World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan defence ministry extends police state moves

இலங்கை பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் அரசு நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது

By K. Ratnayake
19 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது இராணுவத் தாக்குதல்களை விரிவுபடுத்துகின்ற நிலையில், அடிப்படை ஜனநாயக உரிமைகளை மேலும் குறைக்கவும் மற்றும் அரசியல் எதிர்ப்புகளை, குறிப்பாக யுத்தத்துக்கான எதிர்ப்புகளை நசுக்கவும் தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றது.

மார்ச் 1 பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட நடுங்கவைக்கும் ஊடக அறிக்கை ஒன்று, பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எவருக்கும் எதிராக தற்போதைய அவசரகால அதிகாரங்களைப் பரந்தளவில் பயன்படுத்துவதாக முன்னறிவிக்கின்றது. குறிப்பிடத்தக்கவாறு, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவே பாதுகாப்பு அமைச்சராக இருப்பதோடு, இதனால் அவர் இந்த அறிக்கைக்கு நேரடிப் பொறுப்பாளியாவார். அவரது சகோதரர் கோதபாய இராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் என்ற உயர்மட்ட நிர்வாகியாக பதவி வகிக்கின்றார்.

"பாதுகாப்பு அமைச்சுக்கு ஊடக சுதந்திரத்தை நசுக்கும் எண்ணம் இல்லை" என்ற தலைப்பிலான இந்த அறிக்கையில், பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை விசாரணையின்றி எதேச்சதிகாரமாக தடுத்துவைத்திருப்பது சம்பந்தமாக இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் குவிந்துவரும் விமர்சனங்களை திசைதிருப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பேர்போன பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட விதிகளின் கீழேயே இந்த கைதுகள் நடைபெற்றுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டமானது 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை அடுத்து இரத்துச் செய்யப்பட்டிருந்த போதிலும், கடந்த டிசம்பரில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

தீவின் யுத்த வலயமான வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் கொழும்புத் தலைநகரிலும் கூட பெருந்தொகையான படுகொலைகளும் கடத்தல்களும் நடபெறுகின்ற ஒரு நிலைமையின் மத்தியிலேயே இந்தக் கைதுகள் இடம்பெறுகின்றன. இராணுவத்தின் கட்டளையின் கீழ் இயங்குவதாக நம்பப்படும் கொலைப் படைகளின் இலக்குகளில் பத்திரிகையாளர்களும் ஏனைய ஊடக சேவையாளர்களும் அடங்குவர். இந்தக் கைதுகளும் படுகொலைகளும் பரந்த சீற்றத்தையும் எதிர்ப்பையும் தூண்டிவிட்டுள்ளன.

ஊடக சுதந்திரத்திற்கு ஏதாவது உத்தரவாதம் வழங்குவதற்குப் பதிலாக, பாதுகாப்பு அமைச்சானது, "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் எந்தவொரு தனி நபரையும் கைது செய்து விசாரணை நடத்துவதற்கு சட்டத்தின் தற்போதைய கட்டமைப்புக்குள் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு" உள்ள உரிமையை வெளிப்படையாக வலியுறுத்துகிறது. கைதுகளை நியாயப்படுத்திய இந்த அறிக்கை, "முன்னைய அரசாங்கங்களின் கீழும் கூட தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் செயற்பட்ட ஊடகவியலாளர்கள், பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்," என மேலும் தெரிவிக்கின்றது.

பாதுகாப்புப் படையினரால் ஊடகவியலாளர்கள் முன்னர் கைதுசெய்யப்பட்டது மறுக்கமுடியாததாகும். 1998ல், பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ், இரு தமிழ் ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். ஒருவர் இரண்டு மாதங்களும் மற்றையவர் ஒரு மாதகாலமும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். ஆயினும், அந்த சமயத்தில் புலிகளுடன் வெளிப்படையான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுவதாக அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் தீவை யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ளதோடு எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கு திட்டமிட்டுள்ளது என்ற உண்மையையே தற்போதைய கைது வேட்டைகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் 13, ஒரு பெண் தமிழ் ஊடகவியலாளரான பரமேஸ்வரி முனுசாமி கைதுசெய்யப்பட்டமை ஜனநாயக உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வெளிப்படையான உதாரணமாகும். ஜனவரி 23, பயங்கரவாத தடைச் சட்டதின் கீழ் மேலும் 90 நாட்கள் அவரைத் தடுத்துவைத்திருப்பதற்கு பொலிசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவர் இப்போது நான்காவது மாதமாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் அல்லது அவரது கைதுக்கு விளக்கமளிக்காமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பரமேஸ்வரி இப்போது ஒரு அடிப்படை உரிமைகள் வழக்கு மூலமாக தாம் கைதுசெய்யப்பட்டுள்ளதை சவால் செய்துள்ளார்.

"தற்போதைய சட்டக் கட்டமைப்புக்குள்" அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அரசு வழிமுறைகள் இவையேயாகும். "தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில், சிறிய ஆதாரங்களுடன் அல்லது ஆதாரங்களே இன்றி, கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஊடகவியலாளர்கள் உட்பட தனிநபர்களை கைதுசெய்யவும் தடுத்துவைக்கவும் பரந்த அதிகாரங்களை இராணுவமும் பொலிசும் தம்வசம் கொண்டுள்ளன. 2002 யுத்த நிறுத்தத்திற்கு முன்னர், பத்தாயிரக்கணக்கான தமிழர்கள், பிரதானமாக தமிழர்கள், குற்றச்சாட்டுக்கள் இன்றி மாதக்கணக்காக அல்லது வருடக்கணக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். சில வழக்குகளில், கைதிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதோடு அவர்களது "ஒப்புதல் வாக்குமூலங்கள்" அவர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய நடைமுறைகள், சித்திரவதைகளில் இருந்து விலக்குரிமை, எதேச்சதிகாரமான கைதுகளில் இருந்து விலக்குரிமை, பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், அப்பாவி என ஒப்புவிக்கும் சுதந்திரம் ஆகிய அனைத்தும் பட்டியலிடப்பட்டு விபரிக்கப்பட்டுள்ள "இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்" 1978 அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகள் வெளிப்படையாக மீறப்பட்டுள்ளதை ஒப்புவிக்கின்றன. அரசாங்கமும் இராணுவமும், இலங்கையில் சோசலிசம் ஒரு புறமிருக்க இலங்கையில் "ஜனநாயகமே" கிடையாது என்பதை தெளிவுபடுத்தும் "அடிப்படை உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள்" என்ற தலைப்பிலான அரசியலமைப்பின் 15 வது சரத்தில் தங்கியிருக்கின்றன.

15வது சரத்தின் 7வது உப தலைப்பானது, "சரத்து 12, 13 (1), 13 (2) மற்றும் 14 ஆகியவற்றில் பிரகடனம் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும், தேசிய பாதுகாப்பினதும் பொது ஒழுங்கினதும் நலன்களுக்காக மற்றும் பொது சுகாதாரத்தை அல்லது நன்நெறிகளைக் காப்பதற்காக, அல்லது ஏனையவர்களின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் சரியான அங்கீகாரத்தையும் மதிப்பையும் வழங்குவதற்காக, அல்லது ஜனநாயக சமுதாயத்தின் பொது நலனின் இன்றியமையாத தேவைகளை அடைவதற்காக சட்டத்தால் அறிவுறுத்தக் கூடிய அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகும்," எனக் கூறுகின்றது. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஊடகம் உட்பட ஏறத்தாழ ஒவ்வொறு அடிப்படை ஜனநாயக மற்றும் சட்ட உரிமைகள் மீதும் கொடூரமான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கான கட்டற்ற அதிகாரங்களை அரசாங்கம் கொண்டுள்ளது.

நடைமுறையில், ஜனநாயக உரிமைகளை பகிரங்கமாக துஷ்பிரயோகம் செய்வதற்கான அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் படைகளதும் இயலுமையானது அரசியல் காரணங்களுக்கு உட்பட்டதாகும் --அதாவது, சாதாரண உழைக்கும் மக்களின் எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும். பாதுகாப்பு அமைச்சின் அண்மைய அறிக்கையின் மிகவும் குறிப்பிடத்தக்க நோக்கும் இத்தகைய பிரச்சாரங்களை இலக்காகக் கொண்டதாகும். எதேச்சதிகாரமான கைதுகளின் சட்டப்பூர்வ தன்மை குறித்து பிரகடனம் செய்த பின்னர் அது மேலும் குறிப்பிடுவதாவது: "தனிநபர்களைக் கைதுசெய்யும்போது மேற்கொள்ளப்படும் எதிர்ப்புகள் மற்றும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகள் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதோடு அரசாங்கத்தின் ஸ்திரநிலைக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது."

இந்த அறிக்கை ஒரு தெளிவான அச்சுறுத்தலாகும். இராணுவம் தனது "தேசிய பாதுகாப்பு" என்ற சாக்குப் போக்கு முயற்சிகளை "அரசாங்கத்தின் ஸ்திரநிலைக்கு" அச்சுறுத்தலாக இருக்கும் எவருக்கும் அல்லது எந்தவொரு அமைப்பிற்கும் எதிராகப் பயன்படுத்துவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இந்தக் கருத்துக்கள், குறிப்பாக கைதுகளுக்கும் ஜனநாயக உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை தொடர்புபடுத்துகின்ற அதேவேளை, இதே தர்க்கம் எந்தவொரு பகிரங்க விமர்சனத்தையும் அல்லது அரசியல் எதிர்ப்பையும் சட்டவிரோதமானதாகப் பிரகடனம் செய்யப் பயன்படுத்தப்படக் கூடும்.

இராஜபக்ஷ, யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிந்து வருவது தொடர்பாக வளர்ச்சிகண்டுவரும் வெகுஜனங்களின் எதிர்ப்புக்கு முகங்கொடுத்திருக்கும், பல கட்சிகள் அடங்கிய ஆட்டங்கண்டுபோன ஒரு கூட்டரசாங்கத்தில் தங்கியிருக்கின்றார். கடந்த ஆறு மாதங்களாக தொழில், சம்பளம் மற்றும் நிலைமைகள் தொடர்பாக தொழிலாளர்களின் ஒரு தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. இவை அரசாங்கத்தை குழப்பமுறச் செய்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த டிசம்பரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்திய இராஜபக்ஷ, "சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளின் பராமரிப்பை தகர்ப்பது அல்லது அச்சுறுத்துவதையும்" சட்டவிரோதமாக்குவதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகளை விரிவாக்கினார்.

இன முரண்பாடுகளை கிளறிவிடுவதன் மூலமும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை உக்கிரப்படுத்துவதன் மூலமுமே இந்த எதிர்ப்புகளுக்கு இராஜபக்ஷ பிரதிபலித்தார். துறைமுகத்திலும் மற்றும் தோட்டப்புறங்களிலும் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை "பயங்கரவாதத்திற்கு" உதவுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். பெப்பிரவரி முற்பகுதியில், புகையிரத ஊழியர்களின் கூட்டு என்ற தொழிற்சங்கத்தின் அகுன என்ற மாத சஞ்சிகையின் மூன்று இடதுசாரிகளை இராணுவம் கைதுசெய்தது. புலிகளுடன் தொடர்புவைத்திருந்ததாக அவர்கள் வழங்கியதாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை பயன்படுத்திகொண்டு தற்போது விசாரணையின்றி பெருந்தொகையான மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளது பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் அடக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

கடந்த புதன் கிழமை கருத்துத் தெரிவித்த இராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள எச்சரிக்கைகளை எதிரொலித்தார். தான் பலவித அரசியல் "சூழ்ச்சிகளை" எதிர்கொள்வதாகவும், ஒரு பக்கத்தில் புலிகளுக்கு எதிராக யுத்தம் தொடுப்பதற்கும் மறுபுறம் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவும் ஒரு "ஸ்திரமான அரசாங்கம்" தேவைப்படுவதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "நான் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லை" என அவர் உறுதியாகப் பிரகடனம் செய்தார்.

இந்த அறிக்கைகளில் இருந்து தொழிலாளர் வர்க்கம் தெளிவான எச்சரிக்கைகளை பெறவேண்டும். அடிப்படை ஜனநாயக உரிமைகளை வெட்டிக்குறைப்பதற்கான சாக்குப் போக்காக "ஸ்திரமான அரசாங்கத்தின்" தேவையை நாடுவதானது, எல்லா விதத்திலுமான அரசியல் எதிர்ப்பையும் சட்டவிரோதமாக்குவதற்காக சர்வாதிகாரிகளும் மற்றும் பொலிஸ் அரசுகளும் பயன்படுத்தும் நியாயப்படுத்தல்களாகும்.