:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan president's "peace" mask
starts to slip off
இலங்கை ஜனாதிபதியின் "சமாதான" முகமூடி நழுவத் தொடங்குகிறது
By Wije Dias
21 June 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கடந்த மாதம் மத்திய கிழக்கிற்கு விஜயம்
செய்திருந்த போது, அல் ஜஸீராவிற்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது
அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தை பாதுகாத்தார். இந்த பேட்டி, அதன் பண்பற்ற தன்மை, அகந்தை மற்றும்
ஒத்திசைவின்மைக்காகவே கவனிக்கத் தக்கதாகும்.
இலங்கையின் உள்நாட்டு ஊடகங்களில் எதுவும், அரசுக்குச் சொந்தமான பத்திரிகைகளும்
கூட, இந்த பேட்டியை மீள் பிரசுரம் செய்யவில்லை அல்லது அதன் உள்ளடக்கத்தைப் பற்றி கருத்துக் கூறவில்லை.
நாட்டின் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொய்கள்
அம்பலத்திற்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், இத்தகைய திகைப்பூட்டும் அமைதியானது கொழும்பில் உள்ள அரசியல்
மற்றும் ஊடக ஸ்தாபனத்தின் ஆழமான தளர்வற்ற நிலைமையை பிரதிபலிக்கின்றது. படுகொலைகள் மற்றும் காணாமல்
போகும் சம்பவங்கள் உட்பட பாதுகாப்புப் படையினரால் ஜனநாயக உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமை
மிகவும் வெளிப்படையானதாகும். இதனால் சர்வதேச ரீதியிலும் மற்றும் உள்நாட்டிலும் இராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொண்டுள்ள
வளர்ச்சிகண்டுவரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அல் ஜஸீராவின் "101 ஈஸ்ட்" நிகழ்ச்சியின் டைமூர் நாபில் நிச்சயமாக ஒரு
பகைமை உணர்வு கொண்ட ஊடகவியலாளர் அல்ல. அவர் 2005 நவம்பரில் இராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டு சிலவாரங்களுக்குள்
புலிகள் யுத்தத்தை மீண்டும் தொடங்கியதாக குற்றஞ்சாட்டியவாறே ஆரம்பித்தார். பின்னர் நாபில் இராஜபக்ஷவிடம்
கேள்விகளை தொடுத்தார்: "புலிகள் மீண்டும் தாக்குதலை தொடங்க தீர்மானித்தது ஏன்?" முற்றிலும் செளகரியமாக
ஜனாதிபதி பதிலளித்தார்: "நான் பலவீனமானவன் என்றும், நான் தோற்றுவிடுவேன் என்றும், அது ஒரு தனியான
அரசை ஸ்தாபிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும் என்றும் அவர்கள் (புலிகள்) நினைத்திருக்கக் கூடும்."
இராஜபக்ஷ தன்னை தொடர்ந்தும் சமாதான விரும்பியாக காட்டிக்கொள்ள
முயற்சித்த போதிலும், நாபிலின் குறைபாடுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூட, ஒன்றன் பின் ஒன்றாக
முரண்பாடுகளில் தானே சிக்கிக்கொண்டுள்ளதை அவர் உடனடியாக உணர்ந்துகொண்டார். புலிகளுக்கும்
அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பற்றி கேட்ட போது ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதாவது:
"நாங்கள் எப்பொழுதும் பேச்சுக்களுக்கு தயார். எப்பொழுதும், இன்றும் கூட. மோதல்கள்
இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும் கூட நான் பேச்சுவார்த்தைக்கு தயார்."
இந்த பதில் ஒளிவுமறைவற்ற பொய்யாகும். 2002 யுத்த நிறுத்தம் மற்றும் 2002
-- 03 வரை நடந்த கலந்துரையாடல்களில் உடன்பாடு காணப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுக்களை
நடத்த தனது விருப்பமின்மையை இராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். சர்வதேச அழுத்தங்களின் கீழ், 2006
பெப்பிரவரியில் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த அவர் தயக்கத்துடன் அனுமதியளித்தார். ஆனால் அது அரசாங்க
பிரதிநிதிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் அடிப்படை மாற்றங்களை கோரிய காரணத்தால் கவிழ்ந்து போனது.
2006 ஏப்பிரலில் ஒஸ்லோவில் நடந்த இரண்டாவது சுற்று நிகழ்ச்சி நிரல் தொடர்பான சச்சரவில்
மூழ்கிப்போனதோடு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவே இல்லை.
யுத்தநிறுத்த உடன்படிக்கை தொடர்பாக கேட்ட போது இராஜபக்ஷ
தெரிவித்ததாவது: "அவர்கள் (புலிகள்) அதற்கு மதிப்பளிக்கவில்லை. நாங்கள் இன்னமும் அதை மதிக்கின்றோம்.
நாங்கள் இன்னமும் எமது பொலிசையோ இராணுவத்தையோ அந்தப் பகுதிக்கு அனுப்பவில்லை." வடக்கிலும்
கிழக்கிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கைப்பற்ற நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய இலங்கை
இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளின் வெளிச்சத்தில், இந்த கூற்று வெளிப்படையான பொய்யாகும். பேட்டியின்
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இராணுவத்தின் செயற்பாடுகள் பற்றி தற்பெருமை பேசிய போது அவர்
குறிப்பிட்டதாவது: "நாங்கள் கிழக்கை புலிகளிடமிருந்து மீட்டுள்ளோம். இன்று அவர்கள் (புலிகள்) கிளிநொச்சி
மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள். நாங்கள் அவர்களைப்
பலவீனப்படுத்தியுள்ளோம்."
தனது சொந்தப் பொய்களில் சிக்கிக்கொண்ட இராஜபக்ஷ மேலும் மேலும் தன்னை
முரண்பாடுகளுக்குள் சிக்கவைத்து கொண்டார். "பயங்கரவாதிகள் பலவீனமடையும் வரை அவர்கள்
பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள். அவர்கள் பலமானவர்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் வரை அவர்கள்
நாட்டை பிளக்க முயற்சிப்பார்கள்," என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தெளவுபடுத்திக்கொள்ள
முயன்ற நாபில், "முதலில் இராணுவ வெற்றி, பின்னரே சமாதானப் பேச்சுக்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்களா?"
எனக் கேட்டார். இல்லை, அதுவல்ல விடயம். "இன்றும் கூட நான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளேன்
என்றே மிகத் தெளிவாகக் கூறினேன். பயங்கரவாதம் முழுமையாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பதே எனது
விவாதம். எங்களால் அதற்கு முன்னால் மண்டியிட முடியாது. நான் அவர்களது ஆயுத பலத்திற்கு முன்னால் மண்டியிடத்
தயாரில்லை," என இராஜபக்ஷ பதிலளித்தார்.
இந்த கட்டத்தில் தான் குழப்பமடைந்திருப்பதாக நாபில் தெரிவித்தார்: "நான்
வருந்துகிறேன், என்னால் நீங்கள் கூறுவதை புரிந்துகொள்ள முடியவில்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட
வேண்டும் என நீங்கள் கூறுகின்ற போதிலும் நீங்கள் அதை விரும்பவில்லை. இராணுவ வெற்றியொன்று அவசியமானது
என நீங்கள் கருதுகிறீர்களா? இதற்கு இராஜபக்ஷ அளித்த பதில்: "நிச்சயமாக, பயங்கரவாதத்திற்கு எதிரான
வெற்றியொன்று அவசியமானதாகும். அது வேறு கதை. ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்ய
வேண்டியிருக்கின்ற காரணத்தால், நான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லத் தயாராக உள்ளேன்."
இந்தப் புதிரை தெளிவுபடுத்திக்கொள்ள முடியாதவராக அல்லது விரும்பாதவராக
நாபில் இருந்த போதிலும், இத்தகைய பொருத்தமில்லாத பேச்சுக்களுக்கு ஒரு விளக்கம் உள்ளது.
"சமாதானத்தை விரும்பும் மனிதன்" என்ற அவரது கூற்றுக்கள் ஒருபுறமிருக்க, 2005
ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவின் பிரச்சாரம் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முடிவுகட்டுவதையும்
மற்றும் மீண்டும் விரைவில் யுத்தத்திற்கு திரும்புவதையுதே முன்னிலைப்படுத்தியிருந்தது. அவர் புலிகளுக்கு இறுதி
நிபந்தனைகளை விதிப்பதற்கு சமமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)
மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாதக் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்திருந்தார். யுத்த நிறுத்த
உடன்படிக்கையை திருத்துவதாகவும், உத்தியோகபூர்வ அனுசரணையாளர் என்ற நிலையில் இருந்து நோர்வேயை
விலக்குவதாகவும் மற்றும் புலிகளை தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்
போவதில்லை என்றும் இராஜபக்ஷ வலியுறுத்தினார் --இது சமாதானப் பேச்சுக்களுக்கான முன்னைய அடிப்படைகளை
விளைபயனுள்ள வகையில் அழிப்பதாகும்.
வலிமையுடன் பிரதிச் செயலாற்றுவதற்கு பதிலாக, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரன் 2005 தேர்தல் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் ஆற்றிய வருடாந்த "மாவீரர் தின உரையில்"
பேச்சுவார்த்தைகளை நடந்த அவசரமாக அழைப்புவிடுத்தார். "தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும்
விதத்திலான ஒரு பொருத்தமான அரசியல் செயற்திட்டத்துடன் புதிய அரசாங்கம் விரைவில் முன்வர வேண்டும்" என
அவர் தெரிவித்தார். இராஜபக்ஷ, புலிகளை பலவீனப்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்க தூண்டுவதன் பேரில்
இழிந்ந இரகசிய படுகொலை யுத்தம் மற்றும் ஆத்திரமூட்டல்களை முன்னெடுக்க பாதுகாப்புப் படைகளை கட்டவிழ்த்து
விட்டதன் மூலம் பதிலளித்தார்.
இராஜபக்ஷ வெற்றிபெற்று ஆறே வாரங்களில், புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலய பூஜையில்
இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அரசாங்கம் இந்தக் கொலைக்கு சிடுமூஞ்சித்தனமாக புலிகள் மீது
குற்றஞ்சாட்டிய போதிலும், இந்தப் படுகொலை இராணுவத்தின் அல்லது அதனோடு செயற்படும் தமிழ்
துணைப்படையின் நடவடிக்கை என்பது தெளிவானதாகும். ஒரு வாரத்தின் பின்னர், பல்கலைக்கழக தெரிவுப்
பரீட்சையில் சித்தியெய்திய ஐந்து மாணவர்கள் திருகோணமலையில் வைத்து மரண தண்டனை பாணியில்
கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படை கமாண்டோக்காளல் செய்யப்பட்டதாகவே
கூறப்படுகின்றது.
பல மாதங்களாக தொடர்ந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் புலிகளின் பதிலடிகளின்
பின்னர், ஜூலை மாதத்தில், தாக்குதல்களை முன்னெடுக்குமாறு இராஜபக்ஷ இராணுவத்திற்கு கட்டளையிட்டார்.
மாவிலாறு தணீணீர் அணைக்கட்டின் மதகை புலிகள் மூடியதால் ஏற்பட்ட "மனிதாபிமான அழிவு" இந்தத் தாக்குதலுக்கு
சாக்குப்போக்காகக் கூறப்பட்டது --இந்தப் பிரதேசத்தில் தண்ணீர் சுத்தப்படுத்தல் திட்டத்தை அமைப்பதாக
அளித்த வாக்குறுதியை இட்டுநிரப்புமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலான நடவடிக்கையாகவே
இந்த மதகு மூடப்பட்டது. இந்த விவகாரத்தை சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ள அரசாங்கம்
விரும்பவில்லை. மாறாக அது 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை வெளிப்படையாக மீறி ஒட்டுமொத்த
தாக்குதலுக்கு கட்டளையிட்டது. இந்த விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு முடிவுகட்ட இலங்கை கண்காணிப்புக் குழுவினர்
முயற்சித்த போதிலும் அவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.
கடந்த 11 மாதங்களாக இராஜபக்ஷ வலியத் தாக்கும் யுத்தத்தை முன்னெடுத்துக்
கொண்டிருக்கின்றார். இராணுவம் 2002 யுத்த நிறுத்தத்தை மீண்டும் மீண்டும் மீறி புலிகளின் பிராந்தியங்களை
கைப்பற்றியது மட்டுமன்றி, தமிழ் சிறுபான்மையினரையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. அரச அனுசரணையிலான
கொலைப் படைகள் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையின் கீழ், நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக
தமிழர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர் அல்லது "காணாமல் ஆக்கப்படுகின்றனர்." பெரும்பாலானவர்கள்
கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச்
சகலதிலும், புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு புலிகள் மீது குற்றஞ்சாட்டும் அல் ஜஸீராவின் நாபில் போன்று, பெரும்
வல்லரசுகளின் குறிப்பாக புஷ் நிர்வாகத்தின் இரகசியமான ஆதரவும் இராஜபக்ஷவிற்கு உண்டு.
இராஜபக்ஷவின் பதிலில் தோன்றும் வெளிப்படையான முரண்பாடுகள் பின்வருவனவற்றில்
இருந்து ஊற்றெடுக்கின்றது. ஒரு புறம், அவர் திட்டமிட்ட இனவாத யுத்தம் ஒன்றை மீண்டும் தொடங்கியுள்ளதோடு
அவர் புலிகளின் இராணுவ இயலுமையை அழிக்க பேரார்வத்துடன் காத்திருக்கின்றார். இராணுவ உயர் மட்டத்தினர்,
அரச அதிகாரத்துவம் மற்றும் தமது நலன்கள் இலங்கை அரசின் சிங்கள மேலாதிக்க பண்பை பேணுவதுடன்
கட்டுண்டுள்ள சில வர்த்தகப் பிரிவினரும் அவரது அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். மறு புறம், உள்நாட்டிலும்
வெளிநாட்டிலும் குவிந்துவரும் விமர்சனங்களை திசைதிருப்புவதன் பேரில் சமாதானத்தையும், பேச்சுவார்த்தைகளையும்
விரும்புவதாகக் காட்டும் பாசாங்கையும் தொடர்ந்தும் இராஜபக்ஷவால் காக்க வேண்டியுள்ளது.
தெளிவாகக் கேட்க வேண்டிய கேள்வியை நாபில் கேட்கவில்லை: எந்த அடிப்படையில்
இலங்கை ஜனாதிபதி "பயங்கரவாதிகளுடன்" பேசுவார்? 2003ம் ஆண்டு தமது நீண்ட கால கோரிக்கையான தனி
நாட்டுக் கோரிக்கையை புலிகள் கைவிட்டதோடு வடக்கு மற்றும் கிழக்கில் சுயாட்சி வடிவிலான அதிகாரப்
பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தது. இந்த சுயாட்சி வடிவம் சிங்கள மற்றும் தமிழ்
முதலாளித்துவ தட்டுக்களால் தொழிலாள வர்க்கம் பரஸ்பரம் சுரண்டப்படுவதை அனுமதிக்கும். இந்த அடிப்படையில்
பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இராஜபக்ஷவிற்கு இல்லை. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு
சீர்திருத்தங்களும், 24 ஆண்டுகால யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமாக முடிவுகட்டுவதற்கான சகல முன்னைய
முயற்சிகளுக்கும் அடிப்படையாக இருந்து வந்த மாகாண சபை ஆட்சியையும் நிராகரிப்பதோடு, மாவட்ட மட்டத்தில்
மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை பரவலாக்குவதை மட்டுமே அனுமதிக்கின்றது. புலிகளின் சரணடைவை பற்றியே
பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட வேண்டும் என்பதே மஹிந்த இராஜபக்ஷவின் எண்ணம் என்பது தெளிவு.
அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக துணிச்சலின்றி நாபில் எழுப்பிய
கேள்விகளை இலங்கை ஜனாதிபதி துடைத்துத் தள்ளினார். "உண்மையில், குறிப்பிடுமளவிற்கு மனித உரிமை மீறல்கள்
நடந்துள்ளதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள நான் தயார் இல்லை," என அவர் தெரிவித்தார். 700க்கும் மேற்பட்ட
கடத்தல் சம்பவம் தொடர்பான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை விடயத்தில் அழுத்தத்திற்கு உள்ளான
இராஜபக்ஷ, கணாமல் போயுள்ள அனைவரும் வெளிநாடு சென்றுள்ளனர் அல்லது புலிகள் இயக்கத்தில்
சேர்ந்துகொண்டுள்ளனர் என ஏளனமாக கூறினார். "கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுபவர்களில் பலர் இங்கிலாந்து,
ஜேர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்," என அவர் பிரகடனம் செய்தார். கடத்தப்பட்டவர்கள்
ஐரோப்பாவிலோ அல்லது வேறெங்கோ ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான சம்பவங்கள் மேற்கோள்
காட்டப்படவோ அல்லது ஆதாரங்கள் முன்வைக்கப்படவோ இல்லை என்பதை சொல்லத் தேவையில்லை.
இலங்கையின் மனித உரிமை மீறல் பதிவுகள் தொடர்பாக வளர்ச்சிகண்டுவரும் விமர்சனங்கள்
ஒரு சர்வதேச தலையீட்டுக்கு வழிவகுக்கலாம் என்ற நாபிலின் ஆலோசனையையிட்டு இராஜபக்ஷ குறிப்பாக தன்னுணர்வு
கொண்டார். தனது இறுமாப்பில் நின்று ஜனாதிபதி உறுதியாக பிரகடனம் செய்ததாவது: "இலங்கையானது இங்கிலாந்து,
அமெரிக்கா அல்லது ஏனைய ஏதாவதொரு நாட்டின் காலனி அல்ல. இலங்கை இறைமையுடைய நாடு. ஆகவே அவர்கள்
தலையீடு செய்வார்களானால், அவர்கள் இந்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாது என்பது முக்கியமானதாகும்."
வேறுவார்த்தைகளில் சொன்னால், பெரும் வல்லரசுகள் தனது இனவாத யுத்தத்திற்கு
ஆதரவளிப்பதோடு நீண்ட காலமாக அவரது வழிமுறைகளை அவர்கள் எதிர்க்கவோ அல்லது இடையூறு செய்யவோ
இல்லை என்பதில் இராஜபக்ஷ மன நிறைவுடன் உள்ளார். ஆயினும் சமாதானத்திற்கான உயர்ந்த எதிர்பார்ப்பை நீண்டகாலமாகக்
கொண்டுள்ள இந்தியாவிற்கு அவர் ஒரு விதிவிலக்களித்தார். "தற்போதைய சூழ்நிலையின்படி, தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக
இந்தப் பிரச்சினைக்கு (யுத்தம்) ஒரு தீர்வை வழங்குவதற்கு இந்தியாவின் ஆதரவு தேவை. இந்தியா இந்த அரசாங்கத்துடன்
செயற்பட வேண்டும்." புலிகள் மீது மேலும் அழுத்தங்களை திணிக்க இந்திய அரசாங்கத்தை பயன்படுத்துவதை பற்றியே
ஜனாதிபதி தெளிவாக கணக்கிடுகின்றார்.
மொத்தத்தில் பார்க்கும் போது, இராஜபக்ஷவின் பேட்டியானது, சமாதான முகமூடி
நழுவி விழுந்து, இலங்கை பாதுகாப்புப் படைகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொடூரமான குற்றங்களுக்கு நேரடி
பொறுப்பாளியான ஒரு இனவாத யுத்த விரும்பியை அம்பலப்படுத்தியுள்ளதையே வெளிப்படுத்துகிறது. |