World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைA socialist perspective to defend Sri Lankan university workers இலங்கை பல்கலைக்கழக ஊழியர்களை காக்க ஒரு சோசலிச முன்நோக்கு The International Students for Socialist Equality and the
Socialist Equality Party (Sri Lanka) இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களில் இன்று விநியோகிப்பர். இலங்கையில் பத்தாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கமும் பல்கலைக்கழக அதிகாரிகளும் எடுத்துள்ள தண்டிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தம் செய்ததற்காக திணிக்கப்பட்ட சம்பள வெட்டை விலக்கிக்கொள்ளுமாறும் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறும் அவர்கள் கோருகின்றனர். நாட்டில் உள்ள அனைத்து 15 பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்வி சாரா ஊழியர்கள் இந்தக் கோரிக்கைளுக்கு போராடுவதற்காக ஜூன் 4 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். பல்கலைக்கழகங்களுக்குப் பொறுப்பான நிர்வாக அதிகார சபையான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்னால் ஆயிரக்கணக்கானவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். கொழும்பு பல்கலைக்கழக ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தை தொடர்வதோடு, வளர்ச்சிகண்டிருந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்துவதற்காக தொழிற்சங்கத் தலைவர்கள் ஜூன் 11 முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வாக்குறுதியளித்திருந்தனர். ஆயினும், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட அனைத்து கைத்தொழில் நடவடிக்கைகளுக்கும் முடிவுகட்டிய தொழிற்சங்கங்கள் தற்போதைய பிரச்சாரத்தை தொடரவும் மற்றும் எதிர்கால எதிர்ப்பு போராட்டங்களுக்கும் மட்டுமே வாக்குறுதியளித்தன. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தமது தொழிற்சங்கங்களால் விற்றுத்தள்ளப்பட்ட பல்கலைக்கழக ஊழியர்களை ஆதரிக்குமாறு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அழைப்புவிடுக்கின்றது. இங்கு வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை, அதே போல் தொழில், பொதுக் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காப்பது ஆபத்தான நிலையில் உள்ளது. பல்கலைக்கழக ஊழியர்கள் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தத்தின் சுமைகளை தொழிலாளர் வர்க்கத்தின் தோள்களில் கட்டியடிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் பிரிக்கமுடியாத பாகமாகும். தீவு பூராகவும் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள ஒழுங்கின்மைகளைத் திருத்துமாறும், 2006 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை வழங்குமாறும் மற்றும் மாத நட்டக் கொடுப்பனவில் கொடுக்கப்பட வேண்டிய நிலுவையை வழங்குமாறும் கோரி ஏப்பிரல் 24 காலவரையறையற்ற வேலைநிறுத்தம் ஒன்றை முன்னெடுத்தனர். சம்பள நிலுவையில் ஒரு சிறு பங்கை கொடுக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததை அடுத்து மே 7 அன்று அனைத்துப் பல்கலைகழக தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி வேலை நிறுத்தத்திற்கு முடிவுகட்டியது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த உடனேயே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு ஈடாக அவர்களின் சம்பளத்தை வெட்டுவதாக அல்லது விடுமுறையாக அறிவிப்பதாக வலியுறுத்தியது. முன்னெப்போதும் இல்லாத தண்டனைகள் மற்றும் மாத சம்பளத்தை கொடுக்க தாமதித்தமை போன்ற காரணங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக ஊழியர்கள் வெளியேறியதை அடுத்து, மே 28 ஒன்பது தொழிற்சங்க நடவடிக்கையாளர்களின் தொழில் இடைநிறுத்தப்பட்டது. ஹொரண ஸ்ரீ பாலி பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டு ஊழியர்களை பலாத்காரமாக இடம்மாற்றிய பல்கலைக்கழக அதிகாரிகள், எதிர்வரும் வேலைநிறுத்தங்களுக்கு சம்பள வெட்டுத் தண்டனை திணிக்கப்படும் என எச்சரித்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் இந்தத் தண்டனை நடவடிக்கைகளுக்காக "கொடூரமான" பல்கலைக்கழக நிர்வாகிகள் என குற்றஞ்சாட்ட முயற்சித்த போதிலும், சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கமே இதற்குப் பிரதான பொறுப்பாளியாகும். 2005 நவம்பரில் குறுகிய வெற்றியைப் பெற்ற ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி கண்டுவருவது தொடர்பாக வளர்ச்சி கண்ட அமைதியின்மைக்கு, தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்த தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறிவிட்டு நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளுவதன் மூலம் பதிலளித்தார். இப்போது அரசாங்கமானது "தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது இரக்கமின்றி சவாரி செய்வதோடு அதன் கொள்கைகளை எதிர்க்கும் எவரையும் தேசத்துரோகிகளாகவும் முத்திரை குத்துகின்றது. மே 25 தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தொழிற்சங்கத் தலைவர்களை சந்தித்த இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதால் அரசாங்கத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாது என வெளிப்படையாகத் தெரிவித்தார். அவர் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை "(புலிகளின் தலைவர்) பிரபாகரனுக்காக கருங்காலி வேலை செய்பவர்கள்" என கண்டனம் செய்தார். எதாவதொரு வகையில் அவரது அரசாங்கத்தின் இனவாத யுத்தத்திற்கு ஆதரவளிப்பதால் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் எவரும் ஜனாதிபதியை சவால் செய்யவில்லை. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்கள் இந்த பொருளற்ற குற்றவியல் மோதலுக்கு விலை கொடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 18 மாதங்களுக்குள் நூற்றக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பலர் "காணாமல் போயுள்ளனர்" மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டுச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு யுத்தச் செலவை 25 வீதத்தால் நாடகபாணியில் அதிகரித்த அரசாங்கம், மேலும் 45 வீத அதிகரிப்பை இந்த ஆண்டு பிரேரித்துள்ளது. 2007ம் ஆண்டுக்கான இராணுவ வரவு செலவு திட்டத்தில் 139 பில்லியன் ரூபாய்கள் (13 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) அல்லது அரசாங்கத்தின் மொத்த செலவில் 30.3 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளன. இராஜபக்ஷ தனது யுத்தத்திற்கு செலவிடுவதற்காக பொதுச் சேவைகளை வெட்டித்தள்ளும் அதே வேளை, சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் கோரும் தனியார்மயமாக்கம் மற்றும் சந்தை சீர்திருத்தத்தையும் தொடர்ந்தும் அமுல்படுத்துகின்றார். பல்கலைக்கழகம் உட்பட எல்லா மட்டத்திலுமான பொதுக் கல்வி, அதே போல் சுகாதாரம் மற்றும் நலன்புரி சேவைகளும் ஆபத்திற்குள்ளாகியுள்ளன. யுத்தச் செலவு பண வீக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அடிப்படை பொருட்களின் விலை அதிகரிப்பானது உண்மையான சம்பளத்தை விழுங்கிவிடுகின்றன. வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அரசாங்கம் தற்போதைய அவசரகால சட்டத்தின் கீழ் உள்ள தமது ஒடுக்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்துகிறது. கடந்த டிசம்பரில் அரை மில்லியன் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்த போது, இராஜபக்ஷ கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தியதுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு "இடையூறு" ஏற்படுத்துவதை "பயங்கரவாத நடவடிக்கை" என வகைப்படுத்தினார். துறைமுகத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இப்போது பல்கலைக்கழக ஊழியர்களும் தேசத்துரோகிகளாக நடத்தப்பட்டு வருவதோடு அவ்வாறே அடக்கியாளப்படுகின்றனர். யுத்தத்தை, அதை முன்னெடுக்கும் அரசாங்கத்தை மற்றும் அதற்குப் பொறுப்பான இலாப அமைப்பை எதிர்ப்பதற்கான ஒரு அரசியல் வேலைத்திட்டமின்றி சம்பளம், தொழில் நிலைமைகள் மற்றும் ஐனநாயக உரிமைகளுக்காக, தொழிலாளர் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினராலும் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஆளும் கும்பலின் அனைத்துப் பிரிவில் இருந்தும் தொழிலாளர்களை சுயாதீனமாக்கி அணிதிரட்டும் சோசலிச முன்நோக்கு ஒன்று தொழிலாளர் வர்க்கத்தின் மிகவும் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான இன்றியமையாத முன்நிபந்தனையாகும். இத்தகைய ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதில் தொழிற்சங்கத் தலைமைகள் பிறப்பிலேயே இலாயக்கற்றவையாகும். இதுவே பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பின் நிலைமையுமாகும். இந்த அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பானது (அ.ப.தொ.ச.கூ) இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) இலங்கை சுதந்திர ஊழியர் கூட்டுப் பேரவையையும், யுத்தத்திற்கு சார்பான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டிலான அனைத்துப் பல்கலைக்கழக சேவைகள் தொழிற்சங்கத்தையும் மற்றும் எந்தவொரு சுயாதீனமான நிலைப்பாட்டையும் எடுக்கத் தவறுவதில் பேர்போன பல "சுயாதீன" தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அ.ப.தொ.ச.கூட்டமைப்பின் முன்நோக்கானது பல்கலைக்கழக அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் அற்ப வேண்டுகோள்களை விடுப்பதுடன் வரையறுக்கப்பட்டதாகும். மே 7 வேலை நிறுத்தத்திற்கு முடிவுகட்டிய அ.ப.தொ.ச.கூட்டமைப்பின் துணைச் செயலாளர் எச். பி. ஆரியபால, "அரசாங்கத்தின் நிதி மற்றும் ஏனைய சிரமங்களைக் கவனிக்கும் போது" தொழிற்சங்கங்களுக்கு மாற்றீடு கிடையாது எனப் பிரகடனம் செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்த அ.ப.தொ.ச.கூட்டமைப்பின் தலைவர்களும், "நாட்டில் மேலோங்கிவரும் நிலைமையின் காரணமாக" என்ற அதே சாக்குப் போக்கையே கூறினர். "மேலோங்கிவரும் நிலைமை" இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்தைத் தவிர வேறு ஒன்றும் அல்ல. ஜே.வி.பி. இணைந்த ஏனைய தொழிற்சங்கங்களைப் போலவே அனைத்து பல்கலைக்கழக சேவைகள் தொழிற் சங்கத்தின் போர்க்குணம் மிக்க வாய் வீச்சுக்களும் பொய்யை அடிப்படையாகக் கொண்டவை. இதன் தலைவர்கள் ஒரு புறம் தொழிலாளர்களைப் பாதுகாப்பவர்களாக காட்டிக்கொள்ளும் அதேவேளை, அவர்களின் சம்பளத்தை இராஜபக்ஷ திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். மறுபுறம், புலிகளை அழிப்பதற்கு கூச்சலுடன் வக்காலத்து வாங்கும் ஜே.வி.பி., இராஜபக்ஷ அதை "சரியாக முன்னெடுக்க வேண்டும்" மற்றும் மோதலை உக்கிரப்படுத்த வேண்டும் மற்றும் "தாய்நாட்டை முதன்மைப்படுத்தி" தொழிலாளர்கள் அதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கோருகின்றது. திரைக்குப் பின்னால், ஜே.வி.பி. யின் கட்டுப்பாட்டிலான அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் தலைவர்கள், மீண்டும் அதே "மேலோங்கிவரும் நிலைமை" சரியில்லை என்ற கூற்றை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு அ.ப.தொ.ச.கூட்டமைப்பை நெருக்கியுள்ளது. சகோதரர்களைக் கொல்லும் இந்த யுத்தத்திற்கு ஒரு ஆளோ ஒரு சதமோ கிடையாது என்பதே எந்தவொரு போராட்டத்திலும் அல்லது ஆர்ப்பாட்டத்திலும் தொழிலாளர்களது போர்க்குரலாக இருக்க வேண்டும். தமிழ், சிங்களம் அல்லது முஸ்லிமாக இருந்தாலும் சரி உழைக்கும் மக்கள் பொது வர்க்க நலன்களையும், தேவைகளையும் மற்றும் அபிலாஷைகளையும் கொண்டுள்ளனர். தீவு பூராவும் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்று கூடிய அண்மைய வேலைநிறுத்தத்தில் இதை நாம் கண்டோம். தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான ஆரம்பப் புள்ளி, அனைத்து விதமான தேசியவாதங்களையும் இனவாதங்களையும் நிராகரிப்பதாகும். அது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் சிங்களப் பேரினவாதமானாலும் சரி, புலிகளின் தமிழ் பிரிவினைவாதமானாலும் சரி. ஜனத்தொகையில் பரந்த பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின் தேவைகள், உயர்ந்த இலாபத்திற்கான கூட்டுத்தாபன தட்டுக்களின் கோரிக்கையையும் விட மேலோங்க வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கைச் சம்பள அளவிற்கு ஊதியம் அதிகரிக்கப்படுவதோடு வாழ்க்கைச் செலவுக்கேற்ப அது தொடர்ந்தும் அதிகரிக்கப்பட வேண்டும் என சோ.ச.க. கோருகின்றது. பொதுக் கல்வி அதே போல் சுகாதாரம், நலன்புரி சேவை, போக்குவரத்து மற்றும் வீட்டு வசதி போன்றவை தேவையானளவு உயர்ந்த தரத்திலும் அனைவருக்கும் உயர்ந்த சேவையும் வழங்கப்பட வேண்டும். அத்தியாவசிய சேவை ஒழுங்கு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையில் கட்டுப்பாடுகள் உட்பட அனைத்து ஜனநாயக விரோத சட்டங்களும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என சோ.ச.க. அறைகூவல் விடுக்கின்றது. 24 ஆண்டுகால யுத்தத்தை நிறுத்துவதற்கான ஒரே வழி, யுத்தத்தை முன்னெடுப்பதற்குப் பொறுப்பான அரசாங்கத்திற்கும் மற்றும் கட்சிகளுக்கும் --ஆளும் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் எதிர்க் கட்சியான ஐ.தே.க. மற்றும் அவற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும்-- எதிராக தொழிலாளர் வர்க்கம் அரசியல் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதே ஆகும். சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதில் தொழிலாளர்களால் நம்பிக்கை வைக்க முடியாது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் உட்பட அதன் பிரதான அனுசரணையாளர்கள் அனைவரும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான நவ காலனித்துவ அமெரிக்க ஆக்கிரமிப்பின் பங்காளிகளாக இருந்து வருகின்றனர். இலங்கையில் சமாதானத்திற்கு ஆதரவளிப்பதாக கூறிக்கொள்ளும் அதே வேளை, இதே சக்திகள் இராஜபக்ஷவின் உக்கிரமான இராணுவ ஆக்கிரமிப்பை மெளனமாக ஆதரிக்கின்றன. தொழிலாளர்கள் யுத்தத்திற்கு எதிராக தமது சொந்த மூலோபாயத்தை முன்னேற்ற வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மீதான இராணுவ ஆக்கிரமிப்பு உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் இந்தப் பிரதேசங்களில் இருந்து பாதுகாப்புப் படைகள் உடனடியாக திருப்பியழைக்கப்பட வேண்டும் என்பதும் முதலாவது கோரிக்கைகளாக இருத்தல் வேண்டும். நாட்டின் செல்வந்தத் தட்டின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான போராட்டமானது தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களை ஸ்தாபிப்பதற்கான தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாகும். இந்த அனைத்துலகவாத சோசலிச முன்நோக்கிற்காக போராடுவதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு புதிய வெகுஜனக் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். நாம் இந்தக் கொள்கைகளுடன் உடன்படும் அனைவரையும், எமது அரசியல் வேலைத்திட்டத்தை அக்கறையுடன் கற்குமாறும், உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ச்சியாக வாசிக்குமாறும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப இணையுமாறும் அழைப்பு விடுக்கின்றோம். |