World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்A visit to the Airbus factory in Méaulte, France Workers reject nationalism of the trade unions பிரான்ஸ் Méaulte ல் உள்ள எயர்பஸ் தொழிற்சாலைக்கு ஒரு விஜயம் தொழிற்சங்கங்களின் தேசியவாதத்தை தொழிலாளர்கள் நிராகரித்தனர் By Andreas Reiss எயர்பஸ் நிறுவனத்தின் திட்டமிட்ட மறுசீரமைப்பை சூழ உள்ள நிகழ்வுகளை ஆராய்கையில் மிகமுக்கியமான படிப்பினைகள் வெளிப்படுகின்றன: தேசிய அரச எல்லைகளுக்கு அப்பால் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கின் ஒருங்கிணைதலானது மேலும் முன்னேறுகையில், ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றை காப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியமைக்கும் பணியானது மேலும் அவரசமான பணியாகிறது. ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவமோ பெரும் திகைப்புடன் தன்னுடைய குறுகிய எண்ணங்கொண்ட, காலத்துக்கு ஒவ்வாததாகிவிட்ட தேசிய அரசு பாதுகாப்புக் கொள்கையில் பிடிவாதமாக உள்ளது. பெருந்திரளான துணைத் தொழில்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்க்கையில், நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே எயர்பஸ் நிறுவனம் உற்பத்தி செயற்பாடுகளை பிரித்து நடத்தி வருகிறது. இத்தொழிற்சாலைகளில் இருக்கும் தொழிலாளர்கள் ஒரே உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில்தான் இணைந்து செயலாற்றுகின்றனர். அதேநேரத்தில் நிர்வாகத்தின் "Power 8" என்னும் மறுசீரமைப்புத் திட்டம் சர்வதேச தொழிலாளர் தொகுப்பு முழுவதன் மீதான ஒரு தாக்குதலை தெளிவாகப் பிரதிநிதித்துவம் செய்கிறது. வடபிரான்சில் Méaulte ல் உள்ள எயர்பஸ் தொழிற்சாலையை சென்று பார்வையிட்டதானது உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்கு, தொழிற்சாலை நிர்வாகத்தால் தொடுக்கப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு அவர்களின் பதில் என்ற வகையில் அத்தகைய பிரச்சினைகள் மீதான தொழிலாளர் தொகுப்பின் கருத்துக்களை, அதேபோல தொழிற்சங்கங்களின் பதிலை நேரடியாக கவனிக்கும் ஒரு வாய்ப்பை அளித்தது. தற்போதைய நிலைமை பற்றி தங்களுக்கு எவ்வித தகவலும் இல்லை என்பதை நாங்கள் பேசிய தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்; இப்பொழுது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் பொருளுரையோ அல்லது தொழிற்சங்கங்களால் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியோ அவர்களுக்கு ஏதும் தெரியவில்லை. நாற்பது வயதுகளின் நடுப்பகுதியில் இருக்கும் ஒரு தொழிலாளியான Crôchet கூறினார்: "செய்தி ஊடகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மட்டுமே நாங்கள் அறிந்தவை. அவர்கள் அனைவரும் ஜேர்மனியர்கள் மீதுதான் குறைகூறுகின்றனர். தொழிற்சங்கங்கள் பற்றி அவர் அதிக அக்கறை காட்டவில்லை. "ஒன்றோடு ஒன்று எப்பொழுதும் போரிட்டுக் கொண்டிருக்கும்" அமைப்புக்கள் அவை என்று அவர் கூறினார். Force ouvrière (FO) இன் செயலாளர் விடுத்துள்ள அறிக்கைக்கு ஆதரவு கொடுக்கவும் அவர் தயாராக இல்லை; செயலாளர் Claude Cliquet ஒரு வாரம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் ஜேர்மனிய பங்குதாரர்கள்தான் எயர்பஸ்ஸின் நெருக்கடிக்கு காரணம் என்று கூறியிருந்தார். "Power 8" திட்டத்திற்கு FO எழுப்பும் முக்கிய ஆட்சேபனை சுமையை பகிர்ந்து கொள்ளுவது பற்றியதாக உள்ளது --அது வெட்டுக்களை செயல்படுத்தும்போது பிரெஞ்சு புறத்திற்கு கூடுதலான சாதகம் வேண்டும் என்கிறது. குறிப்பாக தொழிற்சங்கம் Toulouse ல் இருந்து Hamburg கிற்கு A320 மாதிரி விமான உற்பத்தி மாற்றப்படுவதை எதிர்க்கிறது.மார்ச் 5 அன்று துலூசில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், FO பிரதிநிதி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாகவும் பேசினார்: "ஜேர்மனிய பங்குதாரர்களின் அனைத்தையும் விழுங்கும் பசிக்கு எதிராக எமது நிறுவனத்தை நாம் காக்க வேண்டும். புதிய A320 முற்றிலும் ஜேர்மனிய கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும். பிரெஞ்சு அரசு தன்னுடைய பங்குதாரர் என்னும் பங்கை தீவிரமாகக் கொண்டு Daimler [முக்கிய ஜேர்மனிய பங்குதாரரான] உடைய பெரும் பசிக்கு எதிரெடையாக கவனத்துடன் செயல்பட வேண்டும்." அரசாங்க பிரதிநிதிகளுடனான அதன் பேச்சுக்களில் உள்பட, FO பலமுறையும் பிரெஞ்சு அரசிடமிருந்து கூடுதலான ஊக்கம் தேவை என்னும் கோரிக்கையை எழுப்பியது. Méaulte ல் நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் அனைத்தும் இத்தகைய தேசிய நோக்குநிலை மற்றும் ஒருவரின் சொந்த ஆலையின் பாதுகாப்பு பற்றி கவனக்குவிப்பு கொள்ளுதல் ஆகியன பற்றி செய்தி ஊடகம் வேறுவிதமாகக் கூறினாலும், அனைத்து தொழிலாளர்களாலும் அவை ஏற்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியது. நாங்கள் விவாதித்த எவருமே தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்னோக்குடன் பகிர்ந்து கொள்ளவில்லை. மாறாக ஜேர்மனியில் இருந்து நாங்கள் பயணித்து வந்துள்ளோம் என்பது பற்றி அவர்கள் பரிவுணர்வைத்தான் வெளிப்படுத்தினர். தொழிலாளர்களுடைய சீற்றத்தை ஒரு தேசியவாத முட்டுச்சந்திற்குள் திசைதிருப்ப முற்படும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முயற்சிக்கு முற்றிலும் மாறான வகையில்தான் தொழிலாளர்களுடைய நிலைப்பாடு இருந்தது.Guillaume மற்றும் மூன்று இளைய சக ஊழியர்களும் தொழிற்சங்கங்கள் பிரச்சினை பற்றி வரும்போது இதே போன்ற சிந்தனையில்தான் இருந்தனர்; அதுவும் குறிப்பாக Méaulte ல் இருக்கும் மிகப் பெரிய தொழிற்சங்கமான Force ouvrière பற்றி. "அவர்கள் செய்வதெல்லாம் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளுவதுதான்" என்று கூறிய அவர் முன்பு தானும் ஒரு உறுப்பினராக இருந்ததாகவும், தொழிற்சங்கத்தில் தொடர்ந்து இருப்பதில் பொருளில்லை எனக் கருதி இராஜிநாமா செய்துவிட்டதாகவும் கூறினார்.ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Méaulte ல் உள்ள தொழிலாளர்கள் தகவல்களை அதிகம் அறிந்திருக்கவில்லை என்பது வியக்கத்தக்கது. இந்த வெள்ளியன்று திட்டமிடப்பட்டுள்ள வேலைநிறுத்தம் இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் என்பதுதான் அவர்கள் அறிந்தது. தேசிய எல்லைகளை கடத்து "Power 8" க்கு எதிர்ப்பு அமைக்கும் திட்டத்திற்கு ஆர்வத்துடன் Guillaume ம் அவருடைய சக தொழிலாளர்களும் விருப்பம் தெரிவித்தனர். ஜேர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் ஒரு கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் கூட்டு நடவடிக்கைகளை வளர்க்கவும் நல்ல வாய்ப்பைத் தரும் என்று அவர்கள் கூறினர். முதலில் ஒரு கூட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்து ஐரோப்பிய எயர்பஸ் தொழிலாளர்கள் அணிவகுப்பு பிரஸ்ஸல்ஸில் மார்ச் 16 அன்று நடத்துவதற்கான திட்டங்கள் இருந்தன. ஆனால் மார்ச் 13 அன்று, ஐரோப்பிய தொழில் துறை தொழிற்சங்கக் கூட்மைப்பு ஒரு செய்தியாளருக்கான அறிக்கையை வெளியிட்டது; அதில் "தவறான செய்தி ஊடக அறிவிப்புக்களுக்கு மாறாக" கூட்டு அணிவகுப்பு, ஆர்ப்பாட்டம் போன்றவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கு பதிலாக தொழிற்சங்கங்கள் "ஐரோப்பிய அளவிலான", என அழைக்கப்படும், ஆனால் தனித்தனி "நடவடிக்கை நாட்கள்" வெவ்வேறு தொழிற்சாலைகளில் நடைபெறும் என்று கூறியுள்ளன. இந்த உள்ளூர் கூட்டங்களில் தொழிற்சங்கங்கள் மிகத்தீவிர வலதுசாரி தேசிய சக்திகளுக்கு அரங்கு அமைத்துக் கொடுக்கின்றன. இவ்விதத்தில் ஜேர்மனிய தொழிற்சங்கமான IG Metall, Lower Saxony மாநிலத்தின் பிரதம மந்திரி கிறிஸ்டியன் வொல்ஃப்பை ஹம்பேர்க்கில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேச அழைத்துள்ளது; இதில் 20,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். IG Metall இன் தலைவரான Jürgen Peters, எயர்பஸ் ஆலைக்குழுவின் தலைவர் Rüdiger Lütjen, பாடன் வூர்ட்டெம்பேர்க் மாநிலத்தின் பிரதம மந்திரி Günther Öttinger, ஹம்பேர்க்கின் மேயரான Ole von Beust ஆகியோரும் பேச உள்ளனர். இந்த கடைசி மூன்று பேச்சாளர்களும் அங்கேலா மேர்க்கெலின் கிறஸ்துவ ஜனநாயக யூனியனை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள்பால் கொண்டுள்ள விரோதப் போக்கிற்காக நன்கு அறியப்பட்டவர்கள் ஆவர். இதேபோன்ற தேசிய தந்திர உத்திகள்தான் பிரெஞ்சு தொழிற்சங்கங்களாலும், குறிப்பாக Force ouvrière ஆலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. WSWS க்கு நாந்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியுள்ள எயர்பஸ் தொழிலாளி அனத்து தொழிலாளர்களும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கும் அவருடைய முயற்சி எப்படி பயனளிக்கவில்லை என்று கூறுகிறார்: "தொழிற்சங்க நடவடிக்கையின் அடிப்படையில், நிர்வாகம் தன்னுடைய திட்டங்களை மாற்றிக் கொள்ளும் எனத் தோன்றவில்லை. அதிலும் குறிப்பாக CGS (Christian Trade Union) மற்றும் FO இரண்டிற்கும் பொருந்தும்; இவை தேசியவாதத்தின் மூலமும் பிளவுகளை ஊக்குவிப்பதன் மூலமும் தொடர்ந்து போர்க்குணத்தை கீழறுக்கின்றன."நாந்தில் பல ஷிப்ட்டுக்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு தனி எதிர்ப்புக்களில் ஈடுபடுமாறு கூறப்பட்டனர்; CGT ஐ தவிர மற்ற தொழிற்சங்கங்கள் அனைத்தும் அனைத்து தொழிலாளர்களின் கூட்டுக் கூட்டத்தை ஒழுங்கமைக்க மறுத்துவிட்டன. "அவர்கள் பேச்சுவார்த்தைகளுக்குத்தான் தயாராக உள்ளனரே அன்றி, போராட்டத்திற்கு அல்ல" என்று எயர்பஸ் தொழிலாளி எழுதியுள்ளார். தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளால் ஊக்கமுற்றுள்ள நிர்வாகம் "Power 8" திட்டத்தை, எச்சலுகையும் கொடுக்காமல், செயல்படுத்த முனைப்பாக உள்ளது. புதனன்று எயர்பஸ்ஸின் முதலாளியான Louis Gallois, துலூசில், கம்பெனியில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து ஐரோப்பிய தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, மறுசீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுவதில் எவ்வித பின்வாங்கலும் இருக்காது என்பதை தெளிவுபடுத்தினார். கூட்டம் முடிந்த பின்னர், பிரெஞ்சு கூட்டுப் பணிகள் குழுவின் தலைவரான Jean Jean-Francois Kneeper (FO), அறிவித்தார்: "நாங்கள் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. நிர்வாகக் குழு எங்களுடன் பேசத் தயாராக இருக்கிறது; ஆனால் திறம்பட வேலைசெய்வதற்கு அது இடம் கொடுக்கவில்லை." ஆயினும்கூட தொழிற்சங்கங்கள் இன்னமும் தங்களது மத்தியப்படுத்தப்படாத நடவடிக்கைகளுக்கான திட்டங்களில்தான் ஈடுபாடு கொண்டுள்ளன. ஸ்பெயினில் கிட்டத்தட்ட EADS மற்றும் துணைத் தொழில்களில் இருந்து 9,000 தொழிலாளர்கள் ஒரு குறைவான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர்; பாரிசில் பிரெஞ்சு எயர்பஸ் தொழிலாளர்கள் தலைநகரில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவர். ஒருபுறம் இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களின் நோக்கம், தொழிற்சங்கங்கள் தாங்கள் முற்றிலும் செயலற்றுப்போகவில்லை என்பதை விளக்கிக்காட்டுவதற்கான மூடுதிரையாக பயன்படுகின்றன. மறுபுறமோ, தொழிலாளர்கள் எல்லை கடந்து ஒன்றுபட்டு மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிரான திறமையாக போராட்டத்தை நடத்துவதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன. தனிப்பட்ட "இடங்களின்" நலன்களை பாதுகாத்தல் என்ற பெயரில் தொழிலாளர் தொகுப்பு மற்ற தொகுப்புக்களுக்கு எதிராக பகைமையை வளர்க்கும் தன்மைதான் தூண்டிவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் அத்தகைய நிலைப்பாட்டை நிராகரிக்கின்றனர். Méaulte ல் நாங்கள் கடைசியாக கொண்ட கலந்துரையாடல்கள் அருகில் இருக்கும் Amiens ல் இருந்து வரும் பகுதி நேர இரு இளந்தொழிலாளர்களுடனாகும். இருவரும் உற்பத்திப் பொறியியலாளர்கள் பயிற்சியை ஒரளவிற்கு முடித்துள்ளனர்; எயர்பஸ் ஆலையில் 18 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பை கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஒப்பந்தம் முடிந்தபின் என்ன நடக்கும் என்பது பற்றி அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை; இருவரும் நிறுவனத்தில் தொடர்ந்து இருக்கத்தான் விரும்புகின்றனர். இருவரும் Méaulte ல் மட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 150 ஊழியர்கள் உள்ளனர் என்றும் முன்பு இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது என்றும் கூறினர். தொழிற்சங்கங்கள் மீது தங்களுக்கு முற்றிலும் நம்பிக்கை இல்லை என்று இருவரும் கூறினர்; ஆரம்பத்தில் இருந்தே அவை பின்வாங்கிய நிலையைத்தான் காட்டின என்றும் நம்பகத்தன்மை அற்றவை என்றும் தெரிவித்தனர். தங்களைத்தான் தொழிற்சங்கங்கள் காத்துக் கொள்ளுகின்றன. ஏனெனில் அவர்கள் அனைவரும் "தேன் கிண்ணத்தில் கையைவிட்டுள்ளனர்" என்றனர். ஜேர்மனிய சக ஊழியர்களுக்கு எதிராக பிரெஞ்சு தொழிலாளர்கள் மோதப்படுவதற்கு ஒரு முற்றுப்புள்ளிவைக்கப்பட வேண்டும் என்று ஒருவர் கூறினார். இப்பகுதி பல்லாயிரக்கணக்கான ஜேர்மனிய, பிரெஞ்சு, ஆங்கில துருப்புகளை பலி கொண்ட முதல் உலகப் போரின் போர்க்களங்களில் ஒன்று என்பதை மனதில் கொண்டால் அவருடைய கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமானவை என்றுதான் தோன்றும். Méaulte ல் உள்ள எயர்பஸ் ஆலைக்கு சென்றது இரு விஷயங்களை தெளிவாக்கியுள்ளது: முதலாவது, தொழிற்சங்கங்கள் தொழிலாளர் தொகுப்பிற்கு மிக அடிப்படை தகவல்களை கூட கொடுக்காமல் அவர்களை பிளவிற்கு உட்படுத்தும் பங்கை கொண்டுள்ளன; இரண்டாவது, தொழிலாளர்கள் எந்த அளவிற்கு தங்களை இந்த அமைப்புக்களில் இருந்து தொலைவில் இருத்திக் கொண்டுள்ளார்கள் என்பது. |