:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: Hundreds of Tamils forcibly
expelled from Colombo
இலங்கை: நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொழும்பில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்
By W.A. Sunil
12 June 2007
Back to screen
version
இலங்கை அரசாங்கம் ஜூன் 7 அன்று மேற்கொண்ட வெளிப்படையான சட்டவிரோத நடவடிக்கையில்,
கொழும்பில் உள்ள மலிவான தங்கும் விடுதிகளை சோதனை செய்யவும் மற்றும் தலைநகரில் குடியிருக்கும் தமிழ் மக்களை
பலாத்காரமாக வெளியேற்றவும் கட்டளையிட்டது. நூற்றுக்கணக்கான சாதாரண தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்த
பொலிசார், அவர்களை பஸ்களில் அடைத்து தொலைதூர நகரங்களான வடக்கில் உள்ள வவுனியா மற்றும் கிழக்கில் உள்ள
திருகோணமலை ஆகிய நகரங்களுக்கு கொண்டு சென்று தள்ளிவிட்டு வந்தனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையானது, கொழும்பில் புறக்கோட்டை, மருதானை,
கொட்டாஞ்சேனை மற்றும் வெள்ளவத்தை பிரதேசங்களில் முன்னெச்சரிக்கைகள் எதுவுமின்றி அரங்கேற்றப்பட்டது. பொலிசாரின்படி,
291 ஆண்களும் 85 பெண்களுமாக எல்லாம் 376 பேர் தடுத்துவைக்கப்பட்டு எட்டு பஸ்களில் வடக்கு மற்றும் கிழக்கிற்கு
கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் எவருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.
இந்த சுற்றிவளைப்புக்கான இனவாத அடிப்படையை வெளிப்படுத்திய பொலிஸ் மா அதிபர்
விக்டர் பெரேரா, "கொழும்பிலும் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் வாழும் அப்பாவி மக்களின் பாதுகாப்பை"
உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகவிருந்தது என பிரகடனம் செய்தார். வேறு வார்த்தைகளில் சொன்னால், கொழும்பு
அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை உக்கிரப்படுத்திக்கொண்டிருக்கின்ற நிலைமையின் கீழ்,
அனைத்துத் தமிழர்களும் எதிரிகளாக நடத்தப்படுகிறார்கள் என்பதாகும். கொழும்பில் புறக்கோட்டையிலும் மற்றும் இரத்மலானையிலும்
அண்மையில் நடந்த இரு குண்டு வெடிப்புகளுக்கு புலிகள் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. கொழும்புக்கான உப பொலிஸ் மா
அதிபர் ரொஹான் அபேவர்தன, சம்பந்தப்பட்ட தமிழர்களுக்கு கொழும்பில் தங்கியிருப்பதற்கு "தகுந்த காரணங்கள்" கிடையாது
எனக் கூறியதன் மூலம் இந்த வெளியேற்றத்தை நியாயப்படுத்த முயற்சித்தார். தலைநகரில் தற்காலிகக் குடியிருப்பாளர்களாக
இருக்கும் பத்தாயிரக்கணக்கான தமிழர்களும் வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகளையே அபேவர்தனவின் கருத்துக்கள்
எழுப்புகின்றன. ஆயினும், இலங்கை பிரஜைகளின் வசிப்பிடத்தை மாற்றுவதற்கு உத்தியோகபூர்வ அனுமதியைப் பெறக் கோருவதற்கு
சட்டத்தில் அடிப்படைகள் எதுவும் கிடையாது.
இந்த சுற்றிவளைப்பின் சில மணித்தியாலங்களின் பின்னர் பேசிய அரசாங்கத்தின் பாதுகாப்புப்
பேச்சாளர் கேஹேலிய ரம்புக்வெல்ல, விமர்சனங்களை ஓரங்கட்டியதோடு தமிழர்கள் "விருப்பத்துடன்
வெளியேறுவதற்கான" வசதிகளை மட்டுமே பாதுகாப்புப் படையினர் செய்துகொடுத்ததாக பாராளுமன்றத்தில்
சிடுமூஞ்சித்தனமாக தெரிவித்தார்.
நடந்தது என்ன என்பதை சிரச தொலைக்காட்சியில் பேசிய தங்குமிட
உரிமையாளர்கள் பின்வருமாறு விளக்கினர்: "விடயற்காலை சுமார் 3.00 மணியளவில் வந்த பொலிசாரும்
இராணுவத்தினரும் தங்கியிருந்தவர்களை அறைகளுக்குள் இருந்து வெளியே இழுத்தனர். இவர்களில் 65 வயதுக்கும்
மேற்பட்டவர்கள் ஏழு அல்லது எட்டு பேர் இருந்தனர். சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அழுது புலம்பி
பொலிசாரின் காலிலும் விழுந்து தன்னை திருப்பி அனுப்பவேண்டாம் எனக் கெஞ்சினார். பொலிஸார் அதைப்பற்றிக்
கவலைப்படவில்லை. அவர்களில் மேலும் நான்கு வயதான பெண்களும் மற்றும் நான்கு ஆண்களும் இருந்தனர்.
"கொழும்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று இங்கு வந்து ஒருவர்
தங்கியிருந்தார். அவர் பொலிசாருக்கு தனது மருத்துவ அறிக்கைகளைக் காட்டிய போதிலும், அவர்கள் அதில் அக்கறை
காட்டாததோடு அவரையும் அழைத்துச் சென்றனர். உண்மையான காரணம் என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால்
எவரும் கொழும்பில் இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்க முடியாது என்றனர்."
இவ்வாறு பலாத்காரமாக வெளியேற்றப்பட்டவர்களில், தனது வயதான தாயாருடன் விடுதி
ஒன்றில் திருமணத்திற்காக காத்திருந்த 23 வயது தமிழ் பெண்ணும் அடங்குவார் என ஜூன் 8 டெய்லி மிரர்
பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு வார காலத்திற்குள் நடக்கவிருந்த திருமண வைபவத்திற்காக அவர்கள் மண்டபம்
ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். அப் பெண் தனது மாப்பிள்ளை லண்டனில் இருந்து வரும்வரை காத்திருந்தார். வைபவ
மண்டபத்தின் உரிமையாளர்கள் கொடுத்த இரசீதை காட்டிய போதிலும், அவர்களுக்கு கொழும்பில் தங்கியிருப்பதற்கான
"தகுந்த காரணங்கள்" கிடையாது எனக் கூறிய பொலிசார் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டிக்கு அவர்களைத்
திரும்பிச்செல்லுமாறு பணித்தனர். திருமண செலவுகளை ஈடுசெய்வதற்காக தமது சொத்துக்களை ஈடுவைத்துவிட்ட நிலையில்
தமக்கு கரவெட்டியில் தங்குவதற்கு இடம் கிடையாது என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கை இலங்கையிலும் மற்றும் சர்வதேசரீதியிலும்
பரந்த எதிர்ப்பை தூண்டிவிட்டது. ஜூன் 7 அறிக்கை ஒன்றை வெளியிட்ட மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான
நிலையம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் உட்பட ஐந்து அமைப்புக்களும்,
இத்தகைய பொலிஸ் சுற்றிவளைப்பானது "வசிப்பிடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான உரிமை மற்றும்
நடமாடுவதற்கான சுதந்திரத்தையும்" வெளிப்படையாக மீறும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளன.
இந்த சுற்றிவளைப்பு தொடர்பாக புலிகளுக்குச் சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதமொன்றைக் கோரியபோது பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது. இந்த
வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறுவதாக யாழ்ப்பாண மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அச்சுறுத்தினார்.
எதிர்ப்புக் காட்டத் தள்ளப்பட்ட எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின்
(ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களை அரசாங்கம் நடத்தும் முறையை நாஸி ஜேர்மனியில் யூதர்கள்
துன்புறுத்தப்பட்டதுடன் ஒப்பிட்டார். தமிழர் விரோத பேரினவாதத்திற்குப் பேர்போன மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி.) கூட, அரசாங்கத்தின் நடவடிக்கையை "அடக்குமுறையான மற்றும் முட்டாள்தனமான" நடவடிக்கை என
விவரித்தது. 1983ல் நாட்டின் இரத்தக்களரி மிக்க உள்நாட்டு யுத்தம் முன்னெடுக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக்
கட்சியே பொறுப்பாகும். "புலிப் பயங்கரவாதத்திற்கு" எதிராக முழுமையான யுத்தத்தை முன்னெடுக்குமாறு
அரசாங்கத்திற்கு தற்போது ஜே.வி.பி. அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.
முழு நிர்வான இனவாத பண்பைக் கொண்ட இந்த பொலிஸ் சுற்றிவளைப்பை பற்றி,
புலிகளுக்கு எதிரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் யுத்தத்திற்கு இரகசியமாக ஆதரவளிக்கும் அமெரிக்காவும்
இந்தியாவும் பாசாங்குத்தனமான விமர்சனத்தை வெளியிட்டிருந்தன. "பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னை
பாதுகாத்துக்கொள்ள வேண்டிய இலங்கையின் தவிர்க்க முடியாத கடமைப் பொறுப்பை புரிந்துகொண்டு அதற்கு ஆதரவளித்த
போதிலும்" "இந்த நடவடிக்கை இனப்பிளவுகளை மட்டுமே விரிவுபடுத்தும்" என அமெரிக்க தூதரகம் பிரகடனம்
செய்துள்ளது. தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக புது டில்லியின் "கவலையை" இந்திய உயர்ஸ்தானிகரின்
பேச்சாளர் ஒருவர் வெளிப்படுத்தினார்.
ஜூன் 8, மாற்றுக் கொள்கைக்கான நிலையம் நாட்டின் உயர் நீதி மன்றத்தில் அடிப்படை
உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ததன் மூலம் அரசாங்கத்தின் இந்த முடிவை சவால் செய்தது. இடைக்காலத்
தடையொன்றைப் பிறப்பித்த நீதிமன்றம், "கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றவோ அல்லது அவர்கள்
கொழும்புக்கு வந்து எந்தப் பாகத்திலும் தங்கியிருப்பதை தடுக்கவோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என
பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிட்டது. ஆயினும், ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ள 376 பேருக்கும் இந்த கட்டளை
விரிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை.
அரசியல் மோதல்களைத் தணிக்கும் முயற்சியில், ஜனாதிபதி இராஜபக்ஷ இந்த முடிவுக்காக
பொலிஸ் மா அதிபர் மீது பழி சுமத்த முயற்சித்தார். ஜனாதிபதியாலேயே நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான பொலிஸ்
மா அதிபருக்கு அவரது நடவடிக்கைகள் தொடர்பாக தனக்கு விளக்க அறிக்கை வழங்குமாறும் மற்றும் வெளியேற்றப்பட்ட
அனைவரையும் மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருமாறும் வேண்டுகோள் விடுத்தார். 186 பேர் மட்டுமே திருப்பி
அழைத்துவரப்பட்டனர். இந்த அனுபவத்தில் வெளிப்படையாக அச்சுறுத்தலுக்குள்ளான எஞ்சியவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில்
உள்ள தமது நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்பிச் சென்றனர்.
ஞாயிரன்று, பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க, ஜனாதிபதியைப் பாதுகாக்க முயற்சித்தார்.
"இங்கிருந்த மக்களை ஏனைய பிரதேசங்களுக்கு இடம்மாற்றியது தொடர்பாக நான் வருத்தம் தெரிவிக்கின்றேன். அது நடந்திருக்கவே
கூடாது. இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்கின்றது," என அவர் தெரிவித்தார்.
அரசியல் மதிப்பிழப்பை கட்டுப்படுத்தும் இத்தகைய தெளிவான முயற்சி யாரையும் மூடனாக்கவில்லை.
கொழும்பில் இருந்து நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களை வெளியேற்றியமையானது, 2005 நவம்பர் ஜனாதிபதித்
தேர்தலில் குறுகிய வெற்றியைப் பெற்றதில் இருந்து இராஜபக்ஷவால் மீண்டும் தொடங்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கும்
இனவாத யுத்தத்தின் தர்க்க ரீதியான உற்பத்தியாகும். அரசாங்கம் "பயங்கரவாத சந்தேக நபர்களை" விசாரணையின்றி
எதேச்சதிகாரமாக தடுத்துவைக்க அனுமதிக்கும் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. இதன் மூலம்
தமிழர்களை கைதுசெய்து விசாரிக்க பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதே சமயம், நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
அல்லது "கடத்தப்பட்டுள்ளனர்". சூழ்நிலையின் அடிப்படையில் பார்க்கும் போது இராணுவம் அல்லது அதனோடு சேர்ந்து
இயங்கும் துணைப்படைக் குழுக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன என்பது தெளிவு. இத்தகைய அரசாங்க சார்பு கொலைப்
படைகளால் குறிப்பாக தமிழ் ஊடகங்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் இலக்குவைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ
இத்தகைய எந்தவொரு சம்பவத்திலும் எவரும் கைதுசெய்யப்படவோ அல்லது குற்றஞ்சாட்டப்படவோ இல்லை. இது
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அரசாங்கம் தண்டனையில் இருந்து விலக்கீட்டுரிமை வழங்குவதாக குற்றஞ்சாட்ட
வழிவகுத்துள்ளது.
புலிகளுக்கு எதிராக இராஜபக்ஷ "பயங்கரவாதத்தின் மீதான" யுத்தத்தை முன்னெடுக்கும்
அதேவேளை, சாதாரண தமிழ் மக்களுக்கு தண்டனையளிப்பதானது தீவின் சிங்கள ஆளும் தட்டின் அரசியல் மற்றும்
பொருளாதார மேலாதிக்கத்தை பேணிக்காக்கும் நீண்ட கால யுத்தத்தின் உண்மையான நோக்கத்தை கோடிட்டுக்
காட்டுகிறது. தமது புதிய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உள்நாட்டில் எதிர்ப்புக்களை கிளறிவிட்டதாலும் மற்றும் சர்வதேச
ரீதியில் யுத்தத்திற்கு முண்டுகொடுக்கும் --குறிப்பாக புஷ் நிர்வாகம்-- சர்வதேச ஆதரவாளர்களின் ஆதரவை
கீழறுப்பதாலும் மட்டுமே இராஜபக்ஷவும், விக்கிரமநாயக்காவும் இதற்கு பின்வாங்கியுள்ளனர்.
|