World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைReport to the ISSE conference: on the political situation in Sri Lanka and the disappearance of SEP member Nadarajah Wimaleswaranஐ.எஸ்.எஸ்.ஈ. மாநாட்டுக்கான அறிக்கை: இலங்கையில் அரசியல் நிலைமையும் சோ.ச.க. அங்கத்தவர் நடராஜா விமலேஸ்வரன் காணாமல் போயுள்ளமையும்19 April 2007சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்களும் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) யுத்தத்திற்கு எதிராக நடத்திய மாநாட்டில், சோ.ச.க. அங்கத்தவர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல்போயுள்ளமை பற்றியும், சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு வலியுறுத்தியும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பிரவ்னி சோரா முன்வைத்த அறிக்கையை இங்கு பிரசுரிக்கின்றோம். இந்த மாநாடு மார்ச் 31, ஏப்பிரல்1 ஆகிய திகதிகளில் மிக்சிக்கன் ஆன் ஆபரில் நடைபெற்றது. மேலும் அறிக்கைகளும் சர்வதேச வாழ்த்துக்களும் எதிர்வரும் நாட்களில் பிரசுரிக்கப்படும். தோழர்களே, வடக்கில் யாழ்ப்பாணத்தை அண்டிய ஊர்காவற்துறை தீவில், சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவரான நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பரான சிவநாதன் மதிவதனனும், மார் 22 அன்று அல்லது இரு வாரங்களுக்கு முன்னதாக காணாமல் போயுள்ளமை சம்பந்தமான தீர்மானம் ஒன்றை இங்கு முன்மொழிய விரும்புகிறேன். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும், இந்தக் காணாமல் போன சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவமுமே பொறுப்பாகும் என குற்றஞ்சாட்டுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இந்த கடத்தலுக்கு பதில்சொல்ல வேண்டும் என வலியுறுத்தி நடத்துகின்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 30ம் திகதி கொழும்பில் ஒரு பத்தியாளர் மாநாட்டை நடத்தியது. அதற்கு இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களில் இருந்தும் கனிசமான ஆதரவு கிடைத்தது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தினாலோ, அல்லது துணைப்படையினாலோ "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த வருடம் அதிகரித்துள்ளது. இதில் ஆகஸ்ட் 7 சோ.ச.க. ஆதரவாளர் சிவபிரகாசம் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டதும் அடங்கும். இலங்கை அரசாங்கம், தமிழீழ விடுதைலப் புலிகளுடனான உத்தியோகபூர்வ யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி யுத்தத்தை உக்கிரப்படுத்தியுள்ள நிலையில், காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துவருவது சம்பந்தமாக சாதாரண மக்கள் மத்தியில் அக்கறை அதிகரித்துக் கொண்டிருப்பதையே ஊடகவியலாளர் மாநாட்டில் அதிக அக்கறை காட்டப்பட்டதற்கு காரணமாகும். இத்தகைய வெட்கக் கேடான அரச ஒடுக்குமுறையை, உழைக்கும் மக்களை அச்சுறுத்துவதற்கான தயாரிப்புக்களை உக்கிரப்படுத்துவதன் பாகமாகவும், மேலும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கையாகவுமே விளங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் தமது செல்வாக்கிழந்த சமூக, பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான அரசியல் எதிர்ப்பை, எல்லாவற்றுக்கும் மேலாக யுத்தம் சம்பந்தமான எதிர்ப்புகளை நசுக்க அரசாங்கம் முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. தொழில், சம்பளம், வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக தொழிலாளர்களின் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்புக்களை தொடர்ந்து கடந்த டிசம்பரில் கொடூரமான பாதுகாப்புச் சட்டமான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. முக்கியமாக, அரசாங்கம் அண்மையில் துறைமுக மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது "பயங்கரவாதத்திற்கு" உதவுவதாக குற்றஞ்சாட்டியது. அவ்வாறே "தேசிய பாதுகாப்பு" என்ற போர்வையின் கீழ் தனி நபர்களையும் மற்றும் பத்திரிகையாளர்களையும் கைது செய்து தடுத்து வைப்பதற்கு பொலிசுக்கும் இராணுவத்திற்கும் அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முகங்கொடுக்கும் நெருக்கடியான நிலைமையின் மத்தியில், குறிப்பாக கடந்த கால முதலாளித்துவ அரசாங்கங்களின் கொடூரமான மரபுகளை நோக்கும் போது, இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம் தற்போதைய அபிவிருத்திகளை தெளிவான எச்சரிக்கையாக கொள்ளவேண்டும். அரசியல் ஸ்தாபனத்தின் சகல கட்சிகளிடம் இருந்தும், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் இடது தீவிரவாத இயக்கங்களிடம் இருந்தும் தீர்க்கமான முறையில் பிரிய வேண்டியது அவசியமாகும். பல தசாப்த கால இனவாத யுத்தினால் அதிகரித்துவரும் சமூகத் துருவப்படுத்தல்கள் மற்றும் வறுமையின் உச்சகட்டத்தின் விளைவாக நாட்டில் உயர்ந்துகொண்டிருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வை வழங்க இலாயக்கற்றவை என்பதை இந்த சகல அசியல் போக்குகளும் அம்பலமாகியுள்ளன. உலக சோசலிச வலைத் தளத்தில் இலங்கையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அபிவிருத்திகள் பற்றிய விரிவான ஆய்வை தோழர்கள் வாசிக்க முடியும். சமரசமற்ற அனைத்துலகவாத, சோசலிச முன்நோக்கை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ரீதியாக சுயாதீனமான தொழிலாள வர்க்க வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பாக எனது அறிக்கையில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இலங்கையிலும் இந்தியாவிலும் தேசிய முதலாளித்துவமானது ஏகாதிபத்திய விரோத இயக்கத்தை ஒடுக்கி பிரித்தானிய ஏகாதிபதியவாதிகளுடன் கொடுக்கல் வாங்கல்களுக்கு சென்றது. அதன் கீழ் அது காலனித்துவ அரச இயந்திரத்தின் கட்டுப்பாட்டை வசப்படுத்திக் கொண்டது. இந்தியாவின் பேராவல் கொண்ட தேசிய முதலாளித்துவம், இந்திய தேசிய காங்கிரஸ் ஊடாக பிரித்தானியாவுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில் காலத்திற்கேற்ப செல்வாக்கு செலுத்திய போதிலும், இலங்கை முதலாளித்துவம், விளைபயனுள்ள வகையில் 1948ல் சோல்பரி அரசியல் அமைப்பின் கீழ் சுதந்திரத்திற்கான உந்துதலைப் பெற்றது. அந்த அரசியல் அமைப்பில் இலங்கை முதலாளித்துவம் இனவாதத்தை அடிப்டைக் கொள்கையாக்கியது. இதன் மூலம் இலங்கையின் சனத்தொகையில் எட்டில் ஒரு பகுதியினரான தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை அவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் பறித்தது. இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கை முக்கியமாக பிரித்தானியாவின் நீண்டகால கொள்கையான "பிரித்தாளும்" கொள்கையை நிலைபேறுடையதாக்கியது. இது தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தீவு பூராகவும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும் மற்றும் இந்திய உப கண்டத்திலும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் செல்வாக்கு வளர்ச்சியடைவதை தடுப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. இலங்கையில் ட்ரொட்ஸ்கிச கட்சியான, இந்திய போல்ஷவிக்-லெனினிஸ்ட் கட்சியினால் (பி.எல்.பீ.ஐ.) தலைமை தாங்கப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், வெடிக்கும் தன்மையுள்ள அரசியல் முரண்பாடுகளை உருவாக்கியது --பிற்போக்கான காலனித்துவ முதலாளித்துவம், வளர்ந்துவரும் மற்றும் உயர்ந்த மட்டத்தில் அரசியல் ரீதியில் முன்னேறிய தொழிலாள வர்க்க இயக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இலங்கை பாராளுமன்றத்திற்கு வெளியிலும் உள்ளும் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான எதிர்ப்பிற்கு பி.எல்பி.ஐ. தலைமை வகித்ததோடு, அதை "காலனித்துவத்தை அகற்றுவதன்" மூலமும் இனவாத பிரிவினை மூலமும் 1947-1948ல் தெற்காசியாவில் உருவாக்கப்பட்ட அரசுகளின் தன்மை பற்றிய தூரதிருஷ்டியுள்ள ஆய்வுடன் இணைத்து தெளிவுபடுத்தியது. அப்போது இலங்கை (ஸ்ரீலங்கா) மற்றும் முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்து இந்தியா என அரசுகள் உருவாக்கப்பட்டன. இத்தகைய அரசுகளின் தோற்றம், ஏகாதிபத்திய ஒழுங்கின் "ஒரு நவீனமயப்படுத்தலே" அன்றி உண்மையான சுதந்திரம் அல்ல என பி.எல்.பி.ஐ. தெளிவுபடுத்தியிருந்தது. பின்னர், பி.எல்.பீ.ஐ. யுத்தத்திற்கு பிற்பட்ட ஸ்ராலினிசத்தின் உதவியுடன் முதலாளித்துவ மறுஸ்திரமாக்கலுக்கும் மற்றும் அதன் தெற்காசிய வெளிப்பாட்டுக்கும் (உள்நாடுட முதலாளித்துவ ஆட்சியின் கீழ், சுதந்திர முதலாளித்துவ அரசுகளின் தோற்றம்) அடிபணிந்தமை தெற்காசிய தொழிலாள வர்கத்திற்கு அழிவுகரமான விளவுகளை ஏற்படுத்தியது. இந்த அடிபணிவு நான்காம் அகிலத்திற்குள் திரிபுவாத போக்குக்கு தலைமை தாங்கிய மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேலால் ஊக்குவிக்கப்பட்டது. 1942ம் ஆண்டின் பின் இந்திய உபகண்டம் பூராவுமுள்ள தொழிலளார்களை ஐகியப்படுத்துவதற்காக, அனைத்து இந்திய முன்நோக்கில் உருவாக்கப்பட்ட பி.எல்.பீ.ஐ., 1948-49களில் இந்தியாவின் காங்கிரஸ் சோசலிச கட்சிக்குள் கரைக்கப்பட்டது. அதன் பின்னர் அதன் இலங்கை பகுதியானது ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என கூறிக்கொண்டு தேசியவாத, குழுவாத அடிப்படையில் பி.எல்.பீ.ஐ. உடன் இணைய மறுத்த மத்தியவாத லங்கா சமசமாஜ கட்சியுடன் (ல.ச.ச.க.) அரசியல் ரீதியில் தெளிவுபடுத்தப்படாத மறு ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டது. புதுப்பிக்கப்பட்ட அமைப்பு ல.ச.ச.க. என அழைக்கப்பட்டது. பின்வந்த தசாப்தங்களில், ல.ச.ச.க. மத்தியவாத பின்சறுக்கல் போக்குக்கு அடிபணிந்ததோடு, மேலும் மேலும் தமது வேலைகளை தொழிற்சங்க மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்குள் குவிமையப்படுத்தியதுடன், சோசலிச அனைத்துலக வாதத்தை கைவிட்டது. இது இரு தோற்ங்களை எடுத்தது. ல.ச.ச.க. ஸ்ராலினிசம் புரட்சிகர உள்ளடக்கத்தை கொண்டுள்ளது என ஏற்றுக்கொள்ளும் பப்லோ மற்றும் மண்டேலின் கொள்கையை எதிர்க்கும் அதேசமயம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அமைக்கப்பட்டதையும் மற்றும் செயல்திட்ட சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் உலகப் புரட்சி மூலோபாயத்தை பப்லோ நிராகரித்ததற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தையும் எதிர்த்தது. ல.ச.ச.க. மக்களுடன் நெருக்கமாகுவது என்ற போர்வையின் கீழ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்னெடுத்து செல்லப்பட்ட சிங்கள பெளத்த இனவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பதிலாக அதற்கு அடிபணிந்தது. 1953ல் இலங்கை தீவு பூராகவும் வெற்றிகரமாக நடத்திய பொது வேலை நிறுத்தத்தின் ஊடாக (1953 ஹர்த்தால்) தொழிலாள வர்க்கம் மற்றும் உழைப்பாளர்கள் மத்தியிலும் ல.ச.ச.க. யின் புகழ் ஓங்கியிருந்தது. ஆனால் 1960களின் ஆரம்பத்தில் ல.ச.ச.க. போர்க்குணம் கொண்ட தொழிலாள வர்க்க போராட்ட அலைகளுக்கு தலைமை தாங்கியிருந்த போதும், அதன் தலைமைத்துவம் மக்களின் புரட்சிகர உந்துசக்திகளை ஒன்றிணைக்கவில்லை. மாறாக மக்கள்வாத, சிங்கள இனவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க) பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்ததோடு 1964ல் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்தவாறே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்தில் கூட்டுச் சேர்ந்துகொண்டது. அடுத்து வந்த முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த ல.ச.ச.க. தலைவர்கள், இலங்கையை ஸ்ரீலங்கா என பெயர் மாற்றம் செய்த ஜனநாயகமற்ற 1972 அரசியலமைப்பை வரைவதில் பிரதான பாத்திரம் வகித்தார்கள். இந்த அரசியலமைப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதற்காக சோல்பரி அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பையும் அகற்றியது. இந்த புதிய அரசியலமைப்பு, பெளத்த சமயத்தை "முதன்மை மதமாக" முன்நிலைப்படுத்தி பெரும்பான்மையினர் பேசும் சிங்கள மொழியை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரித்த 1956ல் கொண்டுவரப்பட்ட "சிங்களம் மட்டும்" சட்டத்தை அரசியலமைப்புமயப்படுத்தியது. 1970ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து உலகப் பொருளாதார நிலைமையில் மாற்றம் ஏற்பட்டபோதும், தமது செல்வாக்கிழந்த கொள்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்புக்களை திசை திருப்பும் உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே சிங்கள முதலாளித்துவம் இனவாத யுத்தத்தை நாடுவதற்கு தீர்மானித்தது. ஆயினும், இதற்கான விதையை தூவியது ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பே ஆகும். இலங்கை தொழிலாள வர்க்கத்தின் சகல பிரிவினரதும் --சிங்கள, தமிழ், முஸ்லிம்-- நலன்களை பாதுகாக்கப் போராடுவதை கைவிட்டு சிங்கள தேசியவாதத்திற்கு அடிபணிந்த ல.ச.ச.க., குட்டிமுதலாளித்துவ தீவிரவாத இயக்கங்கள் தமது இனவாத அரசியலுக்கு ஆதரவு திரட்டுவதற்கு கதவுகளை திறந்துவிட்டது. இது தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) எழுச்சிக்கு வழிவகுத்தது. ஜே.வி.பி. மாவோவாதம் மற்றும் சேகுவேராவாதத்துடன் கலக்கப்பட்ட சிங்கள பேரினவாதத்தின் அடிப்படையில் கிராமப்புற சிங்கள இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்தது. வடக்கில் புலிகள் தனித் தமிழீழ அரசின் பேரில் தமிழ்ப் பிரிவினைவாதத்திற்குப் போராடுவதற்காக அதிருப்தியடைந்த தமிழ் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்தது. 1983ல் அப்போதைய ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.), மிகக்கொடூரமான தமிழர் விரோத இனப் படுகொலைகளை முன்னெடுத்தமை, உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கான உடனடி காரணத்தை வழங்கியது. உலக வங்கியினதும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினதும் வேண்டுகோளின்படி, 1977ம் ஆண்டில் இருந்து முன்னெடுக்கப்பட்ட "கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தக் கொள்கைகளினால் உருவாகிய சமூக அழிவுகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நோக்கமாகவே பிரதானமாக இப்படுகொலைகள் நடத்தப்பட்டன. யுத்தமானது இலங்கையில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தெற்கில் உள்ள மக்களுக்கும் அளவிட முடியாத அழிவுகளை ஏற்படுத்தியதுடன், இது வலதுசாரி சமூக பொருளாதார கொள்கைகளை முடிவில்லாமல் தொடர்ச்சியாக அமுல்படுத்துவதையும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் நியாயப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்டது. தெற்காசியாவில் இரத்தக்களரி சம்பந்தமாக அமெரிக்கா இரக்கமற்று அலட்சியமாக இருந்தது. தெற்காசியாவில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு இலங்கையில் நடைபெறும் இராணுவ மோதல் தடையாக உருவெடுத்துள்ளதாக வாஷங்டன் கருதியதாலேயே அமெரிக்காவும் ஏனைய வல்லரசுகளும் 2002ல் ஆரம்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அல்லது சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை முன்நிலைப்படுத்தின. அதே நேரம் இலங்கை முதலாளித்துவத்தின் ஒரு பகுதியினர், சிங்கள- தமிழ் முதலாளித்துவ உயர் தட்டினரிடையே அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குமுறைக்கு இணக்கம் தெரிவித்தனர். ஏனெனில், தீவை மலிவு உழைப்பை தேடுகின்ற அனைத்துலக மூலதனத்தை கவரும் காந்தமாக ஆக்கும் அமெரிக்காவின் திட்டத்துடன் முன்செல்ல முடியும் என அவர்கள் உணர்ந்துகொண்டனர். முக்கியமாக கூர்மையான அரசியல், பொருளாதார நெருக்கடியின் நிமித்தமே யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. 2000 ஆண்டு ஏப்பிரல், மே மாதங்களில் இலங்கை இராணுவம் அழிவுகரமான தோல்விகளை சந்தித்தது. இருபது ஆண்டுகால யுத்தத்தால் ஒன்றுதிரண்ட பொருளாதார தாக்கம் 2001ல் முதன் முறையாக எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி வீதத்தை வெளிக்காட்டியது. பெரும் வர்த்தகர்களில் மிகவும் சக்திவாய்ந்த பிரிவினரைப் பொறுத்தளவில், யுத்தத்தினால் ஏற்பட்ட செலவுகளும் அழிவுகளும் தாங்கமுடியாத சுமைகளாகும். இந்தச் சுமை பூகோள முதலீட்டில் இருந்து இலங்கையை தனிமைப்படுத்தி நாட்டை பொருளாதார பின்னடைவுக்குள் தள்ளியது. ஆயினும், தீர்க்கமான திருப்புமுனையாக இருந்தது இலங்கை சம்பவங்கள் அல்ல. மாறாக 2001 செப்டெம்பரில் 11ம் திகதி அமெரிக்காவில் நடந்த சம்பவமாகும். கொழும்பு அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவதற்கான அசாதாரணமான வாய்ப்பை புஷ் நிர்வாகம் முன்னெடுத்த "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" வழங்கியுள்ளதாக இலங்கை ஆளும் வர்க்கம் உடனடியாக இணங்கண்டுகொண்டது. கொழும்பு நிர்வாகம், புலிகளுக்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களில் புஷ் நிர்வாகத்தின் "முன் கூட்டிய" யுத்தம் என்ற வழியைப் பின்பற்றுகிறது. யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்து வருவதற்கும் எதிராக வளர்ந்துவரும் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான இராஜபக்ஷ அரசாங்கம், கடந்த ஜூலையில் இருந்து புலிகளுக்கு எதிரான இழிந்த மூடிமறைக்கப்பட்ட யுத்தத்தை முன்னெடுக்க இராணுவத்தை அனுமதித்துள்ளது. இது நாட்டை மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கமும் முழு அளவிலான யுத்தம் மீண்டும் தொடுக்கப்பட்டுள்ளதையும் மற்றும் சமாதானக் கொடுக்கல் வாங்கல்களின் பாகமாக முன்வைக்கப்பட்ட பலவித அதிகாரப்பரவலாக்கல் திட்ட யோசனைகளையும் எதிர்க்கின்றன. இவை இனவாத பிரிவினைகளை மேலும் வேரூன்றச் செய்வதோடு இவர்கள் அனைவரும் வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத, இன அடிப்படையிலான இடைக்கால நிர்வாகத்தை திணிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடைக்கால நிர்வாகம் பூகோள மூலதனத்தின் கட்டளைகளை அமுல்படுத்துவதில் கொழும்புடன் ஒத்துழைக்கும். கொழும்பு அரசியல்வாதிகளின் சிங்கள மேலாதிக்கவாதம் மற்றும் புலிகளின் தமிழ் பிரிவினைவாதம் உட்பட எல்லா வகையான தேசியவாதம், இனவாதம் மற்றும் வகுப்புவாதங்களையும் சமரசமற்று எதிர்ப்பதே தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு அத்தியாவசியமான அடிப்படையாகும். நாட்டின் தீர்க்கப்படாத ஜனநாயகப் புரட்சிகர கடமையின் பிரகாசமான வெளிப்பாடாக உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவு காண்பதை சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக மட்டுமே நிறைவேற்ற முடியும். இறுதியாக நான் இங்கு வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், இலங்கையின் ஆழமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை தற்காலிகமானதாகவோ அல்லது உள்நாட்டு விவகாரமாகவோ புரிந்துகொள்ளக்கூடாது. மாறாக முதலாளித்துவ அமைப்பையே சூழ்ந்துகொண்டுள்ள, எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தி முன்னெடுப்பில் அதிகரித்துவரும் பூகோளமயமாக்கப்பட்ட தன்மைக்கும் மற்றும் முதலாளித்துவம் வேரூன்றியுள்ள வங்குரோத்தான தேசிய அரச அமைப்பிற்கும் இடையிலான தீர்க்கப்பட முடியாத முரண்பாட்டின் உற்பத்தியாகவே அதை புரிந்துகொள்ள வேண்டும். தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கும் எந்தவொரு பிரச்சினையையும், சிறிய தீவின் எல்லைக்குள்ளோ, தெற்காசியாவிற்குள்ளோ மற்றும் பெரிய அல்லது சிறிய தனிமைப்படுத்தப்பட்ட நாட்டுக்குள்ளேயோ தீர்க்க முடியாது. சோசலிசத்திற்கான போராட்டம் சர்வதேச ரீதியிலானதாக இருப்பது அவசியமாகும். 20ம் நூற்றாண்டு பூராகவும் அனைத்துலக தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளை கிரகித்துக்கொள்வது முக்கிய பணியாகும். இந்த அடிப்படையிலேயே ஐ.எஸ்.எஸ்.இ. கட்டியெழுப்பப்படுகிறது. தோழர்களே, இந்த அடிப்படையில் எமது தோழர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் எங்கே உள்ளார்கள் என்பதை அறிவிக்குமாறும், அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை துரிதப்படுத்துமாறும் மற்றும் எமது ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறும் கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். |