World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Heavy fighting continues in the North and East of Sri Lanka

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் கடுமையான மோதல்கள் தொடர்கின்றன

By Sarath Kumara
15 June 2007

Back to screen version

இலங்கை அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002ல் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுவதாக கூறும் புனைகதையை இன்னமும் பேணுகின்றது. ஆனால், தீவின் வடக்கிலும் கிழக்கிலும் பிரிவினைவாத கெரில்லா இயக்கத்தை அழிக்கும் மற்றும் யுத்த நிறுத்த விதிகளை ஓரங்கட்டிவிட்டு புலிகளின் பிராந்தியத்தைக் கைப்பற்றும் இலக்குடன் பாதுகாப்புப் படைகள் இரக்கமற்ற ஆக்கிரமிப்பு யுத்தமொன்றை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த இரு வாரங்களாக கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. கிழக்கில் புலிகளின் கடைசிக் கோட்டையாகக் குறிப்பிடப்படும் தொப்பிகல பிரதேசத்தைக் கைப்பற்ற இராணுவம் முயன்றுகொண்டிருக்கின்றது. கடந்த ஜூலையில் இருந்து, மாவிலாறு, சம்பூர் மற்றும் வாகரை போன்ற கிழக்குப் பிராந்தியங்களில் இருந்து இராணுவம் புலிகளை வெளியேற்றியதோடு ஒரு மதிப்பீட்டின்படி 250,000 மக்களையும் வீடுகளில் இருந்து வெளியேற்றியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, தொப்பிகல காட்டில் புலிகளின் நான்கு பாதுகாப்பு முன்னரங்குகளைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்தது. திங்களன்று ஐலன்ட் பத்திரிகைக்கு பேசிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, சில நாட்களுக்குள் பாதுகாப்புப் படைகள் முழு பிரதேசத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என மிகைப்படுத்திக் கூறினார். குறைந்தபட்சம் இரண்டு படையினரும் 10 புலி உறுப்பினர்களும் இந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.

கிழக்கில் பிரதேசங்களை கைப்பற்றிய இராணுவம், வடக்கில் உள்ள புலிகளின் தளங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளதுடன் பழிவாங்கல் தாக்குதல்களையும் தூண்டுகின்றது. ஜூன் மாதத்தின் முதல் மூன்று நாட்களிலும், இராணுவம் ஸ்தாபித்துள்ள நீண்டதூர ஆட்டிலறி நிலைகளை புலிகள் தகர்க்க முற்பட்டபோது ஓமந்தை மற்றும் பம்பைமடு போன்ற வடக்கு முன்னரங்குகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

புலிகள், நான்கு அல்லது ஐந்து ஆட்டிலறி நிலைகளை தகர்த்ததோடு அதே போல் இராணுவ சிப்பாய்களை கொண்டு செல்லும் வாகனம் உட்பட இராணுவத் தளபாடங்களையும் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வாகனத்தின் நிழற்படம் ஒன்றை வெளியிட்டுள்ள புலிகள், ஐந்து மணித்தியாலம் நடந்த மோதலில் 30 படையினருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசாங்கத் துருப்புக்கள் புலிகளின் தாக்குதலைத் தோற்கடித்துவிட்டதாக வலியுறுத்திய இராணுவம், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை மூடி மறைத்தது.

இந்த நடவடிக்கையில் குறைந்தபட்சம் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதே போல் மேலும் 24 பேர் மோதலில் காணாமல் போயுள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 82 படையினர் காயமடைந்துள்ளதோடு இவர்களில் 52 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சில சடலங்களை கையளித்த போதும், இராணுவம் ஏற்றுக்கொள்ளாத மேலும் 14 சடலங்களை எரித்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

எந்தவொரு மோதல் தொடர்பான செய்திகளையும் கடுமையாக தணிக்கை செய்யும் இராணுவம், நாடு பூராவும் யுத்தம் ஆழமாக வெறுக்கப்படுகின்ற நிலையில் பின்னடைவு அல்லது அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புக்கள் தொடர்பான எந்தவொரு செய்திகளையிட்டும் குறிப்பாக விழிப்புடன் உள்ளது. இராணுவத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் பொருளாதார சுமைகளால் படையில் சேர்ந்தவர்கள் --இவர்கள் சம்பளம் பெறுவதற்காக இராணுவத்தில் சேர்வதைத் தவிர வேறு மாற்றீடுகள் இல்லாத கிராமப்புற ஏழை இளைஞர்களாவர்.

ஜூன் 4 அன்று ராய்ட்டருடன் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லகம, அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை பேணுகின்றது என்ற பொய்யை மீண்டும் தெரிவித்தார். "யுத்த நிறுத்தத்தை கைவிடும் முடிவுகள் எதுவும் இல்லை என்பதை நான் தெளிவாக கூறுகின்றேன்" எனத் தெரிவித்த அவர், சர்வதேச ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுக்களில் மீண்டும் ஈடுபடுமாறு புலிகளை அரசாங்கம் "ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றது" என மேலும் தெரிவித்தார்.

போகொல்லகமவின் கருத்துக்கள், இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை புறந்தள்ளிவிட்டு அதற்கு இரகசியமாக ஆதரவளிப்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள சர்வதேச சமூகம் என சொல்லப்படுவதையே பெரிதும் இலக்காகக் கொண்டிருந்தது. கொழும்பு அரசாங்கம் யுத்தநிறுத்தத்திற்கு கட்டுப்படுவதாகவும் மற்றும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் காட்டும் பாசாங்கைத் தொடருமானால், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சக்திகளாலும் பாரபட்சமின்மை என்ற தமது பாசாங்கை மட்டுமே பேண முடியும்.

கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அக்காஷி, அரசாங்கத்தையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்தார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் சமாதானத்தை விரும்புகிறது என்ற புனைகதையை மீண்டும் ஒரு முறை அங்கீகரித்தார். "சமாதான முன்னெடுப்புகளுக்கு இன்னமும் அர்ப்பணிப்பு இருப்பதோடு மற்றும் அரசியல் தீர்வு காணும் ஜனாதிபதி இராஜபக்ஷவின் உறுதிப்பாட்டிலும் மாற்றங்கள் இல்லை" என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தை அத்தகைய பொய்களுக்கு பயன்படுத்த முடியாது. ஜூன் 4 அன்று, போகொல்லகம கருத்துத் தெரிவித்த அதே தினம், டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவம் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டதல்ல எனத் தெரிவித்தார். "யுத்த நிறுத்தம் இன்று கிடையாது, மோதல்களே நடக்கின்றன," என அவர் தெரிவித்திருந்தார். இராணுவம் புலிகளின் பிராந்தியங்களை மீண்டும் மீண்டும் கைப்பற்றுகின்றது என்ற உண்மையை புறந்தள்ளிய பொன்சேகா, இராணுவத்தின் நடவடிக்கைகள் தற்பாதுகாப்பானவை என வலியுறுத்தினார். "புலிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை இராணுவம் பாதுகாக்கின்றது," மற்றும் இராணுவம் "அந்த நிலைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது" என அவர் பிரகடனம் செய்தார்.

அரசாங்கம் யுத்தத்தை உக்கிரப்படுத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுகின்றது என்பதில் சந்தேகம் கிடையாது. இலங்கை புதிய தளபாடங்களையும் குண்டுகளையும் வாங்குவதற்காக சீனாவின் பொலி டெக்னொலொஜிஸ் உடன் ஒரு பெரும் உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டுள்ளதாக ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி கடந்த வாரம் அம்பலப்படுத்தியுள்ளது. இதில் 120 மி.மி. மோட்டார் செல்கள் 70,000, 152மி.மி. ஆட்டிலறி செல்கள் 68,000 மற்றும் 81 மி.மி. உயர் வெடிப்புத் திறன்கொண்ட மோட்டார் குண்டுகள் 50,000 அடங்கும். கடற்படையும் 14.5மி.மி. காட்ரிஜ்கள் 100,000, ஆர்.பி.ஜி-7 ரொக்கட்கள் 2,000 மற்றும் 81மி.மி எயார்பர்ஸ்ட் மோட்டார் செல்கள் 500, அதே போல் ஒரு தொகை புதிய கடற்படை துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான கனரக தானியங்கித் துப்பாக்கிகள் மற்றம் ஆயிரக்கணக்கான துணை தானியங்கித் துப்பாக்கிகளையும் வாங்குவதற்கு பட்டியல் அனுப்பியுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்காக புலிகள் அண்மையில் பயன்படுத்திய இலகுரக விமானங்களை எதிர்ப்பதற்காக, அரசாங்கம் வான் பாதுகாப்பை உயர்த்துவதற்காக சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது. இராணுவம் JY 11 3D ராடாரை சீன தேசிய இலத்திரனியல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சபையிடம் இருந்து அடுத்த சில வாரங்களுக்குள் கொள்வனவு செய்வதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவதோடு, இதே நிறுவனத்திடம் இருந்து மூன்று நடமாடும் ராடார்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. வேறுவொரு கொடுக்கல் வாங்கலில் உக்ரைனில் இருந்து மிக் 29 தாக்குதல் விமானங்களை வாங்க விமானப்படை பிரேரித்துள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின்படி, இராஜபக்ஷ கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஊழியர்களை சேர்க்க வேண்டாம் எனவும் மற்றும் தமது வரவு செலவு ஒதுக்கீடுகளை மிகவும் கவனமாக "சமாளித்துக்கொள்ளுமாறும்" தமது அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வேறு வார்த்தைகளில் சொன்னால், யுத்தத்திற்கு செலவிடுவதற்காக, சுகாதாரம், கல்வி மற்றும் நலன்புரி சேவைகள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகள் உட்பட அனைத்து பிரிவுகளுக்குமான அரசாங்க செலவுகள் வெட்டிக் குறைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இராஜபக்ஷ மேலும் 50,000 ற்கும் அதிகமான புதிய இராணுவ ஆட்சேர்ப்புக்கும் அறிவித்துள்ளார். இது கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான துருப்புக்களையும், அதே போல் இராணுவத்தை விட்டு ஓடிய பலரையும் பதிலீடு செய்வதன் பாகமாகும். ஆயினும், இந்த விரிவாக்கத்தின் பிரதான காரணம், அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்தின் ஊடாக முடிவுக்குக் கொண்டுவர விரும்பாத இனவாத யுத்தத்தை முன்னெடுப்பதும் விரிவுபடுத்துவதுமேயாகும்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்கள் அனைவருமே இதற்கு விலைகொடுக்கத் தள்ளப்படுவார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved