World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா West Bengal Stalinist regime perpetrates peasant massacre மேற்கு வங்க ஸ்ராலினிச ஆட்சி விவசாயிகளை படுகொலை செய்து குற்றம் புரிகிறது By Kranti Kumara மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம், இந்திய மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் நலனுக்காக செழிப்பான விளைநிலங்களை கைப்பற்றும் அதன் கொள்கையை எதிர்க்கும் விவசாயிகளை படுகொலை செய்துள்ளது. புதனன்று, மேற்கு வங்கத்தின் ஸ்ராலினிச-தலைமையிலான மாநில அரசாங்கம், துணை இராணுவத்தினர், விரைவு நடவடிக்கை, சிறப்பு கமாண்டோ பிரிவு ஆகியவை உட்பட்டிருந்த 4,000 பேர் கொண்ட போலீஸ் படைக்கு, கொல்கத்தாவில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நந்திகிராம் என்னும் சிறுநகர் புறத்தில், அரசாங்கத்தின் அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளுவதற்காக துப்பாக்கிச்சூடு நடத்த உத்திரவு கொடுத்ததை அடுத்து குறைந்தது 75 கிராமவாசிகள் காயமுற்றதுடன், 14 பேர் கொல்லப்பட்டனர். அரசாங்கம் இப்பகுதியில் 10,000 ஏக்கர் நிலத்தை, இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட சலீம் குழுவிற்காக, ஒரு சிறப்பு பொருளாதார பகுதி நிறுவுவதற்காக கையகப்படுத்த இருக்கிறது என்பதை அறிந்த பின், ஜனவரி மாத தொடக்கத்தில் நந்திகிராமில் உள்ள விவசாயிகள் எழுச்சியுற்றனர். ஜனவரி 6-7 இரவில் 200க்கும் மேற்பட்ட CPM (Communist Party of India) இன் குண்டர்கள் போலிசாரின் மறைமுக ஆதரவுடன் மக்களை பெரும் பீதிக்கு உட்படுத்துவதற்கும் எதிர்ப்பு இயக்கத்தை களைவதற்கும் நந்திகிராமிற்குள் படையெடுத்தனர். அப்பொழுது நடந்த மோதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; ஆனால் இறுதியில் CPM குண்டர்களை கிராமமக்கள் விரட்டி அடித்தனர். புதன் வரை இப்பகுதி அரசாங்க அதிகாரிகள் "நுழைய முடியாமல்" இருந்தது; உள்ளூர்வாசிகள் சாலைகளை பிளந்துவைத்தும், பாலங்களை அழித்தும் தடுப்புக்களை ஏற்படுத்தியும் அரசாங்கப் பிரதிநிதிகள் நந்திகிராமுக்குள் நுழையாமற் செய்திருந்தனர். பல தகவல்களின்படியும் புதனன்று நடைபெற்ற மோதல் ஒரு சிறு உள்நாட்டுப் போர் போல் இருந்தது. மூன்று வேறு திசைகளில் இருந்து போலீசார் பகுதிக்குள் நுழைந்தனர்; போலீஸ் படையின் இரு பிரிவுகள் மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. பல நூற்றுக்கணக்கான மகளிர், குழந்தைகள் என்ற சுவருக்குப் பின் ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் கடப்பாறைகள், கத்திகள், ஈட்டிகள் போன்றவற்றை ஆயுதங்களாக கொண்டு கூடியிருந்தனர். சில தகவல்களின்படி, சில கிராமவாசிகளிடையே வீடுகளில் தயாரிக்கப்பட்டிருந்த குழாய் குண்டுகளும், நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகளும் இருந்தன. கூட்டத்தை கலைப்பதற்கான போலீசார் கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர்; ஆனால் கிராமவாசிகள் பதில் தாக்குதல் நடத்தியபொழுது, போலீசார் நிஜத்தோட்டாக்களை சுடுவதில் பயன்படுத்தினர். "நந்திக்கிராமில் குருதியாறு --கொல்லும் களங்கள்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் மரணம்" என்று போலீஸ் தாக்குதல் பற்றி தலைப்பிட்டு இந்துஸ்தான் டைம்ஸ் விவரித்ததாவது: "கிராம மக்கள் ஓடத் தொடங்கியவுடன், போலீஸ்காரர்கள் அவர்களைத் தொடர்ந்தனர்; சிலரை அவர்கள் வீடுகளில் இருந்து வெளியே இழுத்து, அடித்து மிதித்தனர். 'இது ஒரு போர் போல் உள்ளது; என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் எங்குள்ளனர் என்று எனக்குத் தெரியவில்லை' என்று ஒரு கிராமவாசியான சபெர் கூறினார். 'எல்லா வயல்களிலும் இரத்தம் வழிந்திருந்த உடல்கள் சிதறி இருந்தன. காயமுற்றவர்கள் உதவிக்கு ஓலமிட்டனர்; ஆனால் போலீசார் அவர்களை உதைத்துத் தள்ளினர்'. " அதையடுத்து இறந்தவர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது; பலரையும் மிக ஆபத்தாக போலீஸ் தாக்குதல் விட்டுச் சென்றுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூடும். புதனன்று நிகழ்ந்த போலீஸ் நடவடிக்கைகள், CPM தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் திட்டமிட்டு உத்தரவிடப்பட்டது ஆகும். மேற்கு வங்காள முதல் மந்திரி மற்றும் CPM அரசியல் குழு உறுப்பினரான புத்ததேப் பட்டாச்சார்ஜி அவருடைய மூத்த மந்திரிகள் மற்றும் CPM இன் அகில இந்திய தலைமை அனைத்தும் நந்திகிராமின் மீது தாக்குதல் நடத்தியது, "நந்திகிராமில் நிலவும் சட்டமற்ற நிலைமைக்கு" முற்றுப்புள்ளி வைப்பதற்கு அவசியமானது என்று உரத்த குரலில் பாதுகாக்கின்றனர்; அதாவது முதலாளித்துவ அரசாங்கத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும்; எனவே போலீஸ் நிகழ்த்திய படுகொலைகள் "தற்காப்பிற்கு" நிகழ்ந்தவை என்று காரணம் கூறுகின்றனர். தற்காப்பிற்கு என்னும் காரணங்கள், நந்திக்கிராமை தாக்குவதற்கு போர் உடையில் போலீசாரை ஆயிரக்கணக்கில் அனுப்பிவைத்த அரசாங்கத்தின் முடிவினால், முதலில் எடுபடாமற் போகின்றது. இரண்டாவதாக, அரசாங்கத்தின் சொந்த சேதவிவரம் பற்றிய புள்ளிவிவரங்களால் செல்லாமற் போக்கின்றது. மேற்கு வங்க சட்ட மன்றத்தில் வியாழனன்று பட்டாச்சார்ஜி கொடுத்துள்ள அறிக்கையின்படி, 14 கிராம வாசிகள் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்துள்ள நிலையில் 12 போலீசார் மட்டுமே காயம் அடைந்ததும் "இன்னும் தீவிர பரந்த காயங்கள் ஏற்படாததற்கு காரணம் எல்லா போலீசாரும் பாதுகாப்பு உடைகளை அணிந்தததால்தான்" என்பதாகும். CPM தலைமையிடம் நந்திகிராம் படுகொலைகளை ஒரு பிற்போக்குத்தன முதலாளித்துவ ஆட்சிக்கு ஒப்பான வனப்புரை வாதங்களுடன் நியாயப்படுத்துகையில், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் உத்தரவின்படி நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கையின் தூண்டுதல் மற்றும் மிருகத் தன்மை அரசியலில் உள்ள பல கட்சிகள் அமைப்புக்கள் ஆகியவற்றால் கண்டனம் செய்யப்பட்டுள்ள நிலையைத்தான் கண்டுள்ளன.இந்திய பொது மன்னிப்பு கழகம் (Amnesty International India) கடந்த வாரம் நந்திக்கிராமில் மிகக் கூடுதலான வலிமை பயன்படுத்தப்பட்டதற்காகவும்", ஜனவரி மாதம் நடந்த வன்முறைபற்றியும் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், கடுமையான வலிமையை பயன்படுத்தியது உள்பட மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்பான, போலீசார் உட்பட, அனைத்து அரசு அதிகாரிகள்மீதும் வழக்குத்தொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்காள கவர்னரான கோபால் கிருஷ்ண காந்தி, நந்திகிராம் கொலைகள் அவரை "உறைய வைக்கும் கொடூர உணர்வால் நிரப்பியுள்ளதாக கூறியுள்ளார்." "இப்படி மனித இரத்தம் சிந்தியுள்ளது தவிர்க்கப்பட முடியாததா? தேசியவிரோத கூறுபாடுகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், எழுச்சியாளர்களுக்கு எதிரான வன்முறை காட்டுதல் என்பது ஒரு விஷயம். ஆனால் நந்திக்கிராமில் வன்முறையினால் பாதிப்படைந்துள்ளவர்கள் அத்தகைய பிரிவுகளில் அடங்கவில்லை" என்றும் கூறியுள்ளார். CPM இன் இடது முன்னணி கூட்டணிக் கட்சிகளும் மேற்கு வங்க அரசாங்க நடவடிக்கைகளில் இருந்து தங்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. புரட்சிகர சோசலிசக் கட்சியின் தலைவர் எச்சரித்ததாவது: "இது இடது முன்னணியின் நிலைப்பாட்டு தோற்றத்தை களங்கப்படுத்துவது மட்டும் இன்றி, அது தப்பிப் பிழைப்பதையும் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது." இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், நந்திக்கிராமில் நடந்த போலீஸ் நடவடிக்கைகள் "மிருகத்தனமானவை" "ஏற்கத்தக்கவை அல்ல" என்று கூறி, கோபால் கிருஷ்ண காந்தியின் கருத்துக்களையும் புகழ்ந்துள்ளார்.மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தலைவர் மனாஷ் புனியா, படுகொலை கொடுத்த வாய்ப்பை பற்றிக் கொண்டு மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி திணிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக் கட்சியும் திரிணாமூல் காங்கிரஸும், மேற்கு வங்க விவசாயிகளின் நில கையகப்படுத்தல் திட்டத்திற்கு எதிரான ஆதரவாளர்கள் என்று தங்களை பாசாங்குத்தனமாக காட்டிக்கொண்டு, இதேபோல், மத்திய அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளன. இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை; UPA பாராளுமன்ற பெரும்பான்மைக்கு இடது முன்னணி உறுப்பினர்கள் 60க்கும் மேற்பட்டோருடைய ஆதரவை அது நம்பியுள்ளது என்பது மட்டும் இதற்குக் காரணம் அல்ல. காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் மேற்கு வங்க ஸ்ராலினிச அரசாங்கம் தன்னுடைய "தொழில் மயமாக்கும்" கொள்கையை தீவிரமாகச் செயல்படுத்தும் தன்மையின் உறுதிப்பாட்டை, அதாவது மக்கள் எதிர்ப்பிற்கு இடையே அந்த மாநில அரசு எவ்வாறு இந்திய, வெளிநாட்டு முதலாளிகளை ஈர்க்க முற்பட்டுள்ளது என்பதை கவலையுடனும் வியப்புடனும் காண்கிறது. மேற்கு வங்கத்தின் இடது முன்னணி போலவே, UPA அரசாங்கமும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) நிறுவப்படுதலை குறைவூதியத்தை நாடும் முலதனத்தை காந்தம்போல் ஈர்ப்பதற்கான தன்னுடைய திட்டங்களில் மிக முக்கியமானதாக கருதுகிறது. ( சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்திய ஆளும் உயரடுக்கினால் சீன அரசாங்கத்தின் நடைமுறையான முதலீட்டாளர்களுக்கு நிலம், நீண்டகால வரிச்சலுகைகள், நிம்மதியான சூழ்நிலை, கடுமையான தொழிலாளர் தொகுப்பின் மீதான கட்டுப்பாடுகள், மலிவான, மற்றும் மிக அதிக அரசாங்கக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட உழைப்பு இவற்றை ஒத்த நடைமுறையை இங்கும் கொண்டு வர எடுக்கப்பட்டுள்ள முயற்சியாகும். சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலதனத்தில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை ஈர்க்கச் செய்து, விரைந்து பெருகிவரும் பாட்டாளி வர்க்கத்தை மிக ஒட்டச் சுரண்டுவதின் மூலம் அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பிய நாடுகடந்த நிறுவனங்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு குறுகிய அடுக்கு மற்றும் அரசாங்க அதிகாரிகள் பெரும் செல்வக் கொழிப்பு பெறுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.)ஒரு சில தினங்களுக்கு முன்புதான் புதிய தாராள சீர்திருத்தங்களுக்காக முதன்மையாக வாதிடும் இந்தியாவின் பிரதம மந்திரி மன்மோகன் சிங், தன்னுடைய மாநிலத்தை தொழில் மயமாக்குவதற்காக மூலதனத்தை ஈர்ப்பதில் பிடிவாதமான குவிப்பைக் காட்டும் மேற்கு வங்கத்தின் முதல் அமைச்சரை பாராட்டியிருந்தார். "என்னுடைய நண்பர் புத்ததேப் பட்டாச்சார்ஜி பொருளாதாரம் விரைவில் சீராக தொழில்மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது என்று கூறும்போது, அவர் சரியாக கூறுகிறார் என்றே நான் உண்மையாக நம்புகிறேன்." என்று பாராளுமன்றத்தின் கீழ்சபையில் அவர் கூறினார். மேற்கு வங்க CPM தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக UPA நடந்து கொள்ளாது என்பதினால் அதுவும் பெருவணிகமும், பெருவணிகத்தின் சார்பிலான இடது முன்னணியின் மிருகத்தனமான நடவடிக்கைகளை இன்னும் கூடுதலாக வலதுபுறம் செல்லத் தூண்டுவதற்கு சிடுமூஞ்சித்தனமாக பயன்படுத்தாது என்று ஆகிவிடாது. மார்ச் 15ல் டைம்ஸ் ஆப் இந்தியா களிப்புடன் எழுதியது: "புதனன்று நடந்த கொலைகளும் அதற்கு முன்பு நடந்த குறைந்தது ஒன்பது கொலைகளும் கட்சியின் சீர்திருத்த எதிர்ப்பு வாய்ச்சவடாலுக்கான தார்மீகநெறியின் முனையை மழுங்கடிக்கும்." மேற்குவங்க அரசாங்கமும் CPM உம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ள விவசாயிகள் எழுச்சியை வலதுசாரி மற்றும் நக்சலைட் (மாவோயிஸ்டுகள்) அரசியல் எதிர்ப்பாளர்கள் தூண்டுதலின்பேரில் நடக்கின்றது என்றும், அரசாங்கம் நந்திகிராமில் நிலத்தை கையகப்படுத்தும் முடிவான திட்டத்தை கொண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளன. உண்மையில் கடந்த ஜனவரி மாதத்து கிளர்ச்சியெழுச்சி உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் சலீம் குழுமத்திற்கு இரசாயனப் பொருள் உற்பத்தி ஆலைகள் நிறுவுவதற்கு நந்திக்கிராமில் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டனர் என்பதை கிராமவாசிகள் அறிந்தபொழுது பற்றிக்கொண்டது. மேலும் முதல் மந்திரி பட்டாச்சார்ஜி நிலம் கையகப்படுத்தலுக்கான "ஆணையை" திரும்பப் பெறுவதாக கூறியுள்ளபோதிலும், அதை இன்னமும் செயல்படுத்தவில்லை. CPM இன் அரசியற்குழு அவசரம் அவசரமாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் புதனன்று நடைபெற்ற குருதிகொட்டிய நிகழ்வுகளுக்கு "திரிணாமூல் காங்கிரஸ், நக்சலைட் இன்னும் பிற கூறுபாடுகள்தான்" காரணம் என்று குற்றம் சாட்ட முயன்றுள்ளது.மேற்கு வங்க அரசாங்கத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் பல வலதுசாரி ஜனரஞ்சக அழைப்புக்களை விடுத்துள்ளது; இவற்றில் கடுமையான கம்யூனிச எதிர்ப்பு வாதமும் வங்க தேசியவாதமும் இணைந்துள்ளன. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்துள்ள இந்த அமைப்பு தேசிய அரசியலில் BJP உடன் ஒரு தோழமைக் கட்சி ஆகும். மேற்கு வங்கத்தின் விவசாயிகளுடைய குறைகளை தன்னுடைய பிற்போக்கான இலக்குகளுக்குத்தான் ஐயத்திற்கு இடமின்றி திரிணாமூல் காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள முயலுகிறது. ஆனால் டாட்டாக்களுடைய ஆணைகளுக்கு ஏற்ப சிங்கூரிலும் சலிம் குழுவிற்காக நந்திகிராமிலும் நில அபகரிப்புக்களை செய்வதின் மூலம் திரிணாமூல் காங்கிரஸுக்கு தலைமை தாங்கும் மமதா பானர்ஜி போன்றவர்களுக்கு CPM மற்றும் இடது முன்னணியும்தான் அரங்கு அமைத்துக் கொடுக்கின்றன. மேலும் CPM தலைமையிலான இடது முன்னணி பிரிட்டிஷ் குடியேற்ற காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை பயன்படுத்தி பெருவணிகத்தின் சார்பாக நிலத்தைப் பறிக்கவும், எதிர்ப்பை அடக்கவும், நேரடி வன்முறையை பிரயோகிக்கும் தொடர்ச்சியான அரச தாக்குதல்களின் உச்சக் கட்டமாகத்தான் புதனன்று நிகழ்ந்த படுகொலைகள் இருந்தன. தன்னுடைய அறிக்கையில் CPM, வெளிசக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று தான் மிருகத்தனமான நடத்திய அதே கிராமவாசிகளுக்கு முறையீட்டை கொடுத்துள்ளது; இடது முன்னணி அரசாங்கம்தான் கிராமவாசிகளுக்கு "வெளிசக்திகளாக" மாறிவிட்டது என்ற உண்மையை இது வசதியாக புறக்கணிக்கிறது. பட்டாச்சார்ஜியும் அவருடைய சக ஸ்ராலினிஸ்ட்டுக்களும் நந்திக்கிராம், சிங்கூர் மற்றும் பல SEZ க்காக குறிக்கப்பட்டுள்ள இடங்கள் முதலாளித்துவ வளர்ச்சியின் மூலம் பலனடையும் என்று கூறுகின்றனர். உண்மையில், இந்தியாவில் புதிய தாராள சீர்திருத்தத்தால் கடந்த 15 ஆண்டுகளில் முதலாளித்துவ வளர்ச்சி சமூகப் பொருளாதார வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகள்மீதும் பெருவணிகத்தின் பிடி வலுப்பெறுவதையும், இன்னும் கூடுதலான அளவில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பிளவுகள் ஏற்படும் என்பதையும், வறுமை பெருகும், பொருளாதாரப் பாதுகாப்பின்மை பெருகும் என்பதையும்தான் காட்டுகிறது. மேலும், நந்திக்கிராமில் உள்ள விவசாயிகள் அவர்களில் பெரும்பாலனவர்களுக்கு தற்கால தொழில்துறையில் வேலைசெய்ய தேவையான திறமைகள் கிடையாது என்பதை நன்கு அறிவர்; அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிக விரைவில் கரைந்து, வெகுவிரைவில் அவர்கள் வாழ்க்கையை நடத்த ஆதாரமில்லாமல் போய்விடும் என்பதையும் நன்கு அறிந்துள்ளனர். நந்திக்கிராமில் நடந்த படுகொலை இடது முன்னணி மற்றும் CPM இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளை காப்பாற்றுவர் என்ற பாசாங்குத்தனத்தை சிதறடித்துள்ளது; மேலும் அவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனத்தின் முகவர்கள் என்பதுடன், தொழிலாளர்களுக்கு எதிராக எத்தகைய அரச வன்முறையையும் கட்டவிழ்த்துவிடத் தயாராக உள்ளனர் என்பதையும் காட்டுகிறது. |