WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
US military prepares Fallujah-style bloodbath in
Iraqi city of Baqubah
ஈராக்கிய நகரமான பகுபாவில் பல்லூஜா வகையிலான குருதிக் களரிக்கு அமெரிக்க இராணுவம்
தயாரிப்பு
By Peter Symonds
25 June 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
"அம்புமுனைக் கிழிப்பு நடவடிக்கை"
("Operation Arrowhead Ripper")
என்னும் பெயரில் பாக்தாத்திலும், தலைநகருக்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள
பகுதிகளில் கிளர்ச்சிக் குழுக்களை ஒடுக்குவதை நோக்கமாக கொண்ட அமெரிக்க பரந்த நடவடிக்கைகளின் ஒரு
பகுதி தயாரிக்கப்பட்டுவருகிறது. கவச வாகனங்கள், பீரங்கிப்படை, ஹெலிகாப்டர் குண்டுவீச்சுக்கள், போர்விமானங்கள்
உதவியுடன் அமெரிக்கப் படைகள் 300,000 மக்கள் கொண்ட நகரத்தை முற்றுகையிட்டுள்ளது. நவம்பர் 2004ல்
ஏராளமான மக்கள் வெளியேறி நகரத்தின் பல பகுதிகளும் தரைமட்டமாக்கப்பட்ட பல்லுஜா மீதான கொலைகார
தாக்குதலைத்தான் இந்த நடவடிக்கை நினைவிற்குக் கொண்டு வருகிறது.
ஈராக் முழுவதும் ஆக்கிரோஷமான நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கத் துருப்புக்கள்
உத்தரவிடப்பட்டுள்ளதால் அமெரிக்க இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகமாக உயர்ந்துள்ளது. பாக்தாத்திலும்,
டிக்ரித்திலும் வெவ்வேறு சலையோரக் குண்டுவெடிப்புக்களின் விளைவாக சனியன்று இன்னும் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
மற்றொரு இராணுவம் ஒரு சிறு ஆயுத சூட்டிலும், இருவர் போரல்லாத காரணங்களாலும் கொல்லப்பட்டனர். கடந்த
ஆறு நாட்களில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், இம்மாதம் எண்ணிக்கை இதுவரை 80 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இறப்பு இருக்கும் என்று உயர்மட்ட அமெரிக்க தளபதிகள் எச்சரித்துள்ளனர்.
ஈராக்கிய குடி மக்களின் இறப்புக்கள் பற்றி அறிக்கைகள் வெளியிடப்படவில்லை; இது
உறுதியாக இதைவிட அதிகமாக இருக்கும். ஆக்கிரமிப்பு எதிர்ப்பு குடிப்டைத் தலைவர்கள் பாகுபாவிலிருந்து
வெளியேறுவதை தடுக்கும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் நகரத்தை தடைவேலியிட்டு அனைத்து மக்களையும்
பொறியில் தள்ளியுள்ளது. குறைந்தது 8,000 அமெரிக்க துருப்பினர், 2,000 ஈராக்கிய இராணுவத்தினர்,
போலீசார் உதவியுடன் பாகுபா முழுவதும் சோதனையிட்டு வருகின்றனர்; தன்னிச்சையாக சந்தேகத்திற்கு
உரியவர்களை காவலில் வைக்கின்றனர், எதிர்ப்புப் பகுதிகளை அழிக்கின்றனர், மற்றும் அச்சுறுத்தல் திறன் இருக்கக்
கூடும் எனக் கருதப்படும் கட்டிடங்களை தகர்க்கின்றனர்.
செய்தி ஊடக அறிக்கைகள் பெரும்பாலும் அமெரிக்கப் படைகளுடன் இயைந்திருக்கும்
பத்திரிகையாளர்கள் இந்த நடவடிக்கையை மக்களை "அல் கொய்தாவில்" இருந்து விடுவிக்கும் மனிதாபிமானப் பணி
என்று சித்தரிக்க முற்பட்டுள்ளனர். தங்கள் நாட்டில் பிரச்சார நோக்கத்திற்காக அனைத்து ஆக்கிரமிப்பு எதிர்ப்புப்
போராளிகளையும் அல் கொய்தாவினர் என்று பெயரிடுவது புஷ் நிர்வாகத்திற்கு உதவுகிறது என்றாலும், இதற்கும்
உண்மைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கடந்த ஆண்டு பாகுபாவை "ஈராக்கிய இஸ்லாமிய நாட்டின்"
தலைநகர் என்று சுன்னித் தீவிரவாதிகள் அறிவித்தனர்; ஆனால் "மெசபோடமியாவில் அல் கொய்தா" என்ற
இக்குழு, தொடர்புடைய ஏராளமான சுன்னி கிளர்ச்சி அமைப்புக்களுள் ஒன்றுதான்.
அமெரிக்க இராணுவ அதிகார ஏணியின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், இயைந்த
நிருபர் மைக்கேல் யோன் பகுபா நடவடிக்கை பற்றிய தன்னுடைய களிப்பை சிறிதும் மறைக்க முடியவில்லை.
"போரில் இருந்து தப்பித்துவிட மக்கள் முயல்கின்றனர்; ஆனால் டல் அபர் மற்றும் பல்லுஜாவில் நம் துருப்புக்கள்
தாக்க பல தப்பு வழிகளை விட்டுவிட்ட தவறைச் செய்துவிட்டோம். இம்முறை, முக்கியமான முன்னுரிமை அல்
கொய்தாவை பொறிக்குள் அகப்படச் செய்து அழிப்பதே ஆகும்." என்று அவருடைய கட்டுரையில் வெள்ளியன்று
எழுதினார். அவர் மேலும் கூறியதாவது: "இப்பொழுதுள்ள வேகத்தில் பாகுபாவில் அல் கொய்தா என்பது விரைவில்
இரு விருப்பச் செயல்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்: சரணடைதல், அல்லது இறத்தல்."
அமெரிக்கப் படைகள் பாக்தாத்தில் வடகிழக்கு புறமுள்ள தியாலா மாநிலத்தின்
தலைநகரான பகுபாவை ஒரு மிகப் பெரிய சிறைமுகாமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரம்
நடவடிக்கை தொடங்கியதும், நகரத்தில் அனைத்து மக்களும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை
தாங்கிய துண்டுப் பிரசுரங்கள் விமானங்களில் இருந்து தூவப்பட்டன. "போராளித் திறன் உடையவர் எனத் தோன்றும்
ஒவ்வொரு குடிமகனின் கைரேகை, அங்க அடையாளத் தகவல்களை சேகரிக்க வேண்டும்" என்று இராணுவம் தீவிரம்
காட்டுகிறது என்று நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஈராக்கிய மக்களில்
பெரும்பான்மையானவர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு விரோதம் காட்டி, ஆயுதமேந்திய எழுச்சியாளர்களுக்கு
ஆதரவு காட்டுகின்றனர் என்று ஒவ்வொரு விவரமான ஆய்வும் தெரிவித்திருக்கையில், ஒவ்வொருவரும் சந்தேகத்திற்கு
உரியவர் என்ற பொருளைத்தான் இது தரும்.
Stars and Stripes ,
ஜூன் 22 பதிப்பின்படி, கடந்த செவ்வாயன்று எதிர்ப்படும் அனைத்து ஈராக்கிய ஆடவரையும் காவலில் வைக்குமாறு
அமெரிக்கப் படைகள் உத்தரவைப் பெற்றன. முதல் பட்டாலியன், 23வது தரைப்படைப் பிரிவின் பகுதி ஒன்று
நான்கு இளவயது சிறுவர்களை பிடித்து, அவர்களுடைய கைகளை பிளாஸ்டிக் பட்டையினால் விலங்கிட்டு விசாரிப்பதற்கு
அழைத்துச் சென்றுவிட்டனர். இரு சிறுவர்களின் தந்தை துருப்புக்களிடம் அவர்களுக்கு என்ன நேரிடும் என்று கெஞ்சிக்
கேட்டார். ஈராக்கிய இராணுவத்திடம் அல்லது போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் அவர் கெஞ்சிக்
கேட்டுக் கொண்டார்; ஏனெனில் பாதுகாப்புப் படைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஷியைட் போராளிகள் அவர்களை
கொன்றுவிடுவர் என்று அவர் கவலையுற்றார்.
இணைந்துள்ள செய்தியாளர்கள் கடமையுடன் உத்தியோகபூர்வ பிரச்சாரமான
நடவடிக்கை உள்ளூர் மக்களுடைய "இதயங்கள், மனது" ஆகியவற்றை வெற்றி கொண்டு "பிணைப்பதுதான்" ஈராக்கிய
பிரிவுகளின் இலக்கு என்பதையே கூறினர். ஆனால் மிகப் பரந்த அளவில் அவநம்பிக்கை, அச்சம், விரும்பாத்தன்மை
மற்றும் விரோதப் போக்கு ஈராக்கியருக்கும் அமெரிக்க துருப்புகளுக்கும் இருக்கும் தன்மையை மூடிமறைப்பது மிகவும்
கடினமாகும். வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் அமெரிக்க காப்டன் ஒருவருக்கும் நகரவாசி
ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடலை தெரிவித்து அது "விரைவில் ஈராக்கில் அமெரிக்கர்கள் நடந்து
கொள்ளும் முறை பற்றிய விவாதம் ஆயிற்று" எனக் கூறியது. அல் கொய்தாவிடம் எந்தப் பரிவுணர்வும் காட்டாத
50வயது ஈராக்கியர் கோபத்துடன் ஒரு மனிதனை அமெரிக்கப் படைகள் சுட்டுவீழ்த்தியதை குறைகூறினார்; அதை
அந்த காப்டன் மறுத்தார். அந்த நபர் ஈராக்கியத் துருப்புக்கள் பற்றி இன்னும் மோசமாகத்தான் கருதினர்;
அவர்கள் ஷியைட் போராளிகள் சீருடையுடன் இருப்பதை தவிர ஒன்றுமில்லை என்றார்.
மார்ச் மாத நடுவில் அமெரிக்க துருப்புக்கள் பகுபாவில் நுழைந்தனர்; ஆனால் இரு
கிழக்கு நகர்ப்பகுதிகளைத்தான் "சமாதானப்படுத்த" முடிந்துள்ளது. கடந்த செவ்வாயன்று தொடங்கிய இந்தச்
சமீபத்திய தாக்குதல் மேற்கு பகுபாவின்மீது குவிப்பைக் கொண்டுள்ளது. "நடவடிக்கை பகுதியில் தென்கோடியில்
இருக்கும் காட்டூன் என்ற பகுதியில் அமெரிக்க இராணுவம் நிலத்தை அதிரவைக்கும் குண்டுத் தகர்ப்புக்களையும்,
ஒவ்வொரு வீடாக சோதனையையும் இரு நாட்கள் நடத்தினர்; இடையிடையே துப்பாக்கிச் சண்டைகளும் இருந்தன"
என்று Los Angenes Times
விளக்கியுள்ளது.
தாக்குதல் தளபதியான பிரிகேடியர்-ஜெனரல் மிக் பெட்நரேக் செய்தி ஊடகத்திடம்
வார இறுதியில் கூறினார்: "வீடுவீடாக, பகுதி பகுதியாக, தெருத் தெருவாக, சாக்கடை சாக்கடையாக
சோதனை நடைபெறுகிறது; கார்கள், மற்ற வாகனங்கள் என்று ஒவ்வொன்றையும் நாங்கள் சோதனை
போடுகிறோம்". நகரத்தின் 60 சதவிகிதப் பகுதி அமெரிக்கத் துருப்புக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக
அவர் கூறினார்; இதுவரை 60ல் இருந்து 100 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். 50 முதல்
100 கிளர்ச்சியாளர்களை துருப்புக்கள் பொறியில் சிக்க வைத்துள்ளதாகவும், "தூக்குக் கயிறு"
இறுக்கப்படுவதாகவும் பெட்நரேக் கூறினார்; ஆனால் இப்பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு
இன்னும் சில வாரங்கள் பிடிக்கும் என்றும் கணித்தார்.
மூன்றாம் Stryker
பிரிகேடின் தளபதியான கேர்னல் ஸ்டீவ் நகரத்தின் மூன்று பகுதிகளை சிக்கல் வாய்ந்தவை என்று அடையாளம் கண்டு
அங்கு காங்க்ரீட் தடுப்புக்கள் அமைக்க இருப்பதாவும் இப்பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகளை அமைக்க
இருப்பதாவும் கூறினார். ராய்ட்டர்ஸிடம் பேசிய கட்டுப்பாட்டு சார்ஜென்ட் மேஜர் ஜேப் ஹக்கின்ஸ் அப்பட்டமாக
அறிவித்தார்: "ஒரு கொல்லும் சாக்கிற்குகள் விரோதியை மூடிக் கொண்டு வருகிறோம்." பல்லுஜாவில் நடந்தது
போலவே, அமெரிக்க இராணுவம் தன்னுடைய உயர்ந்த துப்பாக்கி சக்தியைப் பயன்படுத்தி எவ்வித ஆயுதமேந்திய
எழுச்சியையும் தரைமட்டமாக்க விரும்புகிறது. வெள்ளியன்று காலை அமெரிக்க ஹெலிகாப்டர்கள், ஆயுதமேந்தியவை,
காலிஸ் எனப்படும் அருகில் உள்ள நகரத்திற்கு வெளியே இருக்கும் இடத்தில் இருந்த "அல் கொய்தாவினர்" எனச்
சந்தேகிக்கப்படுபவர்கள் 17 பேரை படுகொலை செய்தன.
பல்லுஜாவில் இருந்து வந்துள்ள சமீபத்திய தகவல் "சமாதானப்படுத்தப்பட்ட" பகுபா
எப்படி இருக்கும் என்ற தோற்றத்தை கொடுக்கிறது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் தகர்க்கப்பட்டுள்ளன.
வசிக்கும் மக்களுக்கு உதவியோ அல்லது இழப்புத் தொகையோ கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மீண்டும் இராணுவ
சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்; இதில் மாலை 6 மணியில் இருந்து காலை 8 மணிவரை ஊரடங்கு உத்தரவும்
உண்டு. ஒரு 42-வயது தந்தையான முகம்மத் ஆய்தான்
IRIN செய்தி நிறுவனத்திடம் கூறினார்: "நாங்கள் கைதிகள்
போல், எல்லா மட்டங்களில் இருந்தும் எவ்வித உதவியும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு இங்கு
கொடுக்கப்பட்டிருந்த ஆதரவு உதவி இப்பொழுது காணப்படவில்லை. எங்களையேதான் நாங்கள் நம்பி உள்ளோம்;
அழுக்குத் தண்ணீரை குடிக்கிறோம்; இதையொட்டி எங்கள் குழந்தைகளை நோய்கள் பீடிக்கும் என்று எங்களுக்கு
தெரியும். பல்லுஜாவின் பல பகுதிகளில் மின்சாரம் நாள் ஒன்றிற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகத்தான்
கிடைக்கும்; சில நேரம் தண்ணீரை சேகரிப்பதற்காக மூன்று நாட்கள் குளிக்காமல்கூட இருக்க நேரிட்டுள்ளது."
பாகுபாவில் வசிப்பவர்கள் அம்புமுனைக் கிழித்தல் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து
தண்ணீரோ, மின்வசதியோ இல்லை என்று ஏற்கனவே குறைகூறியுள்ளனர். பாகுபா ஒரு சுன்னி எழுச்சித்தளம் என்று
வலியுறுத்தும் ஷியைட் ஆதிக்க பாக்தாத் அராசங்கம் உதவியோ, பணிகளோ இந்நகரத்திற்கு வழங்குவதில் ஆர்வம்
காட்டவில்லை; அல் கொய்தாவின் பிடிக்குள் நகரம் போய்விடும் என்ற போலிக்காரணத்தை கூறுகிறது.
பாகுபாவில் நடைபெறும் தாக்குதல் ஒன்றும் ஆக்கிரமிப்பு அமெரிக்க இராணுவம் எதிர்பார்த்தபடி
கிளர்ச்சி எதிர்ப்பாளர்களுக்கு எதிரான இறுதி நடவடிக்கை இல்லை என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது. லெப்டினன்ட்
ஜெனரல் ரேமோண் ஓடியர்னோ வெள்ளியன்று செய்தியாளர்களிடம் அமெரிக்க உளவுத்துறை நகரத்தில் இருந்து உயர்மட்ட
அல் கொய்தாத் தலைவர்களில் 80 சதவிகிதத்தினர் போர் தொடங்கு முன்னரே ஓடிவிட்டனர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
என்று கூறினார். இதற்கு எவர் பொறுப்பு என்ற பூசலில், ஓடியர்னோ அறிவித்தார்: "வெளிப்படையாகக் கூறினால்,
பாகுபாவின்மீது நடவடிக்கை வரும் என்று அவர்களுக்கு தெரிந்துவிட்டது. செய்திகளை கவனித்தனர். அலை அலையாய்
நாங்கள் வருகிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். ஒரு பிரச்சினைப் பகுதியாக பாகுபா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது
என்பதை அவர்கள் உணர்ந்தனர்."
பாக்தாத் மீது தாங்குதல்கள் நடத்துவதற்கு ஒத்திகை பார்க்கும் இடங்களாக அல்
கொய்தா என்று கருதும் தளங்கள் பலவற்றில் முக்கியமானது பாகுபா என்று கருதப்படுகிறது. "பாக்தாத் இடைநிலப்
பகுதிகளின் போர்" என்று அமெரிக்க இராணுவம் பெயரிட்டுள்ள இடங்களில் அமெரிக்கா தலைநகரத்திற்கு வடக்கே
இருக்கும் தியாலாவின் மற்ற பகுதிகளிலும் செயற்பாடுகளை கொண்டுள்ளது; தெற்கில்
Arab Jabour
பகுதி, மற்றும் மேற்கு, வடமேற்கில் போராளிகளுடைய உகந்த புகலிடம் எனக் கருதுபவையும், அதமியா, ரஷித்
மற்றும் மன்சூர் என்று பாக்தாத் மாவட்டங்களின் பகுதிகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளியன்று
புதிய செயற்பாடுகள் இன்னும் 700 பேரை சிறைபிடிப்பதிலும், 160 எழுச்சியாளர்களை கொன்ற வகையிலும்,
நூற்றுக்கணக்கான ஆயுதக் கிடங்குகள், வெடிமருந்துக் கிடங்குகளை கண்டுபிடித்த வகையிலும் வெற்றிபெற்றன என்று
ஒடியர்னோ அறிவித்தார்.
ஒடியர்னோ விவரிப்பது ஒன்றும் தனிமைப்படுத்தப்பட்ட எழுச்சிக் குழுவினரை அடக்கியிருப்பது
அல்ல; ஒரு காலனித்துவ பாணியிலான அடக்குமுறைப் போர், விரோதப் போக்குடைய மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ளதுதான்
விவரிக்கப்பட்டுள்ளது. பாகுபா போன்ற நகரங்களை தகர்க்கும் வகையில் செயல்படுவதால், அமெரிக்கத் துருப்புக்கள்
இன்னும் கூடுதலான வகையில் நாட்டில் சட்டவிரோத அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு இன்னும் கூடுதலாக விரோதப்
போக்கையும் எதிர்ப்பையும்தான் பெருக்குகிறது. |