World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : சீனாProtests in China over the one child policy ஒரேயொரு குழந்தை கொள்கை பற்றி சீனாவில் எதிர்ப்புக்கள் By Dragan Stankovic and John Chan சீனாவின் தென்மேற்கு மாநிலமான Guangxi யில் உள்ள போபாய் மாவட்டத்தில் உள்ள சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில் நாட்டின் குடும்பக் கட்டுப்பாட்டு கொள்கைகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதங்களை எதிர்த்து இரு வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியான கலகங்களும் எதிர்ப்புக்களும் வெடித்தன. நகர்ப்புற குடும்பங்கள் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கிராமப்புறக் குடும்பங்கள் முதல் குழந்தை பெண் அல்லது ஊனமுற்றுள்ளது என்றால் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இனவழிச் சிறுபான்மையினர் கூடுதலான குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். மே 19ம் தேதி பெரிய நகரமான ஷாபியில் 10,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான துப்பாக்கி ஏந்திய, மின் அதிர்வு உருட்டைகள் ஏந்திய போலீசாருடன் மோதினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு சுவரை இடித்து, குடும்பநலத் திட்டத் துறையின் அதிகாரிகளை விரட்டியடித்து, கார்களை உடைத்து, தீ வைக்கத் தொடங்கியவுடன் போலீசார் விரைந்தனர். சுமார் 28 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய சில நாட்களில் போபாய் மாவட்டம் முழுவதும் குடும்பநலத் திட்ட அதிகாரிகள் ஒரு குழந்தைக்கு மேல் இருக்கும் குடும்பங்களில் இருந்து அபராதப் பாக்கியினை வசூல் செய்வதற்கு கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்தபோது, குறைந்தது ஏழு கிராமங்களில் எதிர்ப்புக்கள் ஏற்பட்டன. செய்தி ஊடகத்திடம் தன்னிடம் அபராதம் கட்டப் பணம் இல்லை என்று கூறிய ஒரு ஏழை விவசாயி இன் வீட்டை அதிகாரிகள் புல்டோசர் வைத்துத் தகர்த்ததை அடுத்து, கலகம் எழுந்தது என்று ஒரு கிராமவாசி கூறினார். நகரசபை அதிகாரிகளிடம் அவர் முறையிட்டபோது, அவருடைய விரல்கள் முறிக்கப்பட்டன. வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது: "கிராமம், கிராமமாக எழுந்த பெரும் குழப்பம் போலீசார் மற்றும் எதிர்ப்பாளர்கள் பலருக்கும் நிறைய காயங்களை ஏற்படுத்தியது... எண்ணிக்கை சரியாகத் தெரியாத வகையில் பல மக்கள் கொல்லப்பட்டனர் என்று சிறுநகர, கிராமவாசிகள் கூறினார்; ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை. போலீசார் கைத்துப்பாக்கிகளையும், பெரிய துப்பாக்கிளையும் ஏந்திக் கொண்டு சென்றதாக பலர் குறிப்பிட்டனர், ஆனால் துப்பாக்கிச் சூடு பற்றி நேரடித் தகவல் ஏதும் வரவில்லை." டுன்பு (Dunbu) நகரத்தில் நேரடியாகக் கண்டவர், செய்தியாளர்களிடம் இரண்டு டஜன் சீருடை அணிந்த அதிகாரிகள் மின்சார உருட்டுக் கட்டையை வைத்துக் கொண்டு அருகில் இருந்த கடைப்பக்கம் சென்று உரிமையாளர் அபராதம் கட்டாவிட்டால் அங்கிருக்கும் பொருட்கள் பறிமுதல் ஆகும் என்று எச்சரித்ததாக கூறினார். உள்ளூர் மக்கள் கூடிய அளவில் போலீசார் அழைக்கப்பட்டனர். பல ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போலீசாருடன் மோதினர்; போலீசார் ஆர்ப்பாட்டத்தை கலைத்து தடையுத்தரவையும் பிறப்பித்தனர். சீன செய்தியாளர்கள் இப்பகுதியில் வராமல் தடுக்கப்பட்டனர்; அரசாங்கத்திற்கு சொந்தமான ஊடகங்களில் எதிர்ப்பு பற்றிய தகவல்கள் கடும் தணிக்கைக்கு உட்பட்டன. உத்தியோகபூர்வ Xinhua செய்தி அமைப்பு கிராம வாசிகளைக் குறைகூறியது; "போபாயில் குடும்பநலக் கொள்கைகள் மீறப்படுவது வாடிக்கையாகி விட்டது; உள்ளூர் மக்கள் இன்னும் மரபார்ந்த கருத்தான அதிக குழந்தைகள் அதிக சந்தோஷத்தை கொண்டுவரும் என்று நினைக்கின்றனர்." ஆனால், கலகங்களுக்கான பொறுப்பு சீன அரசாங்கத்திடமும், ஸ்ராலினிச சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) யிடமும்தான் நேரடியாக உள்ளது. குவாங்சியில் மாநிலக் கட்சித் தலைவராக இருக்கும் லியு க்விபாவோ எழுச்சி பெற்றுவரும் அரசியல் தலைவராவார்; இவர் ஜனாதிபதி ஹுஜின்டாவோ கட்சிப்பிரிவுடன் மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டவர் ஆவார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து, மாநிலம் "பொருளாதாரப் போட்டித்தன்மையை" கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கை கொண்ட ஆக்கிரோஷ கொள்கைகளுக்காக நன்கு அறியப்பட்டுள்ளார். பெப்ருவரி மாதம் நடைபெற்ற குடும்பநலத்திட்ட மாநாடு ஒன்றில் அவர் ஒரு குழந்தை கொள்கை முறையில் இலக்குகளை அடையாமல் பின்தங்கியிருப்பதற்காக போபாய் அதிகாரிகளுக்கு "மஞ்சள் அட்டை" எச்சரிக்கையை கொடுத்தார். ஆகஸ்ட் மாதத்திற்குள் "மஞ்சள் அட்டையை" நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, போபாய் மாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகளும் அவர்களுடைய வட்டார மைய யூலின் நகரத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளும் மகளிருக்காக மிகக் கடுமையான கட்டாயக் கருத்தடை அறுவை சிகிச்சையை செயல்படுத்தியதுடன், அபராத தொகைகளுக்கு ஈடாக சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர். பெப்ருவரி 6 ல் இருந்து ஏப்ரல் 10 வரையிலான காலத்தில் யூலின் 48,554 கருத்தடை அறுவைச் சிகிச்சைகளை செய்து 27.6 மில்லியன் யுவான் (கிட்டத்தட்ட $US 3.5 மில்லியன்) அபராதத் தொகையையும் வசூலித்தனர். உள்ளூர் குவாங்சி டெய்லி யூலின் நகராட்சியை புகழ்ந்து "சமுக இணக்கித்திற்கு" ஒரு குழந்தை கொள்கை நேரிய கூறுபாடாக இருக்கும் என்றும் பாராட்டியது. இதற்கு முன்பு, போபாய் மாவட்டத்தில் செயலாக்க அபராதத் தொகை வசூலிப்பு மந்தமாக இருந்தது; இதற்கு காரணம் மக்களில் பெரும்பாலனவர்கள் ஏழைகள், அரிசி மற்றும் அன்னாசிப்பழ விவசாயிகள் ஆவர். ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பது அசாதாரணம் அல்ல. சில குடும்பங்கள் 1980 களில் பிறந்த குழந்தைகளையும் கொண்டுள்ளன; அபராதங்கள் ஒவ்வொரு ஆண்டும் பெருகிக் கொண்டே போயிற்று. ஐந்து குழந்தைகள் உடைய குடும்பங்கள் அதே இடத்தில் தங்கள் ஆண்டு வருமானத்தை போல் 15 மடங்கு அபராதம் செலுத்தவேண்டும் அல்லது அவர்கள் சொத்துக்கள் பறிமுதலாகும் என்ற நிலையை எதிர்கொண்டனர். சொத்துக்கள் அபராதத் தொகை கட்ட போதுமானவை இல்லை என்றால், வீடுகள் சேதப்படுத்தப்படும் அல்லது அழிக்கப்பட்டுவிடும். வூ என்ற பெயருடைய கிராமவாசி ஊடகத்திடம் கூறினார்: "குடும்பநலத் திட்ட அதிகாரிகள் போர்க்காலத்திய ஜப்பானிய படையெடுப்பாளர்கள் போல் உள்ளனர். அபராதத் தொகை கொடுக்கப்பட முடியவில்லை என்றால், அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளை அழித்து அல்லது சிதைத்துவிட்டுப் போகின்றனர். சில குடும்பங்களில் வாயிற்கதவுகளும், பாத்திரங்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன; வீட்டில் இருப்பவர்களுக்கு வெறுமையான வீடுதான் மிஞ்சுகிறது." 1979TM Deng Xiaoping ஆல் திணிக்கப்பட்ட ஒரு குழந்தை கொள்கையானது சீனாவின் பெருகிவந்த மக்கள் தொகைக்கு அதிகாரத்துவ எதிர்கொள்ளல் ஆகும். தன்னுடைய கிராமப்புற தன்னிறைவிற்காக பெரிய கிராமப்புற குடும்பங்களுக்கு மாவோ ஆதரவு கொடுத்ததும், முன்னேற்றமடைந்திருந்த சுகாதாரப் பாதுகாப்பு, பெருகிய ஆயுட்காலம் ஆகியவை இணைந்து மக்கட் தொகையில் பெரும் உயர்வை ஏற்படுத்தின. 1949ல் இருந்து 1979 ற்குள் மக்கள் தொகை 540 மில்லியனில் இருந்து 800 மில்லியனாயிற்று. சீனாவின் பொருளாதார பிற்போக்குத்தனத்திற்கு கூடுதலான மக்கள் தொகைதான் காரணம் என்று Deng குற்றம் சாட்டி கடுமையான கொள்கையான ஒவ்வொரு தம்பதியும் ஒரு குழந்தைதான் பெறலாம் என்பதை சுமத்தினார். இன்று, பெய்ஜிங் தலைமை பெருகிய மக்கட்தொகைதான் போதுமான ஆசிரியர்கள், மருத்துவமனையில் கட்டில்கள், பெருகிய வேலையின்மை ஆகியவற்றிற்கு காரணம் என்று தொடர்ந்து குறைகூறுகிறது. உண்மையில், பரந்த வறுமை, அடிப்படை தேவைகள் இல்லாதவை ஆகியவற்றால் ஏற்படும் சமூகப் பாதுகாப்பின்மையை ஒட்டித்தான் குறிப்பாக கிராமப் புறங்களில் பெரிய குடும்பங்கள் இருப்பதற்கு காரணமாகும். வாஷிங்டன் போஸ்ட்டிற்கு சென் ஹுவா, தானும் விவசாயியான தன்னுடைய கணவரும், தங்கள் இரண்டாம் குழந்தை --ஒரு மகன்-- பிறந்த பின்னர் கணிசமான அபராதத் தொகை கட்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினார். அரசாங்க கொள்கையின்படி மகள் பிறந்து சீக்கிரமே இக்குழந்தை பிறந்துவிட்டதால் அத்தகைய அபராதம் விதிக்கப்பட்டது. "இந்த விலை கொடுக்கலாம்; எங்களுக்கு இறுதியாக ஒரு ஆண்மகவு கிடைத்துள்ளது. எங்கள் பகுதியில் ஒருவருக்கு மகன் இல்லாவிட்டால், சரியான மதிப்பு கிடையாது. நாட்டுப் புறங்களில் மகன் இல்லாவிட்டால், வயதான காலத்தில் எங்களை யார் கவனித்துக் கொள்ளுவர்?" பெண் குழந்தையை விட ஆண்குழந்தைக்கான விருப்பம், குறிப்பாக கிராமப் பகுதிகளில் இருப்பது, சீனாவில் பால் சமநிலை இன்மை (Gender Imbalance) அல்லது ஏற்றத் தாழ்விற்கு வழிவகுத்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களின்படி 100 பெண் குழந்தைகளுக்கு 119 ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. 2020 ஐ ஒட்டி 40 மில்லியன் ஆண்கள் பிரம்மச்சாரிகளாக வாழவேண்டிய நிலை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சமூக சமத்துவமின்மையை கடக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, சீனத் தலைமையிடத்தின் தடையற்ற சந்தை சீர்திருத்தக் கொள்கைகள் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே பிளவை அதிகப்படுத்தியுள்ளன. மிகப் பரந்த அளவில் கிராமப்புற வறுமை என்பது மில்லியன் கணக்கான மக்களை நகரங்களுக்கு அனுப்பும் உந்துதலாக இருக்கிறது; இதையொட்டி உலகப் பெருநிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு ஏற்பட்டுள்ளது. சமூகக் கொள்கையின் மற்ற கூறுபாடுகளை போலவே, சீன அரசாங்கம் பெருகும் மக்கள்தொகைக்கு போலீஸ் அரச மனப்பான்மையுடன் விடை காண முற்படுகிறது. பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை அது நீண்ட காலம் முன்னரே கைவிட்டுவிட்டாலும், பெய்ஜிங் தற்போதைய ஐந்து ஆண்டு திட்டத்தின்கீழ் தன்னுடைய "குடும்ப நலத்திட்ட" ஆட்சியை இறுக்கியுள்ளது; 2010ஐ ஒட்டி மக்கட்தொகையை 1.37 பில்லியனுக்கும் கீழே வைக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது. ஒரு குழந்தை கொள்கை, அனைத்து குடும்பங்களுக்கும் சமமான முறையில் செயல்படுத்தப்படவில்லை. செல்வம் கொழிக்கும் உயரடுக்கினர், கட்சி அதிகாரத்துவத்தினர், எழுச்சி பெற்று வரும் நகர்ப்புற மத்தியதர வகுப்பினர் ஆகியோர் அபராதம் கட்டுவதில் இடர்பாடு காணவில்லை; ஏனெனில் ஒப்புமையில் அவர்களுக்கு அதிக குழந்தைகளோடு பார்க்கையில் அபராத தொகை சிறிதே ஆகும். ஆனால் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளை பொறுத்தவரையில், இரண்டாம் கர்ப்பம் என்பது நிதியளவில் குடும்பத்தை முடக்கிவிடும் அபராத தொகையைக் கொண்டுவந்து விடும். இக்கொள்கை மிகப் பரந்த முறையில் எதிர்ப்புணர்வை தோற்றுவித்து, வன்முறை எதிர்ப்புக்கள் வெடித்துள்ளது என்பதில் வியப்பு ஏதும் இல்லை. |