வலதுசாரி செயற்திட்டத்தை வளர்ப்பதற்காக மேற்கு வங்க அரசாங்கத்திற்கு
எதிரான மக்கள் உணர்வை சுரண்டிக்கொள்ள முயலுகின்றன.
திரிணாமூல் காங்கிரஸ் மற்றும்
BJP ஆகியவை,
உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரங்களின் இழப்பில் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட
பொருளாதார "சீர்திருத்தங்களுக்கு" தீவிர ஆதரவு கொடுக்கும் கட்சிகளாகும்.
BJP தலைமையில்
முன்பு இருந்த இந்தியாவின் தேசிய அரசாங்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் திட்டத்தை
தொடக்கியிருந்தது; தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அதைத்தான் தீவிரமாக நாடு
முழுவதும் செயல்படுத்த முற்பட்டுள்ளது.
இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்திற்காக நிலத்தை அபகரிக்கும் ஒரு
பெயரளவிலான "இடது" அரசாங்கத்திற்கெதிராக உழைக்கும் மக்களுக்கு தாங்கள்தாம் பாதுகாவலர்கள் என்று
வலதுசாரிக் கட்சிகள் காட்டிக் கொள்ள முடியும் நிலைமைகளை உருவாக்கியதற்கான முழுப் பொறுப்பையும்
CPM
மற்றும் அதன் தோழமை கட்சிகள்தாம் பொறுப்பேற்பர்.
தேசிய அளவில், இடது முன்னணிதான், இந்தியாவின் மரபார்ந்த ஆளும் முதலாளித்துவ
கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையில் செயல்படும் ஒரு ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA)
அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து தாங்கிவருகிறது. இந்த அரசாங்கம்தான் உணவுப் பொருட்கள் விலைகள் பெரிதும்
உயர்ந்துள்ளமைக்கும், வேலையின்மை பெருகியுள்ளமைக்கும் தலைமை வகிக்கும் அதே நேரத்தில், இந்தியாவின்
இயற்கை மற்றும் மனித வளங்களை சுரண்டுவதற்கு வசதியாக நிதிய உயரடுக்கினரால் கோரப்படும் இராணுவம்
மற்றும் உள்கட்டுமான வளர்ச்சித் திட்டங்கள் மீதாக அரசு நிதியங்களை தாராளமாய் செலவழித்து வருகிறது.
கிராமப்புற வறியோரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தன்னுடைய சொந்த
சுயாதீனமான சோசலிச அரசியல் வேலைத்திட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்காவிடில்,
பிற்போக்குசக்திகள் -- காங்கிரஸ் அரசாங்கமும் அதன் வலதுசாரி
BJP மற்றும்
திரிணாமூல் காங்கிரஸ் போட்டியாளர்களும் இந்திய அரசியலை மேலும் வலதுபுறம் தள்ளுவதற்கு, "சோசலிஸ்ட்"
இடது முன்னணி குற்றங்களின் காரணமாக ஏற்பட்ட உழைப்பாளர்களின் சீற்றத்தை சூழ்ச்சிகரமாக கையாளுவதற்கு
சுதந்திரமாக விடப்படுவர்.
காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையில் மேற்கு வங்க அரசாங்கத்தின்
குற்றச்செயலில் பங்கானது இடது முன்னணியின் அரசியல் நம்பகத்தன்மையை கீழறுத்துள்ளது குறித்து ஏற்கனவே பல
செய்தி ஊடக பண்டிதர்கள் களிப்புற்றுள்ளனர். UPA
விரும்பும் தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் கொண்டுவரல் மற்றும் ஏனைய வலதுசாரி சீர்திருத்தங்களுக்கு இடது
முன்ணியில் பொது எதிர்ப்பு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும் வர்ணனையாளர்கள், இந்த நெருக்கடி இடது
முன்னணியை இன்னும் கூடுதலான வகையில் அரசியலில் ஒத்திசைந்துபோகும் தன்மையைப் பெற வைக்கும் என்று
கணித்துள்ளனர்.
மார்ச் 14 படுகொலையை தொடர்ந்த உடனடி நாட்களில்,
CPM மற்றும் அதன்
முக்கிய இடது முன்னணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சிகர சோசலிச
கட்சி ஆகியவை அவசரக் கூட்டங்களை நடத்தின. CPM
இன் தோழமைக் கட்சிகளில் சில மேற்கு வங்க அரசாங்கத்தில் இருந்து நந்திக்கிராமில் நடைபெற்ற போலீஸ்
நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விலகுவதாக அச்சுறுத்தியிருந்தன. ஆயினும், இது தங்களை
படுகொலையில் இருந்தும் தங்களுக்கிடையிலும் சற்றுத் தள்ளி வைத்துக் கொள்ளுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு
சூழ்ச்சித்திட்டமாகும் மற்றும் மேற்கு வங்க ஆட்சியில் தங்களுக்கு இன்னும் கூடுதலான பங்கை வழங்கிக்
கொள்ளுவதற்காக நந்திக்கிராம் சோகத்தை பயன்படுத்திக் கொள்ளுவதுமாகும்.
கூட்டங்களின் முடிவில் இடது முன்னணி பங்காளி கட்சிகள் அரசாங்கத்தின் முதலீட்டாளர்
ஆதரவு செயற்பட்டியலுக்கு தங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதாக முடிவு எடுத்தன.
படுகொலைகளுக்கு எவ்வித மன்னிப்பும் கோரத் தயாராக இல்லை என்று
பட்டாச்சார்ஜி கூறிவிட்டார்; மற்றும் அரசாங்கத்தின் நிலக் கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
வலதுசாரி-நக்சலைட் (மாவோயிச) இனைந்த ஒரு ஆத்திரமூட்டல் என்று தொடர்ந்து உட்குறிப்பாக காட்டினார்.
ஆனால் தான் "நிலைமை சரியாக மதிப்பீடு" செய்யவில்லை என்பதை இப்பொழுது அவர் ஒப்புக்கொள்ளுகிறார்;
இடது முன்னணியின் மற்ற கூறுபாடுகளுடன் கூடுதலான ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் உறுதிமொழி
கொடுத்துள்ளார். வருத்தம் காட்டும் செயற்பாடாக பட்டாச்சார்ஜி,
CPI தலைவர்கள்
அவரை வந்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு பதிலாக, தானே
CPI தலைமையகத்திற்கு
விஜயம் செய்தார்.
படுகொலைக்கு மறுதினம்
CPM ன் மூத்த தலைவர் ஜோதி பாசு "இடது முன்னணி
மந்திரிசபை, மற்றும் மந்திரிசபையின் முக்கிய மந்திரிகள் ...ஆகியோரிடம் எதுவும் தெரிவிக்காமல்
இருந்ததற்காக" பட்டாச்சார்ஜியை வெளிப்படையாக விமர்சித்தார். "தன்னுடைய நீண்ட அரசியல் அனுபவத்தை"
மேற்கோளிட்டு CPM
அரசாங்கத்தை தனியே நடத்த முடியாது என்று அவர் எச்சரித்தார்: "ஒரு கூட்டணி அரசாங்கமாக செயல்பட
வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
மேற்கு வங்கத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தோற்றுவிக்கும் இடது
முன்னணி அரசாங்கத்தின் கொள்கை இந்தியாவை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கும் இந்திய ஆளும் உயரடுக்கின்
உந்துதலின் ஒரு பகுதியாகும். மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல் மந்திரி என்னும் முறையில் பாசு மாநிலத்தில் புதிய
தாராள பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கு வழிவகுத்தார்; இதில் முக்கிய மேற்கத்திய
தலைநகரங்களுக்கு வெளியார் நேரடி முதலீட்டை நாடும் வகையில் அரசாங்கம் மற்றும் வணிகக் குழுக்கள்
அனுப்பப்பட்டதும் ஒரு பகுதியாக இருந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் நான்கு தசாப்தங்களில் இரண்டு ஸ்ராலினிசக்
கட்சிகளும் --CPM, CPI --
தேசிய சீர்திருத்தக் கொள்கைகளை பின்பற்றி இந்தியாவின் முதலாளித்துவ குடியரசு கட்டமைப்பிற்குள் சமூக
சீர்திருத்தங்கள் வேண்டும் என்று வலியுறுத்தின. காங்கிரஸ் கட்சியுடன் எந்த அளவிற்கு பாராளுமன்ற அரசியலில்
ஒத்துழைப்பு கொடுப்பது என்பதில் இரு கட்சிகளும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், இரண்டுமே ஸ்ராலினிச
மென்ஷிவிச இரண்டு கட்ட புரட்சியை தீவிரமாக ஆதரித்து வந்தன.
அவர்கள் கூறிக்கொள்ளும் ஏகாதிபத்திய அடக்குமுறை, மற்றும் நிலப்பிரபுத்துவ
பிற்போக்குத்தனத்தின் மரபுவழிச்செல்வம் என்பதன் அர்த்தம், முன்பார்க்கக்கூடிய எதிர் காலத்தை பொறுத்தவரை
தொழிலாள வர்க்கம், இந்திய முதலாளித்துவத்தை வலிமைப்படுத்துவதில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின்
பேச்சுப்பாங்கில் முற்போக்கானதாக தோன்றும் "நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு", "ஏகாதிபத்திய எதிர்ப்பு"
கூறுபாடுகளின் கூட்டாளியாக வேலைசெய்வதை விட அதிகமாக வேறுஎதனையும் ஆசைப்படக்கூடாது என்பதாகும்.
இவ்விதத்தில் 1970களின் தொடக்க மற்றும் மத்திய பகுதிகளில், இந்திய
முதலாளித்துவ வர்க்க அரசு தலைமையிலான தேசிய அபிவருத்தி செயற்திட்டம் படிப்படியாய் வெளிப்பட்ட
காலத்தில், இந்தியா தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சியினால் அதிர்ந்த காலத்தில்,
CPI முறையாக
இந்திரா காந்தியின் காங்கிரசுடன் உறவு கொண்டு, காந்தியின் அவசரநிலைப் பிரகடனத்தை ஆதரிக்கும் அளவிற்குக்
கூடச் சென்றது. இதற்கிடையில் CPM
வலதுபுறம் (BJP
யின் முன்னோடி) ஜனசங்கம் முதலான முதலாளித்துவக் கட்சிகள் முதல் சமூக ஜனநாயகவாதிகள் வரையிலான
கட்சிகளுடன் கூட்டைக் கொண்டது.
ஜனதா கட்சிக்கு சிபிஎம் தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படுத்தியதன் துணை விளவாக
1977ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கம் மேல்எழுந்தது. 1977ல் மேற்கு வங்க தேர்தலில்
தொடக்கத்தில் இடது - ஜனதா தேர்தல் கூட்டில் CPM
அதன் ஜனதா கூட்டாளிகளுக்கு பெரும்பான்மை இடங்களைக் கொடுக்க முன்வந்தது. பின்னர் இன்னும் கூடுதலான
பெரும்பான்மை வேண்டும் என்று ஜனதா வலியுறுத்தியதன் காரணமாக கூட்டணி சிதைந்த பொழுது, தொழிலாளர்
விவசாயிகள் அதிருப்தி என்ற பேரலையில் அதிகாரத்திற்குத் தாங்களே முன் தள்ளப்பட்டதில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள்
திகைத்து நின்றனர்.
பதவியிலிருந்த தொடக்க காலத்தில், மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம்
குறைந்த அளவிற்கு நிலச் சீர்திருந்தங்களை செய்து கிராமப்புற மக்களிடையே வலுவான ஆதரவை சேர்த்துக்
கொண்டது. அதேநேரத்தில் இடது முன்னணி இந்தியாவின் முதலாளித்துவக் குடியரசின் அரசியலமைப்பு, அரசியல்
மரபுகளையும் விசுவாசத்துடன் ஏற்று செயல்பட்டுவந்தது.
ஆனால் 1991ல் இருந்து ஸ்ராலினிசவாதிகள் தங்களுடைய மரபார்ந்த தேசிய
சீர்திருத்தவாத கொள்கைகளையும் கைவிட்டுவிட்டனர்.
CPM மற்றும் இடது முன்னணி, இந்திய அரசியல் ஸ்தாபன அமைப்பு
ஒட்டுமொத்தமும், இந்தியாவில் தேசிய கட்டுப்பாட்டிற்குள் இருந்த பொருளாதாரத்தை தகர்த்து இந்தியாவை உலக
முதலாளித்துவ பொருளாதாரத்துடன் இணைப்பதற்காக தனியார்மயமாக்குதல், கட்டுப்பாடுகளை தளர்த்தல்,
விவசாயப் பொருட்கள் ஆதரவு விலையில் வெட்டு, பொது மற்றும் சமூகப் பணிகள் செலவினக் குறைப்பு
ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கலாயின.
கடந்த ஆண்டு மாநிலத் தேர்தலுக்கு முன்பு, இன்னும் கூடுதாலன வகையில் வலதிற்கு
மாறுவதற்கு தயாரிக்கும் முயற்சியில், பட்டாச்சார்ஜி மனிதகுலம் இறுதியில் சோசலிசத் திசையில்தான் வளரும் என்று
தனிப்பட்ட முறையில் முழு நம்பிக்கை கொண்டிருந்தாலும், தான் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான கொள்கைகளை
தொடர இருப்பதாக அறிவித்தார். "தற்போதைய யதார்த்தத்தின் அடிப்படையில் செயலாற்றுவதற்கு நான்
முயல்கின்றேன்... நாம் நடைமுறைவாதியாய் இருப்பதால், உலகம் முழுவதும் முதலாளித்துவத்துடன்
ஊடாடிக்கொண்டிருக்கும்பொழுது இக்கணத்தில் முதலாளித்துவவாதியாக இருப்பதுதான் அறிவுடைமையான செலாகும்"
என்று அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களில்
CPM மற்றும் பட்டாச்சார்ஜி மேற்கு வங்கம் விரைவில்
"தொழில்மயமாக்கப்பட்டு, வளர்ச்சியடைதல் வேண்டும்" என்ற தங்களின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொருளாதர வளம் மற்றும் சமூக, பொருளாதார பண்பாட்டு முன்னேற்றத்திற்கான திறவுகோல் இந்தியா மற்றும்
சர்வதேச மூலதனம் மேற்கு வங்கத்தில் முதலீட்டை செய்வதுதான் என்று வாதிடுகின்றனர்.
நந்திக்கிராமின் நிகழ்வுகள் அத்தகைய கருத்தின் குருதிதோய்ந்த விளைவு ஆகும்.
வெளிநாட்டு முதலாளித்துவ முதலீடு மக்களுக்கு நன்மைகளை படிப்படியாக கொண்டு
சேர்க்கும் என்ற கூற்றில் ஸ்ராலினிசவாதிகள் புதிய தாராளவாத சிந்தனையாளர்களின் கருத்துக்களைத்தான்
எதிரொலிக்கின்றனர்.
முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் உற்பத்தி பூகோளமய்யமாக்கல் இன்னும் கூடுதலான
வகையில் உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் சமூக சமத்துவமின்மையைத்தான் ஏற்படுத்தியுள்ளது. முன்னேற்றமடைந்துள்ள
நாடுகளில் உள்ள பன்னாட்டுப் பெருநிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இலாபத்திற்கான உந்துதல், ஊதியங்கள்,
சமூக நலத் திட்டங்கள் மற்ற சலுகைகள் ஆகியவற்றின் மீதான தாக்குதலுடன் சேர்ந்துள்ளன. பின்தங்கிய நாடுகளில்
வறுமையில் வாடும் நூற்றுக்கணக்கான மில்லியன்பேர் சர்வதேச மூலதனத்திற்கு குறைவூதிய தொழிலாளர்
தொகுப்பிற்கான ஆதாரமாகிவிட்டனர்.
இக்கொள்கைகள் தொழிலாளர்களுடைய மற்றும் கிராமப்புற வறியவர்களுடைய
நிலையையோ சிறப்படையச் செய்துவிடவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
சமீபத்திய ஆண்டுகளில் பொறுத்துக் கொள்ள முடியாத வறிய நிலையினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
CPM கூறுவது போல், ஒரு
சுரண்டும் தன்மையுடைய உலக முதலாளித்துவ அமைப்புடன் ஒரு நாட்டை இணைத்துவிடுவதின் மூலமும், மிக அதிக உயர்ந்த
இலாப விகிதம், குறைந்த ஊதியம் மிகுந்த தொழிலாளர் தொகுப்பு ஆகியவற்றிற்காக உலகம் முழுவதும் அலைந்துதிரியும்
சர்வதேச முதலாளிகளுடன் ஊடாடுவதின் மூலமும், சமூகத்தில் பெரும்பாலான மக்களுடைய நலனுக்கான "தொழில்மயமாக்கல்
மற்றும் வளர்ச்சி" நிறைவேற்றப்பட முடியாது.
அதே நேரத்தில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள மிகப்
பரந்த புரட்சிகர வளர்ச்சியானது, வறுமையை அகற்றுவதற்கும் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மக்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்பட முடியும்; ஆனால் இது முதலாளித்துவ இலாபமுறையை
அகற்றி, ஒரு திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை நிறுவுவதற்கான ஒரு சர்வதேச போராட்டத்தின் அடிப்படையில்தான்
முடியும்.
ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் இணைஉறுப்புகளான
CPM மற்றும் இடது
முன்னணி
இவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கம், உழைக்கும் மக்களின் சமூகப் பிரச்சினைகள், மற்றும் நிலமற்ற வறுமையில்
வாடும் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் தனது சொந்த வேலைத்திட்டத்தை முன்வைக்கவேண்டும். இதன்
பொருள் பொருளாதாரத்தை ஒரு சலுகை வாய்ந்த உயரடுக்கினரின் நலனுக்கு என்றில்லாமல் மக்களில் பெரும்பாலானவர்களுடைய
நலனுக்கானதாக மறு ஒழுங்கமைக்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டுடன், தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி,
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கங்களை, இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்கு ஆசியாவின் சோசலிச
குடியரசுகளின் ஒன்றியம் என்ற வடிவில் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான்
இவ்வேலைத்திட்டம் அடையப்பட முடியும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)
மற்றும் அதன் பத்திரிகையான உலக சோசலிச வலைத் தளமும் இத்தகைய முன்னோக்கைத்தான் முன்வைக்கின்றன.
சமூக நனவுடைய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளை இந்த முன்னோக்கை பரிசீலிக்குமாறும் இந்தியாவில்
ICFI
உடைய பகுதி ஒன்றை கட்டியமைக்கும் போராட்டத்தில் இணையுமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
See Also :
மேற்கு வங்க ஸ்ராலினிச
ஆட்சி விவசாயிகளை படுகொலை செய்து குற்றம் புரிகிறது |