World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Nandigram massacre Leading Indian intellectuals condemn West Bengal's Stalinist-led government நந்திக்கிராம் படுகொலை By Kranti Kumara மேற்கு வங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம் மார்ச் 14 அன்று நந்திக்கிராமில் நடத்திய படுகொலை, இந்தியாவில் நன்கறியப்பட்டுள்ள வரலாற்றாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் என நீண்ட நாட்கள் இடது முன்னணியின் முக்கிய பகிரங்க ஆதரவாளர்களாக இருந்தவர்களால் வெளிப்படையாக கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த புதனன்று, இடது முன்னணி அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் நன்கு ஆயுதம்தரித்த 4,000க்கும் மேற்பட்ட போலீசார், இந்தோனேசியாவை தளமாக கொண்ட சலீம் குழுமம் அபிவிருத்தி செய்யவிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு 10,000 ஏக்கர் நிலத்தை மேற்கு வங்க அரசாங்கம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளின் எழுச்சியை தகர்க்கும் நோக்கத்துடன், நந்திக்கிராம் பகுதியை திடீரென்று தாக்கினர். போலீசார் குறைந்தது 14 கிராமவாசிகளை கொன்றும் 70 பேருக்கும் மேலானவர்களை காயப்படுத்தியும் இருந்தனர். (பார்க்க, "மேற்கு வங்க ஸ்ராலினிச ஆட்சி விவசாயிகளை படுகொலை செய்து குற்றம் புரிகிறது") கொலைகார சுகார்ட்டோ சர்வாதிகாரத்துடனான அதன் ஸ்தாபகரின் நெருக்கமான உறவுக்காக அவப்பெயர் பெற்ற நாடுகடந்த கூட்டு நிறுவனத்தின் சார்பாக வேண்டுமென்றே செய்யப்பட்ட விவசாயிகள் படுகொலையானது இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பை தூண்டியுள்ளது. காசுக்காக எதையும் செய்வதற்குத்தயாரான இந்திய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் ஊழல் நிறைந்த, வகுப்புவாத, சாதிவாத அரசியல் பிரதிநிதிகளுக்கு முற்போக்கான மாற்றீடு என நீண்ட காலம் இடது முன்னணி மற்றும் ஸ்ராலினிச CPM ஐ கருதி வந்த கலைஞர்கள், அறிவுஜீவிகளின் ஒரு பகுதியை பொறுத்தவரை நந்திக்கிராம் படுகொலை ஒரு கொடூரமான அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று வரை மேற்கு வங்க நடவடிக்கைகள் பற்றி வெளிவந்துள்ள கடுமையான குறைகூறல்களுள் தீவிரமான அறிக்கை, இருபதாம் நூற்றாண்டின் வாதத்திற்குரிய மிக மதிப்புடைய வரலாற்றாளர், தன்னைத்தானே மார்கிசவாதி எனப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் சுமித் சர்க்காரிடம் இருந்தும் அவருடைய மனைவியும் சக வரலாற்றாளருமான டானிகா சர்க்காரிடம் இருந்தும் வந்துள்ளது. நந்திக்கிராம் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இத்தம்பதி மேற்கு வங்கத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ரபீந்திர புரஸ்கார் என்பதை திருப்பிக் கொடுத்துவிட்டனர்; அதே நேரத்தில் நந்திக்கிராம் உதவி நிதிக்கு 75,000 ரூபாய்கள் நன்கொடையும் அளித்துள்ளனர். பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ஜாலியன்வாலா பாக் (பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ் என்னும் நகரத்தில் உள்ள ஒரு தோட்டம்) என்ற இடத்தில், ஏப்ரல் 13, 1919 அன்று நூற்றுக்கணக்கான நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக் கொன்றதைவிட கூடுதலான அதிர்ச்சியை அளிக்கிறது என்று சர்க்கார்கள் கூறியுள்ளனர். ஜாலியன்வாலா பாக் படுகொலை மக்களுடைய நினைவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு வளர்ச்சியின் முக்கிய திருப்பு முனைகளில் ஒன்றாகப் பதிந்துள்ள நிகழ்வாகும். அவர்களுடன் தொலைபேசியில் நிகழ்த்திய Indo-Asian News Service IANS பேட்டியை விரிவாகக் மேற்கோள்காட்டல் பயனுடையதாகும். "ஜாலியன்வாலா பாக் படுகொலை காலனித்துவ இந்தியாவில் நிகழ்ந்தது, ஆனால் நந்திக்கிராமில் நடந்தது சுதந்திர இந்தியாவில் ஓர் இடது ஆட்சி செய்யும் அரசாங்கத்தில் நிகழ்ந்துள்ளது என்பதால் பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது." "ஜாலியன்வாலா பாக் ஒரு தனிமனிதனின் நடவடிக்கையின் விளைவு ஆகும் [இது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட தளபதி Dyer ஐ குறிக்கிறது]. ஆனால் இங்கோ CPM இயந்திரம் மற்றும் அரசாங்கம் முழுவதும் படுகொலைகளில் தொடர்பு கொண்டிருந்தன." என்று அவர்கள் தொடர்ந்து கூறினர். "குஜராத்தில் 2002ல் நிகழ்ந்தது எங்களை வியப்படையச் செய்யவில்லை; ஏனெனில் அது ஒரு பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தால் செய்யப்பட்டது; ஆனால் ஓர் இடது ஆளும் மாநிஈலத்தில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது." (2002ல் குஜராத் படுகொலைகள் ஒரு மூத்த BJP தலைவரும் குஜராத் மாநில முதல் மந்திரியுமான நரேந்திர மோடி மற்றும் அவர்களது கூட்டாளிகளான RSS தலைமையிலான ஹிந்து மேலாதிக்கவாதிகளாலும் தூண்டிவிடப்பட்டிருந்தது. அதில் கிட்டத்தட்ட 2,000 முஸ்லிம்கள் இறந்து போயினர்; பல நூறாயிரக்கணக்கானவர்கள் வீடுகள், வேலைகளை இழந்தனர்.) "வாழ்நாள் முழுவதும் இடதாக இருக்கும் நிலையில்", மேற்கு வங்க கிராமப்புறத்தில் நிகழ்ந்துள்ள சமீபத்திய சம்பவங்களினால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியுற்றுள்ளேன். டிசம்பர் 31 அன்று எங்கள் குழு ஒன்று சிங்கூருக்குச் சென்றது (அங்கு மேற்கு வங்க அரசாங்கம் 1,000 ஏக்கர் செழிப்பான விவசாய நிலத்தை ஒரு டாட்டா கார் ஆலைக்காக அபகரித்துள்ளது.) ஒரு நாள் முழுவதையும் அங்கு கழித்தோம்; பாதிக்கப்பட்ட ஐந்து கிராமங்களில் நான்கை பார்வையிட்டோம்; மூன்று விஷயங்கள் தெளிவாயின; அதையொட்டி மேற்கு வங்க அரசாங்கத்தின் கூற்று ஏற்கத்தக்கது அல்ல என்று போயிற்று. "முதலாவது, வளமற்றது அல்லது ஒரு போக விளைச்சல் தருவது என்று பலமுறையும் கூறப்பட்டுள்ளதற்கு மாறாக குறிப்பிட்ட நிலங்கள் முழுச் செழிப்பு உடையனவாகவும், பல போக சாகுபடிக்கு உரியனவாகவும் இருந்தன. "இரண்டாவது, நாங்கள் சந்தித்த கிராமவாசிகளில் பெரும்பாலானவர்கள் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்ததுடன் இழப்பீட்டை மறுத்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. "மூன்றாவதாக, பலாத்காரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றதற்கான பெரும் ஆதாரத்தையும் கண்டோம்; குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 25 மற்றும் டிசம்பர் 2 அன்று இரவுகளில். "சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் பெரு முதலாளிகளான டாட்டாக்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இரண்டிற்கும் பெரும் சலுகைகள் சம்பந்தமான குறிப்பிட்ட வளர்ச்சிப் பாதையை எப்படியும் பின்பற்றுவது என்று மேற்கு வங்க அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது போல் தோன்றியது. "ஆயினும்கூட பிந்தையதைத்தான் இடது கட்சிகளும், குழுக்களும் இன்னும் பலரும் பலமுறை கடுமையாக எதிர்ந்து வந்திருக்கின்றனர் என்பதுதான் விந்தையான விஷயம் ஆகும். "இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டல முன்மாதிரிகள் என்பது, மகத்தான அளவில் மக்களை வெளியேற்றுதல், துன்பத்திற்கு உட்படுத்துதல், என்பது உண்மையிலேயே ஒரே வழிதானா? "மேற்கு வங்க அரசாங்கம் அப்படி நினைக்குமேயானால், மாநிலம் முழுவதும் நந்திக்கிராமில் நடப்பவைதான் மீண்டும் நடக்கும் என்ற தவிர்க்க முடியாத விளைவுகளையும் அது ஏற்றாக வேண்டும்." இந்திய முதலாளித்துவத்தின் புதிய தாராள "சீர்திருத்த" செயற்பட்டியலை சுமத்துவதில் CPM மற்றும் இடது முன்னணியின் சதித்தொடர்பை சர்க்கார் குறைத்து மதிப்பிட்டுள்ளார்; அச்செயற்பட்டியல் உலக முதலாளித்துவத்திற்காக உற்பத்தித்துறை, வணிக வழிவகை மற்றும் ஆய்வு ஆகியவற்றிற்கு இந்தியாவை ஒரு பெரிய குறைவூதிய உழைப்பு களமாக மாற்றும் இலக்கை கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இடது முன்னணியின் "தொழில்மயமாக்கல்" கொள்கை -- அதாவது மூலதனத்திற்கு அனைத்துவித ஊக்கமும் கொடுக்கப்பட்டு, வாடிக்கையான தொழிலாளர், சுற்றுச் சூழல் தரங்கள் விலக்களிக்கப்பட்டு, நிலங்கள் சிறப்பு பொருளாதார பகுதிகளுக்காக அபகரிக்கப்படுதல் என்பது-- ஏராளமான முதலீட்டாளர் ஆதரவு, தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகள் பலவற்றில் சமீபத்திய ஒன்றுதான். மேலும், தேசிய அளவில் அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இன்னும் கூடுதலான பொருளாதார "சீர்திருத்தங்களை" தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய பங்காளி கொள்கையை தொடர்வதற்கும் இடது முன்னணி ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஆயினும்கூட, நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் எதிர்ப்பு என்பது, வலது மற்றும் நக்சலைட்டுக்கள் (மார்க்சிஸ்ட்டுக்கள்) அரசியல் தூண்டுதல் என்னும் CPM கூற்றை சர்க்கார்கள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதும், நந்திக்கிராமில் வன்முறைக்கான அரசியல் பொறுப்பை இடது முன்னணிதான் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதும் வரவேற்கத்தக்கது ஆகும். மேற்கு வங்க அரசாங்கத்தின் செயற்பாடுகள் பல பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோராலும் கண்டிக்கப்பட்டுள்ளன. நந்தன் குழு (ஒரு பண்பாட்டுக் குழுமத்தின் பெயரைக் கொண்டது) என்பது மாநிலத்தின் இடது சார்புடைய நாடக அரங்குப் பிரபலங்கள், நாடகாசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியவர்களை கொண்டுள்ளது; படுகொலைக்கு மறுநாள் இது ஒரு அணிவகுப்பை நடத்தி மேற்கு வங்க முதல்மந்திரியும் CPM அரசியல் குழு உறுப்பினருமான புத்ததேப் பட்டச்சார்ஜியையும் போலிசையும் கண்டித்தது. பட்டச்சார்ஜி இராஜிநாமா செய்யவேண்டும் என்று ஓவியக் கலைஞர் சுபபிரசன்னா கோரியபோது, மற்றொருவர், "அடுத்த முறை அவர் (முதல் மந்திரி பட்டாச்சார்ஜி) நந்தனுக்கு வந்தால், அவர் ஒரு போலீஸ் சீருடையில்தான் வரவேண்டும்" என்று குறிப்பிட்டார். ஏராளமான கவிதைகளை எழுதிய வங்க கவிஞரும் மேற்கு வங்க பங்களா அகாடமியின் துணைத்தலைவருமான சாங்கா கோஷ், 1913 நோபல் பரிசை வென்ற ரபீந்தரநாத் தாகூரின் படைப்புக்களை பற்றிச் சிறப்பாக திறனாய்ந்துள்ள அஸ்ரு குமார் சிக்தர் இன்னும் பலரும் வங்காள அகாடமியில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து இராஜிநாமா செய்துள்ளனர். கோஷும் சிக்தரும் நந்திக்கிராம் படுகொலையை "அப்பாவி கிராம வாசிகள் அரசு ஆதரவு படுகொலைக்கு ஆளாயினர்" என்று விவரித்துள்ளனர். இப்பிரமுகர்கள் வெளியிட்டுள்ள சீற்றம் கணிசமான அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது; ஏனெனில் இருபதாம் நூற்றாண்டில் பேரழிவு தந்த பல குற்றங்களை ஸ்ராலினிசம் செய்திருந்தபோதிலும், இந்திய அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களின் குறிப்பிடத்தக்க அடுக்கு CPM இன் முற்போக்குத் திறன் பற்றிய பிரமைகளில் இன்னும் தொங்கிக் கொண்டுள்ளனர்; இக்கட்சியோ 1960களின் தொடக்கத்தில் CPI எனப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து தோன்றியது; இதன் பின்னர் சோவியத் சீன அதிகாரத்துவங்களுக்கு இடையே நடைபெற்ற பூசலில் ஒரு தேசியவாத, "சுதந்திரமான" நிலைப்பாட்டை மேற்கொண்டது. தன் பங்கிற்கு CPM இந்த கல்விமான்களையும் கலைஞர்களையும் தன் அரசியல், அறிவுஜீவித அதிகாரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்தி வந்துள்ளது. நந்திக்கிராம் படுகொலையில், CPM தலைமை முழுவதும் சதியில் பிணைந்திருப்பதை குறித்து டானிகா சர்க்கார் கூறினார்: "நாங்கள் சிதைந்து போய்விட்டோம். இவ்வளவு நடந்துள்ளது; ஆனால் CPM மத்திய குழுவில் இருந்தோ, மாநிலக் குழுவில் இருந்தோ வெட்கத்தை புலப்படுத்தியோ, மன்னிப்பை வெளிப்படுத்தியோ, ஒரு சொல்கூட வெளிவரவில்லை." எத்தகைய மன்னிப்பையும் கோருவது ஒரு புறம் இருக்க, CPM -ன் முழு தேசிய தலைமையும் மேற்கு வங்க முதல் மந்திரி புத்ததேப் பட்டாச்சார்ஜிக்கு ஆதரவாக ஆக்கிரோஷமாக அணிவகுத்து நிற்கிறது. இதன் இடது முன்னணி நட்புக் கட்சிகள் பல, CPI உட்பட, மேற்கு வங்க அரசாங்கத்திற்கு ஆதரவை திரும்ப பெறப்போவதாக அச்சுறுத்தி காட்டியவை, விரைவிலேயே "பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயலாக்கம் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் இருந்து பின் வாங்கி விட்டன. CPM மற்றும் அதன் இடது முன்னணி தோழமைக் கட்சிகள் இந்தியாவில் முதலாளித்துவ ஆட்சிக்கு ஊக்கம் தருவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளன. முதலாளித்துவத்திற்கான செயற்பட்டியலை நடைமுறைப்படுத்துவதற்கு ஸ்ராலினிசவாதிகள் இரக்கமற்ற வழிவகைகளை எந்த அளவிற்கு கையாளத் தயாராக உள்ளனர் என்பதைத்தான் நந்திக்கிராம் படுகொலை வெளிப்படுத்தியுள்ளது. |