:
ஆசியா
:
இலங்கை
மிஷிஷிணி stணீtமீனீமீஸீt ஷிக்ஷீவீ லிணீஸீளீணீ
Join the International Students for Social Equality
(ISSE)
சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பில் இணையுங்கள்
Use this
version to print | Send this link by
email |
Email the
author
சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பானது
இராணுவ வன்முறை, சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்களுக்கு
எதிராக பிரச்சாரமொன்றை முன்னெடுக்க உலகம் பூராவும் உள்ள மாணவ இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் கட்டுமீறியுள்ள எதிர்ப்புக்கு மத்தியிலும் அமெரிக்கா
ஈராக்கில் தனது இராணுவ நடவடிக்கைகளை உக்கிரப்படுத்தியிருப்பதானது உலக முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டுள்ள
பேரழிவின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வெளிப்பாடாகும். அமெரிக்க ஆளும் தட்டின் பூகோள மூலோபாய இலக்குகளை
முன்னேற்றுவதற்காக பொய்களின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட
படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் போது இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது, ஈரானுக்கு
எதிராக மேலும் கொலைகாரத்தனமான யுத்தத்தை முன்னெடுப்பதற்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் காணக்கிடைக்காத அளவு பூகோள ரீதியான மோதல்களின் ஆபத்தை
வலியுறுத்துகிறது.
இந்த கிறுக்குத்தனம் நிறுத்தப்பட வேண்டும்! பொருளாதார வாழ்வின் முன்னெப்போதும்
இல்லாத பூகோள ஒருங்கிணைப்புடன் செல்லும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் உயர்ந்த முன்னேற்றமானது
மனிதவாழ்வின் செழிப்பிற்கான சாத்தியத்தை உருவாக்கிவிட்டுள்ளது. இன்னமும் இளைஞர்கள் உலகம் பூராவும்
யுத்தத்தையும் மற்றும் இல்லாமையையும், பரந்த வறுமை மற்றும் நோய், முடிவற்ற இயற்கைப் பேரழிவு, கலாச்சாரப்
பிற்போக்குத்தனம் மற்றும் மூடநம்பிக்கை மற்றும் மிகவும் அடிப்படையான ஜனநாயக சுதந்திரத்தின் மீதான
தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
கூட்டுத்தாபனத்தின் இலாபத்திற்காகவும் மற்றும் ஜனத்தொகையில் மிகச் சிறிய தட்டினரின்
தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்காகவும் அனைத்தையும் அடிபணியச் செய்துள்ள முதலாளித்துவ சமூக உறவுகளால் மனிதனின்
முன்னேற்றம் தடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஐ.எஸ்.எஸ்.இ. உலகம் பூராவும் சோசலிச இயக்கம் ஒன்றைக்
கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள மாணவர்களின் அமைப்பாகும். இந்த சோசலிச இயக்கமானது வறுமைக்கும்
மற்றும் யுத்தத்திற்கும் முடிவுகட்டி மற்றும் உண்மையான சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் தேவையான அடித்தளத்தை
இடும் நவீன யுகத்திற்கான சாத்தியத்தை இறுதியில் சாத்தியமாக்கும்.
புதுப்பிக்கப்பட்ட அனைத்துலக சோசலிச இயக்கத்திற்கான போராட்டத்தில் இணை!
சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பில் இணை!
யுத்தமும் காலனித்துவமும் வேண்டாம்!
20ம் நூற்றாண்டின் காட்டுமிராண்டி துன்பங்களான காலனித்துவம், ஏகாதிபத்தியம்,
பாசிசம், உலக யுத்தம் ஆகியவை 21ம் நூற்றாண்டிலும் மிக மிக கொடூரமான வடிவத்தில் மீண்டும்
தலைநீட்டுகின்றன. "21ம் நூற்றாண்டின் யுத்தங்கள்" என புஷ் குறிப்பிடுவதன் முதற் கட்டங்கள் ஈராக் மற்றும்
ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பும் ஆக்கிரமிப்புமாகும். இந்த யுத்தங்கள் ஒரே அடிப்படைக்
காரணத்திற்காகவே சேவைசெய்கின்றது: அது உலக பொருளாதாரத்தில் தனது வீழ்ச்சியடைந்துவரும் நிலையை
இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக ஈடுசெய்யும் அமெரிக்க ஆளும் தட்டின் பூகோள நலன்களைப்
பெருக்குவதற்காகும். அமெரிக்க அரசாங்கத்தினதும் மற்றும் ஊடகங்களதும் ஏனைய அனைத்து நியாயப்படுத்தல்களும்
பொய்யாகும்.
பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையான லன்டட்டில் வெளியிடப்பட்ட, ஜோன் ஹொப்கின்ஸ்
பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஈராக் மீதான படையெடுப்பு மற்றும்
ஆக்கிரமிப்பின் விளைவாக 655,000 ற்கும் மேற்பட்ட ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 3,200
அமெரிக்க படையினரும் மற்றும் 250ற்கும் மேற்பட்ட ஏனைய நாட்டு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த
படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் முழு சமுதாயத்தையும் சீரழித்துள்ளதோடு கொடூரமான பிரிவினைவாத
மோதல்களையும் தூண்டிவிட்டுள்ளது.
2006 அமெரிக்கத் தேர்தல் ஜனத்தொகையில் மிகப் பெரும்பான்மையானவர்களின்
யுத்த விரோத உணர்வை வெளிப்படுத்தியது. உலகம் பூராவும் உள்ள பில்லியன்கணக்கான மக்களின் உணர்வும் அதுவே.
ஆயினும் மேலும் இளைஞர்களைக் கொல்வதற்கும் இளைஞர்கள் கொல்லப்படுவதற்கும் மேலும் துருப்புக்களை
அனுப்பிவைப்பதே அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிபலிப்பாகும். ஆளும் தட்டுக்கள் பீரங்கிகளுக்கு இரையாக
இளைஞர்களைத் தள்ள புதிய வழிகளைத் தேடுகின்ற நிலையில், புதுப்பிக்கப்பட்ட இராணுவ ஆட்சேர்ப்பு
வெளித்தோன்றிக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்கா தனது பேரரசு குறிக்கோள்களில் தனியாக நிற்கவில்லை. ஐரோப்பா
அதே போல் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும் வல்லரசுகளால் இதே போன்ற காலனித்துவத்
திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருப்பதோடு முன்னெடுக்கப்பட்டுமுள்ளன. உலகின் வளங்களைத் தோண்டுவதற்கான
முயற்சிகள், பல்வேறுபட்ட பெரும் முதலாளித்துவ சக்திகளை ஒருவருக்கொருவர் எதிரிகளாக நிறுத்துவதானது,
இன்னுமொரு கடுமை தணியாத பூகோள யுத்தத்திற்கு வழிவகுக்கும்.
இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் உடனடியாக எஞ்சியிருந்த
அனைத்து ஏகாதிபத்திய விரோத வாய்வீச்சுக்களையும் கைவிட்டதோடு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான
அமெரிக்க படையெடுப்பிற்கு ஆதரவளித்தன. ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் பிடியை இறுக்குவதற்கு
பாகிஸ்தானின் இராணுவ அரசாங்கம் பகிரங்கமாக உதவிய அதே வேளை, இந்தியாவில் ஆட்சிக்கு வந்த
அரசாங்கங்கள் அணிசேராமல் இருத்தல் என்ற பாசாங்கைக் கைவிட்டதோடு வாஷிங்டனுடன் மூலோபாய பங்களிப்பை
அணைத்துக்கொண்டன.
இலங்கையில், அனைத்துப் பிரதான கட்சிகளும் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின்
மீதான யுத்தத்தை" தமது சொந்த தேவைகளுக்காக சுரண்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் ஆதரித்தன.
பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்திற்கான எந்தவொரு வாய்ப்பையும் கீழறுத்த ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷ, அமெரிக்காவின் இரகசிய ஆதரவுடன் தனது சொந்த இராணுவ துணிகரச் செயலை முன்னெடுத்து தீவை
மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ளார். கடந்த 15 மாதங்களில் மட்டும் 4,000 ற்கும் மேற்பட்ட
மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 200,000 ற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அனைத்து நாடுகளிலும் உள்ள இளைஞர்கள், கூட்டுத்தாபனத்தின் இலாப நோக்கிற்காக
ஒருவரை ஒருவர் கொல்வதில் ஆர்வங்காட்டவில்லை. இராணுவவாதம், ஏகாதிபத்தியத்தின் திட்டமிட்ட
கொள்ளையடிப்பு மற்றும் இனவாத ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகம்
பூராவும் உள்ள உழைக்கும் மக்கள் ஒன்றுசேர வேண்டும்.
சமூக சமத்துவத்திற்காக!
யுத்தத்திற்கு எதிரான எதிர்ப்பை அதை உருவாக்கும் சமூக அமைப்பு மீதான
எதிர்ப்பில் இருந்து பிரிக்க முடியாது. மாணவர்கள் இன்று மிகக் கேவலமான மட்டத்திலான சமூக
சமத்துவமின்மையால் பீடிக்கப்பட்ட மற்றும் ஒழுக்கங்கெட்ட ஒரு சமுதாயத்தை எதிர்கொண்டுள்ளனர். உலகம்
பூராவும் செல்வம் ஒரு சிறிய கும்பலின் கைகளில் குவிந்துகொண்டிருக்கின்றது.
உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், கீழ் மட்டத்தில் உள்ள 57
சதவீதத்தினரின் வருமானத்திற்கு சமமான வருமானத்தைக் கொண்டுள்ளனர். அதி செல்வந்த மூன்று தனிநபர்கள் உலக
மக்களில் மிக வறிய 10 வீதமானவர்களை விட அதிக சொத்துக்களை உடையவர்களாக உள்ளனர். ஒவ்வொரு
பிரதான நாட்டிலும் சமூக சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. உழைக்கும் மக்களின் ஊதியம்
வீழ்ச்சிகண்டு வருவதோடு பில்லியன்கணக்கான மக்கள் உணவு, தண்ணீர், வீடு, சுகாதார சேவை, கல்வி போன்ற
மிக அடிப்படைத் தேவைகளுக்கு ஒழுங்கான வழியின்றித் தவிக்கின்றனர். கடந்த பல தசாப்தங்கள் பூராவும் உற்பத்தி
சக்திகளில் ஏற்பட்ட பரந்த விரிவாக்கத்தின் ஆதாயம், ஒரு குறுகிய குழுவின் கைகளில் குவிந்துகொண்டிருக்கின்றது.
மலிவு உழைப்புக்காகவும் மூலப் பொருட்களுக்காகவும் பூகோளத்தை உராய்ந்துகொண்டிருக்கும்
பூகோளமயமாக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களை ஆதிக்கம் செய்வது இந்தக் குழுவேயாகும்.
செல்வம் ஒரு சிறு குழுவின் கைகளில் குவிந்துகொண்டிருக்கின்ற பிரச்சினையை
அக்கறையுடன் அணுகாமல், எயிட்ஸ் தொற்று அல்லது ஏனைய நோய்கள், எங்கும் பரவுகிற வறுமை, சூறாவளி
அல்லது சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய தன்மை போன்ற பூகோள சமூகப்
பிரச்சினைகளை அணுக முடியாது.
உலகம் பூராவும் உள்ள மாணவர்கள் சமூக அநீதிகளைப் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட
பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். தெற்காசியா பூராவும் உள்ள மிகப் பெரும்பாலான இளைஞர்களுக்கு
அடிப்படைக் கல்விக்கு மேலதிகமாக எதுவும் கிடைக்கவில்லை. இந்தியாவில் கல்வியறிவற்ற நிலை இன்னமும் 50
வீதத்திற்கு அதிகமாகவே உள்ளது. பல்கலைக்கழகத்திற்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்ற ஒரு சிறு
வீதத்திலான இளைஞர்கள், வசதிகள் மற்றும் பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை
எதிர்கொண்டுள்ளதோடு, அதே போல் அடிப்படை தேவைகளுக்கான பணப் பற்றாக்குறையையும் எதிர்த்துச்
சமாளிக்கத் தள்ளப்பட்டுள்ளனர். மிகப் பெருந்தொகையான பட்டதாரிகளால் தொழில் பெற்றுக்கொள்ள முடியாமல்
உள்ளது.
இலங்கையில் 1950கள் மற்றும் 1960களிலும் தீவில் கல்வியறிவுடையவர்களின்
தொகையை 85 வீதத்திற்கும் மேல் அதிகரிக்கச் செய்த இலவச கல்வி முறையானது எல்லா மட்டத்திலும்
வீழ்ச்சியடைந்து வருகின்றது. பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை நாடகபாணியில் அதிகரித்து
வருகின்றது. யுத்தம் புதுப்பிக்கப்பட்ட காரணத்தால் கடந்தாண்டு யாழ்ப்பாணத்தில் 10,201 சிறுவர்கள்
பாடசாலையைக் கைவிட்டுள்ளனர். பரீட்சையில் சித்திபெற்ற உயர் வகுப்பு மாணவர்களில் 16 வீதத்தினர் மட்டுமே
பல்கலைக்கழகத்திற்குத் தோற்றத் தகுதி பெற்றுள்ளனர்.
உலகம் பூராவும் வாழ்க்கை நிலைமைகளை உயர்த்தவும் மற்றும் எரியும் சமூகப்
பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமுதாயத்தின் உற்பத்தி கொள்ளளவை பயன்படுத்தக்கூடிய வகையில்
விரிவுபடுத்துவதற்கான பங்கீட்டு, ஜனநாயக திட்டத்துடன் இணைந்து, ஒரு சில முதலாளித்துவவாதிகளின்
இலாபத்திற்காக அன்றி, மக்களின் சமூகத் தேவைக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் வளங்களை பிரமாண்டமாக
மறுபங்கீடு செய்வது அவசியமானதாகும்.
ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்று!
அமெரிக்காவில், இலங்கையில் மற்றும் அனைத்துலகிலும் ஜனநாயக உரிமைகள் மீதான
தாக்குதலின் மையமாக சமூக சமத்துவமின்மை உள்ளது. ஆளும் வர்க்கத்தின் நலன்கள் மேலும் மேலும் வெகுஜனங்களின்
கோரிக்கைகளுடன் மோதலுக்கு வரும் போது, அரசியல் ஸ்தாபனம் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை
உக்கிரப்படுத்தும்.
அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த நாட்டுக்குள்ளேயே ஜனநாயக உரிமைகள் மீது
தாக்குதல்களை முன்னெடுக்கும் அதே வேளை, உலகம் பூராகவும் உள்ள நாடுகளில் ஜனநாயகத்தை கொண்டுவரும்
முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் புழுகித் திரிகின்றது. அமெரிக்க மக்களின் பெயரால் வாஷிங்டன்
நிர்வாகத்தால் உலகம் முழுவதிலும் உள்ள மனிதகுலத்தின் மீது திணிக்கப்படும் மிலேச்சத்தனத்திற்கு எதிராக போராட
மாணவ இளைஞர்கள் தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.
இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஜனநாயக உரிமைகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரம். இந்தியாவிலும் பங்களாதேஸிலும் பெயரளவில் மட்டுமே ஜனநாயகம்
உள்ளது. பொலிஸ் கொடூரங்கள், அரசியல் தில்லுமுல்லு மற்றும் உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக
உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் கிராமப்புற வறுமை வழமையானவை. முதலாளித்து ஆட்சியின் கீழ்
இனப் பாகுபாடுகள் மற்றும் சாதி ஒடுக்குமுறைகளும் வேரூன்றியுள்ளன.
இலங்கையில், அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு குழி தோண்டுவதற்காக
இராஜபக்ஷ அரசாங்கம் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை சுரண்டிக்கொண்டுள்ளது. இராணுவ
அனுசரணையுடனான கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நாட்டின்
இழிபுகழ்பெற்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும்பாலானவர்கள் குற்றச்சாட்டுக்கள் இன்றி
தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் பொலிஸ் அரசு நடைமுறைகளை
அமுல்படுத்துகின்ற நிலையில், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் என்பன ஒரு சர்வதேச நிகழ்வாக
உள்ளது. சாதாரண வழக்கு விசாரணைக்கான உரிமை, ஆட்கொணர்வு உரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும்
ஒன்றுகூடும் உரிமை, துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை போன்ற
ஜனநாயக உரிமைகள் அனைத்துலக ரீதியில் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தின் பாகமாக மட்டுமே
பாதுகாத்து விரிவுபடுத்தப்பட முடியும். தீவிரமட்டத்திலான செல்வக் குவிப்பு அமைப்புக்கு ஜனநாயகம் முற்றிலும்
பொருத்தமற்றதாகும். உண்மையான ஜனநாயகமானது பொருளாதார வாழ்வின் படிநிலையில் ஜனநாயகத்தைக்
கோருகின்றது.
அனைத்துலக சோசலிசத்திற்காக!
இறுதி ஆய்வுகளில், நெருக்கடி ஆதிக்கம் செலுத்துகிற மற்றும் வரலாற்று ரீதீயில்
காலங்கடந்த அமைப்பான முதலாளித்துவ அமைப்பே இன்று நாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரதான சமூகப்
பிரச்சினைக்கும் பொறுப்பாகும். முதலாளித்துவத்தின் கீழ், "சம வாய்ப்பு'' மற்றும் "சட்டத்தின் கீழ் அனைவரும்
சமம்" என்று சொல்லப்படுவது மோசடியானதாகும். உண்மையான சமத்துவம் சமூக சமத்துவத்தை கோருகின்றது.
ஆனால், மனிதத் தேவைகள் செல்வந்த தட்டின் இலாபத்திற்கும் நலன்களுக்கும் கீழ்ப்படுத்தப்படும் ஒரு சமுதாயத்தில்
சமூக சமத்துவம் சாத்தியமற்றதாகும்.
தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்க இயக்கங்களின்
வரலாற்று அனுபவங்களில் அடித்தளமிடும் ஒரு அனைத்துலக சோசலிச இயக்கத்தின் மறுபிறப்பிற்காக ஐ.எஸ்.எஸ்.இ.
போராடுகின்றது. "சோசலிசம் தோற்றுவிட்டது" என்ற மந்திரம் மோசடி அல்லது அலட்சியத்தின் உற்பத்தியாகும்.
ஆசியா அதே போல் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்திற்கான உயர்ந்த புரட்சிகர
போராட்டங்களை 20ம் நூற்றாண்டு கண்ட போதிலும், அவை சமூக ஜனநாயகம், ஸ்டாலினிசம் மற்றும்
இலங்கையைப் பொறுத்தளவில் சந்தர்ப்பவாத ல.ச.ச.க. ஆகியவற்றால் திட்டமிட்டு காட்டிக்கொடுக்கப்பட்டு
விட்டன. ஐ.எஸ்.எஸ்.இ. மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், லக்ஸம்பேர்க் மற்றும் ட்ரொட்ஸ்கி வழிவந்த அனைத்துலக
சோசலிசத்தின் உயர்ந்த புத்திஜீவி மற்றும் அரசியல் மரபுகளால் ஊக்குவிக்கப்படுகின்றது.
நாங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் தேசிய மட்டத்தில்
தீர்த்துக்கொள்ள முடியாது. நாங்கள் ஒரு உலக சமுதாயத்தில், ஒரு உலக பொருளாதாரத்தில்
வாழ்ந்துகொண்டிருப்பதோடு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மாணவ இளைஞர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப்
பிரச்சினைகள் அடிப்படையில் ஒரே மாதிரியானவையாகும். இந்தக் காரணத்தாலேயே நாங்கள் சமூக
சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்களாக உள்ளோம். நாம் அனைத்துவிதமான தேசியவாதம், பேரினவாதம்,
இனவாதம் மற்றும் மதவாதத்தையும் நிராகரிக்கின்றோம். நாங்கள் திறந்த தேச எல்லைகள் கொள்கையை
பிரேரிக்கின்றோம். இது ஒருவரை முழு அரசியல் மற்றும் சமூக உரிமைகளுடன் உலகில் தான் விரும்பும் எந்த
இடத்திலும் வாழவும் மற்றும் தொழில் செய்யவும் உள்ள அனைத்து உரிமைகளையும் அங்கீகரிப்பதை
அர்த்தப்படுத்துகிறது.
எமது இயக்கம் ஒரு மாணவர்கள் அமைப்பாக இருந்தாலும் எமது இலக்கு வெறுமனே
ஒரு மாணவர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதல்ல. அவசரத் தேவையாக இருப்பது, உலக ஜனத்தொகையில்
பெரும்பான்மையானவர்களான முழுத் தொழிலாள வர்க்கத்தினதும் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கமாகும்.
பெரும்பாலான மாணவ இளைஞர்கள், யுவதிகள் தொழிலாள வர்க்கத்தின் பாகமாக உள்ளார்கள் அல்லது
இருப்பார்கள். மாணவர்கள் முகங்கொடுக்கும் குறித்த பிரச்சினைகள், அனைத்து தொழிலாளர்களையும் சுரண்டுவதை
அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தியேயாகும்.
ஐ.எஸ்.எஸ்.இ அனைத்து விதமான தேசியவாதம் மற்றும் இனவாதம் மற்றும் ஆட்சிக்கு
அழுத்தம் கொடுக்கும் வெற்று சுலோகங்களைக் கோஷிக்கும் தீவிரவாத எதிர்ப்பு அரசியலையும் நிராகரிக்கின்றது.
இந்த முன்நோக்கானது பல பல்கலைக்கழக குழுக்களை குறிக்கோளற்ற மற்றும் வங்குரோத்து முன்நோக்கைக்
கொண்டவையாக பண்புமயப்படுத்துகிறது. சோசலிசம் உண்மையான சமத்துவத்தை அர்த்தப்படுத்துகின்ற அளவில்,
எமது இலக்கு, ஆட்சியைக் கையிலெடுத்து சமுதாயத்தை ஜனநாயக, சரிநிகர், பங்கீட்டு மற்றும் மனித நேய
அடிப்படையில் மறு ஒழுங்கு செய்யும் ஒரு தெளிவான மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தத்துவார்த்த உலக நோக்கு
மற்றும் அரசியல் முன்நோக்கின் அடிப்படையில் ஒரு வெகுஜன அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும்.
சோசலிசத்திற்கான போராட்டமானது துணைக்கண்டம் பூராகவும் தசாப்த காலங்களாக
முதலாளித்துவத்திற்கு முண்டுகொடுத்துக்கொண்டுள்ள பலவித ஸ்டாலினிச மற்றும் இடதுசாரிக் கட்சிகள் உட்பட அரசியல்
ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளில் இருந்தும் முழுமையாக பிரிந்து செல்ல அழைப்புவிடுக்கின்றது. இலங்கையில் அழிவுகரமான
உள்நாட்டு யுத்தத்தை நிறுத்த ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப சிங்கள, தமிழ் மற்றும்
முஸ்லிம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஐக்கியப்படுத்த ஐ.எஸ்.எஸ்.இ. மற்றும் சோசலிச சமத்துவக்
கட்சியும் பிரச்சாரம் செய்கின்றன. நாம் வடக்கு கிழக்கில் இருந்து அனைத்து துருப்புக்களும் உடனடியாக நிபந்தனையின்றி
வெளியேற்றப்பட வேண்டும் எனக் கோருவதோடு, தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்திற்கான
போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா--ஈழம் சோசலிச குடியரசுக்காகவும் போராடுகின்றோம்.
பொது சமூகப் பிரச்சினைகளையும் அரசியல் சவால்களையும் எதிர்கொண்டுள்ள தெற்காசியா
பூராகவும் உள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் ஐ.எஸ்.எஸ்.இ. யில் இணைந்து அதைக்
கட்டியெழுப்புமாறு நாம் அழைப்புவிடுக்கின்றோம். சோசலிசம் என்பது உண்மையான சமத்துவமாகும். இது முதலாளித்துவ
சுரண்டலுக்கு முடிவுகட்டி சமுதாயத்தின் உயர்ந்த உற்பத்தி வளங்கள் மீது ஜனநாயக கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதை
அர்த்தப்படுத்துகின்றது. எனவே, இத்தகைய வளங்கள் செல்வந்தர்களின் தனியார் இலாப நலன்களுக்கு அன்றி சமூகத்
தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட முடியும்.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணை! ஐ.எஸ்.எஸ்.இ. யில் இணை!
சமூக சமத்துவத்திற்கான மாணவர் அமைப்பானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் (நா.அ.அ.கு.) இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மாணவர்
அமைப்பாகும். ஐ.எஸ்.எஸ்.இ. தொடர்பாக மேலும் அறிந்துகொள்ளவும் மற்றும் உங்களது பல்கலைக்கழகத்தில்
அல்லது கல்வி நிலையத்தில் அதன் கிளை ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு
isse@socialequality.com
என்ற முகவரிக்கு ஐ.எஸ்.எஸ்.இ. க்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவும் அல்லது
தபால் பெட்டி 1270, கொழும்பு என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.
நா.அ.அ.கு. உலக சோசலிச வலைத் தளத்தை
(www.wsws.org) வெளியிடுகிறது. இது இணையத்தில்
பரந்தளவில் வாசிக்கப்படும் சோசலிச வெளியீடாகும். பிரதான உலக நிகழ்வுகள் அன்றாட செய்திகள் மற்றும்
ஆய்வுகள் மற்றும் அரசியல், கலாச்சார, வரலாற்று மற்றும் கோட்பாட்டு விடயங்கள் தொடர்பான
கருத்துக்களையும் உலக சோசலிச வலைத் தளத்தில் வாசிக்க முடியும்.
|